recent posts...

Monday, December 22, 2008

இளையராஜா - ஐ ஆம் வெரி சாரி!



கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இளையராஜாவை காணவில்லைன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.

சமீப காலமாய் ராஜா சார் கிட்டேருந்து பழைய கெத்துடன் ஒரு பாடலும் வராத ஏக்கம்/எரிச்சலில் போடப்பட்ட பொலம்பல் பதிவு அது.

ஆனா, ஒவ்வொரு நாளும், ராஜாவின் பழைய பாட்டை கேக்கும்போதெல்லாம், ஒரு குற்ற உணர்வு உள்ளுக்குள்ள குருகுருத்துக்கொண்டே இருக்கும்.

ஆயிரம் இருந்தாலும், ராஜா நம்ம ராஜா இல்லியா? இப்ப கொஞ்ச காலமா, பெரிய ஹிட்ஸ் தராததால், அவ்ளோ பெரிய மேதையை நையாண்டி செய்வது தப்பு.

சாதாரணமான ஆளா அவரு? சாதாரண குடும்பத்தில் பிறந்து, வெறும் உழைப்பையும் திறமையை மட்டுமே, அடித்தளமாக கொண்டு வானளவுக்கு உயர்ந்தவர் நம் ராஜா.

இசையால் நம் வாழ்வின் பல தருணங்களில் ஒரு இனிமையை வழங்கியவர் நம் ராஜா.

ஒண்ணா? ரெண்டா? பட்டியிலட முடியுமா இவரின் சூப்பர் பாடல்களை?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், உன்னிகிருஷ்ணன், ராஜாவின் பாடல்களைப் பற்றி பேசும் போது புல்லரித்துப் போனது.
ஒரு பாட்டை பாடும்ப்போது, அந்த பாடலின் இடையில் வரும் வாத்தியங்களின் இசையையும் நம்மை பாட வைக்கும் அளவுக்கு, நமக்குள் ஒன்றரக் கலந்த பாடல்கள் நம்ம ராஜாவினுடையது என்றார்.
உதாரணத்துக்கு, மூன்றாம் பிறையில் வரும்,
பூங்காற்று - புதிதானது,
புதுவாழ்வு - சதிராடுது,
பாட்டுல, ஒவ்வொரு வரிக்கு அப்பரம் வரும், "டடட்டா டண்'னு வரும் கிட்டாரை பாடிக் காணிபித்தார்.

பாடகருக்கேத்த பாடலும், பாடலுக்கேத்த இசையும் கலந்து நம்மை பரவசப் படுத்திய பாடல்கள் எண்ணிலடங்கா.

எனக்கு, இன்னிக்கும், 'கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று' பாட்டு கேட்டா, கண்ணுல தண்ணி வந்துடும்.

'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' கேட்டா, உடம்புக்குள் குபீர்னு ஒரு இனம் புரியா இனிமை பரவும்.

இவரின் பின்னணி இசை பத்தி சொல்ல வேண்டியதில்லை. மௌன ராகம் bgm கேட்டிருக்கீங்கல்ல? சும்மா அதிரலை?

இவ்ளோ நாளா எனக்குள் இருந்த குற்ற உணர்வின் குருகுரு, நேத்து பொங்கி எழுந்து வெடிச்சு சிதறிடுச்சு.

காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பி.வாசு வந்திருந்தார். இளையராஜாவைப் பற்றி பேசுகையில் அவர் சொன்ன விஷயம் இது.

சின்னத்தம்பி படத்துக்கு பின்னணி இசை போடும்போது, படத்தின் ஒரு முக்கியமான காட்சியில், குஷ்புவை விரட்டிப் பிடித்து அவரின் தாலியை கழற்றி எறிவாங்களாம் வில்லன்ஸ். துரத்தும் காட்சியில் எல்லாம், அதிரடி இசைக் கோர்வையாம்.
தூக்கி எறியப்பட்ட தாலியின் க்ளோஸப் காட்சியில், அதிரடி இசையெல்லாம், டக்னு முடிஞ்சு சைலண்ட்டாயிடுமாம். அந்த காட்சிக்கு எந்த இசையும் சேர்க்காமல், அமைதியா விட்டுட்டாராம் ராஜா.
வாசுவும், ராஜாகிட்ட, ஐயா இது ரொம்ப முக்கியமான சீன், இங்க ஏதாவது அழுத்தமா ஒரு இசையை சேருங்கன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் தேவையில்லை, இப்படியே ரிலீஸ் பண்ணுன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்.

