இதுவரை பலரும், பொ.செ படிச்சதில்லியா இல்லியான்னு பல தடவை கேட்டிருக்காங்க. சரி, அப்படி என்னதான் இருக்குன்னு வாங்கி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். மொத்தம் அஞ்சு புக்கு தடி தடியா இருக்கு. ஹிஸ்டரி ஆஃப் இந்தியான்னு ஒரு புக்கு 10th படிக்கும்போது இருந்துது, அந்த புக் ஸைஸ் பாத்தாலே தூக்கம் வந்துடும். பாபர் முதல், மவுண்ட்பேட்டன் வரை, இந்தியாவை கூறு போட்டு ஆண்டதை விலாவாரியா பிரிச்சு மேஞ்சிருப்பாங்க.
புக் கிரிக்கெட் வெளையாட ரொம்ப உபயோகமான புக்கா இருந்துச்சு.
இப்ப பொ.செ, இம்மாம் பெருசா, பக்கம் பக்கமா இருந்ததப் பாத்ததும் பெரிய அயற்சி.
ஆனாலும், விடா முயற்சியுடன், முதல் பாகம் படிச்சு முடிச்சாச்சு.
அரசர் காலத்து கதைங்கரதால, ஏகப்பட்ட அரசர், சிற்றரசர், அந்த ஊர், இந்த ஊர்னு கன்னாபின்னான்னு பக்கம் பக்கமா விதவிதமா பெயர்கள்.
தெனாலி படத்துல, ஒரு ஏட்டைய்யா, 'எழுதி ரொம்ப நாளாச்சு, டச்சு விட்டுப்போச்சு'ன்னு ஜெயராம்கிட்ட சொல்லுவாரு.
அந்த மாதிரி, பொத்தகம் எல்லாம் படிச்சு ரொம்ப காலமான மாதிரி இருக்கு. டச்சு விட்டுப் போச்சு. இவ்ளோ பேரையும் ஊரையும் ஞாபகம் வெச்சுக்கிட்டு, ஒரு சேப்டர்லருந்து அடுத்த சேப்டர் தாவருதே ப்ரம்ம ப்ரயத்தனமா இருக்கு.
அன்றைய தமிழகம், சீரும் செழிப்புமா இருந்ததுன்னு தெரியும். ஆனா, கல்கியின் வர்ணனையில் பழவையாறும், தச்ஞாவூரும் சொர்கபுரி மாதிரி இருந்ததாய் தெரிகிறது. காவேரியின் சிறப்பு, அந்த காலத்து விஷயங்கள் பலவெல்லாம், சூப்பரா பரப்பியிருக்காரு புக் முழுவதும்.
முதல் பாகம் முடிச்சு, இன்னும் நாலு பாகம் இருக்கு. சரி, படிச்ச வரைக்கும், நமக்கே சொல்லிப் பாத்துக்கலாம், மறக்காம இருக்கும், அடுத்த பாகம் படிக்கும்போது கொழப்பம் வராம இருக்க தோதா இருக்கும்னு, இதுவரை படிச்சதின் சுறுக்கம் கீழே.
பொ.செ கரச்சு குடிச்சவங்க, குத்தம் குறையை திருத்துங்க ;)
பொன்னியின் செல்வன் - பாகம்1
**** ~ ******** ~ ******** ~ ****
முக்கிய பாத்திரங்கள்:
* வந்தியத்தேவன் - ஹீரோ (பாகம்1ஐ பொறுத்த வரை). சோழ இளவரசர் ஆதித்ய கரிகாலனின் உயிர் நண்பன். வாணர் குலத்தை சேர்ந்த அரசாளும் பரம்பரையை சேர்ந்தாலும், இப்போ கைவசம் எதுவும் இல்லை.
* சுந்தர சோழர் - சோழச் சக்ரவர்த்தி. வயசானவரு. பேரலைஸ் ஆகி ரெண்டு காலும் விளங்காமல், படுத்த படுக்கையில் கிடப்பவர். தஞ்சாவூரில் வாழ்கிறார்.
* குந்தவை - இளவரசி. அநேகமா ஹீரோயின். சுந்தர சோழரின் மகள். பழவையாறீல் உள்ள அரண்மனையில் வாசம்.
* ஆதித்ய கரிகாலன் - பட்டத்து இளவரசர். சக்ரவர்த்தியின் மூத்த புதல்வர். குந்தவைக்கு அண்ணன். காஞ்சியில் இருக்கிறார்.
