recent posts...

Thursday, February 26, 2009

நான் தோல்வி அடைந்தேன்! I Failed!

உங்கள்ள சில பேருக்கு தெரிஞ்சிருக்கும். ToasMastersனு ஒரு குழு அமைப்பு இருக்கு. அநேகமா எல்லா பெரிய கொம்பேனியிலும், சில பேர் இதில் உறுப்பினரா இருப்பாங்க.
வாரத்தில ஒரு நாள் குழுமி, ஒவ்வொருவரது, 'மேடைப் பேச்சு' திறமையையும் மேம்படுத்திக் கொள்ள, எதையாவது டாப்பிக் பேசி, குறை நிறைகளை ஆராய்ந்து, மெருகேறிப்பாங்க.

எனக்கெல்லாம் மேடையில் ஏறினாலே தொடை நடுங்க ஆரம்பிச்சிடும்.
நாலாங்கிளாஸ் படிக்கும்போது, சாக்ரடீஸ் நாடகத்துல, சாக்ரட்டீஸுக்கு விஷம் கொடுக்கர காவலாளியா நடிச்சதோட, என் மேடை அனுபவம் முடிஞ்சு போச்சு.
யோசிச்சு பாத்தா, அப்ப துளி கூட பயம் இருந்ததா ஞாபகம் இல்லை. சாக்ரட்டீசுக்கு கொடுத்த அந்த விஷத்தின் தன்மையையும், அத எப்படி குடிக்கணும், குடிச்சா என்னாகும்னு செயல்விளக்கம் எல்லாம் கொடுக்கர மாதிரி, ஒரு பெரிய டயலாக் சொன்னது ஞாபகம் இருக்கு. (s.karthikeyan was socrates. where are you dude?)

அதைத் தொடர்ந்த பள்ளி வாழ்க்கையிலும், கல்லூரி வாழ்க்கையிலும், யாரும் என் தெறமைய வளக்காம, மொக்கையாக்கிட்டாங்கன்னு நெனைக்கறேன்.
இப்பெல்லாம், கூட்டத்துல பேசரதே பெரிய பாடா இருக்கு.

ஓ, கம்மிங் டு த பாயிண்ட், உங்கள்ள யாருக்காவது, பேச்சுத் திறனை வளக்கணும்னா, உங்க ஊர்ல இருக்கர டோஸ்ட்மாஸ்டர்ஸை தேடிக்கிட்டு போய் பாருங்க. துட்டு பெருசா செல்வாகாது. ரொம்ப ரொம்ப கம்மியான செலவுதான். ஆனா, நீங்க சேரும் குழுவின், உறுப்பினர்களின் உறுப்படியை பொறுத்து, உங்களுக்கு மெருகு ஏறுமா ஏறாதாங்கரது அமையும்.
ஸோ, குட் லக்.

இப்ப தலைப்பு மேட்டருக்கு வரேன்.

என் வாழ்க்கையில் என்ன ஸ்டேஜ்ல இருக்கேன்னு தெரீல. ஒரே 'பர பர'ன்னு இருக்கு.
எல்லாத்தலையும் கால வைக்கணும்னு இருக்கு.
ஆனா, எத்தையுமே முழுசா செஞ்சு முடிக்கணும்னு தோணாமையும் இருக்கு.
கிட்டார், பியாணோ, ஃபோட்டோகிராஃபி, சினிமாட்டோகிராஃபி, பெயிண்ட்டிங், கப்யூட்டர் சம்பந்தப்பட்ட சில பாடங்கள், பங்கு சந்தை மேட்டரு, மேற்படிப்பு சமாச்சாரங்கள் எல்லாம், அணில் கொய்யாப்பழம் சாப்புடர கதையா, கடிச்சு கடிச்சு தாவிக்கிட்டிருக்கேன்.
எதையும், முழுசா முடிக்கல.

அப்படிதான், டோஸ்ட்மாஸ்டரும்.
சும்மா, ஒரு ஓ.சி செஷனுக்கு கூப்பிட்டாங்களேன்னு ஒரு நாள் வேடிக்க பாக்க போயிருந்தேன்.

அதில் பாடம் எடுத்த ஒருத்தர் சொல்லிக்குடுத்த விஷயம்.
வாழ்க்கையில் வெற்றிக்கு பெரிய வழி, ஒவ்வொரு முறை தோற்கும் போதும், அதை முழு மனசுடன் ஒத்துக்கிட்டு, இரண்டு கரம் நீட்டி, அதை அரைவணைக்கணும் என்பது.

I failed! நான் தோல்வி அடைந்தேன்னு ஆத்மார்தமா சொல்லும்போது, அந்த செய்கையில், வெற்றி பெற நம்மை ஒரு படி நாமே முன்னேற்றிக் கொள்கிறோம்.

ஸோ, ரெடியா?

தமிழ்மணம் விருதுகள் 2008 பாத்திருப்பீங்க.
அறிவிப்பு வந்து ஒரு வருஷம் ஆன மாதிரி ஒரு மனப் பிரமை இருந்தாலும், இப்ப முடிவுகள் அறிவிச்சுட்டாங்க.
என் புருஷனும் சந்தைக்குப் போறாங்கர கதையா, நானும், எனது மூன்று பதிவுகளை அனுப்பியிருந்தேன்.
அதில் ஒண்ணு மட்டும் டாப்10ல் முன்னேறியிருந்தது.
ஆனா, இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் அதுவும் தேறலையாம்.

So, I Failed!

அதாவது, நான் தோல்வி அடைந்தேன்! ;)

முதல் கட்டத்தில் முன்னேறிய அனைத்து பதிவுகளும் இங்கே!

இறுதிக் கட்டத்தில் வெற்றி பெற்ற அனைத்து பதிவுகளும் இங்கே!

இறுதி கட்டத்தில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

btw, ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதும், ராசாதான் பெரியவர், போன்ற சர்ச்சைகளை நாம் கண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில், எனது தீவிர ரசிகர்கள் யாரும், தமிழ்மண அவார்டு வாங்கியவர்களை எதிர்த்து பதிவுகள் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அதை விட மிக முக்கியமாக, யாரும், சாகும் வரை உண்ணா விரதம் இருந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வீக்-எண்ட் ஆணி பிடுங்க வேண்டி இருப்பதால், என்னால் சரியான நேரத்துக்கு லைம்-ஸூஸ் கொண்டு வந்து உ.விரதத்தை நிறுத்த முடியாமல் போகலாம்.

இனி வரும் போட்டிகளில் ஞாயமாக நாம் வெற்றிக் கனியை பறிக்க முயல்வோம். டோஸ்ட்மாஸ்டர்ஸ் போல், பதிவர்களுக்கு, மொக்-மாஸ்டர்ஸ், துபாயில் குசும்பனும், சிங்கையில் கோவியாரும், சுவீடனில் செந்தழலும் நடத்தராங்க. ஏதாவது ஒரு ப்ரான்ச்ல சேந்து ஜமாய்ச்சிடலாம்.

