recent posts...

Thursday, June 25, 2009

மைக்கேல் ஜாக்ஸன்...

மைக்கேல் ஜாக்ஸன். பள்ளி பயின்ற காலத்தில், இவரின் Bad பாட்டை முணு முணுக்காத வாயே இருந்திருக்காது. வார்த்தை புரிஞ்சுதோ இல்லியோ, 'I am bad! I am bad!'னு பாத்ரூம்ல, சோப்பை மைக்கா நெனச்சுக்கிட்டு எல்லாரும் அலப்பர பண்ணியிருப்போம்.

அடேங்கப்பா! எவ்ளோ பாடல்கள்? எவ்வளவு எவ்வளவு வித்யாசமான பாடல் காட்சி அமைப்பு? அசத்தல் ரகம்.
Remember the timeனு ஒரு பாட்டுல, சர்ர்ர்னு சுத்தி தூசியா மாறுவது போன்ற கிராஃபிக்ஸ், பட்டையை கிளப்பிய ரகம்.

"they dont really care about all us"னு ஒரு பாட்டு. ப்ரேசில் தெருக்களில், பெரிய பெரிய ட்ரம் அடிச்சுக்கிட்டு, அம்சமா படமாக்கப்பட்ட பாட்டு.

heal the world, man in the mirror, black or white, i just cant stop loving uனு அடுக்கிக்கிட்டே போகலாம்.

என் personal favourite, Liberian Girl என்ற பாடல். எங்க கும்பலில் இருக்கும் 'பீட்டரு' ஒருத்தன், சூப்பரா பாடுவான் அதை. சிங்கிள் டீ நாயர் கடைல குடிச்சுக்கிட்டு, ரிப்பீட்டு கேட்டுக்கிட்டே இருப்போம்.

நேத்து கூட எங்க ஊர்ல, ஸம்மர் மூஜிக் ஃபெஸ்டிவல்னு, தெரு மூலையில மேடை போட்டுக்கிட்டு, குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தானுங்க. Billi jean பாட்டை பாடியதும், மத்த பாட்டுக்கெல்லாம் இருந்ததை விட பத்து மடங்கு ஆரவாரமும், ஆட்டமும் இருந்தது.

ஒடுக்குப்பட்ட ஒரு இனத்திலிருந்து, இவ்ளோ பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதிலேயே, அவரின் திறமை எம்மாம் பெருசுன்னு விளங்கும்.

த்ரில்லர் ஆல்பம் மட்டும் 104மில்லியன் சிடிக்கள் விற்கப்பட்டு, உலக சாதனை புரிஞ்சுருக்கு.

ஜாக்ஸன் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார் என்ற சேதி பேரிடி!

அடுத்த வருடம், ஒரு farewell tour லண்டனில் பாடி அசத்தப் போவதாக சென்ற மாதம் கூட ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அறிவிப்பு வந்த அடுத்த நாளிலேயே எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீருந்துவிட்டதாம். தலைவருக்கு இன்னும் மக்கள் மத்தியில் இருக்கும், மதிப்பு இதிலிருந்து தெரிகிறது.

ஒரு முறை கூட இவரின் ஆட்டத்தை நேரில் பார்க்க முடியாமல் போனது, பெரிய துரதிர்ஷ்டம் :(

ஜாக்ஸன் தலைவா, வீ ஆர் கோயிங் டு மிஸ் யூ சார்!

Thanks for all the great songs!

Salute!


pic source: Wikipedia

Costco புகைப்படப் போட்டி

அமெரிக்காவில் Costco ப்ரசித்தி பெற்ற ஒரு பலசரக்குக் கடை.

அவங்க வருஷா வருஷம் புகைப்படப் போட்டி நடத்தறாங்க.

இந்த வருஷமும், ஜுலை 1, 2009 அன்னிக்கு ஆரம்பிக்கறாங்க.

போட்டியில் பங்கு பெற, Costco வில் நீங்க, மெம்பரா இருக்கணும்.

மெம்பரா இல்லாதவங்களும், அமெரிக்கவாசி அல்லாதவர்களும், உங்களின் அமெரிக்க நண்பர்களின் வாயிலாக, உங்க புகைப்படம் அனுப்ப முயற்சி பண்ணுங்க.

கெலிக்கரவங்களுக்கு நெரைய துட்டு தராங்க.

விவரங்கள் இங்கே:


போன வருஷம் ஜெயிச்ச படங்கள் இங்கே:


பரப்புங்க. அடிச்சு ஆடுங்க!

Sunday, June 21, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 2



"பொன்னியின் செல்வன் in a nut shell" முதல் பாகம் எழுதி நாலு மாசம் ஆயிடுச்சு. இரண்டாம் வால்யூமை படிக்க இவ்ளோ நாளாயிடுச்சு. பெருசா ஒண்ணும் வேல இல்லன்னாலும், ஏதாச்சும் வந்து, புக்கு படிக்கர நேரமில்லாம பண்ணிடுச்சு. சமீபத்திய ரோம் ட்ரிப்பின் ரயில் பயணத்தில் தான், இரண்டாம் வால்யூம் படித்து முடித்தேன்.