* அருண்மொழி - இளவரசர். சக்ரவர்த்தியின் கடைப் பிள்ளை. இலங்கையின் மேல் படையெடுத்துச் சென்றுள்ளார்.
* பெரிய பழுவேட்டரையர் - வில்லன். 60 வயசு அரசர். சக்ரவர்த்தியின் உடன் இருப்பவர். சக்ரவர்த்தியை தஞ்சையில் house arrest செய்து வைத்து மொத்த அரசாங்கத்தையும் இவர் நடத்துவதாக ஊர் பேச்சு.
* மதுராந்தகத் தேவர் - சக்ரவர்த்தியின் அண்ணன் மகன். வில்லனின் மருமகன்.
* நந்தினி - வில்லனின் இளைய வயது ராணி. வில்லி.
* வானதி - குந்தவையின் தோழி. அருண்மொழியின் காதலி.
* ஆழ்வார்க்கடியான் - வைஷ்ணவ பக்தன். நந்தினியின் 'வளர்ப்பு' அண்னன். ஒற்றன்.
இன்னும் ஒரு இருபது பேர் முதல் பாகத்தில் வராங்க. எழுத்து கூட்டி அவங்க பேரு எழுதரதுக்குள்ள தாவு தீந்திடும்.
இனி கதையின் சுறுக்கத்தைப் பாப்பமா?
சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நடக்கர கதை.
சோழச் சக்ரவர்த்தி, சுந்தர சோழர், வயசான காலத்துல வாத நோய் வந்து ரெண்டு காலும் விளங்காம படுத்த படுக்கையாகிடறாரு. தனக்குப்பரம் தன் மகன் ஆதித்த கரிகாலன் தான் அரசு ஏற்கணும்னு அவரை பட்டத்து இளவரசராக சொல்லி வச்சிருக்காரு.
பழுவேட்டரையருக்கோ, தன் மருமகன், சக்ரவர்த்தியின் அண்ணன் மகன், மதுராந்தகத் தேவரை அரசராக்கணும் ஆசை.
அரசியலே வேணாம், சிவனே கதின்னு சாமியாரா இருந்த மதுராந்தகத் தேவரை, தன் இள மனைவியை விட்டு மனமாற்றம் செஞ்சு, மதுராந்தகத் தேவருக்குள்ளும் அரசாங்க மோகத்தை ஏத்தி விட்டுடறாரு.
பழுவேட்டரையர் சக்ரவர்த்தியை house arrest பண்ணி, குந்தவை, ஆதித்ய கரிகாலர், அருண்மொழி இவங்களையெல்லாம் காலி பண்ணி, தன் எண்ணத்தை ஈடேற்ற நினைக்கிறார் என்பது ஆதித்ய கரிகாலனுகும் அரசல் பரசலா தெரிய வருது.
ஆதித்ய கரிகாலர், தன் தந்தையை தஞ்சையை விட்டு வெளியே வந்து காஞ்சியில் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும், அப்பாலிக்கா பழுவேட்டரையரின் சதியை முறியடிக்கணும்னு ஆசை.
தன் உயிர் நண்பன், வந்தியத்தேவன், நம் ஹீரொ, அவன் கிட்ட ஒரு ஓலையை குடுத்து, சக்ரவர்த்தியிடம் சேக்க சொல்றாரு. அப்படியே தன் தங்கை குந்தவைக்கும் இன்னொரு ஓலையை கொடுத்து விடறாரு.
நந்தினி, பழுவேட்டறையரின் இள ராணி. ரொம்ப அழகான அல்லி ராணி. இவங்க ஃப்ளாஷ்பேக் ஏகப்பட்ட மேட்டர் வருது.
அர்ச்சகரின் மகள்னு சொல்லிக்கிட்டு, சின்ன வயசுலயே சோழ ராணி கிட்ட இவங்க குடும்பத்துடன் வராங்க. ராணியும், நந்தினியை குந்தவை, ஆதித்ய கரிகாலருடன் சேத்து விடறாங்க. குந்தவைக்கு நந்தினியை சின்ன வயசுலையே பிடிக்காது. கரிகாலருக்கு நந்தினியை பார்த்ததும் காதல். ஆனா, பெருசுங்க எல்லாம், அர்ச்சகரின் பெண் அரசியாக முடியாது, ஸோ, அவள நீ மறந்துடுன்னு கரிகாலர் கிட்ட சொல்லிடறாங்க. அவரும், வேற போர் விஷயமா வெளீல போயிடறாரு.
பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் வென்று, அவனை விரட்டிக்கிட்டு போறாரு. காட்டுல ஒரு குடிசையில், அடிபட்ட வீரபாண்டியன் படுத்துக் கிடக்கறாரு. அங்க அவர கவனிச்சிக்கிட்டு நந்தினி. கரிகாலன் இல்லன்னானதும், வீரபாண்டியனை காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். தன் காதலனை கொல்லாதேன்னு கரிகாலனின் காலைப் பிடிச்சு கேக்கறாங்க. ஆனா, போர் வெறியில் இருக்கும் கரிகாலன் காதுல அதெல்லாம் விழலை, நந்தினியின் முன்னாலேயே, வீரபாண்டியனின் தலையை வெட்டிடறாரு.
நந்தினிக்கு, பாண்டியர்கள் சில பேருடனும் ஒரு லிங்க் இருக்கு. ரவிதாஸன் என்பவன் அடிக்கடி இவங்கள வந்து பாக்கரதும், சோழர் குலத்தை போட்டுத்தாக்கவும், திட்டம் தீட்டும் கும்பலுக்கு ரவிதாசன் தலைவன்.
ஓலையை கொண்டுவந்த வந்தியத்தேவன், பல ப்ரச்சனைகளைச் சந்திக்கிறான். போகும் வழியில் தன் நண்பன் கடம்பூரானை சந்தித்து விட்டுச் செல்லலாம்னு அவங்க அரசவைக்குப் போறான். அங்க ராத்திரி, பழுவேட்டரையர், மற்றும் பல சிற்றரசர்களின் ரகசிய ஆலோசனை நடக்கரதை பாக்கறான். கரிகாலனுக்கு பதிலா, மதுராந்தகத் தேவரை அரசனாக்கணும்னு அங்க முடிவு செய்யராங்க.
தான் செல்லும் இடத்திலெல்லாம் ஆழ்வார்கடியானையும் வந்தியத்தேவன் பார்கிகறான். பார்பதர்க்கு விஷ்ணு பக்தனாயிருந்தாலும், அவனும் சில விவரங்களை சேகரிக்கத் திரியும் ஒற்றன் போலவே வந்தியத்தேவனுக்கு தெரிகிறான்.
ஆழ்வார்கடியானின் ஆலோனையின் படி, ஒரு ஜோசியரை சென்று பார்க்கிறான் வந்தியத்தேவன்.
சென்ற இடத்தில், இளவரசி குந்தவையைப் பார்க்கிறான். கண்டதும் காதல் மாதிரி, ஈர்க்கப்படுகிறான். ஆனா, அவ தான் குந்தவைன்னு அப்ப அவனுக்கு தெரியாததால், தான் கொண்டு வந்த ஓலையை கொடுக்க முடியவில்லை.
அங்கேருந்து கெளம்பி தஞ்சாவூர் கோட்டைக்குள் புகுந்து, சக்ரவர்த்தியின் ஓலையைக் கொடுத்துவிட்டு. அப்படியே நந்தினியைப் பார்த்துவிட்டு, அவளுக்கும் ஆழ்வார்கடியானின் மெசேஜ் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அப்படியே குந்தவையையும் பார்த்துவிட்டு அவளுக்கான ஓலையையும் கொடுக்கிறான் வந்தியத்தேவன்.
ஓலையைப் பெற்றுக் கொண்ட குந்தவை, வந்தியத்தேவனிடம் இன்னொரு ஓலை கொடுத்து, இலங்கையில் போர் புரியும் இளவரசர் அருண்மொழியிடம் சேர்க்கச் சொல்கிறார். வந்தியத்தேவனும் இலங்கையை நோக்கிப் பயணப்படுகிறான்.
மாமல்லபுரத்தில் ஆதித்ய கரிகாலரும், அவரின் தாத்தாவும், நண்பரும், ஊர் நிலவரத்தைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழுவேட்டரையரின் சதி எண்ணங்கள் அரசல் பரசலாக கரிகாலனுக்கும் தெரிகிறது. முதலில், தந்தையையும், தம்பியையும், தங்கையையும், தான் இருக்குமிடத்துக்கு வரவழைத்த பிறகுதான், அடுத்த கட்ட நடவடிக்கையை யோசிக்க வேண்டும்னு நெனைக்கறாரு.
முதல் பாகம் முற்றும்.
