recent posts...

Monday, May 31, 2010

தத்தை, வேலு, பாப்பா கதையும் படங்களும்

வேலு (Whale) பாக்க பசிஃபிக் சமுத்திர ஓரம் இருக்கும் 'மாண்ட்டரே பே' என்ற ஊருக்கு போனோம். வழக்கம் போல் வேலுக்கும் எனக்கும் ஏழாம் பொறுத்தம் போல.
"கடலில் ஒரே கொந்தளிப்பு. மன திடமில்லாதவங்கெல்லாம் எஸ்கேப் ஆகிக்கங்க. வந்தே தீருவேன்னு நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கரவங்களெல்லாம், இந்த மாத்திரைய சாப்பிட்டுட்டு, கப்பலுக்கு வாங்க"ன்னு, காப்டெயின் சொன்னாரு.
"என்னாய்யா மாத்ர இது?"ன்னு கேட்டா, கடல் கொண்தளிப்புல, கப்பல் கன்னாபின்னான்னு ஆடும். அந்த ஆட்டத்துல, வயிறு கலங்கி உவ்வே பண்ணாம இருக்க மாத்திரைன்னாரு.
இன்னாய்யா கிண்டலு பண்ற, நாங்க யாரு? எத்தினி கடலு கடந்து வந்துருக்கோம், இதெல்லாம் எம்மாத்திரம்னு, மாத்திரையை, தலீவரு மாதிரி, கட்ட வரலுக்கு மேல வச்சு, சுவாய்ங்க்னு சுவீங்கம் மாதிரி விட்டெறிஞ்சேன் கடலுக்கு.
வயிறு கலங்கிய மீனேதாவது, சாப்டு நல்லாருக்கட்டும்னு உள்ளூர வேண்டிக்கினேன்.

கப்பல் கெளம்பிச்சு. பத்தே நிமிஷம் தான், வ்யிறு பெசஞ்சு, தலை வலிச்சு, காத்தெறிக்கின பலூன் கணக்கா ஒரு ஓரமா குந்திக்கினே, எப்படா மூணு மணி நேரம் முடியும், எப்படா கப்பல் கரையை தட்டும்னு ஒவ்வொரு நிமிஷமும், டார்ச்சரா போச்சு. விட்டெறிஞ்ச மாத்திரை கப்புலுக்கு உள்ளையே விழுந்திருந்தா, சொரண்டி எடுத்தாவது முழுங்கி, டூருக்கு குடுத்த காசுக்கு வேலு பாத்திருப்பேன்.

வேலு பாரு வேலு பாருன்னு, கப்பித்தான் அப்பப்ப கூவுனாரு, தூரத்துல தத்துனூண்டா கறுப்பா கடலுல ஏதோ தெரிஞ்சுது. என்ன வேலோ, என்ன சூலமோ, போங்கய்யா, கரையேத்திவிடய்யான்னு, கப்பித்தானுக்கு, அலகுகுத்தி காவடியெடுக்காத குறையா, மனசால வேண்டிக்கினு, ஒருவழியா கரையேறினோம்.

இதுவரை அஞ்சாறு வாட்டி, இந்த வேலு பாக்கும் படலம் நடந்திருக்கு. ஒரு தபா கூட டிஸ்கவரி சேனல்ல வர மாதிரி, வேலு பாத்ததே இல்லை. கறுப்பா ஏதோ கட்டை மெதக்கராமாதிரி தெரியும். ஒவ்வொரு தபாவும், இனி இந்த வெத்து வெட்டுக்கு வரக்கூடாதுன்னு தோணும், ஆனா, என்ன மாயமோ தெரீல, வருஷத்துக்கு ஒரு தபா இந்த மாதிரி வந்து பல்பு வாங்கிட்டு போயிடறேன்.

ட்ரிப்பில் பல்பு வாங்கிட்டு, கரையேறி, எத்தையாவது சாப்பிடலாம்னு தேடினா, ஒரு மனுஷன், பல பல கிளிகளை வச்சுக்கினு ஷோ காட்டிக்கினு இருந்தான்.
வந்ததுக்கு, இதையாவது படம் புடிப்போம்னு க்ளிக்கியது கீழே.