வாசுவும், வேர வழியில்லாம, அரை மனசுடன், படத்தை ரிலீஸ் பண்ணாராம்.

படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்றாராம் வாசு.
இந்தக் காட்சி வந்ததும், தியேட்டரே அமைதியாயிடுச்சாம்.
தாலியை பார்த்ததும், பொதுமக்கள், குஷ்புவின் மேல் பரிதாபப்பட்டு உச்சு கொட்டினார்களாம்.
அமைதியான அந்த சீனில், பொதுமக்களின், 'உச்சு' சப்தம்தான் பெரிய பலம். இதுதான், படத்தை தூக்கி நிறுத்தும்னு ராஜாவுக்கு முன்னமே தெரிந்திருந்ததாம்.

ஹ்ம். ராஜா ராஜாதான்.

ராஜா சார், பழைய நையாண்டி பதிவுக்கு, ஐ ஆம் வெரி வெரி வெரி வெரி வெரி சாரி!
மன்னிச்சுடுங்கோ!

ராஜாவை, அன்று போல் என்றுமே, ராஜாவாகப் பார்ப்போம்.

விரைவில் பொங்கி எழுவார், பழைய படி ஒரு மகத்தான ஹிட் தருவார், என்று தாகத்துடன் காத்திருக்கும்,

-சர்வேசன்

பி.கு: மகத்தான் ஹிட் தரலன்னாலும் கூட பரவால்ல. ராஜா எப்பவும் நீ ராஜா!!!

52 comments:

SurveySan said...

ராஜா ரசிக கண்மணிகளும், என்னை சைலண்டா மன்னிச்சிடுங்க ;)

அப்படியே, உங்களுக்கு, ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச, ராஜா பாட்டு ஒண்ணை சொல்லிட்டுப் போங்க. நன்னி.

SurveySan said...

இங்கிருந்து சுட்டது:
http://tfmpage.com/forum/archives/23879.13893.04.20.35.html

You will realise Raja's genius only if you have watched him in the re-recording room. At his peak, I had to use the influence of his mentor, G K Venkatesh for an interview. At Prasad Studios, Raja first asked me to watch him work.

The theatre darkened and a reel with only the talkie portion was shown. Just one viewing and Raja started scribbling musical notes in a book. In a few minutes, the musicians crowded around him for directions. One rehearsal and the take was okayed. With just one viewing, Raja had imbibed not only the mood of the scene but also the timing of his score to the second.

ஆ! இதழ்கள் said...

எனக்கு ராஜாபாட்டு பலவற்றை பிடிக்கும் நம்மில் பலரைப்போல். ஒன்றென்றால்...

விழியிலே மணிவிழியில் மவுனமொழி பேசும்..

என்ற பாடலும் ஒன்று, இந்தியில் கூட சமீபத்தில் வெளியாகி கலக்கியது, ஜானே தோனா என்று.

SurveySan said...

ஆ!, சூப்பர் பாட்டு அது. அமிதாப் படத்தில் வந்தது. ஆனா, தமிழின் இனிமை இந்தியில் இல்லாமல் போனது :)

SurveySan said...

ராஜாs music creates a miracle?

அவ்வ்வ்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2008/07/18-illayaraja-music-makes-medical-miracle.html

:)

ARV Loshan said...

ராஜா ராஜா தான்.. மூன்று தசாப்தங்களாக இசையை ஆண்டவர்..
எனினும் இப்போ தன் சுயத்தை மாற்றி விட்டார் என்று தான் எண்ணுகிறேன்..
(ஒரு சில அண்மைக்காலப் பாடல்களில் மட்டுமே அவராக இருக்கிறார்)

இளையராஜாவின் இசையில் ஏராளம் பாடல்கள் பிடிக்கும்,,

அவற்றுள் சில

பனி விழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா
தேனே தென்பாண்டி மீனே - உதயகீதம்
கீரவாணி - பாடும் பறவைகள்
என்னைத் தொட்டு - உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்

ஆ! இதழ்கள் said...

