recent posts...

Sunday, May 31, 2009

படங்கள் வரும் முன்னே - பாரிஸ்

இதற்கு முந்தைய பதிவில் லண்டன் பயணத்தின்போது எடுத்த படங்களைப் பார்க்காதவர்கள், இங்கே அமுக்கி பாக்கலாம்.
லண்டன்லேருந்து பாரிஸ்க்கு, யூரோ-ஸ்டார் ரயிலில், (500 கி.மீட்டர் தூரம்), 2 1/4 மணி நேரத்தில் கொண்டு போய் விட்டுடறாங்க. இதில் 50 கி.மீட்டர் தூரம், கடலுக்கடியில் இருக்கிறது. மண்ணுக்கடியில் குடைந்து ரயில் விடரதுலையும், மலையக் குடையரதுலையும், கடலுக்குள் குடைந்து ரயில் பாதை அமைப்பதிலும், செம தில்லாலங்கடியா இருக்கானுவ தொரைங்க.
என்னமா கொடஞ்சு வச்சிருக்காங்க?

லண்டனைப் போலவே, பாரிஸிலும் பலப் பல க்ளிக்குகள்.
ஆனா, பாரிஸில் ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும், பாரிஸ் பற்றிய பிம்பம் தகிடு பொடியானது. பளபளப்பு இல்லாதா, 'சாதா' நகரமாய் தெரிந்தது.
குறிப்பா, தெருமுழுக்க கிறுக்கி வச்சிருக்கானுங்க. தெருவோரத்தில் நிற்கும், 'அல்ஜீரியா' நண்பர்கள், திகிலை ஊட்டினார்கள்.

la chapelle என்ற இடத்தில் இரண்டு மூன்று தெருக்களில், பல ஈழத் தமிழர்களின் கடைகள். தெருமுழுக்க, தமிழில் பெயர் பலகைகளுடன் பலப் பல உணவகங்களும், மற்ற கடைகளும்.
அங்கே சந்தித்த ஈழத் தமிழர் ஒருவர், கன்னா பின்னான்னு உதவி பண்ணுனாரு. கூடவே நடந்து வந்து, பாஷை தெரியாத ஊரில், அடுத்த நாளுக்கு தேவையான ரயில் டிக்கெட்டெல்லாம் வாங்கிக் கொடுத்து, இதப் பாருங்க, அங்கப் போங்கன்னு எக்கச்சக்கமா அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்சாரு.
ரெஸ்டாரண்டிலும், அன்னிக்கு ராத்திரி இட்டாலிக்கு கெளம்பறேன்னதும், ராத்திரிக்கு ரயில் ப்ரயாணத்துக்கு தேவையான பிரியாணியை பொட்டலம் பண்ணிக் கொடுத்து விட்டாங்க.
நல்ல மனுஷங்க.

ஒரு நல்ல டிப்பும், கொடுத்தாரு. "பணமெல்லாம் பத்திரம். கள்வர்கள் பயம் அதிகம். ஜீன்ஸ் பொக்கெட்ல பத்திரப் படுத்திக்கோங்க பணம், பாஸ்போர்ட்டெல்லாம்"ன்னாரு.
அல்ஜீரியாவிலுருந்து வந்த கும்பலில் பலர் பிக்-பாக்கெட் அடிக்கும் ஜேப்டி திருடர்களாம்.
அடங்கொய்யால. இங்க வந்து, ஏதாவது காணாம போச்சுன்னா அதோகதிதான். அதனால, ரொம்பவே கவனமா இருந்தேன்.

அல்ஜீரியாவாசிகள், பாரிஸை நாசம் பண்ணி வச்சிருக்காங்க. அழகான ரயில்களை, கிறுக்கியும், சுறண்டியும், கண்றாவியா ஆக்கி வச்சிருக்கானுங்க.
குடிச்சுட்டு, ரயிலில் அவனுங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியல்ல. போலீஸ் சரியில்லையோ?

ப்ரவுஸிங் செண்டரில் இருக்கும்போது, ஒரு ச்ர்தார்ஜி அலரி அடிச்சுக்கிட்டு உள்ள வந்து, "how can i call police?"னு கேட்டாரு. அவரோட பர்ஸை அடிச்சுட்டானுங்களாம், கெரகம் புடிச்சவனுங்க. ஹ்ம்!

