Friday, June 13, 2014

பொன்னியின் செல்வன் - சென்னையில்


பொன்னியின் செல்வன், தமிழ் கூறும் நல்லுலகில் அநேகம் பெருக்கும் மிகவும் பரிச்சயமான கதை.  சென்னை Music Academyல் அதன் நாடகமாக்கம் காணும் வாய்ப்பு இன்றமைந்தது.
இதன் விளம்பரத்தை பார்த்த அன்றே டிக்கெட் எடுத்தாயிற்று.

பரபரப்பு நிறைந்த பொன்னியின் செல்வன் கதையை சுதப்புவது கடினம். சும்மா நாவலில் வரும் வசனத்தை யாராவது சுமாரான நடிகர்கள் பேசினாலே, நாள் முழுக்க கேட்டு  பரவசிக்கலாம்.

ஐந்து பாகங்களில் வளைந்து நெளிந்து செல்லும் பெரிய கதையை எப்படி 3 1/2 மணி நேரத்தில் எடுப்பாங்க  என்ற யோசனை டிக்கெட் புக் செய்த அடுத்த நிமிடத்தில் இருந்தே மனதில் ஓடத்துவங்கி இருந்தது.

ஆறுமணிக்கு காட்சி. ஐந்து மணிக்கே ஆஜர் ஆயிட்டேன்.
அரங்கத்தில் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் ஒரு கோட்டையின் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பின்னால் ப்ரோஜெக்டரின் உதவியில் ஒரு வானமும் தெரிந்தது.

இசைக் குழுவினர் ஐந்து பேர், ட்ரம்ஸ், பியானோ, ப்லூட்  சகிதம் அமர்திருந்தனர். ஆறு மணிக்கு சரியாக துவங்கினார்கள். கிட்டத்தட்ட ஆறு மாத கால உழைப்பாம்.

பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பெரியவரும் ஒரு பெண்ணும் சண்டை போடுவது கேட்டுது.
"இவனுங்களுக்கு இதுவே எப்பவும் வேலையாப் போச்சு. போன தடவையும் இப்படித்தான் பண்ணாங்க. இப்பவும் இததான் செய்யறாங்க. இப்படியே விடக் கூடாது. கூப்பிடுங்க அவனை", அது இதுன்னு கூசல் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
இவ்ளோ பெரிய சபையில என்னடா இப்படி லோக்கலா சண்டை போடறான்னு பாத்தா, நாடக குழுவை சேர்ந்தவர்கள் தான் அது. சும்மா தமாஷுக்கு அனைவரின் கவனத்தை ஈர்க்க இப்படி ஒரு புதுமையான ஏற்பாடு. அவர்கள் மேடை ஏறி அறிமுகப் படுத்தியதும் இனிதே துவங்கியது.

மெல்லிய பாடலுடன் ஆடலும் சேர்ந்து சோழர் கால தெருக்களுக்கு நம்மை மெல்ல இட்டுச் செல்கிறார்கள். ஆழ்வார்கடியான், வந்தியத் தேவன், பழுவேட்டரையர், சுந்தரர், குந்தவை, நந்தினி, மதுராந்தகன் என நமக்கு மிகப் பரிச்சயமான பாத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராக வரும்போது அரங்கத்தினருக்குள் எழும் மகிழ்ச்சி அவர்களின் ஆரவாரத்தில் தெரிந்தது.

கல்கியின் உருவாக்கம் எப்படி இருந்ததோ அதை ரத்தமும் சதையுமாக பார்க்கும்போது, அனைத்து நடிகர்களும் மிக மிக சரியான தேர்வாகவே கண்ணுக்குத் தெரிந்தார்கள். [ நந்தினி தவிர :) ]

வந்தியத்தேவனை வடித்தவர் அபாரம். ஹாஸ்யமும், வேகமும், வீரமும் , ஒருசேர துல்லியமான நடிப்பு.
பழுவேட்டரையர், வெள்ளைத் தாடியுடன், மிரட்டலான நடிப்பை தந்து வெகுவாய் கவர்ந்தார்.

நடிப்பில் யாரையுமே குறை கூற முடியாத அளவுக்கு தரமான நடிப்பு.

வசனங்கள்    , ராஜா காலத்து தூயத் தமிழும் இல்லாமல், லோக்கல் பாஷையாகவும் இல்லாமல், செவிக்கு இனிமையான நல்ல தமிழாய் இருந்தது.

மைக் எல்லாம் உடலில் பொருத்தாமல் இருந்தது நல்ல முடிவு. செயற்கைத் தனம் இல்லாமல் அவர்களின் குரல் அரங்கத்தில் இருந்த குட்டி குட்டி மைக் மூலம் துல்லியமாய் கேட்டது.

அருண்மொழி தேவர், பாத்திரத்தில் ஸ்ரீராம் என்ற நடிகர். நிஜமான இளவரசன் போல் பள பள என ஒரு ராஜ லுக்குடன் இருந்தார். இயற்கையான நடிப்பு.  அருமையான ஆளுமை.

நந்தினி மட்டுமே கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருந்தார். நடிப்பில் குறை வைக்கவில்லை. கல்கியின் வர்ணனையில் படித்து பலவிதமாய் மனதளவில் பதிந்தவர்,  'நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை' போல் ஒரு கர்வம் கலந்த அழகு நடிகை இல்லாதது வருத்தமாய் இருந்தது.

அனைவரயும் தூக்கி போட்டு சாப்பிட்டுவிட்டார் கரிகலராய்   நடித்த பசுபதி. என்ன நடை, என்ன மிடுக்கு, டயலாக் டெலிவரி என்று நிஜ  சோழன் இப்படித்தான் இறுமாப்பாய் இருந்திருப்பார் என்று தோன்ற வைத்தது.

நாடகத்துடன் ஒன்ற வைத்ததில் இசை பெரிய பங்கு வகித்தது. தலைவலிக்காத மிரட்சியான இசை.
அரங்க வடிவமைப்பும் அழகு. யானை, லிங்கம், படகு, மலை என பல விஷயங்களையும் ரசிக்கும்படி செய்திருந்தார்கள்.

இடை இடையே  வரும் நகைச்சுவையும் , காட்சிகளுக்கு நடுவே நிறம் வீணடிக்காமல் , சடார் சடார் என்று மாற்றிய லாவகமும்,  4 மணி நேரம் போனதே தெரியாமல்,  ரொம்பவே ரசிக்க வைத்தது.

நாடகத்தை அரங்கேற்றிய  SS International, Magic Lantern, Kumaravel, Praveen, and for others, பெரிய நன்றிகள்.

இம்மாதிரி நாடகங்கள் மேலும் பல பல பல அரங்கேறட்டும்.

பி.கு: வெளியில் டிக்கெட்டுடன் நின்று கொண்டிருக்கும்போது  ஒருவர் அருகில் வந்து " சார் எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்தா கொடுங்க. VIP ஒருத்தருக்கு . எவ்ளோ காசு வேணா தருவாரு" என்றார்.  அடடா நிறய டிக்கெட்ட் வாங்கி வச்சிருந்தா கல்லா கட்டியிருந்திருக்கலாம் ;)

 Hats Off #PonniyinSelvan team!

My previous blog - Ponniyin Selvan in a nutshell