recent posts...

Sunday, August 15, 2010

ஏனோ தெய்வம் சதி செய்தது...

நண்பன் கிரிஷ்ணனின் சகவாசத்தைப் பற்றியும் அவன் அக்கா குடும்பத்துக்கு நேர்ந்த சோகத்தையும் சென்ற் ஆண்டு பதிவியிருந்தது மீண்டும் நினைவுக்கு வருகிறது.

அந்தப் பதிவில், இப்படிச் சொல்லியிருந்தேன்:
வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதுக்குன்னு இப்படியா ஒரு குடும்பத்தை போட்டு வாட்டி எடுக்கும்?

கிருஷ்ணனின் அக்கா கணவனுக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின், புத்தி சுவாதீனம் குறைந்த நிலையில், அக்கா குடும்பம், சொந்த பந்தங்களின் உதவியுடன் காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தது. வீட்டை விற்று, மருத்தவத்துக்கும், தினசரி செலவுக்கும் உபயோகித்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.
தொழிலதிபராய் இருந்தவர், சொந்தக் காரில் ஜம்மென்று வலம் வந்தவர், இப்படி முடங்கிப் போனது, அவருக்கு பெரிய கஷ்டமாய் இல்லை. ஏன் என்றால், அதை உணரும் நிலையில் அவரின் மனது இல்லை. பாதிக்கப்பட்டது, கண்டிப்பாய் கிருஷ்ணனின் அக்கா. ஆனால், பெரிதும் பாதிக்கப்பட்டது, அக்காவின் இரண்டு குழந்தைகள். விபத்து நடந்த பொழுது, இருவருக்கும் பள்ளி செல்லும் பருவம்.
அடிக்கடி புது சட்டை, வேண்டிய பொம்மைகள், சுற்றுலா, உல்லாசம் என்று சந்தோஷமாய் கழிந்தவர்கள், இந்த திடீர் திருப்பத்தால், ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

வருடங்கள் சில கழிந்தன. மாற்றம் பெரிதாய் இல்லையென்றாலும், சகஜ நிலைக்கு வந்திருந்தனர் அந்த குடும்பத்தினர். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பெண்ணுக்கு திருமணம் முடிந்திருந்தது.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு சென்று கொண்டிருந்த மகனும், ஓரளவுக்கு வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தான். சென்ற வருடம் அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள், 'சகஜ'த்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது காண சற்றே ஆறுதலாய் இருந்தது.
அக்கா கணவனின் நிலை மாறவேயில்லை. புத்தி சுவாதீனம் இன்றி, குழந்தை போல்தான் பேசிக்கொண்டிருந்தார்.
இதையெல்லாம், 'accept' பண்ணிக் கொண்டு விட்டு, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற வருடம் அவர்களைப் பார்க்கும்போதும், நல்லாத்தான் சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாரு. என்றாவது ஒரு நாள், மூளையில் ஏதாவது ஒரு நரம்பு, உயிர் பெற்று நார்மலாகிடுவாரு என்ற நம்பிக்கையில், அக்காவும், கலர் கலரா இன்னும் மாத்திரைகளை கொடுத்துக்கிட்டுத்தான் வராங்க.

பையன் கிட்ட, "டேய் குமாரு, எப்படியாவது கரெஸ்பாண்டன்ஸ்ல சேந்தாவது ஒரு டிக்ரீ முடிச்சுடுடா"ன்னு சொன்னதுக்கு, "சரிண்ணா"ன்னு தலையாட்டினான்.
நல்ல ஸ்மார்ட்டா இருப்பான் பையன். சின்ன வயசுல, அவனும், அவன் வயதை ஒத்த இன்னும் சில குட்டீஸ்களும், சதா சர்வ காலமும், தெருவில் ஓடி ஆடிக்கிட்டு இருப்பாங்க.
திடீர் மாற்றங்களால், சின்ன வயசுலையே வேலைக்கெல்லாம் போகவேண்டி வந்திருந்தாலும், எல்லாத்தையும், ஒரு 'திட' மனசோட செஞ்சுக்கிட்டிருந்தான்.

ஒரு பெருமையா இருக்கும், அவனை பாக்கும்போது. நம்ம படர சின்ன சின்ன கஷ்டமெல்லாம், அவன் பார்த்த துயரத்துக்கு ஈடாகாது.

நேத்து வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எங்க அப்பாதான் பேசினாரு. ஒரு பெரிய கஷ்டமான விஷயம் நடந்துடுச்சுன்னு சொன்னாரு. "நம்ம குமார் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு பைக்கில் வரும்போது வழியில் லாரி மோதி இறந்துட்டான்"னு சொன்னாரு.

வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதுக்குன்னு இப்படியா ஒரு குடும்பத்தை போட்டு வாட்டி எடுக்கும்?

அந்த அக்கா அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையை நினைத்தால், மனசு என்னமோ பண்ணுது. இதெல்லாம் part of a bigger planஆ?
என்ன வெங்காயமோ!


7 comments:

Unknown said...

அண்ணே அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்வதுன்னே தெரியலைண்ணே..

Cable சங்கர் said...

வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு நியாயமோ.. தர்மமோ.. கிடையவே கிடையாது..

bandhu said...

Life is really unfair!!!! my heart felt condolences.

World of Photography said...

என்ன சொல்றதுனே தெரியல சர்வேசன்... சென்ற வருடமும் உங்க அந்த பதிவ படிச்சேன்... பட்ட கால்லயே படும்னு இத தான் சொல்றங்களோ..

அவங்க குடும்பத்துக்கு என்ன ஆழ்ந்த அனுதாபங்கள்.

SurveySan said...

செந்தில், Cable Sankar, Bandhu, World of Photography, Muthuletchumi,

thanks for stopping by.

ரவிஷா said...

கடவுளே! என்ன வகையான சோதனை இது?

அவனவன் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு ஹாய்யாக உலா வர்றான்! இங்கே ஒரு சாமானியருக்கு இப்படி ஒரு சோதனை!

அன்பே சிவம் படத்தில் வரும் மாதவன் மாதிரி புலம்பவேண்டியதுதான்!

ராமலக்ஷ்மி said...

நண்பரின் குடும்பம் மீண்டு வர, ஆறுதல் பெற என் பிரார்த்தனைகள்.