ச! வெறும் படம் மட்டும் போடலாம், கதையெல்லாம் தனியாச் சொல்லலாம்னு நெனச்சிருந்தேன். தட்ட ஆரம்பிச்சா, வார்த்தைகள் கொட்டரத நிறுத்த முடியல்ல ;)

படங்களைப் போடும் முன், ஒரு சேதி.
பாரிஸ் தெருமுனையில், ஒரு தமிழ் புத்தகக் கடையில், பதிவர் யெஸ்.பாலபாரதியின், அவன் - அது = அவள், விற்பனையில் இருந்ததைக் காண நேர்ந்தது.

சரி, இனி படங்கள் சில. (Click to view them big.)

Notre Dame Cathedral. 1160 ~ 1345ல் கட்டப்பட்டது. Napoleon போன்ற பேரரசர்களுக்கு பதிவியேற்பெல்லாம் இங்கதான் நடக்குமாம்.


Notre Dame


Louvre Museum ல், Napoleon Apartmentனு சில ரூமை காட்சிக்கு வச்சிருக்காங்க. அதிலிருக்கும் ஒரு நாற்காலி. இதுல மூணு பேரு ஒக்காந்து எப்படி பேசிப்பாங்கன்னு நெனச்சப்போ, சிரிப்புதான் வருது. என்னென்னமோ கட்டனுவங்களுக்கு ஒரு நாற்காலி சரியா பண்ணத் தெரியாமப் போச்சேய்யா :)


பெருசா ஒண்ணும் இருக்காதுன்னு நெனச்சேன். ஆனா, ஈஃபில் டவர் ஒரு ப்ரமிப்பு. அதுவும், ராத்திரி பாக்க ரொம்பவே அழகு.


Louvre museum போனதே, அங்கேயிருக்கும், மோனாலிஸாவை பாக்கணும்னுதான். ஆனா, அங்கயிருக்கர மத்த ஓவியங்களும், சிற்பங்களும், "அம்மாடியோவ்'னு அலர வைக்கும் தரத்தில் இருக்கு. லியானார்டோ டா வின்ஸி, மைக்கலாஞ்சலோ போன்ற மேதாவிகளின் பலப் பல படைப்புகள் பாதுகாத்து வச்சிருக்காங்க. ம்யூசியம் மட்டும் பாக்கவே அஞ்சு நாள் தேவைப்படும். அம்மாம் பெருசு. பார்த்த சிற்பங்களில் வெகுவாய் கவர்ந்தது இது. மெத்தையையும் தலையணையையும் எப்படி செதுக்கி வச்சிருக்காங்க பாருங்க. அமேசிங்!


ம்யுசியத்தில் பார்த்த ஓவியத்தில் பயங்கரமாய் கவர்ந்தது, ஒரு பெரிய படம். போரில் மறைந்த கணவனை மடியில் போட்டுக் கொண்டு அழும் மனனவி. கீழே ரெண்டு குட்டிப் பசங்களும் அழறாங்க. தத்ரூபமான ஓவியம். குழந்தையின் கண்ணில் கண்ணீர் துளி. அமேசிங்!


Louvre Museum


Sacre Ceur cathedral (அருமையான சர்ச். ஆனா, போர வழி முழுக்க படிக்கட்டுகளில், பீர் பாட்டில்களை ஒடச்சு வச்சிருக்காங்க. சில இடங்களில் 'கப்பும்' அடித்தது. கெரகம் புடிச்சவனுங்க)


Louvre


குட்டிக் கார்.

Thursday, May 28, 2009

படங்கள் வரும் முன்னே...லண்டன்

ஒரு வழியாக ஐரோப்பா பயணம் இனிதே முடிந்தது. அருமையான பத்து நாட்கள்.
பலப் பல அனுபவங்கள்,
பலப் பல செலவுகள்,
பலப் பல நிகழ்வுகள்,

முக்கியமா,
பலப் பல க்ளிக்குகள்.

லண்டன், பாரிஸ், ரோம், வென்னிஸ் இந்த பயணத்தில் கண்டு களித்த நகரங்கள்.
கதையெல்லாம் சொல்றதுக்கு முன்னால, சில படங்கள் மட்டும் இப்போதைக்கு.

