
படத்தைப் பற்றிய பகிர்தலுக்கு முன், படம் பார்த்த விதத்தை முதலில் பகிர்கிறேன். மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் பார்த்ததும் மெத்தப் பிடித்திருந்தது. குறிப்பாக அஞ்சாதே ரொம்பவே அருமையாய் இருந்தது. இருந்தாலும், நந்தலாலா வந்ததும், தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.
திறமையான இயக்குனர்கள், ஹீரோக்கள் ஆகும் துரதிர்ஷ்ட நிலை மிஷ்கினாலும் தொடரப்படுவது பிடிக்கவில்லை. அதைத் தவிர, ராசாவின் சமீபத்திய பின்னணி இசை பெரிதும் கவராத நிலையில் இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு.
ஒரு சில வாரத்தில், டிவிடி வந்ததும் பாத்துக்கலாம்னு விட்டிருந்தேன்.
ஆனா, தொடர்ந்து வந்த பாஆஆஆஆஆசிட்டிவ் விமர்சனங்கள், உசுப்பேத்தி விட்டன. சரின்னு, ஞாயிறு மதியம் கெளம்பி மத்தியான ஆட்டம் பாக்க இன்னொரு நண்பருடன் புறப்பட்டுப் போனோம்.
இங்கே San Jose என்ற நகரில், அம்பானியின் திரையரங்கமான Big Cinemasல் திரையிட்டிருந்தார்கள். தலா $10 கொடுத்து, நாலு பேருக்கு டிக்கெட் வாங்கி, தியேட்டருக்கு உள்ளே போனா, வேற யாருமே இல்லை. நாங்க நாலே பேருதான். ட்ரெயிலர் எல்லாம் முடிஞ்சு பேர் போடும்போது இன்னும் நாலு பேரு வந்து சேந்தாங்க.
பெரிய ஹீரோ இல்லாததால், இந்த நிலை போலருக்குன்னு சாந்தப்படுத்திக்கிட்டு, படம் பாக்க ஒக்கோந்தோம்.
அன்னிக்கின்னு பாத்து, தியேட்டரில் ஹீட்டர் வேலை செய்யலை. சமீப தினங்களில், குளிர் பின்னி எடுக்குது. என்னதான் சுவெட்டர் எல்லாம் போட்டிருந்தாலும் தியேட்டருக்குள்ள குளிர் நடுக்கித் தள்ளியது. அம்பானி ஆளுங்களும், இருக்கும் எட்டு பேருக்கு குட்டி குட்டி பர்சனல் ஹீட்டர் ஃபேன் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்னாங்க. அதுவும், சில நேரத்தில் வேலை செய்யலை. போய் என்னய்யா கொடுமை இதுன்னு கேட்டா, சாரி மெக்கானிக் வரலை, அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க, தியேட்டரில் இருக்கும் மொத்த கும்பலுக்கும் (எட்டு பேரு) இலவசமா சூடான டீ/காபி தரோம்னு அல்வா கொடுத்தாங்க.
நடுங்கும் குளிரில் விரைத்தபடி படம் பார்க்கத் துவங்கினோம்.
தெளிந்த நீரோட்டம், அகலமான வெள்ளித் திரையில், மெதுவாய் ஓடும் காட்சி. அதற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் படத்தின் பெயரும், மற்ற பெருந்தகைகள் பெயரும் (இளையராஜா, Cinematographer Mahesh, அழகியல்(?Art direction?) Trotsky, மிஷ்கின்) போட்டார்கள்.
முதல் காட்சியில், பள்ளியின் வாசலில் இருக்கும் அகி(அகிலேஷ்) என்ற சிறுவன் நிற்கும் காட்சி. சில விநாடிகள் அவனை க்ளோஸ்-அப்பில் காட்டும் போது, இசை இல்லாத அமைதி. என்னடா ராசாவை காணுமேன்னு யோசிக்கரதுக்குள்ள, ராஜா அள்ளி வீசராறு இசைப் ப்ரவாகத்தை.
