recent posts...

Sunday, December 11, 2011

எங்கள் மிலே சுர் - குறும்படம் உருவாக்கிய கதை

எண்பதுகளில் தூர்தர்ஷனில் பட்டையைக் கிளப்பிய தேசிய ஒருமைப்பாட்டுக்கான பாடல் 'மிலே சுர் மேரா துமாரா'. இந்தியாவின் பதினான்கு மொழிகளின் கலவையில் உருவான பாடல். இரண்டே வரிகள் இந்த பதினாலு மொழிகளில் திரும்ப திரும்ப வேறு வேறு மெட்டுக்களில் வரும். அந்தந்த மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், உடை, பாவனைகளை, நறுக்கென்று ஐந்து நிமிடத்தில் படம் பிடித்து காட்டியிருப்பார்கள். அருமையான கான்செப்ட், மின்னலாய் நம் மனங்களில் கலந்து விட்ட பாடல்.

அந்தப் பாடலை, என் அலுவலக நண்பர்களை வைத்து ரீ-மேக் செய்யலாம் என்று முடிவு செய்ததைப் பற்றியும், அந்த திட்டமிடல், அதற்கான ட்ரெயிலர் உருவாக்கியதையும் படித்திருப்பீர்கள். (இல்லன்னா, படிங்க ப்ளீஸ் ).

ட்ரெயிலரை ஒரு சுபயோக சுபதினத்தில், கொம்பேனியாருக்கு போட்டுக் காண்பித்தோம். எல்லோரையும், ட்ரெயிலிரில் இழைந்தோடிய ஹாஸ்யம் கவர்ந்திருந்தது. ட்ரெயிலருக்கு கிட்டிய வரவேற்பை பார்த்ததும், மிலே சுர் பாடலையும் கொஞ்சமாய் ஹாஸ்யம் கலந்து எடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

கொம்பேனியில் இந்தியர் அல்லாத பலநாட்டவர் இருந்ததால், அவர்களையும் அரவணைக்கும் விதத்தில், சைனீஸ், ஸ்பானிஷ், ஆங்கிலத்திலும் வார்தைகளை பாடல் பதிவு செய்து இடையில் செறுக வேண்டும் என்றும் முடிவு செய்தேன்.

ட்ரெயிலரைப் பார்த்ததும், எஞ்சி இருந்த நடிகர் தேர்வு சுலபமாய் முடிந்தது. பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு நான் இந்தக் காட்சி பண்றேன், அந்தக் காட்சி பண்றேன்னு முன் வந்தாங்க.

எந்தெந்த காட்சி எந்த இடத்தில், எந்த நடிகர் நடிகையரை வைத்து என்று எடுப்பது என்பதை அட்டவணையாக்கி எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன்.

ட்ரெயிலர் தந்த தன்னம்பிக்கையால், ஆரம்பத்தில் 'சிம்பிளாய்' எடுக்கலாம் என்று நினைத்த காட்சிகளெல்லாம், கொஞ்சம் மெனக்கட்டு ஓரளவுக்கு பிரமாண்டமாய் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். உதாரணத்துக்கு, வங்காளி ரயில் காட்சிகள், பரதநாட்டியம், வெளிப்புரப் படப்பிடிப்புக் காட்சிகள் சில.

ஹாஸ்யம் தேவை என்றதும், முதலில் தோன்றியது, பீம்சேன் ஜோஷி ஆரம்பத்தில் பாடும், ராக ஆலாபனையுடன் ஆன துவக்கத்தை, 'ராப்பர்' மாதிரி உடையில் ஒருவரையும், மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி உடையில் ஒருவரையும், நம்மூர் தலேர் மெஹந்தி கெட்டப்பில் ஒருவரையும் வைத்து எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். "மைக்கேல் ஜாக்ஸன்" கடைசி நேரத்தில் அவசர வேலையால் வெளியூருக்கு சென்று விட்டார். அதோடில்லாமல், 'ராப்பர்' திட்டமிட்ட அன்று வர முடியாமல் போனது. அதனால், 'ராப்பரை' பாட வைத்து பாடல் துவங்கும்படியும், 'தலேர் மெஹன்ந்தி' , பீம்சேன் கெட்டப்பில் நம்மூர் நண்பர்களை தனி ட்ராக்கிலும் எடுத்து முதல் பத்தியை எடுத்து முடித்தோம்.