லண்டனில் க்ளிக்கியவை.
Tower Bridge. ரொம்ப நாளா இதுதான் லண்டன் ப்ரிட்ஜுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இல்லியாம். இதுக்கு பக்கத்துல, மொக்கையா இருக்குது லண்டன் ப்ரிட்ஜு.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷ்டி தொல்ல தாங்க முடியல்ல. please donate for building a temple. நான் சாரி, நோன்னு சொன்னேன். அதுக்கு, Wont you spare 1 pound for building a temple?ன்னான். நான் அதுக்கும், 'நோ'ன்னு சொன்னேன். ஆனா, ஜாலியா இருக்காங்க இவனுவ. குடுமியும், ஆட்டமும், பாட்டமும். ஹ்ம்!

பூச்சியத் தின்னும் பிட்சர் செடி.

லண்டன் ஐ. ரங்க ராட்டணம்.


Westminster Abbey, பல பெரிய தொரைகளையெல்லாம்இங்க மந்தரம் சொல்லித்தான் அடக்கம் பண்ணாங்களாம்.


லண்டன் டாக்ஸி டாக்ஸி.

எலிசபெத் ராணி வூடு. தொப்பித் தலையனுங்க, இங்கையும் அங்கையும் லெஃப்ட் ரைட்டு போரத பாக்க பெரிய கூட்டம் நிக்குது. செம போர்!

தேம்ஸ் நதி.


Lastly, லண்டன் பார்லிமெண்ட் முன், ஈழத் தமிழர்களின் போராட்டம் சென்ற வாரத்தில் நடந்தது. பிரபாகரன் மறைந்து விட்டார் என்ற செய்தி/வதந்தி கசியும் முன்னே எடுத்த படம். சில விஷமிகள், அங்க இருக்கர ட்ராஃபிக் லைட் கம்பத்தில் ஏறி புலிக் கொடி கட்டியபோதே, ஏதோ விபரீதம் இருக்கும்னு நெனச்சேன். "நமக்கேன் வம்பு. விடு ஜூட்டு" என்ற உன்னத தமிழக கொள்கை ரத்தத்தில் ஊறி உள்ளதால், அசம்பாவதிங்களுக்கு முன் எஸ்கேப்பிட்டேன். அடுத்த நாள் செய்தியில், சில கைகலப்பு சம்பவங்களும், கைதுகளும் நிகழ்ந்ததாக கேள்விப்பட்டேன். பாரிஸிலும், சில ஈழத் தமிழர்களின் பரிச்சயம் கிட்டியது. அது அடுத்த போஸ்ட்டில். ரொம்பக் கொடுமைங்க அவங்க நெலமை! ஹ்ம்!

சொல்லடி பராசக்தி - by a friend

உயிர் தமிழுக்கும்
உடல் மண்ணுக்கு என
உறுதிகொண்டு போராடும்
என்னைப்போல் ஒரு
தமிழனை இரையாக்கி
விளையாடுவது உன் பொழுதுபோக்கா ?
புவியாளும் பராசக்தி

ஈழத்தில் விழுந்தாலும்
சிங்கள கொடுங்கோல்
நரக ஆட்சியிலே நாங்கள்
மானத்தோடு விழுந்தோம்

ஆயிரம் ஆயிரமாய்
தமிழனின் குருதியினை
இந்தியக்கடலோரம் இப்புவியினில்
ஆறாய் நீர்பாய்ச்சியும்
உன் தாகம் தீரவில்லயா ?
பாராளும் பராசக்தி

பாரதி கூறியதுபோல
சுடர் மிகும் அறிவுடன்
எங்களை படைத்துவிட்டு
பின் தியாகச்சுடராய் மாற்றி
உன் படையிப்பினிலே
வேடிக்கை காண்கின்ராயோ ?
சொல்லடி பராசக்தி

-பிரபாகர்

ps1: also, read Rakshasa Rajapakshe

ps2: IE8 pops a 'operation aborted' message on many blogs, including mine. anyone has any idea how to fix?

Tuesday, May 26, 2009

ராக்ஷசா ராஜபக்ஷே - by a friend

நீ ஒரு சிங்களன் என்ற
அகந்தையை அகற்றி
மனிதனாக முயற்சித்து
வரலாற்றை புரட்டிப் பார்

மாபெரும் வல்லரசு
மன்னனாகிய ஹிட்லர் கூட
போர் முனைக்கு சென்றான்
ஆனால் நீயோ உன்
இராணுவத்துணை இன்றி
தெருமுனைக்குக் கூட
செல்ல அஞ்சும் பேடிப்பயல்

என் போல் தமிழனுக்கு
உன் போல் கோழையோடு
போராடுவது மரபல்லவே!
ஆகையினால் பிழைத்துப்போ
நாளைய சரித்திரத்தில்
உனக்கும் ஓர் இடம் உண்டு
மாபெரும் பேடிப்பயல் என்று!
கோழை கயவன் என்று!

