recent posts...

Thursday, May 29, 2008

எந்த ரெண்டுங்க கண்டிப்பா வேணும் உங்களுக்கு?

சமீபத்தில், என் சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணு வந்து, தான் கைரேகை பாக்கரதுல தில்லாலங்கடின்னு சொன்னா.
எனக்கு இதுல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்லை.

நம் மத்தியில் 65% ஆட்களுக்கு ஜாதக நம்பிக்கை உண்டு என்பது எமது முந்தைய சர்வேயின் மூலம் தெரியவந்துள்ளதை அறிவீர்கள்.

ஸோ, எல்லாரும் கவனமா கேளுங்க.

கைரேகை பாத்த அந்தப் பொண்ணு, எல்லாம் நல்ல விஷயமாத்தான் வரிசையா சொல்லிட்டு வந்தா.

கடைசியிலதான் ஒரு பெரிய குண்டப் போட்டா.

அதாவது, என் கைரேகை என்ன சொல்லுதுண்ணா, எனக்கு 'ரெண்டக்கா' தோஷம் இருக்காம்.

ரெண்டக்கா தோஷமா? அது இன்னான்னு புருவத்தை உயர்த்தரவங்க மேலப் படிங்க.

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு சுக வாழ்க்கைன்னா அதுல என்னென்னங்க இருக்கணும்?
1) நிறைய பணம்
2) மன அமைதி
3) நோயற்ற உடல்

இந்த மூணும் கண்டிப்பா வேணும்ல?

இந்த 'ரெண்டக்கா' தோஷம் இருக்கரவங்களுக்கு மேலே சொன்ன மூணுல ஏதாவது ரெண்டுதான் அமையுமாம்.
ஆனா, அந்த ரெண்டும் கண்டிப்பா அமோகமா இருக்குமாம்.

என்ன கொடுமைங்க இது? மூணுல எல்லாமே ரொம்ப முக்கியமாச்சே.
ஒண்ணு இல்லாம மீதி ரெண்டு மட்டும் இருந்தா மட்டும் பத்துமா?

யோசிச்சுப் பாத்தேன். எந்த ரெண்டு தக்க வச்சுக்க அதீக முயற்சி எடுக்கணும்னு.
ஒண்ணும் புலப்படலை.

இந்த ஜாதகம், கைரேகை, இத்யாதி இத்யாதிலயெல்லாம் நம்பிக்கை இல்லாததால், இரண்டாம் ஐட்டமான மன அமைதி, இப்பவே காணாம போயிடாம தப்பிச்சேன் :)

இப்ப கேள்வி என்னன்னா,
ஸப்போஸ், உங்க முன்னாடி யாராவது வந்து,
"மை டியர், இந்த மூணு ஐட்டம்ல, ரெண்டு மட்டும் உனக்கு இப்பவே தரேன். எந்த ரெண்டு வேணும்? நீ கேக்காத மூணாவது உனக்குக் கிடைக்காது"ன்னு சொன்னா, எந்த ரெண்டுங்க தேர்ந்தெடுப்பீங்க?

நம்பிக்கை இருக்கரவங்களும், இல்லாதவங்களும், சும்மா லுலுலுவாய்க்காகவாவது, நல்லா யோசிச்சு ஒரு ஆப்ஷனை கீழுள்ள சர்வேயில் குத்துங்க.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரெண்டு உங்கள் வாழ்வில் கிடைக்க என் வாழ்த்துக்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்காத மூணாவதும் கிடைக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும் ;)

நம் மத்தியில் இருக்கும் ஜோதிட நிபுணர்கள் யாராவது இந்த ரெண்டக்கா மேட்டர் பத்தி ஒரு பதிவ போட்டீங்கன்னா, நன்னாருக்கும்.

இனி குத்துங்க. ஹாப்பி வெள்ளி!



பி.கு: வ.வா.ச வின் ரெண்டாம் ஆண்டு போட்டிக்கு இத்த அனுப்பிருக்கலாமோ?

கருத்ஸ்?

Tuesday, May 27, 2008

கம்போடியாவில் கலக்கிய சோழனும் பல்லவனும்

அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்த விஷயம் தான் இது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டின் (2nd century A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.
கி.பி. பத்தோ பனிரெண்டோ நூற்றாண்டில் சோழர்கள் பர்மா, மலேஷியா, சுமத்ரா, கம்போடியாவிலெல்லாம் கோலோச்சினார்களாம்.

கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வத் (Anghor Wat) என்ற ஊரில்தான் உலகின் மிகப் பெரிய விஷ்ணு கோயில் உள்ளதாம். கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழர்களால் கட்டப்பட்டதாம். சமீபத்தில் இந்த கோயிலைப் பற்றிய டாக்குமெண்டரி ஹிஸ்டரி சேனலில் வந்ததைக் கண்டு ரசித்தேன்.

அந்த கோயிலின் பிரமாண்டம் வியக்க வைத்தது. குறிப்பா அதைக் கட்டிய விதம்.
முழுக் கோயிலையும் கல்லால் கட்டி முடித்தபின், ஒவ்வொரு சிலையையும் செதுக்கினார்களாம்.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல் கடந்து சென்று இப்படி கலக்கியிருக்காங்க நம்மாளுங்க.

