recent posts...

Monday, January 24, 2011

நல்ல ஆ படங்கள் சில...

2010 தமிழ் திரைப்படத்துக்கு நல்ல வருடம். அருமையான பல படங்கள் காணக் கிட்டியது. அவங்க லாபம் சம்பாதிச்சாங்களா என்ற கணக்கெல்லாம் நமக்கு வேணாம். நமக்கு பொழுது போச்சா? அதான் முக்கியம்.
சென்ற வருடப் படங்களில் நல்லாவே பொழுது போச்சு.

அருமையான தமிழ் படங்களைத் தொடர்ந்து சில பல ஆங்கிலப் பழைய புதிய படங்களையும் கண்டு மகிழ்ந்தேன். அதில் சிலதின் பெயரை உங்களுக்குச் சொல்லி, யாம் பெற்ற இன்பம் பெறுக நீங்களும் என்ற கோட்பாட்டின் படி இயங்க இந்தப் பதிவு.

Kill Bill2 தான் Quinton Tarantino என்ற இயக்குனரின் பெயரை எனக்கு அறிமுகப் படுத்தியது. கட்டாயம் பாருங்க. அப்படியே முதல் பாகமும்.
அப்படியே பின்னோக்கி நகர்ந்தா, பலராலும் போற்றிப் புகழப்படும் Pulp Fictionம் இந்தாளு எடுத்த படம்தான். இப்படியெல்லாம் கூட ஒரு படத்தை எடுக்க முடியுமான்னு கேட்க வைக்கும் க்ளாசிக் காட்சிகள். முக்கியமா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், சேமுவேல் ஜாக்ஸனும், ட்ரவால்ட்டோவாவும், இன்னும் இரு ஜேப்டி திருடர்களும், ஆளுக்கொரு துப்பாக்கிய வச்சுக்கிட்டு பேசர ராவடி, அற்புதம்.

இதே ஆளுது, Reservoir Dogsச்னு ஒரு படம். இதுவும் அமக்களம். "If you shoot me in your dreams, you better wake up and apologize"னு டாராண்ட்டினோவின் முத்திரை பதித்த வசனங்கள்.

இதே ஆளுது, Jackie Brownன்னு இன்னொரு படம். இதிலும் சேமுவேல் ஜாக்ஸன் கலக்கல் நடிப்பு. அலட்டாமல் நடித்த ராபர்ட் டினிரோவும் உண்டு.

Graduateனு ஒரு படம். Dustin Hoffman சின்ன வயதில் நடித்து 1970களில் வெளிவந்த படம். அந்த காலத்துக்கு, இது ரொம்பவே முற்போக்கு எண்ணங்கள் நிறைந்த படம். குடும்ப நண்பரின் மனைவியை காதலிக்கும் பயலான டஸ்ட்டின். பள்ளிக் காலங்களில் ரொம்வே பிடித்த "God Bless you please Mrs.Robinson" , Sound of Silence போன்ற பிரபலப் பாடல்கள் இந்த படத்தில் அருமையாய காட்டியிருக்காங்க.

Inception பத்தி ஏற்கனவே அளந்தாச்சு.

Papillon. இது, இந்த ஊரு எம்.ஜி.ஆரு, Steve McQueen ஹீரோவாக நடித்த படம். சின்ன தப்பு செஞ்சவர ஒரு தீவில் இருக்கும் ஜெயிலில போட்டுருவாங்க. அங்க இருந்து தப்பிக்க பல விஷயங்கள் செய்வாரு. ஒவ்வொரு தடவையும் திரும்ப புடிச்சு உள்ள போட்ருவாங்க. வயசாகி கிழம் தட்டரவரைக்கும் இப்படியே செய்வாரு. Never Give Upனு அடிச்சு சொல்லும் படம். அந்த காலத்துல என்னமா படமாக்கியிருக்காங்க. பிரமிப்பு.

