recent posts...

Monday, April 18, 2011

சீனு - சிறுகதை

தூங்கிக் கொண்டிருந்த சீனுவை முகத்தில் தட்டி எழுப்பினாள் ஜானகி. சீனுவுக்கு ஏழு வயது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். தூக்கம் முழுதும் கலையாது, அரை மயக்கத்தில் நடப்பது போல் நடந்து சென்றான்.

"சீக்கிரம், நேத்து மாதிரி லேட் பண்ணாம, மட மடன்னு கெளம்பு. ஸ்கூல் பஸ் போயிடுச்சுன்னா, நான் கொண்டு போய் விட முடியாது. எனக்கும் ஆபீஸுக்கு நேரமாவுது" - அலறினாள் ஜானகி அத்தை.

நேற்று ஜானகி, கோபத்தில் காதைத் திருகியது இன்னும் வலித்தது சீனுவுக்கு.

"அம்மாகிட்ட ஜானகி அத்தைய மாட்டி விடணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டே பள்ளிக்குக் கிளம்பினான் சீனு.

கசங்கிய சட்டை, பெரிய புத்தகப் பை, மதிய உணவுக்கு ஜானகி கட்டித் தந்த ப்ரெட், இவற்றுடன் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் சீனு.

பஸ்ஸில் சீனுவை அனைவரும் திரும்பிப் பார்த்து முணு முணுத்தார்கள். எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கும் பஸ் ட்ரைவர், இன்று, "பை குடுப்பா. இங்க வந்து ஒக்காரு" என்று வாஞ்சயாக சீனுவின் கைபிடித்து அமர்த்திவிட்டார்.

பக்கத்து இருக்கையில் இருந்த ஐந்தாம் வகுப்பு கோமதி, "இந்தா சாப்பிடு" என்று தன்னிடமிரூந்த சாக்லேட் ஒன்றை நீட்டினாள். சீனு, மனதுக்குள் சிரித்தப்படி சந்தோஷமாய் சாக்லெட்டை வாங்கித் தின்றான்.

போன வாரம்தான், சீனுவின் வெள்ளை சட்டையில் ink அடித்து அவனை அழ வைத்தாள் இந்த கோமதி. அம்மாவிடம் கோமதியை மாட்டி விட்டது ஞாபகம் வந்தது சீனுவுக்கு.

கோமதி நீட்டிய சாக்லெட் வாங்கும்போது "கோமதி, good girl. அம்மாகிட்ட சொல்லணும்" என்று மனதுக்குள் சிரித்தான் சீனு.

லலிதா மிஸ், ரொம்ப strict. எல்லோரையும் ஓரு மிருகத்தை படமாக வரைந்து, அந்த மிருகத்தைப் பற்றி ஒரு வாக்கியம் சொல்ல வேண்டும் என்றும் home-work கொடுத்திருந்தார்.

நாய் என்று தலைப்பிட்டு ஏதோ கிறுக்கிக் கொடுத்தான் சீனு. லலிதா மிஸ் சீனுவை பார்த்து, "குட். சீனு. நாய் பத்தி ஏதாவது சொல்லு" என்று சீனுவிடம் கேட்க்க, சீனுவும், "நாய் லொள்னு குரைக்கும். நாய் பூனையை துரத்தும்" என்று சொன்னான்.

லலிதா மிஸ்ஸும் "வெரி குட் சீனு. Children clap your hands for சீனு" என்று சொல்ல எல்லா குழந்தைகளும், கை தட்டியது. சீனுவுக்கு பெருமை தாங்கவில்லை.

லலிதா மிஸ் good சொன்னார்கள் என்ற விஷயம் டாடி கிட்ட இன்னிக்கு சொன்னா, ரொம்ப நாளா கேட்க்கும் சைக்கிள் கட்டாயம் வாங்கிக் கொடுத்திடுவாங்க என்று மனதுக்குள் நினைத்து சிரித்தான்.

மதியம், காஞ்ச ப்ரெட்டை, சாப்பிடாமல் தூக்கிப் போட்டான்.

பள்ளி முடிந்து, மீண்டும் ஸ்கூல் பஸ். கைபிடித்து ஏற்றி விட்ட ட்ரைவர், இன்னொரு சாக்லெட்டுடன் கோமதி, கல கலவென சிரித்தபடி மற்ற பிள்ளைகளுடன் சீனுவும், இன்று நடந்த பள்ளி நிகழ்ச்சிகளை அம்மாவிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று அசை போட்டபடி வந்தான்.

அவன் இறங்கும் இடம் வந்ததும் குதித்திறங்கி கோமதிக்கு டாடா காட்டினான் சீனு.

தன் இல்லம் நோக்கி ஓடினான். டுர்ர்ர்ர்ர்ர் என்று கார் ஓட்டியபடி வீட்டை அடைந்தான்.

