recent posts...

Tuesday, December 29, 2009

ஓட்டகத்த கட்டிக்கோ...

இப்படி இருந்தது,


இப்படி ஆக்கினாதான், பாக்க நல்லாருக்கு...


நீங்க என்ன நெனைக்கறீங்க?

Monday, December 28, 2009

Times of India - புடிச்சிருக்கு

இம்முறை, சென்னைக்குச் சென்றிருந்த போது கண்ட பல மாற்றங்களில், ஒரு குட்டி மாற்றம் எங்க வீட்டில் வாங்கும் தினசரி பேப்பர் மாறியிருந்தது.

படிக்கரமோ இல்லியோ, ஒரு கெத்துக்காக, The Hindu வாங்குவது, அநேகம் வீடுகளில் வாங்குவது வழக்கம். எங்க வீட்லயும் அப்படித்தான்னு நெனைக்கறேன்.

இந்த தடவ பாத்தா, Hindu போய், ஸ்லீக்கா, Times Of India வந்து கொண்டிருந்தது.

முதல் ஸ்பரிசத்திலேயே, ஒரு வித்யாசம் தெரிந்தது. நல்ல வாசிப்பு அனுபவம் தந்தது.
இந்தப் பக்கம் அந்தப்பக்கம் சாயாமல், பேலன்ஸ்டா செய்திகள் வந்த மாதிரி தெரிந்தது.
(நுண்ணரசியல் புரியா ஜென்மம் நானு)

நிறைய பாஸிட்டிவ் செய்திகள் கண்ணில் பட்டது.
குடிமகனுக்கு தேவையான விஷயங்களும் கண்ணில் பட்டது. முக்கியமா, லஞ்சம் வாங்கி Vigilence மூலமா மாட்டறவங்க பத்தி, தினசரி ஒரு செய்தியாவது கண்ணில் பட்டது.
அதைத் தவிர Right to Information (RTI) வச்சு அவரு இத்தை செய்தார், இவரு அதை செய்தாருன்னும் செய்திகள் வருது.

நல்ல தொகுப்பு.

மிக முக்கியமாய், என்னை வெகுவாக கவர்ந்த விஷயம், ஒவ்வொரு செய்தியிலும் இடம்பெறும் புகைப்படம் ஒரு mug-shot போலல்லாமல், மிகவும் நேர்த்தியான கோணத்தில், ரசனையுடன், திறம்பட எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3ஆம் தேதி, கண்ணில் பட்ட ஒரு படம்.
'சென்னையில் மழை'யை இப்படி படம் போட்டு காமிச்சா, நல்லாத்தேன் இருக்கு. :)


I recommend, Times of India.

Sunday, December 27, 2009

3 Idiots - புடிச்சிருக்கு

அவ்தார் பாக்கப் போயி, தெய்வாதீனமா டிக்கெட் கிடைக்காமல், அதே தியேட்டரில் 3 Idiotsக்காக காத்திருந்த பெரீய்ய்ய க்யூவை பார்த்ததும், சரி அதுக்கு போலாம்னு போனது வீண் போகலை.
Qayamat காலங்களில் இருந்தே அமீரை ரொம்பப் பிடிக்கும். அப்ப இருந்த அமீர் மாதிரி, இந்த வயதிலும் காலேஜுக்கு போறாரு, 3 Idiotsல். கூடவே, நம்ம ஊரு மாதவனும், ஷர்மன் ஜோஷியும்.

இந்த மூன்று இஞ்சினயரிங் கல்லூரி மாணவர்களும் (அமீர், மாதவன், ஷர்மான்), அவர்களின் கல்லூரி முதல்வரும், முதல்வரின் மகளும், நாலாவதாய் இன்னோரு 'வில்லன்' மாணவனும் (ஓம் வைத்யா) சேர்ந்து கலக்கும் படம் 3 Idiots.

இந்த மாதிரி மனசுக்கு இதமா ஒத்தடம் கொடுக்கும் படங்கள் வருவது மிக அபூர்வம். 'Children of Heaven' மாதிரி படங்கள் பாக்கும்போது வரும், ஏற்றம், இறக்கம், கனம், சிரிப்பு, அழுகை,எல்லாம் கலந்தடித்து வந்தது, 3 Idiots பார்க்கும்போதும்.
3 Idiots நமக்கு பழக்கமான, காலேஜ் வாழ்க்கை, ரேகிங்க், கலாட்டா, பாடல், காதல், சஸ்பென்ஸ், என்று பயணிப்பதால், கூடுதல் சுகம்.

கல்லூரியில் வழக்கமாய் நடக்கும் கலாட்டா. ரேகிங்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஸ்பூனில் கரெண்டு பாய்ச்சி, சீனியர் மாணவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சி முதல், பரீட்சை quesiton பேப்பரை திருடுவது வரை பல சுவாரஸ்யங்கள்.
ஜாலியா பயணிக்கும் கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், அமீர் காணாம போயிடறாரு. சில வருடங்கள் கழித்து, மாதவனும், ஷர்மானும் அவரைத் தேடிச் செல்கிறார்கள்.
தேடுதலின் போது, அமீரைப் பற்றி தெரியாத விஷயங்கள் பலவும் தெரிய வருகின்றன.

முன்னாபாய் புகழ் ராஜ்குமார் இரானியின் படம் என்பதால், படத்தில் தேவையான அளவுக்கு 'மெசேஜும்' இருக்கு. எல்லாரும், கடமைக்குன்னு படிச்சு, பெற்றோர்கள் விட்ட வழியில் வேலையை தேடாமல், தனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கோ, அந்த பாதையை தேர்ந்தெடுத்து முன்னேறினா, தனக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லதுன்னு மெசேஜு.

அதைத் தவிர, நமது பள்ளி/கல்லூரிகளின் பாட திட்டத்தின் மேலும் சில குற்றச்சாட்டுகளை அள்ளி வீசறாரு டைரக்டரு. நம் பாட திட்டங்கள், ம்க் அடிச்சு பாஸ் பண்ண வைக்குதே தவிர, பெரிய அளவில் யோசிக்க வைத்து, ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருவதில்லை. மிகச் சரின்னே தோணுதுல்ல?

மெசேஜை ஒரு பக்கம் ஒதுக்குங்க. படத்துல மெசேஜ் சொன்னா, எவன் கேட்டு நடக்கறான்?

படத்துக்கு வருவோம்.

திரைக்கதை பிரமாதம். படத்தில் இருக்கும் சஸ்பென்ஸு விஷயத்தை, ஆரம்பம் முதல், படத்தின் கடைசி நிமிடம் வரை தூக்கிப் பிடித்து, நம்மை ஒரு எதிர்பார்ப்புடனே படம் பார்க்க வைப்பது ஒரு தனி கிக்கை தருகிறது.

படத்தில், அமீரைத் தவிர எல்லாருக்கும் ஒவ்வொரு ப்ரச்சனை. எல்லார் ப்ரச்சனையையும், அமீர் 'all izz well' என்று தன் பாணியில் சால்வ் பண்ணி வைக்கறாரு.
கல்லூரி முதல்வராக வரும் Boman Irani கலக்கி தள்ளியிருக்காரு. அவார்டு நிச்சயம். சில இடங்களில், ஓவர்-ஆக்ட் கொடுத்திருந்தாலும்.
Nasa ஏன் spaceல எழுத பல மில்லியன் டாலர்கள் செலவு செஞ்சு pen கண்டு பிடிச்சாங்க, pencil உபயோகிக்காமன்னு அவரு எடுத்துச் சொல்லும் காட்சி சூப்பரா வந்திருக்கு.