Temple Grandin. இது சென்ற வருடம் வந்தது. autismம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி பற்றிய உண்மைக் கதை. அவங்க குறையை எப்படி நிறையா மாத்தி, வாழ்க்கையில் ஜெயிச்சுக் காட்டினாங்க என்பதை, ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமா படம் பிடிச்சுக் காட்டியிருக்காங்க. குறிப்பா, ஹீரோயினா நடிச்ச பெண்மணி அபாரம். Golden Globesம் அந்த பெண்மணிக்குக் கிட்டியதாய் நினைவு.

IP Manன்னு ஒரு சீன மொழிப்படம். இதுவும் உண்மைக் கதையாம். விறு விறு விறுன்னு நகரும் காட்சி அமைப்பு. குங்ஃக்ப்பூ, பாசம், தேசம்,நட்பு, வெறுப்பு, அது இதுன்னு நல்ல கலவை.

Babel, இந்த ஊரு சூர்யா, Brad Pitt நடிச்ச படம். தொடர்பில்லா பல காட்சிகள், கடைசியில் எப்படி தொடர்புடையதா ஆகுதுன்னு, அழகா ஓடும் படம். போரடிக்காம ரெண்டு மணி நேரம் நகர கியாரண்ட்டி.

..இன்னும் வரலாம்..

Sunday, January 23, 2011

Steve Jobsன் நல்ல பேச்சு

2005ல் Stanford Convocation நிகழ்ச்சியில் Steve Jobs பேசியது. சுவாரஸ்யமான பேச்சு.

Thursday, January 06, 2011

பாக்கியலக்ஷ்மி - சிறுகதை



அம்மா கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்ற சத்தத்தால் தன் சிந்தனை கலைந்து எழுந்து நின்றார் பாக்கியலக்ஷ்மி.
எதிரே, ரூமை சுத்தம் செய்ய வந்த ஆஸ்பத்திரி வார்ட் பாய் நின்று கொண்டிருந்தான்.
அவள் சற்று தள்ளி அமர்ந்ததும் தரையை துடைத்து விட்டு சென்று விட்டான்.

கட்டிலில் பாக்கியலக்ஷ்மியின் கணவர் சச்சிதானந்தம் ஆழ்ந்த் உறக்கத்தில் இருந்தார். மூக்கில் ஸ்வாசிக்க உதவும் கருவிகளும், வயிற்றில் சிறுநீர் வெளியேர சில குழாய்களும் பொறுத்தப்பட்டு இருந்தது.
74 வயதாகிறது சச்சிதானந்தத்திற்கு. இதுவரை ஒரு நாள் கூட நோய் நொடி என்று படுத்ததில்லை. தலை வலி வந்தால் கூட, ஒரு கைக்குட்டையை இருக்கமாக தலையில் கட்டி கண்ணை மூடிக் கொண்டு பொறுத்துக் கொள்பவர்.

நான்கு தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு "பாக்கி வயத்த பயங்கரமா வலிக்குதும்மா" என்றவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். என்ன செய்வதென்று தெரியாத பாக்கியலக்ஷ்மி மிகவும் பதறிப் போனார்.
பாக்கியலக்ஷ்மியின் சப்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் விவரம் அறிந்து, ஒரு ஆட்டோவில் சச்சிதானந்தத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

மூத்த பிள்ளை பாஸ்கரன் ஆக்ராவில் பணிபுரிகிறான். இரண்டாவது பெண் பார்வதி திருமணமாகி பூனாவில் வசிக்கிறாள்.
இருபது வருடங்களுக்கும் மேலாக சச்சிதானந்தமும் பாக்கியலக்ஷ்மியும் தனியாகத்தான் வசிக்கிறார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை பாஸ்கரனும் பார்வதியும் வந்து போவதுண்டு.
தங்களுடன் ஆக்ராவில் வந்து வசிக்குமாறு சில முறை பாஸ்கரன் கேட்டாலும், சச்சிதானந்தத்திற்க்கு அதில் உடன்பாபடில்லை.
"பாக்கி, நம்பளால முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதும்மா" என்பார்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பாப்போம் பாஸ்கரா" என்று ஒவ்வொருமுறையும் தட்டிக் கழிப்பார்.

