நான் அடிக்கடி வாங்கர பங்கு, இந்த் மருந்து கொம்பேனிக்களின் பங்குகள்.
கான்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப் போறோம்னு பீதிய கெளப்பி விட்டுடுவாங்க. சர்ர்ர்னு மேலப் போக ஆரம்பிக்கும். ஆஹா, ஜாக்பாக்ட்தான்னு வாங்கி வைப்பேன்.
அடுத்த நாளே, எங்க மருந்துல அது சரியில்ல இது சரியில்லன்னு அரசாங்கம் சொல்லிடுச்சு, இன்னும் பத்து வருஷம் கழிச்சுதான் அதை சரிசெஞ்சு ரிலீஸ் செய்யமுடியும்னு சொல்லிடுவாங்க.
$100 இருக்கும் பங்கு $0.01 ஆயிடும்.
ஒரு புது டிவியோ காமெராவோ பாத்து பாத்து நெரைய துட்டு போட்டு வாங்கினா, ஒரே மாசத்துல, அந்த மாடலை ஸ்டாப் பண்ணிட்டோம்னு சொல்லிடுவாய்ங்க, நான் வாங்கிய விலையை விட பாதிக்கு வந்துடும்.
சமீபத்தில், சென்னைக்குப் போயிருந்த போது, கார் ஓட்ட முடியாதது பெரிய உபாதையைத் தந்தது. இங்க கியர் இல்லாத, ஆட்டோ-கியர் வண்டி ஓட்டி ஓட்டி, அங்கிருக்கும், கியர் வண்டி ஓட்ட முடியாமல் திணறல். இருக்கர ஒரு மாசத்துல, அத்த கத்துக்கிட்டு, அலப்பர பண்ண முடியாது என்ற யதார்த்த நிலை.
ஒரு நாள், எலெக்ட்ரிக் மீட்டர் செக் பண்ண ஒருத்தர் வந்தாரு. "தம்பி, காரை கொஞ்சம் பின்னாடி எடுத்து வைங்க, மீட்டர் பாக்கணும்"னாரு.
எங்க நைனாவுக்கும் ஓட்ட தெரியாது, எனக்கும் ஓட்டத் தெரியாது.
நம்ம தான் பெரிய NRIஆச்சே, ஓட்டத் தெரியாதுன்னு சொன்னா மானம் போயிருமே. ஜபுர்தஸ்தா சாவிய எடுத்து உள்ள ஒக்காந்து, ரிவர்ஸ்ல கியர போட்டேன்.
இந்த கெரகம் புடிச்ச டீலருங்க, கார் வாங்கினா, ஃப்ரீயா தர ஒரே விஷயம், ரிவர்ஸ் கியர் போட்டா வர, 'பாட்டு ட்யூன்'. முக்கால் வாசி கார், பீதோவனை வாசிக்கும். எங்க நைனா, தேசப்பற்று முத்திப் போனதால், 'வந்தே மாதரம்' போடச் சொல்லியிருந்தாரு. ரிவர்ஸ் கியர் போட்டதும், 'டொ ட டாண் டாண் ட டாண்'ணு வந்தே மாதரம் கத்த ஆரம்பிச்சுடுச்சு.
க்ளெட்ச்ல இருந்து மெதுவா கால் எடுத்ததும், டபக்னு வண்டி நின்னுடுச்சு.
திரும்ப ஸ்டார்ட் பண்ணினா, கியர்ல இருக்கர வண்டி ஒரு அதிரு அதிர்ந்து ஸ்டாப் ஆயிடுச்சு.
அப்பாலிக்கா, நியூட்ரல் போட்டு, ஸ்டார்ட் பண்ணி, ரிவர்ஸ் கியர் போட்டு, கெளெட்ச்சை எடுத்தா, வந்தே மாதரம் பாட ஆரம்பிச்சு, திரும்ப ஆஃப் ஆயிடுச்சு.
ஒரு பத்து தபா குலுங்கி குலுங்கி வண்டி ஆஃப் ஆயிடுச்சு. ஒரு இன்ச் கூட பின்னாடி நகரலை.
மீட்டர் பாக்க வந்தவரு, ஒரு ஏளணமான லுக்கு விட்டாரு. தெருவுல, ரெண்டு மூணு பேரு வேர கூடிட்டாங்க. எதிர் வீட்டு பொடிப் பய, "அண்ணா நான் எடுக்கட்டுமா'ங்கரான்.
நைனா, எப்பவுமே "மவனே, உன்னால் முடியும்"டான்னு சொல்லி ஊக்குவிச்சதே இல்லை. பத்து தபா ஆஃப் ஆக விட்டதே பெருசு. சாதாரண நாட்களில், ரெண்டு தபா ஆஃப் ஆனதும், என்னை எறங்க சொல்லியிருப்பாரு. இன்னிக்கு, மீட்டர் காரன் முன்னால், மானம் போவ வேணாம்னு அவரும் விட்டுப் பிடிச்சாரு போல.
பத்து தபா ஆனதும், நைனாக்கு பொறுக்கலை. ட்ராஃபிக் கான்ஸ்டபில் மாதிரி பின்னாடி நின்னு ரெண்டு கையையும் விரிச்சு என்னை நிறுத்த சொல்லிட்டாரு.
"மவனே, நியூட்ரல்ல போடு,நான் தள்ளறேன்"ன்னுட்டாரு.
'நானும் தள்ளறேன் சார்'னு மீட்டர் காரனும், 'நானும்'னு எதிர் வீட்டு பொடியும், வர, துகிலுரியப்பட்ட திரௌபதி கணக்கா, மானம் காற்றில் பறக்க, ந்யூட்ரலில் போட்டு, வந்தே மாதரம் கேட்டு, ஸ்லோ மோஷனில் காரை பின்னால் கொண்டு போய் நிறுத்தினோம்.
விவரிக்க முடியா அவமானம். கார் நின்னதும், சாவியை ஏளனமாய் பார்த்த நைனா கிட்ட கொடுத்துட்டு, 'மம்மி'ன்னு அலறிக்கிட்டே மாடிக்கு ஓடிட்டேன்.
ச, ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், கியர் மாத்தி கார் ஓட்ட முடியலன்னா என்ன ப்ரயோஜனம்? அப்ப முடிவு பண்ணேன், அடுத்த் வருஷம் சென்னைக்குப் போறதுக்குள்ள, ஆறு கியர் இருக்கர மாதிரி ஒரு காரை வாங்கி, 1-2-3-4-5-1-ரிவர்ஸ்னு மாத்தி மாத்தி ஓட்டி, நைனாவை திகிலடையச் செய்யணும்னு.
நெக்குலாய் பார்த்த மீட்டர் காரன் மேல், சர்ர்ர்ர்னு ஓட்டி தண்ணியை வாரி இறைக்கணும்னும் ஒரு குட்டி சபதம்.
இந்த சபதத்தை தீர்க்க, சமீபத்தில், ஒரு பழைய கியர் வண்டியை, மலிவு விலையில் வாங்கவும் வாங்கியாச்சு.
இது கத்துக்க ஒரு வண்டிய வாங்கணுமா, இல்ல வாடகைக்கு பிடிச்சா போதுமான்னு யோசிச்சேன். வாங்கி விக்கரதும், வாடகைக்கு செலவு பண்றதும் ஒண்ணுதான்னு பட்சி சொல்லிச்சு.
ஆனா பாருங்க, நான் வாங்கின நேரம், டொயோட்டா கொம்பேனி காரன், பலப் பலப் பிரச்சனைய லைனா சொல்லிக்கிட்டே இருக்கான்.
இந்த ரேஞ்சுல போனா, நான் வாங்குன காரை விக்கரச்ச, சந்தைல ஒரு பயலும், டயோட்டா வாங்க மாட்டான் போலருக்கே...
ஆனா, வண்டி நல்லாத்தேன் ஓடுது. ரெண்டு முணு நாள், அங்கங்க சிக்னல்ல நின்னுடும். திகிலாயிடும். ஆனா, சட்டுனு, ஆன் பண்ணி எஸ்கேப் ஆகிடுவேன். நம்ம ஊரு மாதிரி, "சாவு கிராக்கி நடூ ரோட்ல நிக்கறான் பாரு'ன்னு காது பட திட்ட மாட்டாங்க்ய. மிஞ்சி மிஞ்சி போனா, ஹாரன் அடிச்சு இவிக 'திட்டுவாங்க', நான் காதுல வாங்கிக்கரதுல்லை.
சமீபத்த்தி, ஆஃப் ஆகரதும் கொரஞ்சுடுச்சு, சர்ர்ர்னு ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்.
அடுத்த சென்னை ட்ரிப்பில், எடுத்த சபதம் முடிப்பேன்.
பி.கு: யப்பாடி, ஒரு கார் ஃபோட்டோ போட, எம்மாம் பெரிய பதிவு எழுத வேண்டியதாயிடுச்சு ;)
கீழ, நம்ம வண்டி. புச்சு, ஆனா பழசு.