கரீனா கபூர், பேச்சுக்கு வந்துட்டுப் போறாங்க.
மாதவன், கஷ்டப்பட்டு, ஸ்டூடண்டா தன்னை மாத்தியிருக்காரு. படத்தில், நிறைய வேலை இல்லை அவருக்கு. ஆனா, மொத்த படத்திலும் பரவியிருக்காரு.
என்னை கிரங்க வைத்தவரு, ஓம் வைத்யா. சதூர் ராமலிங்கம் என்ற மாணவனாக வராரு இவரு. ஹிந்தி படிக்கத் தெரியாத 'வில்லன்' மாணவன். அமீரை தோற்கடிக்க இவரு துடிக்கும் துடிப்பு அருமை. கல்லூரி மேடையில், இவரின் உரையை அமீர் மாற்றி வைத்தது தெரியாமல், அப்படியே 'மக்' அடித்து ஒப்பிக்கும் காட்சியில், தியேட்டரே சிரிப்பொலியில் இரண்டானது. நல்ல டயலாக் டெலிவரி.

அமீர் - கேக்கவே வேணாம். சூப்பர் நடிப்பு. வேற யாரு நடிச்சிருந்தாலும் எடுபட்டிருக்காது. படத்தில் ஒரு அபத்தமான காட்சி, கரீனாவின் அக்காவுக்கு, அமீர் & கோ, பிரசவம் பார்ப்பது. ஆனால், அமீர் இதை செய்வதால், இதுவும் கூட அபத்தமா தெரியல்ல. அமீரின் மேல் இருக்கும் ஈர்ப்பு ( likeability ) இதற்குக் காரணம்.

சிம்லாவை படம் பிடித்திருக்கும் விதம் மிக அருமை.
All izz well பாடல், தாளம் போட வைத்தது. பாடலில் வரும் அந்த விசிலும் அருமை.

படம் முடிந்ததும், ஹவுஸ்ஃபுல்லான எங்க ஊரு தியேட்டரில், மொத்த ஜனமும் எழுந்து நின்னு கைதட்டினார்கள்.
இந்த மாதிரி நிறைவான ஒரு படம் பாத்து பல காலமாச்சு.

ஹிந்தி தெரிஞ்சிருந்தா, இன்னும் நிறைவா இருந்திருக்கும். ஹ்ம்!

பரம திருப்தி! கண்டிப்பா பாருங்க, தியேட்டரில்.

பி.கு1: ஆங்கிலத்தில், எனது 3 Idiots திரைப் பார்வை, இங்கே.

பி.கு2: சமீபத்தில் பார்த்த ரேனிகுண்டா, பேராண்மை கூட, வழக்கம் போலில்லாமல், நன்றாக இருந்தது. காணவும்.

Monday, December 21, 2009

வாவ்வ்வ் துபாய்!

துபாய் வழியா சென்னை போனா, போகும் வழியில் துயாயையும் சுத்திப் பாத்திடலாம்னு, இம்முறை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் புக்கியிருந்தேன்.
மக்கள்ஸ் சொன்ன மாதிரி, அநேகம் இடங்களையும் பாத்தாச்சு.

அமக்களமான ஊர் துபாய். எடுத்த படங்களில் சில கீழே தொகுத்துள்ளேன். மேல் விவரங்கள், பதிவாக, ஜெட் lagகெல்லாம் போனப்பரம் வரும் :)

பழைய கால துபாயை நினைவூட்டும் ஒரே விஷயம் இந்த 'ஆப்ரா' தோணி. சில்லரை காசுக்கு, இக்கரையிலிருந்து அக்கரை கொண்டு விடராங்க்ய.

எக்கானமிக்கு உதவலாம்னு தோணிச்சு. ஆனா, படம் மட்டும் புடிச்சு எல்லா கடையிலிருந்தும் எஸ்கேப்
Desert Safari போன போது, எங்களுக்கு முன்னால் போன ஜீப் போட்ட வட்டம். என்னமா ஓட்ராங்க்ய. பின்னாடி சீட்ல இருந்த கொரியன் பொண்ணு அழுதுடுச்சு.

ஒட்டகம், என் வெயிட்டு தாங்குமான்னு டவுட்டு இருந்தது. பாவம், என்னையும் தாங்கிச்சு. அதுக்கு மேலையும் தாங்கிச்சு.
300dhs (துபாய் திர்ஹம்) இருக்க வேண்டிய desert safari, 125dhs விக்கறாங்க. 200dhsக்கு விற்க வேண்டிய dinner cruise, 100dhsக்கு விக்கராங்க. கூட்டமும் கம்மி.
நம்ம ஊருல ஆடு மாடு மேயர மாதிரி, இங்க ஒட்டகம் ரோட்டை கிராஸ் பண்ணுது. ஹார்ன் அடிச்சு லொள்ளு பண்ணாம, அது போர வரைக்கும் வெயிட் பண்ணி போராங்க.
Desert Safari பெருசுங்களை விட, வாண்டுகள்தான் ரொம்ப என்சாய் பண்றாங்க. மணல்ல பெரண்டு பெரண்டு வெளையாடராங்க. மணலும், ஜலிச்ச மணல் மாதிரி நைசா இருக்கு.
விற்பனைக்கு வச்சிருந்தாங்க. வெலை ஜாஸ்தி. வழக்கம் போல், போட்டோ மட்டும் எடுத்துட்டு எஸ்கேப்.
ராத்திரிதான் களை கட்டுது. பாலைவனத்தின் உள்ளே இந்த மாதிரி செட்டப் போட்டு, பாட்டை போட்டு, ஆட்டமும் போட்டு, ரம்யமான பொழுது போக்கு.
அக்கா சூப்பரா ஆடினாங்க. பல பேரை ஆடவும் வச்சாங்க. க்ளிக்கி க்ளிக்கி கேமராவின் க்ளிக்கர் தேய்ந்தது தனிக் கதை ;)
கட்டடங்கள் ஒவ்வொண்ணும் ரம்யமா கட்டியிருக்காங்க. பெத்தையா மட்டும் இல்லாம, ஒரு ரசனையோடையும் இருக்கு. ஷாப்பிங் மால்ஸ் ஒவ்வொண்ணும், பப்பளான்னு இருக்கு. அம்பட்டன் கடைகூட மின்னுது. சரவணா பவன், லீ மெரிடியன் லுக்ல இருக்கு
சாலையும் அமக்களம். ஏழு லேனு. சார் படம் தான், பல எடத்துலையும் வச்சிருக்காங்க. சிலை வடிக்கத் தெரியாதா இவிகளுக்கு? நம்ம ஊர்லேருந்து எக்ஸ்போர்ட் பண்ணலாமே?
ஏழு ஸ்டார் ஹோட்டலாம். ஈ.மெயிலில் வந்த இந்த ஹோட்டலில் புகைப்படம் பாத்ததும் தான், துபாய் பாக்கணும்னு எண்ணம் ஸ்பார்க் ஆச்சு. இதில் தங்கும் காலம் எப்ப வருமோ?
பனை மர ஓலை வடிவில் அமைந்திருகும் ஒரு குட்டித் தீவின் உள் இது. ஓரத்தில் Atlantis ஹோட்டல். கடல்ல மணலையும் கல்லையும் போட்டு, இப்படியெல்லாம் கட்டணும்னு தோணிருக்குதே,அடேங்கப்பா, என்னா ஒரு visionary அந்தாளு?
உலகிலேயே உயரமான கட்டிடம் இதுதான். ஜனவரி 2010ல் பால் காய்ச்சி கிரஹப்ரவேசம் பண்றாங்களாம். 160 மாடிகளாம். 2684 அடி உயரமாம்.
துயாய் மெட்ரோ. இந்த வருஷம்தான் ஆரம்பிச்சிருக்காங்க. நான் வருவேன்னு தெரிஞ்சிருக்கும் போல :) செம வசதியா இருந்தது.
அழகோ அழகு மெட்ரோ. தொடச்சு பள பளன்னு வச்சிருக்காங்க மொத்த ஊரையும். மெட்ரோ கேக்கணுமா?
துபாய் க்ரீக்.
- ஓவரா செலவு பண்ணி, எக்கானமி ஆட்டம் காணுது. பல இடங்களில் கண்கூடா தெரியுது. Dinner cruise போன தோணி. பேரம் பேசாமலே, பாதி விலைக்கு டிக்கெட் தராங்க.