பாஸ்கரனுக்கு, இரண்டு பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் மனைவி, நல்ல உத்யோகம் என்று நன்றாகவே இருந்தான். ஒவ்வொருமுறை பெற்றோரை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைக்கும் போதும் அவனது மனைவி அருகில் வந்து "ஏங்க அவங்க தான் வரலன்னு சொல்றாங்களே அப்பறம் ஏன் கேட்டுக் கிட்டே இருக்கீங்க. நம்ப வீட்டுல நம்ப சாமான் வெக்கவே எடம் இல்ல, இவங்களும் வந்துட்டா என்ன பண்றது. நான் ஆபீஸ் போவேனா, இவங்கள கவனிப்பேனா" என்று சுடு சொற்களை எரிவாள். இவளுக்கு பயந்தோ என்னவோ பாஸ்கரன் பெற்றோரை கூப்பிடுவதை குறைத்துக் கொண்டான்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் உறவினர் மகள் தான். பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் இணக்கமாக இருந்தவர்கள். சிறு வயதிலேயே இரு வீட்டார் பெற்றோரும் "சச்சிதானந்தத்துக்குத்தான் பாக்கியலக்ஷ்மி" என்று ஊர்ஜீதம் செய்து விட்டதால், எல்லா இடத்திலும் ஜோடிப் புறாக்கள் போல் வலம் வந்தவர்கள்.
பாக்கியலக்ஷ்மியை பாக்கி என்றும், சச்சிதானந்த்தத்தை ஆனந்தா என்றும் சுருக்கி விளித்து பரவசமாக சுற்றிய காலங்கள் பல.

இரும்பு உருக்காலையில் சூப்பர்வைஸராக வேலை. பணி இடத்தின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்திருந்தார்கள். பணி முடிந்தததும் வீட்டிற்கு வந்து பாக்கிலக்ஷ்மியுடன் ஊர் கதை பேசி, அடுத்துள்ள கோவிலுக்கு பொடி நடை செல்வார்கள்.
மிடுக்காக சவரம் செய்த சிரித்த முகமும் கருகரு சுருட்டை முடியும் சச்சிதானந்தனிடம் பாக்கியலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தது.
மூத்த மகன் பாஸ்கரன் பிறந்தான். பிரசவத்தின் போது வலியில் துடித்த மனனவியை பார்த்து கலங்கிய சச்சிதானந்தன் "பாக்கி இந்த ஒரு குழந்தை போதும்டி. இவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சிருந்தா குழந்த்தயே வேணாம்னு இருந்திருக்கலாம்" என்று சொல்லிப் பதறினான்.

பாஸ்கரனின் பள்ளி வெகுதூரம் தள்ளி இருந்ததால், பள்ளிக்கு அருகாமையில் வீடு பார்த்து குடியேறினார்கள். சச்சிதானந்தன் தினமும் சைக்கிளில் உருக்காலைக்கு சென்று வந்தார். பிள்ளைக்காக செய்த முதல் அட்ஜஸ்ட்மண்ட் அது.
மூன்று வருடத்திர்க்கு பிறகு பார்வதியும் பிறந்தாள். இந்த முறை பாக்கியின் வலி கண்ட சச்சிதானந்தம் இனி குழந்தை வேண்டாம் என்று தீர்க்கமாக சொல்லி விட்டார்.

அக்கம் பக்கத்தில் சச்சிதானந்தத்திற்க்கு நல்ல மதிப்பு இருந்த்தது. யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல், மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்வார்.
வயது ஆனாலும், அவர் மிடுக்கு குறையவில்லை. வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வரும் கணவரை காணும் போது பாக்கியலக்ஷ்மிக்கு அவளை அறியாமல் ஒரு புன் முறுவல் வரும்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

ஆஸ்பத்திரிக்கு தந்தையை காண பாஸ்கரனும் பார்வதியும் வந்து விட்டார்கள். மூன்று வருடம் ஆகிவிட்டது, பாக்கி இவர்களை பார்த்து. பாஸ்கரன் வேளை பளு காரணமாக ரொம்பவே மாறிப் போயிருந்தான்.
"இப்ப எப்படி டாக்டர் இருக்கு. எப்ப டிச்சார்ஜ் பண்ணலாம்" என்ற பாஸ்கரனின் கேள்விக்கு நீண்ட பதில் அளித்துக் கொண்டிருந்தார் டாக்டர்.
பாக்கியலக்ஷ்மிக்கு கேட்டதெல்லாம் "organ failure, urinary track failure" போன்ற வார்த்தைகள்தான். நடுங்கிப் போனாள் இதைக் கேட்டு விட்டு.

