recent posts...

Wednesday, July 29, 2009

Meet your meat - திட மனசுக்காரர்களுக்கு மட்டும்

சில விஷயங்களை ரொம்ப யோசிக்கறதே இல்லை. கேள்வி கேக்காம ஃபாலோ பண்ணிடறோம். நம் வளர்ப்பால் நேச்சுரலா அமையர விஷயங்கள் இவை.

சின்ன வயசுல ஊருக்கு பாட்டி வீட்டுக்கு போனா, "டேய் அத்த புடிச்சுக்கிட்டு வா"ன்னுவாங்க, நானும் என் கஸினும், கலர் கலரா இருக்கும் சேவல் பின்னாடி ஓடிப் போய், பக் பக் பக்னு கத்திக்கிட்டே அத்த கபால்னு அமுக்கிக்கிட்டு வருவோம்.
பாட்டி சரக்னு சேவலின் கழுத்தை அறுத்து ஒரு அண்டாவுல போட்டா, அது துடியா துடிக்கும் கொஞ்ச நேரம். அதுக்கப்பரம் அதன் இறகுகளை பிச்சு எடுக்க சொல்வாங்க.
நாங்களும் நல்ல பசங்களா சொன்னதைச் செய்வோம், சில மணி நேரங்களுக்குப் பிறகு கிட்டப் போகும் பிரியாணியை எண்ணிக் கொண்டே.

"என்னடா கொடுமை இது? நம்மளா இப்படி இருக்கோம்? கொடூரமா இருக்கே இந்த ப்ராக்டிஸ்"னு அடிக்கடி தோணத்தான் செய்யுது. ஆனா, பழகிப் போன சமாச்சாரம் ஆயிட்டதால, பாதிப்பு கம்மியா இருக்கு. பிரியாணி சாப்பிடுவதும் குறைந்த பாடில்லை.

மீனாவது பரவால்லாம இருந்தது, ஒரு காலத்துல மார்க்கெட்டுக்குப் போனா, கூரு கட்டி வச்சிருப்பான். அத்த எப்படி பிடிச்சான் எப்படி சாகடிச்சான், அது எப்படி மூச்சு திணறி செத்துது என்ற கவலையெல்லாம் இல்லாமல், காசு கொடுத்தமா வாங்கிக்கிட்டு வந்தமான்னு இருந்தோம். ஆனா, அதுவும், இப்ப, ஃப்ரெஷ்ஷா கொடுக்கறேன் பேர்வழின்னு, கண்ணாடித் தொட்டியில் உயிருடன் வெச்சு, எந்த மீன காட்றாங்களோ, அத்த ஒரு வலை போட்டு தொட்டியிலிருந்து எடுத்து, அதன் தலையில் சுத்தியால் நங்குனு அடிச்சு கொண்ணு கொடுக்கறான்.

மாமிசம் உண்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருவதால், நம் தேவையை பூர்த்தி செய்ய, மாமிசம் உற்பத்தி செய்பவர்கள் ரூம் போட்டு யோசிச்சு என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்க.

இப்பெல்லாம், ஒரு ப்ராய்லர் கோழி, முட்டையிலிருந்து, ஃபுல் வளர்ச்சி அடைய, 30 நாட்களே தேவைப் படுகிறதாம். முப்பது நாள்ள எப்படிடா அபார வளர்ச்சி அடையுதுன்னு பாத்தா, ரொம்ப சிம்பிள். குட்டி கூடாரங்களில், நகரவே முடியாத நெருக்கத்தில், கோழிகளுக்கு தீனி 24 மணி நேரமும் கொடுத்துக்கிட்டே இருப்பாங்களாம். சாப்பாட்டுலையும் கண்ட கண்றாவியையும் போட்டு வைப்பாங்களாம்.
முப்பத்தி ஓராவது நாள், கேக்கவே வேணாம், நரக வேதனைதான். தலை கீழாக கட்டி தொங்கவிட்டு ஒரு கன்வேயரில் எல்லா கோழிகளும் கொண்டு செல்லப்பட்டு, மோட்டார் கத்தியால் தலை வெட்டப்படுகிறது. உயிர் பிரியும் முன்னே, தலை வெட்டப்பட்ட உடல், சுடு தண்ணியில் முக்கப்பட்டு துகிலுரிக்கப்படும். மோட்டார் கத்தியில் தலை வெட்டப்படாமல் தப்பிப் பிழைக்கும் கோழியை, கையில் கட்டிங் ப்ளேயருடன் காத்திருக்கும் தொழிலாளி, போட்டுத் தள்ளுவார்.

இது இப்படின்னா, முட்டை போடும் கோழிகளின் நிலமை இதைவிட மோசம். இவையும், நகரவே முடியாத குட்டி கூடாரத்தில் அடைக்கப்படும். பக்கத்து கோழிகளை குத்திக் கீரக் கூடாதுன்னு, இதன் அலகை (வாய்) பாதி வெட்டி விட்டுடுவாங்களாம். இப்படி வளர்க்கப்படும் கோழிகள், வாரத்துக்கு ஒரு முட்டை போட்டா பத்தாதே, அடிக்கடி முட்டை போட, என்னென்னமோ யுக்திகள் கண்டு பிடிச்சு வச்சிருக்கானுங்க. சில சமயங்களில், முட்டை உற்பத்தி குறைந்து போனால், கோழிக்கு தொடர்ந்து 14 நாட்கள் சோறு தண்ணி கொடுக்க மாட்டாங்களாம். அப்ப, ஏதோ ஒரு ரியாக்ஷன்ல,கோழி கன்னா பின்னான்னு முட்டை போட ஆரம்பிச்சுடுமாம். இந்தக் கோழிகள் அனைத்தும், முட்டை போட்டு போட்டு உடம்பின் மொத்த கால்ஷியமும் அற்றிப் போய், எலும்பெல்லாம் முறிந்து, ரண வேதனைப்படுமாம்.

கோழிக்கே இந்த நெலமன்னா, ஆடு, மாடு, பண்ணியெல்லாம் என்னா பாடு படும்னு நெனச்சு பாருங்க. அத யோசிச்சாலே, கபாலம் கலங்கிடுது.
தலைகீழாக தொங்க விட்டு, தொண்டையை குத்தி கீறிக் கொல்றாங்க, இவைகளை. துடி துடிச்சுப் போயிடுது.
கடைசி நாள் தான் இப்படின்னா, வாழும் சில காலமும் மகா கொடூரமான முறையில் வளக்கராங்க. அடிக்கடி டெஸ்ட் எல்லாம் பண்ண, கூட்டிக்கிட்டுப் போகும் போது, அடி பின்னி எடுக்கறாங்க. கண்ணைக் குத்தறாங்க, அத்த அறுக்கறாங்க, இத்த வெட்டறாங்க. ஸ்ஸ்ஸ்ஸ்.

