recent posts...

Sunday, March 29, 2009

டாஹோ: ஐந்தில் வளையாதது வயசானா வளையாது

Lake Tahoe ஒரு அருமையான ஊரு. கலிஃபோர்னியாவுக்கும் நெவாடாவுக்கும் நடுவில் அமைந்த, ஆயிரத்தி அறுநூறடி ஆழமும், 114 கி.மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரீரீரீரீய லேக்.
ரொம்ப ரம்யமான இடம்.
குளிர்காலத்தில், பனிச்சறுக்கு விளையாட்டு இங்கே ரொம்பப் ப்ரபல்யம்.
நான் இருக்கும் இடத்திலிருந்து, ஒரு மூணு மணி நேர தூரத்தில் இருக்குமிடம் ஆதலால், வூட்டுக்கு வர விருந்தாளிங்க எல்லாரையும் ஒரு தபா இங்க கூட்டிக்கிட்டு போய் காட்டிடுவேன்.
எல்லாதடவையும் போல், இம்முறையும் அப்படி ஒரு உலா சென்றிருந்தேன்.
பனிக்காலம் ஆதலால், வெள்ளை வெளேர்னு எல்லா இடமும், பனி நிறைந்து ரம்யமா இருந்தது. இந்த ஊர் காரனெல்லால், மலை மேலிருந்து சர்ர்ர்ர்ர்ருனு சறுக்கி வர எல்லா ஏற்பாட்டோடும் வந்திருந்தார்கள்.

நாம, வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் ரகம். வெறும் போட்டோ பிடிப்பதோடு சரி. ரிஸ்க் எல்லாம் எடுக்கரதில்லை. மலை அழகா இருக்கு, சருக்கினு வரவங்க அழகா இருக்காங்க, படம் பிடிச்சப்பமா, ஃபிளிக்கர்ல போட்டோமா, வாழ்க்கையை வாழ்ந்தோமான்னு இருக்கரதுதானே நம் வழி?

இம்முறை கொஞ்சம் வித்யாசமா, Dog Sled பண்ணலாம்னு ஒரு ஐடியா இருந்தது. அதாவது, நாம ஜம்முனு ஒரு நாற்காலியில் உட்கார, எட்டு நாய்கள் நம்மை இஸ்துக்கினு ஐஸ் வெளி மேல் ஓடுமாம். அட இது என்னடா நாய்க்கு வந்த கொடுமைன்னு தோணிச்சு. நல்ல வேளையா, அதுல போரதுக்கு டிக்கெட் கெடைக்கல. எல்லா நாயும் பிசியாம்.

நாய்க் கொடுமை செய்ய முடியாமல் போன என் கும்பலுக்கு ஒரே சோகம். சரி இவ்ளோ தூரம் வந்துட்டமே, எத்தையாவது செய்யணும்னு, அங்கே ஹோட்டலின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த பெரிய ஐஸ் ரிங்குக்கு போனாங்க. ice skate செய்ய தோதுவாக பெரிய ஐஸ் வட்டம் அமைக்கப்பட்ட இடம் அது. எல்லாரும், skateஐ கால்ல மாட்டிக்கிட்டு சுவாய்ங்க் சுவாய்ங்க்னு ரொம்ப ஜம்முனு போயிக்கிட்டு இருந்தாங்க. நம்மாளுங்க யாருக்கும் ஸ்கேட்டிங் எல்லாம் தெரியாது. கடைக்காரன், லன்ச் டைம் ஆவுது, கடைய மூடப் போறேன், வேணும்னா அரை மணி நேரம் பண்ணிக்கங்க, காசு தரவேணாம் ஸ்கேட் ஷூவுக்குன்னான்.
காசு தரவேணாம்னா லேசுல விட்ருவமா? எல்லாரும் ஆளுக்கொரு ஷூவ வாங்கிக்கிட்டோம்.
குட்டி குட்டிப் பசங்களெல்லாம், சர்ர்ர் சர்ர்ர்னு செம அழகா அந்த வட்டத்தை சுத்தி சுத்தி வந்தாங்க. என் கும்பலில் எல்லாரும், தத்தக்கா பித்தக்கான்னு விழுந்து பொறண்டு, ஓரத்தில் இருந்த கம்பியை பிடிச்சுக்கிட்டு தில் விக்ரம் மாதிரி நடை பழகினாங்க.

நான் எல்லாரையும் படம் புடிச்சிட்டு, கடைசியா உள்ள கால வச்சேன்.
சத்தியமா சொல்றேன் சாமிகளா, இதெல்லலம் வேடிக்கப் பாக்கதான் ஈஸி. உள்ள கால வச்சப்பரம்தான் தெரியுது, வெளீல நிக்கரது எவ்ளோ ஈஸியா இருக்குன்னு.
வழுக்குது. கால் ஒரு எடத்துல நிக்கல. ஓரத்துல இருக்கர கம்பியை, மனசுல கந்த ச்ஷ்டிக் கவசம் சொல்லிக்கினே கெட்டியா புடிச்சுக்குனேன்.

பதினெஞ்சு நிமிஷத்துல, ரெண்டடி போயிருப்பேன். திரும்ப ரிட்டர்ன் ஆக, இன்னும் 15 நிமிஷம் ஆகும்னு தெரிஞ்சதால, கொஞ்சம் அப்படியே நின்னு ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சேன்.

அப்ப ஒரு க்யூட்டான குட்டிப் பாப்பா பக்கத்தில் வந்துது.

பாப்பா: "ஹாய், என்ன முடியலியா? இப்படி மூச்சு வாங்குது"
நானு: "யா யா, ஃபர்ஸ்ட் டைம் ஃபார் மீ."
பாப்பா: "ஹ்ம். இதெல்லாம் சின்ன வயசுலையே கத்துக்கணும். அப்பதான் ஈஸியா வரும்"
நானு: "யா யா, நான் சின்ன வயசுல ரொம்ப சோம்பேரியா இருந்துட்டேன்"
பாப்பா: (மனசுக்குள்ள) அதான் பாத்தாலே தெரியுதே, வந்துட்டானுங்க, கால்ல ஸ்கேட்ட மாட்டிக்கிட்டு. ஆணிய புடுங்கணோமா, வால் மார்ட் போய் வேடிக்கப் பாத்தோமான்னு இல்லாம, உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்?
நானு: (இதுக்குமேல இங்க நின்னா மருவாத கெட்டுடும்னு தெரிஞ்சதும்) ஓ.கே, ஐ காட் டு கோ. ஹாவ் ஃபன்!
பாப்பா: "ஓ.கே. பை, யூ காட் டு ப்ராக்டிஸ் எ லாட், டு ஸ்கேட் லைக் மீ"

அப்படீன்னு சொல்லிட்டு, சர்ர்ர்ர்னு ஒரு வட்டம் அடிச்சு காமிச்சா.

அப்பரம், முக்கி மொனகி, கரை சேர பதினெஞ்சு நிமிஷம் ஆச்சு எனக்கு.

ஐந்தில் வளையாதது, அப்பாலிக்கா வளையவே வளையாதுன்னு, தெரியாமயா சொல்லியிருக்காங்க?

ஏதோ, நம்மால முடிஞ்சது, பாப்பாவை ஒரு போட்டோ மட்டும் பிடிச்சேன்.( பாப்பாவின் அப்பா எங்கிருந்தாலும், இந்தப் பக்கம் வந்துடாதீங்க. வந்தாலும், என்ன அடிக்காதீங்க, போட்டோவை போட்டதுக்கு மன்னிச்சு விட்றுங்க. பின்னூட்டம் போட்டு திட்னீங்கன்னாலும் எடுத்துடுவேன் couldnt resist :) )
இந்த படத்தை எடுக்கும்போது, "lot of people like to take my pic when i skate"னு ஒரு பெருமிதமா சொன்னா. க்யூட் பாப்பா! முகத்தில் ஒரு பெருமிதம் தெரியுதுல்ல? :)

Thursday, March 26, 2009

கடைசி பதிவு

Randy Pausch, Carnegie Mellon Universityல் பேராசிரியாக பணி புரிந்தவர்.
2006ல், தனது 46 வயதில், தனக்கு pancreatic cancer இருப்பதை அறிந்து கொண்டவர், அதற்கு அடுத்த நாட்களில், மரணம் அருகாமையில் இருப்பதைக் கண்டு, எஞ்சி இருக்கும் நாட்களை பயனுள்ளதாக வாழ்ந்து கழித்தவர்.
ஜூலை 2008ல் இவர் இறந்து விட்டார்.

இறப்பதர்க்கு முன், பல இடங்களுக்கும் சென்று, 'Last Lecture' என்ற தலைப்பில், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கை லட்சியத்தை அடைய என்னென்ன வழிகளில் செயல்படணும், வாழ்க்கைக்கு எது தேவை, எது அனாவசியம் போன்ற, பலருக்கும் பயனான செய்திகளை அருமையான விதத்தில் பேசிப் பரப்பினார்.

மரணம் அருகாமையில் திடமா இருக்கும்போது, எவ்ளோ பேருக்கு இந்தத் தெம்பு இருக்கும்?

நமது பதிவுலக அனுராதா போல், இவரும் தனது அனுபவங்களை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார், இறப்பதர்க்கு ஒரு மாதம் முன்வரை.

இவரின் Last Lecture விரிவுரையின் வீடியோ கீழே. இதில் அவர் கூறியுள்ள சில விஷயங்கள்.
* (விதியைப் பற்றி) We cannot change the cards we are dealt, just how we play the hand
* Experience is what you get when you didn’t get what you wanted
* brick walls are there to stop the people who don’t want it badly enough.
* Find the best in everybody. Just keep waiting no matter how long it takes. No one is all evil. Everybody has a good side, just keep waiting, it will come out.
* It’s not about how to achieve your dreams. It’s about how to lead your life. If you lead your life the right way, the karma will take care of itself. The dreams will come to you.



இந்த வீடியோவில், ரேண்டி தன் மனைவி குழந்தைகளுக்கு, இறப்பதர்க்கு சில நாட்களுக்கு முன்,தன் மனநிலையை விவரிக்கும் காட்சி.


என் முந்தைய பதிவில், சொன்ன மாதிரி,

மக்களே, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை.

ஸோ, உஷாரா இருங்க, நல்ல படியா வாழுங்க, எப்ப வேணா என்ன வேணா ஆகலாம்.

இருக்கும் வரை, நல்லவிதமா, யாருக்கும் டார்சர் கொடுக்காம வாழுங்க.
முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியாவும் இருங்க.

வாழ்க்கை வாழ்வதர்க்கே!

Make each day count!

பி.கு: last lecture எப்படி கடைசி பதிவானது?
ஹ்ம். பதிவுலக ட்ரான்ஸ்லேஷன் அப்படித்தான் :)

Wednesday, March 25, 2009

சென்னை விசிட் - ஆடாதேடா மனிதா!

சில வருஷங்களுக்கு முன்னாலெல்லாம், யாராவது சென்னை செல்லும் நண்பரை கொண்டு விடணும்னு ஏர்போர்ட் போகும்போதெல்லாம், அடாடா நாம எப்போ போவோம்னு ஒரு ஏக்கம் வரும்.
என்னதான், வருஷா வருஷம் சென்னைக்கு தவறாமல் சென்று கொண்டிருந்தாலும், இந்த ஏக்கம் குறைவதே இல்லை.
ஆனா, ஒவ்வொரு வருஷம் போகப் போக, இந்த ஏக்கத்தின் அளவுகோல் கம்மியாயிக்கிட்டே இருக்கு.

எனக்குத் தெரிஞ்சு, இதுக்கு பெரிய காரணம், சென்னையில் முன்னரிருந்த சுற்றமும் நட்பும் இப்ப அருகாமையில் இல்லை. முக்கால் வாசி பேரு, வேலையின் காரணமாக அசலூரிலோ, திருமணங்கள் முடிந்து வேறு ஊருக்கோ குடிபெயர்ந்து விட்டிருக்கிறார்கள்.

விரல் விட்டு எண்ணக் கூடிய கொஞ்சம் பேர் மட்டும்தான் இன்னும் சென்னை வாசிகளாக இருக்காங்க.
அதுலையும், பீச்சாங்கையில விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டும் தான், சில நண்பர்கள், நான் விடுமுறை செல்லும் காலங்களில், accessibleஆ இருக்காங்க.

நட்பு வட்டத்தில், எல்லோரும் சமமாய் பழகுபவர்கள். ஆனால், எனக்கு 'உயிர்' நண்பன்னு யாரையும் அழுத்தி சொல்லிக்க முடியலை. அந்தளவுக்கு, 'உயிருக்கு உயிரா', நட்பு பாராட்ட படிக்கர காலத்துல வாய்ப்புகள் அமையலை போலருக்கு.
நட்புகளுடன் அடாவடிகளெல்லாம் நிறைய செஞ்சிருக்கேன், ஆனா, இந்த உயிர்நட்பு மேட்டரில் கோட்டை விட்டதாகவே தோணுது.

உயிர் நண்பன்னு ஒருத்தன் இருந்தா அது ஒரு பெரிய பலம் தான்னே தோணுது. என்னையும், யாரும் உயிர்நண்பன்னு சொல்லிப்பாங்களான்னு தெரியல. சில பேர் என் முன்னாடி, என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்டும்போது, சிலர் அப்படி சொல்லிக் கேட்டிருக்கேன். உள்ளூர பெருமையா இருக்கும், ஆனா, அது சும்மா formality சொல்லிக்கராங்களான்னு தெரியல்ல.

நல்ல நண்பனுக்கும், உயிர் நண்பனுக்கும் கண்டிப்பா ஒரு மைல் தூரமாவது காப் இருக்கும்.
எனக்கு நல்ல நண்பர்கள் பலருண்டு.

நல்ல நண்பனுக்கும், உயிர் நண்பனுக்கும் நடுவில் ஒரு ரகம் உண்டென்றால், அந்த ரகத்தில் சோத்தாங்கையில் எண்ணக் கூடிய அளவில் ஒரு ப்ரகஸ்பதிக் கூட்டம் எனக்கும் உண்டு.

பள்ளி பயிலும் காலங்களில், அஞ்சாங்கிளாஸ் முடிந்ததும், குடும்ப சகிதமா சென்னையில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்ந்தோம். நல்ல கண்டிப்பான ஸ்கூல்ல படிச்சாதான் தன் பையன் தேறுவான்னு எங்கப்பாவுக்கு அலாதி நம்பிக்கை.

புதிய ஊரில், பக்கத்துவீட்டில் அருமையான ஒரு குடும்பம். என் வயதில் ஒரு குட்டிப் பையன் (கிருஷ்ணன்), அவனுக்கு ஒரு அண்ணன் ஒரு அக்கா.
எனது நல்ல பழக்கங்களில் பல, அந்த குடும்பத்துடன் ஏற்பட்ட பரிச்சயத்தினால்தான் வந்ததாய் எனக்குத் தோன்றுகிறது.

எங்க வீட்ல இருக்கரதை விட, அவங்க வீட்லதான் சதா சர்வ காலமும் இருப்பேன்.
அவங்க வீட்ல எல்லாரும் ராஜா வெறியர்கள். அங்கிருந்துதான், எனக்கும் அந்த 'ராசா' வியாதி வந்துது. எஸ்.ஜானகி மேல் ஈர்ப்பு வந்தது. ஜேசுதாஸின் அருமை புரிஞ்சுது. பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாட்டெல்லாம் ரசிக்கத் தெரிஞ்சுது.
அவங்க வீட்ல அண்ணன் எஸ்.பி.பி, அக்கா சித்ரா, கிருஷ்ணன் மோளம், நானு பக்க வாத்யம். சனி ஞாயிறுகளில், டேப்ரிக்கார்டை ஆண் பண்ணி, அவங்க பாட்டு பாட, நாங்க டப்பாவில் மேளம் வாசிக்க, கச்சேரி அமக்களப்படும்.

கிருஷ்ணனும் நானும் கிரிக்கெட் டீமிலும் இருப்போம். எனக்காக அவன் சண்டை போடுவான். செகண்ட் காஜெல்லாம் வாங்கித் தருவான். நல்ல படங்கள் வந்தா தேடிப் பிடிச்சுக்கிட்டு ஒண்ணா போய் பாப்போம். சஃபையரில் பல நல்ல மலையாளப் படங்கள் பாத்திருக்கோம். geityம் போயிருக்கோம்.

ஒரு நாள் பத்தாவது படிக்கும்போதுன்னு நெனைக்கறேன், எனக்கு ஏதோ ஒடம்பு சரியில்லாம, டீஹைட்ரேட் ஆகி, கால்ல செம வலி. கிருஷ்ணன் ஓடி வந்து, காலெல்லாம் அமுக்கிவிட்டான். இன்னொருமுறை, நான் வீட்டுக்கு வர லேட்டாகிடுச்சு. எங்கப்பாவுடன், இவனும் ராத்திரி கொட்ட கொட்ட முழிச்சு, பல இடங்களுக்கு போய் அலஞ்சு திரிஞ்சு விசாரிச்சான். பாசக்கார பய.

உயிர் நண்பன்னு சொல்லிக்க, ஓரளவுக்கு மேச்சாகரது இந்த கிருஷ்ணன் தான்.

சில வருஷங்களுக்கு முன் வரை சென்னை விசிட் சென்றால், பாதி நேரம் இவனோட சுத்தரதுதான் பொழுது போக்கா இருந்தது. ஆனா, அதுவும் சமீப காலங்களில் மாறிடுச்சு, அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அண்ணனும் தனிக் குடித்தனம் போயிட்டாரு. கிருஷ்ணனும், திருமணமாகி சென்னையிலேயே இன்னொரு மூலைக்குப் போயிட்டான்.
அப்பா அம்மா தனியா இருந்தாங்க.

நானும் கிருஷ்ணனைப் பார்ப்பது குறைந்து விட்டிருந்தது.

கிருஷ்ணனின் அக்கா புருஷன், நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு. பெரிய படிப்பெல்லாம் படிக்கலன்னாலும், சொந்த பிசினஸ் எல்லாம் வச்சிருந்தாரு. சில வருஷங்களுக்கு முன் அவரைப் பாக்கும்போது, ஓஹோன்னு இருந்தாரு, புதிய கார் வாங்கியிருந்தாரு. ஆனாலும், பந்தா எல்லாம் பண்றதில்லை அவரு.
அழகா ரெண்டு பசங்க அவங்களுக்கு. குட்டிப் பொண்ணு ஒண்ணு, அவளுக்கு அழகான ஒரு தம்பி.

அப்பெல்லாம், புதுப் படங்கள், ஆங்கிலப் படங்கள்னு பல படங்களை சனிக்கிழமை இரவுகளில், விசிஆரில் போட்டு எங்களுக்குக் காட்டுவாரு. படம் பாக்கும்போது, வாய்க்கு ருசியா நொறுக்குத் தீனும் சப்ளை பண்ணுவாரு. அருமையான நாட்கள் அவை.

நாலு வருஷத்துக்கு முன்னாடி, என்னை எதேச்சையா ரோட்டுல பாத்தவரு, வண்டிய நிறுத்தி, "என்னாப்பா சர்வேசா, எப்படி இருக்க? வீட்டுக்கெல்லாம் வரமாட்டேங்கர, பெரிய ஆளாயிட்டியோ? அமெரிக்காலருந்து எப்ப திரும்ப வரலாம்னு இருக்க? அஞ்சு கோடி சேத்தா வந்துடுவியா? இங்கையே நிறைய பண்ணலாமே, ஏன் அப்பா அம்மாவ விட்டு இப்படி அலையணும், சீக்கிரம் வந்துடுன்ன" அப்படீன்னு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு.
அவர் பிசினஸ் ஓஹோன்னு போயிக்கிட்டிருக்கரது, அவரின் பேச்சிலிருந்தே தெரிஞ்சுது.

All good things come to an endனு சொல்லுவாங்க.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இவரு ராத்திரி வீட்டுக்கு வரும்போது, ஒரு ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சு. தலையில் பலத்த அடியாம். சுயநினைவை இழ்ந்துட்டாரு.
மூணு மாசம், கன்னா பின்னான்னு செல்வு பண்ணி, பல சிகிச்சைகள் செஞ்சிருக்காங்க.
நினைவு திரும்பிச்சு. ஆனா, முழுசா திரும்பலை.
மூளையில் பல பாகங்கள் வேலை செய்யலையாம். அதனால, வலுவான கால்கள் இருந்தும், அதை உபயோகிக்க முடியாத நிலை.
ஒரு முப்பது வருஷம் பின்னோக்கிப் போயிட்டாரு. குழந்தைத் தனம் வந்து சேந்துடுச்சு.
ஆட்களை பாத்தா அடையாளம் தெரியும். ஆனா, ஒரு புத்தி பேதலித்து விட்ட நிலை.
நாள் முழுக்க ஒக்காந்த எடத்துலையே இருப்பாரு.
ஆரம்பத்தில், இவரை பாத்துக்க ரொம்பவும் கஷ்டப் பட்டாங்க. ஓன்னு கத்துவாரு, அழுவாரு. அக்காக்கும், ஒரு க்ரிப் வர ஆறு மாசத்துக்கு மேல ஆயிருக்கும்.
செலவு கன்னாபின்னான்னு ஆனதால், வீட்டை வித்து, கிருஷ்ணனின் அப்பா மருத்துவ செலவுக்கு செய்ய வேண்டியதை செஞ்சிருக்காரு.
ஆணி வேரே சாய்ந்ததால், அவர் செய்து வந்த பிசினஸும் கவுந்துடுச்சு.

ஆனா, இத்தனை கொடுமையிலும், ஒரு நல்ல விஷயம், அந்த குடும்பத்தின் ஒற்றுமை. யாரும், அம்போன்னு விட்டுடலை. மாப்பிள்ளையை கிருஷ்ணனின் அப்பா கவனித்துக் கொள்வதாகட்டும், கிருஷ்ணனின் சப்போர்ட் ஆகட்டும், அண்ணன் உடனிருந்த செய்த உதவிகளாகட்டும், அருமையான முன்னுதாரணம் இவங்க.

ரெண்டு வருஷமா மாப்பிள்ளையை பாக்க போவேன். எனக்கும், ஆரம்பத்தில் கஷ்டமா இருக்கும், ஆனா, இப்ப அவங்களே சகஜத்துக்கு வந்தப்பரம், எனக்கும் பெருசா மனக் கஷ்டம் இல்லை. மாப்பிள்ளை, மூலையில் உட்கார்ந்து கொண்டு, சிரிச்சுக்கிட்டே, இப்பவும் கேப்பாரு, "ஓ, எனக்கு தெரியுமே. நீ அமெரிக்கால இருக்கல்ல? எப்ப திரும்ப வர? வந்துடுவல்ல?". நானும் சிரிச்சுக்கிட்டே வந்துடுவேன்.

இவரை குணப்படுத்த ஒண்ணும் மார்கம் இருப்பதாய் தெரியவில்லை. இன்னும் அவரால் நடக்க முடியவில்லை, மூளையும் குணமடையல.

டாக்டர்களின் மேல் நம்பிக்கை குறைந்து, இப்ப, புள்ளையார் பூஜை, அல்லா கயிறு, ஏசு ப்ரேயர்னு எல்லாமும் செஞ்சு பாக்கராங்க. பாவம்.

இந்த வருஷம் பாக்கும்போது, கொஞ்ச நேரம் மாப்பிள்ளை கிட்ட ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தேன். கிருஷ்ணனும் வந்திருந்தான். கால் உபயோகிக்காததால், சூம்பிப் போயிருந்தது. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே இருப்பதால், உடல் பருமன் ஆகியிருந்தது. ஆனா, சிரிச்சுக்கிட்டே பேசரது மாறலை.

அக்கா வீட்டு ஃபில்டர் காஃபி பிரமாதமா இருக்கும். காஃபி குடுத்தாங்க. குடிச்சுக்கிட்டே, அவர் மள மள மளன்னு கேக்கர கேள்விக்கெல்லாம், யோசிக்காம எதையாவது சொல்லிக்கிட்டே இருந்தோம்.
அக்கா வந்து, கிருஷ்ணா, அவருக்கு மாத்திரை குடுன்னாங்க.

கிருஷ்ணனும், கலர் கலரா, பெரிய பெரிய மாத்திரைகள் சில டப்பாவிலிருந்து எடுத்துக்கிட்டு வந்து அவர் கிட்ட கொடுத்தான். ஒரு டம்லர் தண்ணீரும்.

அவர் மாத்திரைய வாங்கிக்கிட்டே, "இதெல்லாம் சாப்டா, இன்னும் ஒரு வாரத்டுல சரியாயிடும். அப்பரம் நான் என் கார் ஓட்டுவேன்னு" ஏதோ சொல்லிட்டு இருந்தாரு.

எல்லா மாத்திரையையும் கிருஷ்ணனிடமிருந்து கையில் வாங்கிக் கொண்ட மாப்பிள்ளை, தண்ணீரைக் குடுக்காமல், எல்லாத்தையும் அப்படியே வாயில் போட்டுக் கொண்டு கடித்து மென்று கொண்டிருந்தார்.
எனக்கு ஆச்சரியம், என்னடா கிருஷ்ணா கசக்கப் போவுதுடான்னு சொன்னேன்.

ஆனா, இவருக்கு தலையில் அடிபட்டதில், ஏதோ நரம்பு டேமேஜாகி, வாய்க்கு ருசியே தெரியாமல் போய் விட்டதாம். அதான், மாத்திரையெல்லாம் இப்படி கடிச்சு சாப்பிடறாராம்.

எனக்கு அதைக் கேட்டதும், ஒரு கணம் என்னமோ போல் ஆகிவிட்டது. கண்ணுல தளக்னு தண்ணி தேங்கிடிச்சு.
என்னடா கொடுமை இது? எப்படி இருந்தவரு, ஒரு நிமிஷ நிகழ்வால், இப்படி ஆயிருக்காரு?

வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதுக்குன்னு இப்படியா ஒரு குடும்பத்தை போட்டு வாட்டி எடுக்கும்?

மக்களே, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை.

ஸோ, உஷாரா இருங்க, நல்ல படியா வாழுங்க, எப்ப வேணா என்ன வேணா ஆகலாம்.

இருக்கும் வரை, நல்லவிதமா, யாருக்கும் டார்சர் கொடுக்காம வாழுங்க.
முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியாவும் இருங்க.

வாழ்க்கை வாழ்வதர்க்கே!

Make each day count!

Tuesday, March 24, 2009

நான் கடவுள் - இரண்டாம் பார்வை & முடிவுரை

நான் கடவுள் திரைப்பார்வையில், அந்தப் படம் என்னை வெகுவாய் கவரவில்லை என்று சொல்லியிருந்தேன்.
ஆனா, நம் பதிவர் வட்டத்தில் பலருக்கும் படம் பிடித்திருந்திருக்கிறது.
52% சூப்ப்பர்னும், 21% சுமார்னும், 16% நல்லால்லனும் சொல்லியிருக்காங்க.


படத்தைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் படித்து விட்ட நிலையில், படத்தை இரண்டாம் முறையாய் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது (டிவிடி).
எதுக்காக இல்லன்னாலும், சில விமர்ச்கர்கள் படத்ததப் பற்றி கூறிய சிலக் கருத்துக்களை, ரெண்டாவது தடவ பாத்து, ஊர்ஜீதப் படுத்திக்கலாம்னு நெனச்சிருந்தேன்.
சான்ஸ் கடச்சதும், பாக்கவும் செஞ்சுட்டேன்.

நான் ஊர்ஜீதப்படுத்திக்க/வெரிஃபை பண்ணிக்க நெனச்ச சில விஷயங்களும், ரெண்டாம் தடவ பாத்ததும், என் மனநிலையும், கீழே:

1) பைத்தியக்காரன் எடுத்து விளம்பிய, நான் கடவுளில் உள்ள குறியீடுகள்.
அதாகப்பட்டது, ஹீரோவை காட்டும்போது, காசியில் மட்டுமே, அவர் முதலில் காண்பிக்கப்பட்டு மற்றவர்கள் அப்பரமா காட்டப் படுவாங்க. மற்ற காட்சிகளில், மற்றவர்கள் முதலில் காண்பிக்கப்பட்டு, அப்பரமா ஹீரோவ காட்டுவாங்க. இங்க குறியீடு என்னான்னா, காசியில் மட்டுமே, ஹீரோ அவன் அவனா 'ஃப்ரீயா' இருக்கான், மத்த இடங்களில், அவன் மற்றவர்களின் பார்வையில் அளவிடப்படுகிறான், etc..

after 2nd look: எனக்கு அப்படியொண்ணும் தெரீல. ரெண்டு காட்சியில் அப்படி ஹீரோவை pan பண்ணி ரெண்டாவதா காட்டறாங்க. நீதிமன்றக் காட்சியிலெல்லாம், அவர் ராஜநடை போட்டு வரத தான் மொதல்ல காட்டறாங்க. மேலும் பல காட்சியிலும், ஹீரோவ மொதல்ல காட்டறாங்க. ஆனா, நைஸ் ட்ரை, பை.காரன் ;)

2) ஜெயமோகன் எடுத்துக் கூறிய விஷயம் - ருத்ரனுக்கு, அம்சவல்லி மேல் சிறிய பற்று இருந்ததாம். அவளுக்கு இவனால் விடுதலை, அவளுக்கு இவனால் விடுதலை வரப்போவுது என்பதெல்லாம் அவனுக்கு அப்பவே தெரிஞ்சுடுமாம். அதை, அவன் அம்சவல்லியை முதலில் பார்க்கும்போது, அவன் கண்ணில் காண முடியுமாம். இளையராஜாவும், பின்னணி இசையால் இந்த விஷயத்தை அற்புதமாய் கோடிட்டுக் காட்டராராம். அதைத் தொடர்ந்த காட்சியில், ருத்ரன், தீயின் முன்னமர்ந்து, விபூதியை பூசிக்கொள்ளும் காட்சியிலும், இந்தக் குறியீடு/இசை எல்லாம் உணர்த்தப்பட்டுள்ளதாம்.

after 2nd look: இது பயங்கர வில்லங்கமான குறியீடா இருக்கு. அம்சவல்லியே வலியப் போய் கெஞ்சிக் கூத்தாடி, காது பிஞ்சுக்கரமாதிரி அஞ்சு நிமிஷம், பெரிய பெரிய டயலாக் எல்லாம் பேசினப்பரம் தான், தாங்க முடியாம, ருத்ரன், அம்சவல்லியப் போட்டுத் தள்றான். அதைத் தவிர, அவர்களின் இரண்டாம் சந்திப்பில், அவளை காலால் எட்டி உதைத்து உதாசீனப் படுத்தறான். இதுல எங்க, ருத்ரனுக்கு 'பற்று' வந்தது, அதை இளையராஜா சொன்னாரு? அப்படியே சொல்லியிருந்தாலும், என் சிற்றறிவுக்கு சுத்தமா எட்டலை. அந்த சீனை மட்டும், ஒரு எட்டு தடவ ரீவைண்ட் பண்ணிப் பாத்தேன். ஹ்ம், என் தரம் இன்னும் ரொம்ப உயர வேண்டியிருக்கோ?

பி.கு: எனக்கு 6th sense, முதல் முறை பாத்ததும் புரிஞ்சுது, mementoவும் ஓரளவுக்கு புரிஞ்சுது. Rushmonம் விரும்பிப் பார்த்தேன். வீடு, எலிபத்தாயம் எல்லாம் கூட பார்த்திருக்கிறேன். நான் பாதியில் தியேட்டரை விட்டு எழுந்து வந்த ஒரே படம், உள்ளத்தை அள்ளித்தா. ஒலகத் தரம் வாய்ந்த படங்களை தேடிப் பார்த்தல் என் உப தொழில் ;)


3) சாரு நிவேதிதா, சொன்னது - பாலா எந்த அளவுக்கு நான் கடவுளை, உலகத் தரத்துக்கு எடுத்துள்ளாரோ, அதே அளவுக்கு இளையராஜா தன் தவறான பின்னணி இசையால் படத்தை பின்னுக்கு இழுத்துவிட்டார்.

after 2nd look: இத சொல்றதுக்கு, எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, சாரு சொன்னது நூத்துக்கு 90% சரி! முதல் முறை பார்க்கும்போது, தியேட்டரில், ராசாவின் வழக்கமான, வயலின் குழைவும், உடுக்கையும், திருப்திகரமாவே இருந்தது. ஆனா, இரண்டாம் முறை பார்க்கும்போது, உண்மை உரைத்தது. ராசா கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம். ருத்ரன் + அம்மா மீட் பண்ர சீனெல்லாம், சவ்வு ரகம். இந்தப் படத்துக்கு, இசையை விட, அமைதி பெரிய பலமா இருந்திருக்கும்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, பிச்சைப் பாத்திரம் பாட்டு, சுத்தமா எடுபடலை.
சாரி, ராசா.

4) படத்தில் ஒட்டாமல் வரும் சில காட்சியமைப்புகள் பற்றி நான் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆரம்பத்தில், இது எடிட்டிங் சொதப்பலோ அல்லது சென்ஸார் கட்டிங்கோ என்று நினைத்திருந்தேன். ஆனா, அதற்குப் பின், இணணயத்தில் படித்த பேட்டியில், பாலா இதை வேண்டுமென்றே செய்திருந்ததாய் தெரிந்தது. அதாவது, வழமை போல், ஹீரோ வில்லனை துரத்திச் செல்வதெல்லாம் இல்லாமல், சட்டுனு மீட் பண்ணிப்பாங்க, அடிச்சுப்பாங்கன்னு இருக்கும். மொக்கையான சமாச்சாரம் எல்லாம் சேக்காம, தேவையானதை காட்டினன, நாம புரிஞ்சுப்போம், நாம ஒலகத்தரமான ரசிகர்கள்னு நெனச்சுட்டாராம் பாலா.

after 2nd look: ஹ்ம். சாரி பாலா, எம்மில் 90% ஆளுங்க இன்னும் அந்தளவுக்கு வரலை. காட்சி டு காட்சி கண்டிப்பா தொடர்பு இருக்கணும். குறிப்பா, அம்சவல்லி திடீர்னு ருத்ரன் முன்னாடி வந்து, வள வள வளன்னு டயலாக் பேசரதுக்கு முன்னாடி, ஒரு ஓடர சீனாவது காட்டியிருக்கணும். திடு திப்புனு, படத்தை முடிக்கும் அவசரம் தெரிந்ததால், ஒரே கொழப்பம் வந்துடும். தியேட்டர் காரன் கட் பண்றானா, நாம தான் தூங்கிட்டமா, சென்சார் சொதப்பிட்டானா, $10க்கு நட்டம் வந்துடுச்சா, வெயிட் பண்ணி டிவிடிலயே பாத்திருக்கலாமா..., இப்படி.
அடுத்த முறை, இப்படியெலாம் கட் பண்ணாதீங்க. 3 மணி நேரம் குடுத்தாலும், பாப்போம். நிறைவாக் கொடுங்க.


வேர ஏதாவது காட்சியில் டவுட்டு இருந்தா கேளுங்க, ரீவைண்ட் பண்ணிப் பாத்துட்டு வெளக்கிச் சொல்றேன் ;)

மொத்தத்தில், பல தடவை பாத்தும், நான் கடவுள், பிதாமகன் அளவுக்கு என்னை இழுக்கலை. குறிப்பா, பிதாமகன், டிவிடியில் பலப் பல தடவை பார்க்கலாம். நான் கடவுள், பல தடவை எல்லாம் பாக்க முடியலை. No catchy sequences in the movie that pulls you :(

Monday, March 23, 2009

IE8 சொதப்பிட்டாங்க போல?

நான் ரொம்ப காலமாவே Internet Explorerன் (IE) ரசிகன்.
Netscape கொடி கட்ட பறந்த காலத்திலேயே, IEன் எளிமையான தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அப்பரம், நெருப்பு நரி (FireFox) வந்து பெரிய சவால் விட்டிருந்தாலும், எனக்கு IE வேலை செய்யும் வேகமும், IEன் ஸ்லீக் டிசைனும்தான் மிகவும் பிடித்திருந்தது.

கணினியில் எல்லா ப்ரவுஸரும், இருந்தாலும், (கூகிளின் க்ரோம் உட்பட), 99% நான் உபயோகிப்பது IE தான்.
பல ஃபைல்களை தரவிறக்கம் செய்ய மட்டுமே, நெருப்பு நரியை உபயோகப் படுத்துவேன். நெருப்பு நரியின் download manager தன்னிகரில்லா பேருதவி புரியும் டூல்.

IE8 வந்ததும் போன வாரம் டவுன்லோடி, ஆசை ஆசையா நிறுவியாச்சு.

தோற்றத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. டக்குனு கண்ணுல பட்ட மாற்றங்கள்

* Links இப்போ Favouritesனு ஆகிப் போச்சு. WebSlice என்று ஒரு புது விஷயம். 'webslice' வசதி கொடுக்கும் இணைய பக்கங்களை உங்க ஃபேவரைட்டில் சேர்த்துக் கொண்டால், அந்த பக்கங்களுக்கு போகாமலே, ப்ரிவ்யூ பார்க்கும் வசதி. அதைத் தவிர, அந்த பக்கங்களில் ஏதாவது மாற்றங்கள் வந்தால், IE உங்களுக்கு அதை தெரியப்படுத்தும். (விரல் விட்டு எண்ணக் கூடிய சில பக்கங்களைத் தவிர வேர யாரும் இன்னும், webslice வசதி செய்து கொடுக்கலை)

* கூகிள் க்ரோமில் உள்ள in cognito வசதி, IE8ல் In Private browsing. பலானதைப் பாக்க உபயோகமான வசதி இது.

* Compatibility viewன்னு ஒரு பொத்தான். standardsக்கும் microsoftக்கும் ஆயிரம் மைல் தூரம். IE8ல் இன்னும் பலப் பல non-standard விஷயங்கள் செஞ்சிருக்காங்க போலருக்கு. IE8ல் சரியாகத் தெரியாத பக்கங்களை, இந்த பொத்தான் க்ளிக்கினால், IE8 கொசுவத்தி சுத்தி IE7ன் நிலைக்குப் போய் இந்த பக்கத்தை நல்லாக் காட்ட முயற்சிக்குமாம். எல்லாம் நேரம்தான்.

இதெல்லாம் சரிதான், ஆனா IE8ல் சர்வேசன் பக்கத்தை திறந்ததும் ஒரு பெரிய ஏமாற்றம். பழைய IEல் நச்சுனு திறக்கும் என் பக்கம், IE8ல் ஒவ்வொரு கட்டமும் மெதுவா திறந்து, ஆரம்ப மூன்று விநாடிகள் அசிங்கமா இருக்கு. இதுக்கு முனாடி, நெருப்பு நரிதான் இப்படி பண்ணிட்டு இருந்தது. இப்ப IE8ம் இதன் வரிசையில். கீழப் பாத்தீங்கன்னா, இந்த பதிவின் இரு புறமும், சிகப்பு வரி பளிச்னு தெரியுது பாருங்க. ரிஃப்ரெஷ் ஸ்பீடா இருந்தா, அந்த சிகப்பு சட்டுனு மறஞ்சுடும். IE8ல் ஆர அமரதான் சரியாகுது.
ஹ்ம். சொதப்பிட்டாங்களே!


அடுத்த பெரிய முட்டாள்தனம் download manager இன்னும் IEல் இல்லாதது. நெருப்பு நரியும், க்ரோமும், இணையத்திலிருந்து விஷயங்களை, தரவிறக்கம் செய்வதர்க்கு அருமையான download manager தந்துள்ளார்கள். IE8 இன்னும் அந்த வேலையை ஆரம்பிக்கல.
இப்பவும், ஒவ்வொரு ஃபைலா அடிச்சு அடிச்சு எறக்க வேண்டியதாயிருக்கு.
பைரஸி கொறைக்க இப்படி ஒரு ஏற்பாடோ? :(
மகா சொதப்பல்!!!

இன்னொரு பெரிய முட்டாள்தனம், https:// பக்கங்களுக்குப் போகும்போது பார்த்தேன். ப்ளாகரில் பின்னூட்ட விண்டோவுக்கு போனீங்கன்னா, அந்தப் பக்கம் https:// பக்கம். அதாவது, பாஸ்வேர்டெல்லாம் வாங்குவதால், நீங்கள் அடிப்பதை, encrypt செய்து, சந்தேக பாஷையில்தான் ப்ளாகர் தளத்துக்கு IE அனுப்பும். ( இது ஏன்னு தெரியாதவங்களுக்கு அப்பாலிக்கா தனிப் பதிவு போடறேன் ).
கொடுமை, என்னென்னா, இந்த https பக்கங்களில், சில விஷயங்கள் crypt செய்யப்படாமலும் இருக்கும். ப்ளாகர் ப்ரொஃபைல் படங்கள் ஒரு உதாரணம்.
இப்படி, கலப்பட பக்கங்களுக்குச் செல்லும்போது ( இணையத்தில் 80% இப்படிப் பட்ட பக்கங்களே ), IE ஒரு வார்னிங் கொடுக்கும். அதாவது, "ஏ மனிதா, நீ பார்க்கும் பக்கம் உரலில் https இருந்தாலும், இந்தப் பக்கத்தில் எல்லா விஷயங்களும் அப்படிப்பட்டதல்ல. crypt செய்யப்படாத்தை உனக்குப் பார்க்க வேண்டுமா?"ன்னு கேக்கும்.
பழைய IEக்களில், 'Yes' என்பது defaultஆக இருக்கும். Enter அடிச்சதும், "சரி காட்டித் தொலை" என்பது அர்த்தம். ப்ரொஃபைல் படங்கள் எல்லாம் தெரிந்து விடும்.
IE8ல் 'Yes' 'காட்ட வேண்டாம்' என்று பொருள் எடுத்துக்கொள்கிறது. ஸோ, enter அடிக்க முடியாது. எலியால் No அடிக்க வேண்டும்.

சொதப்பல்ஸ்!!!


நீங்க ஏதாவது கவனிச்சீங்களா?

Sunday, March 22, 2009

Y கவிதா Y Y Y?

கவிதா, சமீபத்தில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் கண்ட காட்சியை பதிவில் விவரித்திருந்தார்.
அதாவது, ரயிலுக்கு கொடி காட்ட வேண்டிய, கார்டு ஒருத்தர், தான் செய்ய வேண்டிய வேலையை, ஸ்டேஷனில் வேலை செய்யும் கடைநிலை ஊழியரான் ஒரு பெண்ணிடம் செய்யச் சொல்லிவிட்டு, இவர் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாராம்.

இதை தீர விசாரித்து அவர் எழுதவில்லை. தூரத்தில் இருந்து, அவர் கண்ட காட்சியை, கூட்டிக் கழித்து ஆராய்ந்து, இப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் எழுதிய பதிவு.
படம் பிடித்திருக்கும் தூரத்ததப் பார்க்கும்போது, இவர் வேளச்சேரி வழி செல்லும் ரயிலில் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பார் போலும். வண்டி நின்ற இரண்டு நிமிடத்தில், தான் கண்ட காட்சியை அலசி, க்ளிக்கி பதிவிலும் போட்டிருந்தார்.

இந்தக் கேள்வி வர என்ன காரணம்?

சாதாரண உடை அணிந்த ஒரு பெண் ஊழியர், இந்த பொறுப்பான வேலை செய்வதை, நம்மால் ஏன் உண்மை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை?

sometimes looks can be deceivingனு கரெக்டாதான் சொல்லிருக்காங்க.

படத்தை நான் ஆராய்ந்த வரை, அந்தப் பெண்மணி அந்த வேலையை செய்யப் பணிக்கப்பட்டவர்தான். அவர் கையில் ரெண்டு கொடியும் இருக்கு.

வேலையை செய்யாமல், ஒய்யாரமாய் ஓய்வெடுப்பதாய் சொல்லப்படும் நபர், ஒரு ஓரத்தில், சூட்கேசுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பா ஒரு traveller, கார்டு அல்ல.

Y கவிதாஜி Y?

ஃபோட்டோ போட்டு, ஒருவர் மீது குற்றம் சுமத்தும் முன், கொஞ்சம் ஆராய்தல் நலம்!
அந்த தொப்பை சாருக்கு ஒரு மன்னிப்பு பதிவு போட்டுட்டா, எல்லாம் சரியாப் போயிடும் :)

பி.கு: சான்ஸ் கெடச்சா வுடமாட்டோம்ல ;)

ஜெய் சன்னகேசவா! ஆஸ்கார் தரத்தில் ஒரு குலுதெ படம்!

