வாய் கிழிய எல்லா நொட்டையையும் நொட்டை சொல்றமே, நம்மாலேயே உருப்படியா ஒண்ணு கூட பண்ணமுடியலியேன்னு, உள்ளிருந்து மனசாட்சி ஸ்ட்ராங்கா குத்திக்கிட்டே இருக்குது சமீப காலமா.
சரி, அட்லீஸ்ட் சொந்தத் தெருவுலையாவது கொஞ்சம் மரத்தை வச்சு, கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு ஃபீல் வர மாதிரியாவது தெருவை மாத்தலாம்னு முடிவு பண்ணேன்.
திறந்த வெளி சாக்கடை, தாரில்லா சாலை, ரோட்டோரக் குப்பைகள் எல்லாம் இருக்கும் தெருவில், அட்லீஸ்ட் மரத்தை வச்சு பச்சை ஃபீல் குடுத்தாலாவது, மத்த கலீஜ் எஃபெக்ட் கம்மியாகட்டும்னும் ஒரு நப்பாசை.
அதைத் தவிர, என் பள்ளி கல்லூரி நாட்களில், ரொம்ப ஏக்ட்டிவ்வா இருந்தா, தெருமக்களின் welfare association எல்லாம் முடங்கிய நிலையில், ஆளாளூக்கு அவங்க வீட்டுக்குள்ள இருக்கர welfareஐ மட்டும் கவனித்துக் கொண்டு, தெருவை அம்போன்னு விட்டதில்தான், இந்த திறந்த வெளி சாக்கடையும், தாரில்லா ரோடும், குப்பையும் வந்து சேர்ந்தன.
மெம்பர்களை, இந்த மரம் வைத்தல் மூலம், உசுப்பி விட்டா, நான் கிளம்பியதும், அவங்க மத்ததை கவனிச்சுப்பாங்கன்னு ஒரு ஸைட் கேல்குலேஷனும் மனதளவில் இருந்தது.
சரின்னு, கோதாவில் இறங்க முடிவு பண்ணேன்.
தனி ஆளா இறங்கினா வேலைக்காகாதுன்னு, இந்த மேட்டரை எடுத்துச் சொல்லி, இன்னும் சில சகபாடிகளையும் கூட்டுக்குச் சேர்த்தேன். அவங்களுக்கும் இந்த விஷயத்தைச் சொன்னதும் ரொம்பவே புடிச்சுப் போச்சு. யாராச்சும், ஆரம்பிச்சு வக்க காத்துக்கிட்டு இருந்தாங்களாம்.
தெருவில் மரம் நட என்னென்ன தேவை?
* 20 மரக் கன்றுகள்
* அதைச் சுற்றிப் போட 20 பாதுகாப்பு கூண்டுகள்
* 10 கிலோ அடி உரம்
* குழி வெட்டி மரத்தை நட்டு உரம் போட்டு, கூண்டை வைக்க ஒரு சக்தி வாய்ந்த ஆள்/லேடி
* மரம் வைக்கப் போகும் இடத்தின் பின் உள்ள வீட்டில் இருப்போரிடம் ஒரு அனுமதி. ( அப்பத்தான் அவங்க தண்ணி ஊத்தி பாத்துப்பாங்க. அவங்க கையாலேயே வக்கச் சொன்னா இன்னும் பெட்டர்.)
* நகராட்சி கமிஷனரிடம் ஒரு சின்ன அனுமதி. (அப்பத்தான் ரோடு போடும்போது, புடுங்கிப் போட மாட்டாங்கய)
* உள்ளூர் கவுன்சிலரிடம் ஒரு குட்டி அனுமதி. (அவரை விட்டுட்டு பண்ணா கோச்சுப்பாரு, பின்னாளில் பிடுங்கியும் போடுவாரு)
சென்ற பதிவில் சில விவரங்கள் கிட்டியது.
மரக்கன்றுகளை Chennai Social Service என்ற தொண்டு நிறுவனம் வழங்கும் என்பது ஒன்று. முதல் வேலையாக அவர்களை தொடர்பு கொண்டு 20 gulmoharகளும், சில பூவரசு மரக்கன்றுகளும் தேவை என்றேன்.
அவர்களும், மட மடன்னு, "எல்லாம் ரெடியா இருக்கு, என்னிக்குன்னு சொல்லுங்க எங்க volunteers கூட்டிட்டு வந்து நட்டுடறோம்"னு ஊக்கப் படுத்தினாங்க.
மரக்கன்று ஒன்றுக்கு 10ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்தத் தொகை, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அவர்களின் நர்சரிக்குத் தேவைப் படுகிறது. ப்ரைவேட் நர்சரியில் நாமே வாங்கினா, ஒரு கன்றுக்கு 50 லிருந்து 100 ரூ வை ஆகும்.
