recent posts...

Thursday, January 06, 2011

பாக்கியலக்ஷ்மி - சிறுகதை



அம்மா கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்ற சத்தத்தால் தன் சிந்தனை கலைந்து எழுந்து நின்றார் பாக்கியலக்ஷ்மி.
எதிரே, ரூமை சுத்தம் செய்ய வந்த ஆஸ்பத்திரி வார்ட் பாய் நின்று கொண்டிருந்தான்.
அவள் சற்று தள்ளி அமர்ந்ததும் தரையை துடைத்து விட்டு சென்று விட்டான்.

கட்டிலில் பாக்கியலக்ஷ்மியின் கணவர் சச்சிதானந்தம் ஆழ்ந்த் உறக்கத்தில் இருந்தார். மூக்கில் ஸ்வாசிக்க உதவும் கருவிகளும், வயிற்றில் சிறுநீர் வெளியேர சில குழாய்களும் பொறுத்தப்பட்டு இருந்தது.
74 வயதாகிறது சச்சிதானந்தத்திற்கு. இதுவரை ஒரு நாள் கூட நோய் நொடி என்று படுத்ததில்லை. தலை வலி வந்தால் கூட, ஒரு கைக்குட்டையை இருக்கமாக தலையில் கட்டி கண்ணை மூடிக் கொண்டு பொறுத்துக் கொள்பவர்.

நான்கு தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு "பாக்கி வயத்த பயங்கரமா வலிக்குதும்மா" என்றவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். என்ன செய்வதென்று தெரியாத பாக்கியலக்ஷ்மி மிகவும் பதறிப் போனார்.
பாக்கியலக்ஷ்மியின் சப்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் விவரம் அறிந்து, ஒரு ஆட்டோவில் சச்சிதானந்தத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

மூத்த பிள்ளை பாஸ்கரன் ஆக்ராவில் பணிபுரிகிறான். இரண்டாவது பெண் பார்வதி திருமணமாகி பூனாவில் வசிக்கிறாள்.
இருபது வருடங்களுக்கும் மேலாக சச்சிதானந்தமும் பாக்கியலக்ஷ்மியும் தனியாகத்தான் வசிக்கிறார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை பாஸ்கரனும் பார்வதியும் வந்து போவதுண்டு.
தங்களுடன் ஆக்ராவில் வந்து வசிக்குமாறு சில முறை பாஸ்கரன் கேட்டாலும், சச்சிதானந்தத்திற்க்கு அதில் உடன்பாபடில்லை.
"பாக்கி, நம்பளால முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதும்மா" என்பார்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பாப்போம் பாஸ்கரா" என்று ஒவ்வொருமுறையும் தட்டிக் கழிப்பார்.

பாஸ்கரனுக்கு, இரண்டு பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் மனைவி, நல்ல உத்யோகம் என்று நன்றாகவே இருந்தான். ஒவ்வொருமுறை பெற்றோரை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைக்கும் போதும் அவனது மனைவி அருகில் வந்து "ஏங்க அவங்க தான் வரலன்னு சொல்றாங்களே அப்பறம் ஏன் கேட்டுக் கிட்டே இருக்கீங்க. நம்ப வீட்டுல நம்ப சாமான் வெக்கவே எடம் இல்ல, இவங்களும் வந்துட்டா என்ன பண்றது. நான் ஆபீஸ் போவேனா, இவங்கள கவனிப்பேனா" என்று சுடு சொற்களை எரிவாள். இவளுக்கு பயந்தோ என்னவோ பாஸ்கரன் பெற்றோரை கூப்பிடுவதை குறைத்துக் கொண்டான்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் உறவினர் மகள் தான். பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் இணக்கமாக இருந்தவர்கள். சிறு வயதிலேயே இரு வீட்டார் பெற்றோரும் "சச்சிதானந்தத்துக்குத்தான் பாக்கியலக்ஷ்மி" என்று ஊர்ஜீதம் செய்து விட்டதால், எல்லா இடத்திலும் ஜோடிப் புறாக்கள் போல் வலம் வந்தவர்கள்.
பாக்கியலக்ஷ்மியை பாக்கி என்றும், சச்சிதானந்த்தத்தை ஆனந்தா என்றும் சுருக்கி விளித்து பரவசமாக சுற்றிய காலங்கள் பல.