அ. ரொம்ப நேரமா க்ளிக்கிக்கினே இருந்தேன் எல்லா தத்தைகளையும். இந்த பச்சக் கிளி திடீர்னு, கொஞ்சம் குணிஞ்சு என்னை ஒரு லுக்கு விட்டுது. அப்ப கிளிக்கியது.



ஆ. இந்த மாதிரி ஒரு அழகு தத்தை நான் பாத்தது இல்லை. பாத்த ஒடன, கைல இருக்கரதை எடுத்து கொடுத்து, பின்னாடியே போயிடலாம் போல, ஒரு 'சாமியார்' தத்தை. செம லுக்குல்ல?



இ. தத்துனூண்டு தெரிஞ்ச வேலு



ஈ. சக கப்பல் பயணி. குட்டிப் பாப்பாவின், நைனாக்கு டமில் படிக்கத் தெரியாது என்ற ஒரே மன தைரியத்தில், இந்தப் படம். யாரும் போட்டுக் குடுத்தறாதீங்கப்பு.



ஈ. இப்பெல்லாம் பறவைகள் மேல் எனக்கு ஈர்ப்பு. என் மேலும் பறவைகளுக்கு ஈர்ப்பு போல. கப்பலை பிந்தொடர்ந்து வந்த ஸீகல்ஸ்.

Sunday, May 23, 2010

வாத்து படங்கள் using Canon EF-S 55-250mm IS lense

நாதஸ்'ன் பறவைப் படங்கள் எல்லாம் பாத்து காதுல பொக வந்து ரொம்ப நாளாச்சு.
நான் என்னதான் எடுத்துப் பாத்தாலும், திருப்திகரமா ஒண்ணும் இதுவரை வந்ததில்லை.
சரி, காமெராதான் சரியில்லைன்னு, என்னை நானே சமபாதானப் படுத்திக்கிட்டு வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தேன்.

Alaskaவுக்கு போக திட்டம் தீட்டப்பட்டுவிட்டதாலும், அங்கே கழுகுகள் எல்லாம் நெறைய இருக்கும்னு கேள்விப்பட்டதாலும், திரும்ப, பறவைகளைப் படம் எடுக்க வேண்டும் என்ற அவா தொற்றிக் கொண்டது.
அலாஸ்காவுக்கு சில பல $களை வாரி எறைச்சாச்சு, பத்தோடு ஒண்ணு பதினொண்ணா, பெரிய ஜூம் லென்ஸ் ஒண்ணு வாங்கிடலாம்னு, அங்க இங்க தேடில், ஒரு EF-S 55-250mm lense வாங்கியாச்சு.

லென்ஸ் வாங்கியாச்சு, பறவைகளுக்கு எங்க போகரதுன்னு தேடினப்போ, இங்க எங்கூர்ல, Bay trailsனு ஒரு எடத்துல, தண்ணி சுத்தீகரிப்பு ஆலைக்கு பாக்கத்துல தேங்கி இருக்கர தண்ணிய சுத்தி பல பறவைகள் இருக்கும்னு சொன்னாங்க.
சரின்னு, ஞாயிறு அதிகாலை ஒம்போது மணிக்கெல்லாம் எழுந்து, கேமராவும் கையுமா அந்த எடத்துக்கு போனேன்.
எதிர்பாத்த அளவுக்கு பெருசா ஒண்ணும் பறவைகள் இல்லை. கொஞ்சம் வாத்து அங்க இங்க இருந்துச்சு.
கேமராவும், லென்ஸும், எதிர்பாத்த அளவுக்கு கை கொடுக்கலை.
படம் எல்லாம் எடுத்துட்டு வந்து பாத்தா, எதுவுமே திருப்திகரமா இல்லை.
கேமராமேன் சரியில்லையா, கேமரா/லென்ஸ் சரியில்லையான்னு, உளவியல் ரீதியா திங்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். ;)







இந்தப் படம் சரியா வராததில், ரொம்பவே சோகம் ஆயிட்டேன். சரியான நேரத்தில் க்ளிக்கியும் ஷேக் ஆகி சொதப்பிடுச்சு. ஹ்ம்! வாத்து, இங்ஹ மாதிரி வாய்ப்பை ஒரு தபா தான் தரும். இனி, அடுத்த வாரம் திரும்பிப் போய் பாக்கணும்.