அட, நான், மாமிசம் தின்னாத வெஜிடேரியனாக்கும்னு காலரை தூக்கி விட்டுக்கறவங்க, நிற்க.
முட்டை போடக் கொடுமைப் படுத்தப்படும் கோழியைப் போலவே, பாலுக்கு வளர்க்கப்படும் மாடுகளின் வேதனை சொல்லி மாளாது. உரிஞ்சு உரிஞ்சு ஒரு வழி பண்ணிடறாங்க. பால் உற்பத்தி பண்ண கண்ட மருந்தையும் கொடுத்து தூண்டுவதால், இந்த மாடுகளின், எலும்பெல்லாம் கால்ஷியம் இழந்து, பலவீனமாய், நடக்கவே முடியாமல் இருக்கு. கயிறு கட்டி இழுத்துக்கிட்டுத்தான் போறாங்க.

பால் கூட மன்னிச்சு விட்டுடலாம். இன்றியமையாத விஷயம். மாமிசம், முட்டையெல்லாம், உட்கொள்ளுவதை குறைக்க வேண்டும். டிமாண்ட் குறைந்தாலே ஒழிய, இந்த உற்பத்தி முறை மாறவே மாறாது.
இவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த அமெரிக்காவில் உள்ள ஃபாக்டிரிகளே இப்படி இருந்தால், தண்ணி தெளிச்சு விட்ட மற்ற ஊர்களின், ஃபாக்டரிகள் எப்படி இயங்கும்னு நெனைக்கவே கதி கலங்குது.

கீழே இருக்கும் வீடியோ, 'Meet your Meat'னு GoVeg.com ஆளுங்க பரப்பும் விவரணப் படம்.

என்னை மாதிரி, சின்ன வயசுலையே, சேவலை விரட்டிப் பிடித்து, வெட்டி வீழ்த்தி, சமைத்து சாப்பிட்டு வளர்ந்த வீரப் பரம்பரையில் வந்தவங்க மட்டும் பாருங்க.

திட மனசு இல்லாதவர்கள் பாக்காதீங்க. அப்பரம், உங்களால் பால் கூட குடிக்க முடியாமல் போகலாம். அதுக்கு கம்பேனியார் பொறுப்பு ஏற்க முடியாது.

Jokes apart, இந்தப் பதிவு எதுக்குன்னா, நம்மாலான அளவில் டிமாண்டை குறைப்பதற்கு. மாமிசம் உட்கொள்ளுங்கள், ஆனா, 10% ஆவது குறைச்சுடுங்க.

டிமாண்ட் ஏறிக்கிட்டே போனா, சப்ளை பண்றவங்க எந்த லெவலுக்கும் போவாங்க, நம்ம தட்டுல கறித் துண்டை கொண்டு வந்து சேர்ப்பதர்க்கு.



வீடியோ பாத்தாச்சா? ஃபோட்டோ பாக்கணும்னா இங்க போய் பாருங்க: http://www.goveg.com/photos.asp

Go Vegan!, atleast 10% :(

இதைப் படிச்சதால் உங்களுக்கு தத்துனூண்டாவது மனமாற்றம் வந்ததான்னு சொல்லிட்டுப் போங்க. எம்புட்டு % பயக்க வயக்கத்த கொறைக்கப் போறீங்கன்னும் சொல்லிட்டுப் போங்க.

நெஞ்சத் தொட்டுச் சொன்னா, நானு 3% கொறைப்பேன்னு சொல்லலாம் :)

Monday, July 27, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 4

மூன்றாம் பாகம் முடிச்சு பத்தே நாள்ள நாலாம் பாகம் படிச்சு முடிச்சாச்சு. இதுக்கு இரண்டு காரணம் இருக்கு. ஒண்ணு, ஆதித்ய கரிகாலர் கடம்பூருக்கு 'வில்லன்ஸ்' இருக்குமிடத்துக்கு வருகை தரும் அத்யாயங்கள் இதிலிருக்கு. இன்னொண்ணு, இது குட்டி வால்யூம். 335 பக்கங்கள் தான். ஸ்கூல்ல எல்லா புத்தகங்களும் இத்துனூண்டு இருந்தா, சுலபமா கரச்சு குடிச்சு, நல்ல மார்க் வாங்கியிருந்திருப்பேன். ஹ்ம்! மிஸ் ஆயிடுச்சு ;)

வழக்கம் போல, காவிரி பற்றிய வர்ணனைகளும், தமிழகத்தின் பண்டைய கால செழிப்பும் படிக்க படிக்க பெரிய பெருமூச்சு வருது. இதெல்லாம் மெய்யா? இல்லை, கல்கி மிகைப் படுத்தி சொல்றாரான்னு தெரியல்ல. கண்டிப்பா த.நாடு இப்படியெல்லாம் இருந்திருக்கும். நாமதான் வாழையடி வாழையா, நதியில் மணல் சுரண்டியும், மரங்களை அழித்தும், நாட்டை டோட்டல் டாமேஜ் பண்ணிட்டோம். ஹ்ம்!

இனி பாகம்4 நட் ஷெல் பாப்போம்:

ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவழைத்து கொல்ல வேண்டும்னு, போன பாகத்தில் நந்தினி&கோ ப்ளான் போட்டதை பாத்தோம். ஆதித்த கரிகாலரும், நந்தினியின் ஓலை வந்ததும், மறு பேச்சு இல்லாம, ஒடனே பொறப்பட்டு வராரு. குந்தவையின் ஓலையை கொண்டு போய் வந்தியத் தேவன் ஆதித்யரை கடம்பூருக்கு போகவேணாம்னு சொல்லியும் கேக்காம அவரு கடம்பூருக்குப் போறாரு.
இதுவரை, பெரிய வீராதி வீரனாய், சித்தரிக்கப்பட்டு வந்த ஆதித்யர், இந்த எப்பிஸோடில், கொஞ்சம் மறை கழண்டவர் மாதிரி காட்டப்பட்டிருக்காரு. ஓவரா, கோபம் வருவதும், சில நேரம் விசித்திரமா நடந்துக்கர மாதிரியும் சில காட்சிகள்.
கடம்பூர் அரண்மனைக்கு வந்தியத்தேவன், பார்த்திபேந்திர பல்லவன், ஆகியோருடன், கோலாகலமா வந்து சேற்றாரு.

