"என் பேச்சே நானே கேக்க மாட்டேன்"னெல்லாம் அலப்பறை பண்ணாத விஜய் என்பதால், விஜய் வெறியர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும்படியாக இருந்தது, துப்பாக்கியில் அவரின் நடிப்பு.
சரசர வென நகரும்படியான திரைக்கதையில், முதல் பாதி போவதே தெரியாமல், அருமையாய் நகர்ந்தது.
மும்பையில் நடந்த தொடர் வெடிகொண்டை மையமாகக் கொண்டு அமைந்த கதை. Sleeper Cell என்ற பயங்கரவாதிகளின் அமைப்பு எப்படி இயங்குகிறது, அதை எப்படி ஹீரோ கண்டுபிடிக்கறாரு, அவங்கள போட்டுத் தாக்கறாரு, என்பது மாதிர்யான கரு.
அரச்ச மாவையே அரைக்காம, வித விதமா திங்க் பண்ணும் முருகதாசுக்கு ஒரு பெரிய நன்னி.
படம் பாத்தப்பரம் Sleeper Cell பத்தி கூகிளிப் பாத்தா, திகிலாத்தான் இருக்கு. பல இளைஞர்களை தீவிரவாத இயக்கங்கள் நல்லா ட்ரெயின் பண்ணி, எதிரி நாடுகளுக்குள் அனுப்பிடுவாங்களாம். அவங்களும், அந்தந்த ஊரில், சாமான்யனாய், வேலைக்குச் சேர்ந்து, அந்தந்த ஊர் மக்களுடன் கலந்துருவாங்களாம். அப்பாவியா, இப்படி சில பல வருஷங்கள் வரைக்கும், யாருக்குமே சந்தேகம் வராதமாதிரி வாழ்வாங்களாம். இவங்களை அனுப்பிய தீவிரவாத இயக்கங்கள, இவங்களை அப்பப்ப பயங்கரவாத வேலைகளுக்கு உபயோகிச்சிப்பாங்களாம். இந்த Sleeper agentsக்கும், அவங்கள் இயக்கத்தில் வேர யாரெல்லாம் இருக்கான்னு தெரியாது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செவ்வனே செஞ்சு, தன் சாமான்ய வாழ்க்கையை தொடருவாங்களாம். பஸ்ஸுல குண்ட வச்சோமா, ட்ரெயினக் கவுத்தோமா, மீட்டிங்குல குழப்பம் பண்ணோமான்னு எப்பயாச்சும் பிசியா இருப்பாங்களாம்.
ஆப்டுக்கிட்டா கூட, இவனுங்க கிட்ட இருந்து, பெருசா எந்த தகவலையும் வாங்கிட முடியாது என்பது கூடுதல் திகில்.
அப்பேர்பட்ட ஸ்லீப்பர் ஏஜெண்ட்டுக்கள், தொடர் வெடிகுண்டுகள் வைக்க ஏற்பாடு செய்யும்போது, விஜய் கோஷ்ட்டீஸ், அவர்களை மடக்கிப் போடுவது, திரில்லான நிமிடங்கள்.
விஜய் ஒரு ராணுவ வீரர். அதிலும், இண்டெலிஜன்ஸ் ரகசிய பிரிவைச் சேர்ந்தவர். ராணுவ யூனிஃபார்ம் சுத்தமா செட் ஆகலை இவருக்கு. ஆனா, சண்டையிலும், நடனத்திலும், எப்பொழுதும் போல் அசத்துகிறார். ஒரு சில காட்சிகளில், இராணுவ வீரர்களின் மேல் பெரும் மரியாதை ஏற்படுத்தச் செய்கிறார்.
கொடூரமாய் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ஒரு இராணுவ வீரரை பற்றி சொல்லும்போது, "14 நாள் தான் ஆச்சு, அவன் தம்பி அடுத்து இராணுவத்தில் சேந்துட்டான்"னு ஒரு டயலாக் சொல்லுவார். ரொம்பவே புல்லரிக்க வச்சுட்டுது.