;)

பி.கு: நான் அனுப்பியிருந்த என் மூன்று பதிவுகள்!
1) (அரசியல், சமூக விமர்சனங்கள்) FMI: 1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தடுப்பது எப்படிங்க?

2) (நகைச்சுவை) சாரு வும் என் CEO வும்

3) (காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) குட்டிப் புகைப் படங்கள் சில

Wednesday, February 25, 2009

'உள்குத்து' புரியா பதிவரினம்...

நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் எக்கச்சக்கம்.

இங்கிருக்கும், முக்கால்வாசி ஆட்களுக்கு இன்னும், 'உள்குத்து' என்ற பதிவின் நவீனத்துவம் தெரியாமல் இருக்கிறார்கள்.

என்ன கொடுமைங்க இது?
எவ்ளோ எழுதியும், எவ்ளோ படிச்சும் 'உள்குத்து' வெளங்கலியா?

மேல் விவரங்கள் இங்கே!

:)

ஸ்ஸ்ஸ்ஸ் - 'வாழ்த்தலாம்' வாங்க!

கலைமாமணி 2009 லிஸ்ட் அறிவிச்சாச்சு.

லிஸ்ட்டில் சில பேரப் பாத்தவுடன் பரவசம் கிறு கிறுன்னு ஆவுது.

71பேருக்கு மொத்தம் கொடுக்கறாங்களாம். எனக்கு, கீழே இருக்கும் பெயர்கள் மட்டும்தான் இணையத்தில் கிடைச்சுது. ஆனா, முக்கியமானதெல்லாம் கெடச்சுடுச்சுன்னே நெனைக்கறேன்.

நல்லா செலக்ட் பண்றாங்கய்யா செலக்ட்டு. (கெரகம் புடிச்சவங்க)

துறையிலிருக்கும் எல்லாருக்கும் இந்த விருது குடுத்துடுவாங்க போலருக்கு.
அதுவும் நல்லதுதான்.

விருது வாங்கியவங்களை "வாழ்த்துவோம்".

ஆனா, என் சர்வே பொட்டியில், ஒருத்தரை மட்டும்தான் வாழ்த்த முடியும்.

எந்த பெயர் பார்த்ததும், உங்களுக்கு "சந்தோஷம்" பெருக்கெடுத்து ஓடுதோ, அவங்களுக்கு வாக்கக் குத்துங்க.

நெறைய ஓட்டு வாங்கரவங்க, சேதிய புரிஞ்சுப்பாங்க :)

ஸ்ஸ்ஸ்ஸ்.பி.கு: BOLD fontல் பிற்சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. பதிவின் உள்குத்து புரியாமல் வாக்களிக்கும், அன்பர்களுக்காக ;) லேபிலிலும், உள்குத்து என்று சேர்க்க்கப்பட்டுள்ளது.
பாவம், சுகீ சிவமும், சரோஜ் நாராயண்சுவாமியும். Sorry folks! :(

Monday, February 23, 2009

அட்டகாசமான ஆஸ்கார் நொடிகள்!

நேற்று நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாமுடிந்தபின், யூ ட்யூபில் மேய்ந்த போது, கிடைத்த அற்புத ஆஸ்கார் மணித்துளிகள்.
பொறுமையா ஒவ்வொண்ணா பாருங்க.
உங்களுக்கு பிடிச்ச ஆஸ்கார் வீடியோ இருந்தா பின்னூட்டுங்க.

Brando rejecting the Oscar, citing violence against Native Americans... hmm!
http://www.youtube.com/watch?v=2QUacU0I4yU&feature=channel

God Father part2
(even now, the godfather music theme is so mesmerising)
http://www.youtube.com/watch?v=3p5Pktqkq4Q&feature=channel

Steven Spielberg winning for schindlers list
http://www.youtube.com/watch?v=7bRNEZVNVSs&feature=channel

James Cameron for titanic
http://www.youtube.com/watch?v=xJp7Wd6Af2A&feature=channel

Robert Deniro for raging bull
http://www.youtube.com/watch?v=sH5c-WeE07c&feature=related

Ben Kingsley for Gandhi
http://www.youtube.com/watch?v=Za3ezKDyats

Tom Hanks for forrest gump
http://www.youtube.com/watch?v=Vd420MYpGek&feature=channel

Al Pacino for scent of a woman
http://www.youtube.com/watch?v=Ff3f02bT_mE&feature=PlayList&p=2A1D9283860F4261&playnext=1&index=26

Julia Roberts for erin brokovich
http://www.youtube.com/watch?v=ZV0YbYECU7A

Nicole Kidman for the hours
http://www.youtube.com/watch?v=D0FWFQpnZ54&feature=channel

and ofcourse...
(மேலே இருக்கும் வீடியோக்களைப் பார்த்திருந்தால், இந்த ஆஸ்காரின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். பழந்தின்னு கொட்டை போட்டவங்களே, திக்குமுக்காடி போயிருந்தாங்க. ஆனா, நம்மாளு, அலட்டாம, மிட்டாய் கொடுத்த மாதிரி வாங்கிக்கிட்டு வந்துட்டாரு. :) )

AR Rahman for slumdog millionaire
http://www.youtube.com/watch?v=Lhnvw1moU5g

Resul Pookutty for Slumdog millionaire
http://www.youtube.com/watch?v=4RVm2KXCJt8

பி.கு: Slumdog Millionaireல் நடித்த ஏழைப் பசங்களுக்கு சரியான சம்பளம் தரல, இந்தியாவின் ஏழ்மையை வெளியில் காட்டி பணம் பண்ணிட்டாங்க அது இதுன்னு அலப்பரை பண்ணவங்களுக்கு சரியான ஒரு சவுக்கடி சமீபத்திய செய்தி.
rubina ali மற்றும் ismailக்கு தேவயான சம்பளம் கொடுத்ததோடல்லாமல், அவர்கள் படிப்புக்கும் வழி செஞ்சிருக்காங்க.
அதையும் தவிர, ஒரு கணிசமான தொகையை, இருவரும், படிப்பை முடித்ததும், அவர்களது பதினெட்டு வயதில் கிட்டுமாறு ஒரு trustம் ஏற்படுத்தியுள்ளார்களாம், படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும்.
குறிப்பா, இதை செய்து 12 மாசம் ஆச்சாம்.
வெளியில் தம்பட்டம் அடிக்காமல் செஞ்ச இந்த நல்ல காரியம், சிலரின் தொடர் நச்சரிப்பால் வெளியிட்டுள்ளார்கள்.