இந்த நான்கு நாட்களில் ஒரு நாள் கூட சச்சிதானந்தன் கண் திறந்து இவளை பார்க்கவில்லை.
திருமணமான ஐம்பது வருடத்தில் பேசாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

டாக்டரிடம் பேசி விட்டு வந்த பாஸ்கர், பாக்கியலக்ஷ்மியிடமும் பார்வதியிடமும் பேச ஆரம்பித்தான் "அப்பாக்கு major infection ஆகி இருக்காம். multiple organ failure ஆனதால lungs கும் urinary bladder கும் ட்யூப் வச்சிருக்காங்க. 8 மணீ நேரத்துக்கு ஒரு தடவை ஒரு பெரிய ஊசி போடணுமாம். அது போட்டாதான் ஒவ்வொரு பார்ட்டும் வேலை செய்ய ஆரம்பிக்க வாய்ப்பிருக்காம்" என்று கண்ணீருடன் கூறினான்.
பாக்கியலக்ஷ்மிக்கு அவளை சுற்றி பூமி அதிர்வது போன்றிருந்தது. செவி அடைத்து மயங்கி விழுந்தாள்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

"ஒவ்வொரு ஊசியும் 4000 ரூபாயாம்டி. அப்பாக்கு ரொம்ப வயசானதால ஊசி வேலை செய்றதும் நிச்சயம் இல்லையாம். ஏற்கணவே 6 போட்டாச்சு. எனக்கு வேற எக்கச்சக்க வேல இருக்கு ஊர்ல. என்ன பண்றதுண்ணே தெரில" என்று பார்வதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாஸ்கரன்.

"எனக்கும் போணும் பாஸ்கர். நான் இல்லாம பசங்கள மேய்க்க அவரு ரொம்ப கஷ்டப்படறாரு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணேன். நான் நாளைக்கு கெளம்பி போறேன். ஏதாவது சீரியஸ்னா phone பண்ணு அவரையும் கூட்டிட்டு வரேன்" என்று அவள் பங்கிற்கு பார்வதி சொன்னாள்.

'ஆஸ்பத்திரி செலவு மட்டும் இது வரைக்கும் 65000 ரூபாய் ஆயிருக்கு. நான் தான் அதப் பாத்துக்கறனே, நீ இங்க கொஞ்ச நாள் இருந்து பாத்துக்கவாவது கூடாதா" என்று குரலை உயர்த்தினான் பாஸ்கரன்.

பாக்கியலக்ஷ்மி இவர்களின் பேச்சை கேட்டு கண் விழித்தாள்.
"நீங்க ரெண்டு பேரும் போய் உங்க வேலையை பாருங்கப்பா. அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்கறேன். குணம் ஆனதும் phone பண்றேன். பசங்களோட பொறப்பட்டு வாங்க போதும். இங்கதான் ந்ர்ஸ் நல்லா பாத்துக்க்றாங்களேப்பா கவலப்படாம பொறப்படுங்க" என்றாள் பாக்கி.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

பாஸ்கரனும் பார்வதியும் அரை மனதோடு புறப்பட்டு சென்றார்கள். பாக்கியலக்ஷ்மிக்கு அவர்கள் மேல் கோபம் வரவில்லை. கணவனின் இப்பொதைய நிலை தான் அவளுக்கு நெஞ்சடைக்கும் துக்கத்தை கொடுத்தது.