பட்டு பாவாடை கட்டி
இரட்டை பின்னலிட்டு
அம்மா என்று ஆசை
முத்தம் இட்டு பாலருந்தி
பள்ளிக்கு செல்லும்
அருமை பச்சிளங்குழந்தைகளையும்
பாலகர்களையும் கொன்றாயே
இரக்கமற்ற அரக்கனே
உன்னை சரித்திரம்
மறவாது மன்னிக்காது!

incidentally, my friends name is Prabhakar.

Tuesday, May 12, 2009

விக்கியில் ஒரு கூத்தாடி

சான்ஃப்ரான்ஸிஸ்கோ வாசிகள் அடிக்கடி போய் வரும் இடம் இரண்டு.
ஒண்ணு, கோல்டன் கேட் என்னும் தொங்கு பாலம், இன்னொண்ணு அதுக்கு பக்கத்துல்ல இருக்கர fishermans warf என்ற குட்டி மார்க்கெட்.

கோல்டன் கேட் பரவால்ல, ரொம்ப ரம்யமான விஷயம் வேடிக்கை பாக்கவும், அதுக்கு மேல நடக்கவும். இந்த ஃபிஷ்ஷர்மேன் வார்ஃபில் அப்படி என்னதான் சங்கதி இருக்கோ தெரியல்ல, எப்பப் பாத்தாலும் கூட்டம் இருக்கும்.
இத்தனைக்கும் அங்க இருக்கரது வெறும் உணவகங்களும், குட்டிக் குட்டி கடைகளும் மட்டுமே.
தெருவில் பிழைப்பை நடத்தி வரும் கூத்தாடிகள் கொஞ்சமாய் சுவாரஸ்யம் கூட்டுவார்கள்.
குறிப்பா, ஸ்ப்ரே பெயிண்ட் வச்சுக்கிட்டு ஒருத்தர் செம சூப்பரா படம் வரைவாரு, அமக்களமா இருக்கும் வேடிக்கை பாக்க.

நான் முதல் முதலில் சில பல வருஷங்களுக்கு முன்னாடி ஃபிஷ்ஷர்மேன் வார்ஃபுக்கு போகும்போது எம்மை வித்யாசமாய் கவர்ந்தவர், "Bushman" என்ற நவீன கூத்தாடி.

தெருவோரத்தில் ஒக்காந்துக்கிட்டு, சில மரக்கிளையை முன்னால் பிடிச்சுக்கிட்டு, ஒளிஞ்சுப்பாரு.
எதிர்ல வர அப்ராணி கூட்டத்தை, திடீர்னு, 'ஹோ'ன்னு கத்தி பயப்படுத்துவாரு.

டங்குவாரு கிழிஞ்சு போன டூரிஸ்ட் வாசிகள், பயத்தில் அலறி, பின் இவரைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு, சில டாலர்களை போட்டு விட்டு போவார்கள்.

இவரு பக்கத்துல நின்னுக்கிட்டு வருவோர் போவோர் இவர் செய்யும் லூட்டியால் பயத்தில் அலறுவது, பாக்கரது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம். ( நமக்கு அடுத்தவன் கஷ்டப் படரத பாத்தா அல்வா சாப்பிடர மாதிரியாச்சே :) )

சென்ற வாரம் அதே இடத்துக்கு, எமது குடும்ப நண்பர் ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போகும்போது, புஷ்மேனைப் பார்த்தேன். பல வருஷமா ஒரே தொழிலை, ஸ்மூத்தா செஞ்சுக்கிட்டு இருக்காரேன்னு ரொம்ப ஆச்சரியப்பட்டுட்டேன்.
வீட்டுக்கு வந்து அவரப் பத்தி எவனாவது ப்ளாகியிருக்கானான்னு தேடினா, அவரைப் பத்தி விக்கியிலேயே 'world famous busman'ன்னு எழுதி வச்சிருக்காங்க.

ஆச்சரியம்தன், உலகிலேயே, விக்கியில் ஒரு பக்கம் கிடைக்கப்பெற்ற ஒரே கூத்தாடி இவராகத் தான் இருக்கும்.