நம்மளும், ஆணி புடுங்க, கடல் கடந்து தான் போறோம், ஆனா, சோழனும் பல்லவனும் கலக்கின அளவுக்கு கடந்த ஆயிரம் ஆண்டில் எந்த இந்தியனும் கலக்கின மாதிரி தெரியலை.

யாம் பெற்ற இன்பம், பெறுக நீங்களும். பொறுமையா பாருங்க.
( செம பிரமாண்டமா இருக்கு அந்த இடம். யாராவது ஒரு க்ரூப் டூருக்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா வந்து கலந்துக்குவேன் ;) )

கம்போடியாவின் தேசியக் கொடியில் பெருசா இந்தக் கோயில்தான் இருக்குது. ஆனா, கவனிக்க ஆளில்லாம இன்னிக்கு இந்துக் கோயில் கொஞ்சம் கொஞ்சமா பாழடஞ்சுகிட்டே வருதாம். யாராவது கொஞ்சம் கவனிங்கய்யா. லேசுல, அழிய விடக் கூடாது இதையெல்லாம்.











புல்லரிக்கல?


பி.கு: இன்னிக்கு என்னடான்னா ஒரு ஏர்போர்ட் கூட நம்மளால டக்குனு கட்ட முடியல;
ஒரு ப்ரிட்ஜு கட்ட ஏழு வருஷம் ஆகுது;
கடல்ல தூர் வாரி வழி பண்ண ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டை;
குடிக்கர தண்ணிக்கு ஏற்பாடு பண்ண இழுத்துத் தள்ளுது;
ஒரு சின்ன ரோடு கூட ஒழுங்கா போட மாட்ராங்க்ய;

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?

ஹ்ம் :(

Monday, May 26, 2008

சலாம் அடிக்கும் பறவை + பறக்கும் பறவை

சலாம் அடிப்பவர் இங்கே:


பறப்பவர் இங்கே:


இவுரு ரெண்டுத்துயும் பாக்கறாரு:

Wednesday, May 21, 2008

Herova? Zerova? சூர்யா, ஜோ, மாதவன், விஜய், ஹாரிஸ், கே.வி

இப்பதான் இது கண்ணுல பட்டுது.

"வெறும் கில்லி அடிச்சா நீங்க சீரோதான்.
படிச்சாதான் நீங்க ஹீரோ
"
-விஜய்

என்ற பன்ச் டயலாகெல்லாம் கூட இருக்கு.

சூர்யா, ஜோதிகா, மாதவன், விஜய் இணைந்து மிரட்டும்,
ஹீரோவா, ஜீரோவா பாருங்க.

படிப்பின் அவசியத்தை பறைசாற்றும் குறும்படம்.

சமுதாயத்துக்காக, இந்த மாதிரி இவங்க செய்யறது மனசுக்கு நிறைவைத் தருது.
சூரியா தயாரிக்க, நடிகர்கள் எல்லாரும் ஃப்ரீயா நடிச்சிருக்காங்களாம்.
இசை, ஹாரிஸ். கேமரா கே.வி.ஆனந்த்.
மேலும் விவரங்கள் விக்கியில்.

ஆனா, எல்லாச் சேனல்லையும் அடிக்கடி இதைக் காட்டினா ப்ரயோஜனமா இருக்கும்.

காட்டறாங்களா?




வாழ்க வளர்க!

கல்வியால் மட்டும்தான், நமது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மேலே கொண்டு வர முடியும்.

Tuesday, May 20, 2008

இதையெல்லாம் ஏன்யா தடுக்கணும்?

பதிவர் நண்பர் ரிஷான் ஷெரீப், நார்வேயில் சில சைக்கோக்கள் விளையாடும், விபரீத வீர விளையாட்டை பத்தி பதிவு எழுதியிருந்தார்.

பனிப்பாறைகளில் வாழும் ஸீல் எனும் அப்பாவியான விலங்கினத்தை மனிதர்கள், விளையாட்டு என்ற பெயரில், வேட்டையாடும் கொடுமையைப் பற்றி புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் பல்வேறு கருத்துக்கள் வந்து குவிந்திருந்தன.
சில பேரு, ஐயோ பாவம்னும், சிலரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாங்கர மாதிரியும் கருத்து சொல்லியிருந்தாங்க.

மனுஷன், மிருகங்களை கொல்றது, இன்னிக்கோ நேத்தோ நடக்கரதில்லை.
ஆதாம், ஏவாள் காலத்துலேருந்தே நடக்கரதுதான்.

சிங்கம் மானைக் கொல்றதும்,
ஸீல் மீனைக் கொல்றதும்,
பனிக் கரடி, ஸீலைக் கொல்றதும்

பனிக் கரடியையும், ஸீலையும், சிங்கத்தையும், மீனையும், மனுஷனையும், மனுஷன் கொல்றது

உலக நியதி.

என்ன ஒரே தப்புன்னா, இதை, விளையாட்டுக்காக கொல்றது, கொஞ்சம் சைக்கோத்தனம்.