"Since putting in place these arrangements more than 12 months ago we have never sought to publicize them, and we are doing so now only in response to the questions raised recently in the press. We trust that the matter can now be put to bed, and we would request that the media respect the children’s privacy at this formative time in their lives."

திருந்துங்கப்பா!

Sunday, February 22, 2009

ரஹ்மான் - வர இருக்கும் படங்கள்

வந்தனமு. ஆஸ்கார் கெலிச்ச விஷயம் தெரிஞ்சுகிட்டிருப்பீங்க. இப்பதான் புல்லரிப்பில் இருந்து வெளீல வாரேன்.

ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்ளும் இவ்வேளையில், இன்னொரு முக்கியமான விஷயமும் ஞாபகம் வருது.

அதாவது, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதுதான் அது.
அதாவது, இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு, தலைப்பில், ரஹ்மான் இருந்தா போணி ஆகும் ;)

இந்த வருடமும், அடுத்த வருடமும், வர இருக்கும் படங்கள் இவை.
விக்கியிலிருந்து உஷார் பண்ணினது.
ஆச்சரியம் என்னன்னா, விக்கி பக்கம், அதுக்குள்ள, 'academy award winning Indian'ன்னு சொல்லுது. பயங்கர ரசிகர் ஒருத்தர், நொடிப்பொழுதுல அப்டேட்டியிருக்காரு.
வாழ்க அவரு ;)

Nair San (Japanese/Mongolian)
Blue (Hindi)
Puli (Telugu)
Ashokavanam (Tamil)
Raavan (Hindi)
Chennaiyil Oru Mazhaikalam (Tamil)
Eight by Ten (Hindi)
Sultan (Arasan?) (Tamil)
Vinnaithaandi Varuvaaya (Tamil)
Endhiran (Tamil)
The 19th Step (Japanese)பி.கு: விக்கியில், ரஹ்மானின் நல்ல படம் போடுங்கப்பா. அவரின் 'தன்மையை' படம் ப்ரதிபலிக்கட்டும்.

முக்கிய Oscar முடிவுகள்

அதிரடியா தொடங்கிடுச்சு இன்றைய ஆஸ்கார் விருது வழங்கும் விழா.

எது நமக்கு முக்கியம்? Slumdog Millionaireதான்.

பத்து பரிந்துரைகளில், இதுவரை, எதெல்லாம் கிட்டியதோ, அதை சுடச்சுட, கீழே வழங்கியுள்ளேன் ;)

EIGHT wins out of the possible NINE!
வெற்றி! வெற்றி! வெற்றி!

Adapted Screenplay - Simon Beaufoy - வெற்றி!

Achievement in Cinematography - Anthony Dod Mantle - வெற்றி!

Achievement in Sound Mixing - Ian Tapp, Richard Pryke and Resul Pookutty - வெற்றி!
Resul says, he dedicates the award to our country. The country which gavethe world the word OM!! :)

Achievement in Film Editing - Chris Dickens - வெற்றி!

Achievement in Music Written for Motion Pictures (Original Score) - A.R. Rahman - வெற்றி!!!!

Achievement in Music Written for Motion Pictures (Original Song) - Music by A.R. Rahman; Lyric by Gulzar - வெற்றி!!!!

Achievement in Directing - Danny Boyle - வெற்றி!!!!

Best Motion Picture of the Year - Christian Colson - வெற்றி!!!!

Achievement in Music Written for Motion Pictures (Original Song) - Music by A.R. Rahman; Lyric by A.R. Rahman and Maya Arulpragasam - இல்லை! :( (but, thats OK. he couldnt have won two in this category anyway :) மாயா ஜெயிச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும். ஏதாவது 'சேதி' சொல்லியிருப்பாங்க. ஆனா, அவங்க விழாவுக்கு வரலைன்னு நெனைக்கறேன்.)

Achievement in Sound Editing - Glenn Freemantle and Tom Sayers - இல்லை! :( (Batman - Dark KNight, took it)

மற்ற முக்கியமானவை:
SMILE PINKI - Best Short subject documentary - வெற்றி!
Pinki, a girl in rural India whose cleft lip has made her a social outcast, has a chance for a new life when she meets a dedicated social worker.

மொத்த results இங்கையும் பாக்கலாம்.

Resul Pookutty, Oscar hopeful

ரஹ்மான் களேபரத்தில், இவர மறந்துட்டோம்.

ரசூல் பூக்குட்டியும், slumdog millionaireல் sound mixingக்கு oscar பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அந்த காலத்தில்(?) ஆகாசவாணீயில் வந்த நாடகங்கள் தான் இவருக்கு soundன் முதல் பாடமாக இருந்ததாம் :)

இவரின் சமீபத்திய பேட்டி.


இதுவரை இவர் பணிபுரிந்துள்ள படங்கள்.
Slumdog Millionaire (January 23, 2009) (Released)
Acid Factory (2009) (Under Production)
Raat Gayi Baat Gayi (2009) (Under Production)
Ghajini (December 24, 2008) (Released)
Woodstock Villa (May 30, 2008) (Released)
Mithya (February 8, 2008) (Released)
Dus Kahaniyaan (December 7, 2007) (Released)
Saawariya (November 9, 2007) (Released)
Gandhi My Father (August 3, 2007) (Released)
Mixed Doubles (February 10, 2006) (Released)
Matrubhoomi (July 8, 2005) (Released)
Musafir (December 10, 2004) (Released)
Kyun! Ho Gaya Na (August 13, 2004) (Released)
Agni Varsha (August 30, 2002) (Released)
Snip! (2000) (Released)

ரசூல், all the best!

Thursday, February 19, 2009

Wednesday, February 18, 2009

பொன்னியின் செல்வன் in a nut shell...

கல்கியின் பொன்னியின் செல்வன், இம்முறை சென்னை சென்ற போது கையில் கிட்டியது.
இதுவரை பலரும், பொ.செ படிச்சதில்லியா இல்லியான்னு பல தடவை கேட்டிருக்காங்க. சரி, அப்படி என்னதான் இருக்குன்னு வாங்கி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். மொத்தம் அஞ்சு புக்கு தடி தடியா இருக்கு. ஹிஸ்டரி ஆஃப் இந்தியான்னு ஒரு புக்கு 10th படிக்கும்போது இருந்துது, அந்த புக் ஸைஸ் பாத்தாலே தூக்கம் வந்துடும். பாபர் முதல், மவுண்ட்பேட்டன் வரை, இந்தியாவை கூறு போட்டு ஆண்டதை விலாவாரியா பிரிச்சு மேஞ்சிருப்பாங்க.
புக் கிரிக்கெட் வெளையாட ரொம்ப உபயோகமான புக்கா இருந்துச்சு.