இரும்பு உருக்காலையில் சூப்பர்வைஸராக வேலை. பணி இடத்தின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்திருந்தார்கள். பணி முடிந்தததும் வீட்டிற்கு வந்து பாக்கிலக்ஷ்மியுடன் ஊர் கதை பேசி, அடுத்துள்ள கோவிலுக்கு பொடி நடை செல்வார்கள்.
மிடுக்காக சவரம் செய்த சிரித்த முகமும் கருகரு சுருட்டை முடியும் சச்சிதானந்தனிடம் பாக்கியலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தது.
மூத்த மகன் பாஸ்கரன் பிறந்தான். பிரசவத்தின் போது வலியில் துடித்த மனனவியை பார்த்து கலங்கிய சச்சிதானந்தன் "பாக்கி இந்த ஒரு குழந்தை போதும்டி. இவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சிருந்தா குழந்த்தயே வேணாம்னு இருந்திருக்கலாம்" என்று சொல்லிப் பதறினான்.

பாஸ்கரனின் பள்ளி வெகுதூரம் தள்ளி இருந்ததால், பள்ளிக்கு அருகாமையில் வீடு பார்த்து குடியேறினார்கள். சச்சிதானந்தன் தினமும் சைக்கிளில் உருக்காலைக்கு சென்று வந்தார். பிள்ளைக்காக செய்த முதல் அட்ஜஸ்ட்மண்ட் அது.
மூன்று வருடத்திர்க்கு பிறகு பார்வதியும் பிறந்தாள். இந்த முறை பாக்கியின் வலி கண்ட சச்சிதானந்தம் இனி குழந்தை வேண்டாம் என்று தீர்க்கமாக சொல்லி விட்டார்.

அக்கம் பக்கத்தில் சச்சிதானந்தத்திற்க்கு நல்ல மதிப்பு இருந்த்தது. யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல், மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்வார்.
வயது ஆனாலும், அவர் மிடுக்கு குறையவில்லை. வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வரும் கணவரை காணும் போது பாக்கியலக்ஷ்மிக்கு அவளை அறியாமல் ஒரு புன் முறுவல் வரும்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

ஆஸ்பத்திரிக்கு தந்தையை காண பாஸ்கரனும் பார்வதியும் வந்து விட்டார்கள். மூன்று வருடம் ஆகிவிட்டது, பாக்கி இவர்களை பார்த்து. பாஸ்கரன் வேளை பளு காரணமாக ரொம்பவே மாறிப் போயிருந்தான்.
"இப்ப எப்படி டாக்டர் இருக்கு. எப்ப டிச்சார்ஜ் பண்ணலாம்" என்ற பாஸ்கரனின் கேள்விக்கு நீண்ட பதில் அளித்துக் கொண்டிருந்தார் டாக்டர்.
பாக்கியலக்ஷ்மிக்கு கேட்டதெல்லாம் "organ failure, urinary track failure" போன்ற வார்த்தைகள்தான். நடுங்கிப் போனாள் இதைக் கேட்டு விட்டு.

இந்த நான்கு நாட்களில் ஒரு நாள் கூட சச்சிதானந்தன் கண் திறந்து இவளை பார்க்கவில்லை.
திருமணமான ஐம்பது வருடத்தில் பேசாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

டாக்டரிடம் பேசி விட்டு வந்த பாஸ்கர், பாக்கியலக்ஷ்மியிடமும் பார்வதியிடமும் பேச ஆரம்பித்தான் "அப்பாக்கு major infection ஆகி இருக்காம். multiple organ failure ஆனதால lungs கும் urinary bladder கும் ட்யூப் வச்சிருக்காங்க. 8 மணீ நேரத்துக்கு ஒரு தடவை ஒரு பெரிய ஊசி போடணுமாம். அது போட்டாதான் ஒவ்வொரு பார்ட்டும் வேலை செய்ய ஆரம்பிக்க வாய்ப்பிருக்காம்" என்று கண்ணீருடன் கூறினான்.
பாக்கியலக்ஷ்மிக்கு அவளை சுற்றி பூமி அதிர்வது போன்றிருந்தது. செவி அடைத்து மயங்கி விழுந்தாள்.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

"ஒவ்வொரு ஊசியும் 4000 ரூபாயாம்டி. அப்பாக்கு ரொம்ப வயசானதால ஊசி வேலை செய்றதும் நிச்சயம் இல்லையாம். ஏற்கணவே 6 போட்டாச்சு. எனக்கு வேற எக்கச்சக்க வேல இருக்கு ஊர்ல. என்ன பண்றதுண்ணே தெரில" என்று பார்வதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாஸ்கரன்.