கதை செம சுவாரஸ்யமாய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல் வால்யூம் படிக்கையில், ஹீரோவாக நான் கருதிய வந்தியத் தேவன், இரண்டாம் வால்யூமையும் முழுதுமாக ஆக்ரமிக்கிறான். ஆனால், இரண்டாம் வால்யூமில், தசாவதார பல்ராம் நாயுடு கணக்காக, கொஞ்சம் காமெடியனாகவும் ஆக்கப்பட்டுள்ளான். ஆவலாய் எதிர்பார்த்த, இளவரசர் அருள்மொழிவர்மரும் இரண்டாம் வால்யூமில் சும்மா ஜம்முனு களமிறங்குகிறார். காமெடி, காதல், சஸ்பென்ஸ், ஃபைட், பாட்டுன்னு எல்லாக் கலவையும் இந்த வால்யூமில் கலந்து, பின்னியிருக்காரு கல்கி.

இனி, பொ.செ in a nut shell, இரண்டாம் பாகம் பாக்கலாம்.

முதல் பாகத்தில், இளவரசி குந்தவை தன் தம்பி அருள்மொழி வர்மருக்கு கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கிக்கிட்டு வந்தியத் தேவன் புறப்பட்டு கோடியக்கரையை வந்து அடைகிறான். ( கோடியக்கரையின் வர்ணனை அமக்களம். பாக்க வேண்டிய இடம் போலருக்கு. Flickrல் ஒரு படம் ஆப்டுது.பாருங்க. ). அங்க அழகான பூங்குழலியை சந்திக்கிறான். குந்தவையை பார்ததும் மயங்கிய வந்தியத் தேவன், இவளைப் பார்த்ததும் மீண்டும் மயங்குகிறான். நாலஞ்சு அத்யாங்கள், இவங்கள சுத்தியே போவுது. பூங்குழலி படகு ஓட்டுவதில் திறமைசாலி. அவளின் படகில் இருவரும் இலங்கைக்குப் போறாங்க. இலங்கையில் தான் இளவரசர் அருள்மொழிவர்மர் பெரும் படையுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறார்.

சுந்தர சோழர் பக்கவாதம் வந்து, தஞ்சைக் கோட்டையில், பழுவேட்டரையர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவருக்கும் ராஜ்யத்துக்கும் ஆபத்து நேரக்கூடும் என்ற பேச்சு பரவலாய் இருக்கிறது. இந்த நேரத்தில் தான் தன் தந்தையின் அருகில் இருக்க வேண்டும் என்று நினைத்து, குந்தவை, பழையாறில் இருந்து, தஞ்சாவூர் போகிறார். கூடவே பயணிக்கும் வானதியிடம், அருள்மொழி வர்மருக்கு, 'பொன்னியின் செல்வன்' என்ற பெயர்காரணம் என்னன்னு சொல்றாங்க.
அதாவது, சுந்தர சோழர் ஹெல்த்தியா இருக்கும் காலத்தில், மொத்த ஃபேமிலியோடு, பொன்னி நதியில் பெரிய படகில் இசைப் பரிவாரங்களுடன், உல்லாசமா போவாராம். அப்படி ஒரு தடவ போகும்போது, அருள்மொழிவர்மர் திடீர்னு பொன்னி நதியில் விழுந்துட்டாராம். எல்லாரும் அலறிப் போய் தேடிக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ, பொன்னி நதியிலிருந்து ஒரு பெண் , அருள்மொழியை கையில் ஏந்தியபடி வந்து, சுந்தர சோழர் கிட்ட கொடுத்துட்டுப் போனாங்களாம். அப்பரம், அந்தப் பெண் மாயமா மறஞ்சுட்டாங்களாம். அது கண்டிப்பா, பொன்னி நதியின் தெய்வம் தான்னு முடிவுகட்டி, அன்றிலிருந்து, அருள்மொழிவர்மரை, பொன்னியின் செல்வன்னு சொல்வாங்களாம். ( பட்டம் வெக்கரதுக்கு நம்மாளுங்களுக்கு சொல்லியா தரணும்? )

தஞ்சையை அடைந்த குந்தவைக்கும், நந்தினிக்கும் இடையில் நடக்கும் வார்த்தை ஜாலம், ஃப்ரிக்ஷன் எல்லாம் படிக்க படு சுவாரஸ்யம். சுந்தர சோழருக்கு உடல் நிலை மோசமாயிக்கிட்டே இருக்கு.
ஒரு நாள் இரவு, 'என்னைக் காப்பாத்துங்கன்னு' அவரு படுக்கையிலுருந்து அலற்றாரு. அதைக் கேட்டு வந்த வானதி, சுந்தர சோழரின் எதிரில், நந்தினியும் பழுவேட்டரையரும் இருக்கரத பாக்கரா. புகை மூட்டத்தின் நடுவில், 'பேய்' கெட்டப்பில் இருந்த நந்தினியை இவரு பாத்து ஏன் பயப்படறாருங்கருங்கர ஒரு முடிச்சு போடறாங்க.