"கொஞ்சம் தள்ளி நில்லுங்கம்மா" என்று சொல்லிக்கொண்டு வந்தாள் நர்ஸ். பாக்கி நகர்ந்ததும், சச்சிதானந்த்தத்தின் உடம்பில் ஒரு வெள்ளை துண்டில் வெண்ணீரால் துடைத்து விட்டாள். மூக்கில் இருக்கும் ட்யூபை எடுத்து, சிலிண்டரை மாற்றினாள். வயிற்றில் சொருகி இருந்த ட்யூபிலிருந்து வ்ழியும் சிறு நீரை அகற்றி புதிய கருவி பொறுத்தினாள். மற்ற பல கருவிகளையும் மாற்றிப் பொறுத்தினாள்.
சலனம் அற்றுக் கிடக்கும் சச்சிதானந்தமும் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் வந்தார்.
இதைக் கண்ட பாக்கியலக்ஷ்மிக்கு நெஞ்சு கனத்த்து.

என்றோ ஒரு பௌர்ணமி நாளன்று, மொட்டை மாடியில் "உங்ளுக்கு முன்னாடி நான் போய் சேர்ந்திடணும்க, சுமங்கலியா" என்றவளிடம், "அடிப்பாவி, நீ போயிட்டா என்ன யாரு பாத்துப்பா" என்று புன்முறுவலுடன் கணவன் கூறியது நினைவுக்கு வர, கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. ஆறுதல் கூற யாரும் இல்லாமல் வெகு நேரம் அழுது விட்டாள் பாக்கியலக்ஷ்மி.

கணவர் அருகில் சென்று அவரின் அமைதியான முகத்தை கண்டாள். கணவரின் நெற்றியை வருடியபடி "இப்படி பண்ணிட்டியே ஆனந்தா. என் கூட இனி எப்ப பேசுவ. பாஸ்கரும், பார்வதியும் உனக்கு சரி ஆன உடனே வருவாங்க. சீக்கிரம் சரியாகணும்.." என்று முனகினாள்.

சற்று நேரம் வெறித்து கணவரை பார்த்த பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் மூக்கில் இருந்த ட்யூபை மெல்ல வெளியே எடுத்துப் போட்டாள்.

சச்சிதானந்தம் உடம்பு சலனம் இல்லாமல் முழுதும் அமைதியானது.

கணவனின் நெற்றிக்கு முத்தமிட்ட பாக்கியலக்ஷ்மியின் கண்களில் தாரை தாரயாக நீர் சுரந்தது.

ஆனால், அவள் முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு தெரிந்தது.

------- முற்றும் ------- ------- ------- ------- ------

(மீள்பதிவு - குறும்படமாக்க முயற்சி நடக்கிரது. இதற்கு திரைக்கதை எழுதுவது எப்படி?)

Wednesday, January 05, 2011

உயிருக்கு ஊசலாடும் கப்பீஸ்

புது வருஷத்துல புதுசா எதையாவது செய்யலாம்னு வந்த விபரீதத் தோன்றலில், அருகில் இருந்த கடையில் ஒரு குட்டி கண்ணாடிக் குடுவையை வாங்கினேன். குடுவையில் கலர் கலர் மீன்கள் வச்சு வளத்துக்ப் பாக்கலாம்னு ஐடியா.
நாய் ரொம்பப் பிடிக்கும் எனக்கு. ஆனா, அதெல்லாம் வளக்கணும்னா பெரும்பாடு இங்கே. அதனால சுலப வழி யோசிச்சு மீனுக்கு மாறினேன்.

பக்கத்தில் இருக்கும் Pet-Coவில் குட்டி வகை மீன்களை வாங்க அடுத்த நடை. கோல்டு ஃபிஷ் வாங்கலாம்னா, அது ரொம்பப் பெருசா வளரும், நம்ம குடுவை தாங்காதுன்னு கடைக்காரர் சொன்னார். கப்பி (guppy) என்ற குட்டியூண்டு மீன்கள் இருக்கும் டாங்க்கை காட்டினார். அழகழகான கப்பீஸ், சிகப்பு, மஞ்சள், கறுப்பு, சாம்பல்னு பல களரில் அழகாய் சுண்டுவிரல் அளவில் துறு துறு என இருன்தன.