இவரு, இந்தத் 'தொழிலை' 1980ல் தொடங்கினாராம்;
பலரும் பல 'public nuisance' புகார்களை கொடுத்தும், ஒண்ணியும் பண்ண முடியலையாம் இவரை;
ஒரு வருஷத்துக்கு 60,000 டாலர்கள் வரை சம்பாதிப்பாராம்;
சொந்த செலவில் ஒரு பாடிகார்ட் வைத்திருக்கிறாராம் - மற்ற லொள்ளுபாண்டிகளிடமிருந்து தன்னை காக்கவாம்;
ஹ்ம். கலக்கறாரு மனுஷன்.

30 வருஷமா, 'ஹோ ஹோ'ன்னு தினசரி கத்திக்கிட்டு பொழைப்ப ஓட்டிக்கிட்டு இருக்காரு.
amazing.

60,000 டாலர் ஒருவருஷத்துக்கு;
வருமான வரியெல்லாம் இருக்காது;
அடிச்சு புடிச்சு செலவு செஞ்சா கூட, 40,000 கையில நிக்கும்;
முப்பது வருஷத்துக்கு, 1,200,000
மனுஷன் மில்லினியருடோய். அடுத்த முறை பாக்கும்போது சலாம் போடணும் :)

சென்ற வாரம் க்ளிக்கிய சில படங்கள் (ஃபோட்டோவில் பயந்து நடுங்கும் ஆத்தாக்கள் மன்னிப்பார்களாக)





யூ.ட்யூபில் புஷ்மேன்.

என்சாய்!

Monday, May 11, 2009

வாரணம் 1000 லொகேஷன்

இப்பெல்லாம் எங்கூர (சான்ஃப்ரான்ஸிஸ்கோ) வேடிக்க பாக்க வரவங்க, வாரணம் ஆயிரம் எடுத்தாங்களே, அந்த எடத்த காட்டுங்கன்னுதான் வராங்க.

goldengate bridgeஐ ஆயிரம் தடவை பாத்த பிறகு, இந்த மாதிரி ஒரு புது உந்துதலுடன், திரும்ப அந்த இடங்களுக்கு போரது புது சுவாரஸ்யத்தை தருது.

1) Palace of Fine Arts - San Francisco (HDR)


2) அதே அதே


3) கோல்டன் கேட் - சான்ஃப்ரான்ஸிஸ்கோ


4) அதே அதே

Wednesday, May 06, 2009

அல்பைகள் ஆயிரம்

படித்த காலத்தில் பணப் புழக்கம் கையில் அவ்வளவாக இல்லாததால், பணத்தின் அருமை அளவுக்கு அதிகமா தெரியுது.

ஒவ்வொரு பைசா செலவு செய்யும் போதும், இது கண்டிப்பா தேவையா, இதை விட குறைந்த செலவில் இதைச் செய்யமுடியுமான்னு பல தடவை திங்க் பண்ணி திங்க் பண்ணிதான் எல்லாத்தையும் வாங்குவேன்.

சமீபத்தில் அந்த பணப் பற்று கொறஞ்சுக்கிட்டே வருது. ஏற்கனவே சொன்ன மாதிரி, பங்குச் சந்தை குறைவதும், அதனுள் இருக்கும் நம் சேமிப்புகள் கரைவதும் வாடிக்கையாய் நடப்பதால், "பணம் என்னடா பணம் பணம்"னு டி.எம்.எஸ் கணக்கா மனசாட்சி பாடிக்கிட்டே இருக்கு.

இந்த பக்குவ உன்னத நிலையை அடைய, ஆர்ட்-ஆஃப்-லிவ்விங்கோ, சுவிசேஷ கூட்டங்களுக்கோ போக வேண்டியதில்லை.
ஒரு பத்தாயிரத்தை எடுத்து, ஒரு வங்கியின் ஸ்டாக் வாங்கிப் போட்டு, தினசரி அதன் விலையை பாத்தாலே போதும். நீங்களும், ஜோதியில் ஐக்கியமாயிடலாம். :)

எல்லாம் அவன் செயல்.