ஹாஸ்யம் வரும்படி மற்ற ட்ராக்கை எடுப்பது எப்படி என்பது மைண்டில் சரியாக லாக் ஆகாததால், மெத்தப் பரிச்சயமான தமிழ் ட்ராக்கை, சன்னி மோசா என்ற நண்பரை ரஜினியாக்கி படமாக்கினோம். விஷுக் விஷுக் என்ற அவரின் அசத்தல் ஆட்டம் பெரிதும் உதவியது. சன்னி மோசா, உள்ளூரில் ப்ரபலம். ஏற்கனவே பல குறும்படங்களை எடுத்திருப்பவர். 'மிலே சுர்'ருக்கு பல நாட்கள் படம் பிடிக்கும் இடத்துக்கு வந்து நடிப்பெல்லாம் சொல்லிக் கொடுத்து உத்வினார்.

மொத்தம் இருபது நாட்கள், மதியம் ஒரு மணி நேரமும், சில நாட்கள் மாலை ஐந்து மணிக்கு மேலும், நடிகர் நடிகையரின் நேரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு காட்சியாய் எடுத்தோம். மொத்தம் நாலு கேமரா மேன்கள் உதவிக்கு இருந்தனர். அநேகம் காட்சிகளும், இரு காமெரா வைத்து வெவ்வேறு கோணத்தில் படமாக்கினோம். அந்தந்த நாள் எடுக்கப்படும் காட்சிகளை ஒரு பொது இடத்தில் அப்லோடி, சரி பார்த்துக் கொள்வோம்.

தமிழ் காட்சியின் முன் வரும் ஒரு தகிடதாம் தாளம் வரும். ஒரிஜினலில், வெவ்வேறு புகைப்படத்தை கட்-ஷாட் மாதிரி எடுத்து இருப்பார்கள். எனக்கு அந்த இடத்தில் பரதநாட்டியம் போட்டால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது. அலுவலகத்தில் நாட்டியம் தெரிந்தவர்களை பற்றி விசாரித்தேன். மூன்று அழகிய பெண்கள் முன் வந்தனர். அவர்களுக்கு பரதநாட்டியம் தெரியாது. அவர்களுக்கு நாட்டியம் சொல்லித் தர தர்ஷனா என்றவர் முன்வந்து, ஒரு வாரம் நன்றாய் ரிஹர்ஸல் எல்லாம் செய்து, ஷூட்டிங் அன்று ஜமாய்த்து விட்டனர்.

ஹாஸ்யம் வேண்டும் என்றதால், 'மைக்கேல் ஜாக்ஸனை' இதிலும் நுழைக்க நினத்தோம். மூன்று பெண்களும், நாட்டியம் ஆடும்போது, மைக்கேல் ஜாக்ஸனை, மூண் வாக் செய்யச் சொல்லி ரிஹர்ஸல் பார்த்தோம். ஏதோ சரியாய் வரவில்லை. மிகவும் குறைந்த நொடிகளில் இவ்வளவையும் செய்வது சவாலாய் இருந்தது. அதனால், மைக்கேல் ஜாக்ஸனை, பாகவதராக்கி, தாளம் போட வைத்து எடுத்து முடித்தோம். நாட்டிய உடையில் இருந்த இரு பெண்களை, மலையாள ட்ராக்கிலும், வெள்ளை வேட்டிச் சேட்டனின் இரு பக்கத்தில், பச்சை, சாஃப்ரான் கலர் உடையில், தேசியக் கொடியைக் காட்டும் விதத்தில் நடக்க விட்டு படமாக்கினோம், அன்றே.