"எனக்கும் போணும் பாஸ்கர். நான் இல்லாம பசங்கள மேய்க்க அவரு ரொம்ப கஷ்டப்படறாரு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணேன். நான் நாளைக்கு கெளம்பி போறேன். ஏதாவது சீரியஸ்னா phone பண்ணு அவரையும் கூட்டிட்டு வரேன்" என்று அவள் பங்கிற்கு பார்வதி சொன்னாள்.

'ஆஸ்பத்திரி செலவு மட்டும் இது வரைக்கும் 65000 ரூபாய் ஆயிருக்கு. நான் தான் அதப் பாத்துக்கறனே, நீ இங்க கொஞ்ச நாள் இருந்து பாத்துக்கவாவது கூடாதா" என்று குரலை உயர்த்தினான் பாஸ்கரன்.

பாக்கியலக்ஷ்மி இவர்களின் பேச்சை கேட்டு கண் விழித்தாள்.
"நீங்க ரெண்டு பேரும் போய் உங்க வேலையை பாருங்கப்பா. அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்கறேன். குணம் ஆனதும் phone பண்றேன். பசங்களோட பொறப்பட்டு வாங்க போதும். இங்கதான் ந்ர்ஸ் நல்லா பாத்துக்க்றாங்களேப்பா கவலப்படாம பொறப்படுங்க" என்றாள் பாக்கி.

------- ------- ------- ------- ------- ------- ------- -------

பாஸ்கரனும் பார்வதியும் அரை மனதோடு புறப்பட்டு சென்றார்கள். பாக்கியலக்ஷ்மிக்கு அவர்கள் மேல் கோபம் வரவில்லை. கணவனின் இப்பொதைய நிலை தான் அவளுக்கு நெஞ்சடைக்கும் துக்கத்தை கொடுத்தது.

"கொஞ்சம் தள்ளி நில்லுங்கம்மா" என்று சொல்லிக்கொண்டு வந்தாள் நர்ஸ். பாக்கி நகர்ந்ததும், சச்சிதானந்த்தத்தின் உடம்பில் ஒரு வெள்ளை துண்டில் வெண்ணீரால் துடைத்து விட்டாள். மூக்கில் இருக்கும் ட்யூபை எடுத்து, சிலிண்டரை மாற்றினாள். வயிற்றில் சொருகி இருந்த ட்யூபிலிருந்து வ்ழியும் சிறு நீரை அகற்றி புதிய கருவி பொறுத்தினாள். மற்ற பல கருவிகளையும் மாற்றிப் பொறுத்தினாள்.
சலனம் அற்றுக் கிடக்கும் சச்சிதானந்தமும் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் வந்தார்.
இதைக் கண்ட பாக்கியலக்ஷ்மிக்கு நெஞ்சு கனத்த்து.

என்றோ ஒரு பௌர்ணமி நாளன்று, மொட்டை மாடியில் "உங்ளுக்கு முன்னாடி நான் போய் சேர்ந்திடணும்க, சுமங்கலியா" என்றவளிடம், "அடிப்பாவி, நீ போயிட்டா என்ன யாரு பாத்துப்பா" என்று புன்முறுவலுடன் கணவன் கூறியது நினைவுக்கு வர, கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. ஆறுதல் கூற யாரும் இல்லாமல் வெகு நேரம் அழுது விட்டாள் பாக்கியலக்ஷ்மி.

கணவர் அருகில் சென்று அவரின் அமைதியான முகத்தை கண்டாள். கணவரின் நெற்றியை வருடியபடி "இப்படி பண்ணிட்டியே ஆனந்தா. என் கூட இனி எப்ப பேசுவ. பாஸ்கரும், பார்வதியும் உனக்கு சரி ஆன உடனே வருவாங்க. சீக்கிரம் சரியாகணும்.." என்று முனகினாள்.

சற்று நேரம் வெறித்து கணவரை பார்த்த பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் மூக்கில் இருந்த ட்யூபை மெல்ல வெளியே எடுத்துப் போட்டாள்.

சச்சிதானந்தம் உடம்பு சலனம் இல்லாமல் முழுதும் அமைதியானது.

கணவனின் நெற்றிக்கு முத்தமிட்ட பாக்கியலக்ஷ்மியின் கண்களில் தாரை தாரயாக நீர் சுரந்தது.

ஆனால், அவள் முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு தெரிந்தது.

------- முற்றும் ------- ------- ------- ------- ------

(மீள்பதிவு - குறும்படமாக்க முயற்சி நடக்கிரது. இதற்கு திரைக்கதை எழுதுவது எப்படி?)

15 comments:

SurveySan said...

படம் உதவி: http://www.timescontent.com/

Porkodi (பொற்கொடி) said...