துட்டு சம்பாதிச்சு செலவு செய்யும் மனிதர்களை மூணா பிரிக்கலாம்.
அ) கண்ண மூடிக்கிட்டு செலவு பண்றவங்க (spendthrift)
ஆ) கொஞ்சம் யோசிச்சு செலவு பண்றவங்க (frugal)
இ) கஞ்சப் பசங்க (miser)

இதுல நீங்க எந்த வகைன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

எனக்குத் தெரிஞ்சு, "ஆ"வா இருக்கரதுதான், சாலச் சிறந்தது. நான், ஆ!

ஆனா, இந்த மூணிலும் சேராம ஒரு வகை இருக்கு. அந்த வகையா இருக்கரவங்க, யாரா இருந்தாலும், உடனே உங்கள மாத்திக்கங்க.

அது,
ஈ) அல்பப் பசங்க (stingy bloody miser)

என் நண்பனுக்கு நடந்த விஷயம் இது, சில வருஷத்துக்கு முன்னாடி.
டாலர் தேடி வரும், பலரும் செய்வதைப் போலவே, இவனும், வேறு சிலருடன் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் கூட்டுக் குடித்தனும் இருந்திருக்கிறான். நாலு பேர் இருப்பாங்களாம்.

அதில் ஒருத்தன் ஈ வகையாம்.
ஒவ்வொரு நயா பைசாவுக்கும் கணக்குப் பார்க்கும் டைப்பாம்.

அதிலென்ன தப்பு?

இல்லதான்.

ஒரு அழகிய ஞாயிற்றுக் கிழமை, சோத்த தட்டுல போட்டுக்கிட்டு சாப்பிட ஆரம்பிச்சாங்களாம்.

அருகில் இருந்த ஊர்காய் பாட்டிலில் இருந்து, ஒரு ஸ்பூன் ஊறுகாயை நண்பன் எடுத்துப் போட்டுக் கொண்டானாம்.
அதைப் பார்த்த ஈ, "டேய், என்னோடதுடா அது, ஏண்டா எடுக்கர? உனக்கு வேணும்னா, ஒரு பாட்டில் வாங்கி வச்சுக்கோ"ன்னானாம், பயங்கர டென்ஷனா :)

இப்படியெல்லாம் கூட மனிதர்கள் உண்மையாவே இருப்பாங்களான்னு எனக்கு பல முறை பல விஷயங்கள் பார்க்கும்போதும் கேட்கும்போதும் தோணும்.

பங்குச் சந்தை பார்த்துப் பார்த்து பணம் மேல் பிடிப்பு போன மாதிரி, பதிவுச் சந்தை பாத்து பாத்து எல்லா விதமாவும் மனுஷங்க இருப்பாங்கன்னு தெளிவு வந்தாச்சு ;)

எல்லாம் அவன் செயல்!

பி.கு: கஞ்சப்பய ஜோக்கு ஒண்ணு, மடலில் வந்தது:
ஒரு கஞ்சப் பய சாகரதுக்கு முன்னாடி, தன் மனைவியிடம், "அடியே நான் செத்தா என் எல்லாப் பணத்தையும் என்னோட சேத்து பொதச்சுடணும். நான் சொர்கத்துல அத யூஸ் பண்ணிக்குவேன்"னு சொல்லி மனைவியிடம் சத்தியம் செஞ்சு வாங்கிக்கிட்டானாம்.
ஒரு நாள் மண்டையும் போட்டுட்டானம்.
அவனின் சவப் பெட்டியை மூடுவதர்க்கு முன், மனைவி, ஒரு பையை அதுனுள் வைத்து விட்டு வந்தாளாம்.
மனைவியின் ஃப்ரெண்டு "நெஜமாவே பணத்தையெல்லாம் சவப் பெட்டியில் புருஷன் கூடவே போட்டு பொதைக்கறியா"ன்னு கேட்டாளாம்.
அதுக்கு மனைவி நமுட்டு சிரிப்புடன், "ஆமா, சொத்தின் மொத்த மதிப்புக்கும், புருஷன் பேரில் ஒரு செக் எழுதி அதை பெட்டியில் போட்டுட்டேன். அவரு சொர்கத்துக்கு போய் அந்த செக்கை காசாக்கிக்கட்டும்"னு சொன்னாளாம்.

Tuesday, May 05, 2009

ஐரோப்ப பயணம்...

ஐரோப்ப பயணம் செல்ல வேண்டும் என்ற நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட கால எண்ணம் கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது.

