இணையத்தில் கேப்மாரிகளுக்கு பஞ்சமில்லை என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஈஸியா யார் கிட்டையும் மாட்டிக்காம தப்பு செய்ய வாய்ப்பிருந்தா, நம்மில் பலரும் தப்பு செய்ய சற்றும் தயங்காதவர்கள் என்பது அவரவர் மனசாட்சிக்குத் தெரியும்.
என்ன, ஒருத்தருக்கு ஒருத்தர், அந்த 'தப்பின்' கனத்தில் வேறுபாடிருக்கும்.
சிலர், மாமா இல்லாத சாலையில், ரெட் லைட்டுக்கு நிக்காம போவோம், சிலர் ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிட்டு மல்ட்டிப்ளக்ஸில் ரெண்டு மூணு படம்
பாத்துடுவோம், சிலர் வித்-அவுட்ல போவோம், சிலர் முழுசா வரி கட்டாமல் ஏய்ப்போம், சிலர் புச்சா பொருட்களை வாங்கி அனுபவித்துவிட்டு கடையில் பொருள் பிடிக்கலைன்னு ரிட்டர்ன் பண்ணுவோம், இப்படி அடுக்கலாம்..
இணையத்தில் கேக்கணுமா? ரூம் போட்டு யோசிச்சு தினமும் பலப் பல ஆயிரம் பேர்களை ஏமாத்திக்கிட்டு இருக்கானுவ.
அதுவும், இந்த நைஜீரியாக்காரனுங்க தொல்லை ரொம்பவே அதிகம். அவங்க ஊருக்கும், மற்ற நாடுகளுக்கும், போலீஸ் கனெக்ஷன் இல்ல போலருக்கு. தப்பு செய்யரவன் எல்லாரும், அங்க கடைய போட்டுக்கிட்டு, ஈஸியா நாமம் போடறான்.
craigslist.org எல்லாருக்கும் பரிச்சயமிருக்கும். உபயோகித்த பொருட்களை வாங்கவும் விற்கவும், இலவசமான, சுலபமான ஒரு தளம். பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்க வழி இருந்தும், அதன் முதலாளில், இன்னும், அந்த தளத்தை, ஆரம்பிச்ச போது இருந்த, அதே 'சிம்பிள்' லே-அவுட்டுடன், கிட்டத்தட்ட ஒரு சேவைத் தளமா நடத்திக்கிட்டு வராரு. (எங்க ஊர் காரராச்சே:) )
சமீபத்தில் என் canon rebelஐ விற்க ஒரு விளம்பரம் கொடுத்தேன். புது விளம்பரம் கொடுத்ததும், நைஜீரியாகாரன், மூணு நாலு பேராவது, டபால்னு பதில் போட்டுடரது வழக்கம். இப்பெல்லாம், தொகை பெருசா இருந்தாதான் வரானுவ; கேமரா பெரிய தொகைங்கரதால, வரிசை கட்டிக்கிட்டு நான் வாங்கிக்கறேன் நான் வாங்கிக்கறேன்னு, மூணு பேரு வந்தானுவ.
இதில் கொடுமை என்னன்னா, இவன் கேப்மாரிங்கரது, ஆணி புடுங்கர நம்மள மாதிரி ஆளுகளுக்கு ஈஸியா புரிஞ்சுடும், ஆனா, அதிக பரிச்சயம் இல்லாதவங்கள் ரொம்ப அநியாயத்துக்கு ஏமாந்துட வாய்ப்பிருக்கு. உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.
ஏதாவது, விக்கும்போது, இவனுங்க வந்து, பதில் போடுவாங்க; என்ன சொல்லுவாங்கன்னா, "எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு. என் பொண்ணு, நைஜீரியால, அமெரிக்கன் கவுன்ஸிலேட்ல குப்பை கொட்டரா. அவ பொறந்த நாளு இன்னும் மூணு நாளுல வருது. அவளுக்கு இந்த காமெரா பரிசா அனுப்பலாம்னு இருக்கேன். நீ கேக்கரது 700$. நான் உனக்கு $800 தாரேன், கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, அவளுக்கு அதை கூரியர்ல உடனே அனுப்பிடுபா"ன்னு பெருசா, ஈ.மடல் அனுப்பிடுவான். கண்டிப்பா, கீழ "Dr." "Reverend" "Professor" இந்த மாதிரி அவன் பேர் இருக்கும். பெரிய ஆளாமாம்.
அடக் கடங்காரா, $100 சும்மா தர தயாரா இருக்கரவன், ஏண்டா பழசு வாங்க வரணும்னு, நமக்குத் தோணும், ஆனா, நம்ம அப்பாவிகள் பலருக்கு அது தோணாது.
ஆகா, இளிச்சவாயன் மாட்டினான்னு, அடுத்த கட்டத்துக்கு நகருவாங்க.
வழக்கமாய், இந்த மாதிரி ஈ.மடல்களை படிச்சுட்டு, டெலீட் பண்ணிட்டு அடுத்த வேலை பாப்பேன். இம்முறை, கொஞ்சம் ஆடித்தான் பாப்பமே, எம்புட்டு தூரம் போறான்னு, அவனுக்கு திரும்ப மடல் தட்டினேன்.
"Dr. உங்களுக்கு கேமரா புடிச்சதுல ரொம்ப சந்தோஷம். எங்க மீட் பண்ணலாம், துட்டு எப்ப தருவீங்க"ன்னு, கேட்டேன்.
அதுக்கு தொரை சொல்றாரு, "நான் இப்ப லண்டன்ல ஒரு கான்ஃபெரன்ஸ்ல கீறேன், பயங்கர பிஜி. உனக்கு செக் அனுப்ப டைம் இல்லை. பொண்ணுக்கு மூணு நாள்ள பொறந்த நாளு வேர வருது. உன் paypal id குடு, உடனே உனக்கு $800 அனுப்பிடறேன். கெடைச்சதும், நீ என் பொண்ணுக்கு கூரியர் அனுப்பிட்டு, அதோட ட்ராக்கிங் ஐடி எனக்கு அனுப்பிடு"ன்னான்.
நம்ம அப்பாவி ஜனமா இருந்தா, "அட, எவ்ளோ நல்ல டாக்டரு, நாம பொருள் அனுப்பரதுக்கு முன்னாடியே, நம்மள நம்பி $800 தராரே"ன்னு அவருக்கு மானசீகமா கற்பூரம் ஏத்தி கொளுத்திட்டு பணத்துக்காக வெயிட் பண்ணும்.
நான் திரும்ப ஒரு மடல் போட்டு, அப்பாவித்தனமா, "dr. என் கிட்ட paypal இல்லியே, பேசாம, நீங்க ஒரு செக்கை எனக்கு கூரியர் அனுப்பிடுங்களேன். செக் வந்ததும், பொருளை கப்பலேத்திடறேன்"னேன்.
அதுக்கு டாக்டரு, "இல்லப்பா, நான் ரொம்ப பிஜி, மூச்சு வுடக் கூட நேரமில்லை. paypal ரொம்ப சிம்பிளா கிரியேட் பண்ணிடலாம். பண்ணிட்டு அனுப்பு, நான் உடனே காசு அனுப்பிடறேன்"னான்.
சரி, இன்னாதான் பண்ணப் போறான் பாக்கலாம்னு, "இந்தா புடி என் paypal. துட்டை அனுப்பு"ன்னேன்.
அடுத்த அஞ்சு நிமிஷத்துல, எனக்கு paypal கிட்டயிருந்து ஒரு மடல், "உங்க கணக்கில் $800 வரவு வைக்கப்பட்டுள்ளது. Dr.கேப்மாரி அனுப்பியுள்ளார். நீங்க உடனே, உங்க பொருளை கப்பலேத்தி அனுப்பிவைங்க"ன்னு.
மேலோட்டமா இந்த மடலை படிக்கும் எந்த அப்பாவியும், ஏமாற பெரிய அளவில் வாய்ப்பிருக்கு. அச்சு அசலா, paypal கிட்டயிருந்து வரமாதிரியே ஃபார்மேட் இருக்கும். இந்த இடத்தில், நம்ம அப்பாவி, ஏமாற இரண்டு வாய்ப்பிருக்கு.
1) வரும் ஈமடலில், உள்ள உரலை(url) க்ளிக்கி, தங்கள் கணக்கில் வரவு வந்துடுச்சான்னு பாக்க, id, கடவுச்சொல் எல்லாம் கொடுத்து பாப்பான்.
2) ஈமடல் பாத்ததும், கேமராவை பார்சல் கட்டி அனுப்பப் பாப்பான்.
ரெண்டுல எது செஞ்சாலும், Dr. குஷியாயிடுவாரு.
இந்த ஈமடலில், 'From அல்லது Sender'ஐ கவனிச்சு பாத்தீங்கன்னா, இது paypal.com லிருந்து வந்திருக்காது, ஏதாவது ஒரு டுபாங்கூர் ஐடி, yahoo.comலிருந்தோ, hotmail.comலிருந்தோ வந்திருக்கும்.

ஈமடலில் வரும் உரலை க்ளிக்கி, id கடவுச்சொல் எல்லாம் அடிச்சீங்கன்னா, அடுத்த அஞ்சாவது நிமிஷம், நம்ம கேப்மாரி, உங்க அக்கவுண்ட்டுக்குள்ள பூந்து, மொத்தமா வாரி எடுத்துட்டு கம்பிய நீட்டிடுவான்.
நீங்க பொருளை பார்சல் அனுப்பினாலும், குஷியாயிடுவான். $800 பொருளாச்சே, அனாமத்தா கெடச்சா கசக்குமா அவனுக்கு?
நான், அந்த ஈமடல் வந்ததும், இன்னும் கொஞ்சம் வெளையாடிப் பாப்போம், என்னதான் பண்றான்னு, அவனுக்கு, "Dr. துட்டு வந்துடுச்சு, உங்க address அனுப்புங்க, இன்னிக்கே கப்பலேத்திடறேன்"னேன்.
அடுத்த அஞ்சாவது நிமிஷம், ஒரு நைஜீரிய முகவரியை அனுப்பினான். கூகிள்ள ஊரை பாத்தா, நல்லாதான் இருக்கு. ரோடெல்லாம் தெரியுது. இந்த கேப்மாரிகளுக்கு அங்க எப்படி புகலிடம் கிடைக்குதுன்னுதான் புரியல்ல. அரசாங்கம் சரியில்ல போலருக்கு.
முகவரி கெடச்சதும், சாயங்காலம் அனுப்பிடறேன்னு ஒரு மடல் போட்டேன்.
சாயங்காலம் ஆனதும் "அனுப்பிட்டியா. ட்ராக்கிங்க் ஐடி குடேன், என் பொண்ணு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா"ன்னான்.
நான் சொன்னேன், "Dr. அனுப்பலாம்னுதான் போனேன், போறதுக்கு முன்னாடி, என் paypal அக்கவுண்ட்டிலிருந்து காசை வங்கிக்கு மாத்திக்கலாம்னு பாத்தேன், இன்னும் காசு வந்து சேரலைன்னு சொல்லுதேன்"ன்னேன்.
அதுக்கு நம்ம dr. "அதெல்லாம் அப்படித்தாம்பா 24 மணி நேரம் ஆகும். நீ சீக்கிரம் பொருளை அனுப்பு"ன்னாரு.
"இல்ல டாக்டர், 24 மணி நேரம் ஆகட்டும், காசு வந்ததுக்கப்பால அனுப்பறேனே"ன்னேன்.
அடுத்த அஞ்சாவது நிமிஷம், paypal கிட்டேயிருந்து இன்னொரு மடல், "சர்வேஸ், உங்க துட்டு வந்துடுச்சு, உங்க கணக்குல அது தெரிய இன்னும் 24 மணி நேரம் ஆகும், நீங்க பொருளை அனுப்பிட்டு, எங்களுக்கு மடல் போட்டீங்கன்னா, உங்க கணக்குல காசு தெரிய ஆரம்பிச்சுடும், நாங்க holdஐ எடுத்துடுவோம்"ன்னு. இன்னாமா யோசிக்கரானுவன்னு நெனச்சுக்கிட்டேன்.
"அனுப்பிட்டியா?"ன்னு அடுத்த மடலு. கான்ஃபெரன்ஸ்ல பிஜியா இருக்கர டாக்டரு சதா சர்வ காலமும், ஹாட்மெயிலையே பாத்துக்கிட்டு இருக்காரு போலருக்கு.
"நாளைக்கு கண்டிப்பா அனுப்பிடறேன், எனக்கு பேபால் கிட்டயிருந்து இன்னொரு கன்ஃபர்மேஷன் வந்துருச்சு"ன்னேன்.
மறுநாள் திரும்ப ஒரு மடல், "அனுப்பிட்டியா"ன்னு.
வுடமாட்டான் போலருக்கேன்னு புது கதை சொன்னேன், "பொருளை எடுத்துக்கினு கூரியர் ஆஃபீஸ் போனேன், அட்ரெஸ் நைஜீரியான்னதும், கூரியர் காரன், காசு வரதுக்கு முன்னாடி அனுப்பாதே"ன்னு சொல்லி என்னை திரும்ப அனுப்பிட்டான்னேன்.
dr.க்கு கடுப்பு ஏறிருக்கும், "அவனுங்களுக்கு internet டீலீங்க்ஸெல்லாம் தெரியாது. ப்ளடி கூரியர் பாய்ஸ். நீ போய் உடனே அனுப்பு, அதுதான் பேபாலே அனுப்ப சொல்லிட்ட்டாங்களே"ன்னான். அடுத்த அஞ்சாவது நிமிஷம் 'பேபால்'கிட்டயிருந்து இன்னொரு மடல், "சர்வேஸ், Dr. காசு குடுத்து ரெண்டு நாளாவது, நீ ஏன் இன்னும் பொருளை அனுப்பல, உடனே அனுப்பி, ட்ராக்கிங்க் ஐடி டாக்டர் கிட்ட குடு, அப்பதான், $800 உன் கணக்குல தெரியும்".
"சரி டாக்டர், நாளிக்கு கண்டிப்பா அனுப்பிடறேன்"னு நிக்குது இப்போதைக்கு..
நாளைக்கு என்ன செய்ய?
அ. நைஜீரியாக்கு ஒரு அழகான கார்ட்டூன் வரஞ்சு அனுப்பவா?
ஆ. ஒரு விபூதி பொட்டலம் வச்சு அனுப்பவா?
இ. திருடாதே பாப்பா திருடாதேன்னு தலைவரு பாட்டு CD அனுப்பவா?
ஈ. sam anderson கிளைமாக்ஸ் சீன் முப்பது தபா ரிப்பீட் பண்ணி டிவிடி பண்ணி அனுப்பவா?
உ. சுறால தலீவரு, சுறா மாதிரி எம்பி எம்பி வர சீனை அனுப்பவா?
ஊ. ஏய் டண்டனக்கா ஏன் டனக்கு டக்கான்னு எங்க அண்ணன் டி.ஆர் டான்ஸை அனுப்பவா?
எ. ??
எதை அனுப்பினா பித்தம் தெளியும் இவனுகளுக்கு? ;)