**** ~ ******** ~ ******** ~ ****
அருமையா போவுதுல்ல கதை? ஆனா, நான் சூப்பரா சொதப்பரேன்ல?
ஒரிஜினல் படிச்சீங்கன்னா, நந்தினியைப் பற்றியும், குந்தவை வந்தியத்தேவன் சந்திப்பு நிகழ்வுகளெல்லாம் அருமையா சொல்லியிருக்கரது புரியும். ஜிவ்வுனு இழுக்கும்.
நீங்க படிச்சிருக்கீங்களா இந்த நாவலை? (புதினம்னு எங்கையோ பாத்தேன். அப்படீன்னா?)
அடுத்த பாகம் இன்னும் படிக்க ஆரம்பிக்கலை.
கூடிய விரைவில்... ;)
புக் வாங்கினப்பரம் தான் தெரீது, ஆன்லைன்லயே இருக்குன்னு.
படிக்காதவங்க படிக்க ஆரம்பிச்சுடுங்க.
26 comments:
அடக் கொடுமையே, கூகிள் adsense சொதப்புதேன்.
//
Tamil Auntys
Find Tamil Auntys at Great Prices.
www.Pronto.com
//
:(
நீங்களே முதல் பின்னூட்டம் போடுவது செல்லாது ...
நல்ல புத்தகம்.
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும்.
முதலில், இந்த வேலையை ஆரம்பித்ததை வரவேற்க்கிறேன்..
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ....இங்கு
இரண்டு திருத்தங்களை செய்ய விளைகிறேன் .
ஒன்று, பழுவேட்டையார் வில்லன் என்பது,ஏனெனில் முதல் பாகத்திலே பழுவேட்டையார் பரம்பரை ,சோழ வள நாட்டின் பாதுகாவலர்கள் என்பது கதை ஆசிரியரின் (கல்கி) மூலம் புரிந்து விடும்..ஆகவே பழுவேட்டையர் வில்லன் போல உருவகப்படுத்தப்பட்டிருகிறார் என்பதே சரி..
இரண்டு, வானதி அருள்மொழிதேவரின் காதலி என்று குறிப்பிட்டு இருப்பது..வானதிக்குதான் அருள்மொழியின் மேல் ஒரு ஈர்ப்பு ..
சரி எப்போ இரண்டாம் பாகம் ??????
ராஜேஸ்வரி,
முதல் பாகத்தில் பழுவேட்டரையர் வில்லந்தாங்கர மாதீரி நிறைய விஷயம் நடக்குதே? மத்த பாகங்கள் படிச்சுட்டு தெளிவாய்க்கிறேன் ;)
வானதி பத்தி நீங்க சொன்னது சரி. எங்கேயும் அருள்மொழி, இவளின் மேல் ஒரு 'இது' இருப்பதாய்ச் சொல்லவில்லை.
கரச்சு குடிச்சிருக்கீங்க போலருக்கே ;)
இரண்டாம் பாகம், அநேகமா இன்னும் இரண்டு வாரத்தில் வரலாம் ;)
ஆங்கில புக்காயிருந்தா, ஆஃபீஸ்ல படிச்சிருக்கலாம். பெரிய டாக்குமெண்ட் படிக்கர மாதிரி, தமிழாப் போச்சே ;)
பொறுமையா ரசிச்சு படிங்க சர்வேசன்.. அதிலுள்ள வர்ணனைகள் தான் ரொம்பவும் நல்ல இருக்கும்..நான் மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்
இன்னா சார்,
இன் ய நட்ஷெல்னு போட்டிருக்கே. அட பொ.செ.வை நட்ஷெல்லுல அடக்கிட்டாரான்னு பாக்க வந்தேன். பாத்தா ஒரு பாகத்துக்கு ஒரு பதிவு? ஆனாலும் இதுக்கு மேல சுருக்குறதும் கஷ்டம்தான்.
முதல்ல படிக்கும் போது இப்படித்தான் எனக்கும் தோணிச்சுன்னு நெனைக்கிறேன்.
பொ.செ. முதல் பார்வையில்ன்னு தலைப்பு வைங்க.
சர்வேஸ்,
எங்கியோ இடிக்குது.
முதல் பாகம் படிச்சுட்டு-பெரும்பாலானவங்க அனுபவத்தில-பதிவு எழுதிக்கிட்டிருந்திங்கன்னா!
எனக்கெல்லாம் முதல்பாகம் படிச்சு முடிச்ச உடனே ரெண்டாம் பாகம் தேடத்தான் தோன்றியது.
அப்புறம் மூனாம் பாகம்,அப்புறம் நாலு அப்புறம் அஞ்சு..
முடிச்சுட்டுதான் அடங்குனேன் !
ஒரே நேரத்தில் முழுவதையும் படிக்கும் போது குழப்பவது போல் இருக்கும்... இனி அடுத்தடுத்த பாகங்களில் விறுவிறுப்பாகப் போகும்... :)
வாழ்த்துக்கள்!
நல்ல தமிழ் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. நான் தொடராக வந்தப்பபோ படிச்சது.
ஹிஸ்டரி ஆஃப் இந்தியான்னு ஒரு புக்கு 10th படிக்கும்போது இருந்துது.
புக் கிரிக்கெட் வெளையாட ரொம்ப உபயோகமான புக்கா இருந்துச்சு.//
ஹையோ... இப்பதாங்க ஞாபகம் வருது. அந்த புக் மட்டும் ஹிக்கின் பாதம்ஸ்ல வாங்க சொல்லீட்டாங்க ஸ்கூல்ல... அப்ப அதோட விலை 100.
சரி இப்ப உங்க பொ.சேவ படிச்சிட்டு வர்றேன். :)
நல்லாருக்குங்க... ஆன்லைன்ல pdf வடிவுலையும் இருக்கு. லிங்க் கொடுத்ததற்கு நன்றி. படிக்க ஆரம்பிக்கிறேன்.
புக் கிரிக்கெட்டயும் ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி.
:)
ஆஹா.. அருமையான கதை. முதல் பாகம் படிக்கும் போது, புதுப்புது கதாபாத்திரங்கள் நிறைய அறிமுகமாவதாலும், கதைக் களத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள அவகாசம் வேண்டும் என்பதாலும் கொஞ்சம் குழப்புவது போலத் தெரியலாம். தொடர்ந்து படிக்கவும். இறுதி வரைக்கும் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் செல்லும் புதினம்.
ராஜேஸ்வரி அவர்கள் சொன்னது போல, பெரிய பழுவேட்டரையர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வில்லன் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் போகப் போக உண்மை வேறாக இருக்கும்.
இன்னொரு சின்ன விசயம்.. சோழ அரண்மனை இருந்த ஊர் பெயர் பழையாறை. நீங்கள் பழவையாறு என்று எழுதியிருக்கிறீர்கள்.
தொடர்ந்து ஒவ்வொரு பாகம் படித்து முடித்ததும் கதைச் சுருக்கம் எழுதுங்கள். இதே போல சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவற்றையும் படியுங்கள். இரண்டுமே இணையத்தில் கிடைக்கின்றன.
சரித்திரத்தில் ஆர்வம் எதுவுமின்றி, வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டுமே இதை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் முடித்த பிறகு, சோழ சாம்ராஜ்யத்தின் மீது ஒரு காதலே வந்து விட்டது. நான் அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கத்தையே உண்டாக்கியது. முதல் முறை படிக்கும் போது, இரவு பகலாகப் படித்து அவசர அவசரமாக 5 பகுதிகளையும் முடித்தேன். பின்னர் மறுபடி ஆரம்பித்து நிதானமாக ரசித்து ரசித்துப் படித்தேன். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் என்று முறை வைத்து வாசிக்கிறேன்.
பொன்னியின் செல்வன் விவரிக்கும் காலகட்டத்துக்குப் பிறகு நடந்தவற்றை, முக்கியமாக தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய வரலாற்றை, பாலகுமாரனின் 'உடையார்' என்ற புதினம் அழகாக விவரிக்கிறது. விசா பதிப்பகத்தின் வெளியீடாக, 6 பகுதிகள் கொண்டது. வாய்ப்பிருந்தால் அதையும் வாசித்துப் பாருங்கள்.
பொன்னியின் செல்வன் மேல் (என்னைப் போல) பைத்தியமாகப் பலர் இருக்கிறார்கள். யாஹூ குழுமத்தில் இணைந்து பல கருத்துப் பரிமாற்றங்கள் நடத்துகிறார்கள். பொன்னியின் செல்வனில் வரும் இடங்களுக்கெல்லாம் சுற்றுலா சென்று வந்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் பற்றியும், இதே போன்ற பிற நூல்கள் பற்றியும், சரித்திர ஆராய்ச்சிகள் பற்றியும் பல தகவல்களை இங்கே பெறலாம்.
http://groups.yahoo.com/group/ponniyinselvan/
http://www.ponniyinselvan.in/
பொன்னியின் செல்வன் பற்றிய பதிவு என்பதால் உணர்ச்சி வசப்பட்டு, பின்னூட்டம் நீண்டு விட்டது. பொறுத்தருள்க.. :))
இளைய பல்லவன்,
//பொ.செ. முதல் பார்வையில்ன்னு தலைப்பு வைங்க.//
;) அப்படியெல்லாம் தலைப்பு வச்சா யாரும் வந்து எட்டிப் பாக்க மாட்டாங்கல்ல.