பரதநாட்டியம் எடுக்க ரொம்ப நேரம் ஆகும் என்று தோன்றியதால், ஒரு சனிக்கிழமை அன்று அனைவரையும் அலுவலகத்துக்கு வரவைத்து, லைட்டிங் எல்லாம் வைத்து எடுத்தோம். உடை/ஒப்பனை செய்ய ரொம்ப நேரம் பிடித்ததால், காத்து நின்ற பாகவதரையும் (Neil), மற்ற அலுவலக நண்பர்களையும் வைத்து, 'Neil Maharaj - The Tech Guru' என்ற குட்டிப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடித்தோம். அதற்கான டயலாக் எல்லாம் Neil உட்கார்ந்த இடத்தில் spontaneousஆக சொன்னவை. அன்று இரவே அதை எடிட் செய்து, மீஜிக் எல்லாம் போட்டு, 'from the mile-sur shooting spot'னு எல்லோருக்கும் அனுப்பி ஒரு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் எகிர வைத்தோம். இப்படி எல்லாம் செய்தால்தான், கிளைமாக்ஸ் காட்சிக்கு வேண்டிய 200 பேர் கிடைப்பார்கள் என்ற திட்டமிடல் இது: நீல் மஹராஜை பார்க்காதவர்கள், பாருங்கள்.


நான் எதிர்பார்த்தை விட எனக்கு திருப்திகரமாய் வந்த காட்சி, வங்காளி வரிகளுக்கான ரயில் காட்சி. அலுவலகத்துக்கு அருகே இருக்கும் ரயில் நிலையத்தில் நடிகர் நடிகையைரை வரவழைத்து, அங்கிருது அடுத்த ஸ்டேஷனுக்கு பயணித்தோம். பயணித்த நேரத்தில் ரிஹர்ஸல் செய்தோம். அடுத்த ரயிலை பிடித்து ரிட்டர்ன் வரும்போது, படம் பிடிக்க ப்ளான். இந்த ஸ்டேஷனில் ஒரு கேமராமேனை தயார் நிலையில் வைத்து, ரயிலுக்குள் ஒரு கேமராமேனும் இருந்தார்கள்.

செல்ஃபோனில் பாடலை ஓடவிட்டு, நடிகர்களை பாடவைத்து எடுத்தோம். இருவரும் அருமையாய் பாடி நடித்தார்கள். ஒரிஜினலில், ரயிலில் இருந்து ஒருத்தர் வழுக்கை மண்டையை ஸ்லோமோஷனில் தடவியபடி வருவார். சின்ன வயசுல பாத்தது, மனதில் பதிந்திருந்த காட்சி. அதை அப்படியே இதில் செருகினோம். வழுக்கை மண்டைதான் கிடைக்கலை. நண்பரை ஸ்டைல் செய்ய வைத்து படமாக்கினோம். :)

ஒரிஜினலில் எனக்கு ரொம்பப் பிடித்த காட்சி, குஜராத்தி வரிகளுக்கு, பெரிய பொட்டுக்கார அம்மா பாடும் காட்சி. ஒரு திமிருடன் கேமராவை முறைத்தபடி பாடியிருப்பார்கள். சீரான பார்வை. அதை கிட்டத்தட்ட அப்படியே எடுக்கணும்னு, வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் தண்ணீர் பின்னணியில் வைத்து அந்தக் காட்சியை படமாக்கினோம். விரும்பியபடி வந்தது.