எனினும் இப்போ தன் சுயத்தை மாற்றி விட்டார் என்று தான் எண்ணுகிறேன்..//

An artist's performance excells only during the time when they are tested, you can say Rehman needs to keep up the expectations of Maniratnam, and shankar in their movies to compete with their visuals, or atleast has to provide a platform for them to perform. But now I feel Raja do not have such directors who can put in him in that sort of situation, or you can say Raja doesnt want to take that pressure now a days. He takes thinks for granted. I hope that is the real reason for his setback.

Unknown said...

நண்பர் சர்வேசன் அவர்களுக்கு,

நானும் உங்களை போல ராஜாவின் பரம ரசிகன்.ராஜா திரும்பி வருவாரா? கேட்டு உள்ளீர்கள் . இதற்க்கு உண்டான பதிலை என் பதிவில் பார்க்க: "ஏ ஆர் ரகுமானுக்கு என்னாச்சு?"

என் பதிவில் இவருக்கு(ராஜாவுக்கு) சப்போர்ட் பண்ணி ஒரு சண்டையே போட்டேன்.

அடுத்து பார்க்கவும் "அந்தி மழை பொழிகிறதுபாடல்கேட்டுக்கொண்டேஎழுதிய கவிதை(படம்-ராஜா பார்வை)"

மேல் உள்ள இரண்டும் "இசை" என்ற பிரிவில் பார்க்கலாம்.கருத்து சொல்லவும்.

உங்கள் கேள்விக்கு உண்டான பதில் கிடைக்கும்.

கண்டிப்பாககருத்துசொல்லவும்.உங்கள் பதிவிலேயே சொல்லவும்.

நன்றி.

"தாமரைக் கொடி தரையில் வந்தது எப்படி" படம்: ஆனந்த கும்மி.

"அந்தரங்கம் யாவுமே"
படம்: ஆயிரம் நிலவே வா

SPBயும் ராஜாவும் பின்னுவார்கள்.இதல
வர western beats கேளுங்கள்.

நன்றி.

Tech Shankar said...

சிலம்பாட்டம் படத்தில் இளையராஜா ஒரு புதிய பாடல் பாடியுள்ளார்.

அருமையாக இருக்கிறது. கேட்டீர்களா?


சிலம்பாட்டம் - படத்திலிருந்து ’மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வைச்சான்’ - பாட்டு எனக்குப் பிடித்துள்ளது.

Poornima Saravana kumar said...

என்ன இருந்தாலும் ராஜா சார்க்கு இணை ராஜா சார் தான். அவரோட பயங்கரமான விசிறி நான்.. ம்ம்ம்ம் அவரைப் பற்றி பேசினாலும், அவர் இசையைப் பற்றி பேசினாலும் பேசிகிட்டே போகலாம் அவ்ளோ இருக்குன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. அவரோட எல்லா பாடல்களுமே ரொம்ப பிடிக்கும்.. அதில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சதில் சிலதை சொல்றேன்.

வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்
வளையோசை கலகல கலவென- சத்யா
காதல் கவிதைகள்- கோபுர வாசலிலே
நிலவுப் பாட்டு- கண்ணுக்குள் நிலவு

புருனோ Bruno said...

வழிமொழிகிறேன்

Raj said...

காத்தோடு பூ உரச....பூவ வண்டுரச....!

சமீபத்தில இந்த பாட்ட கேட்டேன் நான்...என்னமோ பண்ணுது இது...கேட்டுட்டு சொல்லுங்க...இதப்போல இன்னும் ஓராயிரம் இருக்கு...ஒன்றா...இரண்டா!

கா.கி said...

எனக்கு பிடிச்ச பாட்டுன்னு சொல்லப்போனா அதுக்கு தனிய ஒரு blog ஆரம்பிச்சு பேசணும். ஒவ்வொரு மனநிலைல, அவரோட ஒவ்வொரு பாடல் நல்லா இருக்கும். இதுவே ஒரு மகத்தான சாதனை இல்லையா. அந்த காலத்துல பூஜை மட்டுமே போடப்பட்டு, நின்னு போன படங்கள் நெறைய இருக்கும், அந்த மாதிரி படங்களுக்கு ராஜ போட்ட பாடல்கள் என்ன ஆச்சுன்னு நான் நினைப்பதுண்டு. அதெல்லாம் கிடைச்சாலும் நல்லா இருக்கும்...

