ஒருத்தன் நல்லா படிச்சு மார்க் வாங்கி, டக்னு நல்ல வேலைக்குப் போயி, படிப்படியா முன்னேறி எங்கேயோ போயிடுவான்,
இன்னொருத்தன் மந்தமா முன்னேறி சுமாரான வேலையில், வாழ்வில் ஒவ்வொரு நாளையும் நகர்த்த போராடுவான்.
இன்னும் சிலதுகள், சுத்தமா தேறாம, சீரழிஞ்சு போயிடுவாங்க.
( இத்தோட, இந்த பதிவை 'கிழிச்சு' எறிஞ்சு, வழக்கமான மொக்கைக்கு போயிடலாமான்னு ஆழ்ந்து யோசிச்சேன். ஆனா, ஒரு வருஷத்துக்கு ஒரு பதிவாவது, கொஞ்சமாவது ப்ரயோஜனமா, ஒருத்தரையாவது யோசிக்க வைக்கணும்னு முடிவு பண்ணி, உங்க தலை மேல பாரத்தை போட்டு தொடர்கிறேன். அனுபவிங்க. ரொம்ப ஆராயாதீங்க. ;) )
என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டிய அளவில், ஒவ்வொரு மனுஷனின் முன்னேற்றத்தையோ/சீர்கேட்டையோ நாலு விஷயங்கள் சம அளவில் தீர்மானிக்கின்றன.
அவையாவன
1) நம் உடம்பில் உள்ள மூதாதையாரின் 'ஜீன்ஸ்' ( நம் கட்டுப்பாட்டில் இல்லாதது ) - 25%
2) பள்ளி டு காலேஜ் இள வயது வளர்ப்பு முறை ( நம் பெற்றோர்/வளர்ப்போர் கட்டுப்பாட்டில் உள்ளது) - 25%
3) சுற்றமும், நட்பும், வாத்தியார்களும், சக ஊழியர்களும், சமூகமும் ( மத்தவங்க கட்டுப்பாட்டில் உள்ளது ) - 25%
4) சுய முயற்சி ( நம் கட்டுப்பாட்டில் உள்ளது ) - 25%
நாலுல எல்லாமே சிறப்பாய் பெற்றவன் ஆட்டோமேட்டிக்கா, எங்கியோ போயிருவான். அதுல எந்த சந்தேகமும் இல்லை.
நாலுல ஏதாச்சும் ஒண்ணு சரியாகக் கிட்டாதவன், மற்ற மூன்றின் ஏதாவது ஒன்று அளவுக்கு அதிகமாய் கிட்டினாலும், மேலே போயிடுவான்.
இதுல முதல் ஆப்ஷனான 'ஜீன்ஸ்' லூஸ்ல விட்டுடுவோம். யார் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு விஷயம் அது. அதைப் பத்தி பேசியும் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, முப்பாட்டன், முப்பாட்டி(?) இவங்கெல்லாம் வாழ்க்கைல எந்த அளவுக்கு வெற்றி பெற்றவர்கள்னு நீங்க நெனைக்கறீங்களோ, அந்தளவுக்கு 25ல ஒரு மார்க் உங்களுக்கு நீங்களே போட்டுக்கங்க.
உதாரணத்துக்கு நீங்க பில்கேட்ஸின் பொண்ணா இருந்தா, 25க்கு 30 கூட போட்டுக்கலாம். (அப்படியே, அப்பாவ கேட்டதா சொல்லுங்க :) )
என்னை எடுத்துக்கிட்டா, எனக்கு 25க்கு ஒரு 20 போட்டுப்பேன்.
ரெண்டாவது, பள்ளி டு காலேஜ் வளர்ப்பு முறை. களிமண்ணைக் கூட அழகான சிலையாய் மாத்தர டெக்னிக் ஒரு படைப்பாளிக்குத் தெரிஞ்சிருக்கும். அதே மாதிரி, குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், பெற்றோர்கள் அவர்கள் எதிர்காலத்துக்கு ஒரு பலமான அடித்தளம் அமைக்கிறார்கள். நல்லா வளக்கரதுன்னா, நல்ல சாப்பாடும், நல்ல துணியும், தீபாவளிக்கு பட்டாசும் வாங்கிக் கொடுப்பது மட்டுமல்ல.
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கணும்.
அவங்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொடுக்கணும்.
அவர்களிடம் இருக்கும் சின்ன சின்ன மைனஸ் பாயிண்டுகளை கண்டறிந்து களைய வேண்டும்.
எனக்குத் தெரிஞ்சு 'தலைவனின்' குணங்கள், இளவயதிலேயே தீர்மானிக்கப் படுது.