இதற்கிடையில் நந்தினி, பெரிய பழுவேட்டரையர், மற்ற 'வில்லன்ஸ்' எல்லோரும் கடம்பூருக்கு வந்துடறாங்க. நந்தினியின் அந்தப்புரத்துக்குள் நுழைய ஒரு சுரங்கப் பாதை இருப்பதை வந்தியத் தேவனுக்கு தெரிய வருது. அதில் 'பாண்டிய' வில்லன்ஸ் புகுந்து செல்வதையும் கண்டு பிடிக்கிறான். கடம்பூ சம்புவராயர் மகள் மணிமேகலையையும் பாக்கறான்.
மணிமேகலையை ஆதித்யருக்கு திருமணம் செய்து வைத்து, சோழ நாட்டை ரெண்டா பிரிச்சு, ஒண்ணு ஆதித்யனுக்கும், இன்னொண்ணு மதுராந்தகனுக்கும் கொடுக்கணும்னு 'வில்லன்ஸின்' ப்ளான்.

நந்தினிக்கு, ஆதித்யரை அங்கே வந்ததும், போட்டு தள்ளணும்னு ப்ளான்.

ஆதித்யர் வந்ததும், இவர்களின் ப்ளான் எல்லாம் ஓரளவுக்கு தனக்கு வந்தியத் தேவன் மூலம் தெரியா வருவதால் எல்லாரையும் நையாண்டி பேச்சால் தெணற வைக்கறாரு. எல்லாரும் சேந்து சதித்திட்டம் போடராப்பல இருக்கேன்ற ரேஞ்சுல வாயப் புடுங்கறாரு.

சில நேரங்களில், பெரிய பழுவேட்டரையர், ஆதித்யரிடம், தான் இருக்கும் வரை, ஆதித்யருக்கு ஒன்றும் நேராதுன்னு சொல்றாரு. பெரிய பழுவேட்டரையர், 'வில்லன்' இல்லை என்ற ரீதியில் ஒரு எண்ணம் எழுகிறது.
ஆதித்யரும், திடீர்னு, தனக்கு அரசாளும் எண்ணம் இல்லை. சோழ நாட்டை பிரிக்கக் கூடாது, மொத்தமும் மதுராந்தகன் ஆளட்டும், தனக்கு கொஞ்சம் பணமும், படையும் கொடுத்தால் மட்டும் போதும். தான் வடக்கே போர் தொடுத்து சோழ நாட்டை விரிவடையச் செய்வதே லட்சியம்னு சொல்றாரு.

இந்த விஷயம் நல்லாருக்கேன்னு எல்லாரும் நெனச்சு, பெரிய பழுவேட்டரயரை, தஞ்சை சென்று, மதுராந்தகனை கூட்டிக்கிட்டு வரச் சொல்றாங்க. அவரும், நந்தினியை அரை மனசா விட்டுட்டு கெளம்பராரு.

இதற்கிடையில், முதல் மந்திரி அநிருத்தர், ஈழத்தில் இருந்த 'ஊமை' ராணியை (நந்தினியின் அம்மா?) தஞ்சைக்கு கடத்திக்கிட்டு வரச் சொல்றாரு. சக்கரவர்த்திகிட்ட இவங்கள காமிச்சு அவரின் கலக்கத்தை போக்கணும் நெனப்பு. ஆனா, வரும் வழியில், ஊமை ராணி எஸ்கேப் ஆகி, அந்த இடத்தில் பூங்குழலியை ஒக்கார வச்சுடறாங்க. எஸ்கேப் ஆனவங்க அங்க இங்க ஓடிப் போய், தஞ்சை அரண்மனையில் இருக்கும் சுரங்கப் பாதை வழியாக சக்ரவர்த்தி இருக்கர எடத்த பாக்கறாங்க. சுரங்கப் பாதையில், பாண்டி வில்லன்ஸ், சக்ரவர்த்தியை போட்டுத்தள்ள ப்ளான் போடரதும் பாக்கறாங்க.
இவங்களும், பூங்குழலியும், குந்தவையும், அநிருத்தரும் சேந்து சக்ரவர்த்தியை பாக்கறாங்க.
சக்ரவர்த்தி, ஊமை ராணியை பாத்ததும் சந்தோஷப் படுவாருன்னு பாத்தா, சலிப்புதான் அடையறாரு. அது என்ன வில்லங்கமோ புரியல்ல.
ஊமை ராணி இறந்து விட்டதாய் தான் இவ்வளவு காலம் எண்ணியிருந்ததும், அதற்கு தான் தான் காரணம் என்ற எண்ணமே சுந்தரரை வாட்டி எடுத்து நோய்வாய் படுத்தியது.

எந்த நேரம் வேணும்னாலும், எல்லா டீமுக்கும் இடையில் போர் வெடிக்கும் அபாயம் இருக்குன்னு தெரிய வருது. சதித் திட்டம், எல்லாத்துக்கும் முடிவு கட்டணும். மதுராந்தகனுக்கு ஞாயமாய் கிட்ட வேண்டிய அரசாளும் உரிமையை கொடுக்கணும். பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மரை பாக்கணும், ஆதித்யரையும் தஞ்சை வரவைக்கணும். எல்லாத்தையும் எல்லாருக்கும் எடுத்து சொல்லி, சுமுகமா தீக்கணும்னு, சுந்தரர், எல்லாரையும் தஞ்சைக்கு வரவழைக்க, எல்லா சைடுக்கும் தூது அனுப்பறாரு.

கடம்பூர் அரண்மனையில், ஆதித்யரும், வந்தியத்தேவனும் வேட்டைக்குச் சென்று திரும்பும் போது, எதேச்சையாக நந்தினியையும் மணிமேகலையையும் பாக்கறாங்க.
நந்தினியிடம் ஆதித்யர், பழைய கதையெல்லாம் சொல்லி, தான் பாண்டிய மன்னனின் (நந்தினியின் காதலர்/கணவர்) தலையை வெட்டியதுக்கு மன்னிப்புக் கேக்கறாரு.