அநேகமா உங்க குறை இன்னும் ஓரிரு மாதங்கள்ல தீரலாம். பாலா இயக்கத்துல, ராஜ இசைல, "நான் கடவுள்" படத்தோட பாடல்கள் கூடிய விரைவுல வரப் போறதா கேள்விப்பட்டேன். அந்தப் படத்துல, "ராஜாவின் ரமண மாலை" பாடல்கள்ல ஒண்ணு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

Lets hope for the raja's magic again....

p.s.Listen to "Bikshai Pathiram" song. Divine.

பரிசல்காரன் said...

நான் யாருக்காகவாவது உயிரைக் கொடுக்கவேண்டுமென்றால் அது இவர்களுக்காகத்தான் இருக்கும் என்று பலமுறை நண்பர்களிடம் சொல்வேன். அதில் நம்பர் ஒன் ராஜா சார்.

அவரது பாடல்களில் பிடித்த வரி என்று கேட்டால்.. எதைச் சொல்ல? ஆக்கிய சர்வேசனும்க்கும், அளக்கிற சர்வேசனுக்கும் எட்டாதது அது!

இருந்தாலும் ஒன்றிரண்டு.. (முதல்வரி என்றில்லாமல் பாடலின் நடு வரிகளைக் கூடக் குறிப்பிட்டிருக்கிறேன். அதைப் பாடிப்பார்த்து எல்லாரும் ஆனந்தமடையட்டும் என்று...)

# சங்கத்தில் பாடாத கவிதை...

# எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுதே... எதுவும் இல்லாமலே மனசெல்லாம் தேனா இனிக்குதே..

# என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக

# இளங்காத்துவீசுதே.. எச போலப் பேசுதே... (பாடலில் ஆரம்ப புல்லாங்குழலுக்கு புரூனே சுல்தானின் சொத்தைக் கொடுக்கலாம்!)

# கோடைக் காலக் காற்றே..

# குழல் வளர்ந்து அலையானதே... இரவுகளின் இழையானதே..

# தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது.. நெஞ்சு பொறு கொஞ்சமிரு தாவணிவிசிறிகள் வீசுகிறேன்...

அடப் போங்க சார்... எத்தனையை எழுத...

கானா பிரபா said...

தல

வேணாம் திரும்பவும் சீண்டாதீங்க நம்ம ஆளை ;)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராஜா திரையிசைக்குக் கிடைத்த மற்றுமொரு சொத்து என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நான் சுப்பையா நாயுடு; ராமநாதன் முதல் இன்றைய ஜேம்ஸ் வசந்தன் வரை பல பாடல்களை ரசித்துள்ளேன்.
எல்லோருமே ஏதாவது ஒரு பாடலிலாவது முத்திரை பதித்துள்ளார்கள்.
"வளர்ந்த கதை மறந்து விட்டாள் கேளடா' கண்ணா!!!எனும் பாடலின் "அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா!;நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா!" என்ற வரியில் சுசீலா அம்மா குரல் தவிர எதும் இல்லை.
அந்த பாட்டில்...மொத்த உணர்வே அந்த அடியில் தான்...என்பது என் அபிப்பிராயம்.
ஆனால் இந்த திரையிசையில் கொடிகட்டியவர்கள் என்றல்ல...எல்லாத்துறையிலும் கொடிகட்டியவர்கள்..
சற்று இறக்கம் காண்பது இயல்பு...
ஒரு காலத்தில் படத்துக்கு 10 பாடல் அந்தப் பத்தும் முத்து...எனத் தந்த எம்.எஸ்.விஸ்வநாதன்...
இப்போ ஓய்ந்து விட்டார்.
இது குறையல்ல...
அதனால் அவர்களைப் போற்றுவோம்.

ராமலக்ஷ்மி said...

உங்க காணவில்லை பதிவை இப்போதான் படித்தேன். பாருங்க, இளைய ராஜா இதுவரை கொடுத்த இசையே ஏழு தமிழ் தலைமுறைக்கு தாராளமாய் தாங்கும்.

’ஒரே நாள் உனை நான்’ சூப்பர் பாடல். அன்றும் பின்பும் பல படங்கள் ஹிட் ஆனதே ராஜாவின் பாடல்கள், இசை மூலம்தான் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. யோகன் பாரிஸ் கருத்தையும் வழி மொழிகிறேன்.

