recent posts...

Wednesday, February 27, 2008

அதுதான் என்னுடைய நோபெல் - by சுஜாதா

அருமையான கட்டுரை, முழுசா படிங்க.

ஆ.வி, 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா...

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.


நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.

"எதுக்குப்பா?"

"தொடுங்களேன்!"

சற்று வியப்புடன் தொட்டார்.

"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."

"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.

அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"

"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".

ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.

நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

நன்றி: தேசிகன் (அங்கயிருந்து தான் காப்பி/பேஸ்ட்)

15 comments:

SurveySan said...

இத படிச்சுட்டு, சில பேர், மனசு வருத்தப்படும் என்ற நம்பிக்கையில், நான் தூங்கப் போறேன் :)

SurveySan said...

டிஸ்கி: இதுவரை ஒரு சுஜாதா கதை கூட படித்ததில்லை. சினிமா பாத்ததோட சரி.
அவரின் கதைகளைத் தேடிப் படிக்கணும்னு இப்ப ஆவல் பிறக்குது.

ambi said...

இரண்டாம் முறையாக படித்து விட்டு(yeeh, read the same in the book itself) ஒரு சிறிய பெருமுச்சு வந்தது. :((

May his soul rest in peace.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

silarin maranam nammai oru kanam niruthividum...

கைப்புள்ள said...

Wow!!! Thanks for sharing this brilliant yet moving article with us. Its indeed a fitting tribute to a great writer.

Sundar Padmanaban said...

//இத படிச்சுட்டு, சில பேர், மனசு வருத்தப்படும் என்ற நம்பிக்கையில், நான் தூங்கப் போறேன் :)

டிஸ்கி: இதுவரை ஒரு சுஜாதா கதை கூட படித்ததில்லை. சினிமா பாத்ததோட சரி.

//

For once, I think ignorance is not bliss! :-(

படிக்கையில் விழியில் நீர் பெருகுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

நேற்றும் இன்றும் எந்தப் பதிவுகளையும் செய்திகளையும் வாசிக்காமலேயே இருந்திருக்கலாம் என்று இந்த நொடி வரை தோன்றிக்கொண்டிருக்கிறது.

"அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவு செய்து யாரும் சுஜாதாவைக் கணித்துவிடாதீர்கள் - அதுவும் பெரும் சமரசம்தான் - கமல்ஹாஸன்".

-சுந்தர்

மாதங்கி said...

அருமையான ஒரு கட்டுரை சர்வேசன்

சின்னப் பையன் said...

அவரது மறைவு செய்தி கேட்டு எனக்கு நினைவுக்கு வந்தது இதே கட்டுரைதான்.....:-(

துளசி கோபால் said...

ஹும்.......... எப்பேர்ப்பட்ட எழுத்து.

இதுபோல எழுத மட்டும் எனக்கு வந்தால்............

அடுத்த நிமிஷமே மூச்சை நிறுத்திக்கலாம் னு தோணுது.

Radha Sriram said...

ஹ்ம்ம் படிக்க படிக்க மனசு கனத்து போகிறது. எத்தனை லாவகம் இவர் எழுத்தில்??

//டிஸ்கி: இதுவரை ஒரு சுஜாதா கதை கூட படித்ததில்லை.//

படிக்க ஆரம்பிச்சீங்கன்னா கீழேவைப்பதற்கு யோசிப்பிங்க. எனக்கெல்லாம் வசந்த் மேல ஒரு க்ரஷே இருந்தது ஒரு காலத்தில்!!அவ்வளவு தீவிரமா படிச்சிருக்கேன்.

ஆ.கோகுலன் said...

சிறப்பான பொருத்தமான ஞாபகமூட்டல். எனது பதிவின் தொடக்கத்திலும் இதையே குறிப்பிட்டிருந்தேன். அவர் 'அதற்கு' எவ்வளவு தயாராக இருந்திருக்கிறார்..?!

Sundar Padmanaban said...

I re-read this article for the nth time again this morning.

Going for a coffee, wiping my tears!

SurveySan said...

Sundar,

I re-read it after seeing your comment.
it is indeed very touching.

everyone, thanks for stopping by.

SurveySan said...

Sundar,

I re-read it after seeing your comment.
it is indeed very touching.

everyone, thanks for stopping by.