அடுத்த நாள், சுந்தர சோழர், தன் ஃப்ளாஷ்பாக்கை தன் மகள் குந்தவையிடம் சொல்றாரு. சின்ன வயசுல ஏதோ ஒரு ஊருக்குப் போனவரு, அங்க இருக்கர ஒரு ஊமைப் பெண்ணை காதலித்தாராம். கொஞ்ச நாளில், க்டமை அழைக்க, ஊமைப் பெண்ணை அம்பேல்னு விட்டுட்டு திரும்ப வந்துடறாரு. அந்த ஊமைப் பெண்ணை அம்பேல்னு விட்டுட்டோமேங்கர கவலையிலேயே இவருக்கு அப்பப்ப ஒடம்பு சரியில்லாம போயிடுது. ஊமைப் பெண் இறந்து விட்டாள்னு சுந்தரர் நெனச்சுக்கிட்டு இருக்கார்.
தன் பெரியப்பாவின் மகன் உயிருடன் இருக்கும்போதே, தான் அரசாளத் தொடங்கியது தவறான ஒன்று, அந்தச் சாபம்தான் இன்று தன்னை வாட்டுவதாகவும், தன் மகன்கள் அருள்மொழிவர்மனும், ஆதித்த கரிகாலனும், இந்தச் சாபத்தை தொடரவேண்டாம் என்றும், தன் அண்ணன் மகன் மதுராந்தகத் தேவனுக்கே, அரசாளும் உரிமையை கொடுக்க வேண்டும் என்றும் குந்தவையிடம் சொல்கிறார்.

வந்தியத்தேவன் இலங்கையை வந்து சேருகிறான். எதிர்பாத்த மாதிரியே, ஆழ்வார்க்கடியானும் அங்க வந்துடறான். இவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. மாத்தி மாத்தி வாரிப்பாங்க.
ஆழ்வார்கடியானும், அநிருத்தப்ரம்மரிடமிருந்து (சுந்தரச் சோழனின் ஃப்ரெண்டும், அமைச்சரும்) ஒரு செய்தியை அருள்மொழிவர்மருக்கு தெரிவிக்க வரான்.
ரெண்டு பேருமா சேந்து, இளவரசரை பாத்துடறாங்க. இளவரசர்தான் இந்த நாவலின் ஹீரோ என்பது இரண்டாம் பாகத்தில் நிரூபணமாகிறது. இண்ட்ரொடக்ஷன் சீன் அமக்களம்.
(அதைத் தவிர, இந்த அருள்மொழிவர்மர் தான் பின்னாளில் இராஜ இராஜ சோழனாகிறான்னு அங்கங்க, வரலாற்றுக் குறிப்புகள், பல இடங்களில் கல்கி தெளித்திருக்கிறார்).

இளவரசரை, இலங்கையின் சிம்மாசனத்தில் உட்கார வைக்கவேண்டும் என்று ஒரு கோஷ்டியும், தஞ்சாவூருக்கு கூட்டிட்டுப் போகணும்னு வந்தியத் தேவனும்,
ஆதித்யகரிகாலன் கிட்ட கூட்டிட்டுப் போகணும்னு இன்னொரு கோஷ்டியும், இளவரசரை சாகடிக்க முயற்சி செய்யும் ஒரு கோஷ்டியும்னு பல கோஷ்டிகள் இருக்கு இந்த பாகத்தில்.
(குழப்பமான கதைக்களம் தான். முடிச்சு அவுர இன்னும் ரெண்டு பாகம் படிக்கணும் போலருக்கு).
திடீரென்று ஒரு ஊமைப் பெண்ணும், இலங்கை வீதியில் இளவரசருக்கு அப்பப்ப உதவி செய்யறாங்க. ( இந்த வயசான ஊமைப் பெண், சுந்தரரின் ஊமைப் பெண்ணாதான் இருக்குங்கரது, பல தமிழ் படங்கள் பாத்த நமக்கு ஊகிப்பது ஒரு பெரிய விஷயமில்லை). இளவயதில் பொன்னிநதியில் வீழ்ந்த அருள்மொழிவர்மரை காப்பாற்றியதும், இந்த ஊமைப் பெண்தான்னு தெரிய வருது அருள்மொழிக்கு.
இன்னும் சில குழப்பமான விஷயம் வருது. ஊமைப் பெண் வரைந்த சித்திரங்கள் சிலதை அருள்மொழிவர்மர் பாக்கறாரு. அதில், ஊமைப் பெண்ணுக்கு இரண்டு குழந்தை பிறப்பதாகவும், அவர்கள், சுந்தரசோழரின் மனைவி கூட்டிக் கொண்டு வளர்ப்பதாவும் சொல்றாங்க. நந்தினியும், ஆழ்வார்கடியானும், பூசாரியின் மக்கள். சின்ன வயசில் அரண்மனையில் ராணியிடம் கொண்டு விடப்பட்டு, அங்கேயே வளர்க்கப்பட்டவர்கள்னும், முதல் பாகத்தில் வரும். ஸோ, ஊமைப் பெண்ணின், பொண்ணுதான் நந்தினிங்கர ஒரு ப்ரமை வருது. ஆனா, நந்தினி பாண்டிய மன்னனை ஆதித்த கரிகாலன் கொன்ற காரணத்துக்காக சில 'பாண்டியர்'களுடன் சேர்ந்து சதி செய்வது போலவும் சொல்லப்படுது. (கொழப்பந்தான், அடுத்த பாகம் படிக்கர வரைக்கும்)
முதல் பாகத்தில், இந்த ஊமைப் பெண்ணைத் தவிர இன்னோரு ஊமைப் பெண்ணும் வந்திருந்தார்கள். அவங்க, பூங்குழலியின் அத்தை. சேந்தன் அமுதன் என்பவன், அந்த ஊமைப் பெண்ணின் மகன், பூங்குழலி மேல் காதல் கொண்டவன். முதல் அத்யாயத்தில், வந்தியத் தேவனுக்கு பெரிதும் உதவியவன்.
(இந்த ஊமைப் பெண்ணுக்கும், அந்த ஊமைப் பெண்ணுக்கும் இன்னா கனெஷ்க்ஷன்னு அடுத்த அத்யாயங்களில் தெரியலாம், ஏதாச்சும் இருந்தா)