எனக்குத் தெரிஞ்சு, எந்த மிருகமும், விளையாட்டுக்காக இன்னொரு மிருகத்தைக் கொல்லாது. பசியாலும், பயத்தாலும் தான் கொல்லும்.

ஆட்டையும், மாட்டையும், நாம ஷூ போட்டு, பெல்ட் கட்டி, ஜாக்கெட் போட கொல்றதும் கொஞ்சம் வருத்தமான செயல்தான்.
ஆனா, அதையெல்லாம் நிறுத்தப் போறோமா என்ன?

சில நாடுகள்ள, சில மிருகங்களின் தோலினால் ஆன ஜாக்கெட்டெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலை, பனிக் கரடி மாதிரி விலங்குகள்.

இதற்கு முதன்மை காரணம், அந்த ஜீவராசிகள் அழிந்து வரும் நிலையை அடைந்துள்ளதுதான்.

இன்னும் கொஞ்ச நாள்ள, கடல் மீன்கள் திவாலாகும் நிலை வர உள்ளது. ( 2050? )
ஆடு, மாடு, கோழியெல்லாம் வளக்கர மாதிரி, மீன்களை அவ்வளவு சுலபமா இதுவரை வளக்கும் யுக்தியை கண்டுபிடிக்கலை. ( ஆஸ்திரேலிய அமெரிக்காவில் மீன் பண்ணையில், மீன்கள் வளர்க்கப்பட்டாலும், உலகின் மொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவு இவை பெரிதல்ல )

அப்படி, ஸீல் வகையினங்கள் அழியும் நிலை வரும்போது, சில நிறுவனங்கள் கொய்யோ மொய்யோன்னு கத்தி, இந்த விளையாட்டையெல்லாம் தடை செய்வாங்க. அட்லீஸ்ட், ஸீல்ல ரெண்ட புடிச்சு ஒரு Zooல வச்சு, அதை குட்டி போட வச்சு, நம்ம வருங்காலத்துக்கு ஸீல் இதுதான்னு கண்டிப்பா காட்டுவாங்க.

2007ல் வெளிவந்த "அடப்பாவமே, போதுங்கய்யா விட்டுடுங்க பாவம்யா பாவம்!" என்ற சர்வேயின் முடிவைப் பார்த்தாலே நமது லட்சணம் நன்கு விளங்கிவிடும்.

பி.கு1: அடேயப்பா, மேற்கோள் காட்டர அளவுக்கு போன வருஷம் சர்வே போட்டிருக்கோம்ல :)

பி.கு2: பாரதி நாதனுக்கு காது குத்தும் ஒரு சுபயோக சுபதினத்தில், ஒரு பாவப்பட்ட ஆட்டை ஃபோட்டோவெல்லாம் எடுத்து, அதுக்கப்பால அதை மர்டர் பண்ணி, மட்டன் பிரியாணி செஞ்சு, நமக்கெல்லாம் பார்சல் அனுப்பாம, மொத்தமா ரவுண்டு கட்டி அடிச்ச கொடுமையும் நடக்கத்தான் செய்யுது. இளவஞ்சியை மிறுக வதை சட்டம் தண்டிக்குமா? ( ;) ஹி ஹி )

பி.கு3: கொசு, கறப்பான் பூச்சியெல்லாம், ரவுண்டு கட்டி சாகடிக்கறமே, அந்த ஜீவராசி extinct ஆயிடுச்சுன்னா பரவால்லயா? அது என்ன ஞாயம்? அப்ப, மனுஷனுக்கு தேவையானது மட்டும் இருக்கணும், மத்ததெல்லாம் எப்படியோ போவலாமா? :)


லூஸ்ல விடுங்கப்பா. நம்ம ப்ரச்சனையே ஆயிரத்தெட்டு இருக்கு. அதை மொதல்ல கவனிப்போம்.

கருத்ஸ்?

Monday, May 19, 2008

ஹைதராபாத் ஏர்போர்ட்டும் நம்ம பெருமூச்சும்

ஹைதராபாத் ஏர்போர்ட்டு சூப்பரா இருக்காமே? பயலுவ சொன்னானுவ.

நம்மளதும் (சென்னன) பரவால்ல. போன வருஷம் வந்த போது ஓரளவுக்கு நல்லாவே இருந்தது. சுத்த பத்தமாத்தான் வச்சிருந்தாங்க. முத்திரை குத்தர சிடுமூஞ்சிகள் சிலதைத் தவிர, எல்லாம் சுகமே.

ஆனா, இப்படியே ரொம்ப நாளைக்கு தாங்காது. புச்சு சீக்கிரம் கட்டியாகணும்.

தெற்காசியாவிலேயே நீண்ண்ண்ண்ட ரன்வேயாம்:


ஏழு மாடி உள்தளமாம்:


ஏ.ஆரின் இசையாம்:


ப்ரமாதம்.

நல்லாருந்தா சரி.

:)

Sunday, May 18, 2008

காது, ரோடு, பள்ளம், கலெக்டர், கவருமெண்டு,செவிடு, சங்கு

என்னத்த சொல்ல?