என் குடுவையில், மூணு மீன் வளக்கலாம்னு கடைக்காரர் சொன்னதால், சிகப்புக் களரில் ஒரு ஆணையும், இரண்டு பெண் மீன்களையும் புடிச்சு அதுக்கு வேண்டிய சாப்பாடு, தண்ணி சுத்திகரிக்கும் கெமிக்கல், குடுவையில் போட சில கலர் கற்கள், குட்டிச் செடி ஒண்ணு, எல்லாத்தையும் வாங்கி பில்லப் போட்டு வீட்டுக்கு வந்தாச்சு.

கலர் கற்களை கழுவி, குடுவையில் போட்டு, குழாயில் தண்ணியப் புடிச்சு, சுத்தீகரிக்கும் சொட்டு மருந்தை விட்டு, செடியை நட்டு ஒரு மணி நேரம் கழிச்சு, மீனிருக்கும் ப்ளாஸ்ட்டிக் பையை அப்படியே தொட்டியில் எடுத்து வைத்தேன். கொஞ்ச நேரம் இப்படி வச்சப்பரம், தொட்டித்தண்ணி ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்தப்பரம்தான் மீனை ப்ளாஸ்ட்டிக் பையில் இருந்து எடுத்து விடணும்னு கடைக்காரர் சொன்னதை இம்மியளவும் பிசகாமல் செஞ்சு முடிச்சேன்.

புதுத்தொட்டியில் அறிவுரைப்படி தினசரி இருமுறை தத்துனூண்டு சாப்பாடும் போட்டேன்.
ஒரு நாள் நல்லாத்தான் போச்சு. ரெண்டாவது நாள், பெண் கப்பியில் ஒரு கப்பி நீந்தாம செடியின் இலை மேல் ஒக்காந்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டு இருந்தது. ஒரு வேளை காதல் தோல்வியோன்னு தோணிச்சு? மத்த ரெண்டும் ஜோடியா சுவய்ங்க்னு சுவய்ங்க்னு நீன்திக் கொண்டிருந்தபோது இது ரொம்வே சோகமா இருந்தது.

அடக்கொடுமையே, சந்தோஷமா ஃப்ரெண்ட்ஸோட petcoவில் நீந்திக்கிட்டு இருந்தத பாடா படுத்தி எடுத்தட்டமோன்னு ஒரு கலக்கம் வந்துடுச்சு.

மீன் வளக்கரதுக்கு, எல்லா வித விவரங்களும் இணையத்தில் பெருகிக் கெடக்கு. மனுஷன வளக்கரதுக்குக் கூட அம்புட்டு விஷயம் இருக்கான்னு தெரியலை. சரின்னு, கூகிளாண்டவர் கிட்ட, 'guppy dying'னு தேடினா, பல ஆயிரம் ஹிட்டு தேறிச்சு.

புது வீட்டுக்கு வந்த டென்ஷன் சில மீனால் தாங்க முடியாதாம். நம்ம கப்பி, அநேகமா மரணத்தின் விளிம்பில் இருக்குங்கரது, பல இணையப் பக்கங்களிலிருந்து புரிந்தது. ஒரு சிலரின் ஆலோசனைப் படி, உயிருக்குப் போராடிய கப்பியை, தனியே எடுத்து இன்னொரு குட்டிப் பாத்திரத்தில் விட்டேன். அதிலும், அதே நிலையில் பெருமூச் விட்டப்படி அடியில் தங்கி விட்டது.