வழக்கமாக கேட்டின் அருகில் நின்று வரவேற்க்கும் அம்மாவை அங்கு காணவில்லை. முகம் சுருங்கியது சீனுவுக்கு. பள்ளீயில் இருந்து வந்ததும் அம்மாவை ஓடிச்சென்று கட்டி அணைத்து அன்று ந்டந்ததெல்லாம் ஒப்பிக்க வேண்டும் சீனுவுக்கு. அம்மாவும் ஆசையாக எல்லா கதையும் கேட்டுக் கொண்டே அவனுக்கு உடை மாற்றி, உணவு ஊட்டுவாள்.

"எங்க போனாங்க இந்த அம்மா" என்று யோசித்தபடி "அம்மா அம்மா" என்று கேட்டுக்கு வெளியில் இருந்து கத்தினான்.

வழக்கத்துக்கு மாறாக கேட் பூட்டியிருந்தது. முற்றம் குப்பையாக இரூந்தது.

இவன் அலறுவதைக் கேட்டு பக்கத்து வீட்டில் வேலை செய்யும் ஜமுனா பாட்டி வந்தாள்.

"டேய் சீனு, இங்க என்னடா பண்ற. போ உங்க அத்த தேடப் போறாங்க. லேட்டா போய் அடிவாங்காத. இனிமே நீ அங்க தான் போகணும். உங்க அம்மாவும், அப்பாவும் சாமி கிட்ட போயிட்டாங்க. சீக்கிரம் அத்த வீட்டுக்கு போ" என்றாள் ஜமுனா பாட்டி.

சீனுவுக்கு அழூகை வந்தது. போன வாரம், அம்மாவும், அப்பாவும் கடைக்கு போய் விட்டு வரும்போது லாரி மோதிவிட்டதால், மாலை போட்டு இருவரையும் முற்றத்தில் படுக்க வைத்திரூந்தது சீனுவுக்கு நினைவுக்கு வந்தது. அம்மாவையும் அப்பாவையும், வெளியே எடுத்துப் போனதும், சீனுவை இவன் மாமாவும் ஜானகி அத்தையும் அவர்கள் வீட்டுக்குக் கூட்டீச் சென்றார்கள். அம்மா எங்க என்போதெல்லாம் நாளைக்கு வருவாங்க என்று சொல்லியிருந்தார் மாமா.

ஜமுனா பாட்டி இனி அம்மா வரமாட்டாங்க என்றதும், அழூகையாய் வந்தது சீனுவுக்கு.

அழூதுகொண்டே பக்கத்துத் தெருவில் இருக்கும் ஜானகி அத்தை வீட்டுக்கு ஓடினான்.

"அத்த அம்மா எப்ப வருவாங்க" என்று அழுது கொண்டே கேட்டான்.

"பெரிய ரோதனடா உன்கிட்ட. இனி வரமாட்டாங்க போ. சாமி கிட்ட போயிட்டாங்க. நீ போய் home work எழூதி முடிச்சுட்டு தொட்டியில இருக்கர செடிக்கு தண்ணி ஊத்து போடா" என்றாள் ஜானகி.

அழுது கொண்டே homework முடித்து, செடிக்கு தண்ணி ஊற்றி, உறங்கப் போனான் சீனு.

அழுத களைப்பில் உடனே உறங்கிப் போனான்.

விழியில் இருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

ps: totally inspired & lifted from Kewlian Sio's "Lets go home". ஒரிஜினல், ரொம்பவே அருமையான கதை. ஆறாம் வகுப்பில் படித்தது.
மீள்பதிவு: http://neyarviruppam.blogspot.com/2007/03/blog-post_12.html

4 comments:

Anonymous said...

கண்ணின் ஓரம் கசிவதை நிறுத்த முடியவில்லை. எதிர்பார்த்த + தெரிந்த முடிவு என்றாலும் அழகான எழுதி இருக்கிறீர்கள்.

நிற்க, போன வாரம் தான் திருப்பவும், உங்களோ பொண்ணு பார்த்த கதை படித்தேன். டாடி பாழும் கிணத்தில தள்ளிவிடுங்க டயலொக் தான் இப்ப ஒரு வாரமா எங்க வீட்டிலும் நடக்கிறது. ஐ மீன் எதற்கெடுத்தாலும் நண்பா என்னை பாழும் கிணத்தில தள்ளிவிடு என்று டிராமாத்தானமாக புறங்கையை நெற்றியில் வைத்து சொல்லுவது தான் இப்ப எங்கள் வீட்டில் /வகுப்பில் ட்ரென்ட். ஹி ஹி.

Porkodi (பொற்கொடி) said...

காஞ்ச ப்ரெட்னு படிச்ச உடனேயே முடிவு தெரிஞ்சுடுச்சுன்னாலும், தொடர்ந்து படிக்க வைத்தது, ஒன்றவும் வைத்தது. Felt bad for Seenu! :(

SurveySan said...

டாங்க்ஸு அனாமிகா. உங்களுக்கு ட்ரென்ட்டு எனக்கு பெண்டு தந்த பதிவாப்ப்போச்சு அது ;)

பொற்கொடி, ஒரிஜினல் கதை 'lets go home' படிச்சுப் பாருங்க. ரொம்ப அருமையா நச்சுனு முடியும். வருகைக்கு நன்னீ.

ராமலக்ஷ்மி said...

உருக்கம்.