ஆரம்பத்துல சூடாதான் போச்சு. விஷயத்தை அனுப்பின உடனே, டக்குனு ஒரு நெம்பரு குடுத்தாங்க. அதுக்கப்பரம் கொஞ்ச நாள்ளையே, அத சேர வேண்டிய எடத்துக்கு அனுப்பியும் வச்சாக.

அப்பரம்தான் வழக்கமான இழுவை ஆரம்பிச்சுது.

போக வேண்டிய எடத்துக்கு போச்சா? பாக்க வேண்டியவங்க பாத்தாங்களா? ஏதாவது செய்வாங்களா?

ஒண்ணுமே புரியல. ஒரு ஈ.மடல் அனுப்பி, இப்படி இப்படி சங்கதின்னு சொன்னாக்கூட ஓரளவுக்கு ஆறுதலா இருக்கும்.

ஹ்ம். என்னத்த சொல்ல?

இதுவரைக்கும் அனுப்பினது எல்லாமே இந்த மாதிரி தான் நிக்குது.

வேற ஒண்ணுமில்லீங்க, நம்ம சென்னையில், ஒரு ரோடு போடறதுக்கு முன்னாடி, ஏற்கனவே இருக்கர பழைய ரோட சொரண்டி எடுத்துட்டு ஒழுங்கா போடாம, பழைய ரோட்டு மேலேயே ஜல்லிய கொட்டி, தார ஊத்தி ரோடு போடறாங்க.
அட, இதில என்னங்க பெரிய விஷயம் இருக்கு? எப்படியோ ஒண்ணு ரோடு போட்டா நல்லதுதானேன்னு நெனப்பீங்க. ஆனா, பல எடங்கள்ள, இப்படி பொறுப்பில்லாம ரோடு போடறதால, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் இருக்கர வீடுகள், கீழ கீழ போயிக்கிட்டே இருக்கு.
மழை நேரத்தில் செம டார்ச்சர் இதனால்.
ஓரடி போனா பரவால்ல, திருவொற்றியூர் மாதிரி இடங்களில், பாதி வீடே மண்ணுக்குள்ளதான் இருக்கு.

இதைப் பத்தி ஒரு பெட்டிஷன் நம்ம கவருமெண்டுக்கு அனுப்பி ஒண்ணும் பெரிய பதில் வராததால், வந்த பொலம்பல் தான் மேலே சொன்னது.

பெட்டிஷன், இப்ப இவங்க கிட்ட இருக்காம், மூணு மாசமா.
Dr.S. Swarna, IAS
Spl Officer to C M Spl Cell
Fort St. George, Secretariat
Chennai

ஆனா, ஒரு வெவரமும் இல்ல.

உள்ளூர்ல இருக்கரவங்க, ரெண்டு ரூவா செலவு பண்ணி, பெட்டிஷன்ல இருக்கர மேட்டர ப்ரிண்ட் பண்ணி இந்த முகவரிக்கு அனுப்பினீங்கன்னா நல்லாருக்கும். நானும் அனுப்பி வைக்கறேன். உதவுங்க ப்ளீஸ். வீடெல்லாம் மெதுவா, விட்டலாச்சாரியார் படம் மாதிரி பூமிக்குள்ள போயிக்கிட்டே இருக்கு. இப்படியே போனா, பாதாள உலகம், பல இடங்களில் காணக் கிட்டும்.

இதைப் பத்தி ஏற்கனவே பொலம்பியது இங்கே.

ஹ்ம்!

Thursday, May 15, 2008

ஹாப்பி வெள்ளி சர்வே ~ ஜா'வா, சு'வா?

நண்பர்காள். வாங்க வாங்க.

ரொம்ப நாளா ஒரு கொழப்பமுங்க.

தமிழ் சினிமாவப் பத்தி பேச ஆரம்பிச்சா, அப்படியே நழுவி தமிழிசையைப் பத்தி பேச ஆரம்பிச்சு, அப்படியே நழுவி, ராஜாவா ரஹ்மானான்னு டைவர்ட் ஆகி, எஸ்.பி.பி சூப்பரா யேசுதாஸ் சூப்பரான்னு பேசி, இன்னும் ஒரு படி மேலே போய், சுசீலா கலக்கலா ஜானகி கலக்கலான்னு இழுப்போம்.
நானும் என்னமோ, எனக்கு இவங்கெல்லாம் மாசா மாசம் சம்பளம் அனுப்பர மாதிரி, ராஜா, எஸ்.பி.பி, ஜானகிக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருப்பேன்.

நம்ப என்ன வாதாடினாலும், கத்தினாலும், இவங்க எல்லாருமே A-Class என்பதில் மறுப்பேதுமில்லை.
ஆனாலும், எல்லாருக்கும் அவங்கவங்க விருப்பு வெறுப்பு இருக்குமில்ல. எல்லாரையும் புடிச்சிருந்தாலும், யாராச்சும் ஒருத்தர தூக்கலா புடிச்சிருக்குமில்ல?