அதைத் தவிர, நந்தினி தன் அக்காள் என்றும், தன் தந்தையின் ஃப்ளாஷ் பேக்கில், ஒரு ஊமைப் பெண் இருந்ததையும், அவர்களின் பெண்தான் நந்தினி என்றும் சொல்றாரு.

இன்னாடா, இவ்ளோ ஒப்பனா சொல்லிட்டாரே, கதை சுபமா முடிஞ்சிடுமோன்னு ஒரு கலக்கம் வந்துது. ஆனா, இதைக் கேட்டதும், நந்தினி ஒரு தடாலடி சொல்வாங்க பாரூங்க, அதை படிச்சதும், கதை ஆயிரம் மைல் வேகத்தில் திரும்ப பிக் அப் ஆயிடுச்சு.
குறிப்பா, இதுக்கு முன்னால் இடம்பெறும் பல சம்பவங்களும் நந்தினியின் இந்த திடீர் பல்ட்டியால் அவிழ்ந்த முடிச்சுகள் எல்லாம் சரக் சரக்னு மாட்டிக்குது.

அதாகப்பட்டது, ஆதித்யர் சொன்ன, 'அக்கா செண்டிமெண்ட்டை' கேட்டு நந்தினி இன்னா சொல்றாங்கன்னா, வந்தியத்தேவன் சொல்றதையெல்லாம் நம்பாத, அவன் பயங்கரமான ஏமாத்துக்காரன், புருடா விடறான். அவன் எனக்கே ரூட் விடப் பாத்தவன். நீ வேணும்னா, நடு ஜாமத்தில் அந்தப்புரம் வந்து பாரு, வந்தியத் தேவனின் உண்மை சொரூபம் தெரியும்னு அவுத்து விடறாங்க.
இதுக்கு முந்தைய சீன்லதான், வந்தியத் தேவனிடம், ஏதோ மேட்டர் பேசணும் நடு ஜாமத்தில் அந்தப்புரம் வான்னு தனியா சொல்லியிருந்தா நந்தினி.

இதுக்கெல்லாம் சிகரம் வச்ச மாதிரி கல்கியும், நந்தினி இப்படி ப்ளான் போடறாளேன்னு யாரும் அதிர்ச்சி அடையாதீங்க. சின்ன வயசுலேருந்து ஏமாற்றமே சந்திச்சு பல கஷ்டங்களுக்கு இடையில் வளந்த பொண்ணு. ஸோ, அவளுக்கு இப்படி பழிவாங்கணும்னு தோணறது ஞாயம்தானேன்னு எடுத்து வுடறாரு.

ஸோ, இதையும் அதையும் முடிச்சு போட்டு பாத்தா, கன்னா பின்னான்னு ஏதோ நடக்கப் போவதுன்னு தெரியுது.

சக்ரவர்த்தியை கொல்ல சுரங்கப் பாதையில் காத்திருக்கும் பாண்டிய வில்லன் ஒரு பக்கம்;
ஆதித்யரை கொல்ல நந்தினி ஒரு பக்கம்;
அருள்மொழியை கொல்ல வேறு ஏதோ ஒரு ப்ளான்;

இப்படி மொத்த சோழ சாம்பராஜ்யத்தையும் அப்புரப்படுத்துவதாக, பாண்டிய 'வில்லன்' ரவிதாஸன் வேர அப்பப்ப சொல்லிக்கிட்டே இருக்கான். அதுவும், வரும் வெள்ளியன்று இரவில், மூணுமே ஒரே நேரத்தில் நடக்குமாம்.

கடைசி பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி,
-சர்வேசன்

கீழிருக்கும் படத்திலிருப்பது குந்தவைன்னு, வந்தியத் தேவனே சென்ற பதிவில் சொல்லிட்டாரு. சரியாய் தானிருக்கும். :)

சரி, பேக்ரவுண்டில் இருப்பவர் யார்? ஆதித்யரா? வந்தியா? வயசான பழுவேட்டரையரா??

Tuesday, July 21, 2009

சிங்காரச் சென்னையில் ஒரு கேவலம்...

நம்மூரு அரசாங்க இயந்திரம் பல இடத்தில் பழுதடைந்து இருப்பது அனைவரும் அறிந்ததே.

துருபிடித்த அதிகாரிகள் பல இடத்திலும் இருந்து கொண்டு, இயந்திரத்தை ஓட விடாமல் முடம் செய்வதையே தங்கள் தினசரி தொழிலாய் செய்து வருகிறார்கள்.

என்ன காரியம் நடக்கணும்னாலும் அவங்களுக்கு ஆயில் போட்டாதான் நடக்கும் என்ற கேவலம்.

இதில் பெருத்த கொடுமை, ஓரளவுக்கு வசதியாய் இருக்கும் பொதுஜனம் எல்லோரும், ரொம்ப மெனக்கெட விரும்பாம, ஆயில் போட்டு போட்டு இயந்திரத்தை பழக்கப் படுத்திட்டாங்க.

சாதாரண ஒரு மேரேஜ் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்னாலும் கூட, பிச்சை எடுப்பதை போல், கூனிக் குறுகி, ஒவ்வொரு கவுண்டரா அலஞ்சு அலஞ்சு, ஆயில் போட்டு போட்டு, வேலையை முடித்துக் கொள்ள வேண்டிய அவல நிலை.

ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கணும்னா, சொல்லவே வேணாம், கூஜா தூக்காத குறையா, அதிகாரிகள் பின்னாடி அலையணும்.

வீடு/நிலம் ரெஜிஸ்ட்டர் பண்ணனும்னா, லஞ்சம் இல்லாம ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தின் உள்ளே கூட அனுமதிப்பதில்லை.

இந்த அரசாங்க இயந்திரத்தின் கெட்ட சவகாசமோ என்னமோ தெரியல, இப்பெல்லாம், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் (public ltd.,) கூட இதே 'துரு' நிலை இருப்பதாய் தெரிகிறது. (BSNL? Airtel?)

சரி, நமக்கு முன்னாடி ஜெனரேஷன் தான், இப்படி துரு பிடிச்சிருக்கு. கழிசடைகள், ஒழிஞ்சு போனா, தானா ஊரு சுபிட்சமாயிடும்னு நெனச்சிட்டு இருந்தா, அவங்களைத் தொடர்ந்து வந்த இளசுகள் கூட, ஆயில் கேட்கும் போதையில் சிக்குண்டு இருக்கிறார்கள்.

