
சே குவாரா, அர்ஜேண்டினாவில் பிறந்தவர். பிறப்பெடுத்ததே, புரட்சி செய்வதற்காகத்தான் என்று உணர்த்துவது போல் வாழ்நாள் முழுவதும், ஊர் ஊராகச் சென்று புரட்சி செய்து ரணகளப் படுத்தியவர்.
க்யூபாவின் சுதந்திரத்துக்காக ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போரிட்டார். அங்கு வேலை முடிந்ததும், பொலீவியாவுக்குப் போய் அங்கிருந்த அரசுக்கு எதிராகப் போரிட்டார். அமெரிக்க உளவாளிகள் உதவியுடன் பொலீவியா, சே குவாராவை மடக்கி, மரண தண்டனை அளித்து, போட்டுத் தள்ளியது.
பாக்கரதுக்கு ஒரு வசீகரமான வீரத்தனம் இருக்கும் அவர் புகைப்படங்களுக்கு. அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ந்து அறிந்ததில்லை. மேலோட்டமா தேடினா, இருவாரியான கருத்ஸும் இணையத்தில் உலவுகின்றன. அதையெல்லாம், நீங்களே பொறுமையா தேடிப் படிச்சு வரலாறு தெரிஞ்சுக்கோங்க.
போன வாரம், எங்க ஊரு லைப்ரரியில், வழக்கம் போல், ஓ.சி டிவிடிக்களைப் பொறுக்குகையில் (இப்ப ப்ளூ-ரேவும் தராங்க), ஸ்பானிஷ் மொழிப் படமான 'Motorcycle diaries' கண்ணில் பட்டது. டிவிடி கவரில் ரெண்டு பரட்டையர்கள், பழைய மோட்டார் சைக்கிளில் போகும் படம். சுவாரஸ்யமா இருக்கும்னு பட்சி சொன்னதால், எடுத்தாச்சு.
படத்தை பாத்தப்பரம் தான் தெரிஞ்சது, இது, சே குவாராவின், டைரிக் குறிப்பிலிருந்தும், அவரின் பால்ய நண்பர் ஆல்பர்ட்டோவின் புத்தகங்களிலிருந்தும், கிடைத்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்னு.
23 வயது எர்னஸ்ட்டோ-சே-குவாரா, டாக்டர் படிப்பு முடித்ததும், தெற்கு அமெரிக்காவின் நீள அகலத்தை, தன் நண்பன் ஆல்பர்ட்டோவுடன் ஒரு மோட்டார் பைக்கில் பயணம் செய்து பார்க்க ஆசைப் படுகிறார். இருவரும், ப்ளான் பண்ணி, பொட்டியை கட்டிக்கிட்டு ஓட்டை பைக்கில் பயணம் செய்கிறார்கள். சென்ற வழியெல்லாம், அவர்களுக்குக் கிட்டும் அனுபவம்தான் படம்.
சுவாரஸ்யமான திரைக்கதை. ஜாலியான் காட்சியமைப்பு.
வழி நெடுகிலும், ஏழைத் தொழிலாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இவரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துது.
பயணத்தின் இறுதியில், 'பெரு'வில் உள்ள ஒரு தொழுநோய் காப்பகத்தில் தங்கி சேவை செய்கிறார்கள் நண்பர் இருவரும். ஆச்சரியமான அதிர்ச்சி என்னவென்றால், இதில் நடித்திருக்கும் தொழுநோயாளிகள் நிஜமாகவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அமேசான் நதியின் அக்கரையில் இருக்கும் இந்த 'லெப்பர்ஸ் காலனியில்' நிஜ சேகுவாராவால், சிகிச்சை அளிக்கப்பட்டவர்களாம்.
படத்தின் கடைசி அரை அணி நேரம், இந்த லெப்பர் காலனியில் தான் நிகழ்கிறது. நானெல்லாம், நமது ரயில் நிலையங்களில் இருக்கும், தொழுநோயாளிகளுக்குப் பிச்சை கூட அளிக்க மனமில்லாமல், முகம் சுளித்து எட்டடி தள்ளி நடந்து பழக்கப்பட்டவன். பிச்சைக் காரர்களுக்குப் பிச்சை அளிக்கக் கூடாது என்ற 'சுலபவழி' திட்டத்தால், அவர்களைப் பற்றி ஒரு செக்கண்ட் கூட யோசிச்சது கிடையாது.
தெரேசா, காந்தியெல்லாம் தொழுநோயாளிகளுக்கு எந்தளவுக்கு உதவியிருக்காங்க, தொழுநோய் காற்றில் பரவாது, தொட்டால் பரவாது போன்ற விஷயங்களெல்லாம், பள்ளியிலேயே சொல்லித் தரப்பட்டிருந்தாலும், ஒரு பயம் கலந்த அறுவருப்பில், இயன்றவரை, அவர்கள் இருக்கும் சுத்துவட்டாரத்தையே தவிர்த்துப் பழக்கப்பட்டுவிட்டோம்.
படத்தில் ஹீரோ, இந்த நிஜ தொழுநோயாளிகளிடம், மிகவும் பிரியமாக நடந்து கொள்வார். சே குவாரா எப்படி வாழ்ந்திருப்பாரோ, அதற்கு ஒரு படி மேலேயே நடிச்சுக் காமிச்சுட்டாரு. நோயாளிகளுடன் கைகுலுக்குவதிலிருந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்களுடன் விளையாடுதல்னு, அநாயாசமா எந்த வித முகச் சுளிவும் இல்லாமல், அருமையா நடிச்சிருக்காரு.
அமேசான் நதியின், அந்தப் பக்கம் தொழுநோயாளிகள் காப்பிடமும், இந்தக் கரையில், டாக்டர் நர்சுகளுக்கான விடுதியும் இருக்கும். இவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் விடுதியில் நடக்கும். அப்போ, என் பிறந்த நாள் நோயாளிகளுடந்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி, நடு ராத்திரீல, அமெசான் ஆத்துல குதிச்சு நீந்தி அக்கரை போவாரு. அந்த காட்சி நிஜமாவே அமேசான் நதியில், ஹீரோவை நீந்த வச்சு மூணு நாள் எடுத்தாங்களாம்.
ஹீரோவுக்கு, ஆஸ்மா நோய் வேறு இருக்கும். மூச்சுத் திணர திணர அவர் அக்கரைக்கு நீந்திச் செல்லும்போது, லெப்பர் காலனியில் உள்ளவர்கள், அவரை ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சி இன்னும் கண்ணில் நிக்குது.
ஆல்பர்ட்டோவுடனான இந்த மோட்டார் சைக்கிள் பயணம் தான், சே குவாராவின் வித்யாசமான வாழ்க்கைப் பயணத்திற்கு அடிக்கல் நாட்டியது.
நல்ல படம். ஒரு தபா பாக்கலாம்.
சே குவாரா சிஷ்யர்கள், டிவிடியை வாங்கி வைத்துக் கொண்டு அடிக்கடி பார்க்கலாம்.
Ernesto Che Guavara. பெருந்தலைவர் போலருக்கு.

பி.கு: அடுத்து ஒரு பெரிய பயணம் ப்ளான் செய்தால், அது அமேசான் நதிக்கரைக்குத்தான் இருக்கும். அருமையா இருக்கு இடங்கள். பாக்கணும் ;)
1 comment:
'ஒன்னியும் தோணலப்பா'
Post a Comment