இதற்கிடையில், வந்தியத் தேவனை இலங்கையில் விட்டுச் சென்ற பூங்குழலி, திடீர்னு திரும்ப அருள்மொழி வர்மரை தேடிக்கிட்டு வரா. கடலில் பெரிய கப்பல்களைப் பார்த்ததாகவும், பழுவேட்டரையரின் ஆட்கள், அருள்மொழிவர்மரை கைது செய்து கூட்டிக் கொண்டு போக வந்துருக்கரதாவும் சொல்றா. இதைக் கேட்ட அருள்மொழிவர்மர், இது சுந்தரச் சோழரின் கட்டளையாயிருக்கும், தானே சென்று பழுவேட்டரையரிடம் சென்று தஞ்சை செல்வதாகச் சொல்றாரு. எல்லாருமா, பழுவேட்டரையர்களின் படகை நோக்கிப் பயணிக்கறாங்க.
போற வழியில், யாரோ, இளவரசரை போட்டுத்தாக்க முயற்சிக்கறாங்க.

தேடி வந்த கப்பலில் ஒண்ணு உடைந்து போய் கரை சேர்ந்திருந்தது. அருள்மொழியும், பூங்குழலியும் இன்னொரு கப்பலைத் தேடிச் செல்ல, லேட்டா வந்த வந்தியத் தேவன், தூரத்தில் ஒரு கப்பல் போவதைப் பாத்து, அதில்தான் அருள்மொழி போரார்னு எண்ணி, கடலில் குதித்து நீந்தி அந்தக் கப்பலுக்குப் போயிடறான்.
கப்பலுக்குள் ஏறினா, அது வில்லன்ஸ் இருக்கர கப்பல். 'பாண்டியன்' ரவிதாஸன் -aka-'மந்திரவாதியின்' ஆட்கள், அருள்மொழியை போட்டுத்தள்ள வந்தவர்கள், அது நிறைவேறாமல் திரும்பப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அராபியர்கள் சிலரும் இருக்கிறார்கள். வந்தியத் தேவனை கட்டிப் போட்டுடறாங்க.

வந்தியத் தேவன், வில்லன் கப்பலில் ஏறிப் போனதை அறிந்த அருள்மொழிவர்மர், தன் அண்ணனின் நண்பன் பார்த்திபேந்திர பல்லவனின் கப்பலில் அதைத் தொடர்ந்து பிடித்து வந்தியத் தேவனை காப்பாத்தப் போறாரு. (பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் கெட்டுது போங்க. இவர் துரத்திச் சொல்வதும், இடையில் வரும் சூறாவளியும், மின்னல் அடித்து வந்தியத் தேவனின் கப்பல் எரிவதும், இளவரசர் வந்தியத் தேவனை காப்பாற்றிய பத்திகளும், அபாரமான வர்ணனை!). வந்தியத் தேவனை காப்பாற்றியதும், சூறாவளியால் இளவரசரின் கப்பலும் உடைந்து விடுகிறது.
ரெண்டு பேரும், ஒரு கட்டையை பிடிச்சுக்கிட்டு தத்தளிக்க, அந்த நேரம் பாத்து அங்கு படகில் வந்த பூங்குழலி ரெண்டு பேரையும் காப்பாத்திடறா.

*** தொடரும் ****

முதல் பாகத்தில் மெதுவா ஃபஸ்ட் கியரில் பயணித்த கதை, மாம்பலம் ரோட்டில் ஓடரது போல, சுத்தி சுத்தி ஓடி, குழப்பமா போய்க்கிட்டு இருந்துச்சு. பலப் பல பாத்திரங்கள், பலப் பல ஊர் பேர்கள்னு, ஒரு எக்ஸாமுக்கு படிக்கர மாதிரி இருந்தது.
இரண்டாம் பாகம், செகண்ட் கியருக்கு மாறி, பாதியிலேயே மூணாம் கியருக்கும் மாறி, விர்ர்ர்ர்ர்ர்ர்னு போயிக்கிட்டு இருக்கு.

அடுத்த பாகம் படிச்சு, கதை என்னாங்கரத சொல்றேன்.

இத யாராச்சும் ப்ரமாண்டமான திரைப்படமா எடுத்து ரிலீஸ் பண்ணா, புண்ணியமா போகும். இதை தமிழ் திரையுலகம் சார்ந்தவர்கள் செய்யவேண்டியது, அவர்களின் தலையாய கடமையாகும்!