நானே கூட, தொடர் பதிவுகளுக்கு போரதீல்லை ;))
டெக்னிக்கு!
அறிவன்,
///எனக்கெல்லாம் முதல்பாகம் படிச்சு முடிச்ச உடனே ரெண்டாம் பாகம் தேடத்தான் தோன்றியது.
///
:) எப்ப படிச்சோங்கரத பொறுத்திருக்கலாம்.
அப்பெல்லாம் நீங்க பதிவுலகுல இருந்திருக்க மாட்டீங்க.
இப்பெல்லாம், சாப்பிடும்போது கூட, இதை எப்படி பதிவாக்கலாம்னுதானே தோணுது ;))
ஆ!இதழ்கள்,
///லிங்க் கொடுத்ததற்கு நன்றி. படிக்க ஆரம்பிக்கிறேன். ////
கண்டிப்பா படிங்க.
நம்ம நட்ஷெல்லையும் படிங்க ;)
ஆனா, மொதல்ல ஒரிஜினல் படிக்கரது உத்தமம்.
தமிழ் பிரியன்,
////இனி அடுத்தடுத்த பாகங்களில் விறுவிறுப்பாகப் போகும்... :)
////
கண்டிப்பா இருக்கும்னே தோணுது. நன்றி!
நிலாக்காலம்,
அட்டகாசமான பின்னூட்டம்.
உங்க குதூகலம் என்னையும் தொத்திக்கிச்சு. இரண்டாம் பாகம் இன்னிக்கு ஆரம்பிச்சுடுவேன்.
நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!
பொன்னியின் செல்வன் நான் முதன்முதல் படித்த நீண்ட நாவல்... கல்கியில் பத்மவாசன் ஓவியத்தில் கதையோடே செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.... அதை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..
போகப்போகப் பாருங்கள், பல அதிர்ச்சிகள் அப்புத்தகத்தில் காத்திருக்கும்.....
நீங்க கொஞ்சம் லேட்தான்!!!!!
//நீங்க கொஞ்சம் லேட்தான்!!!!!//
lateaa vandhaalum, latestaa 'in a nutshell' kondu vandhomla ;)
கவலைப் படாதீங்க. நான் உங்களை விட லேட்டு. எனக்கு சரித்திரக் கதைகள் என்றாலே அலர்ஜி. ஆனால் ‘பொ.செ’ படித்ததில்லையா? என பலரும் என்னைக் கேட்கையில் பெரிய தப்பு செய்த மாதிரி இருக்கும். ஆக சமீபத்தில் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். ஹிஹி. இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்கையில் இந்தப் பதிவுகள் நிச்சயம் எனக்கு உதவும். மற்றதையும் படித்து கைட் பண்ணுங்க. நானும் அதைப் படித்து பின் நாவலை முடித்து வழக்கம் போல தேடி வந்து பின்னூட்டறேன்:)!
ராமலக்ஷ்மி, நாவல் படிக்க வேண்டிய ஒண்ணுதான்.
இரண்டாம் பாகம் ஓடிக்கிட்டு இருக்கு.
கோடிக்கரை பீச் பாக்கணும்னு ஆவலைத் தூண்டிடிச்சு, இரண்டாம் பாகம் :)
நல்ல முயற்சி . தொடருங்கள். மற்ற புதினங்களை போல விமர்சனம் எழுதும் உங்களை பொன்னியின் செல்வனுக்கு கதையின் முடிவை வெளியிடும் வாய்ப்பு / அபாயம் இல்லை. ஏன் அப்படி ...முழுவதுமாக முடிக்கும் பொது புரியும்.
நன்றி
விஜய்
இரண்டாம் பாகம் இப்பதான் படிச்சு முடிச்சேன்.
நட்-ஷெல் விரைவில் ;)
part 2
http://surveysan.blogspot.com/2009/06/in-nutshell-2.html
Post a Comment