எல்லோரையும் ஒரு பாட்டு சொல்லச் சொன்னால் எப்படி? “ஒன்றா இரண்டா பாடல்கள்? ஓர் வரி போதுமா அவர் பெருமை சொல்லவே..”ன்னு பாடத் தோணுதில்ல?

நினைவில் நிற்கும் சில:
பச்சை மலப் பூவு நீ...
குடகுமலைக் காட்டில் ஒரு பாட்டு...
கேளடி கண்மணி...
கொடியிலே மல்லிகைப் பூ...
அடி ஆத்தாடி...
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு...
செண்பகமே செண்பகமே...

முடிவில்லாத லிஸ்ட்:))!

- இரவீ - said...

தப்பு பண்ணுறீங்க சர்வேSan தப்பு பண்ணுறீங்க ,
அனைத்து பாடலும் ஒரு தனித்துவத்தோட இருக்கும் போது, ஒரு பாட்டு எழுத சொன்னா எப்படி?
கன்னமூடிகிட்டு எப்படி பாட்ட ரசிச்சேனோ, அதே மாதிரி கன்னமூடிகிட்டு எல்லா பாட்டுக்கும் என் வோட்டு.

ராஜ நடராஜன் said...

கரும்பு தின்னா அன்னக்கிளி அடிக்கரும்புலருந்து ஆரம்பிக்கணும்!

Iyappan Krishnan said...

//SurveySan said...

ஆ!, சூப்பர் பாட்டு அது. அமிதாப் படத்தில் வந்தது. ஆனா, தமிழின் இனிமை இந்தியில் இல்லாமல் போனது :)
//


Original is from kannada

Jothayali jothe jothayali iruvaneu

http://kaladi.blogspot.com/2007/03/blog-post.html

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஆச்சர்யம்.
உன்னி சொன்னதுதான் இந்த பதிவின் தலைப்பைப் பார்த்ததும் நினைவில் வந்தது.
அதிலும் சூப்பர்சிங்கரின் அந்தப்பகுதி சிங்கையில் இன்றுதான் ஒளிபரப்பானது.
மேலும் உன்னி பழைய பாடல்களுள் எந்தப் பாடலாவது நாம் பாடியிருக்கக் கூடாதா என்று நினைத்திருக்கிறீர்களா எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு அந்தப் பதிலிறுத்தார்..
இளையராஜா மட்டுமல்ல,எம்.எஸ்.வி,பாலு போன்றவர்கள் எல்லாம் ஒரு சகாப்தத்தின் கூறுகள்..
தங்களின் அபூர்வத் திறமைகளின் மூலம் மட்டமே திமிறி வெடித்துக் கிளம்பியவர்கள்..
விஜய் டிவிக்கு ஒரு நன்றியைச் சொல்ல வேண்டும் இப்படி அற்புதமான நிகழ்ச்சிகளுக்காக!

குடுகுடுப்பை said...

இந்த பதிவில ஒரு இணைப்பு இருக்கு அங்கே போய் பாருங்க

குடுகுடுப்பை: ரசித்தது – கேட்டது, பார்த்தது,படித்தது.

Muthu said...

"எனக்கு, இன்னிக்கும், 'கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று' பாட்டு கேட்டா, கண்ணுல தண்ணி வந்துடும்."

என் இரண்டரை வயது மகள் ஒரு வயதாக இருக்கையில் இரவு தூங்க அடம் பிடித்தால், லேப்டாப்பில் இந்த பாடலை போட்டால் ... நம்புங்கள், பாடல் முடியும் முன் தூங்கியிருப்பாள்.

இப்போதும், காரில் செல்லும்போது, தூக்கம் வந்தால், 'அப்பா தூங்கணும், பொம்ம பாட்டு போடு' என்று கேட்டு பாடல் முடியும் முன்னரே தூங்கியிருப்பாள்.

தாலாட்டின் உன்னத ராகங்களை குழைத்திருப்பார் போல.

ஜித்தன்.

அன்புடன்
முத்துக்குமார்

பி.கு : ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்தது சுகமான இசையோடு கவித்துவம் மிகுந்த திரைப்பாடல் ரசிப்போர்களுக்கு நேர்ந்த ஒரு சோக நிகழ்வு. என்ன சொல்கிறீர்கள் ?