வெயில் காலம் தான் தாங்க முடியாதாம். கொளுத்திக் காயப் போட்டுடுமாம். இந்த வாரம் மழையெல்லாம் பெஞ்சு குளு குளுன்னு இருந்தது. (நல்ல மனசிருக்கரவங்க வந்தா மழை வராம என்ன பண்ணுமாம்)

Thursday, December 17, 2009

தஞ்சை பெரிய கோயில்

ஏற்கனவே பார்த்திருந்தாலும், பொன்னியின் செல்வன் படித்தபின் பார்த்தது, ஒரு புதிய ஃபீல் தந்தது.
amazing temple. ஆனா, பக்திப் பரவசம் கம்மியாதான் இருந்தது. கட்டமைப்பு தந்த ப்ரமிப்புதான் அதிகம்.

படத்தை க்ளிக்கினால், Flickrல் பெருசா பாக்கலாம்.


விக்கியில், பெரிய கோயிலைப் பற்றி விவரங்கள் இல்லை. யாராவது, மேட்டரை எழுதவும். நன்றீஸ்!

Wednesday, December 16, 2009

தெரு ஓர மரங்கள், வைத்ததும், பின் விளைவுகளும்

தெரு ஓரத்தில் சில மரங்களை நடலாம்னு ஒரு எண்ணம் சில பல வருஷமா இருந்துது. ஒவ்வொரு தடவையும், சோம்பேரித்தனத்தால் தள்ளிக்கிட்டே போச்சு.
வாய் கிழிய எல்லா நொட்டையையும் நொட்டை சொல்றமே, நம்மாலேயே உருப்படியா ஒண்ணு கூட பண்ணமுடியலியேன்னு, உள்ளிருந்து மனசாட்சி ஸ்ட்ராங்கா குத்திக்கிட்டே இருக்குது சமீப காலமா.
சரி, அட்லீஸ்ட் சொந்தத் தெருவுலையாவது கொஞ்சம் மரத்தை வச்சு, கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு ஃபீல் வர மாதிரியாவது தெருவை மாத்தலாம்னு முடிவு பண்ணேன்.
திறந்த வெளி சாக்கடை, தாரில்லா சாலை, ரோட்டோரக் குப்பைகள் எல்லாம் இருக்கும் தெருவில், அட்லீஸ்ட் மரத்தை வச்சு பச்சை ஃபீல் குடுத்தாலாவது, மத்த கலீஜ் எஃபெக்ட் கம்மியாகட்டும்னும் ஒரு நப்பாசை.

அதைத் தவிர, என் பள்ளி கல்லூரி நாட்களில், ரொம்ப ஏக்ட்டிவ்வா இருந்தா, தெருமக்களின் welfare association எல்லாம் முடங்கிய நிலையில், ஆளாளூக்கு அவங்க வீட்டுக்குள்ள இருக்கர welfareஐ மட்டும் கவனித்துக் கொண்டு, தெருவை அம்போன்னு விட்டதில்தான், இந்த திறந்த வெளி சாக்கடையும், தாரில்லா ரோடும், குப்பையும் வந்து சேர்ந்தன.

மெம்பர்களை, இந்த மரம் வைத்தல் மூலம், உசுப்பி விட்டா, நான் கிளம்பியதும், அவங்க மத்ததை கவனிச்சுப்பாங்கன்னு ஒரு ஸைட் கேல்குலேஷனும் மனதளவில் இருந்தது.

சரின்னு, கோதாவில் இறங்க முடிவு பண்ணேன்.

தனி ஆளா இறங்கினா வேலைக்காகாதுன்னு, இந்த மேட்டரை எடுத்துச் சொல்லி, இன்னும் சில சகபாடிகளையும் கூட்டுக்குச் சேர்த்தேன். அவங்களுக்கும் இந்த விஷயத்தைச் சொன்னதும் ரொம்பவே புடிச்சுப் போச்சு. யாராச்சும், ஆரம்பிச்சு வக்க காத்துக்கிட்டு இருந்தாங்களாம்.

தெருவில் மரம் நட என்னென்ன தேவை?
* 20 மரக் கன்றுகள்
* அதைச் சுற்றிப் போட 20 பாதுகாப்பு கூண்டுகள்
* 10 கிலோ அடி உரம்
* குழி வெட்டி மரத்தை நட்டு உரம் போட்டு, கூண்டை வைக்க ஒரு சக்தி வாய்ந்த ஆள்/லேடி
* மரம் வைக்கப் போகும் இடத்தின் பின் உள்ள வீட்டில் இருப்போரிடம் ஒரு அனுமதி. ( அப்பத்தான் அவங்க தண்ணி ஊத்தி பாத்துப்பாங்க. அவங்க கையாலேயே வக்கச் சொன்னா இன்னும் பெட்டர்.)
* நகராட்சி கமிஷனரிடம் ஒரு சின்ன அனுமதி. (அப்பத்தான் ரோடு போடும்போது, புடுங்கிப் போட மாட்டாங்கய)
* உள்ளூர் கவுன்சிலரிடம் ஒரு குட்டி அனுமதி. (அவரை விட்டுட்டு பண்ணா கோச்சுப்பாரு, பின்னாளில் பிடுங்கியும் போடுவாரு)

சென்ற பதிவில் சில விவரங்கள் கிட்டியது.
மரக்கன்றுகளை Chennai Social Service என்ற தொண்டு நிறுவனம் வழங்கும் என்பது ஒன்று. முதல் வேலையாக அவர்களை தொடர்பு கொண்டு 20 gulmoharகளும், சில பூவரசு மரக்கன்றுகளும் தேவை என்றேன்.
அவர்களும், மட மடன்னு, "எல்லாம் ரெடியா இருக்கு, என்னிக்குன்னு சொல்லுங்க எங்க volunteers கூட்டிட்டு வந்து நட்டுடறோம்"னு ஊக்கப் படுத்தினாங்க.
மரக்கன்று ஒன்றுக்கு 10ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்தத் தொகை, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அவர்களின் நர்சரிக்குத் தேவைப் படுகிறது. ப்ரைவேட் நர்சரியில் நாமே வாங்கினா, ஒரு கன்றுக்கு 50 லிருந்து 100 ரூ வை ஆகும்.