ஸோ, கூட்டி கழிச்சு பாத்தா, இப்போதைக்கு நம்ம ஊருக்கு விமோச்சனமே இல்லையோன்னு தோணுது.

நம்ம எல்லாரும், சரியாகர வரைக்கும், இது முற்றுப் புள்ளியில்லாமல் தொடரும். நம்ம வேலைய ஈஸியா முடிச்சுக்க நினச்சு, ஆயில் போட்டுக்கிட்டே இருந்தா, இயந்திரம் அந்தப் பழக்கத்தை மாத்தவே மாத்தாது.

தவறுக்கு துணை நிக்காமல், கொஞ்சமாவது தைரியமா கேள்வி கேட்கப் பழகணும்.

தனியாளா நின்னுகிட்டு, இதெல்லாம் செய்வது கஷ்டம்தான்.

இணையம் இருக்கு, பதிவர் வட்டம் இருக்கு, உங்க அக்கம் பக்கத்தில், like-minded தனி நபர்கள்/குழுக்கள் இருக்கும். இவற்றின் உதவியோடு, அப்பப்ப, ஆயில் போடாமல் வேலையை முடிச்சுக்க முயற்சி பண்ணுங்க.

துரு பிடிச்சிருக்கு, ஆயில் போட்டாதான் வேலை நடக்கும்னு, இயந்திரம் அலம்பு பண்ணா, உப்புக் காகிதம் எடுத்த், துருவை சுரண்டி எடுங்கள். ஆயில் போடவே போடாதீங்க!

Ramesh Sadasivam என்ற பதிவரின், "கிணறு வெட்ட பூதம்" படித்துப் பாருங்கள்.
ரமேஷ், ஆயில் போடாம, உப்புக் காகிதம் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கிறார். சிரமமான வேலையானாலும், இறுதியில் ஜெயம் உண்டாகும்.
முழுவதாக ஜெயம் கிடைக்கலைன்னாலும், கொஞ்சம் துருவாவது சுரண்டி எடுத்த சந்தோஷமாவது கிட்டும்.

சென்னையில் இருப்பவர்கள், 'பெரிய' பதிவியில் இருப்பவர்கள்/இருப்பவர்களைத் தெரிந்தவர்கள், வேறு யோசனை தெரிந்தவர்கள், ரமேஷுக்கு உறுதுணையாய் இருங்கள்.

இனி வரும் காலத்தில், எந்த இயந்திரத்துக்காவது, எங்காவது, ஆயில் போட்டு உங்கள் வேலையை முடித்துக் கொள்ள நேரிட்டு, ஒரு எதிர்ப்பும் காட்டாமல், நீங்கள் அந்த வேலையை போதிய ஆயில் போட்டு முடித்துக் கொண்டால், மொத்த பதிவுலக அன்பர்களும், உங்கள் முகத்தில் காரி உமிழ்ந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!
Sorry to say that. but you are one of the biggest reason, why we still have corruption in our society!

Thursday, July 16, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 3

இரண்டாம் பாகம் படிச்சு முடிச்சு நட் ஷெல் எழுதி, ஒரு மாசம் முடிவதற்குள் ஒரு வழியா மூன்றாம் பாகம் படிச்சு முடிச்சாச்சு.
இந்த பாகம், முந்தைய இரண்டு பாகங்களை விட விறு விறுன்னு பயணித்தது. பல நேரங்களில், ஒரு சினிமா பாக்கர மாதிரி, காட்சிகள் கண் முன்னே வந்துட்டு போகுது. அருமை!
ஆனா, டி.வி சீரியல்ல ஒரு மேட்டரும் இல்லாம, நடூல மட்டும், டடடா ன்னு மீஜிக் போட்டு பீதிய கெளப்பி, ஆரம்பிச்ச இடத்துலையே முடிப்பாங்க்களே அந்த மாதிரி கிட்டத்தட்ட ஆரம்பிச்ச எடத்துலையே பாகம் 3ஐ முடிச்சிட்டாரு கல்கி.

மூன்றாம் பாக நட் ஷெல்லை பாக்கரதுக்கு முன்னாடி, இதுவரை பாகம்1ம், பாகம்2ம் படிக்காதவங்க படிச்சுடுங்க. படிச்சுட்டு ஒன்னியும் புரியாதவங்க, பொ.செ ஈ.புக் இருக்கு, அதை முழுசா படிங்க. முதல் மூன்று பாகம் சகாய விலைக்கோ, ஈயம் பித்தளைக்கோ வாங்கிக்கலாம்னு இருக்கரவங்க எனக்கு யாஹூங்க. (சும்மா சொன்னேன், [கவுண்டர் ஸ்டைலில்] பதிவு படிக்கரவங்க யாருக்கும், விக்கரதா இல்லை :) )

இனி பாகம்3 நட் ஷெல்லு:

வந்தியத்தேவனை குதித்து காப்பாற்றிய அருள்மொழி வர்மரை பூங்குழலி காப்பாற்றி, படகில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வந்தாள். கடற்கரையில் பழுவேட்டரையர் பட்டாளம் இருப்பதைப் பார்த்ததும் வேறு வழியில் சென்று ஒரு கால்வாய் வழியே காட்டுக்குள் வந்தடைகிறார்கள். இளவர்சர் அருள்மொழிக்கு ஃப்ளூ வந்துடுது. நினைவே இல்லாமல் படகில் கெடக்கறாரு.
இதற்கிடையில் இலங்கையில் அருள்மொழி வர்மர் வந்த கப்பல் எரிவதைக் கண்ட பார்திபேந்திரன் கோடியக்கரை வந்து பழுவேட்டரையர் நந்தினி பட்டாளத்திடம், அருள்மொழி வர்மர் இறந்திருக்கலாம்னு பீதியக் கெளப்பிடறான்.
இளவரசர் அருள்மொழி இறந்துவிட்டார் என்ற சேதி ஊருக்குள்ள பரவுது.

பூங்குழலியிடம், இளவரசரை பத்திரமாய் சூடாமணி விஹாரத்துக்கு ( புத்த மடம்) கூட்டீட்டு போய் விட்டுடச் சொல்லிட்டு, இளவரசி குந்தவையிடம் சேதி சொல்ல பழையாறைக்குப் புறப்படறான் வந்தியத்தேவன்.