ஸோ, ஒரு குழந்தை இந்த சமுதாயத்தில், பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும், முக்கிய பங்கு பெற்றோரிடம்/கார்டியனிடம் தான் இருக்கிறது.
என்னை எடுத்துக்கிட்டா, குறை ஒன்றுமில்லா, இளம் பருவம் என்னுது. மிகப் பெரிய வசதி வாழ்க்கை இல்லன்னாலும், middle class குடும்பத்தில், தேவையானது தேவையான நேரத்தில் உடனுக்குடன் கிடைத்தது. ஆனால், நான் மேலே சொன்ன, 'மைனஸ் பாயிண்டுகளை' களைதல் போன்ற, செப்பனிடும் முறையில் நான் வளர்க்கப் படவில்லை என்பதுபோல் தோன்றுகிறது.
உதாரணத்துக்கு, எனக்குள் இன்று வரை, இருக்கும் துளியூண்டு stranger anxietyயும், தத்துனூண்டு இருக்கும் introvertismம், சின்ன வயதிலேயே செப்பனிடப் பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்.
வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தா, உள்ள ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்டு எதையாவது படிச்சுக்கிட்டு இருப்பேன். அப்பவே, தலைல ரெண்டு போட்டு இங்க வாடா, இவங்களுக்கு ஒரு வணக்கம் போடு, அந்தப் பையனோட பேசுன்னு புது மனுஷங்க கிட்ட எப்படி கலந்துரையாடரதுன்னு அடிச்சோ அடிக்காமலோ சொல்லிக் கொடுத்திருந்தா, நான் இன்னும் மெருகேறியிருப்பேனோன்னு தோணுது.
ஸோ, குழந்தையை வளர்ப்பவர்கள், நோட் த பாயிண்ட். :)
ரெண்டாவதுக்கு, 25ல ஒரு 18 போட்டுப்பேன்.
மூணாவது, என்னைப் பொறுத்தவரை ரொம்ப முக்கியமான பாயிண்ட்டு. முதல் ரெண்டில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும், வாழ்க்கையில் ஃபர்ஸ்ட் கிளாஸில் இன்று வரை திடமாய் இருப்பதர்க்கு முக்கிய காரணம், சுற்றமும், நட்பும், சக ஊழியர்களும், சமூகமும். இவங்கெல்லாம் என்னா பண்ண முடியும்னு கேட்டீங்கன்னா, சட்னு தோணர ஒரே வார்த்தை 'ஊக்குவித்தல்'. அதாகப் பட்டது, motivation.
ஒண்ணும் இல்லாத சொத்தை மனுஷனை கூட, 'உன்னால் முடியும்னு' தெனமும் பத்து பேரு அவன் கிட்ட சொன்னா, அவனும் ஒரு நாள் சாதனையாளனாயிடுவான்.
நீங்க பெரியாள் ஆகறீங்களோ இல்லியோ, உங்க குழந்தைகளோ நண்பர்களோ சொந்தக்காரர்களோ பெரிய ஆள் ஆகணும்னா, கண்டிப்பா அவங்களை ஊக்குவிக்கணும், பாராட்டணும்.
என்னிடம், 'கலக்கர மச்சி'ன்னு ஒவ்வொரு தடவையும் என் நண்பர்கள் சொல்லும்போது, அட, இதை விட ஒரு படி மேல செய்யணும்னு உள்ளுக்குள்ள தோணும்.
பள்ளிக்காலங்களில் வெத்து வெட்டா இருந்த நானு, அதுக்கப்பரம், படிப்பில் ஓரளவுக்கு ஈர்ப்பு வந்ததுக்கும், கணிப்பொறி பயின்ற காலத்தில் அதன் மேல் பெருவாரியா ஈர்ப்பு வந்ததுக்கும், அதையே வாழ்வின் ஆதாரமாக பின்னாளில் மாற்றியதர்க்கும், இந்த 'கலக்கர மச்சி'தான் பெரிய அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
'கலக்கர மச்சி'ன்னு சொன்ன அனைவருக்கும் இந்நேரத்தில் ஒரு பெரிய சலாம் போட்டுக்கறேன். நன்றி மச்சீஸ். :)
ஸோ, மூணாவது ஆப்ஷனுக்கு, 25ல், 30 போட்டுப்பேன் எனக்கு.