இருக்கையில் அப்படியே ஒய்யாரமா ஒக்காந்து, எதிர் சீட்டில் கால் போட்டு, இளையராஜாவின் இசை மழையில், மிச்சம் 2 1/2 மணி நேரமும் மிகவும் இனிமையாக அமைந்தது.
ஒவ்வொரு சீனுக்கும், வித விதமான இசை அமைப்பு. ஒரு பெரிய concertக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல்.
படத்தின் கருன்னு பாத்தா, சிம்ப்பிள்தான். சிறுவன் அகி தன்னை சிறு வயதில் பாட்டியிடம் தனியாய் விட்டுவிட்டுப் போன தன் தாயை, அவள் இருக்கும் ஊருக்கு தேடிச் சென்று பார்க்க ஆசைப் படுகிறான். பல வருடங்களாகக் காணாத தாயை, பார்த்து கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணம்.
இன்னொரு பக்கம், பாஸ்கி (மிஷ்கின்). இவர் மனநலம் இல்லாதவர். இவர் மன நலக் காப்பகத்திலிருந்து தப்பி ஓடி விடுகிறார். இவருக்கும், சிறு வயதில் தன்னை மனநலக் காப்பகத்தில் விட்டு விட்டு அதற்குப் பின் தன் பக்கமே திரும்பிப் பார்க்காத தாயை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம். இப்படி அநாதையாய் விட்டு விட்டாயே என்று அவள் கன்னத்தில் அறைய வேண்டும் என்றும் எண்ணம்.
அகியும், பாஸ்கியும் சந்தித்துக் கொண்டு, இருவரும் சேர்ந்தே பயணப்படுகிறார்கள், தாயைத் தேடி. இவர்கள் வழி நெடுகும், சந்திக்கும் மற்ற மனிதர்களும், அனுபவங்களும் தான் படம்.
இந்தப் பயணத்தில், சில நல்ல மனிதர்களும், அவர்களால் நடக்கும் நெகிழ்வான தருணங்களுக்கும், ராஜாவிடம் இருந்து வரும் இசை, மயிலிறகால் வருடும் ஒரு சுகம்.
முதல் பாதி, மிக மெதுவாக நகரும் திரைக் கதை. அகியும் பாஸ்கியும், பயணித்துக் கொண்டே, ஒவ்வொரு இடமாக நகர்வது, கொஞ்சம் அயற்சியையே தந்தாலும், Maheshன் காட்சியமைப்பு, இரண்டு கண்களையும் அகலத் திறந்து, ஆவென்று ஒவ்வொரு ஃப்ரேமையும் உச்சு கொட்டி ரசித்து ரசித்து பார்க்கவைக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த மாதிரி சாலைகளும், பசுமை நிறந்த வெளிகளும், இருப்பதை, இதுவரை வேறு படத்தில் பார்த்ததாய் நினைவில் இல்லை. சாலையெல்லாம், புத்தம் புதிதாய் பளிச்னு இருக்க, அதன் இருபுறமும் பசுமை விரிந்து கிடக்க, மொத்த திரையில் ஒரு இன்ச்சையும் வீணாக்காமல் அதை அப்படியே படம் பிடித்து நம் கண் முன் விரித்திருக்க, அதற்கு ராஜா குழைந்து குழைந்து பின்னணி இசை சேர்க்க, ரொம்ப அருமையாக நகர்ந்தது நிமிடங்கள்.
தியேட்டருக்கு வந்திருந்த எட்டு பேரில், நாலு பேரு (தங்க்ஸ்) ஒரே மொனகல். அவங்களுக்கு இப்படி மெதுவாய் கவித்துவமாய் நகரும் படம் பிடிக்காத போலருக்கு.
மிஷ்கினின் நடிப்பு நன்றாகவே இருந்தது. எல்லாரையும் மிரட்டும் தொனியில் பேசுவதும், பின்னர் இவரை அடிக்கும்போது பம்முவதும், கிளாஸிக் நடிப்பு. குறிப்பாய், அகி தன்னை mental என்று அழைத்ததும், வரும் கோபமும், அவனை அடிக்க ஓடி, அடிக்க முடியாமல் தவித்து நிற்கும் காட்சி கண்ணில் நிற்கிறது.
சிறுவனின் நடிப்பும் பிரமாதம். அங்கிள், மாமா என்று எல்லாரையும் அழைத்து, அவன் கொடுக்கும் டயலாக் டெலிவரி ரசிக்கும்படி இருந்தது.
பயணத்தில் இடம் பெறும் மனிதர்களில், சபலத் தாத்தாவும், ஊனமுள்ளவர் ஒருவரும், புல்லட்டில் வரும் மொட்டையும் அவர் மகனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும், லாரி ட்ரைவரும், பாலியல் தொழிலாளியும், அவரவர் வேலைகளைக் கச்சிதமா செஞ்சிருக்காங்க. நாசர் எதுக்கு ஒரு குட்டி சீனுக்குன்னு புரியல்ல.
படத்தில் நெருடல்னு பார்த்தா ஒரு சில இடங்கள்தான் தோணுது.
ட்ராக்டர் ஓட்டி வரும் பள்ளி மாணவியின் காட்சி;
மிஷ்கினின் தாய் ரோகிணியின் ஆரம்ப மேக்கப் ஒரு ஆணைப் போல் காட்டியது அவரை;
அழகியல்(Art Direction)Trotsky கிராமத்தில் எல்லா கட்டிடத்துக்கும் வெள்ளை வெளேர்னு புதுச் சுண்ணாம்பு அடித்து வைத்திருந்தது;
என்னதான் ராசா இசை அமுதை திகட்டத் திகட்ட தந்திருந்தாலும், இந்த மாதிரி படங்களுக்கு பலமே, மௌனமான காட்சியமைப்புத் தான். அது பல இடங்களில் மிஸ்ஸிங். படம் முழுக்க எதையாவது (அருமையா) வாசிக்குக்கிட்டே இருக்காரு ராஜா; அந்த வாசிப்பு இல்லைன்னா, முழுப் படத்தையும் தூங்காம பாத்திருப்பேனான்னு கேட்டா, விடை தெரியல்ல.
அருமையான பாடல்கள், யேசுதாஸ், ராஜா பாடியிருந்தாலும், அதை படத்தில் சேர்த்தது;
கடைசியாய், Wikiயிலும் மற்ற ஏனைய இடங்களிலும், ஏற்கனவே கிழித்துத் தொயச்சு காயப் போட்ட விஷயம். இது, 1999ல் வெளி வந்த Kikujiro என்ற ஜப்பானிய மொழிப் படத்தின் அச்சு அசல் காப்பி என்பது.
இந்த மாதிரி ஒரு output தமிழ் திரைப்படத்துக்கு கிட்டும்னா, யாரு என்ன காப்பி அடிச்சாலும், சாலச் சிறந்ததே. ஆனா, டைட்டில் கார்டில் (inspired by Kikujiroன்ன்) போடுவது இயக்குனர்களின் தார்மீகக் கடமையாகும். அப்படிச் செய்யாமல், தன் சொந்தச் சரக்கு சூப்பர் சரக்கு என்ற நிலையில் தன் அதீத புத்திசாலித்தனத்தை காட்டுவதுதான் சகிக்கவில்லை.
யாருக்கும் தெரியாது என்ற எண்ணமா இவங்களுக்கு எல்லாம்? இந்த நிலை மாறணும். ஆனா, மிஷ்கினை கேள்வி கேக்கவும் ஒரு தகுதி வேணும். இணையத்தில் ஓசியில் Mp3க்களை உருவி எடுக்கும் எவருக்கும், இந்த கேள்வி கேட்கும் தகுதி இல்லை.
(kikujiro டிவிடி நாளைக்கு கையில் கிட்டும், பாத்துட்டு, இன்னொரு விமர்சனமும் வரலாம் ;)
மொத்தத்தில், 2 1/2 மணி நேரம் ஒய்யாரமாய், கண்ணுக்கும், காதுக்கும், மனதுக்கும் ஒத்தடம் கொடுக்கணும்னா, கண்டிப்பா நந்தலாலா பாக்கலாம். பாருங்க.