இராம்/Raam said...

வெறும் ஆறே வரிகளில் கொண்ட "தென்பாண்டி சீமையிலே" தான் என்னோட ஆல்டைம் பேவரிட்... :)


அதற்கு தொடர்புடைய சுட்டி... ஹிஹி

SurveySan said...

Loshan,

////எனினும் இப்போ தன் சுயத்தை மாற்றி விட்டார் என்று தான் எண்ணுகிறேன்..
(ஒரு சில அண்மைக்காலப் பாடல்களில் மட்டுமே அவராக இருக்கிறார்)
////

அண்மையில் ராஜாவைப் பாக்கவே முடியல்ல. திருவாசகத்தில் எட்டிப் பார்த்தார் கொஞ்சமாய் ;(

SurveySan said...

ரவிஷங்கர்,

///
கண்டிப்பாககருத்துசொல்லவும்.உங்கள் பதிவிலேயே சொல்லவும்.
//


உங்க பதிவுலயே சொல்லிட்டேன். அந்திமழை பொழிகிறது, செமத்தியான பாட்டு. அதுல வர ஹ ஹ ஹா ஹ ஹா ஹா ஹம்மிங், கடைசி பென்ச்சில் ஒக்காந்து பாடுவோம் எல்லாரும் காலேஜில் :)

SurveySan said...

தமிழ்நெஞ்சம்,

///சிலம்பாட்டம் படத்தில் இளையராஜா ஒரு புதிய பாடல் பாடியுள்ளார்.
அருமையாக இருக்கிறது. கேட்டீர்களா?////


மெய்யாலுமேதான் சொல்றீங்களா?

சுமாராதாங்க இருக்கு அந்த பாட்டு.

ஐ திங்க், ராஜாவின் கலக்கல் காலமெல்லாம் கொஞ்ச காலமா இல்லாததால், அவரின் உண்மையான லெவலையே எல்லாரும் மறந்துட்டோம்?

SurveySan said...

PoornimaSaran,

/////காதல் கவிதைகள்- கோபுர வாசலிலே////

ஹ்ம்.
ஐ லவ் திஸ் இடியட்னு ஆரம்பிக்குமே. ஸ்ஸ்ஸ்ஸ்,ஆஹா.

கார்திக்கும், அவரோட ஜோடியா வந்த அந்த புதுமுகமும், லேசுல மறக்காது.
சித்ராவும், பாலுவும், பின்னியிருப்பாங்க பின்னி.

SurveySan said...

புருனோ,

////வழிமொழிகிறேன்///

நன்றி!

எதை? ;)

SurveySan said...

Raj,

/////சமீபத்தில இந்த பாட்ட கேட்டேன் நான்...என்னமோ பண்ணுது இது...கேட்டுட்டு சொல்லுங்க//////

சுசீலா கலக்கிய பாட்டு அது. தலீவர் படம்.
http://www.youtube.com/watch?v=h-TUe0gQsck

SurveySan said...

Karthick,

/////அநேகமா உங்க குறை இன்னும் ஓரிரு மாதங்கள்ல தீரலாம். பாலா இயக்கத்துல, ராஜ இசைல, "நான் கடவுள்" படத்தோட பாடல்கள் கூடிய விரைவுல வரப் போறதா கேள்விப்பட்டேன். அந்தப் படத்துல, "ராஜாவின் ரமண மாலை" பாடல்கள்ல ஒண்ணு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.
//////


eagerly waiting for நான் கடவுள்.
அவதாரம் ரேஞ்சுக்கு அதில் பாடல்களும், பிதாமகன் ரேஞ்சில் பின்னணியும் அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிந்தால் நன்னாருக்கும் ;)

SurveySan said...

பரிசல்,

தூள் பாட்டு எல்லாம்.

குறிப்பா,
//# கோடைக் காலக் காற்றே...//

மலேஷியா கொழஞ்சிருப்பாரு. ஹ்ம்.
புல்லரிக்குதுங்கோ!

SurveySan said...

பிரபா,

////வேணாம் திரும்பவும் சீண்டாதீங்க நம்ம ஆளை ;)///

:) உங்க டாப்1 எதுன்னு சொல்லலியே?