எதுவுமே வரலன்னு நொந்து, வழக்கம் போல, வீட்டுக்கு வந்து எடுத்த படங்கள்.






மொத்தத்தில், an average lense - Canon EF-S 55-250mm IS. இமேஜ் ஸ்டெபிலைஸர் எல்லாம் இருந்தும், ஷேக் ஆகாம எடுக்கரது ப்ரம்மப் ப்ரயத்தனம். படங்களிலும், பளிச் கம்மி.
thoughts? same blood?

Thursday, May 20, 2010

CTA 2010 ஆண்டு விழாவும் இங்கிதம் தெரியா டமில் தேசிகளும்

நேத்து அமெரிக்க வாழ் இந்திய 'தேசி'களின் மேம்பாட்டுக்காக ஒரு மிக முக்கிய ஆய்வு நிகழ்த்தியதைப் பற்றி எழுதிக் கதறியிருந்தேன்.
இன்றைக்கு, நம்ம தமிழ் தேசிப் பண்பாளர்களின் அட்டகாசத்தைப் பத்திச் சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறேன்.

CTAன்னு ஒரு தொண்டு ஸ்தாபனம். California Tamil Academy இதன் விரிவாக்கம். சில நூறு தொண்டார்வலர்கள் சேர்ந்து, தங்கள் சொந்த நேரத்தில், வார இறுதியில் ஒன்று கூடி, ஆயிரம் சிறுவர் சிறுமிகளுக்கு தமிழ் சொல்லித் தாராங்க. ஒரு குட்டி பல்கலைக்கழகம் மாதிரி செயல்படராங்க. பாராட்டத்தக்க அரிய பெரும் செயல்.
இதில் ஈடுபடும் தொண்டார்வலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தப் பள்ளியில், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் படிக்க அனுப்பி வைக்கும், டமில் தேசிகளை அதற்கு மேல் பாராட்ட வேண்டும்.
இந்த ஊர் வேளை பளுவில், கணவனும், மனைவியும் ஆளுக்கு ஒரு மூலையில் மாய்ந்து மாய்ந்து வேலை செய்து, அவர்களுக்கு ஹப்பாடான்னு உட்காரக் கிட்டும் வார இறுதி நாட்களில் பாதியை, தங்கள் பிள்ளைகள் தமிழ் பயிலச் செலவிடுவது, அருமையான விஷயம்.

சென்ற வாரம், இந்த CTAவின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இங்கே அருகில் உள்ள campbell நகரத்தில் ஒரு நல்ல அரங்கத்தை வாடகைக்குப் பிடித்து, கிட்டத்தட்ட 500 மாணவர்களின் (3 வயது முதல் 15 வயது வரை இருப்பாங்க) நிகழ்ச்சிகள், காலை எட்டுக்கு தொடங்கி, சாயங்காலம் 4 வரை வரிசையா நடந்தது. பாட்டு, நடனம், நாடகம், அது இதுன்னு அருமையா செஞ்சாங்க பசங்க.

ஆனா பாருங்க, இந்த வேடிக்கை பாக்க ஒக்கார கும்பல் இருக்கே, ரொம்பக் கொடுமை பண்ணாங்க. சின்னப் பசங்க, கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி, அழகா பாட்டோ, நாடகமோ, நடனமோ அரங்கேத்தும்போது, அமைதியா இருந்து ரசிச்சுத் தொலைக்காம, சதா சர்வ நொடியும், தொணத் தொணத் தொணன்னு பேசிக்கிட்டே இருந்தானுங்க.
அஞ்சு நிமிஷத்து ஒரு தபா, ஒருங்கிணைப்பாளரும், அமைதி அமைதின்னு சொல்லிப் பாக்கறாரு, ஒரு பயலும் கண்டுக்க மாட்றான்.
இந்த இங்கிதம் தெரியா காட்டுமிராண்டி கும்பலை பத்தி முன்னமே தெரிஞ்சிருக்கும் போல, Silence Pleaseனு பெருசு பெருசா அட்டையில் எழுதி,மூணு நாலு தன்னார்வலர்கள், மேடைக்கு முன்னாடி, அப்பப்ப நடந்துக்கிட்டே இருந்தாங்க.

என்ன பண்ணியும், சில தடித் தோல் டமில் தேசிகளுக்கு எந்த சொரணையும் இல்லை. அவங்க பாட்டுக்கு அவங்க ஊர் கதையை பேசிக்கிட்டு, ரொம்பவே டார்ச்சர் கொடுத்துட்டாங்க.

பேசித் தொலஞ்சே ஆகணுங்கர கட்டாயம் இருக்கரவங்க, அரங்கத்தை விட்டு எழுந்து போய் பேசிட்டு வரணுங்கர இங்கிதம், எம்புட்டு படிச்சும், இம்புட்டு தூரம் வந்தும், நம்ம தேசிகளுக்கு இல்லாம போனது ரொம்பவே பெரிய சோகம்.
ஆனா, கெரகம் புடிச்சவனின், இயல்பே இதுதானான்னு கேட்டீங்கன்னா, அதுதான் இல்லை. இதே கும்பல், ஒரு அமெரிக்க நிகழ்ச்சிக்கோ, ஆங்கில சினிமா தியேட்டருக்கு, வேற ஏதாவது ஒரு கண்றாவிக்கோ போனா, தொரை மாதிரி வாய்ல வெரல வச்சுக்கிட்டு ஒக்காருவான்.

இது என்ன உளவியல் காரணமோ தெரியல. தேசிகள் ஒன்று பட்டால், எருமைக் கூட்டம் மாதிரி ஆயிடறோம். தனி மனித சுய டிஜிப்ளின் கொஞ்சம் கூட இல்லாத கூட்டம் நம்ம கூட்டம்!
ஹ்ம்!

CTAக்கு ஒரு ஓ! அடுத்த முறை, சைலன்ஸ் ப்ளீஸ்னு சொல்லிட்டு, ஒரு சாக்பீஸை எடுத்து அரங்கத்துக் கண்மணிகள் மேல விட்டெறியுங்க. அப்பவாச்சும் சொல்ப விநாடிக்கு, அமைதி கிட்டும்! ஸ்ஸ்ஸ்!

Wednesday, May 19, 2010

என் CEOவும் தேசிகளும்

தேசி: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இடப்பட்டிருக்கும் செல்லப் பெயர். 'பரதேசி'யின் சுறுக்கும் இது.

என் பழைய CEOவை உங்களில் சிலருக்கு நன்றாய் நினைவு இருக்கும். அவரு வேலையை விட்டுப் போய், புதிய CEO வேலைக்கு வந்து சில மாசங்களாச்சு. இவரும், திறமையான மனுஷன்.
நல்ல பேச்சுத் திறமை.
அதுவும், குறிப்பா motivational speech வழங்குவதில் அபாரமான திறமை இருக்கு இவருகிட்ட.
எவளோ நேரம் வேணும்னாலும், சலிப்பில்லாம கேட்டுக்கிட்டு இருக்கலாம் இவர் பேச்சை.

அப்பேர்பட்ட எங்க தலை, ஊர் ஊரா போய், உலகம் பூரா உள்ள எங்க கொம்பேனி மக்களிடம், சின்ன சின்ன கூட்டம் போட்டு, அவரின் எதிர்கால திட்டங்களை பேசி, ஒரு கலந்துரையாடல் செய்யறாரு. வழக்கமான கொம்பேனி மீட்டிங்குகளில் வரும், ஆயிரம் ஆட்கள் இல்லாமல், இந்த கலந்துரையாடல்களில், நூறு பேர் கிட்ட இருப்பாங்க.

சென்ற வாரம் ஒரு சுபயோக சுபதினத்தில், நானும் நூத்துல ஒருத்தனா போயி, கதை கேக்க ஒக்காந்தேன்.

மீட்டிங் ஆரம்பிக்கரதுக்கு ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி எங்க CEO மேக்-அப் எல்லாம் போட்டுக்கிட்டு (வீடியோ எடுத்தாங்க) ஜம்முனு வந்து நின்னாரு. வந்தவரு, சுத்தி ஒக்காந்திருந்தவங்க கூட்டத்துக்கு மத்தியில் சில பேருகிட்ட சிரிச்சு பேசிக்கிட்டு குசலம் விசாரிச்சுக்கிட்டு இருந்தாரு. அவருக்கு, பர்சனலா எல்லாரையும் தெரியாது, சும்மா 'நான் உங்களில் ஒருவன்'னு ஒரு இதைக் கொண்டுவர இப்படி ஒவ்வொருத்தர் கிட்டையும் 'பழகி'க்கிட்டு இருந்தாரு.

இதுல ஒரு விஷயம் அப்பட்டமா பளிச்னு தெரிஞ்சுது.

சிலிக்கான் வேலி(silicon valley)யில் உள்ள அநேகம் கொம்பேனி போலவே, எங்க கொம்பேனியிலும், 50% தேசிகள் தான் இருக்கோம்.
சுத்தி ஒக்காந்த கூட்டத்தில், randomஆ இன்னொரு வெள்ளைக் கார தொரைகிட்டை போயி எங்க CEO "ஹாய், எப்டீக்கீர?"ன்னு கேட்டா, அந்தாளும், ஒக்காந்துக்கிட்டே, "நான் நல்லாக்கீரேன்பா"ன்னு கேஷுவலா பதில் சொல்லிக்கிட்டு ஜாலியா பேசறான் தொரை.

இதே CEO, இதே கூட்டத்தில், வேறொரு இருக்கையில் இருக்கும், ஒரு 'தேசி' கிட்ட போயி நின்னு, "இன்னாபா சௌக்யமா"ன்னு கேட்டா, நம்ம தேசி, ஸ்டைலா ஒக்காந்துக்கினே "ஏதோ கீரேன்பா"ன்னு தொரை மாதிரி பதில் சொல்லாம, CEOவ பாத்ததும், நாட்டாமையை பாத்த கணக்குபிள்ளை கணக்கா, சடால்னு எழுந்து, துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு பணிவா நின்னு,"ஹிஹி நல்லா இருக்கேன்யா. நீங்களும் உங்க புள்ள குட்டிகளும் நல்லா இருக்கணும்யா"ன்னு பல்ல இளிச்சுக்கிட்டு அசடு வழிஞ்சுகிட்டு, ரொம்பவே பணிவா பேசறான்.

இந்த கூட்டத்தில், ஒரு அஞ்சாறு தொரைகள்கிட்டையும், அஞ்சாறு தேசிகள் கிட்டையும், இப்படி எங்க CEO போயி, சலாம் போட்டிருப்பாரு. ஒருத்தரை விடாம எல்லா தொரையும், ஒக்காந்துக்கிட்டே ஸ்டைலா கைகுலுக்கி பதில் சொன்னான். ஒருத்தரை விடாம எல்லா தேசியும், படால்னு எழுந்து நின்னு, ரொம்பவே பணிவான பாடி லேங்குவேஜில் கும்புடு போட்டான்.

என்ன கொடுமைங்க இது? இது நம்ம கலாச்சார பயக்க வயக்கத்தினால், நம்ம ரத்தத்தில் ஊரின நல்ல விஷயமா? இல்லை, காலா காலமாய், ஒருத்தரை மாத்தி ஒருத்தர் கிட்ட இன்னிவரைக்கும், அடிமையாவே வாழ்ந்த பழக்கத்தினால் ஏற்பட்ட, குறுகிய மனப்பான்மையின் பளிச்சென்ற வெளிப்பாடா?

என் கிட்ட வந்து "ஹாய் மேன், ஆஃபீஸ் நேரத்துல பதிவெல்லாம் போட்டுக்கினு ஜாலியா போதா வாழ்க்கை"ன்னு கேட்டிருந்தா, பல்லக்கடிச்சுக்கிட்டாவது, இருக்கையை கெட்டியா புடிச்சுக்கிட்டு, "ஆமாம்பா. பாட்டு டவுன்லோடு பண்ண ரொம்ப நேரமாவுது. ஏதாச்சும் பண்ணுபா"ன்னு சொல்லலாம்னு இருந்தேன். ஆனா, என் கிட்டையே வரலை! :(


Sunday, May 02, 2010

கண்டேன் Eaglesஐ

Bay Areaவுக்கு Eagles வரப் போவதைப் பத்தி சொல்லியிருந்தேன். போகலாமா வேணாமான்னு ரொம்பக் குழுப்பம் இருந்தது.
ரெண்டு காரணங்கள். அவங்க பாடினதில், எனக்குத் தெரிஞ்சது நாலஞ்சு பாட்டுதான். Hotel California, Take it Easy, Life in the fast lane, Tequila sunrise, இந்த மாதிரி.
இதுவும் கூட hotel californiaவைத் தவிர மத்ததுக்கு வரிகள் கூடத் தெரியாது.
இன்னொரு காரணம், $. செலவு ஜாஸ்தி ஆயிடும்.

பள்ளிக் காலங்களின் உயிர் நண்பன் மனோகரனின் நட்பில் கிட்டிய பலப் பல நல்ல விஷயங்களில், சிகரமான ஒன்று, இந்த மேற்கத்திய இசையின் அறிமுகம். Abba, BoneyM, Beatles, Eagles, Michael Jackson, Bryan Adams என்று எதையும் விட்டு வைக்கவில்லை அவன். முத்தான பாடலகள் அத்தனையையும் வைத்திருந்தான்.
அந்த நாட்களில், Eaglesன் hotel california மெகா ஹிட்டு எங்கள் மத்தியில். அடிக்கடி,
ஸ்பீக்கரில் போட்டு அலர விட்டுக் கேட்போம்.

ஆரம்ப கிட்டார் பீஸுக்காகவே, இந்தப் பாடலை ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். அப்பேர்பட்ட இசைக் குழுவை நேரில் பார்க்கும் பாக்கியம் கிட்டியதும், செலவு கொஞ்சம் ஜாஸ்தி என்பதால் ஒரே யோசனையாக இருந்தது. ஜூன் மாதம், ஏ.ஆர்.ரஹ்மானுக்காக 125$ டிக்கெட் வாங்கி வச்சாச்சு.

Eaglesக்கு குறைந்த பட்சம் $55 முதல் டிக்கேட் இருந்தது.
Hp Pavillion என்ற பெரிய ஸ்டேடியத்தில், $55 டிக்கெட்டு வாங்கினா, தூரத்தில், ஈகிள்ஸின் முகத்தை பைனாக்குலர் வைத்துப் பார்த்தாலும் தெரியாது.
என் கிட்டார் வாத்தியார் ஒரு ஐடியா கொடுத்தாரு. ஸ்டேடியத்துக்கு போயி டிக்கெட் பூத் பக்கத்துல நின்னா, யாராச்சும் ஏற்கனவே டிக்கெட் வாங்கினவங்க, போக முடியாத சூழலில் இருந்தால், அதை சீப்பாக விற்பார்களாம்.

சரின்னு, வண்டி கட்டிக்கிட்டு, ஓசி பார்க்கிங்க் எங்க இருக்குன்னு, சுத்தி சுத்தி தேடி (இல்லன்னா, அதுக்கு தனியா $20 கொடுக்கணும்), காரை வச்சுட்டு, ஸ்டேடியத்துக்கு வந்தோம்.
1970களில் கலக்கிய Eagles குழுவில் எல்லாருக்கும் இப்போ 65+ வயதிருக்கும். 'கிழக்குழுவை' காண பெருசா கூட்டம் இருக்காதுன்னு நெனச்சேன்.
15,000 பேர் அமரக்கூடிய ஸ்டேடியம். கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல்.
$55 டிக்கெட் இருக்கான்னு, கவுண்ட்டரில் கேட்டேன். இல்லன்னுட்டான் கடங்காரன்.

$90 இருக்கு, வாங்கிக்கோன்னான். அரை மனசுடன், கிட்டார் வாத்தி சொன்ன மாதிரி யாராவது வராங்களான்னு அங்கையும் இங்கையும் பாத்தேன். ஒருத்தரையும் காணும்.

15,000 பேர், ஸ்டேடியத்தின் உள்ளே கத்திக்கிட்டும், விசிலடிச்சுக்கிட்டும் போனாங்க. அவங்களையெல்லாம் பாத்ததும், எனக்கும் Eagles ஜுரம் வந்துடுச்சு. வாழ்க்கை வாழ்வதர்க்கே, ப்ளடி $90 தானேன்னு உள்மனசு சொல்லிச்சு.
சரி, வாங்கிடலாம்னு ஒரு அடி எடுத்து வச்சா, "hey buddy. i got 2 $90 tickets. i couldnt make it, can you take it?"ன்னான் ஒரு புண்ணியவான். நான் அவன் கிட்ட, "no buds. i am looking for a $55 ticket"னு பிட்டு போட்டேன்.
எட்டு மணிக்கு ஷோ, 7:58க்கு இந்த டயலாக் நடக்குது. அவனுக்கும், என்னை விட்டா வேர யாருகிட்டையும் விக்க முடியாதுங்கர நெலமை. சரின்னு, $90ஐ, $55க்கே தரேன்னுட்டான்.

சீப்பா கெடச்சாலும், பல்லு பிடிச்சு பாப்போம்ல. டிக்கெட் ஒரிஜினல் தான, ஏமாத்திடமாட்டியேங்க்ர ரீதியல அவன கேள்வி மேல கேள்வி கேட்க, கடுப்பாகிப் போனவன், "என் கூட வா. உன்னை உள்ள ஒக்கார வச்சுட்டு காசு வாங்கிக்கறேன்னு", கதவு வரை வந்து, டிக்கெட் ஸ்கேன் பண்ணி என்னை உள்ளே விட்டதும்தான், காசு வாங்கிக்கிட்டான். நல்லவன் :)

அப்பரம் என்னங்க? ஸ்டேடியத்துக்குள்ள போனா, விச்ல் சத்தமும், கைதட்டலும், குதூகலமும், அடேங்கப்பா!!!

அதுவும், hotel californiaவை, Don Henley ட்ரம்ஸ் வாசிச்சுக்கிட்டே பாடியதும், Joe Walsh இந்த வயதிலும், கிட்டாரை பின்னி பெடலெடுத்ததில் மொத்த கூட்டமும் சாமி ஆடியதும், ஆஹா! அமக்களம்!

பிறவிப் பயன் அடைந்த சுகம்! பேரானந்தம்.

சனி இரவு நான் கண்ட இசை விருந்து கீழே. அதுக்குள்ள ஏதோ ஒரு புண்ணியவான் யூட்யூபுல போட்டுட்டான். வாழ்க அவன். அந்த கிட்டார் பிட்டை கேளுங்க. புல்லரிக்கும்.


என் $90 வ்யூவே இப்படி இருக்குன்னா, $55 எப்படி இருக்கும்னு நெனச்சுப் பாருங்க :)


வாழ்க்கை வாழ்வதர்க்கே!

இது 1994ல் நடந்த இன்னொரு நிகழ்ச்சியின் வீடியோ இங்கே. பாடல் வரிகளுடன்.

1977ல் பட்டையை கிளப்பிய போது எடுத்த வீடியோ.