recent posts...

Saturday, March 23, 2013

பரதேசி


அப்படியும் சொல்ல முடியாமல், இப்படியும் சொல்ல முடியாமல், நன்றாய் முடிக்கப்பட்ட படம்.

பிதாமககனுக்குப் பிறகு, நம் பொறுமையை மெல்லமாய் சோதிக்க ஆரம்பித்திருந்தார் பாலா.
பரதேசியின் போஸ்டர், ட்ரெயிலர் எல்லாம் பார்த்ததும், விஷுவலாய் கண்டிப்பாய் நன்றாயிருக்கும், என்ற தோன்றலால், தியேட்டருக்கு படையெடுத்திருந்தேன்.

பரதேசிகளாகிய நம்மின் பாட்டன் முப்பாட்டனின் கதை. ஏழை பாழைகளை, கங்காணிகள், வேலை வாங்கித் தாரேன்னு அசலூருக்கு கூட்டிக் கொண்டு போய், கொத்தடிமைகளாக்கிய கதை. தேயிலை தோட்டங்களில், ஆங்கிலத் தொரைகளின் அடிமைகளாக வேலை செய்ய, கூட்டம் கூட்டமாய், கிராமத்து மக்கள், கொத்து கொத்தாய் தங்கள் வாழ்க்கையை இழந்த சோகம்.
அதிலொருவன், நம் ஹீரோ. ஒட்டுப் பொறுக்கி.  அதர்வா (முரளியின் மகன்). நல்ல உழைப்பை கொட்டி, பிசிராமல் நடித்திருக்கிறார்.
தண்டோரா போடுவது தொழில். அதைத் தவிர உப தொழில் கவுரவப் பிச்சை. கிண்டலும் கேலியுமாய் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று எகத்தாளத்துடன், 'இன்னுமா உலை வெக்கல'ன்னு கேட்டுக்கிட்டே, ஒவ்வொரு வீட்டிலும் கிட்டும் கைப்பிடி அரிசியை வாங்கிச் செல்லும் இடம் அழகாய் இருந்தது.
கிட்டத்தட்ட ப்ளாக்&வயிட் டோனில், மொத்த படமும்.


அழுக்குச் சட்டையும், குடிசைகளும், கருத்த தோலும், பாட்டிகளின் ரசனையான பேச்சும், நம்மை அந்த காலத்துக்கு மெல்ல இட்டுச் செல்வது போன்ற படமாக்கம்.
காதலி இல்லாமல் எப்படி? பயல் என்னதான் அப்பாவியானாலும், வழக்கமான டூயட் எல்லாம் பாடி, திருமணத்துக்கு முன் கசமுசா செய்து, சந்தோஷமாய் பொழுதைக் கழிக்கிறார்கள் கிராமத்தில்.
காதலியாய் நடித்தவர், கொஞ்சம் ஓவர்-டோஸ் ஆக்டிங்க் செய்தது போல் சில இடங்களில் தோன்றினாலும், அதர்வாவின் நடிப்பு, பேலன்ஸ் செய்து விடுகிறது.

அனைவரும் சந்தோஷமாய், பணியாரமும், வயிரு முட்ட சோறும், மூன்று நாலு பெண்டாட்டிகளும் வைத்து சுகவாழ்க்கை வாழும் கிராமத்து மக்கள், பஞ்சம் பொழைக்க, 46 நாட்கள் நடந்து ஏதோ ஒரு தேயிலை  தோட்டத்துக்கு வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் தான் புலப்படலை.
அதற்கான காட்சிகள் மனதில் பதிக்காததால், "செந்நீர் தானா.." பாடல் பெரிதாய் ஒரு பாதிப்பையும் நம்மில் ஏற்படுத்தலை.

முதல் பாதி, பெரிதாய் வசீகரக்கவும் இல்லாமல், சங்கடப் படவும் வைக்காமல், இனிதே நடந்து முடிகிறது.

இடைவேளை போடும் காட்சியில், கீழே செத்து வீழ்ந்தவனின் கை திரையில் பெரிதாய் காட்டப்படும். பிரமிப்பூட்டிய  நொடிகள் அவை. ஆனால், அதற்கு முந்தைய காட்சிகளில் வலு இல்லாததால், இந்தக் காட்சி ஏற்படுத்த வேண்டிய வீரியம், மனதில் பாயாமல் சொத்தையாய் வீணாய்ப் போனது மிகப் பெரிய சோகம்.

