recent posts...

Wednesday, May 25, 2011

ராமர் தொடாத தெனாவட்டு அணில்...

அமெரிக்க அணில்களுக்கு முதுகில் கோடில்லை, என்பதை கணம் கோர்ட்டார் அவர்களிடம் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன் :)

சமீபத்திய ஊர்சுற்றலின் போது, கலிஃபோர்னியா கடற்கரையோரம் க்ளிக்கிய அணில்.


நம்ம ராமரு தொட்டிருந்தா கோடு வந்திருக்கும்ல? அது மட்டுமில்ல யுவர் ஹானர்.
இந்த ஊரு அணிலுங்க, மனுஷனப் பாத்தா பயப்படாம கிட்ட வந்து எழுந்து நின்னு, 'இன்னா?'ன்னு கேக்குது.
முதுகுல மூணு கோட்டப் போட்டு, கல்லு எடுக்க விட்டிருந்தா இந்த தெனாவட்டு இருந்திருக்குமா? நம்மள பாத்ததும் பயந்து ஓடியிருக்காது? ராமர், எங்கிருந்தாலும் வந்து அமெரிக்க அணிலை கவனிக்கவும்.


டாங்க்ஸு :)

Tuesday, May 17, 2011

உனக்காக மட்டுமே வாழ்!!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அருள்வாக்கு தலைப்பை பாத்து டென்ஷன் ஆயிடாதீங்க. அருள்வாக்கெல்லாம் சொல்லரதுக்கு இல்லை இந்தப் பதிவு.
ஆனா, வாழ்க்கைக்கு ரொம்பத் தேவையான ஒரு விஷயத்தை பகிரவே. ஆயிரமாயிரம் ஆணிகள் பிடுங்க வேண்டிய இந்தத் தருணத்திலும்... பலப் பல தியாகங்களை நிகழ்த்திவிட்டு, உங்களின் நீண்ட நாள் நலனை மட்டுமே கருதி....ஸ்ஸ்ஸ்ஸ்..

எங்க வீட்லேருந்து ஆரம்பிக்கலாம். நானும் என் சக குடும்பமும், சுற்றமும் நட்பும் எப்படி சாப்பாட்டை ஆராதிப்பவர்கள் என்பதை ஏற்கனவே நல்லா அளந்திருக்கேன்.

ஊர்வன, பறப்பன தவிர்த்து நடப்பவற்றில் ஆடு, கோழியை தவிர்க்காமல், மற்றதை எல்லாமல் தவிர்த்து, நீந்துவதில் ஆக்டபஸை மட்டும் தவிர்த்து, எஞ்சி இருக்கும் ஜீவராசிகளை, வேக வைத்தோ, வறுத்தோ, பொரித்தோ உண்பதில், ஜென்ம சாபல்யம் உள்ளது என்பதில் திடமான நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள்.

பள்ளிக் கல்லூரிக் காலங்களில், சனி ஞாயிற்றுக் கிழமைகளில், வீடு திருவிழா கோலம் பூணும். சிக்கன் குழம்பு, வறுத்த மீன், ஆம்லெட் என, அதகளம் நடக்கும்.
ஒருத்தர்ர் சிக்கனை வெட்ட, மற்றொருவர் மீனை சுத்தம் செய்ய, இன்னும் ஒருவர் வெங்காயத்தை வெட்ட, சமயல் அமக்களமாய் நடைபெறும்.

சிக்கன் வாங்குவது சுலபம். வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரே ஒரு கடை இருக்கும். யாராவது ஒருத்தர் சைக்கிளில் ஒரு மிதி மிதித்து வாங்கிட்டு வந்துருவோம். மிக்காறும், நைனா அதுக்கு காலங்காத்தால போயிடுவாரு. அப்படியே மீனையும், அடுத்துள்ள மார்க்கெட்டில் ரெண்டு மூணு 'கூறு' வாங்கிட்டு வந்திடுவாரு.

நாங்கள் வசிக்கும் நகர், 'பாரத விலாஸ்' கணக்கா, சகலரும் குழுமியிருந்த தெரு. ஆனா, எங்க எதிர்வீட்டில் மட்டும் சுத்த சைவவாசிகள்.
ரோட்டில் கூவிக் கூவி விற்கப்படும், மீனை "ஏய் மீன்காரம்மா"ன்னு கூப்பிட்டு பேரம் பேசி வாங்க வீட்டினருக்கு நைனா தடை போட்டிருந்தாரு. ஏன்னா, சுத்த சைவர்கள், நம்மள பத்தி மட்டமா நெனப்பாங்கன்னு அவருக்கு நெனப்பு.

அதுமட்டுமல்ல, மார்க்கெட்டில் வாங்கிய மீனை வறுக்கணும்னா, ஒரு பெரிய திட்டமிடல் இருக்கும். எத்தனை மணிக்கு வறுக்கணும், திடீர்னு எதிர்வீட்டு ஆசாமிகள் வந்துட்டா எப்படி அவங்களை மீன் வாசம் தெரியாம இருக்க ஹாண்டில் பண்ணனும், இப்படி ப்ளான் பண்ணிதான் மீனை வறுக்க விடுவாரு நைனா.
தப்பித் தவறி வாசல் மணி அடிச்சுட்டா, உடனே ஒரு ஊதுபத்தி ஏற்றப் படும். வாசனை திறவியங்கள் தெளிக்கப்படும், பாண்ட்ஸ் பவுடர் காற்றில் வீசப்படும், இப்படி. மீன் வாசனையை மறைக்கவாம்.

மறைக்கக் கூடிய விஷயமா அது? மீன் வறுவல் வாசம் பெற்றவர்கள், புண்ணியம் செய்தவர்களல்லோ? அதை விட, ஜென்ம சாபல்யம் பெற வேற என்ன பெரிய வழி இருந்திட முடியும்?

என்னமோ போங்க. ஒரு மீன் வறுக்கறுதுக்கே இப்படி, அடுத்தவங்க என்ன நெனப்பாங்கன்னு, பயந்து பயந்து வாழ்ந்து பழகிய நான், மத்த விஷயங்களுக்கும், இதே திகிலுடன்தான் வாழ்ந்து வளர்ந்தேன்.

வூட்ல இருக்கரவங்க அப்படிப் பழக்கிட்டாங்க..
பச்ச கலர் டிஷர்ட் போட்டா, "டேய் மவனே, இது என்னடா ராமராஜன் கணக்கா? மாத்திடு. பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
தலை வாராம, தலீவர் கணக்கா சிலிப்பிக்கினு போனா, "டேய் மவனே, இன்னாடா இது பரக்காவட்டி மாதிரி? வாரிடு. பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
இப்படி கதிகலங்க வச்சி நெம்ப ஜீன்லையே இது ரெஜிஸ்ட்டர் ஆகர அளவுக்கு மாத்திட்டாங்க.

வூடு வுட்டு, ஊரு வுட்டு, நாடு வுட்டு, நகரம் வுட்டு, ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி வந்தாலும், அந்தப் பயக்கம் ஒட்டிக்கிட்டே வந்துருச்சு.

"இந்தப் பேண்ட்டுக்கு இந்த சட்டை போட்டா எடுப்பா இருக்குமா? பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
"ஒரே பேண்ட்டை நாலு நாளா போட்டுக்கினு போறமே, பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
"இந்த சட்டைல கடுகு அளவுல ஒரு கறை பட்டிருக்கே, பாக்கரவன் இன்னா நெனப்பான்?"
"பழைய காரை மாத்தாம் இம்புட்டு வருஷமா ஓட்ரமே, பாக்கர்ரவன் இன்னா நெனப்பான்?"

இப்படியே ஓடிக்கிட்டிந்தது வாழ்க்கை.

சமீபத்தில் கடையில் ஒரு அழகிய பச்சை டி-ஷர்ட்டை பார்த்ததும், வாங்கிட ஆசை வந்து எடுக்கப் போனேன். நைனாவின் வாய்ஸ் அசரீரீ மாதிரி "டேய் மவனே ஊரு வுட்டு ஊரு போயி இந்தக் கலர் டிஷர்ட்டை போடப் போக்கறியே. அந்த ஊர்காரன் உன்னை பத்தி இன்னா நெனப்பான்?"னு கேட்டுது.
திடுக்கிட்டுப் போயி, அங்கையே வச்சுட்டு வீட்டுக்கு போயிட்டென்.

அந்நிக்கு தூக்கமே இல்லை. யோசிச்சேன், யோசிச்சேன் தீவிரமா யோசிச்சேன்.

"எருமை மாட்டு வயசாவுது, இன்னும், நைனாக்கு பயந்து, அவன் இன்னா நெனப்பான், இவன் என்னா நெனப்பான், பக்கத்து வூட்டுக்காரன் இன்னா நெனப்பான், ஒசாமா இன்னா நெனப்பான், ஒபாமா இன்னா நெனப்பான்"னு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தா, நமக்கு புடிச்ச மாதிரி எப்பத்தான் வாழரது?
நீங்க மீன் வறுத்து சாப்பிடறீங்களா? ஒரே பேண்ட்டை தினமும் போட்டுக்கிட்டு வறீங்களா, எந்தக் கலரு டிஷர்ட்டு போடறீங்க, உங்க சட்டைல எங்க கறை இருக்கு, எந்தக் கார் ஓட்டறீங்கன்னு கவனிச்சுக்கிட்டு இருக்கரதுதான், உலக மக்களின் கவலையா? அவனவனுக்கு ஆயிரம் ஆணிகள் இருக்கு, இதுல பேண்ட்டு போட்டா என்னா, போடாட்டி என்னா? அதப் பத்தி எல்ல்லாம் எவனும் கவலப் படமாட்டான்.
அதனால, உனக்காக மட்டுமே வாழ். போலி கௌரவத்துக்காக வாழ்வின் நல்லதை வாழாமல் விடாதே!" ன்னு லார்டு கிருஷ்ணா கணக்கா இன்னொரு அசரீரீ கேட்டது.

திடுக்கிட்டு எழுந்தா, மணி எட்டாயிருச்சு. ஆஃபீஸ் போர நேரமாயிடுச்சுன்னு எழுந்து பல்லு தேச்சுட்டு, ஆர அமர கண்ணாடியை பாத்தேன்.
"எருமை மாட்டு வயசாயிடுச்சு"ன்னு அசரீரீ சொன்னது சரிதாங்கர மாதிரி, மீசையில் ஒரு குட்டி வெள்ளை முடி எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது சில பல நாட்களுக்கு முன்.

பேசாம மீசையை எடுத்து ராஜேஷ் கண்ணா கணக்கா, "சின்னப் பையன்" ஆயிடலாமான்னு அப்ப்பப்ப யோசனை வரும்போதெல்லாம், "அவன் இன்னா நெனப்பான், இவன் என்னா நெனப்பான்"னு பயந்து, வெள்ளை முடியை மட்டும் "கச்சாக்"னு வெட்டி ஒதுக்கி வந்தேன்.

ஆனா, இந்த தபா, "நான் எனக்காக மட்டுமே வாழறேன். வாழ்க்கையை வாழணும். மீண்டும் சின்னப் பையனா மாறணும்"னு கத்திக்கிட்டே, ஜில்லட்டை மீசைமீது ஓடவிட்டு, விஷுக்னு மழிச்சுட்டேன்.

"நைனா, நான் ராஜேஷ் கண்ணா ஆயிட்டேன்"னு ஃபோன் போட்டு சொல்லணும்.

Saturday, May 14, 2011

ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டிய நேரமிது

மேட்டரு கீழே சொடுக்கி தினமலரில் படித்துக் கொள்ளவும்.

ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டிய நேரமிது

என் சொந்தக் கருத்ஸ்:
கவனமா இருங்க மாடம். ஆர்பாட்டமில்லாத, சாமான்யனின் வாழ்க்கை தரத்தை நிரந்தரமாய் உயர்த்தும், கண்ணியமான, கண்டிப்பான, முதலமைச்சரைத்தான் மக்கள் எதிர்பாக்கராங்க. உஷாரு.
அஞ்சு வருஷத்துக்கு அப்பரம், history repeatsனு சொல்ல வச்சுராதீங்க..

பழிவாங்கல் படலம், பஸ் நெம்பரை மாத்தரது, அவரு கட்டின சட்டசபைய உபயோகிக்க மாட்டேங்க்கரது போன்ற சில்லரைத் தனமான விஷயங்களை புறம் தள்ளுங்கள்.

குறிப்பா, சசிகலா குடும்பத்துக்கும், கப்பித்தான் குடும்பத்துக்கும், கடிவாளம் மிக அவசியம்.

நாட்டக் காப்பாத்துரா நாராயணா...