நம்ம மத்தியில் "யார் மனசுல யாரு, அவங்களுக்கென்ன பேருன்னு" கண்டுபிடிக்கவே இந்த சர்வே.

கானா பிரபாவின், றேடியோஸ்பதியில், பிடிச்ச அஞ்சு பாட்டை அனுப்பச் சொல்லியிருந்தாரு. அதுல தெரியாத் தனமா, ஜானகிதான் சூப்பருன்னு சொல்லிட்டேன்.
ஜி.ரா கலிபோர்னியாவுக்கு, ஆட்டோ அனுப்ப ட்ரை பண்ணிக்கிட்டிருக்காராம் :)

இனி நீங்களே சொல்லுங்க. உங்களுக்கு சுசீலா பாடரது ரொம்ப பிடிக்குமா? ஜானகி பாடரது ரொம்ப பிடிக்குமா?

ஜானகி ஸேம்பிள்:


சுசீலா ஸேம்பிள் (நன்றி ஜி.ரா):


இனி, வாக்குங்க.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி. ரெண்டு பேரும் டாப்-ஸ்டார்ஸ்.
ஆனா, உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்ச பாடகி யாருன்னு யோசிச்சிட்டு குத்துங்க.
அப்படியே உங்களுக்கு இவங்க பாடின பாட்டுல ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது எதுன்னும் சொல்லிட்டுப் போங்க.



பி.கு: சிறந்த பாடகர் 2007க்கு உனக்கென இருப்பேன், பாட்டை பாடி அனுப்பச் சொன்னேன். VSK, ஷைலஜா, உள்பட, எல்லாரும் டிமிக்கி கொடுத்துட்டே இருக்கீங்க. நல்லால்ல.

நன்றி! ஹாப்பி வெள்ளி!

வாழ்க்கை வாழ்வதற்கே! ;)

Tuesday, May 13, 2008

கூகிள் அல்வா + சர்வே

google adsense கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழ் பக்கங்களுக்கும், விளம்பர சேவையத் தர ஆரம்பித்திருந்தது.
'call tamilnadu', 'call india', 'travel to india','free tamil mp3' அது இதுன்னு பல விளம்பரங்கள் வரத் தொடங்கியிருந்தன.

சரின்னு, நம்மில் பலரும் (என்னையும் சேர்த்து), விளம்பரத்தை நம் பதிவுகளின் மூலையில் இடைச் சொறுகி, கொஞ்சம் சில்லரையை தேத்தலாம்னு களம் இறங்கியிருந்தோம்.

தினமும், சி.சிங்'னு சில்லரை, உண்டியலில் சேர்ந்து, முதல் செக்கும் வீடு வந்தது ($103).
ஹாஹா நல்லாருக்கே, அடிக்கடி ஒரு போட்டி வைக்க ஸ்பான்ஸர் கெடச்சாச்சேன்னு ஹாயா, சாஞ்சா, திடீர்னு, விளம்பரங்கள் வருவது நின்னு போச்சு.

ஒண்ணு, 'call tamilnadu' கம்பெனியரின் விளம்பர பட்ஜெட் காலியாகியிருக்கணும்.
இல்லண்ணா, கூகிள் ஆசாமிகள், எங்கையாவது சொதப்ப்யிருக்கணும்.
அதுவும் இல்லண்ணா, 'call tamilnadu' ஆசாமிகள், நம் வாசகர்களின் வரவினால் பெரிய லாபம் இல்லண்ணு, விளம்பரம் தருவதை நிறுத்தியிருக்கணும்.

இப்பெல்லாம் 'பொது சேவை விளம்பரங்கள் தான்' வருது.

இந்த மாதிரி
"Help those most in need
Eradicate extreme poverty & hunger Support Concern Worldwide

பொது சேவை விளம்பரம் தருவது Google
"

ஏதோ, நம்மால் ஆன, பொது சேவை இப்படி தொடருவதில் எனக்கொரு ப்ரச்சனையும் இல்லை ;)


உங்க பக்கங்களில் எப்படி? ஸேம் ப்ளட்?

வாக்குங்க.

Monday, May 12, 2008

Awesome California - Rancho San Antonio reserve

எல்லா வாரமும் சனி, ஞாயிறுகள், பாதி தூக்கத்திலும், மீதிப் பாதி, படங்கள் பார்ப்பதிலுமே சரியாய்ப் போகும்.
ஆடிக்கொரு தடவைதான், வெட்டியா பொழுதை கழிக்காம, எங்கையாவது வெளீல போகலாமேன்னு முடிவு பண்ணி போவேன்.

நான் வசிக்கும் நகரத்தைச் சுற்றி இயற்கை வளம் பொங்கும் காடுகள்,மலைகள்,கடற்கரைகள், ஏரிகள், திராட்சைத் தோட்டங்கள் என்று பஞ்சமே இல்லாமல் பல இடங்கள், தடுக்கி விழுந்தால் இருக்கும் தூரத்தில் உண்டு.

