recent posts...

Tuesday, March 09, 2010

இதுதாண்டா தன்நம்பிக்கை

"தன்நம்பிக்கை நட்சத்திரம்"னு கேள்வி பட்டிருப்பீங்க. நட்சத்திரமா கூட இருக்கவேணாம், ஒரு 40வாட்டு பல்பாவாவது ஒவ்வொருத்தரும், தன் மேல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

அது என்ன 'தன்' மேலான நம்பிக்கை?
தன்நம்பிக்கையின் மேலோட்டமான விளக்கம், ஒருவருக்கு, தன் சுயத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை. உங்கள் திறமையின் மேல் இருக்கும் நம்பிக்கை. நீங்கள் யாருக்கும், எதற்கும் என்றைக்கும் சளைத்தவரில்லை என்பதில் அடங்கா நம்பிக்கை.

ஆனா, நம்மூரில் பெரும்பான்மையானவர்கள் (நான் உள்பட), இந்த 'தன்'நம்பிக்கை விவகாரத்தில் கொஞ்சம் ஒடுங்கியேதான் இருக்கிறோம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, 'உன்னால் முடியும்டா பயலே'ன்னு வூட்ல இருக்கரவங்க சொன்னதா ஞாபகமே இல்லை. "எதிர் வீட்டு பாலாவைப் பாரு, பக்கத்து வீட்டு கோமதியைப் பாரு, நீயும் இருக்கியே ஒதவாக்கரை"ன்னு கேட்டதுதான், நம்ம ஆட்டோகிராஃப் வாழ்க்கை.

வூட்லதான் இப்படி, ஸ்கூல்ல சம்பளம் வாங்கர வாத்தி மட்டும் ஒழுங்கா? அவங்க அதுக்குமேல. "நீயெல்லாம் ஏண்டா வந்து எங்க உயிர வாங்கர. மாடு மேய்க்கத்தான் லாயக்கு"ன்னு நொடிக்கொரு தடவை புலம்பித் தீர்த்த பெருவாரியான வாத்திகள், பிற்பாதி ஆட்டோகிராஃப்.

யோசிச்சுப் பாத்தா 'தன்'நம்பிக்கை, ஓரளவுக்கு வளர, உரம் போட்டது, "மச்சி, ரொம்ப ஈசிடா இது. எவ்வளவோ பண்ணிட்ட, இத்த பண்ண முடியாதா?"ன்னு நொடிக்கொரு தடவை மந்தரித்து விட்ட நட்பு வட்டம்தான் காரணம்.

டீப்பா திங்க் பண்ணிப் பாத்தா, நட்பு வட்டம் அமையாம இருந்திருந்தா, 'தன்'நம்பிக்கை இன்னும் சீரோ வாட்டு பல்பாதான் இருந்திருக்கும். கடல் தாண்டி வந்து இப்படி ஆணி பிடுங்கி, 40 வாட்டு பல்பாகியிருக்க முடியாது.
40 வாட்டு ரொம்ப காலமா 40 வாட்டாவே இருக்கு. 60 வாட்டாகணும்னா, திரும்ப பழைய நட்பு வட்டத்தை கூடச் சேத்துக்கணும்னு நெனைக்கறேன்.

இப்ப இன்னாத்துக்கு இந்த ஃபிலாசஃபி எல்லாம்னு யோசிக்கரவங்களுக்கு, ரிலாக்ஸ் ப்ளீஸ், டாப்பிக்குக்கு வாரேன்.

40 வாட்டிலிருந்து, அப்பப்ப 45 வாட்டாவரது, மற்ற 'தன்நம்பிக்கை நட்சத்திரங்களை' எங்காவது அடிக்கடி பாக்கும்போதும், அவங்களைப் பத்திய செய்திகளைப் படிக்கும்போதும்.
ஹேமந்த் கர்கரேக்களும், ரஹ்மான்களும், சச்சின்களும், அபிநவ்களும் சாதிக்கும்போதெல்லாம், மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க் ஆகி, பாட்டரி சார்ஜ் ஆகும்.

நேர்லையே சிலரைச் சந்திக்கும்போது, ஸ்பார்க் ஆகி தீப்பொறி பறக்கும். கொஞ்ச காலத்துக்கு, எனக்குள்ளும், அந்தத் தாக்கம் இருக்கும். நான் செய்யும் வேலையிலும் ஒரு மாற்றம் தெரியும்.

அப்படி ஒரு 'தன்நம்பிக்கை' நட்சத்திரத்தை சமீபத்தில் பார்த்தேன். இதில் ஆச்சரியமான விஷயம், எங்க வூட்டுக்கு பக்கத்துலையே இருக்காரு இவரு. விஷயத்துக்கு வாரென்.

என் கிட்ட இருக்கர, காசியோ ம்யூஜிக் பியானோவை, வித்துடலாம்னு முடிவு பண்ணி ஒரு குட்டி விளம்பரத்தை எங்க ஏரியாவில் ஒட்டினேன். அன்னிக்கு சாயங்காலமே ஒரு ஃபோன் வந்தது. எடுத்து காதுல வச்சா, இரும்புக் கதவில் கத்தியை வைத்து சுரண்டும் மாதிரி ஒரு சப்தம். அப்பப்ப 'பியானோ'ன்னு மட்டும் லேசா காதுல விழுது. மத்தபடி ஒண்ணுமே புரியல்ல. கர கரன்னு சத்தம். சரி, ஃபோன் தான் சரியில்ல போலருக்குன்னு, நானும், 'பியானோ இருக்கு, சாயங்காலம் வாங்க'ன்னு சொல்லி, அட்ரஸும் கொடுத்தேன்.

சாயங்காலம், சொன்ன நேரத்துல கதவு தட்டப்பட்டது. கிட்டத்தட்ட 26 வயசு இருக்கும். ஒரு வட இந்தியப் பயல். கை குலுக்கி, ஏதோ சொல்ல ஆரம்பிச்சாரு. திரும்பவும், அதே கர கர சத்தம். ஒரு நிமிஷம் எனக்கு ஒண்ணுமே புரியல்ல. கொஞ்ச நேரத்தில் தான் புரிந்தது, அவரின் பேச்சே அப்படித்தான்னு.
ஐம்பது வார்த்தையில் ஒரு வார்த்தை மட்டுமே எனக்கு புரிந்தது. ஆனால், அவரு, அதைப் பத்தியெல்லாம் கவலைப் படலை, சொல்ல வந்ததை சொல்லிக்கிட்டே இருந்தாரு. வெலவெலத்துப் போயிட்டேன். கண் தெரியாதவங்களை பாத்த்து அனுபவப் பட்டிருக்கேன். வாய் பேசாதவர்களுடனும் பழக்கம் இருக்கு. இப்படி, ஒருத்தரை இப்பத் தான் பாக்கறேன்.
ஒரு விதமான கலக்கம் என்னுள் படர்ந்தது, 'ஐயோ பாவம்' என்பது போன்ற ஃபீலிங்க் எனக்கு. அதை முகத்திலும் காட்டியிருப்பேன் போல. ஆனா, அவரு அதையெல்லாம் கண்டுக்காம சொல்லிக்கிட்டே இருந்தாரு. நானும், ஒரு 'பக் பக்' மனசுடன், பியானோவை காட்டி, விலையைச் சொன்னேன்.
அவங்கப்பாவுக்காக வாங்கரேன்னு சொன்ன மாதிரி இருந்தது. பெட்டிக்குள் போகுமான்னு தெரியல்ல, அளந்து பாத்துட்டு, மறுநாள் வந்து வாங்கிக்கரேன்னு சொன்னாரு.
பேச்சு வாக்கில், கூகிளில் முக்கியமான ஒரு குழுவில் வேலை செய்வதாகவும் சொன்னாரு. ஒரு வருஷம்தான் ஆச்சாம் சேந்து. சிரிச்சுக்கிட்டே ரொம்ப பிரகாசமா 'பேசி'க்கிட்டே இருந்தான்.

அவரு கெளம்பிப் போனப்பரம், எனக்குள் ஒரு விதமான ஒரு வாட்டம்.

ஒவ்வொருத்தருக்கு என்ன என்ன மாதிரியெல்லாம் தடைகள் இருக்கு.
ஆனா, இந்த மாதிரி ஒரு தடை இருந்தும், "இதெல்லாம் ஒரு மேட்டரா?"ன்னு எட்டி ஒதச்சு, இம்புட்டு தூரம் வந்து, ஒரு நல்ல வேலையையும் அமைத்துக் கொண்டு, நைனாக்கு, அவருக்கு பிடிச்ச மாதிரி ஒரு கிஃபிட்டை கொண்டு போகணும்னும் வந்து நின்ன பயலை நெனைச்சு புல்லரிச்சு போயிட்டேன்.

நான் ஏற்கனவே சொன்ன மாத்ரி, எனக்கு தன்நம்பிக்கை ரொம்பவே குறைவு. எப்பவாவது ஒரு தடவை இந்த மாதிரி யாரையாவது பாக்கும்போது ஸ்பார்க் ஆகும். ஆனா கொஞ்ச நாளில் அடங்கிடும். ஐந்தில் வளையாதது, பின்னாளில் வளையுமா? வளையாது. முறிஞ்சிரும்.

இதனால் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நீங்க எப்படியோ வளந்திருப்பீங்க. உங்க தன்நம்பிக்கை என்னை மாதிரி கொஞ்சம் மங்கலாவே இருக்கலாம். அடிக்கடி ஸ்பார்க் வர, 'பாஸிட்டிவ்வான' விஷயங்களைப் படியுங்கள், பழகுங்கள்.
மிக மிக மிக முக்கியமாய், உங்கள் சுற்றத்திலும், நட்பிலும் இருக்கும் மற்றவர்களை, ஊக்குவித்துக் கொண்டே இருங்கள். நமக்குக் கிட்டாத, 'பாஸிட்டிவ்' ஸ்பார்க், மத்தவங்களுக்காவது கிட்ட கொஞ்சம் மெனக்கடுங்கள்.

ஊக்குவித்தலே, வெற்றியாளர்களை உருவாக்கக் கூடிய வித்தை.

சொல்ல மறந்துட்டேன், கொஞ்ச நாளைக்கு முன் அந்த பயலை, ஜோடியா பாத்தேன். கல்யாணம் ஆயிடுச்சு. சந்தோஷமா பேசிக்கிட்டே ஜோடியா போறான். 'ஹாய்'னு டாட்டா காமிச்சான். இன்னும் கொஞ்ச நாளுக்கு, என் 'தன்நம்பிக்கை' ஸ்பார்க்கு இந்தப் பயல்தான்.

பி.கு: கிட்டாரை தூசு தட்டி எடுக்கணும். கத்துக்க முடியும் என்ற நம்பிக்கை போயி, சோம்பேரித்தனம் புகுந்துடுச்சு. இப்ப திரும்ப ஒரு ஸ்பார்க் வந்திருக்கு. மீட்டிட வேண்டியதுதான்.
guitar1

11 comments:

SurveySan said...

'டா'என்று ஏக வசனத்தில் டைட்டில் வச்சதுக்கு சாரி. நான் எனக்கே சொல்லிக்கர மாதிரி டைட்டிலு.

SurveySan said...

ஆணி அதிகமானது குறைஞ்சு, இப்ப, கார் சவாரி அதிகமாயிடுச்சு, தினசரி. ஒரு ட்ரெயினிங்குக்காக..
ரொம்ப யோசிக்க நேரம் கிடைக்குது, அதான், 'அனுவப்ச் சிதறல்கள்' இப்படி பதிவா கொட்டுது. IMல் கேட்ட அன்பருக்கான பதில் இது :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதே அதே.. எப்பவாச்சும் இப்படி பார்த்து கேட்டு .. முளைவிடற தன்னம்பிக்கைக்கு அப்பறம் ஒழுங்கான கவனிப்பு இல்லாம வாடவிட்டறுவேன் நானும்..

புதுகைத் தென்றல் said...

தன்னம்பிக்கை இல்லாட்டி நான் வாழ்க்கையிலே முன்னேறிருக்கவே மாட்டேன். இப்ப வரைக்கும் நம்மளை நடத்தி கிட்டு வர்றது தன்னம்பிக்கை மட்டும்தான்.

அருமையான பகிர்வு

SurveySan said...

முத்துலெட்சுமி, goodnewsindia.com அடிக்கடி படிங்க. எனக்கு ஒரு உற்சாக டானிக் அது.

SurveySan said...

புதுகைத் தென்றல், நன்றீஸ். எங்களுக்கும் உங்க வித்தையை சொல்லித் தந்தா சிறப்பு :)

பாவக்காய் said...

தலை, வ்ழக்கபோல் ரொம்ப அருமை !! ஒரு bay area blogger meeting arrange பண்ணுங்களே ?

கோபிநாத் said...

குட் தல...;)

SurveySan said...

பாவக்காய், நன்றி.

bayarea மீட், நல்ல ஐடியாதான். எம்புட்டு பேரு இருக்கோம்?

ஒட்டு தாடியும், குட்டி மச்சமும், வச்சுக்கிட்டாவது வந்து சேந்துடுவேன் ;)

SurveySan said...

கோபிநாத், டாங்க்ஸ்.

அநன்யா மஹாதேவன் said...

சர்வே,
வழக்கம்போல் அருமையா இருந்திச்சு. நீங்க சொல்றது ரொம்பச்சரி. தடையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்வில் முன்னேறிய அந்த ‘பயலு’க்கு வாழ்த்துக்கள்.

//எவ்வளவோ பண்ணிட்ட, இத்த பண்ண முடியாதா?"ன்னு நொடிக்கொரு தடவை மந்தரித்து விட்ட நட்பு வட்டம்தான் காரணம்//
ரொம்ப பலம்மா ஆமோதிக்கிறேன்! க்ளாப்ஸ் க்ளாப்ஸ்!