குறும்படமா எடுக்கலாம் தப்பில்லை, ஆனா பசங்க கேரக்டர் ரொம்ப க்ளீஷேவா இல்லை?

பாக்கி தன்னுடைய பேசரியோ தோட்டையோ வைத்து அவரை காப்பாற்றி பின் எங்காவது திருப்தியாக பாட்டு அல்லது பாடம் சொல்லிக் கொடுத்து சேவை செய்வது மாதிரி முடிந்து இருந்தால் கொஞ்சம் மனசுக்கு நல்லாருக்கும்.. சோகமான முடிவு கூட இன்னொரு க்ளீஷேவா மாறிட்டு வருதே இப்பல்லாம்..

Porkodi (பொற்கொடி) said...

இங்க என்ன ஸ்க்ரீன்ப்ளே எழுத சொல்றீங்களான்னு புரியல.. :P

இருந்தாலும் கதைல ஏதாவது ஒரு மாற்றம் கொண்டு வர முடியுமா என்பது என் தாழ்மையான கேள்வி. ஏன்னா என்னுடைய அகராதில, குறும்படம்னா ஒரு 'நச்' இருக்கணும். அல்லது முழுக்க feel goodஆக இருக்கணும். ரொம்ப தெளிந்த நீரோடையா எல்லோருக்கும் தெரிந்த கதை தெரிந்த முடிவு, சந்தோஷ உணர்வும் வராதுன்னா, எப்படி வெற்றி அடையும்?!

ஓவரா பேசிட்டேனோ? வேணா திட்டிக்குங்க, அதுக்காக பேசமல்லாம் இருக்க முடியாது.

SurveySan said...

இவங்களுக்கு பணம் ஒரு ப்ரச்சனையா இல்லை.
முக்கியமான கொடுமை, ஒரு கெத்தோடு, தன் வாழ்வை வாழ்ந்தவரு, அடுத்தவரை சகலத்துக்கும் நம்பி வாழ வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுதல். மிடுக்கான கணவர் இப்படி அலைக்கழிக்கப்படுதல் மனைவிக்கு ஏற்பாய் இல்லை.

குறும்படம் எந்த அளவுக்குத் தேறும்னு தெரியலை. அழுகாச்சி அழுகாச்சி நடிச்சா , கடைசியில் சிரிப்பாத்தான் முடியும் வாய்ப்பிருக்கு. பாப்போம் ;)

SurveySan said...

'நச்' கண்டிப்பா அவசியம்தான். அதிக பட்சம் பத்து நிமிஷத்துல மேட்டர் சொல்லி, ஒரு பெரிய திருப்பம் தந்தாதான், விருப்பத்தோட பாப்பாங்க. பாத்தவங்க, இன்னும் பலருக்கும் ஃபார்வார்டு பண்ணுவாங்க.

இது இல்லைன்னா, 'புவனேஷ்வரி'ன்னு ஒரு கதை 'நச்'சோட இருக்கு. அதுவும் பரிசீலனையில்.

திரைக்கதை எழுத என்ன அவசியம்னு ஒரு கேள்வி இருக்கு. நீங்க எழுதிக் கொடுத்தாலும், மண்டபத்துல கொடுத்தாங்கன்னு சொல்லி, நானே எழுதினதா கொடுக்க வாய்ப்பிருக்கு ;)

Porkodi (பொற்கொடி) said...

ஒண்ணு பண்ணலாம், டயலாக் இல்லாமல், சூழல் நடிப்பு இசை மூலமே கதையை சொல்லலாம். நல்ல மெலன்கலியா இருக்கும். ஆனா சரியான இசை செலக்ட் பண்ணலேன்னா பணால். ;)

சீன் 1: தாத்தா பாட்டி ஆர்வமாக பையன், பெண் குடும்பங்களுக்கு காத்திருக்கறது. வந்த மருமகள் நொடிக்கறது. கொஞ்சம் மனசொடிஞ்சாலும் தாத்தா கெத்தா தான் இருக்கார்.

சீன் 2: ஈஸிசேரில் இருக்கும் தாத்தா (பக்கத்தில் இருக்கும் பாட்டி) சின்ன வயதில் இருந்து இப்போது வரை சந்தோஷமான விஷயங்களை கொசுவத்தி சுற்றி பார்க்கிறார் (அவருடைய பார்வையில்).

சீன் 3: தாத்தா ஆஸ்ப‌த்திரியில் இருக்க‌ பாட்டி த‌ன்னோட‌ பார்வையில் கொசுவ‌த்தி (தாத்தாவை ப‌த்தி). பாட்டி சுமங்கலியா போய்டணும்னு நினைக்கறதை தெளிவா சொல்லணும். ந‌டுல‌ ந‌டுல‌ ஆஸ்ப‌த்திரி ச‌ங்க‌ட‌ங்க‌ள்.

சீன் 4: ப‌ச‌ங்க‌ளோட‌ விட்டேத்தித்த‌ன‌ம். பாட்டி ஒரு மாதிரி எதிர்கால‌த்தை க‌ற்ப‌னை செய்த‌ல். சும‌ங்கலி முடிவை மாற்றி கொள்ளுத‌ல். பாட்டி இப்போது இன்னும் திருப்தியாக‌ இருப்ப‌தை காமிக்க‌ணும்.

இருந்தும் ந‌ச் கொண்டு வ‌ர்ற‌து எப்ப‌டின்னு தெரிய‌லை. சும்மா ஒரு க்விக் ட்ராஃப்ட் தான், நீங்க சொல்ற அளவு சீரியசான முயற்சி இல்லை (5 நிமிஷத்துல எழுதி கிழிச்சதை பார்த்தாலே தெரியுதுன்னு சொல்றீங்க.. நோ நோ நோ பேட் வர்ட்ஸ்..)

இந்த படத்தோட வெற்றி படத்துல இருக்க மாதிரியே உருக்கமான தாத்தா பாட்டி கிடைக்கறதில இருக்குன்னு நினைக்கிறேன். நன்றி வணக்கம்.

SurveySan said...

டயலாக் இல்லாம, how to name it போட்டு எடுத்தா, அட்லீஸ்ட் மீஜிக் கேக்கவாவது ஒரு கூட்டம் வரலாம்:)

உங்க ஸ்க்ரீன்ப்ளே வடிவம் நல்லா இருக்கு. ஆனா, ஈஸீ சேரெல்லாம் வேணுமான்னு தெரியல்ல.

எம்.எஸ், சதாசிவம் ஃபோட்டோ பாத்ததும், எனக்கே இப்போ என் முடிவை மறுபரிசீலனை செய்யணும்னு தோணுது. இவ்வளவு அழகா கெத்தா நடிக்க ஆளை எங்கே தேடரது? நம்ம பசங்களுக்கு மேக்-அப்பெல்லாம் போட்டு எடுத்தா, காமெடி பீஸ் ஆகிடும் ;)

ராமலக்ஷ்மி said...

சொன்ன மாதிரி கதாபாத்திரத்தின் அதே வயது உடையவர்களாய் உணர்ந்து நன்கு நடிக்கக் கூடியவர்களாய் கிடைத்தால் முயன்றிடலாம்.

SurveySan said...

@ராமலக்ஷ்மி வருகைக்கு நன்னி. பாப்போம் யாராச்சும் மாட்றாங்களான்னு :)

Philosophy Prabhakaran said...

நண்பரே... குறும்படம் எடுக்க போறேன்னு சொல்லிட்டு இந்த மாதிரி வலைப்பூவில் கதையை வெளியிடாதீங்க... எவனாவது சுட்டுடுவான்...

Thirumalai Kandasami said...

ஆமா பாஸ் ,பிலாசபி சொன்ன மாதிரி கதையை சுட்டுருவானுங்க,
கிளைமாக்ஸ் ,

மகள் ஓடி வருகிறாள்,அப்பா,அம்மா நம்மளை விட்டு போய்ட்டாங்க,கதறுகிறாள்.
தாத்தா கண் திறக்கிறார்,
பாட்டி உள்ளே வந்து,எப்படி என் அதிர்ச்சி வைத்தியம்?
தாத்தா -- ??

பாஸ் எனக்கு சீரியஸ் னா அலர்ஜி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குறும்படம் எடுக்க நல்ல தீம். இப்படி எல்லார்ட்டியும் சொல்லிட்டு இருக்காதீங்க,யாராவது சுட்டுப் பிடுவாங்க,சுட்டு!

SurveySan said...

@Philosophy Prabhakaran ஞாயமான கருத்து. ஆனா, குறும்படம் எப்ப எடுத்து எப்ப விடரது? அது வரை கதையை அடை காக்க முடியாதுன்னு, வெளீல ரிலீஸ் பண்ணியாச்சு. சுட்டா சுடட்டும். கேஸ் போட்டு compromise பண்ணிடலாம் :)

SurveySan said...

@Thirumalai Kandasami comedy piece ஆயிடுமே? :)

SurveySan said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி மேலே சொன்னதுதான். சுட்டாங்கன்னா ஒரு கை பாத்ருவோம் ;)