நன்றி!

Tuesday, June 16, 2009

கன்னாபின்னா சிந்தனைகள் - வாழ்க்கையை அனுபவிக்கறீங்களா?

என் நண்பன் ஒருவன் இருக்கான். ஐ.டி வாழ்க்கையை முழுவதும் விட்டு விட்டு, ஃபுல் டைம் ஆன்மீக வாழ்க்கைக்கு சமீபத்தில் மாறிட்டான்.

அவன் என்கிட்ட அடிக்கடி சொல்ர விஷயம், "நீ ஏன் சாக்கடைல நெளியர புழுவா பொறக்காம, மனுஷனா பொறந்திருக்கன்னு யோசி."

இத ஏன் சொல்றான்னா, எல்லாரோட பொறப்புக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்காம். அத கண்டுபிடிச்சு, வாழ்க்கையை சரியா வாழணுமாம்.

"அப்படி ஏதாவது ஒரு காரணம் இருந்தா, அது தானா தெரிய வேண்டிய நேரத்துல தெரிஞ்சுட்டுப் போகட்டும். அதுவரை ஜாலியா இருக்கேன் வுடு. அதுக்கு ஏன் வீணா அலட்டிக்கணும்?"னு என் பதிலச் சொல்லுவேன் அவனுக்கு.

"குறிக்கோளின்றிக் கெட்டேன்"னு பட்டினத்தார்(?) சொல்லியிருக்காராம். அது எனக்குக் கொஞ்சம் பொறுந்தும். ஒரே வித்யாசம், நான் இன்னும் கெடலை. ஆனா, வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்துக்குப் போகணும்னா, கண்டிப்பா ஒரு இலக்கை நிர்ணயம் பண்ணி அதை அடையர லட்சியத்துடன் பயணிக்கணும். ஆத்துல போர இலை மாதிரி, ஆறு போகும் வேக அசைவுக்கேத்த மாதிரி இலக்கில்லாம, வாழ்க்கையை ஓட்டினா, இலை எங்க போய் எப்படிச் சேரும்னு கரை ஒதுங்கர வரைக்கும் தெரியாது.

ஒரு விதத்தில், இது எதிர்பார்ப்பில்லாத, பெரிய ஆசாபாசங்கள் இல்லாத தெளிவான வாழ்க்கையைத் தரும் என்ற மாயை இருந்தாலும், அறுபது, எழுபது வருடங்கள் வாழப் போகும் வாழ்க்கைக்கு கொஞ்சமாவது ஒரு பாதை வகுத்து, சில பல விஷயங்களை மனதில் கொண்டு கட்டம் கட்டி வாழணும்.

ஆத்துல போகும் இலை, ஆரம்பத்தில் ஆற்றின் வேகத்தில் சர்ர்ர்னு வேகமா போனாலும், நேரமாக நேரமாக, வாடிப் போய் தண்ணீரில் மக்கி மூழ்கிப் போகலாம். இல்லன்னா, ஆற்றின் வேகம் மட்டுப் படும்போது, இலக்கை அடையாமல், ஓரத்தில் முடங்கியும் போகலாம்.

திட்டம் வகுக்காமல் செல்வதன் ப்ரதிபலன் இது.

என்ன எடுத்துக்கிட்டா, எல்லாத்தையும் பண்ண ஆசையிருக்கு. ஆனா, எல்லாத்துலையும் அரை குரை. உயர் படிப்பு படிக்கணும்; வேலைக்கு தேவையான படிப்பு படிக்கணும்; பாட்டு கத்துக்கணும்; கிட்டார் கத்துக்கணும்; படம் புடிக்க கத்துக்கணும்; ஷமூக ஷேவா செய்யணும்; இத்தப் பண்ணணும்; அத்தப் பண்ணணும்னு ஆயிரம் ஆரம்பித்தாலும்; எல்லாமே தொங்கிக்கிட்டு நிக்குது.

இதுக்குக் காரணம் வெறும் சோம்பேரித்தனம் மட்டுமில்லை. வாழ்க்கையின் மேல் இருக்கும் ஒரு எகத்தாளமான கண்ணோட்டம்.

வாழ்க்கையை காட்டுத்தனமா, இலக்கில்லாது அமைக்காமல், நெறிப் படுத்தி, சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சுக்கிட்டா, தி-எண்ட் போடும்போது, சுபிட்சமா போக ஏதுவா இருக்கும்.

அது என்னா அட்ஜெஸ்ட்மெண்ட்டு?

என் அனுபவத்திலிருந்தே பல விஷயங்கள் புலப்படுது. ஆனா, இதையெல்லாம் நானும் கடைபிடிப்பதில்லை. சுத்தி நடக்கர விஷயங்களைப் பாக்கும்போது, அடாடா இப்படி இருந்தா, அப்படி ஆகுமேன்னு தோணும் விஷயங்கள் இவை.

அப்படிப்பட்ட விஷயங்களை அள்ளித் தெளிக்கறேன். புடிச்சவங்க புடிச்சுக்கோங்க. நல்லது நடந்தா சரி. ( ஒன்னியும் நடக்கலன்னா, கம்பேனியார் பொறுப்பு கிடையாது )

நான் ஏற்கனவே அளந்து வுட்ட மாதிரி, உங்களை சுத்தி உள்ள 'புலம்பல்களை' கண்டிப்பா குறைக்கணும். அதுவே வெற்றிக்கு பெரிய அடித்தளம் அமைக்கும். அதை அப்பரம் விலாவாரியா அலசலாம்.

