recent posts...

Thursday, February 03, 2011

டில்லிக்குப் போன கதை - Flash Back

தேறாம போயிருவானோன்னு உற்றாரும் பெற்றோரும் நினைத்து பயந்து போய்க்கொண்டிருந்த சுபயோக சுபதினத்தில், சென்னையில் உள்ள ஒரு பெத்த ஐ.டி கொம்பேனியில் சேர்ந்து துலைத்த காலம்.
அப்பவெல்லாம் மந்தை மந்தையா கடா வெட்ட ஆள் தேத்தர மாதிரி இந்த கொபேனிக்களில் ஆள் சேப்பாங்க. 'எங்க கிட்ட வாங்க அமேரிக்காவுக்கு அனுப்பறோம்' வகை தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பாங்க.

பல கடாக்களில் ஒரு குட்டிக் கடாவாக நானும் மே சொல்லிக்கிட்டே சில பல நாட்கள், ஒம்போது மணிக்கு வந்தோமா, அஞ்சு மணிக்கு கெளம்பினோமா, மத்திய சாப்பாட்டை கேண்ட்டீனில் வகை தொகையா சாப்பிட்டு, சத்யத்தில் ஒரு படத்தை பாத்தோமான்னு ஓட்டிக்கிட்டு இருந்தேன்.

அமெரிக்க போக வேண்டிய கடா என்ற கெத்து இருந்ததால், எங்க மந்தைக்கு ஒரு மருவாதை அதிகமா இருக்கும். ஏற்கனவே அமேரிக்கா பாத்துட்டு விடுமுறையில் வந்த கொழுப்பாடுகள், ரே-பன்னை தலையில் மாட்டிக்கிட்டு. "வாவ் இட்ஸ் ஹாட் மேன். லைஃப் ஈஸ் ஃபேபுலஸ் இன் நியூ யார்க் மேன். இட்ஸ் ஜஸ்ட் அ ஃப்யூ டாலழ்ஸ் மேன்.. தஸ்ஸு புஸ்ஸு ழ்ழ்ழ்ழ்"ன்னு கொழைவானுவ.

விஸாக்காக வெயிட்டிக்கிட்டு இருந்த காலங்களில், வெத்தா பத்தாயிரம் சம்பளம் கொடுக்கரமேனு, எங்களை யூஸ் பண்ணிக்க என்னென்னமோ செஞ்சு பாப்பாங்க. மற்ற கல்லூரிகளில் நடக்கும் ஆள்பிடிக்கும் வேலைக்கு, நேர்முனை செய்ய அனுப்புவாங்க. நாங்களே ஒரு வருஷம் கூட அனுபவம் இல்லாக் கத்துக் குட்டிகள், நாங்க போயி, இன்னும் கொஞ்சம் கத்துக் குட்டிகளை புடிச்சுக்கிட்டு வர பெரிய அலப்பரை பண்ணுவோம்.

விசாவுக்கு காத்துக்கிட்டு, இப்படியே சில பல மாதங்கள் ஓடியது. மீண்டும் ஒரு சுபயோக சுபதினத்தில், எங்க கொம்பேனி பெரிய தலை ஒருத்தரு, "யப்பா, டில்லி'ல ஒரு பன்னாட்டு நிறுவனம் இருக்கு, அவங்க பண்ணிய மென்பொருள் ஒண்ணுல பெரிய ப்ரச்சனையாம், நீ போயி ஒரு மாசம் இருந்துட்டு, எல்லாம் சரிப் பண்ணிக் கொடுத்துட்டு வாப்பா. உனக்கு ஃப்ளைட் டிக்கீட்டும் நல்ல ஸ்டார் அக்காமடேஷனும் ஏற்பாடு பண்ணித் தருவாங்க"ன்னு சொன்னாரு.

பெரிய தலைக்கு என்னை ஓரளவுக்கு பிடிக்கும். மத்த கடாக்களில் என் மேல் அதிகமா கவனம் செலுத்துவாரு. சரி, மனுஷன் நல்லதுக்குத்தான் சொல்வாருன்னு சரி சொல்லி ரெடியாயிட்டேன்.

ஃப்ளைட்ல டில்லிக்கு ஒரு மாசம், அஃபீஷியல் ட்ரிப்னு, ஒரு வருஷ அனுபவம் கூட இல்லாத நான் அலப்ப்ரை பண்ணியதும், எங்க வூட்ல எல்லாருக்கும் ஆனந்தக் கண்ணீர். உருப்படவே மாட்டான்னு நெனச்ச புள்ள அரவிந்த்சாமி கணக்கா பெரிய பிசினஸு மேக்னட்டு ஆயிடுவான்னு நம்ப ஆரம்பிச்சுட்டாங்க உள்ளூர.

பின்னாளில் தெரிய வந்த மேட்டரு, எங்க பெரிய தலையும், அந்த டில்லி பெரிய தலையும் நல்ல நண்பர்களாம். "மச்சி, எனக்கு ஒரு பிசினஸ் குடு"ன்னு அடிக்கடி இந்த மாதிரி குடுக்கல் வாங்கல் செஞ்சுப்பாங்களாம். சந்துல சிந்து பாட என்னை அனுப்பி வச்சுட்டாங்க. அவங்க கணக்குப் படி, நான் செஞ்சாலும், கிழிச்சாலும், இவங்களுக்கு ஒண்ணுமில்லை. அதனாலதான் பெருசா கவலைப் படாம, கத்துக் குட்டியை பன்னாட்டு மென்பொருளை 'ஃபிக்ஸ்' பண்ண அனுப்ப முடிவு செஞ்சாங்க.

இந்த மேட்டரெல்லாம் தெரியாத நானு, நல்ல புள்ளையா, ஒரு 'படிச்ச பசங்க' கண்னாடிய காசு கொடுத்து வாங்கி போட்டுக்கிட்டு, ஒரு எச்சகூட்டிவ் பையும் வாங்கி, 18A பஸ்ஸு புடிச்சு திருசூலத்தில் இறங்கி, 'பந்தாவா' ஏர் இந்தியா ஃப்ளைட்டில் ஏறி டில்லிக்கு போனேன்.

அங்க போனா, அந்த டில்லி பெரிய தல, நல்லா உபசரிச்சு, எனக்கு ஒரு தனி ரூமை கொடுத்து, "நீ இங்கியே ஒக்காந்துக்கப்பா, இந்த மேகசீன் எல்லாம் படி, அந்த கம்ப்யூட்டர்ல ஈ.மெயில் பாத்துக்க, எங்காளுங்க ஒவ்வொருத்தரா வந்து, ப்ரச்சனைய சொல்லி தீர்வு கேட்க வருவாங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

நானும் காலு மேல கால போட்டுக்கிட்டு, அரும்பு மீசையை தடவிக்கிட்டு, "யா, கம்மின்"னு ஒவ்வொருத்தரையும் உள்ள கூப்டு ஆசி கூறி அனுப்பினேன். ஆரம்பத்தில் ஒரு திகிலாத்தான் இருந்துச்சு, ஆனா, உள்ள வர ஒவ்வொரு ஆளும் வயசான பெருசுங்க. கோபாலில் இருக்கும் மென்பொருளை, ஆரக்களுக்கு மாத்தும் பணியை ஆரம்பிச்சிருந்தாங்க. நாம அப்பத்தான் கோபாலை மனப்பாடம் பண்ணி, ஆரக்களில் ஆரஞ்சு பிழிய ஆரம்பிச்சிருந்த காலம் ஆதலால், ஓரளவுக்கு சில பல ப்ரச்சனைகளை எப்படி தீர்க்கணும் பெருசுகளுக்கு சொல்லிக் கொடுத்து, கொஞ்சமா ஃபேமஸ் ஆகியிருந்தேன். ஒரே ப்ரச்சனை "ஹிந்தி நஹீ மாலூம் ஹேய்", ஒரு நாளைக்கு முப்பது தபாவாவது சொல்லித் தொலைக்க வேண்டியிருந்த சூழல்.

அப்பெல்லாம் க்ரெடிட் கார்டு பெருசா புழக்கத்தில் இல்லை (தொண்ணூறுகளின் இறுதி), தினசரி அலுவலகம் விட்டுக் கெளம்பும்போதும், ரெண்டாயிரமோ மூணாயிரமோ கைல கொடுத்து, ஹோட்டலில் செட்டில் செய்யவும், தினப்படி கூலி சாப்பாட்டையும் கவனிக்கச் சொல்லுவாங்க.
அமேரிக்காவாவது வெங்காயமாவது, இதுதான் சொர்கம், இப்படியே வாழ்க்கையை ஓட்டிடலாமேன்னு ஒரு பெரிய சபலமே வந்துடுச்சு.

ஆனா, டில்லிப் பெருசும், எங்க கொம்பேனிப் பெருசும், பேசி வைத்த 'பிசினஸு' தொகை முடிஞ்சிருக்கும் போல, ஒரு மாசம் ஆனதும், "யப்பா, சூப்பரா கலக்கிட்ட. நீ வரலன்னா என்ன ஆயிருக்குமோன்னு தெரீல. நீ தெய்வம். நீ நல்லாருக்கணும், உன் குடும்பமே நல்லாருக்கணும்"ங்கர ரீதியா டில்லிப் பெருசு புகழாரம் சூட்டினாரு. ( இந்த அளவுக்கு இல்லனாலும், இந்த ரீதியில் ). அப்படியே, "நீ ஒரு பேப்பர்ல இங்க செஞ்ச வேலையைப் பத்தி சுருக்கமா எழுதிக் கொடு, எங்க லெட்டர் ஹெட்ல போட்டு உனக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் மாதிரி தரேன்"னு அவரே சொன்னாரு.
எனக்கும், அது நல்ல விஷ்யமா பட்டுச்சு. கண்ணாடிய ஏத்தி எறக்கி அவரப் பாத்துட்டு, ஆர்னால்டு கணக்கா, "ஐ வில் பி பாக்"னு சொல்லிட்டு, என் ரூமுக்கு சில பல வெள்ளைப் பேப்பரை எடுத்துட்டுக்கிட்டு போயி கதவை சாத்திக்கிட்டேன்.

கெடைச்ச வாய்ப்பை விட வேணாம்னு, ஒரு ரெண்டு பக்கத்து நீட்டி முழக்கி, என்னமோ அந்த மொத்த மென்பொருளையும் நான் வடிவமைச்சு, மொத்த விஷயத்தையும் இரவு பகல் பாக்காம நானே முன்னின்று எல்லாப் பெருகளையும் வேலை வாங்கி, பக்காவாக முடிச்சு, என்னமோ எடிசன் கண்டு பிடிச்ச லைட் பல்பை நான் கண்டு பிடிச்ச மாதிரி அலப்பரை பண்ணி ரெண்டு பக்கத்துக்கு ஒரு 'எக்ஸ்பீரியன்ஸ்' லெட்ட்ரை தயார் பண்ணி, டில்லிப் பெருசுகிட்ட நீட்டி, "சாரே, இத்துல ஒரு கையெழுத்து போடுங்க, ஐ ஷால் டேக் லீவ்"னு குரலை கெட்டியாக்கி ப்ரொஃபெஷனல் கணக்காச் சொன்னேன்.
லெட்டரை மேலையும் கீழையும் படிச்சவரு, "வாட் த *?"னு சொல்லாம சொல்லி புருவத்தை உயர்த்தி, "ஹ்ம். யப்பா இத்த வச்சுட்டுக் கெளம்பு, நான் கையெழுத்து போட்டு, ஃபாக்ஸ் அனுப்பறேன்"ன்னு சொன்னாரு.

"தட்ஸ் ஆழ்ரைட். ஸீ யூ லேட்டர்"னு கை குலுக்கிட்டு அடுத்த ஏர் இந்தியா ஃப்ளைட்டை புடிச்சு சென்னைக்கு வந்து, நான் உள்ளூர் கடாக்களிடம் அலப்பரை பண்ணியதை அளக்க தனிப் பதிவு தேவை.

ஆனா, டில்லிப் பெருசு ஃபாக்ஸ் பண்றேன்னு சொன்ன என் ரெண்டு பக்க எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் இன்னி வரைக்கும் வரலை ;)

மேலே சொன்னது உண்மைக் கதை, புருடா அல்ல.

Tuesday, February 01, 2011

விழித்திடு தமிழா உறக்கம் ஏன்?



வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
வேட்டையாடி சங்கறுத்து
சுட்டுக்கொல்கிறது
தமிழா! விழித்திடு

வலை வீசி மீன்பிடிக்க
அலை கடல் மீது சென்றவனின்
தலை மீது குண்டுவீசும்
கோழை செயலும் நடக்கிறது
தமிழா! விழித்திடு

நாவாய் படைநடத்தி
காற்றாற்றுதலை அறிந்து
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது
தமிழா! விழித்திடு

ஆடையை இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்லும்
கொடும் பாவச்செயலும் நடந்தது
தமிழா! விழித்திடு

குட்டித்தீவினில் ராக்ஷசன் ராஜபக்ஷே
அரக்க இராஜ்ஜியம் செய்து
கைத்தட்டி சிரிக்க
சிங்களத்து வெறிநாய்
அலைகடல் மீதினிலே தோட்டாக்களால்
தமிழனின் உயிர் குடிக்க
மத்திய அரசு அலட்ச்சியமாய் உறங்க
மாநில அரசு கூட்டணி வலைப்பின்னி
தொகுதி மீன் திமிங்கலதையும்,
வாக்காளர்களின் தேர்தல்
வோட்டான வெற்றிமீன் பிடித்து
அரசியல் செய்கிறது
தமிழா! விழித்திடு உறக்கம் ஏன்?

-பிரபாகர் (நண்பேன்)

இவ்ளோ அட்டூழியங்கள் செய்தவர்களை ஒண்ணுமே பண்ணாம விட்டது அட்டூழியம். பேடித்தனம்.

தமிழக மீனவரை காக்கக் கோரி ஆன்லைன் பெட்டிஷன் ஒன்று இயற்றப் பெற்றிருக்கிறது. கையெழுத்து இடாதவர்கள் இடவும்.