அடுத்ததா, பாதுகாப்பு கூண்டு. ஆரம்பத்தில் 300ரூ என்று நினைத்தது, உள்ளூர் வெல்டரிடம் கேட்டதில், ஒன்று செய்ய 700ரூ ஆகும்னு குண்டத் தூக்கிப் போட்டாரு. 20க்கு 14000ரூ. கண்ணைக் கட்டியது.
நிழல் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், மூங்கிலில் பாதுகாப்பு கூண்டு செய்யும் ஹரீஷின் பரிச்சியம் கிட்டியது 140ரூவாய்க்கு இந்தக் கூண்டு செய்து தருகிறேன் என்று சொன்னார். கிட்டத்தட்ட அதை லாக் செய்த நேரம், ஒரு நாள் எங்கள் ஊரில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவங்க கிட்ட, மரம் நடுவதைப் பற்றியும், அதன் செலவைப் பற்றியும் சொன்ன போது, "dont worry. நான் ஒரு பத்து கூண்டுக்கு sponsor பண்றே"ன்னு சொன்னாங்க. குஷி ஆயிடுச்சு. சரின்னுட்டேன்.
இந்த மெத்தட் நல்லாருக்கேன்னு, அடுத்த நாள், என் டாக்டர் கிட்ட பேசினேன், அவரும், "நானும் மிச்ச கூண்டை sponsor செய்யறேன்"னு சொல்லிட்டாரு.

அட, இவ்ளோ சுலப்மா, சில ஆயிரங்களை பொது விஷயம்னா எடுத்து வுடறாங்களேன்னு ரொம்ப ஆச்சரியமா போச்சு எனக்கு. மடமடன்னு அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்தேன்.

ஒரு சர்க்குலர் அடித்து, என் சகபாடிகளுடன், ஒவ்வொரு வீடாகச் சென்று விஷயத்தைச் சொல்லி, அவர்களிடம் ஒரு கையெழுத்தும் வாங்கினேன்.
** இருபது வீடுகளில், இரண்டு வீட்ட்டார், அவர்கள் வீட்டின் முன் மரம் நடவே கூடாது என்று சண்டைக்கே வந்து விட்டனர். குப்பை சேரும், அது இதுன்னு நொண்டிச் சாக்கு. அவர்களின் அனுமதி நமக்குத் தேவையில்லை எனினும், அவர்களின் விருப்பமின்றி நட்டு வைத்தால், ராவோடு ராவா ஒடச்சி போட்டுடுவாங்கன்னு தெரிந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போனோம்.


கையெழுத்திட்ட சர்க்குலரை எடுத்துக்கினு போயி, நகராட்சித் தலைவரிடமும் கொடுத்து, விஷயத்தைச் சொல்லி, அவரின் ஒப்புதலும் கேட்டாயிற்று. அப்படியே, சந்தடி சாக்கில், ரோடு எப்ப சார் போடுவீங்கன்னும் கேட்டு வைத்தேன். வரும் தம்பி, ஹிஹின்னு மழுப்பிட்டாரு.

உள்ளூர் கவுன்சிலரிடமும், மேட்டரைச் சொல்ல, அவரும், "ஓ.கே தம்பி, நல்ல மஞ்சாப் பூ வர மாதிரி வைங்க"ன்னாரு. நானும், டபுள் ஓகே சொல்லிட்டேன்.

வெல்டர் ஒருவரிடம், தேவையான கூண்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து (தலா 700ரூ), கூண்டுக்கு பெயிண்ட் அடிக்க ஒரு பெயிண்ட்டரையும் பிடித்து (தலா ரூ200), 20 குழி வெட்ட ஒரு ஸ்ட்ராங்க் பாடியையும் பிடித்து (400ரூ), (CSS) Chennai Social Serviceடம் மரக்கன்றுகளுக்கும் (தலா 10ரூ) சொல்லியாச்சு.

குறித்த நாளில், கூண்டுகள் வந்திறங்கின. பெயிண்ட்டரும் வந்து இரவு முழுக்க அமர்ந்து பெயிண்ட்டினார். குழியும் தோண்டியாயிற்று. அடி உரமும் வாங்கியாச்சு. CSS தன்னார்வலர்களும் ஒரு இளங்காலைப் பொழுதில் சர்ர்ர்ர்ர்ருனு பள பளா காரில் வந்து இறங்கினார்கள். மொத்தம் மூணு பேரு. 1 சாஃப்ட்வேர் ஆசாமியும், ஒரு பிசினஸ் மேக்னட்டும், ஒரு கல்லூரி மாணவனும்.

அந்தந்த வீட்டு மாமா/மாமிக்களை விளித்து, அவர்கள் கையாலேயே குல்மோகரை நட்டுவைக்கச் செய்தார்கள் CSS ஆசாமிகள். மாமாஸ்/மாமீஸூக்கும் ஏக குஷி.

அப்படியாக இருபதையும் நட்டு, உரம் போட்டு, தண்ணீரும் ஊற்றி, மரம் வைப்பு விழா இனிதே முடிந்திருந்தது. எனக்கும் என் சகபாடிகளுக்கும், ஒரு மகிழ்ச்சியான அனுபவமாய் இருந்தது.

அன்றிரவு மழையும் பெய்து அமக்களப் படுத்தியது.

மகிழ்ச்சியை பொரட்டிப் போட்டது அடுத்த நாள். விடிஞ்சும் விடியாத அதிகாலையில், எங்க ஊரு கவுன்சிலரு கதைவை தட்டினாரு.
"இன்னா தம்பி, நான் உன்ன பூச்செடி வெக்கச் சொன்னா, காட்டு மரம் வச்சு விட்டிருக்க. இதெல்லாம் வளந்து நம்ம பைப்பெல்லாம் ஒடச்சு போட்டுடும்"னு ஆரம்பிச்சாரு.
நானும் பொறுமையா, "ஒலகம் முழுக்க, எல்லா ரோட்டுலையும் வெக்கர மரம்ணே இந்த குல்மோகரு, அழகா செவப்பா பூ பூத்து அம்சமா வரும், பைப்பெல்லாம் ஒன்னியும் பண்ணாது"ன்னேன்.

"அதெல்லாங் கெடையாது தம்பி. நானு, மக்கள் நலனைத் தான் பாக்கணும். நாளிக்கு பைப்பு ஒடஞ்சு தண்ணி வரலன்னா என்னத்தான் கேப்பாங்க்ய", இது அவரு. சொல்லிட்டுப் போயிட்டாரு.

நானும் சகபாடிகளை அவசர மீட்டிங் அழைத்து, மேட்டரைச் சொல்ல, "இவரை யாரோ கெளப்பி விட்டிருக்கணும், இல்லன்னா, வேர மீட்டர் இருக்கும்"னு ஆரூடம் சொன்னார்கள். ஒரு சகபாடி மட்டும், "நாம அவரை கூப்பிட்டு விழா எடுத்து மேள தாளத்தோட நட்டிருந்தா, இப்ப ப்ரச்சனை பண்ணியிருக்க மாட்டாரு. ஆனது ஆச்சு, பேசாம மரத்தை மாத்திடலாம், இல்லன்னா, கொஞ்ச நாள்ள புடிஞ்கிப் போட்டுடுவாரு. நம்ம டைமும் உழைப்பும் வீணாயிடும்".