அடுத்ததா, பாதுகாப்பு கூண்டு. ஆரம்பத்தில் 300ரூ என்று நினைத்தது, உள்ளூர் வெல்டரிடம் கேட்டதில், ஒன்று செய்ய 700ரூ ஆகும்னு குண்டத் தூக்கிப் போட்டாரு. 20க்கு 14000ரூ. கண்ணைக் கட்டியது.
நிழல் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், மூங்கிலில் பாதுகாப்பு கூண்டு செய்யும் ஹரீஷின் பரிச்சியம் கிட்டியது 140ரூவாய்க்கு இந்தக் கூண்டு செய்து தருகிறேன் என்று சொன்னார். கிட்டத்தட்ட அதை லாக் செய்த நேரம், ஒரு நாள் எங்கள் ஊரில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவங்க கிட்ட, மரம் நடுவதைப் பற்றியும், அதன் செலவைப் பற்றியும் சொன்ன போது, "dont worry. நான் ஒரு பத்து கூண்டுக்கு sponsor பண்றே"ன்னு சொன்னாங்க. குஷி ஆயிடுச்சு. சரின்னுட்டேன்.
இந்த மெத்தட் நல்லாருக்கேன்னு, அடுத்த நாள், என் டாக்டர் கிட்ட பேசினேன், அவரும், "நானும் மிச்ச கூண்டை sponsor செய்யறேன்"னு சொல்லிட்டாரு.
அட, இவ்ளோ சுலப்மா, சில ஆயிரங்களை பொது விஷயம்னா எடுத்து வுடறாங்களேன்னு ரொம்ப ஆச்சரியமா போச்சு எனக்கு. மடமடன்னு அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்தேன்.
ஒரு சர்க்குலர் அடித்து, என் சகபாடிகளுடன், ஒவ்வொரு வீடாகச் சென்று விஷயத்தைச் சொல்லி, அவர்களிடம் ஒரு கையெழுத்தும் வாங்கினேன்.
** இருபது வீடுகளில், இரண்டு வீட்ட்டார், அவர்கள் வீட்டின் முன் மரம் நடவே கூடாது என்று சண்டைக்கே வந்து விட்டனர். குப்பை சேரும், அது இதுன்னு நொண்டிச் சாக்கு. அவர்களின் அனுமதி நமக்குத் தேவையில்லை எனினும், அவர்களின் விருப்பமின்றி நட்டு வைத்தால், ராவோடு ராவா ஒடச்சி போட்டுடுவாங்கன்னு தெரிந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போனோம்.
கையெழுத்திட்ட சர்க்குலரை எடுத்துக்கினு போயி, நகராட்சித் தலைவரிடமும் கொடுத்து, விஷயத்தைச் சொல்லி, அவரின் ஒப்புதலும் கேட்டாயிற்று. அப்படியே, சந்தடி சாக்கில், ரோடு எப்ப சார் போடுவீங்கன்னும் கேட்டு வைத்தேன். வரும் தம்பி, ஹிஹின்னு மழுப்பிட்டாரு.
உள்ளூர் கவுன்சிலரிடமும், மேட்டரைச் சொல்ல, அவரும், "ஓ.கே தம்பி, நல்ல மஞ்சாப் பூ வர மாதிரி வைங்க"ன்னாரு. நானும், டபுள் ஓகே சொல்லிட்டேன்.
வெல்டர் ஒருவரிடம், தேவையான கூண்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து (தலா 700ரூ), கூண்டுக்கு பெயிண்ட் அடிக்க ஒரு பெயிண்ட்டரையும் பிடித்து (தலா ரூ200), 20 குழி வெட்ட ஒரு ஸ்ட்ராங்க் பாடியையும் பிடித்து (400ரூ), (CSS) Chennai Social Serviceடம் மரக்கன்றுகளுக்கும் (தலா 10ரூ) சொல்லியாச்சு.

அந்தந்த வீட்டு மாமா/மாமிக்களை விளித்து, அவர்கள் கையாலேயே குல்மோகரை நட்டுவைக்கச் செய்தார்கள் CSS ஆசாமிகள். மாமாஸ்/மாமீஸூக்கும் ஏக குஷி.
அப்படியாக இருபதையும் நட்டு, உரம் போட்டு, தண்ணீரும் ஊற்றி, மரம் வைப்பு விழா இனிதே முடிந்திருந்தது. எனக்கும் என் சகபாடிகளுக்கும், ஒரு மகிழ்ச்சியான அனுபவமாய் இருந்தது.
அன்றிரவு மழையும் பெய்து அமக்களப் படுத்தியது.
மகிழ்ச்சியை பொரட்டிப் போட்டது அடுத்த நாள். விடிஞ்சும் விடியாத அதிகாலையில், எங்க ஊரு கவுன்சிலரு கதைவை தட்டினாரு.
"இன்னா தம்பி, நான் உன்ன பூச்செடி வெக்கச் சொன்னா, காட்டு மரம் வச்சு விட்டிருக்க. இதெல்லாம் வளந்து நம்ம பைப்பெல்லாம் ஒடச்சு போட்டுடும்"னு ஆரம்பிச்சாரு.
நானும் பொறுமையா, "ஒலகம் முழுக்க, எல்லா ரோட்டுலையும் வெக்கர மரம்ணே இந்த குல்மோகரு, அழகா செவப்பா பூ பூத்து அம்சமா வரும், பைப்பெல்லாம் ஒன்னியும் பண்ணாது"ன்னேன்.
"அதெல்லாங் கெடையாது தம்பி. நானு, மக்கள் நலனைத் தான் பாக்கணும். நாளிக்கு பைப்பு ஒடஞ்சு தண்ணி வரலன்னா என்னத்தான் கேப்பாங்க்ய", இது அவரு. சொல்லிட்டுப் போயிட்டாரு.
நானும் சகபாடிகளை அவசர மீட்டிங் அழைத்து, மேட்டரைச் சொல்ல, "இவரை யாரோ கெளப்பி விட்டிருக்கணும், இல்லன்னா, வேர மீட்டர் இருக்கும்"னு ஆரூடம் சொன்னார்கள். ஒரு சகபாடி மட்டும், "நாம அவரை கூப்பிட்டு விழா எடுத்து மேள தாளத்தோட நட்டிருந்தா, இப்ப ப்ரச்சனை பண்ணியிருக்க மாட்டாரு. ஆனது ஆச்சு, பேசாம மரத்தை மாத்திடலாம், இல்லன்னா, கொஞ்ச நாள்ள புடிஞ்கிப் போட்டுடுவாரு. நம்ம டைமும் உழைப்பும் வீணாயிடும்".
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னா, இங்க வச்ச மரத்தை பிடுங்க வேண்டியிருக்கேன்னு டென்ஷனாயிட்டேன். நான் இருப்பது சில வாரங்கள்தான், இவரிடம் மல்லுக்கு நின்னால், நாம் எஸ்கேப் ஆனப்பரம், மத்தவங்களுக்குத்தான் கொடச்சல் என்பதால், 1/4 மனதுடன், மரக்கன்றுகளை மாற்ற முடிவு செய்தோம். உள்ளூர் நர்சரியில், தலா 50ரூ செலவில், அரளி, காட்டு மல்லி, மருதாணி, போன்ற குட்டி மரக்கன்றுகள் வாங்கி, ஏற்கனவே நட்டதை பிடுங்கி இதை நட்டோம்.
(எங்க வூட்டுக்கு பக்கத்துல இருக்கரத மட்டும் மாத்தலை. வரது வரட்டும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்).
இப்படி வளர்ந்து தெருவுக்கே புதிய தோரணத்தைத் தந்திருக்க வேண்டிய குல்மோகர் மரங்கள், அடுத்துள்ள நகருக்கு கொடுக்கப் பட்டு விட்டது. அரளி மரங்களாவது வெக்க வுட்டாங்களே, அதுவே போதும் :(
இதில் இன்னொரு கொடுமை, நகராட்சி கமிஷனரின் ஒப்புதல் கடுதாசியை, நகராட்சி அலுவலகத்தில் போய் வாங்கி வச்சுக்கலாம்னு, மூணு தபா போயிட்டேன்.
"சார், நாளைக்கு வாங்க,"
"அங்க போய் கேளுங்க"
"இங்க போய் கேளுங்க"
"இன்னும் கையெழுத்தாகி வரலியே"
அது இதுன்னு இழுத்துக்கிட்டு இருந்தாங்க. கடுப்பாகி, கொஞ்சம் ஃபைலைத் தொறந்து பாருங்களேன்னேன். அவரு கையெழுத்துப் போட்டு கொடுத்து ஒருவாரமா அது ஃபைல்லையேதான் கெடக்குது. இனி, அதை எங்கியோ எண்ட்டர் பண்ணி, ஸ்டாம்ப் அடிச்சு கொடுப்பாங்களாம். அதுக்கு இன்னும் எத்தினி தபா அலையணுமோ.
வாங்கர சம்பளத்துக்கு வேலை செய்யாத ஆளுங்களைப் பாத்தா, எனக்கு பத்திக்கிட்டு வருது. கெரகம் புடிச்சவனுங்க!
மரம் நடுங்கோ! ஜாலியான அனுபவம் அது!
மேலதிக தகவல் வேணும்னா, கேளுங்கோ!