இன்னும் சிலர் இந்த மாதிரித் தருணங்களில், மரண வலியில் இருக்கும் மீனை எப்படி கருணைக் கொலை செய்வதுன்னு பக்கம் பக்கமா அறிவுரை தந்திருன்தாங்க. ரெண்டு இன்ச் கூட இல்லாத மீனுக்கு கருணைக் கொலையா? அதுவும் ஆயிரமாயிரம் பக்கங்களில் பலப் பேர் எழுதியிருந்தாங்க..

clove (கிராம்பு) எண்ணை கொஞ்சமா தொட்டியில் விடணுமாம், அப்பாலிக்கா மீன் மயங்கிய பின், vodka சரக்கு கொஞ்சமா ஊத்தணுமாம். வலியில்லாமல் உயிர் பிரிஞ்சிருமாம்.
டாய்லெட்டில் எடுத்துப் போட்டு ஃப்ளஷ் பண்ணவே கூடாதாம். மீனுக்கு ரொம்அ வலிக்குமாம்.
ப்ளாஸ்ட்டிக் பையில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுடலாம்னு சிலரும், அது கூடவே கூடாதுன்னு இன்னும் சிலரும் வாதாடியிருந்தார்கள்.
இன்னும் சிலர், அருகாமையில் இருக்கும் வெட்டினரி டாக்டர் கிட்ட எடுத்துக்கிட்டுப் போனா, அவரு, மீனின் ஸ்பைனல் கார்டில் ஒரு ஊசியால் குத்தி, உடனடி மரணம் கிட்ட வழி செய்வார்னு சொல்லியிருந்தாங்க.
ப்ராக்டிக்கல்லான ஒரு சிலர், மீனை எடுத்து கல்லால் நசக்னு ஒரு அடி தலைல அடிங்க, சுலபத்தில் முடியும்னு சொல்லியிருந்தாங்க.
ஒரு சில ரொம்ப நல்லவங்க, ஒன்னியும் பண்ணாதீங்க, அப்படியே விடுங்க, மீனுக்கு ப்ராப்தி இருந்தா, அதுக்கு ஒடம்பு சரியாகி துள்ளிக் குதிச்சு நீந்த ஆரம்பிச்சுடும். ப்ராப்தி இல்லீன்னா, அதன் நேரம் வந்ததும் அது தானாய் உயிர் துறந்து சொர்கத்துக்குச் செல்லும்னும் சொல்லியிருந்தாங்க.

இது அத்தனையும், சுண்டு விரல் அளவிலான கப்பி மீனுக்கு என்பதை நினைக்கும்போது மலைப்பா இருந்தது.
நானே கூட, மீன் குழம்பு ஃப்ரை எல்லாம் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன்.
ஒரு தயக்கமும் இல்லாமல், மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரும் மீனை, கசாப்பு போட்டு மஞ்சள் உப்பெல்லாம் போட்டு கழுவிக் கொடுக்கும் வீரப் ப்ரம்பரையை சேர்தவன். ஆனா, உயிரோட என்னை நம்பி வந்த மீன் இப்படி உயிருக்கு ஊசலாடுவது கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு.

இன்னா பண்ணலாம்?

முதல் நாள் ஜாலியாக இருந்த மூன்று கப்பீஸ் இங்கே: :(

Tuesday, January 04, 2011

Bad News India

from the archives of BadNewsIndia.BlogSpot.com.

நாடும் நாட்டு மக்களும் அதன் தலைவர்களும்

துச்சாதனர்களால் தான் நல்வழி பிறக்கும்

ஜெய் ஸ்ரீராம்! உடைத்தெறிவோம் பாலத்தையும், சூட்சிகளையும்!

ஆதிமூலம், சென்னை - by, மரக்காணம் பாலா

REAL HEROES are BORN, not MADE

ஏமாற்றாதே, ஏமாற்றினாலும் ஏமாறாதே!

மரணத்துக்கு பயந்திடு, தயாராகு, திட்டமிடு, உடனே!

சாகரன் - அஞ்சலி

விளம்பரம்: தமிழ்மணம் - நம்மால் ஏன் முடியவில்லை!

அழகான விநாயகப் பெருமானும், வீண் விதண்டாவாதங்களும்...

லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )

மனிதர்களா நாமெல்லாம்? தூ !!!

சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி? (part 2)

பெறுதர்க்கரியன் பெருமானே - இளையராஜாவின் தேனமுது!

கனம் - (தேன்கூடு-போட்டிக்கு)

ஊரைத் திருத்தலாம் வாங்க நண்பரே. ஒரு simple ஐடியா!

...மேல் விவரங்கள் அப்பாலிக்கா.