இதற்கு முன் இப்படி வந்ததேயில்லை. ஆபத்தின் விளிம்பில் இருக்கும் துரியோதனன். துரியோதனன் இடுப்பில் வெடிகுண்டு?
கட்டுண்டு கிடக்கும் ஹீரோ.
காப்பது எப்படி? கீழே சிதறிக்கிடக்கும் மூன்று துப்பாக்கி குண்டு.
துரிதமாய் செயல்படுகிறார் ஹீரோ.
சடால் என்று கீழே விழுந்து, புல்லட்டை தன் வாயால் பச்சிளம் பாலகனைப் போல் கவ்வி எடுத்து.. அடாடாடாடாடாடா.. சமீபத்தில் பார்த்த Shoot'em Upல் கூட இவ்வளவு தடாலடி கவுந்தடி சீன்கள் இல்லை.
சிம்ப்ளீ சூப்பர்ப்!


மேலே துப்பாக்கி புல்லட் என்றால். இனி, நிஜ புல்லெட்டு. ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் ஏற ஹீரோவின் பைக் துரத்தல்.
லாவகமாக ரயிலின் மொட்டை மாடியில் மைக்கில் தாவி, கம்பார்ட்மெண்ட் டு கம்பார்ட்மெண்ட் எக்கி, ரயிலுக்கு முன்னால் ஜிவ்வென்று இறங்கி, ஸ்ஸ்ஸ். கலக்கல்!
ஆராயாதீங்க, அனுபவிங்க்!



Cliffhangerல் தேவயில்லாமல் மலையில் ஏறி அங்கும் இங்கும் தாவுவார் சில்வஸ்டார் ஸ்டலோன்.
இங்கே, கயிறும் இல்லை, கவலையும் இல்லை.
அஞ்சாநெஞ்சன், நமது ஹீரோ, சுவாய்ங்க் சுவாய்ங்க் என்று மலையேறும் அழகோ அழகு. ஆபத்தில் சிக்கியிருக்கும் முயலை டைவ் அடித்து பிடிக்கும் லாவகம். நச்!



கடைசியாக, ஜெய் சென்னகேசவா! இதை நீங்க ஏற்கனவே பாத்திருக்காட்டி, நீங்க இதுநாள் வரை இழந்ததை விவரிக்க வார்த்தகள் பத்தா.
குறிப்பா, ஹீரோ மீசையை சுண்டிவிடும் அழகு, காணக் கண் கோடி வேணும்!
எஞ்சாய் மாடி!


வில்லுக்கு ராமரு
வில்லனுக்கு ராவணரு
டீக்கு நாயரு
சீனுக்கு நயன்தாரு
பசிச்சா சோரு
ஸ்டைலுக்கு வேர யாரு?

நம்ம பாலகிருஷ்ணகாரு,
நுவ்வே சாட்சாத் ஹீரோவுலு!
நுவ்வுக்கு ஜனகோடி செப்புது வந்தனமுலு!

வாழ்க வளர்க!

Thursday, March 19, 2009

ஏதோ வீட்டை 'ஜெ' வீடாக்கிய இணையம்

இணையம், பல கோடி முகங்களும், பல கோடி குணங்களும் நிறைந்த இடம்.
இதில், ஏறத்தாழ 92.3% விஷயங்கள் டுபாங்கூர்/கப்சா/கழிசடை/வெத்து வகையைச் சேர்ந்தவை.
அபரிதமான சக்தியை அதனுள் அடக்கியிருந்தும், மேற்சொன்ன இத்யாதி இத்யாதி மேட்டர்களால், அதன் முழுப்பலனும் இன்னும் கிட்டவில்லை.
இனி வரப்போகும் 930 ஆண்டுகளில் அது கிட்டப் போவதும் இல்லை.

* ஹாட்மெயிலை திறந்தால், என்னை லாட்டரி கோடீசுவரனாக்குவதாக வரும் 17 மடல்கள்;
* யாஹூவைத் திறந்தால், நைஜீரியாவில் உயிர் விட்ட உயர்திரு.டேனியல் டென்சொங்கப்பாவின், பலகோடி ரூவாய் பெறுமானமுள்ள டயமண்ட் குவாரிக்கு, வாரிசு இல்லாததால், $2140 பணத்தை செலுத்தி, என்னை வாரிசாக்கும்படி வற்புறுத்தும் 13 மடல்கள்;
* ஜி.மெயிலை திறந்தால், வீட்டிலுருந்தபடி, தினசரி 30 நிமிடம் செலவு செய்து, இணையவழி வேலை செய்தால், மாதம் சில லட்சங்கள் ஈட்டலாம் வகை 9 மடல்கள்;

ஹ்ம். இதையெல்லாம் பொறுத்துக்கலாம்.

இதுக்கு மேல பெரிய கொடுமை, ஏழு மலை, ஏழு கடல் கடந்து அம்பேரிக்கா வந்தும், இங்குள்ள சீல பிரகஸ்பதிகள், திருமலையான் ஃபோட்டோவை மடலில் அனுப்பி, இத்த படிச்சுட்டு இன்னும் எட்டு பேருக்கு அனுப்பலன்னா, குடும்பம் கந்தலாயிடுங்கர ரீதியில் வரும் மடல்கள்.

இந்தக் கொடுமையின் நடுவில் வரும் ஒரே நல்ல மேட்டரு, சில உருப்படியான ஜாலியான மேட்டரு. சமீபத்தில் வந்த கலைஞரின் டைரிக் குறிப்பு ஒரு உதாரணம்.

இணையத்தின் வீச்சு இன்னும் நம்ம ஊர்ல பெருசா இல்லை. நகரவாழ் மக்களிடையே, கிட்டத்தட்ட 6% ஆளுங்க கிட்ட இணைய கணெக்ஷன் இருக்கும். கிராமத்தில், இது .01% கிட்டதான் இருக்கும்.

இணையத்தின் துணையில்லாமலே, டகால்ஜி செய்வதில் நுங்கெடுத்தவர்கள், இனி வரும் காலங்களில், இணையத்தின் துணை கொண்டு, ரூம் போட்டு யோசிச்சு என்னென்ன செய்வாங்களோன்னு நெனச்சா, திகிலாவுது.

புள்ளையார் பால் குடிச்சது, இணையம்னா எங்கே இணையணும்னு கேட்ட காலத்திலேயே, ரெண்டே நாள்ள காஷ்மீர்லேருந்து கன்யாகுமரி கடந்து, சிங்கை, அமெரிக்காவரை புரளி பரவி எல்லோரையும் சொம்பும் ஸ்பூனும் தூக்க வைத்தது.

இணையம் முழுவீச்சில் உபயோகப்படுத்தப்படும் காலங்களில், தேங்கால பாம், தக்காளீல ஜாம் புரளிகளெல்லாம் ஒரே நொடியில் பரப்பப்படும் அபாயம் இருக்கு.

சரி, இப்ப என்னாத்துக்கு, வெள்ளிக்கெழம அதுவுமா, ஏதோ நோன்பு காலத்துல ஓதர மாதிரி, ரொம்ப நல்லவன் வேஷம் போடரன்னு கேக்கறீங்களா?

ஒண்ணுமில்லை ப்ரதர், கொஞ்ச நாளுக்கு முன்னாடி, இது பில் கேட்ஸ் வீடில்லைன்னு ஒரு வரலாற்று முக்கியத்டுவம் வாய்ந்த பதிவிட்டிருந்தேன்.
நான் மேற்சொன்ன, 'சுவாரச்யமான' மடல் வகையைச் சேர்ந்த ஒரு ஈ.மடல் அது. நண்பரிடமிருந்து.

ரொம்ப அருமையான ஒரு பங்களாவின் படங்களுடன் வந்த மடல்.
அந்த வீடு, ஜெ.ஜெ'வின் கொடநாடு பங்களா என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
மிக அருமையாக, ஷாஜஹான் அரண்மனை கணக்கா இருந்தது, வாய் பிளக்க வைத்தது.
தலைவிக்கு அப்படியொரு வீடு கட்டுவது பெரிய விஷயமில்லை என்பது தெள்ளத் தெளிவாக மண்டையில் பட்டாலும், படங்களில் ஏதோ வில்லங்கம் இருப்பதாய் தெரிந்தது.
'மழை நீர் சேகரிப்பை' அமல் படுத்திய தாணைத் தலைவி என்ற ஒரே காரணத்துக்காக, களமிறங்கி, தலைவிக்காக ஐந்து நிமிடம் ஒதுக்கி, புலன் விசாரணையைத் துவங்கினேன்.
ஒரு படத்தை, கூர்ந்து ஆராய்ந்த போது, இது தங்கத் தலைவியின் மீது அபாண்ட கரி தேய்க்கும் முயற்சி என்பது எமக்கு புலனானது.
அது இஸ்லாமியர் யாருக்கோ சொந்தமான வீடு என்பது படத்தில் இருக்கும் ஒரு உருது படத்தை பார்த்ததும் புரிந்தது.

அந்தப் படங்களை பதிவில் ஏற்றி, சக வலைஞர்களுக்கு, ஸ்லம்டாக் மில்லியனர் அனில் கபூர் கணக்காக, இது யாரு பங்களான்னு கேட்டபோது, தயாநிதி மாறன் முதல், ஷாருக்கான், முஷாரஃப் வரை அனைவரின் பெயரும் அலசி ஆராயப் பட்டது.
ஆனா, ஆச்சரியமான ஆச்சரியம், ஒருத்தரும், ஜெ.ஜெ பேரை சொல்லவே இல்லை.

இதுலேருந்து என்னா தெரீதுன்னா, அநேகமா எல்லாரும், ஜெ.ஜெ வை மறந்துட்டோம்.

அவங்க பெரிய பெரிய வெகேஷன் எடுத்துக்கிட்டு பங்களாவில் ஓய்வெடுத்த நேரம், திருமாக்கள் உ.விரதம் இருந்தும், வை.கோ சும்மானாக்கும் எத்தயாவது பேசிக் கொண்டும், ராமதாசுகள் அறிக்கை விட்டுக் கொண்டும், கலைஞர்கள் டைரிக் குறிப்பு எழுதி ப்ரபலப்படுத்தியும், சுவாமிகள் முட்டையடி வாங்கியும், சேர்ந்தவர்கள் பிரிந்து கொண்டும், பிரிந்தவர்கள் சேர்ந்து கொண்டும், நம் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

ஆனா, ஜெ.ஜெ காணாம போயி மொத்தமா ப்ரபல்யத்தை இழந்துட்டாங்க.

எலெக்ஷன் டைம் ஆரம்பிச்சாச்சுன்னு யாராவது சொல்லியிருக்கணும். அதான், தூசு தட்டி எழுந்து சென்னைக்கு வந்து அவங்களும் அ.உ.விரதம் இருந்து, எனக்கு இன்னும் அரசியல் மறக்கலை, நானும் உள்ளேன் ஐயான்னு சொல்லியிருக்காங்க.

எல்லாம் சரி, அந்த பங்களா யாருதுங்க? ஷாருக்? முஷாரஃப்?

யாருதா இருந்தாலும், இம்புட்டு செலவு செஞ்சு கட்டியிருக்கீங்க, பாத்ரூம்ல ஒரு நல்ல Sony LEDடிவியா வாங்கி வைங்க, இன்னும் எதுக்கு பெத்த CRT டிவி?

(பி.கு: Sonyன் LED டிவியை இங்க ஒரு கடைல பாத்தேன். அடேங்கப்பா, டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்சுங்க. ப்ளேடு சைசுல இருக்கு, என்ன துல்யமா படம் தெரியுது. ஹ்ம்!)

ஹாப்பி வெள்ளி!


---- ---- ----

பி.கு: சமீபத்தில் நான் படித்து லயித்துப் போய, Sanjai காந்தியின் Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ - நெல் - ஆரம்பம் முதல் அறுவடை வரை, படிச்சுப் பாருங்க. அமக்களம்.

பி.கு2: நாட்டுக்கு நற்செய்தி சொல்லும் பலரும், இந்தத் தேர்தல் கணத்தில், நாட்டுக்கும் ஊருக்கும் உபயோகமா எதையாவது செய்யணும். நம்ம களத்தில் இறங்கி தேர்தல் பணி எல்லாம் பண்ண முடியாது. அட்லீஸ்ட், உங்க சுற்றத்தீல் இருப்பவர்களை, கண்டிப்பா வோட்டு போடச் சொல்லலாம். செய்யுங்க.
சந்தோஷின் இந்தப் பதிவைப் பாருங்க. நீங்களும் பதிவப் போடுங்க. Please vote in this election and encourage everyone to vote, for a change!

---- ---- ----

Wednesday, March 11, 2009

Gooooooooogle - மானம் காக்க உஷாரு!

நம்மில் 99% எப்படியும் கூகிள் அடிமைகள் தான்.
நான் ஒரு நாளைக்கு குறைந்தது 50 தடவையாவது கூகிளில் எதையாவது தேடாம இருந்ததில்லை.
நல்லா CNN.com மாதிரி மனப்பாடமான பக்கங்களுக்குக் கூட, கூகிளில், CNNன்னு அடிச்சு, அதில் வரும் முதல் உரலுக்கு செல்லும் வழக்கம் என்னிடம்.
கிட்டத்தட்ட, அடிக்டட் டு கூகிள்.

கூகிளும் ஒண்ணும் சாதாரணமில்லை. மிகத் துல்லியமான சேவை தந்துக்கிட்டு இருக்கு, எல்லா தளத்திலும். இவர்களின், தேடுதல், மேப் வழிகாடி, ஈ.மடல், செல்பேசி சாஃப்ட்வேர் எல்லாமே அசத்தல் ரகம்.

ஆனா, இவர்களின், ஆளுமையும் புத்திசாலித்தனமும் விரிவடைய விரிவடைய நம்முடைய விருப்பு வெறுப்புகளெல்லாம் இரண்டாம் பட்சமாக மாறிவிடும் அபாயம் பெருசாயிட்டே இருக்கு. கொஞ்ச காலத்துல, இணையதளம்னாலே, கூகிள் சொல்ரதுதான் சட்டம்னு ஆயிடும் போலருக்கு.
ஒரு நாள் இவர்களின் தளங்கள் வேல செய்யலன்னா, கத கந்தலாயிடும். லீவு போட்டு, வூட்டுக்கு போரத தவிர வேற வழி தெரியாம போயிடும்.

சமீபத்தில் வந்த அறிவிப்பு, புருவத்தை உயர்த்த வைக்கும் ரகம்.

கூகிளில் சாதாரணமா எதையாச்சும் தேடினா, வலப்பக்கம், உங்க ஐட்டத்துக்கு ஏத்த மாதிரி விளம்பரங்கள் வரும்.
உதாரணத்துக்கு "used car"னு அடிச்சீங்கன்னா, வலப்பக்கத்தில் அதற்கேத்த மாதிரி விளம்பரங்கள் வரும்.

இது பழே மேட்டரு.

இப்ப என்னா சொல்றாங்கன்னா, நீங்க அப்ப அடிக்கரது மட்டும் பாக்காம, நீங்க எப்ப என்ன அடிச்சிருந்தாலும் அதையும் கணக்குல வச்சுக்கிட்டு, விளம்பரங்கள் காட்டப்படும்.
அதாவது, உங்க தேடுதல் பயக்க வயக்கத்தை முழுசா கிரஹிச்சு, விளம்பரங்கள் காட்டப்படும்.

உதாரணத்துக்கு, நீங்க உங்க லேப்டாப்புல பொழுதன்னைக்கும் பதிவெழுதிக்கிட்டு, நெட்ல கண்டதையும் மேஞ்சுக்கிட்டு திரியறீங்கன்னு வச்சுப்போம்.
வீட்ல இருக்கும்போது, "பலானது"ன்னு தேடித் தொலையறீங்கன்னு வச்சுப்போம். கூகிளுக்கு நீங்க ஒரு அல்பம்னு தெரிஞ்சுடும். அதுக்கேத்த மாதிரி வலப்பக்கம் ஏதாவது அல்ப்பமான விளம்பரம் வரும். வீட்ல இருக்கீங்க சரி, ஜொல்லு விட்டோமா போனோமான்னு இருந்திடுவீங்க.

இப்ப, அலுவலகத்துக்கு போனதும், லேப்டாப்பை, ப்ரொஜெக்டர்ல போட்டு உங்க சக ஆணி எக்ஸ்பேர்ட்ஸுக்கு ஏதோ கத சொல்றீங்க.
உடன் இருக்கும் ஆணி மாஸ்டர், "எலேய், இந்த ஆணி அளவு தப்பு, கூகிள்ள தேடிப் பாரு, வேர யாராச்சும் புடிங்கி வச்சிருப்பாங்"கறாரு.
நீங்களும், நல்ல புள்ளையா, கூகுள்ள போய் "ஆணி புடுங்கரது"ன்னு தேடி, விடை கிடைக்குதான்னு பாப்பீங்க.

இப்ப வலப்பக்கம் விளம்பரம் என்னா வரும்?
ஏற்கனவே, கூகிளுக்கு நீங்க ஒரு அல்ப்பம்னு தெரியும்.
ஆனா, கூகிளுக்கு நீங்க வீட்ல கலீஜு, வெளீலு சூரஜ்ஜுங்கரதெல்லாம் தெரியாது.
கூகிளைப் பொறுத்தவரைக்கும், கண்டதும் கலந்த கலவை நீங்க.

ஸோ, "ஆணி புடுங்கரது" தேடும்போது, வலப்பக்கம் விளம்பரத்தில்,
"ஆணி புடுங்கவது இப்படிதான்"
"பலானதை ஆணியில் மாட்டுவது எப்படி"
"பலானது பலானது"
இவையெல்லாம் கலந்து வரும்.

ஆணி எக்ஸ்பார்ட்ஸ் அவங்க லேப்டாப்புல பண்ணாலும் அப்படித்தான் வருங்கரது வேர விஷயம்.
ஆனா, அந்த நேரத்துல, உங்க தலை மேல மட்டும் தான் ஒளிவட்டம் அடிக்கும்.

நீங்க ஒரு புழு மாதிரி நெளிய வேண்டியதாயிடும்.

இதிலெல்லாம் இருந்து தப்பிக்க என்ன வழி?

சின்ன சின்ன வழியிருக்கு.

கூகிள் பக்கத்தில் போய், "ஐயா, நான் என்னெல்லாம் தேடறேங்கரத கணக்குல வச்சுக்கிட்டு விளம்பரத்தை போடாதே"ன்னு முன் ஜாமீன் வாங்கலாம்.

மற்ற வழிகளெல்லாம் இங்க போய் படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
http://www.pcworld.com/article/161096/googles_behavioral_ad_targeting_how_to_reclaim_control.html

:)

photo: fropper.com

Tuesday, March 10, 2009

புருனோவுக்கு நன்னி!

twenty-twenty மோதல் நடந்து முடிஞ்ச மாதிரி இருக்கு.

ஆனா, நல்ல விஷயம், இது ஜாலியான கருத்ஸ் மோதல்.

இன்னும் நல்ல விஷயம், நம்ம இணையதளங்கள், இப்பெல்லாம் ரொம்ப ஆரோக்யமா செயல் படுது. தனி மனித தாக்குதல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிடுச்சு. (மரத்தை தொட்டுக்குனேன்).

எனக்கு மெத்தப் பிடித்த, 'கிங்'கின் ஒரு இசை ப்ரவாகத்துடன் முடிச்சுக்கறேன்.

புருனோவுக்கு நன்றி கூறி, அவருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். :)

Bruno sir, thanks for the active participation.

Monday, March 09, 2009

Y புருனோ Y Y Y?

டாக்டர் புருனோ என்ற பதிவரை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
அருமையான, அறிவுபூர்வமான, அறிவியல் பூர்வமான, மருத்துவப் பூர்வமான, உபயோகமான, உருப்படியான, விஷயமுள்ள, சுவாரஸ்யமான, ஆக்கபூர்வமான, தேவையான, பொறுப்பான, தீவிரமான,
பலப் பல பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.

'கட்டாய கிராமப்புற சேவை' பற்றிய இவரது ஆழமான பதிவுகளே இதற்கு சான்று.

இவ்ளோ விஷயம ஞானமுள்ளவரு, சமீபகாலமா ஒரு இசை அமைப்பாளர் பத்தி எங்க என்ன பதிவு வந்தாலும், தவறாமல் போய், அங்க, அவரை ஃப்ராடு, அது இதுன்னு, அர்ச்சனை பண்ணிட்டு வந்துடறாரு.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு பின்னூட்டம் இங்கே:
http://pitchaipathiram.blogspot.com

எல்லாருக்கும் அவங்கவங்க கருத்து சொல்ல கண்டிப்பா உரிமை இருக்கு.

ஆனா, இது தொடர்ச்சியா பல இடத்தில் பார்த்த போது, எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்குது. அதுவும், விரல் விட்டு எண்ணக் கூடிய, ஆழமான கருத்துக்களை பதிபவர் மத்தியில் இருக்கும் ஒருவர், இப்படி செய்வது, பெரிய கேள்விக்குறியை என் தலை மேல் போட்டது.

Y Bruno sir? ஏன் இந்த வெறுப்பு எங்காளு மேல?

:(

பி.கு1: ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சேன். கேட்டுட்டேன். அவருகிட்ட தனி மடல்ல ஏன் கேக்கலன்னு, இந்தப் பதிவ அடிச்சு முடிச்சதும் யோசிச்சேன். இதுவரைக்கும் ஆராஞ்சு அடிச்சது வீணாயிடும். ஸோ, பொதுவில் வைக்கிறேன் ;)
பத்தவச்சுட்டியே பரைட்டை என்ற ரீதியில், பின்னூட்டங்கள் மட்டுருத்தப் படும் ;)
Bruno, seriously, don't you think it is a bit odd, calling our king, a fraud?

பி.கு2: நாட்டுக்கு நற்செய்தி சொல்லும் பலரும், இந்தத் தேர்தல் கணத்தில், நாட்டுக்கும் ஊருக்கும் உபயோகமா எதையாவது செய்யணும். நம்ம களத்தில் இறங்கி தேர்தல் பணி எல்லாம் பண்ண முடியாது. அட்லீஸ்ட், உங்க சுற்றத்தீல் இருப்பவர்களை, கண்டிப்பா வோட்டு போடச் சொல்லலாம். செய்யுங்க.
சந்தோஷின் இந்தப் பதிவைப் பாருங்க. நீங்களும் பதிவப் போடுங்க. Please vote in this election and encourage everyone to vote, for a change!