வாழ்க்கையை வெற்றிகரமா அமைக்க ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு அம்சம் வாழ்க்கையை
முதலில் அனுபவிக்கக் கத்துக்கணும்.

நம்மில் எத்தன பேரு, திங்கள் கிழமை காத்தால எழுந்துக்கும்போது, "ஆஹா ஜாலி, திங்கள் வந்தாச்சு. வேலைக்குப் போய் வேலையப் பாக்கலாம்"னு குதூகலமா எழுந்து ஓடறோம்?

கண்டிப்பா நான் ஓடலை. எழுந்துக்கக் கூட பிடிக்காம, "ஐயே. ஆஃபீஸிக்குப் போய் ஆணி புடுங்கணுமே"ன்னு ஒரு அலுப்புல தான் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்குது.

இது நமக்கு பிடிக்காத வேலை, அதனால போரடிக்குதுங்கரதெல்லாம் இதுக்கு மொக்கையான காரணம்.
இது புடிக்கலன்னா, வேர என்ன புடிக்கும்னு கூட நம்மில் பலருக்கு தெரியாது.

அப்படி இருக்கும்போது, இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை 'பிடிச்சு' செய்யப் பழகிக்கிட்டாலே, பாதி கடலை தாண்டிய மாதிரிதான்.

அது எப்படி 'பிடிச்சுக்க' வெக்கரது? கொஞ்சம் ஐடியாஸ் இருக்கு. அத இப்பவே சொல்லிட்டா, கன்னாபின்னா சிந்தனைகள், பார்ட் டூ, எப்படி எழுதரது? :)
இத படிக்கர, பழம் தின்னு கொட்டை போட்டவங்க, ஐடியாஸை அள்ளி வீசிட்டுப் போங்க.

ஆனா, அதுக்கும் முன்னாடி, நம்மில் எவ்வளவு பேர் எந்த மாதிரி ஆளுங்கண்ணு தெரிஞ்சுக்கலாம்.
யோசிச்சு, கீழ வாக்குங்க! (பொட்டி தெரியாதவங்க இங்க அமுக்கி வாக்குங்க)




-சர்வேசானந்தா!
(வாழ்க்கை வாழ்வதர்க்கே!)

Monday, June 08, 2009

படங்கள் வரும் முன்னே - வென்னிஸ்

வணக்கமுங்கோ. லண்டனில் ஈழத் தமிழர் போராட்டமும், பாரீஸில் ஜேப்டி திருடர்களின் கைவரிசைகளும், ரோமின் ரம்யத்தையும் மனதில் அசைபோட்ட படி அடுத்த நகரத்துக்கு பயணித்தேன்.

பயணத்துக்கான ஏற்பாட்டை செய்யும்போது, ரோமிலிருந்து, Florenceம் அதனருகில் உள்ள Pisa டவரும் பாக்கலாம்னுதான் ஐடியா. Florenceல் இருக்கும் Ufitzi ம்யூசியம், ரொம்பப் ப்ரபலம். ஆனா, லண்டன், பாரிஸ், ரோமில் வரிசையாக ம்யூசங்களாகப் பார்த்துவிட்டதால், ஓவியங்கள் மேலும், கற்சிலைகள் மேலும் ஒரு அலர்ஜி நிலைக்கு ஆளாகிவிட்டபடியால், கொஞ்சம் வித்யாசமா எதையாச்சும் பாக்கணும்னு தோணிச்சு.

லண்டனில் சந்தித்த என் பால்ய சிநேகிதன் அதை ஊர்ஜீதம் செய்யும் வகையில், 'மச்சி, கண்டிப்பா வென்னிஸ் பாக்காம திரும்பிப் போகாத'ன்னு ஒரே பில்டப் கொடுத்துட்டான்.
சரின்னு, மனசை கல்லாக்கிக்கிட்டு, Florenceல் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் ரூம்களை ரத்து செய்துவிட்டு, வென்னிஸில் ரூம் புக்கினேன். ( யப்பா! வென்னிஸ் ரொம்ப காஸ்ட்லீ ஊருங்கோவ். டப்பு காலி பண்ணிட்டாங்க ! )

ரோமிலிருந்து 4 1/2 மணி நேர, EuroStar பயணத்தில், வென்னிஸ் வந்து சேர்ந்தது. ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது ராத்திரி 11:30. ரொம்ப களைப்பா இருந்தது. ஆனா, ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், பார்த்த காட்சி, களைப்பையெல்லாம் எட்டி உதைத்தது. பெரிய நீர் கால்வாயில், எக்கச்சக்கமான குட்டிக் கப்பல்கள், இங்கும் அங்கும் சர் சர்னு போய்க் கொண்டு இருந்தது.

வென்னிஸ், 118 குட்டித் தீவுகள் (lagoon) கொண்ட ஒரு அழகிய நகரம். சாலைகள் கிடையாது. ஒரு எடத்துலேருந்து இன்னோர் எடத்துக்கு போகணும்னா போட்லதான் போகணும். வித்யாசமான ஊரு.