போகும் வழியில் நந்தினியின் ஆட்கள் அவனை பிடித்துக் கொண்டு போய் நந்தினியிடம் சேர்கிறார்கள். நந்தினியும் இளவரசர் அருள்மொழிக்கு என்னாச்சுன்னு வந்தியத்தேவனிடம் கேட்டுத் தெரிஞ்சுக்க பாக்கரா. வந்தியன், எதையும் சொல்லாமல் அங்கிருந்து நழுவுகிறான்.

குந்தவையை சந்தித்து மேட்டரை சொல்லி, மீண்டும் காஞ்சிக்கு, குந்தவையின் ஓலையுடன் பயணம் மேற்கொள்கிறான். வரும் வழியில், மீண்டும் நந்தினியின் ஆட்கள் அமுக்கிடறாங்க. இம்முறை, நந்தினியின் குட்டிப் பையனை 'வருங்கால அரசரே'ன்னு, சில 'பாண்டிய' ஆட்கள் கூட்டிக்கிட்டு வராங்க. ராத்திரியில் எல்லாரும் ஏதோ சதித்திட்டம் போட்டு ஆதித்த கரிகாலரை தஞ்சைக்கு வரவழைச்சு கொல்லணும். யாரு, அந்தக் காரியத்தை செய்யப் போறாங்கன்னு குட்டிப் பையன் முடிவு பண்ணட்டும்னு பேசிக்கறாங்க. பையனும், 'அம்மாதான் எல்லாமே'ன்னு சொல்லி கத்தியை நந்தினிகிட்ட கொடுத்துடறான்.

இதற்கிடையில், அருள்மொழி இறந்துட்டார்னு சேதி கேட்டு, வானதி பேஜாராயிடரா. தான் நாகப்பட்டினத்துக்கு போரதா சொல்லி எஸ்கேப் ஆயிடரா. குந்தவையும், மந்திரியார் அநிருத்தரும் சேந்து ஏதோ ப்ளான் பண்ணி வானதியை வழியில் மடக்கி டெஸ்ட் எல்லாம் வெக்கராங்க. குந்தவையும் நந்தினியும் சூடாமணி விஹாரத்துக்குப் பக்கத்துல போய் அருள்மொழியைப் பாக்க வெயிட்டராங்க. ஃப்ளூ சரியானதும் அருள்மொழியும் இவங்களைப் பாக்க அங்க வராரு.
குந்தவை, தம்பி கிட்ட,, திரும்பி இலங்கை போகச் சொல்றாங்க. இங்க நெலவரம் சரியானதும் திரும்பி வான்னு சொல்றாங்க. ஆனா, அருள்மொழி, அப்பா வை பாத்து சில பல விஷயங்கள் சொல்லிட்டுத்தான் போவேன்னு நிக்கறாரு.
இவரின் மனதில் அரசாளும் எண்ணம் இல்லைன்னும், இலங்கையில் உள்ளதைப் போல பெரிய பெரிய கோயில்கள், சிவனுக்குக் கட்டணும்னும் சொல்றாரு. (interesting. பின்னாளில் இவருதான் இராஜ இராஜ சோழர் என்பது நினைவில் கொள்க).

சில இடங்களில், குந்தவை 'பெண் வில்லி' மாதிரி தெரியராங்க. தன் தந்தைக்கு அடுத்து சோழ ராஜ்யத்தை விரிவாக்க அருள்மொழி உதவுவான் என்பதால் தான் அவன் மேல் பாசம் கொள்வதாகவும், தன் பேச்சைக் கேக்கலன்னா நாஸ்தி என்கிற ரீதியில் ஒரு சீன் வருது.

சஸ்பென்ஸ், செமையா மிக்ஸ் பண்ணிக்குட்டு போராரு கல்கி.

நந்தினி யாருங்கரது இன்னும் புலப்படலை.

சுந்தர சோழரின் முன்னாள் காதலி, ஊமை லேடிக்கு இரட்டைக் குழந்தைன்னு போன பாகத்தில் பாத்தோம். ஒரு பெண்ணும், ஓரு ஆணும் என்று. ஆழ்வார்க்கடியானும், நந்தினியை தன் தங்கைன்னு சொல்லுவான் முதல் பாகத்தில். சுந்தரரும், நந்தினியைப் பாத்து, அந்த ஊமைப் பெண்ணைப் பாக்கரதா நெனச்சுக்கிட்டு பயத்துல டென்ஷன் ஆயிடுவாரு போன பாகத்தில்.
ஆனா, இந்த பாகத்தில் இன்னொரு கதை சொல்றாங்க - அதாவது, சுந்தரரின் அண்ணன் மகன் மதுராந்தகனை, பிறந்தவுடன் கொல்ல மந்திரி அநிருத்தர் சதி பண்ணினாராம். முதல் குழந்தை பிறந்ததும், அதை எடுத்துக் கொண்டு போய் கொல்லச் சொன்னாராம். ஆனா, பெண் குழந்தை என்றதும் பூசாரி கிட்ட கொடுத்து வளக்கச் சொல்லிடறாராம். நந்தினி பூசாரியின் மகள்னு முதல் பாகத்தில் வரும். இரட்டைக் குழந்தையாய், மதுராந்தகர் பிறந்தது அநிருத்தருக்கு தெரியாததால், மதுராந்தகர் தப்பித்தாராம்.
அப்ப, நந்தினியும் மதுராந்தகனும் ப்ரதர் சிஸ்டரா?
குந்தவைக்கும் அருள்மொழிக்கும், நந்தினி தன் அக்காள் என்று எண்ணம். அதை அவளிடம் சொல்லணும்னும் பேசிக்கறாங்க. அது தெரிஞ்சாலே, அவள் செய்யும் வில்லத்தனம் கொறையும்னு இவர்களுக்கு எண்ணம்..

ஸோ, நந்தினி பூசாரி மகளா? சக்ரவர்த்தியின் மூத்த சம்சாரத்தின் மகளா? சக்ரவர்த்தியின் அண்ணன் மகளா?

யப்பா! எங்கே செல்லும் இந்தப் பாதை? இப்படி டெரர் பண்றாங்களே? :)


-தொடரும்!

இது குந்தவையா? நந்தினியா?

Thursday, July 09, 2009

ராதா கேட்ட கேள்வி...

