"டாக்டர், எல்லாம் நார்மலா இருக்குல்ல?" என்று ராமச்சந்திரன் டாக்டர் சகுந்தலாவை கேட்டுக் கொண்டிருந்தார். அருகில், அவர் மகள் சுந்தரி நிறை மாத கர்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
"எல்லாம் சரியாயிருக்கு. டோண்ட் வொரி மாமா", இது டாக்டர்.
"திரும்ப திரும்ப கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதேள். இப்பெல்லாம் எந்த ஹாஸ்பிட்டல்லையும் நார்மல் டெலிவரியே பண்றதில்லையாமே? காசுக்காக ஸிஸேரியன் பண்ணிடறாளாமே. அப்படியெல்லாம் இங்க ஆயிடக்கூடாதுன்னு தெனமும் கடந்து அடிச்சுக்குது", ராமச்சந்திரனின் குரலில் பெரிய கவலை தெரிந்தது.
"மாமா, கவலையே படாதேள். எந்த டாக்டரும் அப்படி வேணும்னு பண்ண மாட்டா. வேற வழியே இல்லன்னாதான், ஸிஸேரியன் ஆப்பரேஷன் எல்லாம் பண்ணுவா. சுந்தரிக்கு எல்லாம் நன்னாருக்கு, நார்மல் டெலிவரிக்கு நான் கியாரண்டி" சகுந்தல்லா டாக்டர் அமைதியாக ராமச்சந்திரனுக்கு ஆறுதல் கூறினார்.
"ஏன்னா, டாக்டர்தான் நார்மல் நார்மல்னு சொல்றாளே, ஏன் திரும்ப திரும்ப நச்சரிச்சுண்டே இருக்கேள்? எல்லாம் அம்பாள் அனுக்கிரஹத்துல நன்னா நடக்கும்", சுந்தரியின் அருகில் இருந்த புவனேஷ்வரி மாமி ராமச்சந்திரனை அதட்டும் குரலில் கூறினார்.
முப்பது வருட தாம்பத்யத்தில் அடங்கிப் போயே பழக்கப்பட்ட ராமச்சந்திரன், அதற்கு மேல் வாய் திறக்க முடியாமல் அமைதியானார்.
*** *** **** **** ****
மே பதினைந்தாம் தேதிக்கு அருகாமையில் டெலிவரி ஆகலாம் என்று டாக்டர் சொல்லியிருந்தார். நாள் நெருங்க நெருங்க அனைவருக்கும் பதட்டம் அதிகமாகியிருந்தது.
வருவோர் போவோரெல்லாம், "கண்டிப்பா ஸிஸேரியன் தான் பண்ணுவா. நார்மல்னா பத்தாயிரம். ஸிஸேரியன்னா ஒரு லட்சம் வரை கறக்கலாமே. விட்ருவாளா லேசுல?" என்று திகிலுக்கு திகிலூட்டுக் கொண்டிருந்தார்கள்.
சுந்தரியின் கணவன், சுகுமாரன். ஒரு பெரிய அலுவலகத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவன். வேலை விஷயமாக சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்க வேண்டியிருந்ததால், சுந்தரியின் அருகில் இல்லாமல் போவது பெரிய கவலை அவனுக்கு. தினம் தினம், ராமச்சந்திரனை போனில் அழைத்து, "மாமா, எல்லாம் நார்மல்தானே? என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் ஆஸ்பத்திரிகாரன் ஸிஸேரியன் பண்ணி வச்சுடுவான்னு சொல்லிண்டுருக்கா. நீங்க டாக்டர் கிட்ட தீர்மானமா சொல்லிடுங்கோ. பணம் வேணும்னாலும் அதிகமா கொடுத்திடலாம், ஆனா நார்மல் டெலிவரிதான் பண்ணனும்னு. வேணும்னா எங்கப்பாவ கூட கூட்டிண்டு போங்கோ. அவர் அதட்டினா டாக்டர் கேப்பா" என்று தினம் தினம் ராமச்சந்திரனை தொய்த்தெடுத்தான்.
*** *** **** **** ****
"மாப்ள, சுந்தரிக்கு குழந்தை பொறந்துடுத்து. செக்கச் செவேல்னு உங்கள மாதிரியே கொழு கொழுன்னு அழகா இருக்கான். சுந்தரியும் சௌக்யமா இருக்கா. நீங்க எப்ப வரேள்?" என்று புவனேஷ்வரி, சுகுமாரனுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள். அருகில் ராமச்சந்திரன், மகிழ்ச்சியும், கலக்கமும் கலந்த சவரம் செய்யாத முகத்துடன் நின்று கொண்டு புவனேஷ்வரியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை. நார்மல் டெலிவரிதானே? நான் இன்னும் ரெண்டு மாசமாகும் வர" என்று மகிழ்ச்சி கலந்த குரலில் சுகுமாரன் கேட்டான்.
"இல்ல மாப்ள, ஸிஸேரியந்தான் பண்ணா. குழந்தை பொஸிஷன் சரியில்லையாம். லேட் பண்ணா காம்ப்ளிகேட் ஆயிடும்னு, சகுந்தலா அப்படி பண்ணிட்டா. அது பரவால்ல மாப்ள, குழந்தையும் சுந்தரியும் நன்னாருக்கா. நீங்க கவல்ப்படாதேள்." என்று புவனேஷ்வரி எடுத்துக் கூறினாள்.
"என்னது? ஸிஸேரியனா? நேத்து கூட எல்லாம் நார்மல்னு சொல்லிட்டிருந்தேளே? ஏன் ஸிஸேரியனுக்கு சம்மதிச்சேள்? நான் வந்து அவா மேல கேஸ் போட்டு என்ன பண்றேன் பாருங்கோ?" என்று அலர ஆரம்பித்தான் சுகுமாரன்.
"அதெல்லாம் எதுக்கு மாப்ள? நன்னாதாயிருந்தா. இன்னும் அஞ்சு நாள் இருக்கு டெலிவரிக்குன்னு நேத்து சொன்னா. ஆனா, இன்னிக்கு செக்கப்புக்கு வந்தா இப்படி ஆயிடுத்து. ஆண்டவன் புண்ணியத்துல சௌக்யாமா இருக்காளே மாப்ள. அதப் பாருங்கோ" என்று புவனேஷ்வரி ஆறுதல் கூறினாள்.
"அதெல்லாம் அப்படி விட முடியாது அத்தை. நான் வந்து என்ன பண்றேன் பாருங்கோ" என்று கோபக்கார சுகுமாரன் அலறிக் கொண்டே இருந்தான்.
*** *** **** **** ****
"பா..ட்..டி" சொல்லுடா தங்கம் என்று புவனேஷ்வரி இரண்டு மாத பேரக் குழந்தையை மடியில் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.
"சுந்தரி, என்னமா சிரிக்கிறான் பாருடி. அரசாளப் போறான் பாரு. அன்னிக்கு மட்டும் நான் சகுந்தலாகிட்ட அப்படி சொல்லன்னா, உன் பையன் ஃப்யூச்சரே நாசமா போயிருக்கும்டி" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியே புவனேஷ்வரி சொல்லிக் கொண்டிருந்தார்.
"நாலு நாள் கழிச்சு நார்மல் டெலிவரி ஆயிடும்னு, சகுந்தலா சொன்னபோது எனக்கு தூக்கி வாரிப் போட்டுதுடி. ஸ்வாதி நட்சத்தரத்துல பொறந்துதான், நம்ம எதுத்தாத்து ரகு உருப்படாம போயிட்டான். விட்ருவேனா? சகுந்தலாவ தனியா கூட்டிண்டு போயி, இன்னிக்கே ஸிஸேரியன் பண்ணி எடுத்துடும்மா. நல்ல நாளும் கெழமையும் நட்சத்திரம் நெரஞ்ச நாள் இதுன்னு, அவள கன்வின்ஸ் பண்றதுக்குள்ள என்னமா பாடுபட்டுட்டேன். உங்கப்பாவ கூட சமாளிச்சுட்டேன், மாப்ளைக்கு தெரியாம பாத்துக்கணும்டீ" என்று நீட்டி முழக்கி பெரிய சாதனை செய்த தொனியில் புவனேஷ்வரி மாமி சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சுகுமாரன், வாயடைத்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தான்.
*** *** **** **** ****
பி.கு: நாள், நட்சத்திரம், கெழமை, சாச்திரம், சம்பிரதாயம் எல்லாம் 'ஓவரா' யூஸ் பண்ணாதேள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! :)
இது
போட்டிக்கல்ல, சும்மா ஸாம்பிள் 'நச்'சுக்கு.
இனியும் வரலாம் ;)