நாலாவது ஆப்ஷனை பத்தி பெருசா சொல்ல ஒண்ணுமில்லை. சுய மூயற்சி எல்லாருக்கும் இருக்கணும், என்னதான் ஜீன்ஸ் இருந்தாலும், எப்படிதான் வளர்த்தாலும், எவ்ளவுதான் 'கலக்கரே மச்சி' சொன்னாலும், அடுத்த கட்டத்துக்கு நகரணும்னா, நீங்க உங்க சொந்த உழைப்பையும் கலந்தாதான் முடியும். அது, ராத்திரி முழிச்சிருந்த படிக்கரதா இருக்கலாம், இல்லைன்னா உங்க துறை சார்ந்த விஷயங்களை செய்யரதா இருக்கலாம்.
உழைப்பு மிக மிக அவசியம்.
என்ன, எடுத்துக்கிட்டா, நான் கொஞ்சம் சோம்பேரி. புது விஷயங்களைப் படிக்க நேரம் செலவிடுவது கிடையாது. unless the situation really really really warrants, நானா எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடுவது கிடையாது. இது ரொம்ப தப்பு.
நீங்க அப்படி இருக்காதீங்க.
இருப்பது ஒரு லைஃப், அடிச்சு ஆடுங்க.
Time is very precious, Killing time is a crimeனு எங்க நைனா அடிக்கடி சொல்வாரு. இன்னிக்கும் சொல்லிக்கிட்டு இருக்காரு. என் தலைக்குதான் ஏற மாட்டேங்குது ;)
ஸோ, 25க்கு எனக்கு ஒரு 18 மார்க் போட்டுப்பேன்.
கூட்டிக் கழிச்சுப் பாத்தா, 100க்கு 20+18+30+18 = 86% மார்க் வாங்கியிருக்கேன்.
நீங்க வாழ்க்கைல எந்த வயசுல எப்படி இருக்கீங்கரதப் பொறுத்த, உங்களுக்கு மார்க் போட்டுக்கிட்டு, எங்க கூட்ட முடியும்னு பாத்துக்கிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெற முயலுங்கள்.
என்னைப் பொறுத்தவரை, இனி வரும் நாட்களில், என் கையில் இருப்பது, நாலாவது ஆப்ஷன் மட்டுமே.
ஸோ, புதிய வருடத்தில், மீண்டும், புத்தகங்களை தூஸு தட்டி எடுப்பதும், சில நாட்களில் மூலையில் போட்ட கிட்டாரை திரும்ப எடுத்து பயில்வதும், மேடைப் பேச்சு பழகுவதும், நட்பு வட்டத்தை பெருக்குவது போன்ற சுயமுயற்சிகளில் ஈடுபட்டு, 86ஐ 90ஆக்க முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.
சுயமுயற்சிக்கு ஒரு டிப்ஸை சொல்லித்தந்துட்டு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். (ரொம்பவே இழுத்துட்டேன்).
நம்முள் இருக்கும் ஒரு பெரிய negative energy, நாம் மற்றவர்களிடம் எதையாவது குறை சொல்லி புலம்பும்போது (complaining and whining) ஏற்படுகிறதாம்.
ஸோ, முடிந்தவரை, புது வருடத்தில், புலம்பலை தவிருங்கள்.
ஏதொ ஒரு மெடிடேஷன் வகுப்பில் ஒரு வித்தை சொல்லித் தந்தாங்களாம்.
அதாகப்பட்டது, உங்க வலது, கையில் ஒரு மோதிரமோ, வளையலோ போட்டுக்கணும்.
இனி, புலம்ப் மாட்டேன், எல்லாத்தையும் பாஸிட்டிவ்வா அணுகுவேன்னு நமக்குள்ளேயே ஒரு சபதம் போட்டுக்கணும்.
எப்பெல்லாம், சபதத்தை மீறி புலம்பறீங்களோ, அப்பெல்லாம், வளையலையோ மோதிரத்தையோ வலது கையிலிருந்து இடது கைக்கு மாத்திக்கணும்.
தொடர்ந்து, 21 நாள் உங்க மோதிரம்/வளையல், ஒரே கையில் இருக்கும் வரை இந்த முறையை செய்யணும்.
21ஆம் நாள், நீங்க ஒரு புது மனுஷனா மாறியிருப்பீங்க.
( இந்த செய்முறைக்கு, '©சர்வேசன்ஸ் பாஸிட்டிவ் திங்கிங்னு' பேரு. :) )
கண்டிப்பா முயற்சி செய்யுங்கள்.
அனைவருக்கும், என் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கை மேன்மேலும் சிறக்க என் ப்ரார்த்தனைகள்.
நாமும், நம் சுற்றமும், நம் சமூகமூம், நம் நாடும், நம் அண்டை நாடுகளும், சுபிட்சம் பெறவும், ப்ரார்த்தனைகள்.
உங்களால் சகலமும் முடியும்!
Happy New Year!