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எல்லாம் நானா வச்சுக்கிட்டதுதான். எதையாவது எழுதலாம்னு இங்க வந்த புதுசுல, எல்லாரும் பிரிச்சு மேயரத பாத்தேன். எனக்கும் டமிலும் அவ்ளவா வராது. சரி, எழுதரதுக்கு பதிலா, மக்கள்ஸ் கிட்ட 'சர்வே' மட்டும் எடுத்து கல்லா கட்டுவோம்னு ஆரம்பிச்ச அவதாரம் இது.

2) கடைசியா அழுதது எப்போது?

போன வாரம் இத்த எழுதியிருந்தா, 'ஞாபகம் இல்லை'ன்னு பதிலிருப்பேன் :)

தாணைத் தலைவன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த மெம்மோரியல் நிகழ்ச்சியில், அவரின் மகள் அழுததும், நானும் கொஞ்சம் பேஜாராயிட்டேன். ஒரு நல்ல கலைஞனை தேவையில்லாம வாட்டி எடுத்துட்டானுங்கன்னு தோணிச்சு. அவரு ரொம்ப வெகுளியா பதிலளிச்சதை, கயிறு திரிச்சு, அவரை வில்லனாக ப்ரதிபலிச்ச மீடியா, போன வாரம் முழுக்க, அவர் பேரை சொல்லி சில்லரை தேத்தியது பெரிய முரண்.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஹ்ம். அவ்ளோ டீப்பா திங்க் பண்ணனுது இல்லை. ஆனா, இப்பெல்லாம், பேனாவே பிடிக்க வரது இல்லை. நேரா எழுத வராது. அன்றிலிருந்து இன்றுவரை, என் கோழிக் கிறுக்கலை அடித்துக் கொள்ள சுத்து வட்ட பதினெட்டுப் பட்டியில் ஆளே இல்லை.
ஸோ, ஷார்ட்டா சொல்லணும்னா, என் கையெழுத்து உவ்வே. பிடிக்காது.

4) பிடித்த மதிய உணவு?

சனி ஞாயிறுகளில், சிக்கனைப் போட்டு ஏதாவது ஒரு குழம்பு, மீன் வறுவல்.
சாதா நாட்களில், சாம்பார் + தயிர் சாதம் ஊறுகாய்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

Absolutely. நான் உள்ளே மிருகம், வெளியே கடவுள். ஸோ, வெளீல இருக்கரவங்களுக்கு ஒரு ப்ரச்சனையும் இருக்காது. :)

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவி. கடல் நல்லாத்தான் இருக்கும். ஆனா, கடப்பாறை நீச்சல் தான் தெரியும்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். சமீபத்தில் எல்லாரின் மூக்கு மேலும் கவனம் செல்கிறது. ஏன்னு தெரியல. ஏதாவது மனோரீதியான வியாதியான்னு விசாரிக்கணும் :)

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
புடிச்சது - இயன்றவரை பங்க்சுவல் பரமசிவமாய் இருத்தல்.
புடிக்காதது - மூக்குப் பிடிக்க சாப்பிடரது. 'லைட்டா' சாப்பிடும் பழக்கம் வரவே மாட்ரது.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
புடிச்சது - Low maintenance :)
புடிக்காதது - பதிவெழுதும்போது நொய் நொய் என்று, கருத்துக் குதிரையை பறக்க விடாமல் தடுப்பது. :)

10)இப்போ யார் பக்கத்துல இல்லாமல் போனதுக்கு வருந்துகிறீர்கள்?

சட்டுனு யாரும் ஞாபகத்துக்கு வரலை. ஆனா, நண்பர்கள் பலர், ஆளுக்கு ஒரு மூலையில் இருப்பது, வாரா வாரம் வரும் அலுப்பு.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
கலிஃபோர்னியா வாழ் தேசிகள் பலரும் விரும்பி அணியும், 'ஐ லவ் மை பி.சி' போட்ட, வெள்ளை டி.ஷர்ட்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
சதா சர்வ காலமும் எங்கள் வீட்டில், டிவி ஓடிக்கொண்டே இருக்கும். இப்ப, "So you think you can dance"னு ஒரு ரியாலிட்டி டான்ஸ் ப்ரோக்ராம் ஓடிக்கிட்டு இருக்கு. என்னாமா ஆடறாங்க? யப்பா!

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
எனக்கு ink பேனா பிடிக்கவே பிடிக்காது. அதை பிடிக்கவும் தெரியாது. நெனவு தெரிஞ்ச நாள்ளேருந்து, அதை அடுத்தவங்க சட்டையிலும், துப்பட்டாவிலும், ink அடிக்கத்தா உபயோகிச்சிருக்கேன்.
என் ஃபேவரைட், Reynolds pen. மாறணும்னா, வெள்ளை/ப்ளூ Reynolds தான்.

14) பிடித்த மணம்?
பிரியாணி வாசம்;

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
யார மாட்டி விடலாம்னு தேடிக்கிட்டு இருந்தேன். கன்ணுல மாட்டுனது An& அண்ணாச்சி. சமீப காலத்தில், வெறும் படமும் பாடமும் மட்டுமே எடுக்கரவரை எழுத வச்சு வேடிக்கை பாக்கலாம்னு ஒரு அவா!

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ராதா நிறைய எழுத மாட்டாங்க. எதையாவது எழுதினாலும், அதை தவறாமல் படிப்பேன். என்னைவிட பதிவுலகில், அதிக எழுத்திப்பிழையோடு எழுதும் ஒரு பதிவர். மரம் செடி கொடி கிட்டையெல்லாம் பேசுவேன் ஒரு காலத்துல வியர்டினாங்க. interesting :)

17) பிடித்த விளையாட்டு?
ஓரளவுக்கு, வாலி பால்.
வேடிக்கை பார்க்க - டென்னிஸ்.

18) கண்ணாடி அணிபவரா?
சென்ற வருடம் டெஸ்ட் செய்து, ஒரு கண்ணாடி வாங்கிக்கிட்டேன். ஆனா, அணிவிதில்லை. கிளாமர் கம்மி ஆயிடுது ;)

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

சகலமும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

Transformers2

21) பிடித்த பருவ காலம் எது?

