
ஆகஸ்ட் 2007ல என்னய்யா நடக்கப் போவுது? சுதந்திரம் கெடச்சு 60 வருஷமாகப் போவுது. அதுவா மேட்டரு? இல்ல, நான் பதிவு எழுதரத நிறுத்தித் தொலையப் போறேனா? இல்ல, 'இவர் தான் சர்வேசன்'னு சொல்லி படம் போட்டு 'ரிவீல்' ஆகப் போறேனா? சன் டி.வில பதிவர்கள் பத்தி தொடர் ஒண்ணு வரப் போதா?
இப்படி பல பல ஐடியாஸ் அள்ளி வீசினாங்க நம்ம சகலபாடிகள் :)
அதெல்லாம் இல்லீங்க. இது கொஞ்சம் வில்லங்கமான மேட்டரு.
சரி மேட்டருக்கு வருவோம்.
நான் எழுத ஆரம்பிச்சு சில மாதங்கள்தான் ஆச்சு. தினசரி வந்து குவியும், சில நூறு பதிவுகளில், பலப் பல 'உப்புமா' வகையைச் சேர்ந்தது, சில கவித்துவமானவை, சில சிரிக்க வைப்பவை, மிகச் சில சிந்திக்க வைப்பவை, மிக மிக மிக மிகச் சில செயல்பட வைப்பவை.
செயல் பட வைத்த பதிவுகளில், பெரும்பான்மை, அஞ்சு பத்து $களை நன்கொடையாக வசூல் செய்து சிலருக்கு உதவி செய்தவை.
நம்மளும் கொடைவள்ளல் ஆகிட்டோம்னு, ஒரே ஒருநாள் மட்டும், ஒரு சின்ன திமிருடன், நல்லா தூங்க உதவியது.
ஒரு பெரிய மாற்றம் கொண்டு வர யாரும் ஒண்ணும் செஞ்ச மாதிரி தெரியல.
ஈழத் தமிழர் ப்ரச்சனைக்கு சில உதவிகள் நேரிடையா பண்ணின மாதிரி ஞாபகம். மத்தபடி வேற என்ன நடந்திருக்கு நம்ம எழுத்துகளால்? இப்படி யோசிச்ச போது, கண்ணுல கோவி கண்ணனின், தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும்! என்ற பதிவு.
தமிழை சிதம்பரம் கோவிலில் ஒதுக்குகிறார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதியிருப்பதைப் போல் தெரிகிறது.
எது எப்படியோ, வழக்கம் போல் பல கும்மிகளை கண்டது அந்த பதிவு.
சில வெளி நடப்புகள், சில சவால்கள், சில ஏளனங்கள், சில நையாண்டிகள்னு பின்னூட்டங்கள் சூப்பரா வந்துது.
ஆனால், எனக்குத் தெரிஞ்சு, சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடக் கூடாது என்று ஒரு தடை இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் சிலையின் வெகு அருகில் நின்று ( sanctum sanctorum ) பாடக் கூடாது என்பதே தடை.
கோயிலுக்குள்ள, சாமி சிலைக் கிட்ட, எல்லாரையும் விட மாட்டாங்க (பல காரணங்கள் இருக்கும் இதுக்கு). குறிப்பிட்ட தூரம் வரைதான் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. இது எல்லா கோயில்லயும் கடை பிடிக்கப்படும் வழக்கம்.
ஓதுவார் ஆறுமுகச்சாமி, சிவனுக்கு காது கேக்காதுன்னு நெனச்சுட்டாரோ என்னமோ. சிலைக்குக் கிட்ட நின்னு பாடினாதான் சிவனுக்கு தன் பாட்டு கேக்கும்ணு அடம் பிடிக்கறாரு.
ஜடாயு என்ற பதிவர், சிதம்பரம் கோயிலில் தமிழ்ல பாடியிருக்கேன்னு சொல்லியிருக்காரு.
ரொம்ப காலமா இந்த தேவாரம் மேட்டர் 'தமிழ் அவமதிப்பு' என்ற ரீதியில் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது.
உண்மையில் நடப்பதென்ன?
முத்துக்குமரன் என்ற பதிவர், ஆகஸ்டில் இந்தியா செல்வதாகவும், தன்னுடன் வந்து சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாட யார் தயார் என்ற ரேஞ்சில் பின்னூட்டியிருந்தார்.
அமெரிக்க அனானி ஒருவர் (கோவை செங்கப்பன்), தான் உடன் வருவதாக கூறி, முத்துக்குமரனின் சவாலை ஏற்றதாகத் தெரிகிறது.
மேலும் பலரும், இந்த முயற்ச்சிக்கு ஆதரவு தருவதாக பின்னூட்டியுள்ளார்கள்.
எனக்கும் வரணும்னு ஆசதான். ஆனா முடியாது. but, I can sponsor the effort like most of the other bloggers :)
யாரெல்லாம் சிதம்பரம் கோயிலுக்கு போய் தேவாரம் அழகா பாடப் போறீங்க?
எனக்கு திருவாசகம் தான் தெரியும். அதுவும் இளையராசாவின் சிம்பொனியால் தான் பரிச்சயம் ஆனது.
"புற்றில் வாழ் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன், நா ந நா நா னா நா னா" -- இந்த பாட்ட, அதே ட்யூன்ல பாடரதா இருந்தா, நான் கூட வர முயற்சி செய்வேன் :)
கருத்த சொல்லுங்க. ஊர்ல இருந்தா கண்டிப்பா சிதம்பரம் போக ட்ரை பண்ணுங்க. ஸ்ருதி பிசகாம பாடுங்க. பாவம் சிவன்! :)
தென்னாடுடைய சிவனே போற்றி!! நாராயண நாராயண!
பி.கு: குட்டீஸுக்கான போட்டியில், மூன்று பேர் தான் இதுவரை கலந்துகொண்டுள்ளனர். உங்களுக்கு தெரிந்த குழந்தைகளை கலந்து கொள்ள சொல்லுங்களேன். ஜூன் 15 வரை பொறுத்திருந்து பாக்கலாம்னு இருக்கேன். :) வேற யாரும் வரலன்னா, நானே ஜானகி மாதிரி பாடி ஒரு பாட்ட போட்டுடுவேன்.
பாட்டுக்கு பாட்டுல smss ன் புதிய பாடல் அரங்கேறியுள்ளது.