SurveySan said...

யோகன்,

/////ஆனால் இந்த திரையிசையில் கொடிகட்டியவர்கள் என்றல்ல...எல்லாத்துறையிலும் கொடிகட்டியவர்கள்..
சற்று இறக்கம் காண்பது இயல்பு...
////

உண்மை. ஆனா, ராஜாக்கு இன்னும் சில வருடங்கள் நிலைத்து நிற்க திறமையும் சரக்கு இருக்கு.என்ன ஒரே கொடுமை, அதை வெளிக் கொணர சரியான படங்கள் அமைய மாட்டேங்குது :(

SurveySan said...

ராமலக்ஷ்மி,

////கொடியிலே மல்லிகைப் பூ...
////

ஹ்ம். சூப்பர் பாட்டு. குறிப்பா, ஜானகியின் குழைவும், ராஜாவின் கர கர குரலும்.

என்னமா வெரைட்டி குடுத்திருக்காரு மனுஷன்.

SurveySan said...

Ravee,

////கன்னமூடிகிட்டு எப்படி பாட்ட ரசிச்சேனோ, அதே மாதிரி கன்னமூடிகிட்டு எல்லா பாட்டுக்கும் என் வோட்டு.
////

:) எல்லா பாட்டுக்கு ஓட்டு போட்டாலும், ஒரே ஒரு பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குமேங்க.

இப்ப உலகம் அழியுதுன்னு வச்சுக்கங்க, உங்களை நிலாவுக்கு கூட்டீக்கிட்டு போறாங்க. ஒரே ஒரு பாட்டு சி.டி மட்டும் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. எந்த பாட்டு கொண்டு போவீங்க? :)

SurveySan said...

ராஜ நடராஜன்,

////அன்னக்கிளி அடிக்கரும்புலருந்து ஆரம்பிக்கணும்!/////

அது சரி!

SurveySan said...

Jeeves,

////Original is from kannada

Jothayali jothe jothayali iruvaneu///

oh yeah. i remember கானா'ஸ் பதிவு about this.
it is indeed, a lot classic in kannada.

SurveySan said...

அறிவன்,

/////இளையராஜா மட்டுமல்ல,எம்.எஸ்.வி,பாலு போன்றவர்கள் எல்லாம் ஒரு சகாப்தத்தின் கூறுகள்..////

Absolutely!!

///விஜய் டிவிக்கு ஒரு நன்றியைச் சொல்ல வேண்டும் இப்படி அற்புதமான நிகழ்ச்சிகளுக்காக!
////

Absolutely, again!! :)

SurveySan said...

குடுகுடுப்பை,

////இந்த பதிவில ஒரு இணைப்பு இருக்கு அங்கே போய் பாருங்க

குடுகுடுப்பை: ரசித்தது – கேட்டது, பார்த்தது,படித்தது.////

which இணைப்பு? நிறைய இருக்கே அந்த பக்கத்துல?

SurveySan said...

Muthukumar,

////தாலாட்டின் உன்னத ராகங்களை குழைத்திருப்பார் போல.
////

கண்டிப்பா. அந்த பாட்டுல ஏதோ ஒரு மாஜிக் இருக்கு.
சுசீலாவின் குரலா கூட இருக்கலாம்.

படத்துல, பாலு அந்த பாட்டு ஒரு வரி பாடுவாரு. அதுவே, கிரங்கடிக்கும் என்னை ;)

Anonymous said...

நல்ல பதிவு சார்!! நான் "நந்தலாலா" வையும் "நான் கடவுள்" ளையும் மிகவும் எதிர் பார்கிறேன்!!

SurveySan said...

Raam,

தென்பாண்டி சீமையிலே, சூப்பர் செலக்ஷன் ;)

பாட்டைவிட, அந்த பியானோ பிட்டு, அடிச்சுக்க இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு ஆளே இல்லை.

SurveySan said...

suttapalam,

/////நல்ல பதிவு சார்!! நான் "நந்தலாலா" வையும் "நான் கடவுள்" ளையும் மிகவும் எதிர் பார்கிறேன்!!/////

நானும்!

Unknown said...

சர்வேசன்,

பல பதிவர்கள் எல்லோரும் கேட்ட பாட்டையே போட்டிருக்கிறார்கள்.