இப்ப பொ.செ, இம்மாம் பெருசா, பக்கம் பக்கமா இருந்ததப் பாத்ததும் பெரிய அயற்சி.
ஆனாலும், விடா முயற்சியுடன், முதல் பாகம் படிச்சு முடிச்சாச்சு.
அரசர் காலத்து கதைங்கரதால, ஏகப்பட்ட அரசர், சிற்றரசர், அந்த ஊர், இந்த ஊர்னு கன்னாபின்னான்னு பக்கம் பக்கமா விதவிதமா பெயர்கள்.

தெனாலி படத்துல, ஒரு ஏட்டைய்யா, 'எழுதி ரொம்ப நாளாச்சு, டச்சு விட்டுப்போச்சு'ன்னு ஜெயராம்கிட்ட சொல்லுவாரு.
அந்த மாதிரி, பொத்தகம் எல்லாம் படிச்சு ரொம்ப காலமான மாதிரி இருக்கு. டச்சு விட்டுப் போச்சு. இவ்ளோ பேரையும் ஊரையும் ஞாபகம் வெச்சுக்கிட்டு, ஒரு சேப்டர்லருந்து அடுத்த சேப்டர் தாவருதே ப்ரம்ம ப்ரயத்தனமா இருக்கு.

அன்றைய தமிழகம், சீரும் செழிப்புமா இருந்ததுன்னு தெரியும். ஆனா, கல்கியின் வர்ணனையில் பழவையாறும், தச்ஞாவூரும் சொர்கபுரி மாதிரி இருந்ததாய் தெரிகிறது. காவேரியின் சிறப்பு, அந்த காலத்து விஷயங்கள் பலவெல்லாம், சூப்பரா பரப்பியிருக்காரு புக் முழுவதும்.

முதல் பாகம் முடிச்சு, இன்னும் நாலு பாகம் இருக்கு. சரி, படிச்ச வரைக்கும், நமக்கே சொல்லிப் பாத்துக்கலாம், மறக்காம இருக்கும், அடுத்த பாகம் படிக்கும்போது கொழப்பம் வராம இருக்க தோதா இருக்கும்னு, இதுவரை படிச்சதின் சுறுக்கம் கீழே.
பொ.செ கரச்சு குடிச்சவங்க, குத்தம் குறையை திருத்துங்க ;)

பொன்னியின் செல்வன் - பாகம்1
**** ~ ******** ~ ******** ~ ****

முக்கிய பாத்திரங்கள்:
* வந்தியத்தேவன் - ஹீரோ (பாகம்1ஐ பொறுத்த வரை). சோழ இளவரசர் ஆதித்ய கரிகாலனின் உயிர் நண்பன். வாணர் குலத்தை சேர்ந்த அரசாளும் பரம்பரையை சேர்ந்தாலும், இப்போ கைவசம் எதுவும் இல்லை.
* சுந்தர சோழர் - சோழச் சக்ரவர்த்தி. வயசானவரு. பேரலைஸ் ஆகி ரெண்டு காலும் விளங்காமல், படுத்த படுக்கையில் கிடப்பவர். தஞ்சாவூரில் வாழ்கிறார்.
* குந்தவை - இளவரசி. அநேகமா ஹீரோயின். சுந்தர சோழரின் மகள். பழவையாறீல் உள்ள அரண்மனையில் வாசம்.
* ஆதித்ய கரிகாலன் - பட்டத்து இளவரசர். சக்ரவர்த்தியின் மூத்த புதல்வர். குந்தவைக்கு அண்ணன். காஞ்சியில் இருக்கிறார்.
* அருண்மொழி - இளவரசர். சக்ரவர்த்தியின் கடைப் பிள்ளை. இலங்கையின் மேல் படையெடுத்துச் சென்றுள்ளார்.
* பெரிய பழுவேட்டரையர் - வில்லன். 60 வயசு அரசர். சக்ரவர்த்தியின் உடன் இருப்பவர். சக்ரவர்த்தியை தஞ்சையில் house arrest செய்து வைத்து மொத்த அரசாங்கத்தையும் இவர் நடத்துவதாக ஊர் பேச்சு.
* மதுராந்தகத் தேவர் - சக்ரவர்த்தியின் அண்ணன் மகன். வில்லனின் மருமகன்.
* நந்தினி - வில்லனின் இளைய வயது ராணி. வில்லி.
* வானதி - குந்தவையின் தோழி. அருண்மொழியின் காதலி.
* ஆழ்வார்க்கடியான் - வைஷ்ணவ பக்தன். நந்தினியின் 'வளர்ப்பு' அண்னன். ஒற்றன்.

இன்னும் ஒரு இருபது பேர் முதல் பாகத்தில் வராங்க. எழுத்து கூட்டி அவங்க பேரு எழுதரதுக்குள்ள தாவு தீந்திடும்.

இனி கதையின் சுறுக்கத்தைப் பாப்பமா?

சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நடக்கர கதை.
சோழச் சக்ரவர்த்தி, சுந்தர சோழர், வயசான காலத்துல வாத நோய் வந்து ரெண்டு காலும் விளங்காம படுத்த படுக்கையாகிடறாரு. தனக்குப்பரம் தன் மகன் ஆதித்த கரிகாலன் தான் அரசு ஏற்கணும்னு அவரை பட்டத்து இளவரசராக சொல்லி வச்சிருக்காரு.
பழுவேட்டரையருக்கோ, தன் மருமகன், சக்ரவர்த்தியின் அண்ணன் மகன், மதுராந்தகத் தேவரை அரசராக்கணும் ஆசை.
அரசியலே வேணாம், சிவனே கதின்னு சாமியாரா இருந்த மதுராந்தகத் தேவரை, தன் இள மனைவியை விட்டு மனமாற்றம் செஞ்சு, மதுராந்தகத் தேவருக்குள்ளும் அரசாங்க மோகத்தை ஏத்தி விட்டுடறாரு.
பழுவேட்டரையர் சக்ரவர்த்தியை house arrest பண்ணி, குந்தவை, ஆதித்ய கரிகாலர், அருண்மொழி இவங்களையெல்லாம் காலி பண்ணி, தன் எண்ணத்தை ஈடேற்ற நினைக்கிறார் என்பது ஆதித்ய கரிகாலனுகும் அரசல் பரசலா தெரிய வருது.
ஆதித்ய கரிகாலர், தன் தந்தையை தஞ்சையை விட்டு வெளியே வந்து காஞ்சியில் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும், அப்பாலிக்கா பழுவேட்டரையரின் சதியை முறியடிக்கணும்னு ஆசை.
தன் உயிர் நண்பன், வந்தியத்தேவன், நம் ஹீரொ, அவன் கிட்ட ஒரு ஓலையை குடுத்து, சக்ரவர்த்தியிடம் சேக்க சொல்றாரு. அப்படியே தன் தங்கை குந்தவைக்கும் இன்னொரு ஓலையை கொடுத்து விடறாரு.