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னா, இங்க வச்ச மரத்தை பிடுங்க வேண்டியிருக்கேன்னு டென்ஷனாயிட்டேன். நான் இருப்பது சில வாரங்கள்தான், இவரிடம் மல்லுக்கு நின்னால், நாம் எஸ்கேப் ஆனப்பரம், மத்தவங்களுக்குத்தான் கொடச்சல் என்பதால், 1/4 மனதுடன், மரக்கன்றுகளை மாற்ற முடிவு செய்தோம். உள்ளூர் நர்சரியில், தலா 50ரூ செலவில், அரளி, காட்டு மல்லி, மருதாணி, போன்ற குட்டி மரக்கன்றுகள் வாங்கி, ஏற்கனவே நட்டதை பிடுங்கி இதை நட்டோம்.
(எங்க வூட்டுக்கு பக்கத்துல இருக்கரத மட்டும் மாத்தலை. வரது வரட்டும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்).

இப்படி வளர்ந்து தெருவுக்கே புதிய தோரணத்தைத் தந்திருக்க வேண்டிய குல்மோகர் மரங்கள், அடுத்துள்ள நகருக்கு கொடுக்கப் பட்டு விட்டது. அரளி மரங்களாவது வெக்க வுட்டாங்களே, அதுவே போதும் :(


இதில் இன்னொரு கொடுமை, நகராட்சி கமிஷனரின் ஒப்புதல் கடுதாசியை, நகராட்சி அலுவலகத்தில் போய் வாங்கி வச்சுக்கலாம்னு, மூணு தபா போயிட்டேன்.
"சார், நாளைக்கு வாங்க,"
"அங்க போய் கேளுங்க"
"இங்க போய் கேளுங்க"
"இன்னும் கையெழுத்தாகி வரலியே"

அது இதுன்னு இழுத்துக்கிட்டு இருந்தாங்க. கடுப்பாகி, கொஞ்சம் ஃபைலைத் தொறந்து பாருங்களேன்னேன். அவரு கையெழுத்துப் போட்டு கொடுத்து ஒருவாரமா அது ஃபைல்லையேதான் கெடக்குது. இனி, அதை எங்கியோ எண்ட்டர் பண்ணி, ஸ்டாம்ப் அடிச்சு கொடுப்பாங்களாம். அதுக்கு இன்னும் எத்தினி தபா அலையணுமோ.
வாங்கர சம்பளத்துக்கு வேலை செய்யாத ஆளுங்களைப் பாத்தா, எனக்கு பத்திக்கிட்டு வருது. கெரகம் புடிச்சவனுங்க!

மரம் நடுங்கோ! ஜாலியான அனுபவம் அது!

மேலதிக தகவல் வேணும்னா, கேளுங்கோ!

Tuesday, December 15, 2009

நச் 2009 போட்டி முடிவுகள்

நச் போட்டிக்கு வந்த எழுபது கதைகளை, நானும் சென்ஷியும் சேர்ந்து அலசி ஆராய்ந்து இருபது கதைகளை தேர்ந்தெடுத்திருந்தோம்.

இருபதில் முதல் இரண்டு பரிசுக்குரிய கதைகளை தேர்ந்தெடுக்க,
வெட்டிப்பயல், CVR, சென்ஷி ஆகிய மூவர் குழு களத்தில் இறங்கியது.
இவர்களின் மதிப்பெண்ணுடன், வாசகர்கள், கதைகளுக்கு அளிக்கும் வாக்குகளையும் கலந்து ஆராய்ந்து வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதாக அறிவித்திருந்தேன்.
சர்வே பதிவின், பின்னூட்டத்தில் சொல்லியிருந்தபடி, மூவர் குழுவுக்கும் உறுதுணையாக இருக்க நாலாவதாக இன்னொரு நடுவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஹெவி-வெயிட் வேலையை, செய்து கொடுத்தவர், முத்துச்சரம் கோர்க்கும் ராமலக்ஷ்மி அவர்கள்.

மக்கள்ஸின் சர்வே மூலம் வந்த வாக்குகளை எண்ணியதில் ஒரு சிக்கல் எழுந்தது.
அதாவது, மொத்தம் 1363 வாக்குகள் பதிவாயிருந்தது.
ஆனால், சர்வே பதிவுக்கு கூகிளாரின் கணக்குப்படி தொள்ளாயிரத்தி சொச்சம் ஹிட்டுகள் மட்டுமே இருந்தன. ஸோ, தோராயமாய் சில பல நூறு வாக்குகள், செல்லாத கள்ள வாக்குகள் என்பது தெரிய வந்தது.
சர்வே கொம்பேனியை பிடித்து ஐ.பி ரிப்போர்ட் அது இதெல்லாம் கேட்டு, வடிகட்ட முனையலாம். ஆனா, அதெல்லாம் தேவை இல்லாமல், நாட்களை மேலும் நீட்டிக்கொண்டுச் செல்லும். நேர விரையமும் கூட.

ஆகையால், இம்முறை, சர்வே மூலம் வந்த வாக்குகளை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று எமது சர்வே கமிட்டியில் மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு நடுவர்களின், முடிவுகளை மட்டும் கணக்கில் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடுவர்கள் ஒவ்வொரு கதைக்கும் மதிப்பெண் அளித்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்த கதைக்கு 100ம், அதற்கேற்றார்போல், மற்ற கதைகளுக்கும் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கீழ் வரும் பட்டியலில், நாலு நடுவர்களின் மதிப்பெண்களும், அவற்றின், பொது (average?) கூட்டலும்.

(கீழே, ஸ்க்ரோள் செய்து பார்க்கவும்......)

கதை
நடுவர்1
நடுவர்2
நடுவர்3
நடுவர்4
Average (%)


1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
96
60
60
100
79


3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
73
100
70
90
83


10. திருப்பம் - சின்ன அம்மிணி
67
80
60
77
71


12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
93
65
95
95
87


19. இக்கணம் இக்கதை - Nundhaa
93
55
80
82
77


30. அவரு..அவரு..ஒரு - வருண்
53
75
65
77
67


34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
56
55
70
69
63


39. காமம் கொல் - Cable Sankar
67
65
60
69
65


44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
91
85
80
85
85


45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
87
70
80
87
81


52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
81
45
70
71
67


53. சட்டை - முரளிகண்ணன்
93
55
90
94
83


55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
73
85
80
95
83


56. அபரஞ்சிதா - அடலேறு
73
50
60
69
63


59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
77
50
60
82
67


63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
67
50
60
77
63


64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
89
60
70
77
74


68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
72
85
90
87
83


69. நிபுணன் - யோசிப்பவர்
69
60
70
71
68


70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar
Narayanan
100
60
100
100
90


அனைவரது மதிப்பெண்ணையும் கூட்டிக் கழித்து பார்த்ததில்,
முதல் இடத்தை பெற்று, அதற்கான $20 பரிசை வெல்பவர், நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி எழுதிய Sridhar Narayanan.

இரண்டாம் இடத்தையும், அதற்கான $10 பரிசும் வெல்பவர், அப்பா சொன்ன நரிக்கதை எழுதிய நிலா ரசிகன் அவர்கள்.

வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களும், கரகோஷங்களும்.

முதல் இருபது வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும், மற்றும் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

ஏற்கனவே அறிவித்தபடி $70ஐ, முதல் பரிசு வென்ற, Sridhar Narayan பெயரில், உதவும் கரங்களுக்கு ஒரு குட்டி டொனேஷனும் செய்யப்படும்.

வெற்றி பெற்றவர்கள், surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு ஒரு ஈ.மடல் அனுப்பவும்.

நன்றீஸ்!

வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கம்ஸ் (இதை உங்க பதிவுல போட்டுக்கலன்னா செக் பவுன்ஸ் ஆகிடும்னு சொல்றதெல்லாம் பொரளி, நம்பாதீங்க! :) ):Monday, December 07, 2009

லஞ்சப் பெருச்சாளிகள்... happy ending

லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படிக் குற்றம்

இது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். ஆனா, 'நோட்டீஸ் ஒட்டாதே' வாக்கியத்தின் மேலேயே போஸ்டர் ஒட்டிட்டுப் போறது எவ்ளோ சாதா விஷயமோ, அதே அளவுக்கு சாதா விஷயம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும்.

கேக்கறவன் சாதாரணமா கேக்கறான், கொடுக்கரவனும் சாதாரணமா கொடுக்கறான்.

ஒருத்தன் கேட்டதும் 100ரூபாயிலிருந்து சில ஆயிரம்/லட்சம் வரை, மறு பேச்சு இல்லாமல் எடுத்து கொடுத்தா, யாருக்குத்தான் கேக்கறது கஷ்டம்?

நம்மில் பலருக்கும் கூட, அந்த 'பவர்' இருந்தா, கண்டிப்பா சந்துல சிந்து பாடாம இருக்க மாட்டோம். வலிய வர ஸ்ரீதேவியை எட்டி உதைப்பானேன்?

லஞ்சத்தை ஒழிக்கணும்னா, ஒரே வழி, கேட்டதும் கொடுக்கரதை நாமெல்லாம் நிறுத்தணும்.

கேட்டதும் கொடுக்கலன்னா, கண்டிப்பா, கொஞ்சம் இழுத்தடிப்பாங்க. ஒரு ட்ரிப்புக்கு பதில், மூணு நாலு ட்ரிப் போக வேண்டிவரலாம். அதிக அலைச்சல், அதிக மன உளைச்சல், இதையெல்லாம் அடைய நேரிடலாம்.
ஆனா, நாமெல்லாம் இந்த கொடுமைய கொஞ்சமாவது அனுபவிச்சாதான், வருங்கால சந்ததியினருக்கு லஞ்சத்தின் விஷத்திலிருந்து விடிவு கிட்டும்.

லஞ்சத்தை முழுசா ஒழிக்கவே முடியாது. இந்தியன் தாத்தா சொன்ன மாதிரி, ஒருத்தனை தப்பு செய்யச் சொல்ரதுக்கு, லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை.
ஒரு வீட்டுப் பத்திரத்தை, அதன் உண்மை விலைக்கு பதியாமல், அடிமாட்டு விலைக்கு பதிந்து, நமக்கு அரசாங்க வரியை குறைத்து வரும்படிச் செய்யும் ரெஜிஸ்ட்ராருக்கு, தப்புச் செய்ய துட்டு கொடுப்பது இவ்வகை. இங்கே, நாமும் benefited அந்தாளும் benefited. நாமம் பெறுவது, அரசாங்கம் மட்டுமே. indirectஆ நாமும்.
இந்த இடத்தில், தவறு, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் மேல் உள்ளது. இந்த இடங்களில் இந்த மாதிரி களவாணித்தனம் செய்யாமல் இருக்க systemஐ ஒழுங்க படுத்தணும்.
ஆடிட் செய்து, ஆட்களை மடக்க வழி பண்ணணும், etc.. etc..

ஆனா, ஒரு சாமான்யனின், அடிப்படை விஷயங்களை முடித்துக் கொடுக்க, லஞ்சம் கேட்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
- பென்ஷனுக்கு அல்லாடும் வயதான பெரியவர்கள்
- அடிப்படை பிறப்பு/இறப்பு/திருமண சான்றிதழ்
- ஓட்டுனர் உரிமம்
- விவசாயிகளுக்கு கடன் கிட்டத் தேவையான கோப்புகள் விநியோகம்
- etc.. etc..

இந்த மாதிரி விஷயங்களை கவனிக்கும், சம்பளம் வாங்கும், அரசு அதிகாரிக்கு, பெரிய மண்டை குடைச்சல் வேலையெல்லாம் கிடையாது. ஒக்காந்த எடத்துலேருந்து, சில பேப்பரில் கிறுக்கி, வரும் சாமான்யனுக்கு, அவன் தேவைகளை பூர்த்தி செய்யணும்.

ஒரு பிறப்பு சான்றிதழ் வழங்க, பத்து கேள்வி இருக்கும் ஃபார்ம்.
அதை, படிச்சு பாத்து, கம்ப்யூட்டரில் தட்டச்சி, ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து, ஒரு கையெழுத்து போடணும்.
கூட்டிக் கழிச்சு பாத்தா, 10 நிமிஷ வேலை.
இந்த பிசாத்து வேலைக்கு,வாய் கூசாமல் 100ரூபாயை கொடுன்னு கேக்க அவனுக்கு எப்படி மனசு வருது, அதை கேட்டதும், சொரணையே இல்லாமல், அப்படியே எடுத்துக் கொடுக்க நம்மில் பாலருக்கு எப்படி மனசு வருது?

லஞ்சம் கேட்டதும், கொடுக்க மாட்டேன்னு சொன்னா, காணாத்ததை கண்டது போல், அவன் மிரள்கிறான். கொடுத்து கொடுத்து அந்தளவுக்கு grease போட்டு வச்சிருக்கோம் இந்த ஆட்களுக்கு.

ஒரு திருமண சான்றிதழ் வாங்க, நாலஞ்சு தடவை அலைய விட்டானுங்க. ஆனா, இறுதியில், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் கணக்கா, தொடர் படையெடுப்பில், grease போடாமலே, சான்றிதழ் கிட்டியது.

இப்போ, பிறப்பு சான்றிதழ் வாங்கப் போனா, அதே மட்டமான அனுபவம் தான் கிட்டியது. e-governance எல்லாம் செஞ்சு வச்சிருந்தாலும், அந்த தளங்களெல்லாம் வேலை செய்யாமல், திரும்ப நம்ம அரசாங்க ஆசாமிகளிடம் தொங்க வேண்டிய நிலை.
100ரூபாய் லஞ்சம் கேட்டதும், கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு ஒரு லுக் விட்டுட்டு வந்ததை சொல்லியிருந்தேன்.

அங்கேருந்து விருட்டுனு வந்ததும், சில பல வேலைகள் செய்தேன்.
அதுக்கப்பரம் திரும்ப மூன்று நாட்கள் கழித்து, அதே ஆளிடம், ரசீது கொடுத்ததும், சட்டுனு, பதினைஞ்சு நிமிஷத்துல, கைக்கு சான்றிதழ் வந்துடுச்சு. சில பல வேலைகளில், எது இந்த வேலையை சுலபமாய் முடிக்க உதவியது என்பதில் தான் என் குழுப்பமே...