நான் சொன்னதை கேட்டீர்களா?

//"தாமரைக் கொடி தரையில் வந்தது எப்படி" படம்: ஆனந்த கும்மி.

"அந்தரங்கம் யாவுமே"
படம்: ஆயிரம் நிலவே வா

SPBயும் ராஜாவும் பின்னுவார்கள்.இதல
வர western beats கேளுங்கள்.//

கானா பிரபா said...

எனக்கு ராஜாவின் பாடல்களில் எதைக்கேட்டாலும் டாப் தான் அந்த நேரத்துக்கு அது டாப்பாக இருக்கும். எனவே எதைச் சொல்ல ;)

- இரவீ - said...

//இப்ப உலகம் அழியுதுன்னு வச்சுக்கங்க, உங்களை நிலாவுக்கு கூட்டீக்கிட்டு போறாங்க. ஒரே ஒரு பாட்டு சி.டி மட்டும் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. எந்த பாட்டு கொண்டு போவீங்க? :)//

சர்வேசன்,
ராஜா சார் சி.டி தான் :)
சரி, நிலாவுக்கு கூட்டீக்கிட்டு போறேங்கறீங்க - ராஜா சார அழைத்து சென்று கிழே உள்ள பாடலுக்கு காரணம் கேட்போம்...

- காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
- பார்த்த விழி பார்த்தபடி (குணா)
- அந்திமழை (ராஜபார்வை)
- ரோஜாவை தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)
- எந்த பூவிலும் வாசம் உண்டு (முரட்டுகாளை)
Etc ... etc...

SurveySan said...

prabha,

////எனக்கு ராஜாவின் பாடல்களில் எதைக்கேட்டாலும் டாப் தான் அந்த நேரத்துக்கு அது டாப்பாக இருக்கும். எனவே எதைச் சொல்ல ;)

/////

:) this is bongaattam.

SurveySan said...

Ravee,

///- காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
- பார்த்த விழி பார்த்தபடி (குணா)
- அந்திமழை (ராஜபார்வை)
- ரோஜாவை தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)
- எந்த பூவிலும் வாசம் உண்டு (முரட்டுகாளை)////

all classiKKKKs :)

shabi said...

ilayaraja ini thannai nirubikka vendiya kattayatthil illai innamum avar padalhal kalakalatthirkum nivil nirkum padaippuhal

நட்புடன் ஜமால் said...

மெட்டி ஒளி காதோடு ...

இந்த பாடல் பார்க்கையில் என் கண்கள் நீர் கோர்க்காமல் இருந்ததே இல்லை ...

இன்னும் எவ்வளவோ இருக்கு ...

ஸ்ரீமதன் said...

என்னுடைய டாப் 5

மீன்கொடி தேரில் ---- கரும்பு வில்
சங்கத்தில் பாடாத கவிதை --- ஆட்டோ ராஜா
ஆகாய கங்கை பூந்தேன் ---- தர்மயுத்தம்
சொல்லாயோ வாய்திறந்து --- மோகமுள்
தென்றல் வந்து தீண்டும் --- அவதாரம்

பாடல்கள் போலவே பின்னணி இசை சேர்ப்பு மிக சிறப்பாக இருக்கும் ராஜாவிடம்.மௌன ராகம்,புன்னகை மன்னன்,வீடு,முதல் மரியாதை,கடலோர கவிதைகள்,நாயகன்...... சமீப காலங்களில் விருமாண்டி,பிதா மகன் என்று இசை ராஜாங்கம் நடத்திய ராஜா அவர்.இன்றும் கூட கரகாட்டக்காரன் படத்தில் அந்த கார் காட்சிகளின் பின்னணி இசை கேட்டவுடன் சிரிப்பை வர செய்வன.வீடு படத்தின் வயலின் மற்றும் நாயகனின் இசை அழச் செய்ய கூடியது. பாடலின் இடையில் வரும் இசை அல்லது ஒரு காட்சியின் பின்னணி இசை கொண்டு பாடல் மற்றும் படத்து பெயர் சொல்ல கூடுமேனில் அது மிகப் பெரும்பாலும் ராஜா இசையாகத்தான் இருக்கும்.ராஜா என்றுமே ராஜாதான்.எனக்கு சக்கரவர்த்தி.