நந்தினி, பழுவேட்டறையரின் இள ராணி. ரொம்ப அழகான அல்லி ராணி. இவங்க ஃப்ளாஷ்பேக் ஏகப்பட்ட மேட்டர் வருது.
அர்ச்சகரின் மகள்னு சொல்லிக்கிட்டு, சின்ன வயசுலயே சோழ ராணி கிட்ட இவங்க குடும்பத்துடன் வராங்க. ராணியும், நந்தினியை குந்தவை, ஆதித்ய கரிகாலருடன் சேத்து விடறாங்க. குந்தவைக்கு நந்தினியை சின்ன வயசுலையே பிடிக்காது. கரிகாலருக்கு நந்தினியை பார்த்ததும் காதல். ஆனா, பெருசுங்க எல்லாம், அர்ச்சகரின் பெண் அரசியாக முடியாது, ஸோ, அவள நீ மறந்துடுன்னு கரிகாலர் கிட்ட சொல்லிடறாங்க. அவரும், வேற போர் விஷயமா வெளீல போயிடறாரு.
பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் வென்று, அவனை விரட்டிக்கிட்டு போறாரு. காட்டுல ஒரு குடிசையில், அடிபட்ட வீரபாண்டியன் படுத்துக் கிடக்கறாரு. அங்க அவர கவனிச்சிக்கிட்டு நந்தினி. கரிகாலன் இல்லன்னானதும், வீரபாண்டியனை காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். தன் காதலனை கொல்லாதேன்னு கரிகாலனின் காலைப் பிடிச்சு கேக்கறாங்க. ஆனா, போர் வெறியில் இருக்கும் கரிகாலன் காதுல அதெல்லாம் விழலை, நந்தினியின் முன்னாலேயே, வீரபாண்டியனின் தலையை வெட்டிடறாரு.
நந்தினிக்கு, பாண்டியர்கள் சில பேருடனும் ஒரு லிங்க் இருக்கு. ரவிதாஸன் என்பவன் அடிக்கடி இவங்கள வந்து பாக்கரதும், சோழர் குலத்தை போட்டுத்தாக்கவும், திட்டம் தீட்டும் கும்பலுக்கு ரவிதாசன் தலைவன்.

ஓலையை கொண்டுவந்த வந்தியத்தேவன், பல ப்ரச்சனைகளைச் சந்திக்கிறான். போகும் வழியில் தன் நண்பன் கடம்பூரானை சந்தித்து விட்டுச் செல்லலாம்னு அவங்க அரசவைக்குப் போறான். அங்க ராத்திரி, பழுவேட்டரையர், மற்றும் பல சிற்றரசர்களின் ரகசிய ஆலோசனை நடக்கரதை பாக்கறான். கரிகாலனுக்கு பதிலா, மதுராந்தகத் தேவரை அரசனாக்கணும்னு அங்க முடிவு செய்யராங்க.
தான் செல்லும் இடத்திலெல்லாம் ஆழ்வார்கடியானையும் வந்தியத்தேவன் பார்கிகறான். பார்பதர்க்கு விஷ்ணு பக்தனாயிருந்தாலும், அவனும் சில விவரங்களை சேகரிக்கத் திரியும் ஒற்றன் போலவே வந்தியத்தேவனுக்கு தெரிகிறான்.
ஆழ்வார்கடியானின் ஆலோனையின் படி, ஒரு ஜோசியரை சென்று பார்க்கிறான் வந்தியத்தேவன்.
சென்ற இடத்தில், இளவரசி குந்தவையைப் பார்க்கிறான். கண்டதும் காதல் மாதிரி, ஈர்க்கப்படுகிறான். ஆனா, அவ தான் குந்தவைன்னு அப்ப அவனுக்கு தெரியாததால், தான் கொண்டு வந்த ஓலையை கொடுக்க முடியவில்லை.

அங்கேருந்து கெளம்பி தஞ்சாவூர் கோட்டைக்குள் புகுந்து, சக்ரவர்த்தியின் ஓலையைக் கொடுத்துவிட்டு. அப்படியே நந்தினியைப் பார்த்துவிட்டு, அவளுக்கும் ஆழ்வார்கடியானின் மெசேஜ் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அப்படியே குந்தவையையும் பார்த்துவிட்டு அவளுக்கான ஓலையையும் கொடுக்கிறான் வந்தியத்தேவன்.

ஓலையைப் பெற்றுக் கொண்ட குந்தவை, வந்தியத்தேவனிடம் இன்னொரு ஓலை கொடுத்து, இலங்கையில் போர் புரியும் இளவரசர் அருண்மொழியிடம் சேர்க்கச் சொல்கிறார். வந்தியத்தேவனும் இலங்கையை நோக்கிப் பயணப்படுகிறான்.

மாமல்லபுரத்தில் ஆதித்ய கரிகாலரும், அவரின் தாத்தாவும், நண்பரும், ஊர் நிலவரத்தைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழுவேட்டரையரின் சதி எண்ணங்கள் அரசல் பரசலாக கரிகாலனுக்கும் தெரிகிறது. முதலில், தந்தையையும், தம்பியையும், தங்கையையும், தான் இருக்குமிடத்துக்கு வரவழைத்த பிறகுதான், அடுத்த கட்ட நடவடிக்கையை யோசிக்க வேண்டும்னு நெனைக்கறாரு.

முதல் பாகம் முற்றும்.
**** ~ ******** ~ ******** ~ ****

அருமையா போவுதுல்ல கதை? ஆனா, நான் சூப்பரா சொதப்பரேன்ல?
ஒரிஜினல் படிச்சீங்கன்னா, நந்தினியைப் பற்றியும், குந்தவை வந்தியத்தேவன் சந்திப்பு நிகழ்வுகளெல்லாம் அருமையா சொல்லியிருக்கரது புரியும். ஜிவ்வுனு இழுக்கும்.

நீங்க படிச்சிருக்கீங்களா இந்த நாவலை? (புதினம்னு எங்கையோ பாத்தேன். அப்படீன்னா?)

அடுத்த பாகம் இன்னும் படிக்க ஆரம்பிக்கலை.
கூடிய விரைவில்... ;)

புக் வாங்கினப்பரம் தான் தெரீது, ஆன்லைன்லயே இருக்குன்னு.
படிக்காதவங்க படிக்க ஆரம்பிச்சுடுங்க.

Tuesday, February 17, 2009

பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்

பாலா சார்,

நான் கடவுள்னு ஒரு படத்தை மூணு வருஷம் மெனக்கெட்டு எடுத்து கொடுத்திருக்கீங்க.
படத்தின் இரண்டாம் பாகத்தில், குறிப்பா, கடைசி பதினைந்து நிமிடங்களில் இருந்த தவறான கட்டிங்கினால், ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்பில்லாமல், முதல் இரண்டு மணி நேரம் கிட்டிய ப்ரமிப்பை சில நொடிகளில் புஸ்ஸென்று தொலைக்க நேரிட்டது.