"பல உயிரை கொல்லப் பாக்கர அவனுங்களே சாகரதுக்கு பயப்படல, பல உயிரை காப்பாத்த முயற்சிக்கர நாம் ஏண்டா சாகரதுக்கு பயப்படணும்"னு சொல்லும் இடமும் அருமை. ஆனா, அதே டயலாக்கை இரண்டு முறை பயன்படுத்தியது, சரியில்லை.
ஹாரிஸ் எடுபடலை. இரண்டு பாட்டுக்கள் முணுமுணுக்க வைத்தாலும், பின்னணி இசையில், மின்னலே படத்தில் வரும் பிட்டுக்களைப் போட்டு, சீப்பாகிவிட்டார். கூகிள் பாடலில் வரும் ராப் ரக சரணம் அருமை.
சந்தோஷ் சிவன் பெயரைப் பார்த்ததும், ரம்யமான ஒரு சன்செட்டோ, சன்ரைஸோ, குளு குளுன்னு எத்தையாவது காட்டுவார்னு பெருசா எதிர்பார்த்தா, ஒன்னியும் கண்ணுல காட்டல. திரைக்கதையும் அதுக்கு பெருசா இடம் தரலை. கண்ணுக்கு உருத்தாத, நேர்த்தியான ஒளிபரப்பு. ஆனா, கண்ணுக்குள்ளயும் மனசுலையும் ஒண்ணும் பெருசா நிக்கலை.
நாய், துப்பட்டாவை மோப்பம் புடிச்சு விஜய் தங்கையை தேடுவது கொஞ்சம் டூ மச்சு. ஆனாலும், விறுவிறுப்பான காட்சி. அதைத் தொடர்ந்த சண்டை அமக்களமான ஏக்ஷன். நிறைய கத்திக் குத்தல்களும்,துப்பாக்கி சூடுகள் இருந்தாலும், பெரிய ரத்தக்களரி இல்லாத ரசிக்கும்படியான ஏக்ஷன்.
சத்யனும், ஜெயராமும் சரியாக பயன் படுத்தப்படவில்லை. ஹீரோயின், வந்துட்டுப் போறாங்க, கச்சிதமாய்.
சிரியஸ் சீனும், ஜாலி சீனும், மாத்தி மாத்தி வருவதால், அலுப்பில்லாமல் படம் போகுது. நல்ல திரைக்கதை பாணி.
கள்ளத் துப்பாக்கியும், நல்லத் துப்பாக்கியும் கொடுத்து, ரெண்டுல எத்தால சாக ஆசப்படரங்கர காட்சி, நல்ல சொறுகல்.
க்ளைமாக்ஸ் ஃபைட், தெண்டம். ஆனால், சுவாரஸ்யமான முடிச்சுகள் அங்கங்க போட்டு, நல்லா கனெக்ஷன் கொடுத்து, படத்தை முடிச்சிருக்காரு. வில்லனை குட்டிக் கப்பலில் இன்னாத்துக்கு கூட்டிக்கிட்டுப் போறாருன்னு தெரியலை? ஆனா, கூட்டிக்கிட்டுப் போன எடத்துல, அருமையா ரெண்டு மூணு டயலாக் சொல்லியிருந்தா, முடிவு மெருகேறியிருந்திருக்கும்.
இராணுவர்கள் செய்யும் தியாகத்தை பதியும் படி படத்தின் கடைசிக் காட்சி நெகிழ்வு.
மொத்தத்தில், துப்பாக்கி, ஜாலியான பொழுதுபோக்குப் படம். தியேட்டரில் பார்க்கலாம்.
பி.கு: இஸ்லாமியர்கள் எதிர்க்கும் அளவுக்கு, படத்தில் எந்தக் காட்சியும் இருந்ததாய் எனக்குத் தெரியல்ல. வில்லன்களின் பெயரில் தவிர. அதுக்குள்ள வெட்டிடாங்களோ?