செய்த சில பல வேலைகள் இவை:
- 'நூறு ரூபாய் கொடுங்க'ன்னு அவன் கேட்டதும், என் ரத்தம் கொதித்தது உண்மை. அதை முகத்திலும் காட்டியிருந்தேன். 'அதெல்லாம் தர முடியாது'ன்னு அழுத்தம் திருத்தமாவும் சொல்லியிருந்தேன். வாசலில், 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'னு ஒரு வாசகம் இருந்தது. அதனருகில் சில தொலைபேசி எண்கள் எல்லாம் இருந்தது, புகார் கொடுக்க. அவன் கிட்ட, கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, செல்பேசியில், நம்பரை அடிப்பது போல் ஒரு ஏக்ட் கொடுத்துட்டே கோபமா வெளீல வந்துட்டேன்.

- வீட்டுக்கு வந்ததும் ஒரே மண்டை குடைச்சல். என்னடா பண்றதுன்னு. விஜிலன்ஸ் விஷயங்களையெல்லாம் தேடிக்கிட்டு இருந்தேன். கூகிளில், 'லஞ்சம் சென்னை பிறப்பு சான்றிதழ்'னு தேடி, எந்தெந்த பக்கத்தில் எல்லாம் புகார்/greivanceனு இருக்கோ, அங்கெல்லாம் ஒரு புகாரை தட்டச்சினேன். அதைத் தவிர, நகராட்சி கமிஷனர், அவரு, இவரு, அவங்க, இவங்களுக்கெல்லாம் ஒரு ஈ.மடலும் அனுப்பினேன்.

- 5th pillar ஆட்களுக்கு விஷயத்தை அனுப்பியதும், உடனே பதில் வந்தது. ஒரு வாரத்துக்கு மேல இழுத்து அடிச்சாங்கன்னா, எங்க அலுவலகத்துக்கு வாங்க, நாம RTIஎல்லாம் உபயோகிச்சு வாங்கிடலாம்னு. மனசுக்குள் ஓரு சந்தோஷம், இப்படி உதவக் கூட ஒரு க்ரூப் இருக்கேன்னு. தைரியமும் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு.

- வீட்ல இருக்கரவங்களுக்கு அவசரம். டேய், நூறு தான, கொடுத்துட்டு மேட்டர வாங்கிட்டு வந்துடு, டைம் இல்லை, இதையெல்லாம் திறுத்த முடியாது, அவன் கிட்ட சண்டைக்கு நிக்காத, வீட்டுக்கு ஆட்டோ வரும், இந்த வகை அட்வைஸுகள்.

- இரண்டாம் முறையாக அங்கே சென்ற போது, செல்பேசியை கையில் ஓப்பன் பண்ணி ரெடியா வச்சுக்கிட்டேன், என்னமோ அடுத்த லைன்ல யாரோ, எங்க சம்பாஷணைகளெல்லாம் கேக்கர மாதிரி ஒரு பில்டப் கொடுக்க. விஜிலன்ஸ் ஆளுங்க, இப்படி தான் மடக்குவாங்கன்னு ஒரு இடத்தில் படிச்சிருந்தேன். அதாவது, விஜிலன்ஸ் கிட்ட புகார் கொடுத்தா, லஞ்சமா எவ்ளோ துட்டு இந்த அதிகாரி கேக்கறானோ, அந்த துட்டை விஜிலன்ஸ் கிட்ட குடுத்திடணுமாம், அவங்களும் அதை வாங்கி வச்சுக்கிட்டு, அதே தொகையை, ரசாயணம் தடவிய கரன்ஸியில் தருவாங்க.அதை எடுத்துக்கிட்டு திரும்ப அரசு அலுவலகம் போய், லஞ்சம் கேட்டவன் கிட்ட அதை கொடுத்ததும், வெளியில் காத்திருக்கும் விஜிலன்ஸ் ஆட்களுக்கு ஒரு சிக்னல் கொடுக்கணுமாம். அவங்க உடனே வந்து கையும் களவுமா ஆளை அமுக்கிடுவாங்க. ரொம்ப சுலபமா செய்யக் கூடிய வேலை இது. ஆனா, எனக்கிருக்கு சில நாட்கள் விடுமுறையில், இந்த அளவுக்கு பண்ண முடியுமா என்ற யோசனையில், சரி, பில்டப்பாவது கொடுக்கலாம்னு செல்பேசியை வைத்து ஒரு ஏக்ட் மட்டும் கொடுத்தேன்.

மேலே உள்ளதில் எது எப்படி வேலை செஞ்சுதுன்னு தெரியலை. ஆனா, இரண்டாம் முறை போய் ரசீதை கொடுத்ததும், 15 நிமிஷத்தில் கையில் சான்றிதழ்.
முதல் தடவையே இப்படி கிட்டும் நாள் எப்ப வருதோ, வளர்ந்த இந்தியாவில் வாழ்கிறோம்னு ஒரு சந்தோஷம் அப்பத்தான் கிட்டும்.

அப்படி ஒரு நாட்டை உருவாக்குவதில், பெரும் பங்கு நம்ம கையிலதான் இருக்கு.

சுலப வழியை தவிர்ப்போம்.
லஞ்சத்தை அறவே ஒழிப்போம்.

5th pillar, anticorruptionchennai மாதிரி இயக்கங்களில், உருப்பினர் ஆகிக்கோங்க, அதுவே பாதி கிணறு தாண்டியதைப் போலத்தான். vigilenceஆளுங்களும் பழக அருமையானவங்களாம் ;)

Sunday, December 06, 2009

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல்

வருஷம் என்னமா ஓடுது பாருங்க.
அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிடுச்சு!

எதுக்குள்ள? - சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில், லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையை முடிக்க, நான் பட்டபாடு முடிந்து, ரெண்டு வருஷம் ஆச்சு.

இப்ப, மீண்டும் இந்த அரசாங்க இயந்திரத்திடம் ஒரு சின்ன மேட்டர் முடிக்க வேண்டிய தேவை வந்துள்ளது. ரெண்டு வருஷத்துக்கு முன் சப்-ரெஜிஸ்ட்ரார், இப்ப நகராட்சி அலுவலரிடம் வேலை முடிக்கணும்.

ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாய் கொடுத்தா, உடனே கையில் தரப்படவேண்டிய பிறப்பு சான்றிதழுக்காக இந்த புதிய தலைவலி.

நகராட்சி அலுவலகத்துக்குப் போனேன்.
ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாயுடன் அதை நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் கிளார்க்கிடம் நீட்டினால், "நூத்தி இருபது ரூபா கொடுங்க"ன்னு வாய் கூசமா அப்பட்டமா லஞ்சம் கேட்டான் கெரகம் புடிச்சவன்.

"20 ரூபாதானே. என்னாத்துக்கு நூத்தி இருவதுன்னு" நான் கேட்டதுக்கு, "நூத்தி இருபது கொடுங்க. இன்னிக்குத்தான சர்ட்டிஃபிகேட் வேணும்?னு ஒரு எதிர் கேள்வி கேட்டான்.