இலையுதிர் காலம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பொன்னியின் செல்வன். மாஞ்சு மாஞ்சு படிக்கறேன்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

தினசரி.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது - ஜன்னலோர மரத்தில் இருக்கும் குருவிகளின் சத்தம்.
பிடிக்காதது - தொலைபேசி அலரும் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
கடல் கடந்து சில பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்தது.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நானும் அதை சில காலமா தேடிக்கிட்டே இருக்கேன். ஒண்ணும் தேறலை இதுவரைக்கும்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

Imbalance in society. சில பேர் தேவைக்கு அதிகமா, உணவும், உடையும் வச்சிருக்கும்போது, பல பேர், ஒரு சோற்றுப் பருக்கைக்குக் கூட வழியில்லாமல் இருத்தல்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

என் சோம்பேரித்தனம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

சமீபத்தில் பார்த்த ரோம் நகரம்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

ஒரு காரியமும் செய்யாமல், சாப்டமா தூங்கினோமான்னு நிம்மதியா பொழுதை கழித்தல் ( தங்கமணி says ஹோய்ய்ய்! :) )

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

why? why? why? தேடுதல் தொடர்கிறது...

Tuesday, July 07, 2009

Dying in Style...

சில பேர பாத்திருக்கேன். செம ஜாலியான சுகவாசிகளா இருப்பானுங்க. எப்பப் பாத்தாலும் எந்தக் கவலையும் இல்லாம சுத்தித் திரிவானுங்க. பணக் கஷ்டம் இருக்காது, படிப்பும் ஏறும், மனசும் நல்ல மனசா இருக்கும்.
கொஞ்சம் பொறாமையாவே இருக்கும், அவனுங்கள பாத்தா.

கம்ப்யூட்டர் கிளாஸ் படித்த காலத்தில் அப்படி ஒரு நண்பனின் பரிச்சயம் இருந்தது.
'சேட்டுப்' பையன். ரொம்ப ரொம்ப ஜாலியான பயல்.
புதுசா மார்க்கெட்ல இருக்கர பைக்குதான் கொண்டு வருவான். எல்லாருக்கும் டீ வாங்கித் தருவான், பசிச்சா 'செட்' தோசை வாங்கித் தருவான். சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போவான்.
நல்லாவும் படிப்பான்.
அவங்க வீடுதான் எங்க ஊர்லையே பெரிய வீடு. மூணு காரு இருக்கும். எல்லா ரூம்லையும் டிவி/விசிஆர் இருக்கும். 90களிலேயே டிஷ் ஆண்டனா வச்சிருந்தாங்க.
ஆனா, இந்தப் பய ஒவரா பந்தா எல்லாம் பண்ண மாட்டான். ஹாப்பியா இருப்பான்.
ஆனா, வகுப்புகளில் பலப் பல சில்மிஷங்கள் பண்ணுவான்.

சொன்னா நம்ப மாட்டீங்க, வீட்டுக்குத் தெரியாம ஒரு நாள், டாட்டா சியெர்ரா போய் வாங்கிட்டானாம். இப்படியெல்லாம் ரொம்ப ஸ்டைலா வாழ்ந்த பையன்.

இந்த மாதிரி ஸ்டைலா ஜாலியாவே வாழர பசங்களுக்கு, வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளையெல்லாம் அனுபவிச்சு, கொஞ்சம் அடிபட்டு கிடிபட்டு, வயசாகி பொக்கையாகி, சாதாரணமா எல்லாரையும் போல் வாழ்க்கையை கழிக்கணும்னு தலையெழுத்து இருக்காது போலருக்கு.

கம்ப்யூட்டர் கிளாஸ், காலேஜ் வாழ்க்கை எல்லாம் முடியரதுக்குளையே, இந்தப் பயல், ஒரு பைக் ஆக்ஸிடெண்ட்டில் இறந்து விட்டான்.
இவன் வயசாகி நொந்து நூலாகி இறந்திருந்தால், ஒரு சாதாரண நிகழ்வா இருந்திருக்கும் - அவனோட 'ஸ்டைலுக்கு' அது பொருந்தாமல் போயிருந்திருக்கும். வாழ்ந்த கொஞ்ச காலங்களில் எல்லாரையும் கிரங்கடித்தவன், சட்டுனு இள வயதில் நிகழ்ந்த மரணத்தினாலும், எல்லாரையும் ஒரு ஆட்டு ஆட்டிட்டான்.

இன்று மைக்கேல் ஜாக்சனுக்கு லாஸ் ஏஞ்சல்சில் நடந்த மெமோரியல் கூட்டத்தையும், அதில் ஒவ்வொருவரின் நெகிழ்வான பேச்சையும், மைக்கேல் சென்ற ஒரு வாரத்தில் ஏற்படுத்திய அதிர்வையும் பாத்தபோது, என் 'சேட்டு' நண்பனின் நினைவுதான் வந்தது.

இதே மைக்கேல் ஜாக்சன், தொண்ணூறு வயதில், தொங்கிப் போன பின், சாதாரணமாய் மரணத்திருந்தால், இந்த அளவுக்கு ஒரு தாக்கம் இருந்திருக்காது.
ப்ரைம் டைமில், ஸ்டைலா, திடீர்னு நம்மை விட்டுப் போனதால் தான், இந்த கிரக்கம் நமக்கு.
யோசிச்சு பாத்தா, மைக்கேல் ஜாக்சன் எல்லாம், வயசாகக் கூடாத ஒரு ஸ்பெஷல் ஆளாதான் மனசுக்குள் தெரியராரு.

இந்த மாதிரி, வித்யாசமான 'ஸ்டைலான' ஆட்கள், இப்படித்தான் திடுதிப்புனு போயிடுவாங்கன்னு 'விதி'ச்சிருக்கோ என்னமோ?

ஆங்கிலப் பாடல்கள் எல்லாம் சரிவரப் புரியாது என்ற போதிலும், மைக்கேல் ஜாக்சனின் அனைத்துப் பாடல்களுக்கும் செம விசிறி நான். ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு அவரின் பாடல்களுக்கு. இசைக் கோர்வையும் ப்ரமாதமா இருக்கும். காலும் தலையும் தானா ஆடும்.

எப்பேர்பட்ட சாதனைகள் புரிந்த மனுஷன்.

அவருக்கும், கடைசியில் ஆறடி நீளப் பெட்டிதான்.

It was an humbling experience watching the grand memorial service, the speeches, the songs, the music, the praises, the world wide tv coverage - all, while Michael Jackson was lying still in the six footer gold casket.

RiP Michael!

Michael Jackson (1958 - 2009)

Memorial highlights: