சூரியனுக்குள்ள என்ன இருக்கு, சூரியன் இன்னும் எவ்வளவு நாளுக்கு எரியும், நட்சத்திரம் எவ்வளவு தூரத்துல இருக்கு, சனிக் கிரகத்துல உயிர் இருக்கா, இப்படி எல்லா விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சி மேஞ்சிட்டான்.
எல்லா விஷயத்துலயும் இவ்ளோ தெளிவாயிருந்தாலும், இன்னும் முக்கால் வாசி ஆளுங்க, பழைய பஞ்சாங்கத்தையும், பழக்க வழக்கத்தையும், மத சம்பந்தப்பட்ட பல அபத்தமான நம்பிக்கைகளையும் விடாம கெட்டியா பிடிச்சிட்டுதான் இருக்கோம்.
அடுத்தவனுக்கு தொல்லை தராத நம்பிக்கையோ தும்பிக்கையோ, எது இருந்தாலும் ப்ரச்சனையில்ல, ஆனா, அடுத்தவன துன்புறுத்தர நம்பிக்கைகள் இன்னும் தேவையா?
எங்க எதிர் வீட்டு ஆளு, ஒரு விசித்திரப் பழக்கம் வச்சிருந்தாரு. அவரு வெளீல போகணும்னா, அவரு வூட்டுக்காரம்மா மொதல்ல வந்து தெருவுல எட்டிப் பாப்பாங்க. தெருவுக்கு ரெண்டு பக்கமும் பாத்துட்டு உள்ள போய் அவர் கிட்ட ஏதோ சொல்லுவாங்க. அவரும் மண்டைய ஆட்டிட்டு வெயிட் பண்ணுவாரு.
வூட்டுக்காரம்மா திரும்ப கேட்டுக்கு வருவாங்க, ரெண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பாப்பாங்க. அப்பரம், அவரு கிட்ட போய் எதயோ சொல்லுவாங்க.
இப்ப அவரு சிரிச்சிக்கிட்டே கட கடன்னு கெளம்பி டாடா காமிச்சிக்கிட்டே வெளீல போயிடுவாரு.
ஆரம்பத்துல எங்க வீட்லயிருந்து இந்த கூத்த பாத்துக்கிட்டு சிரிப்போம். விசாரிச்சுப் பாத்ததுல தெரிஞ்சது, தெருவுல, ஒத்தையா யாராவது இருந்தா, இவரு வீட்டை விட்டு வெளீல போக மாட்டாராம். ஒண்ணு, யாரும் இருக்கக் கூடாது, இல்லன்னா கும்பலா யாராச்சும் இருக்கணுமாம்.
அடக் கஷ்ட காலமேன்னு நெனச்சுக்கிட்டேன். பல வருஷமா இதப் பண்றாரு, இன்னி வரைக்கும் நடக்குது இந்தக் கூத்து. இந்தப் பழக்கம், அடுத்தவன வருத்தாத 'மூட நம்பிக்கை' அதனால மன்னிச்சு விட்டுடலாம்.

குறிப்பா, இந்துக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கும், ஜாதகம் பாக்கரதும், அதன் பின்னணியில் இருக்கும் பூதாகாரப் ப்ரச்சனைகளும், திகிலானவை.
ஜாதகத்துல இப்படி சொல்லிருக்கு அப்படி சொல்லிருக்குன்னு தங்கள் வாழ்க்கையை தாங்களே சீரழித்துக் கொள்ளும் கொடுமை நம்ம ஊர்ல மட்டும்தான் இருக்கு.
'ஜாதகம்'னு ஒரு பழைய மலையாளப் படம் பாத்தேன். அவார்டு படம் போல, மெதுவா ஆடி அசஞ்சுக்கிட்டுதான் எல்லாரும் நடிச்சிருந்தாங்க. ஜெயராம்தான் ஹீரோ, திலகன், ஜெயராமின் அப்பா.
ஜெயராமுக்கு மனைவியா வரப் போறவ ஜாதகத்துல ஏதோ ஒரு இக்கண்ணா இருந்தா, அது ஜெயராம் உயிருக்கு ஆபத்தா முடியும்னு திலகனுக்கு நம்பிக்கை.
ஜெயராம் ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கறாரு. கல்யாணத்துக்கப்பரம், இந்த பொண்ணோட ஜாதகம் சரியில்லன்னு தெரிய வருது திலகனுக்கு, அதனால, யாருக்கும் தெரியாம, அந்த பொண்ண கெணத்துல தள்ளி சாகடிச்சிடறாரு.
இது படம்னாலும், நெஜ வாழ்க்கையிலயும் இந்த கொடுமையெல்லாம் நடக்காமலா இருக்கும்?
தனக்கு வரப் போற மருமகள், தன் மகன வசியம் பண்ணி குடும்பத்தைப் பிரிச்சிடுவாள்னு மாமியார் காரி நம்பரா (நன்றி: சன் டி.வி). மருமக நல்ல பொண்ணா இருந்தாலும், இந்த ஜாதக நம்பிக்கை, மாமியார வில்லியாக்கிடுது.
ஜாதகம், உடான்ஸுங்கர எண்ணம், படிச்சவங்க பலருக்கும் அதிகப்படியாவே இருக்கு. ஆனா, அப்படியிருந்தாலும், மனசுக்குள்ள எங்கயோ ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யுது. ஒண்ணு, வீட்ல இருக்கர பெருசுங்க மேல பழியப் போட்டுட்டு, அவங்க வற்புறுத்தலால தான் ஜாதகம் பாக்கறேன்னு சொல்லிடறது.
இல்லன்னா, ஜாதகம் பாக்காம பொண்ணு வீட்டுல பொண்ண கொடுக்க மாட்டாங்கடான்னு ஒரு சால்ஜாப்பு சொல்றது.
(வரதட்சணை மேட்டருக்கும் இதே கூத்துதான் நடக்குதுங்கரது வேற கதை. சாதி பாத்து கல்யாணம் பண்ணிக்கரதும், இதே ஸ்டைல் கூத்துதான். அது இப்ப அலச வேணாம்)
எனக்கு பர்ஸனலா, ஜாதகமும், அதைச் சுற்றியிருக்கும் ஜோசியம் மேலும் நம்பிக்கை கிடையாது. ஆனா, புது கார் வாங்கினா பூஜை போடரதும், முக்கிய மேட்டரு ஏதாவது செய்யறுதுக்கு முன்னாடி நல்ல நேரம் பாக்கரதும், சுற்றியிருக்கும் வற்புறுத்தல்களால் நடந்துகிட்டுதான் இருக்கு.
அடிக்க அடிக்க அம்மியும் நகருங்கரமாதிரி, சுற்றியிருக்கும் வற்புறுத்தல்கள், என்னையும் மாத்திடுமோன்னு பயம் இருக்கு.
இப்படித்தான் பாருங்க, சமீபத்தில் ஒரு நண்பனின் திருமணத்துக்கு தஞ்சாவூர் சென்றிருந்தேன்.
நண்பரோட மாம்ஸ் ஒரு பெரிய நியூமராலஜிஸ்ட்.
கல்யாணத்துக்கு முன்னாடி நாள், அரட்டைக் கச்சேரியில், மாம்ஸுக்கு பெரிய டிமாண்ட். எல்லாரும், ஆளாளுக்கு அவங்க பேரு விவரங்கள சொல்லிட்டு, அவங்க எதிர்காலத்த பத்தி கேட்டுக்கிட்டு இருந்தாங்க.
என் சுற்று வந்ததும், என் பேரு, பிறந்த தேதி எல்லாம் கேட்டுக்கிட்டாரு. கொஞ்ச நேரம் பேப்பர்ல கிறுக்கிட்டு, "தம்பி, வெளி நாடெல்லாம் உனக்கு வேணாம், நீ நம்ப ஊர்ல ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பி, ஓஹோன்னு போகும்"னாரு.
அடக் கொடுமைக்கு வந்த கொடுமையே, ஒண்ணுக்கும் ஒதவாம போகயிருந்த என்ன, "மச்சி கம்ப்யூட்டர் படி, அதுதான் ஃப்யூச்சர்னு" கைய காட்டி, இன்னிக்கு ஓரளவுக்கு சுகபோகமா இருக்க வழி பண்ணியிருந்த ஃப்ரெண்டோட மாம்ஸ் இப்படி சொல்லிட்டாரேன்னு ஒரே ரோசனையாப் போச்சு.
அத்தோட விட்டாரா? "தம்பி, நீங்க ரொம்ப சுறுசுறுப்பான ஆசாமி, ஆனா, மாசத்துல பாதி நாள் சுறுசுறுன்னு சுழலுவீங்க, மீதிப் பாதி சோம்பேறியா, டல்லாயிருப்பீங்க" ன்னாரு. எனக்கு ஒண்ணும் புரீல. "அதாவது தம்பி, வளர்பிறை நாட்கள்ள, சுறுசுறுன்னும், தேய்பிறை காலங்கள்ள சோம்பேரியாவும் இருப்பீங்க"ன்னாரு.
அத அப்படியே மறந்துட்டு என் பொழப்பை பாக்க ஆரம்பிச்சிருந்தேன்.
ஆனா, என்னிக்காவது, ஆபீஸ்ல டல்லா இருந்தா, இன்னிக்கு தேய்பிறை நாளோன்னு, மனசுல லேசா ஒரு கேள்வி வந்துட்டுப் போகும்.
இதே மாதிரி, ஜாதகத்துல எனக்கு தண்ணீல கண்டம் இருக்குன்னு சின்ன வயசுலயே முடிவு பண்ணிட்டாங்களாம். அதனால, என்ன எங்கையும், குளம், குட்டை, கடல், ஸ்விம்மிங்னு விட்டதில்ல.
சண்டை போட்டு, நீச்சல் கத்துக்கிட்டே ஆகணும்னு ஒரு 10 வயசுல கத்துக்க ஆரம்பிச்சேன்.
அப்பெல்லாம் கிராமத்துல நீச்சல் கத்துக்க, காஞ்ச தென்னங்காய் ரெண்டை சேத்துக் கட்டி, அதை கொளத்துல போட்டு, அதுக்கு நடுவுல படுத்துக்கிட்டு தத்தக்கா பித்தக்கான்னு அடிச்சு தான் நீச்சல் கத்துக்கணும்.
ஒரு நாள், சொந்தக் காரப் பயலுகளுடன், இந்த மாதிரி ஒரு செஷனுக்கு குளத்துக்கு போயிட்டோம்.
நானும், தண்ணீல எறங்கி, தேங்காய்களை வயிற்றில் கட்டி, சலக் பிலக்னு குளத்துல போயிட்டேயிருந்தேன்.
நடுக்குளத்துல ஒரு கல்லு போட்டிருப்பாங்க. எப்பவும், அந்தக் கல்லுல போயி நின்னு மத்தவங்கள வேடிக்கை பாக்கரது வழக்கம். அன்னிக்கும், அப்படி அந்த எடத்துக்கு போயி, கல்லு மேல நீக்க முயற்சி பண்ணேன்.
சடால்னு கால் வழுக்கிடுச்சு. கல்லை சுத்தி சேரு இருக்கும். காலு சேத்துல மாட்டிக்கிச்சு. இந்தக் காலால ஒதறினா, ரெண்டு காலும் உள்ள போயிடுச்சு.
என் உயரத்தை விட அந்த இடம் ஆழமானது.
'ஓ'ன்னு கத்த, அந்த வயசுலயும், ப்ரெஸ்டிஜ் இடம் கொடுக்காததால், நான் சடக் சடக்னு கை கால் உதறிப் பாத்தேன். அப்ப அப்ப லபக் லபக்னு அந்த 'பச்சை கலர்' தண்ணி ஸ்வாஹா வேற பண்ணினேன். ரெண்டு லபக்குக்கு மேல முடியல, "டேய்ய்ய்ய்ய்"னு ஒரு கூச்சல் போட, குளிச்சிட்டுக்கிட்டிருந்த பெண்டுகளெல்லாம் திகிலடைய, என் பெரியம்மா மகன், தொபுக்கடீர்னு உள்நீச்சல்ல வந்து என்ன இஸ்துக்கினு போய் கரையில் சேர்த்து, பிரட்டிப் போட்டு வயிற்றை அமுக்கு, உவ்வேன்னு ஒரே கலீஜ்.
யாரும், இந்த சம்பவத்தை வீட்ல சொல்ல வேணாம்னு முடிவு பண்ணி வீட்டுக்கு போனா, எங்களுக்கு முன்னாடியே, ரெஸ்க்யூ மேட்டர் எல்லாருக்கும் தண்டோரா போடப் பட்டிருந்தது.
ரெஸ்க்யூ பண்ணினவனுக்கு ஹீரோ மெடல் கொடுக்காம, முதுகுல டின்னு கட்டினாங்க, பாவம்.
ஹ்ம். இப்ப நெனச்சாலும் திகிலாதான் இருக்கு.
ஆமா, இது, ஜாதகப் பலனா? இல்ல, என் அதிகப் பிரசங்கித்தனமா?
ஜாதகத்துக்காக பயந்து, நான் ஒதுங்கிடல. இன்னிக்கும், கடப்பாரை நீச்சல் அடிச்சாவது, இக்கரையிலிருந்து அக்கரைக்கு போயிடுவேன் :)
Damn the ஜாதகம்!
உங்களுக்கு நம்பிக்கையுண்டா, இந்த விஷயத்திலெல்லாம்? குத்துங்க!
பி.கு: எந்த 'தண்ணீல' கண்டங்கரத தெளிவா சொல்லாதது யார் தப்புன்னு தெரியல :)