எனக்கு ஒரு ரூபாய் கூட, அதிகமாய் கொடுப்பதில், உடன்பாடில்லை. அதுவும், இந்த மாதிரி சாக்கடைத்தனமாக கொஞ்சம் கூட கூசாமல் லஞ்சம் கேட்கும் பெருச்சாளிகளைப் பார்த்தால், ரத்தம் கன்னாபின்னான்னு கொதிக்க ஆரம்பிச்சுடுது.

என் ஒரே, drawback என்னான்னா, வரும் கோபத்தை வார்த்தைகளால் அள்ளிக் கொட்ட முடியாதது. மென்னு முழுங்கி, "அதெல்லாம் தர முடியாது. இருபது ரூபாதான்"ன்னு கூற மட்டுமே முடிந்தது.

"ஒரு வாரம் கழிச்சு வாங்க"ன்னு சொல்லிட்டான்.

எனக்கு, இந்த சர்ட்டிஃபிக்கேட்டின் தேவை இருந்தாலும், சரி என்னதான் பண்றான்னு பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்.

கேவலம் நூறு ரூவாய்க்கு,, இந்த மண்ட கொடச்சலும், மேலும் பலமுறையும் அலையுணுமான்னு நீங்க கேக்கலாம், என் நண்பர்கள் பலரும் கேட்டது போல்.

சும்மா, பொலம்பிக்கிட்டே மட்டும் இருந்தா, எப்பதான் விடிவு வரும், இந்த பெருச்சாளிகளிடம் இருந்து?
அதுவும், போன முறையாவது, கொஞ்சம் வயசான பெருச்சாளி. இம்மூறை, முப்பதுகளில் இருக்கும் ஒரு இளைஞன், இப்படி கூசாம லஞ்சம் கேக்கறான்.

நம் தலைமுறையும் இப்படித்தான் இருக்கப் போவுதுங்கரத நெனச்சா, ரொம்பவே வேதனையா இருக்கு.

அரசாங்கம், பல நல்ல விஷயங்களை செஞ்சுக்கிட்டு தான் இருக்கு. e-governance பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்த கெரகம் பிடிச்சவங்க முகத்தை பார்க்காமல், வீட்டிலிருந்தபடியே இணையம் மூலமாக சான்றிதழ்களை பெறும் வகை இருக்கிறது. ஆனா பாருங்க, என் நகராட்சியின் (பல்லவபுரம்) e-governance தளம் வேலை செய்வில்லை. (இல்ல, வேணும்னே அதை ஆஃப் பண்ணி வச்சிருக்காங்களான்னும் தெரியலை).

ஒரு வாரம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு வந்தாச்சு. இனி எத்தனை தடவ அலைய விடப் போறாங்கன்னு பாப்போம்.

சென்ற முறை இதே ப்ரச்சனை வந்தபோது, இனி லஞ்சம் யாராவது கேட்டால், விஜிலன்ஸில் போட்டுக் கொடுப்பேன்னு ஓரு தீர்மானம் மனசுக்குள்ள வச்சிருந்த்தேன். இம்முறை அதை செஞ்சு பாக்கலாமான்னு ஒரு வேகம் வருது, ஆனா அதை செயல்படுத்துவதை யோசிச்சா ஒரே தயக்கமா இருக்கு. எது எப்படி இருந்தாலும், ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தான் அந்த சான்றிதழை வாங்கப் போகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

என்னடா பண்ணலாம்னு இணையத்தை மேய்ந்த போது, கண்ணில் பட்ட சில ஹீரோஸின் தகவல்கள் கீழே பாருங்க.
நல்ல உத்யோகத்தில் இருக்கும் நாமே இப்படி சோம்பேரிகளாய் இரூக்கும்போது, படிக்காத பாமரனும், நம் கிராம வாசிகளும், வயதானவர்களும் எப்படி தைரியமா இந்த துரு பிடிச்ச அரசு இயந்திரத்தை எதிர்த்திருக்காங்கன்னு பாருங்க.
* கருங்கல்பாளையம் என்ற கிராமத்தில் இருக்கும், சசிகலா என்ற கூலித் தொழிலாளி, எட்டு மாத கர்பமாய் இருக்கும்போது, அரசின் மானியம் வாங்க Village administrative officerஇடம் கேட்டதர்க்கு, 100ரூ லஞ்சம் கேட்டானாம் அவன். கோபம் கொண்ட சசிகலாவும், கணவர் பச்சையப்பனும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்து, VAOவை கையும் களவுமாக பிடித்து உள்ளே போட்டார்களாம்.

பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத, பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

* கிருஷ்ணகிரியில், கருப்பண்ணன் என்ற விவசாயி தன் நிலப் பத்திரத்தின் நகலை கேட்டு விண்ணப்பித்தாரம். இங்கேயும், ராமானுஜம் என்ற VAO 200ரூபாய் லஞ்சம் கேட்டானாம். கோபம் கொண்ட கருப்பண்ணன், vigilenceல் உடனே புகார் கொடுத்து, ராமானுஜத்தை களி திங்க வைத்துள்ளார். கருப்பண்ணனுக்கு வங்கியில் கடன் பெற,இந்த நிலப் பத்திரம் அவசரமாக தேவைப் பட்டபோதும், படிந்து போகாம, இப்படி செய்துள்ளார் என்பது இங்கே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

* ஈரோட்டில், Pollution control boardல் லஞ்சம் பெருகுவதை கண்டித்து, நூற்றுக் கணக்கான விவசாயிகள் போராடி, Joseph Pandiaraj என்ற அதிகாரியை கைது செய்ய வைத்துள்ளனர்.

* Coimbatoreல் இரண்டு VAOக்களுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர், உள்ளூர் வாசிகள். கணபதி என்ற VAO 6000ரூபாய் லஞ்சம் கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.

* 150ரூபாய் லஞ்சம், ஒரு ஓய்வு பெற்ற ஏழை இராணுவ வீரரிடம் கேட்டதால், coimbatore medical collegeல் இருக்கும் ஒரு clerk கம்பி எண்ணுகிறார்.


இவ்ளோ ஹீரோஸ் ஸைலண்ட்டா தங்கள் ரௌத்தித்தை காட்டிக்கிட்டுத் தான் இருக்காங்க.
அவர்களுக்கு சாஷ்டாங்கமான நமஸ்காரம்!

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

இதைப் படிக்கும் நீங்கள், இனி வரும் காலங்களில் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ செய்தால், நானும், என் மற்ற வாசகர்களும், உங்கள் பெற்றோரும், உற்றாரும், குழந்தைகளும், உங்களை ஒரு சாக்கடைப் புழுவாக காண்பார்கள் என்று கருத்தில் கொள்க.

ஒண்ணு, Vigilence/லஞ்ச ஒழிப்புத் துறைக்கு போங்க, இல்ல, ஒரு பைசாவும் கொடுக்காம, அலஞ்சு திருஞ்சு வேலைய முடிச்சுக்கோங்க.

Say NO to சுலபவழி, please!


தொடரும்...

பி.கு1: வீட்டுக்கு ஆட்டோ வந்தா, காப்பாத்த வருவீங்கல்ல? ;)

பி.கு2: Fifth Pillar / ஐந்தாவது தூண் பத்தி தெரிஞ்சுக்கோங்க

Zero rupee note: