recent posts...

Monday, October 06, 2014

மெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]


தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , தரமான படம் என்று சான்றிதழ் இருந்தாலே டிக்கெட் வாங்க எத்தனிப்பேன்.

மெட்ராஸுக்கு , அநேகம் பேரும் 4/5 கொடுத்திருந்தார்கள். இயன்றவரை படம் பார்ப்பதற்கு முன் விமர்சனம் படிப்பதை தவிர்த்துவிடுவேன்.

இரவு பத்து மணி ஷோவுக்கு, ஆன்லைனில் டிக்கெட்டை வாங்கி, ஆஜரானேன். ஷோ ஹவுஸ்ஃபுல்.  அரங்கம் நிரம்பி வழிந்தது. படம் வந்து சில பல நாட்களுக்குப்  பின்னும் கூட்டம் அலைமோதியது.

ஆன்லைனில் டிக்கெட் வாங்கியதால் SMS காட்டினால் போதும். SMS கூட சரி பார்க்காமல், உள்ள போயி உங்க சீட்ல ஒக்காருங்க சார்னு 'நம்பிக்கையாய்' அனுப்பி வைத்தார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போதே பாப்கார்ன் கோக் எல்லாம் சேர்த்திருந்தால் இருக்கைக்கே கொண்டு வந்து கொடுப்பார்களாம். அடேங்கப்பா. எங்கையோ போயிட்டாங்க்ய.

நாலாவது வரிசையில் அமர்ந்திருந்ததால் திரை விஸ்தாரமாய் தெரிந்தது.

படம் ஆரம்பித்ததும், துவக்கப் பாடலில் இருந்த துள்ளலில் விசில் சத்தம் கிழிந்து ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தது. இனிக்கு படம் நிம்மதியா பாத்தா மாதிரிதான்னு நெனச்சேன். ஆனால், சற்று நீரத்தில் படத்தின் விறுவிறுப்பு கூடியதும் கூட்டம் அமைதியாய் ரசித்துப் பார்க்க துவங்கியது.

"எங்க ஊறு மெட்ராசுக்கு நாங்க தானே அட்ரஸு"  என்ற ஆரம்பப் பாடலில் துவங்கியது.
குரோம்பேட்டையும் குரோம்பேட்டை சார்ந்த இடங்களில் மட்டுமே வாழ்வின் பெரும்பான்மை கழித்திருந்ததால், வடக்கு மெட்ராஸும், அதன் குறுகிய சந்து பொந்துகளும், ஹவுசிங் போர்டு வீடுகளும், பெயிண்ட் இழந்த சுவர்களும்,   சாக்கடை தேங்கிய சாலைகளும்,  தண்ணீருக்கு வரிசை கட்டும் கலர் கலர் குடங்களும்,  "ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று சடக்கென்று கோபம் கொள்ளும் இளய பட்டாளமும்,  விசுக் விசுக் என கத்தியை உருவி சொருகும் பயங்கர முரடர்களும் சுத்தமாய் பரிச்சயம் இல்லாமல் வளர்ந்த வாழ்க்கையை நினைத்து எல்லாம் வல்லவனுக்கு ஒரு பெரிய கும்பிடு போடத தோன்றுகிறது.

கேமரா வடக்கு மெட்ராசை மிக மிக துல்லியமாய் கண் முன் வந்து நிறுத்தியது. நாலாவது வரிசையில் இருந்ததாலோ என்னோ, paning shots வெகுவாய் ரசிக்க முடிந்தது. imax திரையில் பார்க்கும்போது ஏற்படும் ஒரு குதூகலம் படம் புழுவதும் உணர முடிந்தது.

கேமராவுடன் சேர்ந்த பின்னணி இசை, பிரமாதம்.

இந்த சூழலில் வாழும் நண்பர்களும் சில பல ஆசாமிகளும், அவர்களுக்குள்  நிகழும் அரசியல் சார்ந்த விஷயங்களும், இடையில் நிகழும் காதலும் ஊடலும்,  வெட்டும் குத்தும் கத்தும், நையாண்டியும் நக்குலும் பாசமும் வேஷமும் அருமையாய் கோர்க்கப்பட்டதுதான் மெட்ராஸ்.

காளி (கார்த்தி), இந்த அழுக்கு சூழலிலும், படித்து கரை சேர்ந்தவர். நல்ல வேலையில் இருந்தாலும், ஹவுசிங் போர்டு மண் மேல் உள்ள பாசத்தால் அங்கேயே பெற்றோருடன் வாழ்பவர்.
அவரின் நண்பர் அன்பு. அரசியல் புள்ளியின் வலது கை.  அவருக்கும் எதிர்கட்சிக்கும், ஊரில் உள்ள பிரதான சுவற்றில் யாரின் விளம்பரம்  இருக்க வேண்டும் என்பது பரம்பரைப பகை. சுவற்றுக்காக  பல தகராறுகள்  நடக்கிறது. பல உயிர்கள் விசுக் விசுக் என பலி ஆகிறது.

ஒரு சுவருக்கா இப்படி அடிச்கிக்கினு சாகராங்க ? என்று மனதுக்குள் எழும் கேள்விக்கு ஆங்காங்கே பதிலும் கிடைத்து விடுகிறது. சுவர் சுவராய் பார்க்கப்படாமல், பலரின் egoவை தாங்கி பிடிக்கும் தாங்கியாய்  உருமாறி இருக்கிறது.
ego நிரம்பி வழியும் அரசியல் பெருந்தகைகளுக்கு சுவரின் மேல் இருக்கும் ஆளுமை முக்கியம். யார் பெரியவன் என்பதை நிர்ணயம் செய்யும் குறியீடு சுவரின் மேல் உள்ள உரிமை. அதற்காக தங்கள் சகபாடிகளை உசுப்பேற்றி விட்டு காவு வாங்குகிறார்கள் காவு கொடுக்கிறார்கள்.

அப்பேர்பட்ட சுவர் பிரச்சனையில்  கார்த்தியின் நண்பன் அன்பு உயிர் இழக்க, அதற்கு கார்த்தி பழிவாங்க, படம் விறுவிறுப்பாய் செல்கிறது.

ஒரே குறை இரண்டாம் பாகத்தில் கோர்வையாய் வராமல் சில இடங்களில் பாடல்களை திணித்தது. அது கூட பெருதாய் நெருடவில்லை, நல்ல பாடல்கள் என்பதால்.

ஹவுசிங் போர்டில் சகதியும் சச்சரவும் நிறைந்த இடத்தில், அனைவரின் மேக்-அப்பும் உடை அலங்காரங்களும் பொருந்தாமல் இருந்தது.  ஆனால், நம் ஊரில் சுற்றமும் சூழலும் 'கலீஜ்' லெவலில் இருந்தாலும், தங்களின் இல்லம், உடை எல்லாம் டாப் கிளாஸாகத்தான் வைத்திருகிறார்கள் பெரும்பாலும். தெருவும், பொது இடங்களும் மட்டுமே 'கலிஜாய்' தொடர்கிறது.  இங்கும் அப்படித்தான் போலும்.

இயக்குனர் ரஞ்சித் பல இடங்களில் மிளிர்கிறார். நார்த் மெட்ராசின் யதார்த்தை அழகாய்  ஃப்ரேமில் கொண்டு வந்திருக்கிறார். பாஷை, அவர்களின் சம்பர்தாயங்கள் பலவும் அழகாய் காண்பிக்கப் படுகிறது.

அடிமட்டத்தில் இருக்கும் கோபக்கார இளைஞர்களை,அரசியல் லாபத்திற்காக எப்படியெல்லாம் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்று காட்டியிருக்கிறார். அவர்கள், எப்படி, இந்த கபடத்தை புரிந்து கொண்டு வாழ்வில் முன்னேறுவது என்று கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக வித்யாசமாய் இருந்தது. டும் டும் டும் டும் என்ற பின்னணி இசை அதை மேலும் மெருகேற்றி இருந்தது. குறிப்பாய் வில்லன்களிடம் இருந்து கார்த்தியும் நண்பனும் தப்பி ஓடும் காட்சி தத்ரூபம். கடைசி சண்டையும் அதகளம். நம்பும்படியாய் இருந்தது.
Santhosh Narayanan, very well done!

கார்த்தியை தவிர அநேகம் பெரும் புதுமுகங்கள். அனைவரும் மிக அருமையாய் நடித்திருந்தார்கள். மாரி, வெளுத்து கட்டியிருந்தார்.  நிஜ ரவுடியா? அப்படி ஒரு லுக்கு.
ஹீரோயின் அழகு.

ஜானி என்று ஒரு கேரக்டர். பழைய தாதாவாம். இப்போ போலீஸ்  அடியில் , லேசாய் பேதலித்து விட்ட ஒரு கேரக்டர். செமையாய் நடித்து இருக்கிறார். ஆனால், அவர் பேசியது ஒரு டயலாக்கும் புரியவில்லை. இருந்தாலும் அது ஒரு நெருடலாய் தெரியவில்லை.

சாவுக்கு ஆடும் ஆட்டம்; திருமண நிச்சயத்தில் வரதட்சணைக்கு சண்டை போடுவது, தண்ணீர் குழாயில்  குடத்துடன் நிற்பது எல்லாமே நேர்த்தி.

ஒரு ரெண்டு நாள் போயி தங்கிட்டு வரணும், நார்த் மெட்ராஸில். யாராச்சும் இருக்கீகளா ?

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்.

பி.கு: திரைப் படத்தை , படத்தை மட்டும் பார்க்காமல் , அதை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து எடுத்து பதம் பார்ப்பதில் சிலருக்கு அலாதிப் பிரியம். இவ்வளவு விஷயங்களும்  குறியீடுகளையும் அழகாய் அடுக்குகிறார்கள் சிலர். அப்படி ஒன்று இங்கே and இங்கே.