இரண்டாம் பாகம், கொத்தடிமைகளாய், தேயிலைத் தோட்டத்தில் தேய்ந்து போகும் காட்சிகள், முழுக்கக் கொண்டது. ஒவ்வொரு வருடமும், கணக்கு சரிபார்த்து, உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய  கூலியை விட, அவர்களுக்கான மருந்து செலவும், வீட்டுச் செலவும்,அதிகமாய் இருப்பதால், இன்னும் மூணு வருஷம் வேலை செய்ய வேண்டும் என்று, அடிமைத் தளை அகற்றப்படாமல் தொடர்கதையாய் போகிறது.
சங்கு ஊதியதும், அடிமைகள் எழுந்து தேயிலைத் தோட்டத்துக்கு வருவதும், வேலை செய்வதும், அடி வாங்குவதும், இரவு வருவதும், மூன்று நான்கு முறை காட்டியதால், பிற்பாதியில் வெரைட்டி ரொம்பவே குறைவாய் இருந்தது.

அடிமைகள் வேதனைப் படுகிறார்கள் என்பதை பதிக்க, பெரியதாய் காட்சிகள் இல்லை. காலில் அட்டைப் பூச்சி கடிப்பதும், மரத்தை கோடாளி கொண்டு வெட்டுவதும், நம்மை பெரிதாய் பாதிக்கவில்லை.
இலைகளைப் பறித்து பறித்து, விரல்களில் வலி ஏற்படும், கையில் நடுக்கம் வரும், அப்படி இப்படின்னு நடுங்கும் விரல்களை க்ளோஸ்-அப்பியிருந்தால்,  நமக்கும் வலித்திருக்கும்.


ஏற்றத்தாழ்வு பெரிதாய் இல்லாத நேரத்தில், ஒரு பாதிரியார்/வைத்தியர் வந்து, சூப்பர் குத்துப் பாட்டில், "how மதமாற்றம் works?" என்பதை நசிக்கும்படியாய் ருசிகரமாய் செய்து காண்பிக்கிறார்.

இரண்டாம் ஹீரோயின் அழகு. மகளை இடுப்பில் கட்டிக் கொண்டு, தேயிலை பறிக்கும் காட்சிகளாகட்டும், விட்டுப் போன கணவனை நினத்து கோபப்படும் காட்சிகளாகட்டும், அதர்வாவை அதட்டும் காட்சிகளாகட்டும், அமக்களமாய் நடித்திருக்கிறார்.

வெள்ளைக்காரத் தொரைகள் பெரிய சொதப்பல். ஓவர் ஆக்டிங் செய்திருப்பது போல் இருந்தது. குறிப்பாய், ஆபீஸரின் மனைவிகள்.

கங்காணியாய் நடித்திருப்பவர், அவ்வப்போது, தொரையிடம் அடிவாங்குவதால், இவரின் மேல் பயமோ வெறுப்போ நமக்கு வரவில்லை.

பாடல்களும், பின்னணியும் நன்றாய் இருந்தது. எந்தப் பாடலும் காட்சிக்கு ஒட்டலை, 'ஓர் மிருகம்' பாடலைத் தவிர.

எதை எதிர்பார்த்து, திரையரங்கத்துக்குப் போனேனோ, அது ஏமாற்றவில்லை. ஒளிப்பதிவு அமக்களம். டாப் ஏங்கிளில் தேயிலைத் தோட்டத்தை காட்டும் காட்சி ஆஹா. பச்சைமலை பச்சையாய் இல்லாமல், கொஞ்சம் டல்லா ப்ளாக்&வயிட் மாதிரி தெரிந்தது சங்கடமே. ஆனால், படத்துக்கு அப்படிப்பட்ட டோன் தேவயாய்த் தான் இருந்தது.

பாலா, டைரக்டராய் எங்கும் மிளிர்ந்ததாய் தெரியவில்லை. சற்றே அலுப்பூட்டக் கூடிய காட்சி நகர்வுகள் அதிகமாய்.
ஆனால், அவரின் உழைப்பும், மொத்த டீமின் உழைப்பும்  நன்றாய் தெரிந்தது.
'நச்' என்ற கிளைமாக்ஸில், பாலா நிமிர்ந்து நிற்கிறார்.

மொத்தத்தில், பரதேசி, பாக்கணும்னா பாக்கலாம், பாக்க வேணாம்னா வேணாம்.
அப்படியும் சொல்ல முடியாமல், இப்படியும் சொல்ல முடியாமல், நன்றாய் முடிக்கப்பட்ட படம்.