Sunday, March 08, 2009

Memento (ஆங்கில கஜினி?) - திரைப் பார்வை

கஜினி படம் வந்ததும், இந்தப் படம் Memento என்ற ஆங்கிலப் படத்தின் காப்பின்னு பல இடங்களில் சொல்ல ஆரம்பிச்சிருந்தாங்க.
கஜினியை,முதலில் இந்தியிலும், பின்னர் தமிழிலும் பார்த்துவிட்டு, Memento எப்படா கையில் கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருந்தேன்.
உண்மையை கண்டறிந்து சொல்லும் தார்மீகப் பொறுப்பு தலை மேல் ஒக்காந்ததால், ஏகப்பட்ட தலை வலி.
வலி நிவாரணியாக, எங்க ஊர் லைப்ரரில, இந்த டிவிடி ஆப்டுது.
நேத்துதான் பாத்தேன்.
சுடச் சுட கருத்ஸை சொல்லாட்டி, தல சுக்கு நூறா வெடிச்சிடும்னு நான் நம்பரதால, உடனே தட்டச்ச ஆரம்பிச்சுட்டேன்.

first things first. கஜினி Mementoவின் காப்பியா?

கண்டிப்பா லேது!

முருகதாஸ் Mementoவிலுருந்து எடுத்துக்குட்ட விஷயம் ரொம்ப கம்மி.

ஹீரோக்கு short term memory loss.
மனைவியைக்/காதலியை கொன்றவனை பழிவாங்கணும்.
ஒடம்புல பச்சக் குத்தி வச்சுப்பான்.
எல்லாத்தையும் போலராய்டு கேமரால பதிஞ்சு வச்சுப்பான்.

இம்புட்டுதான், Mementoவிலுருந்து, முருகதாஸ் எடுத்துக்கிட்ட விஷயம். இந்த மூண வச்சுக்கிட்டு, கஜினியை நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி, அருமையா கடை, திரைக்கதை அமைச்சு கொடுத்திருக்காரு. அவருக்கு ஒரு சபாஷ் சொல்லிட்டு, இனி Mementoவை பாப்போம்.

இன்னொரு விஷயம், Mementoக்கும் கஜினிக்கும் ஒரு பெரிய வித்யாசம் இருக்கு. அதை கடைசீல சொல்றேன்.



அருமையான படம். ஹீரோவா நடித்திருக்கும் Guy Pearce அலட்டிக்காம நடிச்சிருக்காரு. ஆரம்ப சிலக் காட்சிகளில், என்னடா இவரு, பழி வாங்கப் போறேங்கறாரு கொஞ்சமாவது மூஞ்சீல அதக் காட்டவேணாமா? ஒரு கோவம் ஒரு கத்தல் ஏதாவது இருக்க வேணாமான்னு தோண்ற அளவுக்கு அலட்டிக்காம அமைதியா நடிச்சிருக்காரு.

முதல் பத்து நிமிஷம், கொட்டாவி விடர மாதிரி தான் ஆரம்பிக்கறாங்க. அப்பரம், இவங்க கதை சொல்லும் பாணி புரிஞ்சதும், அடுத்தது என்னன்னு ஒரு எதிர்பார்ப்பு வந்துடுது.

படத்தின் பெரிய பலம், கதை சொல்லப்பட்டிருக்கும் விதம்.
முதல் சீன்லேருந்து, கடைசி சீனுக்கு பயணிக்கும் மற்ற படங்கள் போலல்லாமல், கடைசி சீன்லேருந்து, முதல் சீனுக்கு பயணிக்கும் எடிட்டிங். அட்டகாசமான புத்திசாலித்தனம் இது.

ரெண்டு மூணு தடவை பாத்து ரசிக்கக் கூடிய வகையில் இருக்கு, இந்த விதமான எடிட்டிங் நுட்பம். வேர ஏதாவது படம் இந்த மாதிரி வந்திருக்கான்னு எனக்கு நினைவிலில்லை. தெரிஞசா சொல்லுங்க.

ஹீரோ, முதல் சீனில் ஒரு பாழடஞ்ச பில்டிங்கில் ஒருத்தர கூட்டிக்கிட்டு வந்து, போட்டுத் தள்ளிடுவாரு. அதுக்கு அடுத்த சீன்ல, அந்த பில்டிங்குக்கு எப்படி/ஏன் வராருங்கரது இருக்கும். இப்படியே பின்னோக்கி நகர்ந்து கொண்டே வரும்.

ஹீரோவுக்கு இருக்கும் short term memory lossஐ சில பேர், அவங்களுக்கு சாதகமா பயன் படுத்திப்பாங்க. அந்தக் காட்சிகளெல்லாம் இந்த பின்னோக்கி நகர்வதால் 'நச்'னு அமஞ்சிருக்கு.
ஹீரோவுக்கு, உதவுவதாய் வரும் ஒரு பெண், ஒரு சீனில், மூக்கில் ரத்தத்துடன் வந்து ஹீரோகிட்ட, என்ன ஒரூத்தன் அடிச்சுட்டான், நீ போய் அவன திரும்பி அடிக்கணும்னு சொல்லுவா. இவனும் போய் அந்த ஆள அடிச்சுட்டு வந்துடுவான்

அதுக்கு முன்னாடி சீன்ல பாத்தா, இந்தப் பொண்ணு, ஹீரோவை ரொம்பக் கேவலமா பேசி எரிச்சல் மூட்டி, ஹீரோவின் கையாலேயே தன் மூக்கில் ஒரு குத்து விடும்படி செஞ்சிருப்பா. ஹீரோவுக்குதான் short term memory lossஆச்சே, தான் தான் அடிச்சேன்னு ஞாபகம் இருக்காது, அடுத்த சீன்ல, எவனோ என்ன அடிச்சுட்டான், அவன போய் நீ அடின்னு சொன்னதூம்,போய் வேலைய முடிச்சுட்டு வந்துடுவான்.

இப்படி ரசிக்கும்படியான பல காட்சிகள் படத்தில்.

இந்தப் படத்தின் பெரிய திருப்புமுனை ( படம் பாக்கலாம்னு நெனைக்கறவங்க, இத்தோட அப்பீட் ஆயிக்கோங்க. இல்லாட்டா, சஸ்பென்ஸ் ஒடஞ்சுடும் )
....
......
........
இந்த படத்தில் ஹீரோவை கடைசியில் anti-ஹீரோவாக முடித்திருக்கும் டெக்னிக்.

வில்லனை, ஒரு போலீஸ்காரர் துணையுடன் ஹீரோ எப்பவோ புடிச்சு போட்டுத் தள்ளியிருப்பாரு. ஆனால், அவனை சாகடிச்சதையே மறந்திருப்பாராம்.
அதனால, திரும்ப திரும்ப வில்லன் பெயர் கொண்ட மற்றவர்களை தேடிப் போட்டுத் தள்றதையே வேலையா செஞ்சுக்கிட்டு இருப்பாரு.
ஒரு கட்டத்தில், இவர் வாழ்க்கையில் இருக்கும் ஒரே 'பிடிப்பு', இந்த சுவாரஸ்யமான வில்லன் வேட்டை தான் என்கிற லெவலுக்கு வந்துடுவாரு.

உடன் இருக்கும் போலீஸ்காரரும், உண்மையை அப்பப்ப எடுத்துச் சொல்லி, ஹீரோகிட்ட, வில்லனை தான் சாகடிச்சாச்சே, ஊரை விட்டுப் போய் வேர பொழப்பப் பாருன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.
ஒரு கட்டத்தில், இந்த போலீஸு, நம்ம சுவாரஸ்யமான வேட்டையில் குறுக்கே நிக்கரான்னு, அவனையே, 'வில்லன்'ன்னு பச்சை குத்திக்கிட்டு கடைசில போட்டுத் தாக்கிடறாரு.
முதல் சீனில், இந்தப் போலீஸை சாகடிக்கரத காமிப்பாங்க. ஆனா, படம் முழுக்க, இவரு ஹீரோ கூடவே சுத்திக்கிட்டு இருப்பாரு. இவன் தான் வில்லனோன்னு ஒரு சஸ்பென்ஸ் கடைசி வரைக்கும் அவிழ்க்காமல் அருமையான நகர்வு.

பத்தாம் வகுப்பில், ஷெர்-ஷா-சூரி'யின் வீரப்ரதாபங்களை எழுதுங்கர கேள்விக்கு பக்கம் பக்கமா கைவலிக்க எழுதரமாதிரி, நானும் அடிச்சுத் தள்ளிட்டேன். I dont think i made justice, in depicting the scenes from the movie ;)

so, படம் பாக்காதவங்க, கண்டிப்பா தேடிப் பிடிச்சு பாருங்க.
கண்டிப்பா ரசிப்பீங்க!

பி.கு: ஆங்கில ரெவ்யூ, புகழாரங்கள் இங்கே
Consensus: Memento's fragmented, complex narrative is skillfully executed, keeping audiences guessing. Overall, critics find it to be a highly original, clever movie.

Thursday, March 05, 2009

அருந்ததி - పాక్కలామా ?

அருந்ததின்னு ஒரு 'குலுதெ' படம் எங்க ஊரு தியேட்டர்ல செக்கப் போடு போடுது!

பாக்கலாமா? పాక్కలామా ?
சால பாகவுந்தியா?

செப்புங்க ப்ளீஸ்! just $5 தானாம் :)

Monday, March 02, 2009

இளையராஜா felicitating Oscar ரஹ்மான் video - காணக் கண்ணாயிரம் போதாதே..

புகைப்படங்கள் எங்கையும் கிடைக்கல்ல?

சென்னை விசிட் - உதவும் கரங்கள்

நாடோடி வாழ்க்கை ஆரம்பிச்சு சில பல வருஷம் ஆயிடுச்சு. கல்லூரி படிப்பின் போது, we change lives என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அப்பப் ப்ரபலமா இருந்த aptechல் சேர்ந்து ஆணி பிடுங்கக் கத்துக்கிட்டது இந்த அளவுக்கு வாழ்க்கையை மாற்றி அமைக்கும்னு யாரும் நெனச்சிருக்க மாட்டாங்க. கல்லூரி, அதுக்கப்பரம் உள்ளூர் வேலை, அதைத் தொடர்ந்து, மும்பை, டில்லி, சிங்கை என சுற்றி, கலிஃபோர்னியாவில் நகராம ஒக்காந்து சில பல வருஷமாயிடுச்சு.
ஆனாலும், ஒவ்வொரு வருடம், சென்னை போவது, தடங்கலில்லாமல் நடக்குது.
11 மாசம் முடிஞ்சதும், கை கால் எல்லாம் ஆட ஆரம்பிச்சுடும்.
ஊருக்கு போயிட்டு வந்தால்தான் ஆடரது நிக்கும்.

வருஷா வருஷம் போவதால், சென்னையில் நிகழும், பெரிய பெரிய மாற்றங்கள், strikingஆ எனக்கு தெரிஞ்சதில்லை.
ஆனாலும், இந்த முறை சென்றபோது, கத்திப் பாரா ப்ரிட்ஜும், ஏர்ப்போர்ட்டு ப்ரிட்ஜும், ரொம்பவே அசத்திடுச்சு.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பாத்த எம்.ஐ.டி ப்ரிட்ஜை, ஜூஜூபி ஆக்கிடுச்சு, கத்திப்பாரா.

இந்த விஷயங்களையெல்லாம் ஜரூரா, திட்டம் போட்டு, செஞ்சு முடிக்கரது யாரா இருந்தாலும், அவங்களுக்கு என் வந்தனமு!

இதையெல்லாம் தவிர, இன்னும் பலப் பல முன்னேற்றங்கள், சென்னையில் நடந்து வருகிறது.
T.R.Baluவும் தன் பங்குக்கு நெறையவே ரோடும், பஸ் ஸ்டாப்பும் கட்டறாரு. கலக்கல் பாலு! தொடரட்டும் பணி!

எவ்வளவோ பணிகள் நகரைச் சுற்றிலும் நடக்கரது ரொம்ப சந்தோஷத்தைத் தந்தாலும், மெயின் ரோட்டுக்கு இரு பக்கமும் உள்ள ஊர்களின் சாலைகள், தார் பாத்து பல வருஷம் ஆயிடுச்சு. குறிப்பா எங்க ஊர் ரோடு பாத்து, 7 வருஷம் ஆயிடுச்சு.
கொஞ்சம் கூட ப்ளானிங் இல்லாமல், ரோட்டைத் தோண்டுவதும், அப்படியே விட்டு விடுவதும் ரொம்பக் கேவலம்.

ரோடு போடப்படும் மெயின் ரோடுகளும் நான் ஏற்கனவே புலம்பியது போல் மேடாகிக் கொண்டே வருகிறது. இன்னும் கொஞ்ச வருடங்களில், நான் கடவுள் பாதாள லோகம் மாதிரி ஆயிடும் பல தெருக்கள்.

ஆனா, இதுக்கு வெறும் உள்ளூர் முனிசிபல் ஆளுங்களை மட்டும் குத்தம் சொல்லிப் ப்ரயோஜனமில்லை. நம்ம மேல பெரிய தப்பு இருக்கு. யாராவது போய் கேட்டாதான, பொறுப்பில்லாத முண்டங்கள் ஒழுங்கா வேலையை செய்யும்?
யாரும் கேட்க்காததால், போடாத ரோட்டை போட்டு விட்டதாய் சொல்லி, பணத்தை அபேஸ் பண்ணினாலும் பண்ணுவாங்க. தப்பு நம்ம மேலதான்.

ஒரு விஷயம் கவனிச்சேன். இங்க அமெரிக்கால, சொகுசா, நொறுக்குத் தீனி சாப்பிட்டுக்கிட்டு, டிவிடில படத்தை ஒடவிட்டுட்டு, காலை நீட்டிக்கிட்டு, லாப்-டாப்பில் பதிவு எழுதும்போது வரும் வேகமும் ரோஷமும், சொந்த ஊருக்கு போயி இந்த கண்றாவியெல்லாம் கண்கூடா பாக்கும்போது வர மாட்டேங்குது.

மிதமிஞ்சிய சோம்பேரித்தனம், அப்படியே என்னை ஆட்கொள்ளுது அங்க போயிட்டா!
என்ன கொடுமைடா சாமி? எதனால இப்படி? நம்ம ஊரு காத்து அப்படியா? வெயிலா? பொடியா? எது இப்படி அமுக்கி வைக்குது?
எதுவும் இல்லை. நான் அவ்ளவுதான் போலருக்கு.
பொது வாழ்க்கையில் ஒரு மண்ணையும் கழட்ட வக்கில்லா, சுயநல விரும்பி மட்டுமே!
ச! என்ன கேவலமான பிழைப்பு இது?
எப்படி மாத்திக்கரது என்னை? நம்மை? தெரீல! ஆராயணும்!

சுயநலம் இல்லாத, பலப் பல நல்லவங்க, சென்னையிலும் அதன் சுற்றுப் புறத்திலும், சைலண்ட்டா அவங்க வேலையை பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.
அப்படிப்பட்டவர்களில் ஒரு பெருந்தகை, உதவும் கரங்களின் வித்யாகர்.

எல்லா வருஷமும், அவரின் நிறுவனத்தைப் போய் பாக்கணும்னு தோணும். ஆனா, மேலே சொன்ன 'சோம்பேரித்தனம்' சூழ்ந்து, அதை விட முக்கியமான, ஊர் சுற்றுதல், சினிமா பார்த்தல், பீச்சுக்கு போதல்னு, ஒரு மாசம் ஓடிப் போயிடும்.
வழக்கம் போல, கிளம்பும்போது, 'sorry, i couldnt make it. schedule was hectic'னு ஒரு ராகம் பாடிட்டு கெளம்பிடரது.

இம்முறையும், அப்படி இப்படின்னு டயாய்க்கும் வேளையில், நண்பன் ஒருவனின் பிடிவாதத்தால், (மச்சி, உன்ன கார்ல கூட்டிக்கிட்டுப் போய், திரும்ப வீட்ல விட்டுடறேன் வா), உடன் சென்றேன்.

திருவேற்காட்டில் இருக்கும், உதவும் கரங்களின் சில மையங்களைக் காணச் சென்றோம்.

மலர்வனம்னு ஒரு வயதானவர்களுக்கான முகாமும், அதே காம்ப்ளெக்ஸில், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு மையமும், சற்று தள்ளி இன்னொரு கட்டிடத்தில், குழந்தைகள், சிறுவர்கள் மையமும், உதவும் கரங்களே நடத்தும் பள்ளியும் கண்டு வந்தோம்.

அங்க நடந்த விஷயத்தை கோர்வையா எழுத முடியுமான்னு தெரியல. ஒரு ஸ்லைட் ஷோ பாத்த எஃபெக்ட்டுதான் எனக்கு.
தொண்டைக் குழிக்குள்ள ஒரு பெரிய உருண்டை வந்து அடச்சுக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு.
குறிப்பா, அந்த மனநிலை சரியில்லா ஆட்களையும், அவர்களைப் பராமரிக்கும் வாலண்ட்டியர்ஸும் பாத்தா ஒரு நிமிஷம், வாழ்க்கையே சூன்யம் ஆன மாதிரி ஆயிடுது.

சிக்னல்ல பச்சை விழுந்ததும், ஒரு விநாடி நின்னாகூட, பின்னாலிருந்து கத்தும் பல மேன்மக்களின் அவசர வாழ்க்கைய நெனச்சா சிரிப்புதான் வருது.
உதவும் கரங்களை வந்து பாத்தாலே பாதி உலகம் தெளிவாயிடுவங்கன்னு தோணுது.
(ஆனா, என் மாதிரி சுயநலவாதிகளுக்கு, அந்த எஃபெக்ட்டும் ரெண்டு நாளைக்குத்தான். வழக்கம் போல், லாப்டாப், டிவிடி, நொறுக்குத் தீனின்னு வாழ்க்கை சகஜமாயிடும்).

சும்மா சொல்லக்கூடாது, ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர், அசத்தல்.

இது ஆரம்பிச்சு 25 வருஷத்துக்கு மேலாயிடுச்சு.
இங்க வளந்த பசங்களில் பலரே, இங்கு வாலண்டியர்ஸாய் வேலை செய்யும் அளவுக்கு உயர்ந்துடுச்சு.
பல பல பேர், இங்கிருந்து பறந்தோடி, வாழ்க்கையை நல்ல விதமா அமச்சுக்கிட்டிருக்காங்க.

இவர்களின் மையங்களில் வேலை செய்யும் சில இளைஞர்களும், பெண்களும் இங்கேயே ஆதரிக்கப்பட்டு வளர்ந்தவர்களாம். அவர்களின், மெச்சூரிட்டியும், அங்கே வேலை செய்யும் நேர்த்தியும் பார்த்தாலே, உதவும் கரங்களின் தரம் நன்கு புரிகிறது.

குழந்தைகள் காப்பகத்தின், சுத்தமும் பராமரிப்பும் அருமை. ரொம்ப அட்டகாசமா வச்சிருக்காங்க. பொறுப்பா பாத்துக்கராங்க எல்லாரையும்.

நீங்களும், சென்னைக்கு போகும் போது, கண்டிப்பா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடுங்க. போகும் போது, உங்கள் பழைய துணி மணிகள், பொம்மைகள், புத்தகங்கள், இப்படி எதையாவது கொண்டு போய் கொடுத்தா சந்தோஷமா வாங்கிப்பாங்க.
திருவேற்காடு கோயிலின் அருகில் இருக்கிறது இவர்களின் மையம்.
போக முடியாதவங்க, உதவும் கரங்களின் பல முயற்சிகளுக்கு பண உதவி செய்ய இங்கே செல்லலாம்.

மொத்தத்தில், ரொம்ப திருப்திகரமான ட்ரிப்பு.

ஒரே கொடுமை, என் கேமரா கொண்டு போகலை. வெட்டி பந்தா பண்ற மாதிரி ஆயிடுமோன்னு நெனச்சு விட்டுட்டேன். அங்க போனப்பரம் என் நண்பனின் 'ஓட்ட' கேமராவில், கிடைச்சதை லபக்கினேன் ;)

1) முதியோர் காப்பகம் + மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான 'அடைக்கலம்'


2) எவனாவது வரானா? போரடிக்குதே.


3) என்னடா, எதையாச்சும் பேசுவன்னு பாத்தா, ஃபோட்டோ பிடிக்கர.
(ரொம்ப சத்தமே இல்லாம பேசினாரு பெருசு. சினிமா எல்லாம் பாக்கரதுல்லையாம். டிவி எப்பயாச்சும் பாக்கரதோட சரி)



4) சுகவாசிகள். எல்லா இடமும் பஞ்சு மெத்தைதான் இவங்களுக்கு. நாமதான் ஒதுக்கி வச்சிடறோம்.


5) குழந்தைகள் காப்பகம் செல்லும் வழி. செம க்ளீனா வச்சிருக்காங்க.


6) சில தேவதைகள்!






7) Main building. வழிகாட்டும் பெண், இங்கேயே வளர்ந்து, படித்து, வாலண்ட்டியராய் இருப்பவர்.


உதவும் கரங்கள் வித்யாகருக்கும், வாலண்டியர்சுக்கும், நன்கொடை அளிக்கும் அன்பர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்!
தொடரட்டும் உங்கள் பணி!


பி.கு: சென்னை விசிட் அனுபவங்கள், தொடரும். ;)

Sunday, March 01, 2009

செம மேஜிக்கும், அதன் செய்முறை விளக்கமும்

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பப்பப்பப்பட்ட ஒரு அட்டகாசமான மேஜிக் காட்சி கீழே.
ரொம்ப அருமையா இருக்கு. பாத்து அசந்து போங்க.



சூப்பர்ல?

அதன் செய்முறை விளக்கமாம் இது. நம்பும்படியாதான் இருக்கு.


பி.கு: PiTன் மார்ச் போட்டிக்கு தலைப்பு கருப்பு & வெள்ளை:
என் பங்களிப்புப் படம் கீழே ( போட்டிக்கல்ல, சும்மா பார்வைக்கு. போட்டிக்கு சேந்தாலும், கெலிச்சா மாதிரிதான். இப்பெல்லாம் பின்றாங்கல்ல பின்னு. இப்படி வெளீலருந்து, கௌரவமா not-for-contestனு போட்டு தப்பிச்சிக்கிட்டா மீசைல மண்ணு ஒட்டரதுல்லை ;) )