தெலுங்கு வரிகளை அலுவலஅ காஃபிட்டேரியாவில் எடுத்தோம். டேபிளின் இருபுறத்தில் நடிகர்களை நிற்க வைத்து, அவர்களுக்கு நடுவில், காமெராவை ட்ரைப்பாடில் வைத்து தள்ளி விட்டு எடுத்தோம். பெங்களூர், சைனா கிளைகளில் சில காட்சிகளை எடுத்தால்தான் முழுமையாகும் என்பதால், அந்தந்த கிளைகளில், இணை-இயக்குனர்கள், காமெராமான்களை தெரிவு செய்து, அவர்களின் உதவியுடன் சில காட்சிகளை அங்கேயும் எடுத்தோம்.

கன்னட வரிகளை பெங்களூரில் அழகாய் எடுத்துக் கொடுத்தார்கள். சைனாவில், எல்லோரையும் கும்பலாய் நின்று அவர்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பாடலை பாடி அனுப்பும் படி சொல்லியிருந்தேன். அவர்களும் அருமையாய் செய்திருந்தார்கள்.

ஸ்பானிஷ் பாஷையில், மிலே சுர்ருக்கான வரிகளை எழுதி வாங்கி, சரியான interludeல் பாடவைத்து நுழைத்தோம். ஸ்பானிஷ் ட்ராக்குக்கு, அவர்களின் கலாச்சாரத்தை ப்ரதிபலிக்கும் உடையிலேயே வந்து நடித்துக் கொடுத்தது சிறப்பு. ஆங்கிலத்திலும் வரிகளை எழுதி, சரியான் இடத்தில் அதை ரெக்கார்ட் செய்து பதிவு செய்தோம். சைனீஸில் இடைக்கேற்ப ட்யூன் செய்ய முடியாததால், எங்கள் கட்டத்தை காட்டும் (தாஜ்மஹால் சீன் மாதிரி) பகுதியில் அசரீரி ஸ்டைலில் வாய்ஸை பதிந்தோம்.

ட்ரெயிலர் எடுத்து முடிதத்தும் முதன் முதலில் பாடலுக்கான காட்சியை எடுத்தது மராட்டி வரிகளுக்கு. நன்கு பழக்கமான அலுவலக நண்பர்கள் அதில். தெரிந்தவர்களை வைத்து எடுத்தால், முதல் காட்சிக்கு சுலபமாய் இருக்கும் என்பதால் அதை முதலில் படமாக்கினோம். அன்றைய தினமே, லதா மங்கேஷ்கர் வரியில் வரும் தனித் தனி பெண்களின் முதல் காட்சியை படமாக்கினோம். பட்டையைக் கிளப்பினார்கள், இதில் நடித்தவர்களெல்லாம்.

படத்தில் ஆரம்பும் முதல் கடைசி வரை கோர்வையாய் ஏதாவது ஒரு தீம் சேக்கணும்னு முடிவு பண்ணி, நமது பரதநாட்டிய மூவரணியை, ஃப்ரெஷ்ஷர் மாதிரி காண்பித்து, அவர்கள் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்வதும், நட்பை வளர்ப்பதும், வேலை செய்வதும், கடைசியில் நண்பர்களாய் ஆவது போல் திரைக்கதையில் சொறுகினோம். அந்த மூவர், ரொம்பவே சிரத்தையுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை உதவினார்கள்.

நாட்கள் நகர நகர, அடுத்தடுத்த காட்சிக்கு வேண்டிய தரத்தை உயர்த்திக் கொண்டே செல்லத் தோன்றியது. ஒரியா காட்சிகளை டூயட் மாதிரி எடுத்தோம். கஷ்மீரி காட்சிகளை ட்ராலி வைத்து labல் எடுத்தோம். பஞ்சாபி காட்சிகளை கலர்ஃபுல்லாஅ உடை அணிய வைத்து எடுத்தோம். சிந்தி காட்சிகளை வாலிபால் மைதானத்தில் டாப் ஏங்கிளில் ஏணி வைத்து எடுத்தோம். அசாமிக் காட்சிகளை ஒரு சீன பெண் நண்பரை வைத்து எடுத்தோம் (அசாமீஸ் ஐடி துறையில் கம்மி?).