லாட்டரி சீட்டை தினத்தந்தியில் பரிசு விழுந்ததா என்று சரிபார்க்கும்போது, பத்து டிஜிட்டில், முதல் ஒம்போது சரியாக இருந்து, கடைசி எண்ணைத் தவறவிட்டால், ஒரு வெறுமை ஏற்படுமே அப்படியாகப் போச்சுது எனக்கு.

(பிரியாணி உவமை ஏற்கனவே என் திரைப்பார்வையில் சொல்லியாச்சு)

இவ்ளோ நடந்தும், ஒண்ணுமே நடக்காத மாதிரி, எம்மில் அநேகம் பேர், உங்கள் படைப்பை தலையில் தூக்கி வைத்து ஆடியதை பார்த்திருப்பீர்கள்.

தமிழ் திரையுலகில், வலது கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய நல்ல இயக்குனர்களில் ஒருவர் நீங்கள். நீங்கள் இப்படி சருக்கியதை ஒப்புக்கொள்ள முடியாமல், சரக்கு நல்லாத்தான் இருக்குன்னு சாதிச்சவங்க அவங்கல்லாம்.

உங்கள் அடுத்தடுத்த படைப்புகளில், விட்டதைப் பிடித்து, பிதாமகன் போல் மேலெழுவீர்கள் என்பதில் கண்டிப்பாய் ஐயமில்லை.

அதுக்கு முன்னாடி ஒரே ஒரு வேண்டுகோள்.

சென்ஸாருக்கு முன்னாடி முதல் பிரதியைப் பார்த்துத்தான், ராஜா உட்பட, பலபேரும் புளகாங்கிதம் அடைஞ்சு, அது இதுன்னு ஏகப்பட்ட பில்ட்-அப் கொடுத்தாங்க படத்துக்கு.
நானும் அதை நம்பரேன்.
சென்ஸாரின் கத்தி, தத்தக்கா பித்தக்கான்னு வெட்டியதால்தான், கடைசி 15 நிமிடங்கள் பிசுபிசுத்துப் போச்சுன்னு தோணுது.

அப்படியாகின், தயவு செய்து, இந்தப் படத்தின் டிவிடி இறக்கும்போது, theatrical versionம், டைரக்டரின் un-cut versionம் வெளிக்கொணருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ராஜாவும், மற்றவர்களும் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று கூறி, வாய்ப்பளித்த அனைவருக்கும், நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.
-சர்வேசன்.

Monday, February 16, 2009

நான் கடவுள் - பெருத்த ஏமாற்றம்

மொதல்ல படம் பாத்தவங்க ஒரு விஷயம் சொல்லுங்க.

படத்தின் கடைசி சில நிமிடங்களில், ஆர்யாக்கும் வில்லனுக்கும் சண்டை நடக்கும். கோர்ட் சீனுக்கு அடுத்த சீன்ல, ஒரு கோர்வையே இல்லாமல், திடீர்னு ரெண்டு பேரும் பாத்து அடிச்சுப்பாங்க.
நீங்க பாக்கும்போதும் அப்படிதான் இருந்துச்சா? இல்ல என் தியேட்டர் காரன் அவன் இஷ்டத்துக்கு கத்திரி போட்டுட்டானா?

ஒரிஜனலே அப்படின்னா, ரொம்ப கொடுமைங்க பாலா சார் இது.
மூணு வருஷம் முக்கி முக்கி எடுத்துட்டு ஒரு படத்தை இப்படியா அமெச்சூர்தனமா முடிக்கரது?
ஆர்யாவின் கஷ்டமும், பூஜாவின் நம்பிக்கையும், அந்த உடல் ஊனமுற்றவர்களின் உழைப்பும், எங்களின் இத்தனை வருட எதிர்பார்ப்பும் புஸ்வாணமா போச்சு.

படம் முடிஞ்சு வெளீல வரும்போது, 100ரூபா கொடுத்து பிரியாணி வாங்கி, ஆசை ஆசையா சாப்பிட்டா, பிரியாணியில் சுவை குறைஞ்சா ஒரு வெறுமை வருமே, அப்படி இருந்துச்சு எனக்கு. சப்புன்னு!

ஆர்யா வரும் காட்சிகள் ரொம்பக் குறைவு. ஒரு தேர்ந்த டைரக்டர், ஆர்யா காட்சிகளை ஒரு மூணு மாசத்துல முடிச்சு, அவர வேர பொழப்ப பாக்க விட்டிருக்கலாம். மூணு வருஷம், அவரை லாக் பண்ணினது தேவையற்றது. பாவம் ஆர்யா! (அஜித் தப்பிச்சாரு. ஆனா, நா.க'வை தவிர்த்துவிட்டு ஏகன்ல நடிச்சதுக்கு, அவங்க ஊர்ல தபால்காரரா ரெண்டு வருஷம் வேல செஞ்சிருக்கலாம்).

பூஜா தத்ரூபமா நடிச்சிருக்காங்க. ஆனா, அவங்க பாடர பழைய பாட்டெல்லாம், அவங்க சொந்தக் கொரல்லையோ, இல்ல வேர யாராவது டப்பிங் ஆள வச்சோ, கொஞ்சூண்டு இசை மட்டும் சேத்து பாடியிருக்கணும். அத்த வுட்டுட்டு, பழைய பாட்டின் ஒரிஜினலையே, சுசீலா, ஜிக்கி குரலில் சேர்த்திருப்பது, ரொம்ப கேவலமா இருந்தது பாக்க. இந்த குளர்படியால், பூஜாவின் நடிப்பில் கவனமே செலுத்த முடியாமல் போனது.
ராஜாவுக்கு கூடவா இது தோணாம போயிடுச்சு? என்ன கொடுமைங்க இது?
'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே'
'சொந்தமில்லை பந்தமில்லை'
போன்ற பாட்டெல்லாம் வருது.

இதற்காக போடப்பட்ட 'மாதா உன் கோயிலில்' பாட்டையும் படத்துல காணும்.

நடூல எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, நயன் தாரா கெட்டப்பில் பாட்டெல்லாம் தேவையில்லா இடைச்செறுகல்.

ஸ்ஸ்ஸ். குறைகளைப் பாத்தாச்சு.

இனி கொஞ்சம் நிறைகளை பாக்கலாம்.

ஆர்யா. கொடுத்த வேலையை கச்சிதமா செஞ்சிருக்காரு.
'அகோரி' நடை கலக்கல். கஞ்சா அடிச்சவங்க குரல் மாதிரி, சூப்பர் டயலாக் டெலிவரி, கொஞ்சமே பேசியிருந்தாலும்.
ஒரே கொடுமை (மீண்டும் குறை :) ), இவரு பேசினதுல பாதி புரியல. இந்தியில் பேசறாரு. சில இடங்களில், அவரே ட்ரான்ஸ்லேஷன் பண்ணி சொல்லிடரதால பொழச்சோம்.

சினிமோட்டோகிராஃபி, அசத்தலோ அசத்தல்.
காசி அகோரி குருநாதரை காண்பித்த ஏங்கிள், லைட்டிங்கும், மலைக்கோயில் சாமியாரை காண்பித்த ஏங்கிள், லைட்டிங்கும் சிம்ப்ளீ சூப்பர்ப்.
இப்படி படம் புடிச்சு காமிச்சா, எந்த தாடி வச்ச ஆளும், சாமியாரா களத்தில் இறங்கிடலாம்.
அந்த காட்சிகளுக்கு அவ்ளோ அழகு இருந்தது. பின்னணியில் புகை, அவர்களின் உடையின் நிறம் என அந்த இரண்டு நிமிடங்கள் அட்டகாசமா இருந்தது.

பின்னணி இசை, அருமையா இருந்தது. ஆர்யா அறிமுகக் காட்சி உடுக்கை, ப்ரமிப்பு. ஆனா, ஒரு 'தீம்' மீஜிக் எதுவும், மனதில் பதியவில்லை.
க்ளைமாக்ஸில் பூஜா பேசும் நீண்ட வசனத்துக்கு, இசைக் கோர்வை செய்யாதது, நல்ல முடிவு.
டைட்டில் சாங் ஏனைய்யா இந்தியில் போட்டீங்க? காட்சியோடு ஒத்துப் போகணும்னா? அழகான ஒரு தமிழ் பஜனை பாடலை, டமில் சினிமா இழந்தது.
பிச்சைப்பாத்திரம் பாட்டை ராஜாவே பாடியிருந்தா ஒரு 'இது' இருந்திருக்கும். மது பாலகிருஷ்ணன் குரலில், கனம் இல்லாமல், ஒரு சாதா பக்திப் பாடல் போல் இருந்தது.

ராஜாவிடம் வைரமுத்து இல்லாததன் வெறுமை அப்பட்டமா தெரியுது.
பிச்சைப்பாத்திரம் பாட்டு அநேகமா ராஜாவே எழுதியிருக்கணும்.
'பிச்சைப் பாத்திரம் என் கையில், அதன் சூத்திரம் உன் கையில்' அது இதுன்னு ஏதோ சில்லரைத்தனமான வரிகள்.

எடிட்டிங் மகா சொதப்பல். இறுதிக் கட்ட காட்சி, கோர்க்கும்போது, லீவுல போயிட்டாரு போலருக்கு. பூஜா திடீர்னு இங்க இருக்காங்க. அடுத்த காட்சியில் திடீர்னு அங்க இருக்காங்க. அதற்கு அடுத்த காட்சியில் திடீர்னு மாதா கோயில்ல இருக்காங்க. திடீர்ன்னு வில்லனும் ஆர்யாவும் மீட் பண்ணி அடிச்சுக்கராங்க.
ஆர்யா அறிமுகப் பாடலில் இடையிடையே வரும் சண்டைகள். ஏன் ஆர்யா அடிக்கறாரு அவனுங்களையெல்லாம்? ட்ரெயிலரில் வந்த சில காட்சிகள் படத்தில் காணோம்.
ஸ்ஸ்ஸ்ஸ்.
( என் தியேட்டர்காரனின் சொதப்பலா என்று ஊர்ஜீதம் செய்யவும். அவன உண்டு இல்லன்னு பண்ணிடறேன்:) ).

படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட், பிச்சைக்காரர்களின் முதலாளியாய் வரும் மொட்டை பாஸும், அவரின் அடியாள் முருகனும்.
மொட்டை பாஸ் ஏற்கனவே பிதாமகனில், விக்ரமுடன் ஜெயிலில் சண்டை போட்ட்வர்.
இந்தப் படத்தில், பின்னியிருக்காரு பின்னி. அசாத்ய நடிப்பு. நமக்கே பயம் வருது அவர பாத்தா.

அதை விட பெரிய ப்ளஸ் பாயிண்ட், சில ஊனமுற்றவர்களின் நடிப்பு. நல்லா பண்ணியிருக்காங்க. இவங்கள நடிக்க வெக்கரதுக்கு, பாலாவின் உழைப்பை பாராட்டியே ஆகணும்.

ஜெயமோகனின் யதார்த்த வசனமும், பிச்சைக்காரர்களின் நையாண்டி வசனங்களும் நல்லா இருந்தது. க்ளைமாக்ஸில் பூஜாவின் நீண்ட வசனம் just white noise! இது எடிட்டிங்க் குளறுபடியால் திடீர் திடீர் என்று வந்த காட்சியால் கூட இருக்கலாம்.

படத்தில் நிறைய விஷயம் கையாண்ட பாலா எதையும் ஒரு அழுத்தமா பதிக்கலை.

நான் கடவுள் - நான் ஏமாந்தேன்!


நீங்க?

Thursday, February 12, 2009

Action படங்கள்

ஆக்ஷன் படங்கள் வேணும்னு பிட்'டின் ஃபெப்ரவரி மாத போட்டி அறிவிப்பு சொல்லுது.

(படங்களை க்ளிக்கினால் பெத்தையாய் பார்க்கலாம்)

நான் எடுத்ததில் பிடித்த சிலதை கீழே கொடுத்துள்ளேன். பாத்துட்டு கருத்ஸ் சொல்லுங்க.
1) கேரளா சென்ற போது அங்கு ஒரு 'தீ மிதி' திருவிழாவில், புல் உடை அணிந்தவர் ஓடி ஆடி தொம்சம் செய்த போது, அவருடன் ஆக்ஷன் புரிந்தவர்கள் கீழே.


2) சமீபத்தில் Berkeleyல் கண்டு ரசித்த குதிரைப் பந்தயத்தின் கடைசி நொடிகள்


3) இது சென்னையின் தாஜ் ஃபிஷர்மென் கோவ்'ல், ஒரு 'சிற்பி' நெருப்பில் கண்ணாடியை உருக்கி குட்டி பொம்மை செய்யும்போது எடுத்த படம். குட்டி பொம்மைக்கு, ஆயிரத்துக்கு கிட்டே விலையை சொன்னது, கொஞ்சம் ஓவர் ஆக்ஷன்.


கொசுறு:
அதே தாஜ் ஃபிஷர்மென் கோவ்'ல் கரகாட்டமும், அதைக் கண்டு அங்கு வந்திருந்த வெளிநாட்டவர் காட்டிய ஓவர் ஆக்ஷன், ரொம்ப ஓவர். வெளிநாட்டவரின் ஓவர் ஆக்ஷனுக்கு ஈடு செய்ய, நம்மவர்கள் சிலர் மேடை ஏறியதும் ரொம்ப ஓவர் ;)


ஹாப்பி வெள்ளி!

பி.கு: Valentines dayக்கு தடிமாடுகள் தேவையா? தெரிவிக்கவும்! :)

Friday, February 06, 2009

Valentines Day - முதலியிடமிருந்து காதலர்கள் தப்பிக்க வழி!

எங்கேருந்துதான் திடீர்னு இது வந்ததோ?
ஸ்ரீ ராம் சேனாவாம்.

கொரங்கு சேனா'ன்னு வச்சிருக்கலாம் பேரை.

கபோதிங்க, மங்களூர் pubல், பெண்களை அடித்து தங்கள் வீரத்தை காண்பித்தார்கள்.

இப்போது, கலாச்சார காவலர்களின் அடுத்த திருப்பணி ஃபெப்ரவரி 14ஆம் தேதி நடக்குமாம்.
அதாவது, காதலர் தினத்தன்று, ஜோடியாய் திரியும் காதலர்களை கபால்னு பிடிச்சு, ஸ்பாட்லேயே ஐயர் வச்சு, திருமணம் செஞ்சு வெச்சுடுவாங்களாம்.
திருமணம் வேணாம்னு ஜகா வாங்கும் ஜோடிக்கு, ராக்கி கொடுக்கப்பட்டு, பெண்ணை கட்டாய ராக்கி கட்ட வெப்பாங்களாம்.

அட கெரகம் புடிச்சவங்களா? சின்னன்சிருசுக, காதலர் தினம்னு, பைக்லயும், பீச்லயும் சுத்திட்டுப் போனா, உங்களுக்கு எங்கடா எரீது?

கர்நாடகா போலீஸ் கமிஷனர்கிட்ட, இன்னாய்யா, ஸ்ரீ ராம் சேனா தலை முதலி இப்படி சொல்லிக்கினு திரியராரே, அவர பிடிச்சு உள்ள போடுங்கன்னு கேட்டா, முதலியின் ஆட்கள் முதலில் அவர்கள் சொல்வதை செய்யட்டும், அப்பரம் சட்டம் தன் வேலையை செய்யும்னு சொல்றாராம்.

அட கெரகம் பிடிச்சவங்களே. அப்பாவி ஜோடிகளை, பப்ளிக்கா வச்சு டார்சர் எல்லாம் பண்ணப்பரம் உங்க சட்டம் வேலையை செஞ்சா என்னா செய்யலாட்டா என்னா?

இந்த சேனா, ஊர்ல அம்புட்டு ப்ரச்சனையை விட்டுட்டு, இந்த அல்ப விஷயங்களை ஆராஞ்சுக்கினு இருக்கே, இத கேக்க ஆளில்லயா? அந்த சேனாவிலும் நிறைய சேறுதே, அது எப்படி?

நாட்டை முன்னாடி கூட்டிக்கினு போங்கடான்னா, இப்படி பின்னாடி பின்னாடி போயி கூரிய விரைவில், கற்காலம் எப்படி இருந்ததுன்னு காட்டிடுவானுவ கெரகம் பிடிச்சவனுவ.

என்னக் கேட்டீங்கன்னா, ஜோடிகள், வழக்கம் போல் ஜாலியா காதலர் தினத்தை கொண்டாடுங்க. உங்க நட்பு வட்டத்தில் எப்படியும் ஜோடி சேராம சில தடிமாடுகள் இருக்குமே, அத்தனையையும், அன்னிக்கு உங்க செலவுல, உங்க கூட பீச்சுக்கோ, சினிமாக்கோ, பார்க்குக்கோ கூட்டிக்கினு போங்க. ஒரு பத்தடி தள்ளி வரச் சொல்லுங்கோ, உங்க ப்ரைவஸி முக்கியமில்லியா?
ஏதாவது, சேனா குரங்கு வந்து அத்து மீறினா, பிகிலடிச்சு, தடிமாடுகளை வரச் சொல்லுங்கோ, யார் கலாச்சாரத்தை யார் காப்பாத்தறான்னு தூர நின்னு ஹாயா வேடிக்கை பாருங்கோ!

கெரகம் பிடிச்சவனுங்க!

ஹாப்பி வேலன்டைன்ஸ் டே! ஹே ராம்!

february 13ஆம் தேதி மீள் பதிவு செய்யப்படும் ;)

பி.கு: தொடர்புடைய செய்தி

Thursday, February 05, 2009

இது 'பில் கேட்ஸ்' வீடு இல்லை


யாருதுன்னு யூகிச்சு சொல்லுங்க பாக்கலாம்.

(ஈ.மடலில் வந்தது)

Sunday, February 01, 2009

நகலாயுதம்முத்துக்குமார் ஈழ மக்களின் அவல நிலை கண்டு, தீக்குளித்து உயிர்நீத்த செய்தி அறிந்திருப்பீர்கள்.
அவர் செய்தது சரியா தவறா என்ற அலசலெல்லாம் தற்சமயம் தள்ளி வைப்போம்.

பல லட்சம் சாமான்யர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், முத்துக்குமாரின் தியாகத்தை கேவலப்படுத்தும் எந்த செயலையும் செய்யாதிருப்போம்.

அவர் சாவதர்க்கு முன் நகலெடுத்துக் கொடுத்த பெரிய கட்டுரை கீழே உள்ளது.
அதைப் படித்து நாம ஒண்ணும் போராட்டத்தில் குதித்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.
நாம் வழக்கம் போல், நம் அன்றாட வேலைகளினூடே, நம் வாழ்க்கை, நம் குடும்பம், நம் கடமைகள்னு தனிப்பட்ட தேவைகளை கவனித்து விட்டு நம் பயணத்தைத் தொடர்வோம்.

இதில் தவறும் இல்லை.
நம்மால் முடிந்தது இதுதான்.

அப்பரம் எதுக்கு கட்டுரையை இங்கே ப்ரசுரிக்க வேண்டும்னு கேக்கறீங்களா?
வெறும் ஈழப் பிரச்சனை மட்டுமல்லாது, பொதுவாவே, சாமான்யனுக்கு நல்லா உரைக்கர மாதிரி பல விஷயங்கள் சொல்லியிருக்காரு. படிச்சு, அட்லீஸ்ட், ஒரு உச்சு கொட்டிட்டாவது அடுத்த வேலையப் பாக்கலாமேன்னுதான்..

படிங்க!

இனி தொடர்வது முத்துக்குமார்.

**** **** ****
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.
**** **** ****

source of Muthukumars essay taken from அதிஷா