recent posts...

Tuesday, August 28, 2007

அழவைத்த அந்த திரைப்படம் இதுதான்..

சின்ன வயசுல, பழைய சிவாஜி சாவித்ரி படம் எல்லாம் தூர்தர்ஷன்ல போடும்போது, அதப் பாத்து அழரவங்கள பாத்தா சிரிப்புதான் வரும்.
ரொம்ப இளகிய மனம் உள்ளவர்கள் தான் ஒரு சினிமாவில் வரும் துக்கத்துக்கு அழுவாங்கன்னு நெனைக்கறேன்.

என்னுது ரொம்ப ஸ்ட்ராங் ஹார்ட்டு.

சினிமாவ ரொம்ப ஈடுபாட்டோட பாப்பேன், ஆனா, அழரதெல்லாம் கெடையாது.

சமீப காலத்தில் வந்த படங்களில், லேசா மனதை பதறவைத்த படம் என்று மகாநதியைச் சொல்லலாம். மூன்றாம் பிறையிலும் சோகம் அதிகம், ஆனா என்னை பாதிக்கல. ஆங்கிலத்தில், Saving Private Ryanன் கடைசி 10 நிமிடங்கள் அழுகையின் விளிம்புக்குத் தள்ளியதென்று சொல்லலாம்.
சின்ன வயசுல பாத்ததுல சாரதா, ஏ.வி.எம். ராஜா படம் நினைவுக்கு வருது (துலாபாரம்). வறுமையின் கொடுமையால், தன் குழந்தைகளை தானே கொல்லும் ஒரு தாயின் கதை. ஆனா, ஏ.வி.எம் ராஜாவின் ஓவர் ஏக்டிங்கால், அந்த சோகத்தின் எஃபெக்டு கம்மியா இருந்தது.
"பூஞ்சிட்டு கன்னங்கள், பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"
என்ற அருமையான பாடலை, ஏ.வி.எம் ராஜா, உதட்டைக் குவித்து குவித்து பாடுவது இப்ப நெனச்சாலும் காமெடியாதான் இருக்கு :)

சமீப காலமாய் இரானிய மொழிப்படங்களில் பெரிய ஈர்ப்பு எனக்கு. இங்குள்ள லைப்ரரியில் சிறந்த படங்கள் வரிசையா அடுக்கி வச்சிருக்கரதும் ஓரு காரணம்னு நெனைக்கறேன்.
இதுவரைக்கும் ஒரு பத்து இரானியப் படங்கள் பாத்துருப்பேன். எல்லாத்திலும் ஏதாவது ஒரு சோகம் இருந்தது. ஆனா, அழவைக்கல.

சரி, அப்ப எதுதான்யா அழவச்சது உன்னன்னு கேக்கறீங்களா? மேட்டருக்கு வரேன்.

கடந்த வாரம் காணக் கிடைத்த ஒரு மலையாளப் படம் அது. Sibi Malayilனு ஒரு டைரக்டரோட படம் அது. நம்ம விக்ரம் ஒரு பேட்டீல , சிபி மலையில் படத்துல நடிக்கரது தன்னோட ஆசைன்னு சொல்லியிருந்தாரு. இவர் படங்களில், இதயத்தில் ஊசி கொண்டு சொருகுவதைப் போல் ஒரு சோகத்தின் வலி இருக்கும்னு அந்த பேட்டீல படிச்ச ஞாபகம்.

அந்த பேட்டி படிச்சதும், Spencersல் சிபி மலையில் படம் ஒண்ணு (மம்மூட்டி நடித்த தனியாவர்தனம்) வாங்கிப் பாத்தேன். இதயத்தில் ஊசி குத்தத்தான் செய்தது. ஆனா, அழல. அந்த படத்த பத்தி தனிப்பதிவு அப்பறமா போடறேன்.

போன வாரம், ஷாப்பிங் பண்ணும் போது, $10க்கு வாங்கினா ஒரு DVD இனாம்னாங்க. DVD ஆல்பம் மேயும்போது, சிபி மலையில் கண்ணில் பட்டார்.
அட்டையில் நம்ம மாதவியும், டும்டும்டும்மில் நடித்த முரளியும்.
படத்தின் பெயர்: ஆகாசத் தூது

எண்பதுகளில் வந்த படம்.

அநாதைகளான முரளியும், மாதவியும் அநாதை இல்லத்தை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். நான்கு க்யூட் குழந்தைளும் பெறுவர்.
ஒரு கைக்குழந்தை, 6 வயசுப் பையன் (போலியாவால் பாதிக்கப்பட்டவன்), 8 வயசுல ஒரு பையன், 10 வயசுல ஒரு பொண்ணு.
முத்தான குழந்தைகளுடன் பாசம் பிணைந்த வாழ்க்கை.
மாதவி, ம்யூசிக் டீச்சர். முரளி காட்டுல ஏதோ எஸ்டேட்ல ட்ரைவர் வேலை.

முரளிக்கு குடிப் பழக்கம். தினமும் இரவு குடித்துவிட்டு வீட்டிர்க்கு வருவது, குடியில் சம்பாதித்தை இழந்து, சொந்த வீடு கட்ட முடியாமல் தவிப்பது என்று படத்தின் முதல் பாதி சாதாரணமாகவே சென்றது.

குழந்தைகளின் மீது அதிக பாசம் முரளிக்கும், மாதவிக்கும். குடிப்பழக்கத்தை விட்டு விட எவ்வளவோ முயற்சி செய்தும், முரளியால் விடமுடியவில்லை.

இடையில் முளைக்கும் ஒரு வில்லனால் சில ப்ரச்சனைகள்.
முரளி இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் வந்து மாதவியிடம் தவறாக நடக்க நினைக்கும் வில்லனை, பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டுகிறார்கள்.

கோபம் அடைந்த வில்லன், இரண்டாம் மகனின் மீது வேனால் இடித்து விடுகிறான்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப் படும் மகனுக்கு இரத்தம் தேவைப் பட தன் இரத்தத்தைக் கொடுக்கிறாள் மாதவி.

இரத்தத்தை பரிசோதித்த டாக்டர், மாதவிக்கு புற்றுநோய் இருப்பதைக் கூறுகிறார்.

வெளியூரிலிருந்து திரும்பி வந்த முரளி, வில்லனை நையப் புடைக்கிறான்.
மாதவிக்கு புற்று நோய் இருப்பதை அறிந்ததும் துடித்துப் போகிறான்.

இனி குடிப்பதில்லை, மாதவி உயிருடன் இருக்கும் வரை சந்தோஷமாக வைத்திருப்பதாகக் கூறி அவ்வாறே நடந்து வருகிறான்.

இது எதுவும் அறியாத குழந்தைகளூம் தந்தை திருந்தியதில் குதூகலமடைந்து, எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க.

அடிபட்ட வில்லன் சும்மா இருப்பானா? திரும்ப வந்துட்டான் நிம்மதிய கெடுக்க.
முரளிக்கும் வில்லனுக்கும் நடந்த கைகலப்பில், வில்லன் முரளியைக் கொன்றுவிடுகிறான்.

மாதவிக்கு இச்செய்தி இடியாக விழுகிறது.

புற்றுநோயினால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது, கணவனையும் இழந்தது பெரும் சோகத்தைச் சேர்க்கிறது.

அநாதையான மாதவிக்கு, தனக்குப் பின்னர் தன் குழந்தைகள் அநாதையாகிவிடுமே என்று பெரிய கவலை.

ஏழ்மையில் இருக்கும் அவளுக்கு வேறு வழி தெரியாமல், தான் வளர்ந்த அநாதை விடுதிக்குச் சென்று, தன் குழந்தைகளுக்கு ஏதாவது சீக்கிரம் நல்ல வழி அமைக்க வேண்டும் என்று கூறுகிறாள்.

குழந்தைகளை அநாதை விடுதியில் சேர்க்க அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. அநாதை விடுதியில் தான் வாழ்ந்த கஷ்ட வாழ்வை தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணுகிறாள்.

பிள்ளைகளை பேசாமல், தத்துக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து குழந்தை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்களைத் தேடச் சொல்கிறாள்.

கைக்குழந்தையை ஒரு டாக்டர் தம்பதியனர் பெற்றுக் கொள்கின்றனர்.
குழந்தையை விட்டுப் பிரியும் அந்த காட்சிகள், மனதை அறுக்கும் ரகம்.

மூன்றாம் மகன், இளையவனிடம் பாசம் கொண்டவன். இவர்கள் இருவரையும் சேர்த்தே ஒரு குடும்பத்துக்குக் கொடுக்கவேண்டும் என்று மாதவி விரும்புவாள். ஆனால், போலியோவால் பாதிக்கப் பட்டவனை தத்து எடுத்துக் கொள்ள முன்வராததால், இரண்டாம் மகனை மட்டும் ஒரு குடும்பத்தாருக்கு கொடுத்துவிடுவாள்.
போலியோவால் பாதிக்கப் பட்ட சிறுவன், அண்ணனை பிரியும் காட்சியும் நெகிழச் செய்தது.

மூத்த மகளுக்கும் ஒரு வயோதிக தம்பதியர் ஆதரவு கொடுத்து கூட்டிச் செல்வார்கள்.

போலியோவால் பாதிக்கப் பட்டவனுக்கு மட்டும் யாரும் ஆதரவு தராத நிலையில், மாதவியின் நோய் முற்றிக் கொண்டே வரும்.

தனது வாழ்நாள் அதிகம் இல்லை என்றுணர்ந்த மாதவி, அந்த வருடக் க்ருஸ்மஸுக்கு தன் பிள்ளைகள் அனைவரையும் வீட்டுக்கு வரவழைத்து ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ஆசை.

எல்லாருக்கும் அழைப்புகள் விடுத்து, குழந்தைகளுக்காக காத்திருக்கிறாள்.

க்ருஸ்மஸுக்கு முந்தின இரவு, நோய் முற்றி, இறந்து விடுகிறாள்.

தனிமையில் மூன்றாம் மகன் தவித்து நிற்கிறான். க்ருஸ்மஸுக்கு தாயைக் காண ஓடோடி வரும் மற்ற குழந்தைகள், தாயின் சடலத்தைப் பார்த்து அழும் காட்சிகள், அப்பப்பா நெஞ்சை அறுக்கும் ரகம்.

சடங்குகள் எல்லாம் முடிந்ததும், தத்தெடுத்தவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். இனி மறுபடியும் காண்போமா மாட்டோமா என்ற ஏக்கத்தில் அந்த குழந்தைகள் ஒருவருக்கொருவர் கையசைத்த படி விடைகொடுப்பார்கள்.

எல்லாரும் சென்றதும், மூன்றாம் மகன் தனந்தனியனாக கையசைத்த படி அழுது கொண்டே இருப்பான்.

அம்மாடியோவ், இந்த விஷுவல் மீடியாவுக்குத் தான் என்ன சக்தி, இனம் புரியா வேதனையை மனதில் படரச் செய்யும் அந்த காட்சி.

நெஞ்சு முழுவதும் கனம்.

படத்தை அப்படியே முடித்திருந்தால், ஒரு பத்து நாள் சாப்பாடு எறங்கியிருக்காது.

இவ்வளவு சோகத்திலும், டைரக்ட்டர் ஒரு சின்ன சந்தோஷம் தர விரும்பினாரோ என்னமோ, கடைசியில், இரண்டாம் மகனை தத்தெடுத்த தம்பதியர், திரும்ப வந்து, அழுது கொண்டிருக்கும் (போலியோ) மகனை, தங்களுடன் அழைத்துச் செல்வார்கள்.

ஆகாசத் தூது. பார்க்க வேண்டிய படம்.

அநாதைச் சிறுவர்கள் எல்லாம் மிக மிகப் பாவம் என்பதை நெஞ்சில் ஆணியடித்துக் கூறிய படம்.

Hats off to Sibi Malayil!

நீங்க பாத்த படங்களில் உங்களை அழவைத்த படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.

நான் தொடர் விளையாடக் கூப்பிட்டா ஒரு பயலும் வரமாட்டறீங்க ;)
கவுஜ எழுதுங்க மக்களே. தலைப்பு இதுதான். "சீ.. நீ எனக்கு வேண்டாமடா"

;)

பி.கு: இணையத்தில் உலவும் சைக்கோக்களை எதிர்க்க புரிந்துணர்வுடனான உங்கள் ஒத்துழைப்பை நல்க வலதுபுர சைக்கோவை க்ளிக்குங்கள் :)
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்" - எனக்கு மிகவும் பிடித்த குறள்.

நன்னயம் என்னா செய்யறதுன்னுதான் தெரியல.
பொது மன்னிப்புக் கேட்டு, சகலத்தையும் சலவை செய்தால், நன்னயம் செய்ய முயற்சிக்கலாம் ;)
surveysan2005 at yahoo.com.

22 comments:

வெங்கட்ராமன் said...

////// நீங்க பாத்த படங்களில் உங்களை அழவைத்த படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.

காதல் அழிவதில்லை
சிம்பு நடிக்க டி.ஆர் இயக்கியது.

Geetha Sambasivam said...

ம்ம்ம் இந்தப் படம் எப்போ எடுத்ததுனு தெரியலை. ஆனால் கிட்டத் தட்ட இதே மாதிர்யான கருத்துக்களத்தில் தான் பாலச்சந்தரின் "கையளவு மனசு" என்ற தொடர் தொலைக்காட்சியில் வந்தது. முடிவு மாறி இருக்கும். மற்றபடி குழந்தைகளைத் தத்துக் கொடுப்பது எல்லாம் இப்படித் தான். அப்பா விபத்தில் இறந்து போக அம்மா இருதய நோயினால் தவிக்கும்போது குழந்தைகளைத் தத்துக் கொடுத்துவிட்டுப் பின்னர் பெரியவங்க ஆன குழந்தைகளைத் தேடித் தவிப்பதும், கடைசியில் அநாதைக் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பிப்பதும் நடக்கும்.

வெற்றி said...

/* நீங்க பாத்த படங்களில் உங்களை அழவைத்த படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன் */

பல உண்டு. தற்போது நினைவில் நிற்பவை.

1.கர்ணன்
2.வீர பாண்டிய கட்டப் பொம்மன்
3.வைதேகி காத்திருந்தாள்
4.பந்தம்
5.தவமாய்த் தவமிருந்து

Anonymous said...

1) mahaanadhi - Magal thookkaththil ularumbodhu kamal azhum scene.
2) Kaadhalukku mariyaadhai - climax

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாசமலர்!

ILA (a) இளா said...

6லிருந்து அறுபதுவரை
Boot Polish-Hindi

Unknown said...

//நீங்க பாத்த படங்களில் உங்களை அழவைத்த படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.//

ஆளவந்தான்.

கலைப்புலி தாணுவை நினைத்ததும் கண்ணில் ரத்த கண்ணீரே வந்துவிட்டது.

Unknown said...

விஜயகாந்த்தின் தழுவாத கைகள் என்ற படம் இதே கதைதான்:)

கிருஷ்ணா said...

தழுவாத கைகள் - விசயகாந்த் அம்பிகா நடிக்க 1986 ல் வந்தது. இதுதான் கதை.

கிருஷ்ணா said...

தழுவாத கைகள் - விசயகாந்த் அம்பிகா நடிக்க 1986 ல் வந்தது. இதுதான் கதை.

Anonymous said...

//கலைப்புலி தாணுவை நினைத்ததும் கண்ணில் ரத்த கண்ணீரே வந்துவிட்டது//.

யோவ் செல்வன், என்ன கிண்டலா?

அதுக்கு பதிலாதான் சரிகாவை "புன்னகைப் பூவே" படத்தில நடிக்க வச்சு கணக்கை சரி பண்ணீட்டாரே? (நல்லா இருந்த குடும்பம்)

Anonymous said...

சூப்பர் ஸ்டாரின் பாண்டியன், பாபாவை விடவா இது கண்ணீரை வரவழைத்தது?

Anonymous said...

அவர் இயக்கத்தில் கீரிடம், பரதம், ஸம்மர் இன் பெத்லகம், போன்ற படங்கள் பார்த்துள்ளேன். பிடிக்காத படம் செங்கோல் (கீரிடம்- 2).

SurveySan said...

வெங்கட்ராமன்,

காதல் அழிவதில்லை பாத்தீங்களா? ஏங்க இந்த விபரீத வெளையாட்டெல்லாம்?

------------

கீதா சாம்பசிவம், கிட்டத்தட்ட நீங்க சொல்றதும் மேட்சாகுது. மூலக்கதை, சிபி மலையில் உபயமா இருக்கும். :)

------------
வெற்றி, கர்ணன் கண்டிப்பா சொல்லலாம். ஆனா, அழ வெக்கல. வைதேகி காத்திருந்தாள் தாளம் போட வெச்சுது. அதுவும் அழ வெக்கல :)
-------------
அனானி, மகாநதில நீங்க சொல்ற சீன் வெரி டச்சிங்.
ஜெயில் காட்சிகளும், அருமை.
-------------

யோகன்-பாரிஸ், பாசமலர் மறந்து போச்சு. டிவிடி கெடைக்க மாட்டரது. கெடச்சா திரும்ப பாக்கணும். அந்த பாடல்களுக்காகவாவது பாக்கணும்.
------------

இளா, 6 டு 60 வரை, அவ்ளோ இம்ப்ரெஸ் பண்ணல.
பூட்-பாலிஷ் தேடிப் போடறேன் :)
------------

செல்வன்,
ஆளவந்தான் பல பேர அழவெச்சது உண்மை. ;)
விஜயகாந்தின் தழுவாத கைகள் கதை எங்கேருந்து தழுவப் பட்டதுன்னு தெரிஞ்சுடுச்சு :)
-------------
அனானி,
His highness abdullahவும் அவர் படம்தான்னு நெனைக்கரேன். ஜாலியான படம் அது.
தனியாவர்தனம் கெடச்சா பாருங்க. நச்சுனு இருக்கும்.
------------

:)

We The People said...

உண்மை, நானும் இந்த படம் பார்த்த போழுது என்னை அறியாமல் கண்களில் நீர் நிறைந்தது!!! நானே ஆச்சர்யப்பட்டேன்! அது சினிமா என்று தெரியுது! ஆனா கண்ணீரை அடக்கமுடியவில்லை!

அதே போல தசரதம் என்று ஒரு படம் சிபி இயக்கியது தான் என்று நினைக்கிறேன், அதிலும் கிளைமேக்ஸில் நான் கண்ணீர் மல்க நின்றேன் :)

அனேகமா இந்த சிபிக்கு இதே வேலை தான் போல், படம் பார்க்க வரவங்களை அழுகவிடறது :)

SurveySan said...

WeThePeople,

வாங்க வாங்க. சிபி மலயில் படம் ரெண்டு மூணு பாத்தாச்சு.

கிரீடம் - சோகம்

தனியாவர்தனம் - பெரும் சோகம்

ஹிஸ் ஹைனஸ் அப்துல்ல்லா - சூப்பர் காமெடி, பாடல், அட்டகாசமான படம்.

ஆகாசத் தூது - கசக்கிப் பிழியும் சோகம்.

என் கண்ணுலயும் தண்ணி வந்துது இத பாக்கும்போது. நெஞ்சை உருக்கும் சோகம். ஆளு அதுக்கேத்த மாதிரி, கஷ்டப் படரவங்கள அழகா லட்டு மாதிரி ஆரம்பத்துல காட்டிடுவாரு.

இதனாலேயே, நம் சோகம் பின்பாதி படத்துல ஜாஸ்தி ஆயிடுதுன்னு நெனைக்கறேன்.

தனியாவர்தனத்தில் - மம்மூட்டி குழந்தை அழகா இருக்கும். மனைவியா வர சரிதாவும் அழகு.

கிரீடம் - பார்வதி (?) நச்சுனு இருப்பாங்க.

அழகா இருக்கரவங்க கஷ்டப்பட்டா தாக்கம் கூடுதலா இருக்கும்போல :)

Anonymous said...

கடைசியா பாத்ததுல ஒரே அழுவாச்சியா இருந்த படம் "சுவர் இல்லாத சித்திரங்கள்". நடிச்ச அம்புட்டு பயபுள்ளயளும் படம் முழுவது அழுதுகிட்டே இருந்தாங்க. உங்க யாரையாவது இந்த படம் பாதித்ததுண்டா?

Seeker said...

அஞ்சலியின் கிளைமாக்ஸ்.

தேவர் மகனில் கமல் ஒரு இறந்த குழந்தையை வைத்துக் கொண்டு "இது யார் குழந்தைங்க?" என்று பதறுவது.

படம் மட்டுமல்ல - பல நியூஸ்களும், போட்டோக்களும் தான்:
Twin tower collapse-related photos
Oklahoma bombingல் ஒரு firefighter தேவர் மகன் கமல் போல் சின்னஞ்சிறு குழந்தையின் சடலத்தைத் தூக்கி வருவது....

எனக்கொன்னவோ இந்த மாதிரி காட்சிக்குக் காட்சி சோகத்தைப் பிழிந்திடுக்கும் சினிமாக்கள் பிடிப்பதில்லை - 10 நாட்களுக்கு மற்ற regular வேலைகள் செய்ய முடியாது.. மனதைப் போட்டு பிழிந்தெடுக்கும் !

Unknown said...

அழுகாச்சி ராஜாவோட அடுத்த லிஸ்டு:

சுவர் இல்லா சித்திரங்கள்
தீர்ப்பு (எதுக்கு அழுதேனு எனக்கே தெரியல!)

ரத்தக் கண்ணீர் விட்டதும் இந்த லிஸ்டுல வருமா? நெறய படம் இருக்கே!! :)
சமீபத்து ரத்தக்கண்ணீர்: சிவாஜி

SurveySan said...

//ரத்தக் கண்ணீர் விட்டதும் இந்த லிஸ்டுல வருமா? நெறய படம் இருக்கே!! :)
சமீபத்து ரத்தக்கண்ணீர்: சிவாஜி//

you mean blood tears? adhellaam idhula sekkaadha man.
ஆளவந்தான் மாதிரி படங்கள் இந்த மாதிரி ஒரு தாக்கத்தைக் கொடுக்கும்.

அத ஆராயக் கூடாது அனுபவிக்கணும். லிஸ்ட்ல எல்லாம் சேக்கப்ப்டாது :)

PPattian said...

தங்கப்பதக்கம் (தன் மகனையே தானே பிடித்துக் கொடுக்கும் அதிகாரியாக நடிகர் திலகம் - சோதனை மேல் சோதனை)
கன்னத்தில் முத்தமிட்டால் - கீர்த்தனா, நந்திதா தாஸ், சிம்ரன் மூவரும் சேர்ந்து பார்ப்பவரை அழவைக்கும் அந்த கிளைமாக்ஸ்
சுமைதாங்கி - ஜெமினி, முத்துராமன் நடிக்கும் ஒரு பழைய படம்

SurveySan said...

PPattian,
அதென்னமோ தெரில, என்ன மாயமோ புரீல, சிவாஜி அழுதா நமக்கு அழுக வர மாட்ரதுங்க. ;)

கன்னத்தில் முத்தமிட்டால், நல்ல கதை களம். இங்கயும், எனக்கென்னமோ அந்த பார்த்தீபன் பொண்ணும், மணி ரத்தினமும் 'ஓவர் ஏக்டிங்' பண்ணி சொதப்பினதாவே தெரியுது. படம் அருமையான படம். அழ வெக்கல.