இந்த எல்லா இடங்களையும் ரொம்ப அழகா பராமரிச்சு, எல்லாரும் சுலபமா வந்து போக ஏதுவா பல வசதிகள் செஞ்சு வச்சிருப்பாங்க.
குறிப்பா சொல்லணும்னா பார்க்கிங் வசதிகள், சாப்பிட வசதிகள், குடி தண்ணீர், கழிப்பறைகள், வழித்தடங்கள் என்று பக்காவா திட்டம் தீட்டி ஒவ்வொரு இடத்தையும் சும்மா 'நச்'னு வச்சிருப்பாங்க.

இதில் மேலும் சிறப்பு, இந்த இடங்களில் பலவும், ஓ.சியில் கட்டணம் இல்லாமல் சென்று பார்க்கக் கூடிய விதத்தில் அமைத்திருப்பது.

இதில் மேலும் மேலும் சிறப்பு, இந்த இடங்களுக்கு வரும் பொது மக்கள், எந்த அசுத்தமும் செய்யாமல், சுத்தமாக வைத்திருப்பது.

இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம். என்னத்த சொல்ல? தொரை தொரைதான்.
அவன் ஊர சூப்பரா வச்சிருக்கான்.

கடந்த ஞாயிறன்று எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கர Rancho San Antonio reserve என்னும் ஒரு Hiking Trailக்கு மலையேரச் சென்றோம்.

ஒரு அழகான பச்சைப் பசேல் மலையில் காடுகளுக்கிடையில், வழித்தடம் செய்து, மக்கள் சுற்றிப்பார்க்க வசதி பண்ணி வச்சிருக்காங்க. இங்க வர முக்கால் வாசி பேரு, இந்த காட்டுக்குள்ள நடக்கரது ஒரு உடற்பயிற்சியா செய்யராங்க.
ஜிங்கு ஜிங்குனு மலை மேல எல்லாரும் ஓடரத பாத்தா எனக்குதான் மூச்சு வாங்கிச்சு.

நான் ஓட மெனக்கெடல. பொறுமையா வனப் பகுதியை ரசிச்சமா, மரஞ்செடிகொடிகளை படம் புடிச்சோமான்னு இருந்தேன்.

செம அழகான இடம். சில இடங்கள் கேரளாவை நினைவு படுத்தின.
சின்ன ஓடம், பச்சைப் பசேலென நெடுக வளர்ந்த மரங்கள், குருவிச் சத்தம், ஆங்காங்கே தென்பட்ட நரிகள், பட்டாம்பூச்சி... அப்பப்பா, கண்ணுக்கும், காதுக்கும், உடம்புக்கும் குளிர்ச்சியூட்டிய அருமையான இடம்.

இந்தப் பக்கம் (வ.கலிபோர்னியா) வந்தீங்கன்னா, கண்டிப்பா போய் பாருங்க.

ட்ரிப்பில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு. க்ளிக்கினா Flickr பக்கத்தில் பெருசா பாக்கலாம்.


Flickrல் படங்கள் பார்க்க முடியா பதிவர்களுக்கு, கொசுறு படம் இங்கே :)


கருத்ஸ்?

Sunday, May 11, 2008

கடிது கடிது ஜோடி தேடுதல் கடிது

கேமராவை வெளீல கொண்டு போய் ரொம்ப நாளாச்சு. சமீபகாலமா இன்-டோரிலேயே படங்கள் க்ளிக்கும் சூழ்நிலை உருவாகிடுச்சு. நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு, அஃபீஷியல் ஃபோட்டோகிராபர் ஆகும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஃபோட்டோகிராபர் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளேன். (ஹி ஹி).

பிறந்த நாள் விழாக்கள், வளைகாப்பு, ஊருவிட்டு ஊரு போகுதல், ஊருக்குள் வருதல், புதுமணத் தம்பதிகளை வரவேற்றல் என்று அடிக்கடி நண்பர்கள் வட்டத்தில் ஏதாவது ஒன்று அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.

எல்லா விழாவிலும், ஒரு இருநூறு க்ளிக்கினா, எப்படியும், ஐம்பது படங்கள் சுமாராவாவது தேறிடுது. GIMP இல்லையேல், அந்த ஐம்பதும் தேறுவது சந்தேகம்தான்.

அப்படியே, மெதுவா, சினிமாட்டாகிராஃபி படிச்சு, பி.சி.ஸ்ரீராம் மாதிரி, சினிமாவுல படம் புடிக்கணுங்கர ரொம்ப நாள் ஆசைய நிறைவேத்திடவேண்டியதுதான். ஹ்ம்.
ம.நெ.கு.நா'ன் அருள் புரியரானான்னு பாக்கலாம்.

சரி மேட்டருக்கு வருவோம்.

இந்த தடவ PIT குழுவின் மாதாந்திர புகைப்படப் போட்டிக்கான தலைப்பு "ஜோடி".

கடற்கரை ஓரத்துல காத்து வாங்கர ஜோடிகளை, பின்னிருந்து, அவங்களுக்கு தெரியாம எடுக்கலாம்னுதான் நெனச்சிருந்தேன். ஆனா, நேரம் ஒத்துழைக்கல.

சரி, வீட்டுக்குள்ளேயே ஜோடிய தேடலாம்னு முடிவு பண்ணி, எல்லாத்தையும் நோட்டம் விட்டேன்.
செருப்பு, உப்பு/பெப்பர் ஜாடி, ரெண்டு முட்டை, பூக்கள், அது இதுன்னு கண்ல பட்டதெல்லாம் இம்ப்ரெஸ் பண்ணலை.

கடைசியா கண்ணுல மாட்டின டீ.கப் தான், இன்னிக்கு நம்ம ஜோடி.
டீ.கப் க்ளிக்கனதும், பல வருஷமா வீட்ல இருக்கும், ரெண்டு கழுதை பொம்மைஸ் கண்ணுல பட்டு, அதையும் க்ளிக்கிணேன்.

அப்பாலிக்கா, இன்னிக்கு வீட்டுப் பக்கத்துல ஒரு மலைக்கு ஹைக்கிங் போனபோது, பின்னாலிருந்து ஒரு ஜோடியையும் க்ளிக்கினேன் ( ஹைக்கிங் பத்தி தனிப் பதிவு அப்பாலிக்கா போடறேன்).

முதல் படம் PIT போட்டிக்கு, மற்றவை பார்வைக்கு.









கருத்ஸ்?

Wednesday, May 07, 2008

குருவி - திரை விமர்சனம்

பெரிய எதிர்பார்ப்பு இல்லாம ஒரு படம் பாக்க போணோம்னா, படம் எவ்ளோ சொதப்பலா இருந்தாலும், எரிச்சல் வராம, பி.பி ஏறாம தப்பிச்சுடலாம்.
இது என்னுடைய சமீப காலத்திய அனுபவம்.

என்னதான் தரணி இயக்கியிருந்தாலும், த்ரிஷா டேன்ஸ் ஆடியிருந்தாலும், விவேக் கிச்சிலிக்கா மூட்டியிருந்தாலும், வித்யாசாகர் மேளம் அடித்திருந்தாலும், சுமன்/ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா சீனிலும் டென்ஷனாகியிருந்தாலும், மாளவிகாவும் நாசரும் சும்மா வந்து போனாலும், விஜய் படமாச்சே என்ற ஒரே காரணத்தால், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமதான் படம் பாக்க ஆரம்பிச்சேன். ( அ.த.ம பாத்த எஃபெக்ட்டு இன்னும் குறையாததால் இப்படி ஒரு முன்னேற்பாடு.)

படம் ஒண்ணும் பெருசா மோசமில்லை.

மணிவண்ணன், விஜயின் அப்பா, சுமன்/ஆஷிஷ் கிட்ட, கடப்பா/ஆந்திராவில் வைரத்தை ஜல்லட பண்ணி எடுக்கும் கொத்தடிமைகளில் ஒருவரா இருக்காராம்.
(கடப்பால வைரமாம், அத தண்ணீல ஜல்லிச்சு ஜல்லிச்சு எடுக்கராங்களாமாம்...)
வைர வயலில் ஏகப்பட்ட செக்யூரிட்டி, யாரும் எஸ்கேப் ஆகாமல் இருக்க, கரெண்ட்டு வேலி, கொண்டா ரெட்டியின் ரௌடி, கடப்பார, கோச்சான்னு காவல் டைட்டு.

வைர வயல் காட்சிகள் நல்லாவே இருந்தது. கலரும், அந்த செட்டிங்கும், அங்கிருக்கும் கடப்பா ரௌடிகளும் நல்லாவே இருந்துச்சு.

மணிவண்ணன், எல்லா படம் மாதிரியும், "டேய் எம் பையன் வந்து எங்கள காப்பாத்துவாண்டா"ன்னு சூளுரைச்சிடறாரு.

அப்பாலிக்கா என்ன?

ட்ராலி ஷாட், விஜய், விவேக்னு படம் ஜாலியா ஓடுது கொஞ்ச நேரம்.

கடனில் இருக்கும் வீட்டை மீட்க, ஒரு துட்டு வசூலுக்காக, 'குருவியாய்' மலேஷியா பொறப்படறாரு.
(குருவி => மலேஷியாவிலிருந்து எலெக்ட்ரானிக்ஸ் சாமானெல்லாம் கொண்டுவர, ஓ.சி டிக்கெட்டில் அனுப்பப்படும் ஒரு மெஸெஞ்சர் மாதிரி).

இப்படியே ஜாலியா ஓடர படம், விஜய் வில்லன பாத்ததும், அவுத்து விட்ட பலூனாட்டம், ட்ராக் மாறுது.

இவரு டயலாக் விடரதும், பறந்து பறந்து அடிக்கரதும் (Crouching Tiger, Hidden dragonனு ஒரு படம் வந்தாலும் வந்துது, இந்த கயிறுல பறந்து அடிக்கர கொடுமை தாங்கலடா சாமி) நம்மை ஸோஃபாவின் நுனிக்கே பலமுறை கொண்டு வருகின்றன. எஸ்கேப் ஆகத்தான்.

