recent posts...

Wednesday, December 16, 2009

தெரு ஓர மரங்கள், வைத்ததும், பின் விளைவுகளும்

தெரு ஓரத்தில் சில மரங்களை நடலாம்னு ஒரு எண்ணம் சில பல வருஷமா இருந்துது. ஒவ்வொரு தடவையும், சோம்பேரித்தனத்தால் தள்ளிக்கிட்டே போச்சு.
வாய் கிழிய எல்லா நொட்டையையும் நொட்டை சொல்றமே, நம்மாலேயே உருப்படியா ஒண்ணு கூட பண்ணமுடியலியேன்னு, உள்ளிருந்து மனசாட்சி ஸ்ட்ராங்கா குத்திக்கிட்டே இருக்குது சமீப காலமா.
சரி, அட்லீஸ்ட் சொந்தத் தெருவுலையாவது கொஞ்சம் மரத்தை வச்சு, கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு ஃபீல் வர மாதிரியாவது தெருவை மாத்தலாம்னு முடிவு பண்ணேன்.
திறந்த வெளி சாக்கடை, தாரில்லா சாலை, ரோட்டோரக் குப்பைகள் எல்லாம் இருக்கும் தெருவில், அட்லீஸ்ட் மரத்தை வச்சு பச்சை ஃபீல் குடுத்தாலாவது, மத்த கலீஜ் எஃபெக்ட் கம்மியாகட்டும்னும் ஒரு நப்பாசை.

அதைத் தவிர, என் பள்ளி கல்லூரி நாட்களில், ரொம்ப ஏக்ட்டிவ்வா இருந்தா, தெருமக்களின் welfare association எல்லாம் முடங்கிய நிலையில், ஆளாளூக்கு அவங்க வீட்டுக்குள்ள இருக்கர welfareஐ மட்டும் கவனித்துக் கொண்டு, தெருவை அம்போன்னு விட்டதில்தான், இந்த திறந்த வெளி சாக்கடையும், தாரில்லா ரோடும், குப்பையும் வந்து சேர்ந்தன.

மெம்பர்களை, இந்த மரம் வைத்தல் மூலம், உசுப்பி விட்டா, நான் கிளம்பியதும், அவங்க மத்ததை கவனிச்சுப்பாங்கன்னு ஒரு ஸைட் கேல்குலேஷனும் மனதளவில் இருந்தது.

சரின்னு, கோதாவில் இறங்க முடிவு பண்ணேன்.

தனி ஆளா இறங்கினா வேலைக்காகாதுன்னு, இந்த மேட்டரை எடுத்துச் சொல்லி, இன்னும் சில சகபாடிகளையும் கூட்டுக்குச் சேர்த்தேன். அவங்களுக்கும் இந்த விஷயத்தைச் சொன்னதும் ரொம்பவே புடிச்சுப் போச்சு. யாராச்சும், ஆரம்பிச்சு வக்க காத்துக்கிட்டு இருந்தாங்களாம்.

தெருவில் மரம் நட என்னென்ன தேவை?
* 20 மரக் கன்றுகள்
* அதைச் சுற்றிப் போட 20 பாதுகாப்பு கூண்டுகள்
* 10 கிலோ அடி உரம்
* குழி வெட்டி மரத்தை நட்டு உரம் போட்டு, கூண்டை வைக்க ஒரு சக்தி வாய்ந்த ஆள்/லேடி
* மரம் வைக்கப் போகும் இடத்தின் பின் உள்ள வீட்டில் இருப்போரிடம் ஒரு அனுமதி. ( அப்பத்தான் அவங்க தண்ணி ஊத்தி பாத்துப்பாங்க. அவங்க கையாலேயே வக்கச் சொன்னா இன்னும் பெட்டர்.)
* நகராட்சி கமிஷனரிடம் ஒரு சின்ன அனுமதி. (அப்பத்தான் ரோடு போடும்போது, புடுங்கிப் போட மாட்டாங்கய)
* உள்ளூர் கவுன்சிலரிடம் ஒரு குட்டி அனுமதி. (அவரை விட்டுட்டு பண்ணா கோச்சுப்பாரு, பின்னாளில் பிடுங்கியும் போடுவாரு)