இனி, படங்கள் சில.

pseudo-hdrன்னு ஒரு மேட்டர் இருக்கு. ஒரே படத்தை கொண்டு, இந்த மாதிரி, 'பளிச்'னு உருவாக்கலாம். dynamic photo hdr போன்ற சாஃப்ட்வேர் இதுக்கு உதவுது.



மற்ற ஐரோப்ப நகரங்களில் எப்படி ரயில் மெட்ரோ பட்டைய கெளப்புதோ, வென்னிஸில், கப்பல் மெட்ரோ ப்ரசித்தி. 24 மணி நேர பாஸ் வாங்கிட்டா, சுத்திக்கிட்டே இருக்கலாம். குறிப்பா, ராத்திரி நேர ப்ரயாணம் அருமை.


கலைக் கண்ணோட பாத்தா, பாழடஞ்ச பழைய மண்டபமும் அழகா தெரியுது :)


st marcos square.


Grand Canal


இந்தப் பறவையை படம் புடிச்ச விதம் பத்தி தனிப் பதிவு எழுதலாம்னு இருக்கேன். கொடுமை என்னன்னா, அங்க இருக்கர பறவை எல்லாம், மனுஷன பாத்தா பயப்படவே மாட்டுறுது. கிட்டப் போய் உஷ் உஷ்னாக்கூட பறக்கல. எட்டி ஒதச்சாதான், கொஞ்சமாவது நகருது. அப்படி, எட்டி எட்டி ஒதச்சு, துரத்தி துரத்தி படம் புடிச்ச பறவை இது. இன்னும் ஒரு 100 படம் இதோடது இருக்கு :)



வென்னிஸ் புறாக்கள். மனுஷனப் பாத்து துளிகூட பயப்படல. இம்சை அரசனை அனுப்பி வைக்கணும்.
யாரு பெத்த புள்ளையோ? ஏதோ ஒரு கேட்ல அநாமத்தா சோகமா இருக்கு.




ஐரொப்ப பயணம் இனிதே நிறைவுற்றது. :)

பி.கு: (ராமலக்ஷ்மி, குடிதண்ணீர், அநாமத்தா கொட்டிக்கிட்டே இருக்கரது, வென்னிஸிலும் தொடர்ந்தது. இந்த மாதிரி :) )

Wednesday, June 03, 2009

படங்கள் வரும் முன்னே - ரோம்

பாரிஸில் பிக்பாக்கெட் ப்ரசித்தம் என்றும், லண்டனில் பூமிக்குள் இயங்கும் ரயில் மெட்ரோ ப்ரசித்தம் என்றும் என் பயண அனுபவம் தெளிவுபடுத்தியது.

இந்த பயணம் போலாம்னு ஆரம்ப கட்ட யோசனை வந்ததே, ரோம் நகரம் பாக்கணும் என்ற வெகுநாள் ஆசையினால்தான். ரோமின் 'gladiators புகழ்' கொலீசியம், Pantheon, பக்கத்துல இருக்கர வாட்டிக்கன் (போப் வீடு) சிஸ்டின் சர்ச்சில் இருக்கும் Michaelangeloவின் புகழ் பெற்ற 'Creation of Adam' எல்லாம் பாத்துடணும்னுதான் பயண ஏற்பாடு ஆரம்பிச்சேன். அப்பாலிக்கா, போறது போறோம், அப்படியே அத்த பாத்துடலாம்.
அத்த பாக்கறோமே, அப்படியே இத்தயும் பாத்டுடலாம்னு, பாரிஸும், லண்டனும் சேந்துக்கிச்சு.

கண்ட நகரங்களிலேயே வெகுவாய் கவர்ந்தது ரோம் தான்.
வித்யாசமான நகரம். மரங்களெல்லாம் சுத்தமா கண்ணுல படல. வெறும் கட்டிடங்கள், தீப்பெட்டி மாதிரி பக்கத்து பக்கத்துல அடுக்கி வச்சிருக்காங்க.
பெரிய நீண்ட தெருக்களுக்கு இரு பக்கமும் அழகான கட்டடங்கள். அஞ்சடி அகலமுள்ள அழகான குட்டித் தெரு. தெரு முழுவதும், 'டைல்ஸ்' கற்களால் ஆன ரோடு.
பல தெருக்களில், தெருவில் அமரும் டைப்பில் பலப் பல உணவகங்கள். செம ஜாலியான மக்கள்.
எல்லா தெருமுனையிலும், நமக்குப் பரிச்சயமான பங்களாதேஷ் மக்கள், கூலிங்கிளாஸ், வாட்ச் எல்லாம் வித்துக்கிட்டு இருக்காங்க.
மற்ற நகரங்கள் போலவே, இங்கேயும் ரயில் மெட்ரோ, பஸ் வசதியெல்லாம் அமக்களம். ஒரு யூரோ கொடுத்தா எங்கேயிருந்தும் எங்கேயும் போலாம்.
காட்ஃபாதர் ரேஞ்சுல Don Corleone யாரும் கண்ணுல படறாங்களான்னு தேடினே, யாரும் ஆப்புடல. :)

ஆச்சரியமான ஒரு விஷயம், நிறைய இடங்களில், குடிக்கர தண்ணி ஒரு குட்டி நீர்வீழ்ச்சி மாதிரி அநாமத்தா கொட்டிக்கிட்டே இருக்கு. அதுலதான் எல்லாரும், பாட்டில்ல புடிச்சு குடிக்கறாங்க. இப்படி வீணடிக்கறாங்களேன்னு, ஒரு ஏக்கப் பெருமூச்சே வந்துடுச்சு. (சென்னைல கெணத்துக்குள்ள பாய் விரிச்சு படுக்கறாங்களாமே?)

இனி படங்கள் சில:
Colosseum - மிருகங்களையும் மனிதர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்க்க கட்டிய, 'விளையாட்டு' மைதானம். கிட்டத்தட்ட 2000 வருஷத்துக்கு முன்னாடி, Titus கட்டி முடித்தது. ஃபோட்டோலயும் வீடியோலையும் பாக்கும்போது இருந்த ஒரு 'இது' நேர்ல பாக்கும்போது இல்லை. ரொம்பவே கமர்ஷியல் ஆக்கிட்டாங்க இடத்தை. செயற்கைத்தனம் நிறைய இருக்கு இப்ப.


Pantheon - கிட்டத்தட்ட 1900 வருஷங்களுக்கு முன், ரோமன் கடவுள்களுக்காக கட்டப்பட்டது. Marcus என்ற ரோம அரசன் கட்டியது. இந்நாளில் இது 'சர்ச்சாக' உருவெடுத்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில், ரோம அரசன், அந்த கால போப்புக்கு பரிசாக கொடுத்தானாம். (Gengiskhanன் (Mongol) படத்தில் வரும் முதல் வாக்கியம் "History is written by Victors" என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறது)
மிக அருமையான கட்டடம். பயங்கர 'லைவ்லியான' இடம்.
படம்தான், 'நச்'னு வராம இருந்தது. An& அண்ணாச்சி படத்தை, 'நச்' ஆக்கிக் கொடுத்துட்டாரு. விவரங்கள் இங்கே பாக்கலாம்.


வாட்டிக்கனில் உள்ள St.Peters தேவாலயத்தின் முகப்பு.
St.Peters michaelangeloவும் மற்ற பலரும் கட்டியது. ஆனா, மற்ற இடங்களில் உள்ள தேவாலயங்களை விட, 'கலை' அம்சம், இங்கக் கம்மியா இருந்ததா எனக்குப் பட்டது. உதாரணத்துக்கு, மற்ற சர்ச்சிலெல்லாம், stain glass வச்சு, செமையா ஜன்னல்கள் இருந்தது, இங்க எல்லாம், plain glass.


இது, ரோமா ஃபோரம் என்ற இடம். ரோம் நகரத்தின் ஆரம்ப கட்டம் உருவெடுத்தது, இந்த இடத்திலிருந்துதானாம். 2600 வருடங்களுக்கு முன்.

Trevi நீர்வீழ்ச்சி. ரம்யமான இடம்.


Sistin chapel, vaticanல் உள்ள மேற்கூரை.
michaelangelo மூணு வருஷமா, தலகீழத் தொங்கிக்கிட்டு வரஞ்சதாம் எல்லாம். பின்னியிருக்காரு.
ஆனா, எனக்கு என்ன புரியலன்னா, பல விஷயங்கள் போர் காட்சிகளா இருந்துச்சு. சர்ச்சில் ஏன் இந்த மாதிரி காட்சிகளெல்லாம் வரஞ்சு வெச்சாங்கன்ன தெரியல்ல.


Creation of Adam, by Michealangelo
கூரையிலுள்ள நடுப் படம் இதுதான்.
leonardo-da-vinciக்கு எப்படி மோனா-லிஸாவோ, இந்தப் படம், michaelangeloவுக்கு.
இடது பக்க adamஐ வலது பக்க, கடவுள், படைக்கும் காட்சி.
Adamன் விரல் தொய்வாக இருக்க, கடவுளின் விரல்கள், 'கிண்ணுனு' ஸ்ட்ராங்கா இருக்காம் படத்துல. பக்கத்து guide சொல்லிக்கிட்டிருந்தது காதுல கேட்டுது :)


Pantheonக்கு செல்லும் வழியில் இருந்த 'ஏதோ ஒரு' சர்ச். சும்மா எட்டிப் பாக்கலாம்னு போனேன். சூப்பரா இருந்தது. st.petersஐ விட பல மடங்கு அழகா இருந்தது இது.


பி.கு: ஏசுவையே சிலுவையில் ஏற்றிக் கொன்ற ரோம அரசர்கள் பின்னாளில், டகால்னு மொத்த ஊரையும் கிருஸ்தவ மதம் தழுவச் செய்து, ஊரில் உள்ள, 'ரோம் கடவுள்களின்' ஆலயங்களையெல்லாம் தேவாலயங்களாய் மாற்றியது எல்லாம் நெருடல்.
GengisKhan பட, 'history is written by Victors' உண்மைதான் போலும் :)
வெவரம் தெரிஞ்சவங்க மேல் விவ்ரங்கள் சொல்லிட்டுப் போங்க.