recent posts...

Wednesday, March 25, 2009

சென்னை விசிட் - ஆடாதேடா மனிதா!

சில வருஷங்களுக்கு முன்னாலெல்லாம், யாராவது சென்னை செல்லும் நண்பரை கொண்டு விடணும்னு ஏர்போர்ட் போகும்போதெல்லாம், அடாடா நாம எப்போ போவோம்னு ஒரு ஏக்கம் வரும்.
என்னதான், வருஷா வருஷம் சென்னைக்கு தவறாமல் சென்று கொண்டிருந்தாலும், இந்த ஏக்கம் குறைவதே இல்லை.
ஆனா, ஒவ்வொரு வருஷம் போகப் போக, இந்த ஏக்கத்தின் அளவுகோல் கம்மியாயிக்கிட்டே இருக்கு.

எனக்குத் தெரிஞ்சு, இதுக்கு பெரிய காரணம், சென்னையில் முன்னரிருந்த சுற்றமும் நட்பும் இப்ப அருகாமையில் இல்லை. முக்கால் வாசி பேரு, வேலையின் காரணமாக அசலூரிலோ, திருமணங்கள் முடிந்து வேறு ஊருக்கோ குடிபெயர்ந்து விட்டிருக்கிறார்கள்.

விரல் விட்டு எண்ணக் கூடிய கொஞ்சம் பேர் மட்டும்தான் இன்னும் சென்னை வாசிகளாக இருக்காங்க.
அதுலையும், பீச்சாங்கையில விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டும் தான், சில நண்பர்கள், நான் விடுமுறை செல்லும் காலங்களில், accessibleஆ இருக்காங்க.

நட்பு வட்டத்தில், எல்லோரும் சமமாய் பழகுபவர்கள். ஆனால், எனக்கு 'உயிர்' நண்பன்னு யாரையும் அழுத்தி சொல்லிக்க முடியலை. அந்தளவுக்கு, 'உயிருக்கு உயிரா', நட்பு பாராட்ட படிக்கர காலத்துல வாய்ப்புகள் அமையலை போலருக்கு.
நட்புகளுடன் அடாவடிகளெல்லாம் நிறைய செஞ்சிருக்கேன், ஆனா, இந்த உயிர்நட்பு மேட்டரில் கோட்டை விட்டதாகவே தோணுது.

உயிர் நண்பன்னு ஒருத்தன் இருந்தா அது ஒரு பெரிய பலம் தான்னே தோணுது. என்னையும், யாரும் உயிர்நண்பன்னு சொல்லிப்பாங்களான்னு தெரியல. சில பேர் என் முன்னாடி, என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்டும்போது, சிலர் அப்படி சொல்லிக் கேட்டிருக்கேன். உள்ளூர பெருமையா இருக்கும், ஆனா, அது சும்மா formality சொல்லிக்கராங்களான்னு தெரியல்ல.

நல்ல நண்பனுக்கும், உயிர் நண்பனுக்கும் கண்டிப்பா ஒரு மைல் தூரமாவது காப் இருக்கும்.
எனக்கு நல்ல நண்பர்கள் பலருண்டு.

நல்ல நண்பனுக்கும், உயிர் நண்பனுக்கும் நடுவில் ஒரு ரகம் உண்டென்றால், அந்த ரகத்தில் சோத்தாங்கையில் எண்ணக் கூடிய அளவில் ஒரு ப்ரகஸ்பதிக் கூட்டம் எனக்கும் உண்டு.

பள்ளி பயிலும் காலங்களில், அஞ்சாங்கிளாஸ் முடிந்ததும், குடும்ப சகிதமா சென்னையில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு குடிபெயர்ந்தோம். நல்ல கண்டிப்பான ஸ்கூல்ல படிச்சாதான் தன் பையன் தேறுவான்னு எங்கப்பாவுக்கு அலாதி நம்பிக்கை.

புதிய ஊரில், பக்கத்துவீட்டில் அருமையான ஒரு குடும்பம். என் வயதில் ஒரு குட்டிப் பையன் (கிருஷ்ணன்), அவனுக்கு ஒரு அண்ணன் ஒரு அக்கா.
எனது நல்ல பழக்கங்களில் பல, அந்த குடும்பத்துடன் ஏற்பட்ட பரிச்சயத்தினால்தான் வந்ததாய் எனக்குத் தோன்றுகிறது.

எங்க வீட்ல இருக்கரதை விட, அவங்க வீட்லதான் சதா சர்வ காலமும் இருப்பேன்.
அவங்க வீட்ல எல்லாரும் ராஜா வெறியர்கள். அங்கிருந்துதான், எனக்கும் அந்த 'ராசா' வியாதி வந்துது. எஸ்.ஜானகி மேல் ஈர்ப்பு வந்தது. ஜேசுதாஸின் அருமை புரிஞ்சுது. பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாட்டெல்லாம் ரசிக்கத் தெரிஞ்சுது.
அவங்க வீட்ல அண்ணன் எஸ்.பி.பி, அக்கா சித்ரா, கிருஷ்ணன் மோளம், நானு பக்க வாத்யம். சனி ஞாயிறுகளில், டேப்ரிக்கார்டை ஆண் பண்ணி, அவங்க பாட்டு பாட, நாங்க டப்பாவில் மேளம் வாசிக்க, கச்சேரி அமக்களப்படும்.

கிருஷ்ணனும் நானும் கிரிக்கெட் டீமிலும் இருப்போம். எனக்காக அவன் சண்டை போடுவான். செகண்ட் காஜெல்லாம் வாங்கித் தருவான். நல்ல படங்கள் வந்தா தேடிப் பிடிச்சுக்கிட்டு ஒண்ணா போய் பாப்போம். சஃபையரில் பல நல்ல மலையாளப் படங்கள் பாத்திருக்கோம். geityம் போயிருக்கோம்.

ஒரு நாள் பத்தாவது படிக்கும்போதுன்னு நெனைக்கறேன், எனக்கு ஏதோ ஒடம்பு சரியில்லாம, டீஹைட்ரேட் ஆகி, கால்ல செம வலி. கிருஷ்ணன் ஓடி வந்து, காலெல்லாம் அமுக்கிவிட்டான். இன்னொருமுறை, நான் வீட்டுக்கு வர லேட்டாகிடுச்சு. எங்கப்பாவுடன், இவனும் ராத்திரி கொட்ட கொட்ட முழிச்சு, பல இடங்களுக்கு போய் அலஞ்சு திரிஞ்சு விசாரிச்சான். பாசக்கார பய.

உயிர் நண்பன்னு சொல்லிக்க, ஓரளவுக்கு மேச்சாகரது இந்த கிருஷ்ணன் தான்.

சில வருஷங்களுக்கு முன் வரை சென்னை விசிட் சென்றால், பாதி நேரம் இவனோட சுத்தரதுதான் பொழுது போக்கா இருந்தது. ஆனா, அதுவும் சமீப காலங்களில் மாறிடுச்சு, அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அண்ணனும் தனிக் குடித்தனம் போயிட்டாரு. கிருஷ்ணனும், திருமணமாகி சென்னையிலேயே இன்னொரு மூலைக்குப் போயிட்டான்.
அப்பா அம்மா தனியா இருந்தாங்க.

நானும் கிருஷ்ணனைப் பார்ப்பது குறைந்து விட்டிருந்தது.

கிருஷ்ணனின் அக்கா புருஷன், நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு. பெரிய படிப்பெல்லாம் படிக்கலன்னாலும், சொந்த பிசினஸ் எல்லாம் வச்சிருந்தாரு. சில வருஷங்களுக்கு முன் அவரைப் பாக்கும்போது, ஓஹோன்னு இருந்தாரு, புதிய கார் வாங்கியிருந்தாரு. ஆனாலும், பந்தா எல்லாம் பண்றதில்லை அவரு.
அழகா ரெண்டு பசங்க அவங்களுக்கு. குட்டிப் பொண்ணு ஒண்ணு, அவளுக்கு அழகான ஒரு தம்பி.

அப்பெல்லாம், புதுப் படங்கள், ஆங்கிலப் படங்கள்னு பல படங்களை சனிக்கிழமை இரவுகளில், விசிஆரில் போட்டு எங்களுக்குக் காட்டுவாரு. படம் பாக்கும்போது, வாய்க்கு ருசியா நொறுக்குத் தீனும் சப்ளை பண்ணுவாரு. அருமையான நாட்கள் அவை.

நாலு வருஷத்துக்கு முன்னாடி, என்னை எதேச்சையா ரோட்டுல பாத்தவரு, வண்டிய நிறுத்தி, "என்னாப்பா சர்வேசா, எப்படி இருக்க? வீட்டுக்கெல்லாம் வரமாட்டேங்கர, பெரிய ஆளாயிட்டியோ? அமெரிக்காலருந்து எப்ப திரும்ப வரலாம்னு இருக்க? அஞ்சு கோடி சேத்தா வந்துடுவியா? இங்கையே நிறைய பண்ணலாமே, ஏன் அப்பா அம்மாவ விட்டு இப்படி அலையணும், சீக்கிரம் வந்துடுன்ன" அப்படீன்னு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாரு.
அவர் பிசினஸ் ஓஹோன்னு போயிக்கிட்டிருக்கரது, அவரின் பேச்சிலிருந்தே தெரிஞ்சுது.

All good things come to an endனு சொல்லுவாங்க.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இவரு ராத்திரி வீட்டுக்கு வரும்போது, ஒரு ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சு. தலையில் பலத்த அடியாம். சுயநினைவை இழ்ந்துட்டாரு.
மூணு மாசம், கன்னா பின்னான்னு செல்வு பண்ணி, பல சிகிச்சைகள் செஞ்சிருக்காங்க.
நினைவு திரும்பிச்சு. ஆனா, முழுசா திரும்பலை.
மூளையில் பல பாகங்கள் வேலை செய்யலையாம். அதனால, வலுவான கால்கள் இருந்தும், அதை உபயோகிக்க முடியாத நிலை.
ஒரு முப்பது வருஷம் பின்னோக்கிப் போயிட்டாரு. குழந்தைத் தனம் வந்து சேந்துடுச்சு.
ஆட்களை பாத்தா அடையாளம் தெரியும். ஆனா, ஒரு புத்தி பேதலித்து விட்ட நிலை.
நாள் முழுக்க ஒக்காந்த எடத்துலையே இருப்பாரு.
ஆரம்பத்தில், இவரை பாத்துக்க ரொம்பவும் கஷ்டப் பட்டாங்க. ஓன்னு கத்துவாரு, அழுவாரு. அக்காக்கும், ஒரு க்ரிப் வர ஆறு மாசத்துக்கு மேல ஆயிருக்கும்.
செலவு கன்னாபின்னான்னு ஆனதால், வீட்டை வித்து, கிருஷ்ணனின் அப்பா மருத்துவ செலவுக்கு செய்ய வேண்டியதை செஞ்சிருக்காரு.
ஆணி வேரே சாய்ந்ததால், அவர் செய்து வந்த பிசினஸும் கவுந்துடுச்சு.

ஆனா, இத்தனை கொடுமையிலும், ஒரு நல்ல விஷயம், அந்த குடும்பத்தின் ஒற்றுமை. யாரும், அம்போன்னு விட்டுடலை. மாப்பிள்ளையை கிருஷ்ணனின் அப்பா கவனித்துக் கொள்வதாகட்டும், கிருஷ்ணனின் சப்போர்ட் ஆகட்டும், அண்ணன் உடனிருந்த செய்த உதவிகளாகட்டும், அருமையான முன்னுதாரணம் இவங்க.

ரெண்டு வருஷமா மாப்பிள்ளையை பாக்க போவேன். எனக்கும், ஆரம்பத்தில் கஷ்டமா இருக்கும், ஆனா, இப்ப அவங்களே சகஜத்துக்கு வந்தப்பரம், எனக்கும் பெருசா மனக் கஷ்டம் இல்லை. மாப்பிள்ளை, மூலையில் உட்கார்ந்து கொண்டு, சிரிச்சுக்கிட்டே, இப்பவும் கேப்பாரு, "ஓ, எனக்கு தெரியுமே. நீ அமெரிக்கால இருக்கல்ல? எப்ப திரும்ப வர? வந்துடுவல்ல?". நானும் சிரிச்சுக்கிட்டே வந்துடுவேன்.

இவரை குணப்படுத்த ஒண்ணும் மார்கம் இருப்பதாய் தெரியவில்லை. இன்னும் அவரால் நடக்க முடியவில்லை, மூளையும் குணமடையல.

டாக்டர்களின் மேல் நம்பிக்கை குறைந்து, இப்ப, புள்ளையார் பூஜை, அல்லா கயிறு, ஏசு ப்ரேயர்னு எல்லாமும் செஞ்சு பாக்கராங்க. பாவம்.

இந்த வருஷம் பாக்கும்போது, கொஞ்ச நேரம் மாப்பிள்ளை கிட்ட ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தேன். கிருஷ்ணனும் வந்திருந்தான். கால் உபயோகிக்காததால், சூம்பிப் போயிருந்தது. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே இருப்பதால், உடல் பருமன் ஆகியிருந்தது. ஆனா, சிரிச்சுக்கிட்டே பேசரது மாறலை.

அக்கா வீட்டு ஃபில்டர் காஃபி பிரமாதமா இருக்கும். காஃபி குடுத்தாங்க. குடிச்சுக்கிட்டே, அவர் மள மள மளன்னு கேக்கர கேள்விக்கெல்லாம், யோசிக்காம எதையாவது சொல்லிக்கிட்டே இருந்தோம்.
அக்கா வந்து, கிருஷ்ணா, அவருக்கு மாத்திரை குடுன்னாங்க.

கிருஷ்ணனும், கலர் கலரா, பெரிய பெரிய மாத்திரைகள் சில டப்பாவிலிருந்து எடுத்துக்கிட்டு வந்து அவர் கிட்ட கொடுத்தான். ஒரு டம்லர் தண்ணீரும்.

அவர் மாத்திரைய வாங்கிக்கிட்டே, "இதெல்லாம் சாப்டா, இன்னும் ஒரு வாரத்டுல சரியாயிடும். அப்பரம் நான் என் கார் ஓட்டுவேன்னு" ஏதோ சொல்லிட்டு இருந்தாரு.

எல்லா மாத்திரையையும் கிருஷ்ணனிடமிருந்து கையில் வாங்கிக் கொண்ட மாப்பிள்ளை, தண்ணீரைக் குடுக்காமல், எல்லாத்தையும் அப்படியே வாயில் போட்டுக் கொண்டு கடித்து மென்று கொண்டிருந்தார்.
எனக்கு ஆச்சரியம், என்னடா கிருஷ்ணா கசக்கப் போவுதுடான்னு சொன்னேன்.

ஆனா, இவருக்கு தலையில் அடிபட்டதில், ஏதோ நரம்பு டேமேஜாகி, வாய்க்கு ருசியே தெரியாமல் போய் விட்டதாம். அதான், மாத்திரையெல்லாம் இப்படி கடிச்சு சாப்பிடறாராம்.

எனக்கு அதைக் கேட்டதும், ஒரு கணம் என்னமோ போல் ஆகிவிட்டது. கண்ணுல தளக்னு தண்ணி தேங்கிடிச்சு.
என்னடா கொடுமை இது? எப்படி இருந்தவரு, ஒரு நிமிஷ நிகழ்வால், இப்படி ஆயிருக்காரு?

வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதுக்குன்னு இப்படியா ஒரு குடும்பத்தை போட்டு வாட்டி எடுக்கும்?

மக்களே, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை.

ஸோ, உஷாரா இருங்க, நல்ல படியா வாழுங்க, எப்ப வேணா என்ன வேணா ஆகலாம்.

இருக்கும் வரை, நல்லவிதமா, யாருக்கும் டார்சர் கொடுக்காம வாழுங்க.
முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியாவும் இருங்க.

வாழ்க்கை வாழ்வதர்க்கே!

Make each day count!

15 comments:

SurveySan said...

உங்களுக்கு 'உயிர்' நட்பு உண்டா?

பதிவர்கள் பதிவா போடலாம். நல்ல டாப்பிக்காச்சா அது :)

ராமலக்ஷ்மி said...

:(!

Bleachingpowder said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க, நீங்க தான் உயிர் நண்பன்னு இங்க நான் எல்லார் கிட்டையும் சொல்லீட்டு இருக்கேன் :))

ஜாலியா ஆரம்பிச்சு இப்படி முடிச்சுட்டீங்களே :((சீட் பெல்ட்டும், ஹெல்மெட்டு நம்ம நாட்டுக்கு கண்டிப்பா தேவை.

Bleachingpowder said...

பசங்களோட சனிகிழமை சரக்கடிக்க போனா எல்லாருமே உயிர் நண்பன் ஆயிடுவாங்க

Bleachingpowder said...

நீங்க எதுக்கும் தளபதி, காதல் தேசம், நண்பர்கள், லவ் டுடே படங்களையெல்லாம் விடாமல் பாருங்க கண்டிப்பா யாராவது செட் ஆவாங்க

SurveySan said...

ராமலக்ஷ்மி,

:(

SurveySan said...

Bleachingpowder,

//Bleachingpowder said...
நீங்க எதுக்கும் தளபதி, காதல் தேசம், நண்பர்கள், லவ் டுடே படங்களையெல்லாம் விடாமல் பாருங்க கண்டிப்பா யாராவது செட் ஆவாங்க
//

அது சரி :) யாரு, சின்னி ஜெய்ந்த்த சொல்றீங்களா?

ஆயில்யன் said...

//'உயிருக்கு உயிரா', நட்பு பாராட்ட படிக்கர காலத்துல வாய்ப்புகள் அமையலை போலருக்கு.
நட்புகளுடன் அடாவடிகளெல்லாம் நிறைய செஞ்சிருக்கேன், ஆனா, இந்த உயிர்நட்பு மேட்டரில் கோட்டை விட்டதாகவே தோணுது. ///

அட...! அப்படி சொல்லாதீங்க உங்களை யாராவது உயிர் நண்பர் அவர் என்று சொல்லிக்கொண்டிருக்ககூடும்!

ஆயில்யன் said...

//SurveySan said...
உங்களுக்கு 'உயிர்' நட்பு உண்டா?

பதிவர்கள் பதிவா போடலாம். நல்ல டாப்பிக்காச்சா அது :)
//

ஒ....!

பதிவா போடலாம்! பட் மத்த நெருங்கிய நண்பர்கள் மனதில் ஒரு சிறு சலனத்தினை கொண்டு வந்துவிடுமே...! (பிளாக்ல போடுற மொக்கையெல்லாம் ராசா படிடான்னு வேற லிங்க் கொடுத்து மெயில்ல அனுப்புறோம்ல)

நட்பு பத்தியும் உற்ற நண்பர்கள் பத்தியும் நிறைய சொல்லலாம் :)

ஆயில்யன் said...

//ஆனா, இத்தனை கொடுமையிலும், ஒரு நல்ல விஷயம், அந்த குடும்பத்தின் ஒற்றுமை. யாரும், அம்போன்னு விட்டுடலை. மாப்பிள்ளையை கிருஷ்ணனின் அப்பா கவனித்துக் கொள்வதாகட்டும், கிருஷ்ணனின் சப்போர்ட் ஆகட்டும், அண்ணன் உடனிருந்த செய்த உதவிகளாகட்டும், அருமையான முன்னுதாரணம் இவங்க///

நல்ல விசயம்!

CVR said...

:(

நிலாக்காலம் said...

//மக்களே, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை.

ஸோ, உஷாரா இருங்க, நல்ல படியா வாழுங்க, எப்ப வேணா என்ன வேணா ஆகலாம். //

முற்றிலும் உண்மை. காலையில் மகிழ்ச்சியாக வேலைக்குக் கிளம்புபவர்கள் இரவு நல்லபடியாகத் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை ஓடுகிறது. விபத்தில் அடிபட்டு உடல் உறுப்புகளை இழந்தோ, நினைவையும் இழந்தோ, உயிர் மட்டும் எஞ்சியிருக்க வாழ்வதுதான் மரணத்தைக் காட்டிலும் கொடுமை. சுய நினைவு இருந்தாலும், தன் எல்லா தேவைகளுக்கும் மற்றவர்களை நாடியிருக்க வேண்டிய நிலையால் இவர்கள் பெரும் மன அழுத்ததுக்கு உள்ளாகிறார்கள்.

யாரோ ஒருவரின் கவனக்குறைவால், ஒரே நொடியில் பல குடும்பங்களின் எதிர்காலம் சோக மயமாகிறது.

நம் நாட்டில் சாலை விதிகளை மீறுவது பெரும்பாலான இடங்களில் கண்டுகொள்ளப்படுவதில்லை. அதே நேரம், சாலை விதிகளை மீறுவதில் தவறொன்றுமில்லை என்றும், அதை ஒரு சாகசம் போல நினைக்கும் மனப்பான்மையும் மக்களுக்கு இருக்கும் வரை, விபத்துகள் நடப்பதை எந்தச் சட்டம் போட்டும் தடுக்க முடியாது.

விபத்தில் நம்மை இழந்துவிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும்? தாய் தந்தை, மனைவி, பிள்ளைகள் என்ன ஆவார்கள்? இந்த உயிரும் உடலும் எத்தனை முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டியது மிக அவசியம்.

Prabhu said...

///நல்ல நண்பனுக்கும், உயிர் நண்பனுக்கும் கண்டிப்பா ஒரு மைல் தூரமாவது காப் இருக்கும். /////
நீங்க ஜெயிலுக்கு போனா வந்து,"பொறுத்துக்கடா மாப்ள, எப்படியாவது வெளிய எடுக்குறேன்னு" சொல்றவன் நல்ல நண்பன். ஆனா உயிர் நண்பனோ,"மச்சான் கொசு ஓவர்ல" உங்க பக்கத்தில உக்காந்து கேட்டுட்டு இருப்பான்.

SurveySan said...

danks everyone.

pappu, nalla uvamai ;)

கோபிநாத் said...

\\மக்களே, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை.

ஸோ, உஷாரா இருங்க, நல்ல படியா வாழுங்க, எப்ப வேணா என்ன வேணா ஆகலாம்.
\\

ரைட்டு அண்ணாச்சி..