க்ளைமாக்ஸ் காட்சிக்கு வருவோம். கடைசியில் வரும் கோரஸ் எடுப்பதுதான் மிகவும் கஷ்டமான காரியம் என்று ஆரம்பத்தில் தோன்றியது. பிரமாண்டமாய் பாடலை முடித்தால்தான் பார்ப்பவரின் மனதில் தங்கும் என்பது என் எண்ணம். தினசரி எடுக்கும் ஷூட்டிங்கின் makingஐ எல்லோருடனும் பகிர்ந்து எல்லோரின் மனதிலும் இந்த நிகழ்வை ஞாபகமூட்டிக கொண்டே இருந்தேன்.

கோரஸில் வரும் ஒரு காட்சிக்கு, பலப் பல விதமான முகங்களை கட்டம் கட்டி ஒரே சீனில் காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப விஷயங்கள் புலப்பட்டதும், ஒவ்வொரு ஷூட்டிங் அன்றும், அன்று பங்கு பெற்ற அனைவரையும், 'மிலே சுர்' கோரஸ் வரிகளை பாட வைத்டு வீடியோவில் பதிந்தோம். மொத்தம் 36 முகங்களை ஒருங்கிணைத்து 6:28ல் வரும் அந்த காட்சி உருவானது. எடிட்டிங்கில் மிக அதிக நேரம் எடுத்தது இந்த ஆறு விநாடிகளுக்கான வீடியோதான். கிட்டத்தட்ட ஒரு வாரம், தினசரி நாலைந்து மணி நேரம் எடுத்து உருவானது.

ஆகஸ்ட் 15 வீடியோ ரிலீஸ் செய்து விடுவோம்னு, ஜூன் மாதம் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யும் போதே அலப்பரை பண்ணியதால், நேர அவகாசம் பெரிதாய் இல்லை. அநேகம் காட்சிகள் எடுத்து முடித்த நிலையில், க்ளைமாக்ஸுக்கு வேண்டிய திட்டமிடல் ப்ரம்மப் பிரயத்தணமாய் இருந்தது. இருநூறு பேர் வேண்டும் என்று மனதில் இருந்தது. இருநூறு பேருக்கும் அலுவலஅ டிஷர்ட் வாங்க வேண்டும், அதற்கு தேவையான நேரம் அதிகம்.

அந்த சமயம் பார்த்து, கொம்பேனியின் பெரிய மீட்டிங் ஒன்று நடந்தது. CEOமுதல் அனைத்து ஜாம்பவான்களும், புதிதாய் கட்டியிருந்த ஆடிட்டோரியத்தில் நடத்திய மீட்டிங் அது. எதுவோ ஒக்காரப் போய் எதுவோ விழுந்த மாதிரி, இது சரியான வாய்ப்பாய் தோன்றியது. முந்தய பதிவில் சொன்னது போல், ""when you sincerely undertake something worthwhile, you will receive all the assistance you need"". கொம்பேனி மீட்டிங் முடிந்து வெளியே வரும் கும்பலை படமாக்க வேண்டும் என்றதும், பெரிய கேள்வியெல்லாம் கேக்காம ஓ.கே சொல்லிட்டாங்க.

ஆடிட்டோரியத்துக்கு வெளியே இரு கேமராமேன்களை ட்ரைபாடுடனும், ஒருவரை கையில் கேமராவுடனும் நிற்க வைத்தோம். கேமராவுக்கு அருகே, "smile & wave"னு எழுதி வைத்திருந்தோம். நினைத்ததைப் போலவே, கொம்பேனி மீட்டிங்க் முடிந்ததும் அனைவரும் வெளியில் வந்து கேமராவுக்கு கை அசைத்து ஆதரவு தந்தார்கள். க்ளைமாக்ஸும் அருமையாய் பதிந்தது. க்ளைமாக்ஸுக்கு மகுடம் வைத்தாற் போல், கொம்பேனியின் பெரிய தலை CEOவும் நடந்து வந்து டாடா காட்டினார்.

கேமராமேன், உதவி இயக்க்நர்கள், சவுண்டு, லைட்டிங் உதவி என பல நண்பர்கள் தங்களின் நேரத்தை எனக்காக செலவு செய்தது, பெரிய பலமாய் இருந்தது. ஸ்டில்ஸ் எடுத்தவர் தினசரி மேக்கிங் காட்சிகளை, ஏ-கிளாஸாக படம் பிடித்திருந்தார். அவரின் படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய வீடியோ இது:


பொறுமையாய் படித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றீஸ். தவறாமல், நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். வீடியோவுக்கு விமர்சனம் எழுதிய 'கிரி'க்கு நன்றி. வீடியோவை பிரபலப்படுத்த உதவிய ராமலக்‌ஷ்மிக்கும், Udanz & மற்ற நண்பர்களுக்கும் நன்றீஸ். வீடியோவில் இருக்கும் அனைத்து குறைகளுக்கும் நானே பொறுப்பாளி, நிறைகளுக்கு குழுவினர் அனைவரும் பொறுப்பாளிகள்.

வீடியோவை இன்னும் பார்க்காதவர்கள், பார்க்கவும். பார்த்து பிடித்திருந்தால் பரப்பவும். வீடியோவை பரப்ப வேறு வழிகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.




யாருக்காவது குறும்படம், குறும்பாட்டு எடுக்க அவா இருந்தால் தெரிவிக்கவும். இயன்றவரையில் விவரங்கள் தந்து உதவுகிறேன். இது ஒரு அருமையான பொழுது போக்கு மட்டுமல்லாது, டீம் ஒருமைப்பாட்டுக்கு பெரிதாய் உதவும்.

குழுவினர் சிலர், வீடியோ ரிலீஸ் செய்த அன்று. (ரிலீஸ் செய்த அன்று நடந்த விஷயங்களை தனிப் பதிவாய் எழுத நிறைய விஷயம் இருக்கு ;)

Artists - Mile Sur Mera Tumhara

மீண்டும் சந்திப்போம். :)

9 comments:

SurveySan said...

டைப்பிங் பிழை இருந்தால் மன்னிக்க. அவசர அவசரமா அடிச்சு நிறப்பியது.

பாவக்காய் said...

kalakkal thalai !! namma innum meet pannaveye illa - bay area blogger - were trying for last 3 yrs?! .. :-)

SurveySan said...

பாவக்காய், வருகைக்கு நன்னி :)
அது அதுக்கு அதுக்கான நேரம் வரணும் போலருக்கு. காலம் கனியட்டும் ;)

SurveySan said...

திண்டுக்கல் தனபாலன், மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம்.

ஒவ்வொரு காட்சியையும் எடுத்ததன் பின்னணி தெரிந்தபின் அதை ரசிக்கவென்றே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். எப்படி இத்தனை பேரை ஒருங்கிணைத்து எடுக்க முடிந்ததெனப் பிரமிப்பைத் தந்த க்ளைமேக்ஸ் காட்சியின் ரகசியத்தையும் போட்டுடைத்து விட்டீர்கள்:)!

SurveySan said...

///க்ளைமேக்ஸ் காட்சியின் ரகசியத்தையும் போட்டுடைத்து விட்டீர்கள்:)!///

avasarap pattutano :)

ராமலக்ஷ்மி said...

அப்படீன்னும் சொல்ல முடியாது:)! பதிவின் நோக்கமே உருவான கதையைச் சொல்வதுதானே. எப்படிப் புத்திசாலித்தனமாக மீட்டிங்கைப் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்பதில் ‘சபாஷ்’ பெறுகிறீர்கள் என்பதோடு குறும்படம் எடுப்பவர்களுக்கு இந்த உத்தி ஒரு நல்ல உதாரணமும்!

Suresh Subramanian said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.