சென்ற பதிவில் சில விவரங்கள் கிட்டியது.
மரக்கன்றுகளை Chennai Social Service என்ற தொண்டு நிறுவனம் வழங்கும் என்பது ஒன்று. முதல் வேலையாக அவர்களை தொடர்பு கொண்டு 20 gulmoharகளும், சில பூவரசு மரக்கன்றுகளும் தேவை என்றேன்.
அவர்களும், மட மடன்னு, "எல்லாம் ரெடியா இருக்கு, என்னிக்குன்னு சொல்லுங்க எங்க volunteers கூட்டிட்டு வந்து நட்டுடறோம்"னு ஊக்கப் படுத்தினாங்க.
மரக்கன்று ஒன்றுக்கு 10ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்தத் தொகை, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அவர்களின் நர்சரிக்குத் தேவைப் படுகிறது. ப்ரைவேட் நர்சரியில் நாமே வாங்கினா, ஒரு கன்றுக்கு 50 லிருந்து 100 ரூ வை ஆகும்.

அடுத்ததா, பாதுகாப்பு கூண்டு. ஆரம்பத்தில் 300ரூ என்று நினைத்தது, உள்ளூர் வெல்டரிடம் கேட்டதில், ஒன்று செய்ய 700ரூ ஆகும்னு குண்டத் தூக்கிப் போட்டாரு. 20க்கு 14000ரூ. கண்ணைக் கட்டியது.
நிழல் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், மூங்கிலில் பாதுகாப்பு கூண்டு செய்யும் ஹரீஷின் பரிச்சியம் கிட்டியது 140ரூவாய்க்கு இந்தக் கூண்டு செய்து தருகிறேன் என்று சொன்னார். கிட்டத்தட்ட அதை லாக் செய்த நேரம், ஒரு நாள் எங்கள் ஊரில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவங்க கிட்ட, மரம் நடுவதைப் பற்றியும், அதன் செலவைப் பற்றியும் சொன்ன போது, "dont worry. நான் ஒரு பத்து கூண்டுக்கு sponsor பண்றே"ன்னு சொன்னாங்க. குஷி ஆயிடுச்சு. சரின்னுட்டேன்.
இந்த மெத்தட் நல்லாருக்கேன்னு, அடுத்த நாள், என் டாக்டர் கிட்ட பேசினேன், அவரும், "நானும் மிச்ச கூண்டை sponsor செய்யறேன்"னு சொல்லிட்டாரு.

அட, இவ்ளோ சுலப்மா, சில ஆயிரங்களை பொது விஷயம்னா எடுத்து வுடறாங்களேன்னு ரொம்ப ஆச்சரியமா போச்சு எனக்கு. மடமடன்னு அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்தேன்.

ஒரு சர்க்குலர் அடித்து, என் சகபாடிகளுடன், ஒவ்வொரு வீடாகச் சென்று விஷயத்தைச் சொல்லி, அவர்களிடம் ஒரு கையெழுத்தும் வாங்கினேன்.
** இருபது வீடுகளில், இரண்டு வீட்ட்டார், அவர்கள் வீட்டின் முன் மரம் நடவே கூடாது என்று சண்டைக்கே வந்து விட்டனர். குப்பை சேரும், அது இதுன்னு நொண்டிச் சாக்கு. அவர்களின் அனுமதி நமக்குத் தேவையில்லை எனினும், அவர்களின் விருப்பமின்றி நட்டு வைத்தால், ராவோடு ராவா ஒடச்சி போட்டுடுவாங்கன்னு தெரிந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போனோம்.


கையெழுத்திட்ட சர்க்குலரை எடுத்துக்கினு போயி, நகராட்சித் தலைவரிடமும் கொடுத்து, விஷயத்தைச் சொல்லி, அவரின் ஒப்புதலும் கேட்டாயிற்று. அப்படியே, சந்தடி சாக்கில், ரோடு எப்ப சார் போடுவீங்கன்னும் கேட்டு வைத்தேன். வரும் தம்பி, ஹிஹின்னு மழுப்பிட்டாரு.

உள்ளூர் கவுன்சிலரிடமும், மேட்டரைச் சொல்ல, அவரும், "ஓ.கே தம்பி, நல்ல மஞ்சாப் பூ வர மாதிரி வைங்க"ன்னாரு. நானும், டபுள் ஓகே சொல்லிட்டேன்.