சில சேம்ப்பிள் டயலாக்ஸ்:
1) திரும்பிப் போறவன் இல்லடா, திருப்பி குடுக்கரவன்
2) ஆம்பளன்னா யாரு தெரியுமாடா? blah blah blah
3) நாங்க அப்பன் பேச்ச கேக்க மாட்டோம், அது வயசு. ஆனா, அப்பனுக்கு ஒண்ணுன்னா எவன் பேச்சையும் கேக்க மாட்டோம்.
4) காடுன்னா நான் சிங்கம், வானம்னா இடி, கடல்னா சுரா, காத்துன்னா சூறாவளி. சும்மா சுத்தீதீதீதீ சுத்தீ அடிக்கும். (இந்த டயலாக் சொல்லிக்கிட்டே நடந்து வரது ஜூப்பர்..ஸ்ஸ்ஸ்ஸ்)

வில்லன் சுமன் கிட்டேயிருந்து ஒரு வைரத்தை லவுட்டிக்கிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆகும் விஜய், அவரைத் தேடித் துரத்தும் சுமன் & கோ., இப்படி நகரது பிற்பாதி.
இடயில், திரிஷா (வில்லனின் தங்கை), விஜயின் பின்னால் சுற்றுவதும், சம்பிரதாயப்படி நடக்குது.

சண்டை காட்சிகள் நல்லாவே எடுத்திருக்காங்க, சில சண்டைக் காட்சிகளின் நீளம் டூ.மச்சு.
குறிப்பா, விஜய் ஒரு சீன்ல, மொட்டை மாடிலேருந்து ஓடர ட்ரெயின புடிக்க குதிப்பாரு.
செம ஷாட்.
ஷாட்1) மாடியிலிருந்து ட்ரெயினைப் பார்க்கும் விஜய்
ஷாட்2) வேகமா வந்து கொண்டிருக்கும் ட்ரெயின்
ஷாட்3) விஜய் ஆகாசத்தைப் பாப்பாரு
ஷாட்4) ஆகாசத்துல ஒரு பருந்து பறக்குது
ஷாட்5) மொட்டை மாடிலேருந்து ஸ்லோ மோஷனில் ரயிலை நோக்கிப் பறக்கும் விஜய்
ஷாட்6) ரயில் மேல் லேண்ட் ஆகாமல், அதுக்குப் பக்கத்துல லேண்டாகராரு விஜய்
ஷாட்7) ரயிலுடன் 60 கி.மீ வேகத்தில் ஓடும் விஜய்
ஷாட்8) அப்படியே ஜம்ப் அடிச்சு ரயிலுக்குள்ள ஏறிடறாரு விஜய்
ஷாட்9) நடு விரலை வில்லனுக்கு காட்டறாரு விஜய்
ஷாட்10) ஸ்ஸ்ஸ்ஸ் நமக்கு பெருமூச். சீன் முடிஞ்சுடுச்சு. ( தரணி சார்? என்னாச்சுங்க உங்களுக்கு? )

இப்படி அப்பப்ப வரும் அபத்தங்கள் இருந்தாலும், விறுவிறுப்புக்கு குறைச்சலில்லாம போயிட்டிருக்குது படம்.

எங்கையும் பாட்டு வைக்க அனுமதிக்காத விறு விறு திரைக்கதையில், அனைத்து பாடல்களும், கனவுப் பாட்டாக ஒரு இடைச் செறுகல்.

வித்யாசாகர் ஏமாத்தல. பலானது பலானது, தேன் தேன், மொழ மொழன்னு வரிசையா கலக்கிட்டாரு.

இப்படியாக நகரும் கதையில், கடைசியில், வில்லனை தொம்சம் பண்ணி, வைரத்தை வடிகட்டும் கொத்தடிமைகளை காப்பாத்தறாரா, த்ரிஷாவை கைபுடிக்கறாரா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

விஜய் ரசிகர்களுக்கு, நல்ல தரமான விருந்து.
(மேலே சொன்ன ஷாட்1 டு ஷாட்10 விருந்தான்னு யாராச்சும் விஜய் ரசிகர் வந்தீங்கன்னா சொல்லிட்டுப் போங்க).

த்ரிஷா, அழகு. எல்லா சீனிலயும் ஓடிட்டே இருக்கர வேலை. வயசாவுது, ஜிவ், மிஸ்ஸிங். காமெடி முயற்சி பண்ணியிருக்காங்க.

கடப்பா, ஆந்திரா வைர வயல், நல்லா ஆங்கிலப் பட கலரில் அம்சமா எடுத்திருக்காங்க.

பாட்டெல்லாம் கச்சிதமா பொறுந்திச்சு.

விவேக், ஓ.கே.

விஜய், அவரு வேலைய கச்சிதமா செஞ்சிட்டாரு.

தரணி, ஹ்ம்.

லெஸ் டென்ஷன், எஞ்சாய் லைஃப்!


பி.கு: (latest addition)
இந்த கொடுமையெல்லாம் போதாதுன்னு, இப்ப லேட்டஸ்டா தெரிஞ்சுகிட்ட விஷயம். படத்தின் 20 நிமிட காட்சிகள், ஒரு தெலுங்கு படத்திலிருந்து, சீன்-பை-சீன் காப்பியாம்.


என்ன கொடுமைங்க இது?