உலகமே, பெரும் பின்னடைவில் இருக்கும்போது, இதுநாள் வரை கட்டிக்காத்த சில பல டாலர்களை விட்டெறிந்து, பவுண்டிலும், யூரோவிலும் செலவு செய்தல், உலகத்தை முன்னேற்ற என்னாலான சிறு தொண்டு :)

அது என்னமோ தெரீல, என்ன மாயமோ புரீல, கடைக்கு போய் வெங்காயம் வாங்கணும்னா, இந்தக் கடைல ஒரு பவுண்டுக்கு $0.19, பக்கத்து கடைல வெறும் $0.17 தான்னு கணக்கு பாத்து வாங்கரவங்க, செலவு சில ஆயிரங்களைத் தொடும்போது, எல்லாத்தையும் லூஸ்ல விட்டுடறோம்.

பங்குச் சந்தை, கட்டவிழ்ந்த பலூன் போல் சர்ர்ர்ர்ர்ர்னு சுருங்கிய போது, சில பல லட்சங்களும் ஆயிரங்களும் ஓவர்நைட்டில் காணாமல் போனது வலிக்கவில்லை.
ஆனா, $8 டாலர் கொடுத்து வாங்கர டி.ஷர்ட், அடுத்த வாரம் அதே கடைல, $4 டாலருக்கு போட்டிருந்தா, 'அடடா', $4 போயிடுச்சேன்னு அங்கலாய்க்கிறோம்.
இது ஏன்னு புரீல.

பத்துகள் செலவு செய்யும்போது, சில்லரைகளுக்கு பேரம்;
நூறுகள் செலவு செய்யும்போது, பத்துகளுக்கு பேரம்;
ஆயிரம் செலவு செய்யும்போது, நூறுக்கு பேரம்;
லட்சங்கள் செலவு செய்யும்போது, ஆயிரங்களுக்கு பேரம்;

ஆயிரங்கள் செலவு செய்யும்போது, சில்லரைகளைப் பத்தி கவலைப் படரது இல்ல. அப்ப, வாழ்க்கை முழுதும், சில்லரைகளைப் பத்தி கவலைப் படாமயே இருந்திடலாம்ல. ஏன், அப்பப்ப மட்டும் நொந்து நூலாகணும்? எவ்வளவோ நேர விரையத்தையும் மன உளைச்சலையும் குறைக்கலாம். முயற்சி செய்யணும்.

இங்க வெள்ளக்காரப் பயலுவ சில பேர் பாத்திருக்கேன். எலெக்ட்ரானிக்ஸ் கடைக்கு வருவாங்க, ஒரு கூடைய எடுப்பாங்க,அவங்க வாங்க வேண்டியதெல்லாம், டக்கு டக்குனு எடுத்துக்கிட்டு கூடைல போட்டு பில்லை போட்டு வாங்கிட்டு போயிக்கிட்டே இருப்பாங்க. வெலையக் கூடப் பாக்க மாட்டாங்க.

ஆனா, நான் ஒரு பொருள வாங்கணும்னா, ஐந்தாண்டு திட்டம் போட்டு, எந்தக் கடைல எப்ப கம்மியாக் கிடைக்குதுன்னு, என் முழு நேரத்தையும் அற்பணம் பண்ணித்தான் வாங்கறேன்.
வாழ்க்கைல பாதி நேரம் டாலர் சேமிக்க செலவாகுது. ஆனா, இப்படி சிறுகச் சிறுகச் சேமித்த டாலரு, ஸ்டாக் மார்க்கெட்டில் வழிச்சுக்கினு போயிடும்போது, பெருசா வலியும் வரது இல்லை.

என்ன மாயமோ என்ன ஜாலமோ?

இதே ரேஞ்சுல போயிக்கிட்டு இருந்தா, 'எதைக் கொண்டு வந்தோம்? உடன் கொண்டு செல்ல?"ன்னு கீதாச்சார மகுடி வாசிக்க ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை ;)

Sorry, I digress.

ஐரோப்பா பயணம் சொன்னேன்ல.

லண்டன், பாரிஸ், ரோம் பாக்கலாம்னு ஆசை.

இந்த மூன்று நகரங்களில், "கண்டிப்பா பாக்கணும்"னு என்னென்ன இருக்குன்னு, வெவரம் தெரிஞ்சவங்க, சொல்லிட்டுப் போங்க.


நன்னி!

கீழே படங்கள் நானெடுத்ததல்ல. ஆனா, இப்படியெல்லாம் கூடிய விரைவில் எடுக்க ஆசை! ;)