வெல்டர் ஒருவரிடம், தேவையான கூண்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து (தலா 700ரூ), கூண்டுக்கு பெயிண்ட் அடிக்க ஒரு பெயிண்ட்டரையும் பிடித்து (தலா ரூ200), 20 குழி வெட்ட ஒரு ஸ்ட்ராங்க் பாடியையும் பிடித்து (400ரூ), (CSS) Chennai Social Serviceடம் மரக்கன்றுகளுக்கும் (தலா 10ரூ) சொல்லியாச்சு.

குறித்த நாளில், கூண்டுகள் வந்திறங்கின. பெயிண்ட்டரும் வந்து இரவு முழுக்க அமர்ந்து பெயிண்ட்டினார். குழியும் தோண்டியாயிற்று. அடி உரமும் வாங்கியாச்சு. CSS தன்னார்வலர்களும் ஒரு இளங்காலைப் பொழுதில் சர்ர்ர்ர்ர்ருனு பள பளா காரில் வந்து இறங்கினார்கள். மொத்தம் மூணு பேரு. 1 சாஃப்ட்வேர் ஆசாமியும், ஒரு பிசினஸ் மேக்னட்டும், ஒரு கல்லூரி மாணவனும்.

அந்தந்த வீட்டு மாமா/மாமிக்களை விளித்து, அவர்கள் கையாலேயே குல்மோகரை நட்டுவைக்கச் செய்தார்கள் CSS ஆசாமிகள். மாமாஸ்/மாமீஸூக்கும் ஏக குஷி.

அப்படியாக இருபதையும் நட்டு, உரம் போட்டு, தண்ணீரும் ஊற்றி, மரம் வைப்பு விழா இனிதே முடிந்திருந்தது. எனக்கும் என் சகபாடிகளுக்கும், ஒரு மகிழ்ச்சியான அனுபவமாய் இருந்தது.

அன்றிரவு மழையும் பெய்து அமக்களப் படுத்தியது.

மகிழ்ச்சியை பொரட்டிப் போட்டது அடுத்த நாள். விடிஞ்சும் விடியாத அதிகாலையில், எங்க ஊரு கவுன்சிலரு கதைவை தட்டினாரு.
"இன்னா தம்பி, நான் உன்ன பூச்செடி வெக்கச் சொன்னா, காட்டு மரம் வச்சு விட்டிருக்க. இதெல்லாம் வளந்து நம்ம பைப்பெல்லாம் ஒடச்சு போட்டுடும்"னு ஆரம்பிச்சாரு.
நானும் பொறுமையா, "ஒலகம் முழுக்க, எல்லா ரோட்டுலையும் வெக்கர மரம்ணே இந்த குல்மோகரு, அழகா செவப்பா பூ பூத்து அம்சமா வரும், பைப்பெல்லாம் ஒன்னியும் பண்ணாது"ன்னேன்.

"அதெல்லாங் கெடையாது தம்பி. நானு, மக்கள் நலனைத் தான் பாக்கணும். நாளிக்கு பைப்பு ஒடஞ்சு தண்ணி வரலன்னா என்னத்தான் கேப்பாங்க்ய", இது அவரு. சொல்லிட்டுப் போயிட்டாரு.

நானும் சகபாடிகளை அவசர மீட்டிங் அழைத்து, மேட்டரைச் சொல்ல, "இவரை யாரோ கெளப்பி விட்டிருக்கணும், இல்லன்னா, வேர மீட்டர் இருக்கும்"னு ஆரூடம் சொன்னார்கள். ஒரு சகபாடி மட்டும், "நாம அவரை கூப்பிட்டு விழா எடுத்து மேள தாளத்தோட நட்டிருந்தா, இப்ப ப்ரச்சனை பண்ணியிருக்க மாட்டாரு. ஆனது ஆச்சு, பேசாம மரத்தை மாத்திடலாம், இல்லன்னா, கொஞ்ச நாள்ள புடிஞ்கிப் போட்டுடுவாரு. நம்ம டைமும் உழைப்பும் வீணாயிடும்".

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னா, இங்க வச்ச மரத்தை பிடுங்க வேண்டியிருக்கேன்னு டென்ஷனாயிட்டேன். நான் இருப்பது சில வாரங்கள்தான், இவரிடம் மல்லுக்கு நின்னால், நாம் எஸ்கேப் ஆனப்பரம், மத்தவங்களுக்குத்தான் கொடச்சல் என்பதால், 1/4 மனதுடன், மரக்கன்றுகளை மாற்ற முடிவு செய்தோம். உள்ளூர் நர்சரியில், தலா 50ரூ செலவில், அரளி, காட்டு மல்லி, மருதாணி, போன்ற குட்டி மரக்கன்றுகள் வாங்கி, ஏற்கனவே நட்டதை பிடுங்கி இதை நட்டோம்.
(எங்க வூட்டுக்கு பக்கத்துல இருக்கரத மட்டும் மாத்தலை. வரது வரட்டும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்).

இப்படி வளர்ந்து தெருவுக்கே புதிய தோரணத்தைத் தந்திருக்க வேண்டிய குல்மோகர் மரங்கள், அடுத்துள்ள நகருக்கு கொடுக்கப் பட்டு விட்டது. அரளி மரங்களாவது வெக்க வுட்டாங்களே, அதுவே போதும் :(


இதில் இன்னொரு கொடுமை, நகராட்சி கமிஷனரின் ஒப்புதல் கடுதாசியை, நகராட்சி அலுவலகத்தில் போய் வாங்கி வச்சுக்கலாம்னு, மூணு தபா போயிட்டேன்.
"சார், நாளைக்கு வாங்க,"
"அங்க போய் கேளுங்க"
"இங்க போய் கேளுங்க"
"இன்னும் கையெழுத்தாகி வரலியே"

அது இதுன்னு இழுத்துக்கிட்டு இருந்தாங்க. கடுப்பாகி, கொஞ்சம் ஃபைலைத் தொறந்து பாருங்களேன்னேன். அவரு கையெழுத்துப் போட்டு கொடுத்து ஒருவாரமா அது ஃபைல்லையேதான் கெடக்குது. இனி, அதை எங்கியோ எண்ட்டர் பண்ணி, ஸ்டாம்ப் அடிச்சு கொடுப்பாங்களாம். அதுக்கு இன்னும் எத்தினி தபா அலையணுமோ.
வாங்கர சம்பளத்துக்கு வேலை செய்யாத ஆளுங்களைப் பாத்தா, எனக்கு பத்திக்கிட்டு வருது. கெரகம் புடிச்சவனுங்க!

மரம் நடுங்கோ! ஜாலியான அனுபவம் அது!

மேலதிக தகவல் வேணும்னா, கேளுங்கோ!

27 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பு்துசாவா பழைய மரத்தையே எங்க பக்கத்துல இருக்கவிடறதே இல்லை.. ஒட்ட வெட்டி விட்டுடறாங்க.. அதுல அத்தனை குருவிங்க உக்காரும் சம்மர்ல.. குளிர் வந்ததும் வெயில் வரல அது இதுன்னு வெட்டித்தள்ளி அது பாவமா நிக்கும்..

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

SurveySan said...

நன்றி முத்துலெட்சுமி.

மரத்தை வெட்டினா, அதுக்கு பதிலா இன்னும் 50 மரத்தை வைக்கணும்னு ஒரு புது ரூல் இருக்காம். எங்கியோ படிச்ச ஞாபகம்.

RTIயோ, PILஓ போட்டு, எதையாவது செய்யப் பாக்கலாம்.

மரத்தின் அருமை தெரியாமல் பல பேர் இருக்கராங்க என்பது பெரிய உண்மை.

அவங்களுக்கு ஒரு education கொடுத்துட்டு நம்ம வேலையை ஆரம்பிச்சா, சுலபமா இருக்கும். ஒரு படம் போட்ட brochure மாதிரி ஒண்ணு ரெடி பண்ணணும். பதிவில் இருக்கும், குல்மோகரை காட்டிட்டு பண்ணியிருந்தா, யார் வேணாம்னு சொல்லியிருப்பா? :)

கிரி said...

உங்க முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சர்வேசன்.

ஆனா நீங்க சொல்ற மாதிரி இதெல்லாம் கொஞ்சம் கொடைச்சல் பிடித்த வேலை தான்.. மனமிருந்தால் மார்க்க பந்து :-)

அரசாங்க ஊழியர்கள் எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் நம்மால் எதையும் செய்ய முடிவதில்லை.. செய்வதையும் இதைப்போல நொள்ளை நொட்டை னு தடுத்து விடுறாங்க!

SurveySan said...

கிரி, நன்றி.

மரம் நட்டதில், ஒரு விஷயம் நல்லாப் புரிஞ்சுது.
எல்லாருக்கும் மனசிருக்கு, ஆனா, யாராவது ஒருத்தர் வந்து, அதை co-ordinate பண்ணனும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

ஒரு உந்துதல் இல்லைன்னா, எதுவும் நடக்காது.

நேரம் உள்ளவர்கள், உந்தணும், அப்பதான் வண்டி ஓடும் :)

அரசாங்க ஊழியர்கள் ஆர்வமும் காட்டுவதில்லை, வேலையும் செய்வதில்லை, செய்யரவங்களையும் செய்ய விடுவதில்லை. ஆனா, ஒரு சில கவுன்சிலர்கள் ரொம்ப நல்லாவே செயல்படராங்க. அந்த மாதிரி ஆளுங்க, இன்னும் அதிகமானா சரியாயிடும்.

இல்லன்னா, நம்மில் இருந்து சில பேரு, கவுன்சிலாராகும் வழியையும் ஆராயலாம் ;)

கல்வெட்டு said...

சர்வேசன்,
மிகவும் பாராட்டுதலுக்கான செயல்.

மாற்றம் அல்லது மாற்றத்திற்கான முயற்சி நாம் வாழும் தெருவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தீவிரமாக நினைப்பவன் நான்.

புறம்போகு நிலங்கள் அபகரிப்பு, சாலையை அபகரித்து வீட்டை விசாலமாக்கல் என்ற பல பிரச்சனைகளில் எனது கிராமத்தில் ஏதும் செய்யமுடியாமல் போனது எனக்குள் இருக்கும் நிரந்தர வருத்தம்.

உங்களின் முயற்சியையும் குறைந்த பட்சம் மரம் என்ற ஒன்றை நட்ட தனிப்பட்ட உங்களின் முயற்சியையும் உதவிய,ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டுகிறேன்.

**

சின்ன விழாவாக , வார்டு மெம்பரை அழைத்து நடத்தி முடித்திருந்தால் அவரின் இருப்பை அங்கீகரித்தமாதிரி இருந்திருக்கும். நல்லது அவர் மூலமாக நடப்பதனால் அவரின் ஆதரவும் கிடைக்குமானல் சரியே. (தண்ணீர் பிரசசனைக்கு கோக் ஐ ஸ்பான்சராக ஏற்காதவரை பிரச்ச‌னை இல்லை) எல்லாம் நன்றே.

வாழ்த்துகள்
பாராட்டுகள்

SurveySan said...

கல்வெட்டு,

நன்றீஸ்.

/////சின்ன விழாவாக , வார்டு மெம்பரை அழைத்து நடத்தி முடித்திருந்தால் அவரின் இருப்பை அங்கீகரித்தமாதிரி இருந்திருக்கும்./////

வெரி ட்ரூ!. பல தடவை அவரு கிட்ட, 'ஃப்ரீயா இருந்தா நடர டைமுக்கு வாங்க'ன்னு சொல்லியிருந்தேன். அது பத்தல போலருக்கு.
அவர் பக்க ஞாயமும் ஓரளவுக்கு புரீது.

ஆனா, வச்சப்பரம் பண்ண அடாவடித்தனம்தான் கொடுமை.

SurveySan said...

கல்வெட்டு,

////புறம்போகு நிலங்கள் அபகரிப்பு, சாலையை அபகரித்து வீட்டை விசாலமாக்கல் என்ற பல பிரச்சனைகளில் எனது கிராமத்தில் ஏதும் செய்யமுடியாமல் போனது எனக்குள் இருக்கும் நிரந்தர வருத்தம்.
////

மிகச் சுலபமா RTI பயன் படுத்தி ஒரு மனு போடலாம், அப்படி செஞ்சாலே, பல விஷயம் ஆட்டோமேட்டிக்கா நடக்குதாம்.

உ.ம்: தெரு XYZயின் நீள அகலம் என்ன? அது ஏன், இப்பொழுது இவ்வளவு குருகலாக உள்ளதுன்னு ஒரு RTI போடலாம். ஐம்பது ரூபாய்தான் செலவு.

SurveySan said...

வார்டு மெம்பரை அழைத்து மரியாதை செய்து, அவரை முன் வைத்து செய்யணும்னு, எங்க நைனா கூட சொல்லிட்டு இருந்தாரு.

ஆனா, இந்தாளு சரி கிடையாது. தெருவில் பாதியை அபகரித்து வீட்டை கட்டியிருக்கிறார். அவருக்கு, மரியாதை கொடுக்கணும்னு எனக்கு துளி கூட விருப்பம் இல்லாதிருந்தது.
ஆனா, இப்படி ஆகும்னு கண்டிப்பா தெரிஞ்சிருந்தா, வேர மாதிரி டீல் பண்ணியிருக்கலாம்.

அடுத்த முறை, வேறு மாதிரி ஏங்கிளில் இந்த விஷயங்களை அப்ரோச் பண்ணனும். இவ்ளோ சின்ன விஷயத்திலும், எவ்ளோ புள்ளிகள் வக்க வேண்டியிருக்கு :(

Thekkikattan|தெகா said...

surveysan,

அருமையான முயற்சி... அந்த மரங்கள் எழும்பி நின்று நிழலின் அருமையை கோடையில் உணர்த்த வாழ்த்துக்கள். உங்களின் முயற்சிக்கு ஒரு சல்யூட்.

கல்வெட்டு said...

சர்வேசன்,
//மிகச் சுலபமா RTI பயன் படுத்தி ஒரு மனு போடலாம், அப்படி செஞ்சாலே, பல விஷயம் ஆட்டோமேட்டிக்கா நடக்குதாம்.
உ.ம்: தெரு XYZயின் நீள அகலம் என்ன? அது ஏன், இப்பொழுது இவ்வளவு குருகலாக உள்ளதுன்னு ஒரு RTI போடலாம். ஐம்பது ரூபாய்தான் செலவு.//

நல்ல நிகழ்சியைப் பற்றிய பதிவில் இதைப் பேசி டைவர்ட் பண்ண‌ வேண்டாம் என்று நினைகிறேன். :-))))

நீங்கள் சின்னதாக செய்தாலும் முடித்துவிட்டீர்கள். என்னால் முடியாமல்போனது அந்தப் பொறாமையில் கொஞ்சம் புகைந்தேன். :-)))

இந்த பிரச்சனையின் நீள , அகலம் பெரிய இம்சை ஆனது.

விடுங்கள்...இந்தப்பதிவு உங்களின் வாழ்த்துக்கானது.. :-))))

ஊர்சுற்றி said...

'ஹ்ம். அந்தோ பரிதாபம்'

:(

சரவணகுமரன் said...

சூப்பர் தலைவா...

செய்ய நினைக்குற உங்களையும், மனச மாத்தி ஒண்ணும் பண்ண விடாம ஆக்கிட கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

Unknown said...

Hi Surveysan .. En manamarndhe Vazhthukal ... Neenga katiya Gulmogar photovoda oru theruve nenachu pakave ramiyamai irruku .. but Ok ...Arali poo kooda nalla than irrukum nu en friend sonan ... Maram Nadum nizhar padathil neenge irrukeengala ... Maram valandhadhum oru photo annupunge ..

SurveySan said...

கல்வெட்டு,

சுய சொறிதலுக்காக என் அநேகம் பதிவுகள் எழுதப்பட்டாலும், இந்த மாதிரி சில பதிவுகள் எழுதுவதர்க்கு காரணம் ரெண்டு.
1) பாராட்டுகள் பெற்று, காலரை தூக்கி விட்டுக் கொள்ளுதல்
2) இதைப் படிக்கும் ஓரிருவர், ஏதோ ஒரு உந்துதல் பெற்று, அவர்களும் இந்த மாதிரி ஏதாவது செய்ய முற்பட வைத்தல்.

ஸோ, நாம மத்த விஷயங்களையும் தாராளமா இங்கே அலசலாம் ;)
ஆனா, உங்க பின்னூட்டத்தை தனியா இன்னொரு பதிவில் அலசவும் மேட்டர் இருக்கு. அதுக்கு தனியா ஒண்ணு பதியறேன் :)

SurveySan said...

தெக்கிட்டான், ஊர்சுற்றி, சரவணகுமரன்,

நன்றீஸ் பலப் பல!

ulagalavi,

அரளி நல்லாத்தான் இருக்கும். ஆனா, நிழலெல்லாம் தராதுங்க. ஒண்ணு நிச்சயம், இனி வரும் காலங்களில், நிழல் தராத அரளியைப் பார்த்து, வெம்பி வேதனைப் படும் ஆட்களில் நானும் என் சகபாடிகளும் இருப்போம் :(

என் வீட்டுக்கு ஸைடில் ஒரு குல்மோகரையும், எதிரில் ஒரு வாகை மரத்தையும் விட்டு வச்சிருக்கேன். ரகசியமா வளந்து எல்லார்க்கும் சர்ப்ரைஸ் கொடுக்கட்டும்னு. பாப்போம் விட்டு வைக்கராங்களான்னு ;)

ஃபோட்டோவில் நானுண்டு. யாருங்கரதை உங்க ஊகத்துக்கு விட்டுடறேன் ;)

SurveySan said...

btw, கவுன்சிலரை வில்லனாக்கும் முயற்சி அல்ல இது.

அவரு ஓரளவுக்கு நல்ல விஷயமும் பண்றாரு, ofcourse, அதுலையும் ஸைட் கமிஷன் உண்டு.

தண்ணி இல்லா நாட்களில், எல்லா வீட்டுக்கும் லாரியில் தண்ணீர் வர ஏற்பாடு செஞ்சு பெரிய அளவில் உதவியிருக்காரு.

ஒரே ப்ரச்சனை, தொலை நோக்குத் திறன் இல்லா, 'சாதா' தலை இவரு.

ஆ! இதழ்கள் said...

நட்ட மரங்கள் அனைத்தும் மேலும் எந்த பிரச்சனையும் வராமல் வளர்ந்து நிற்க என் வாழ்த்துகள்.

Unknown said...

Future la edhavadhu arasiyal idea irruka . Photola andhe thopi karar than neengalo?

Truth said...

நான் காலேஜ் படிக்கும் போது காலேஜுல இதை செஞ்சோம். இப்போ எங்க தெருவுல செய்தா நல்லா இருக்குமேன்னு தோனுது. நெக்ஸ்ட் விசிட்ல பண்றேன். அப்போ உங்க ஹெல்ப் கண்டிப்பா தேவைப் படும்.

அடிக்கடி உங்கத் தெருவ பத்தி கலீஜா எழுதறீங்க, எங்க இருக்கீங்க நீங்க? :)

பாலகுமார் said...

சும்மா நம்ப நாட்டை பற்றி குறை பேசி கொண்டு இல்லாமல் களத்தில் இறங்கி நல்ல காரியம் செய்த உங்களுக்கு என்னோடோ மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா... கண்டிப்பாக இந்த பதிவு பல பேருக்கு நல்ல உந்துதலா இருக்கும்.. கண்டிப்பாக எனக்கு இருந்துது... மிக்க நன்றி

தருமி said...

"நல்ல பதிவு"

நல்ல வேலை.

நான் புது இடம் வந்ததும் - 13 வருஷத்துக்கு முன்னால் - எப்படியோ வனத்துறை மூலம் 40 செடிகள் + காப்புக்கூண்டு எல்லாம் இனாமாகப் பெற்று வண்டிக்கூலி, நடுவதற்கு கூலி மட்டும் கொடு்த்து வச்சதில் பாதி தேறிச்சு. அடுத்து 5 வருஷம் கழிச்சி இன்னொரு முயற்சி ஆரம்பித்து. நல்ல காப்பு இல்லாமல் படு தோல்வியில் முடிந்தது.

SurveySan said...

danks everyone.

Truth,

//// நெக்ஸ்ட் விசிட்ல பண்றேன்.////

pls, certainly do.

////அப்போ உங்க ஹெல்ப் கண்டிப்பா தேவைப் படும்.////
anytime :)

Raja said...

Need few details:

1. Can you give an contact for getting plants at 10 rupees.
2. Does the tree Gulmogar really affect the Pipe Lines and the Walls of our home??

SurveySan said...

Raja, glad to see you are taking the initiative to plant trees.

You can get free saplings from chennai social service. try SMSing them @ 98940 62532.

Poonga, Neem, May flower, Gulmohar are all great trees.

If pipes are leaky, there is a remote chance for the roots to get inside the pipe. but, the benefits of filling the roadside with trees, will outweigh smaller issues.

Do share your experience to a wider audience, once you complete your planting.

SurveySan said...

here is some more info about Chennai Social Service.

http://varunl.wordpress.com/2009/07/29/sms-a-sapling/

SurveySan said...

"(எங்க வூட்டுக்கு பக்கத்துல இருக்கரத மட்டும் மாத்தலை. வரது வரட்டும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்)."

this is the one :)

http://www.flickr.com/photos/surveysan/8687696543/in/photostream/

ராமலக்ஷ்மி said...

வளர்ந்து நிற்கும் மரம் அழகு:). பாராட்டுகள்.