recent posts...

Monday, November 29, 2010

நந்தலாலா


படத்தைப் பற்றிய பகிர்தலுக்கு முன், படம் பார்த்த விதத்தை முதலில் பகிர்கிறேன். மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் பார்த்ததும் மெத்தப் பிடித்திருந்தது. குறிப்பாக அஞ்சாதே ரொம்பவே அருமையாய் இருந்தது. இருந்தாலும், நந்தலாலா வந்ததும், தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.
திறமையான இயக்குனர்கள், ஹீரோக்கள் ஆகும் துரதிர்ஷ்ட நிலை மிஷ்கினாலும் தொடரப்படுவது பிடிக்கவில்லை. அதைத் தவிர, ராசாவின் சமீபத்திய பின்னணி இசை பெரிதும் கவராத நிலையில் இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு.
ஒரு சில வாரத்தில், டிவிடி வந்ததும் பாத்துக்கலாம்னு விட்டிருந்தேன்.

ஆனா, தொடர்ந்து வந்த பாஆஆஆஆஆசிட்டிவ் விமர்சனங்கள், உசுப்பேத்தி விட்டன. சரின்னு, ஞாயிறு மதியம் கெளம்பி மத்தியான ஆட்டம் பாக்க இன்னொரு நண்பருடன் புறப்பட்டுப் போனோம்.
இங்கே San Jose என்ற நகரில், அம்பானியின் திரையரங்கமான Big Cinemasல் திரையிட்டிருந்தார்கள். தலா $10 கொடுத்து, நாலு பேருக்கு டிக்கெட் வாங்கி, தியேட்டருக்கு உள்ளே போனா, வேற யாருமே இல்லை. நாங்க நாலே பேருதான். ட்ரெயிலர் எல்லாம் முடிஞ்சு பேர் போடும்போது இன்னும் நாலு பேரு வந்து சேந்தாங்க.

பெரிய ஹீரோ இல்லாததால், இந்த நிலை போலருக்குன்னு சாந்தப்படுத்திக்கிட்டு, படம் பாக்க ஒக்கோந்தோம்.

அன்னிக்கின்னு பாத்து, தியேட்டரில் ஹீட்டர் வேலை செய்யலை. சமீப தினங்களில், குளிர் பின்னி எடுக்குது. என்னதான் சுவெட்டர் எல்லாம் போட்டிருந்தாலும் தியேட்டருக்குள்ள குளிர் நடுக்கித் தள்ளியது. அம்பானி ஆளுங்களும், இருக்கும் எட்டு பேருக்கு குட்டி குட்டி பர்சனல் ஹீட்டர் ஃபேன் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்னாங்க. அதுவும், சில நேரத்தில் வேலை செய்யலை. போய் என்னய்யா கொடுமை இதுன்னு கேட்டா, சாரி மெக்கானிக் வரலை, அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க, தியேட்டரில் இருக்கும் மொத்த கும்பலுக்கும் (எட்டு பேரு) இலவசமா சூடான டீ/காபி தரோம்னு அல்வா கொடுத்தாங்க.

நடுங்கும் குளிரில் விரைத்தபடி படம் பார்க்கத் துவங்கினோம்.

தெளிந்த நீரோட்டம், அகலமான வெள்ளித் திரையில், மெதுவாய் ஓடும் காட்சி. அதற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் படத்தின் பெயரும், மற்ற பெருந்தகைகள் பெயரும் (இளையராஜா, Cinematographer Mahesh, அழகியல்(?Art direction?) Trotsky, மிஷ்கின்) போட்டார்கள்.

முதல் காட்சியில், பள்ளியின் வாசலில் இருக்கும் அகி(அகிலேஷ்) என்ற சிறுவன் நிற்கும் காட்சி. சில விநாடிகள் அவனை க்ளோஸ்-அப்பில் காட்டும் போது, இசை இல்லாத அமைதி. என்னடா ராசாவை காணுமேன்னு யோசிக்கரதுக்குள்ள, ராஜா அள்ளி வீசராறு இசைப் ப்ரவாகத்தை.
இருக்கையில் அப்படியே ஒய்யாரமா ஒக்காந்து, எதிர் சீட்டில் கால் போட்டு, இளையராஜாவின் இசை மழையில், மிச்சம் 2 1/2 மணி நேரமும் மிகவும் இனிமையாக அமைந்தது.
ஒவ்வொரு சீனுக்கும், வித விதமான இசை அமைப்பு. ஒரு பெரிய concertக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல்.

படத்தின் கருன்னு பாத்தா, சிம்ப்பிள்தான். சிறுவன் அகி தன்னை சிறு வயதில் பாட்டியிடம் தனியாய் விட்டுவிட்டுப் போன தன் தாயை, அவள் இருக்கும் ஊருக்கு தேடிச் சென்று பார்க்க ஆசைப் படுகிறான். பல வருடங்களாகக் காணாத தாயை, பார்த்து கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணம்.
இன்னொரு பக்கம், பாஸ்கி (மிஷ்கின்). இவர் மனநலம் இல்லாதவர். இவர் மன நலக் காப்பகத்திலிருந்து தப்பி ஓடி விடுகிறார். இவருக்கும், சிறு வயதில் தன்னை மனநலக் காப்பகத்தில் விட்டு விட்டு அதற்குப் பின் தன் பக்கமே திரும்பிப் பார்க்காத தாயை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம். இப்படி அநாதையாய் விட்டு விட்டாயே என்று அவள் கன்னத்தில் அறைய வேண்டும் என்றும் எண்ணம்.

அகியும், பாஸ்கியும் சந்தித்துக் கொண்டு, இருவரும் சேர்ந்தே பயணப்படுகிறார்கள், தாயைத் தேடி. இவர்கள் வழி நெடுகும், சந்திக்கும் மற்ற மனிதர்களும், அனுபவங்களும் தான் படம்.

இந்தப் பயணத்தில், சில நல்ல மனிதர்களும், அவர்களால் நடக்கும் நெகிழ்வான தருணங்களுக்கும், ராஜாவிடம் இருந்து வரும் இசை, மயிலிறகால் வருடும் ஒரு சுகம்.

முதல் பாதி, மிக மெதுவாக நகரும் திரைக் கதை. அகியும் பாஸ்கியும், பயணித்துக் கொண்டே, ஒவ்வொரு இடமாக நகர்வது, கொஞ்சம் அயற்சியையே தந்தாலும், Maheshன் காட்சியமைப்பு, இரண்டு கண்களையும் அகலத் திறந்து, ஆவென்று ஒவ்வொரு ஃப்ரேமையும் உச்சு கொட்டி ரசித்து ரசித்து பார்க்கவைக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த மாதிரி சாலைகளும், பசுமை நிறந்த வெளிகளும், இருப்பதை, இதுவரை வேறு படத்தில் பார்த்ததாய் நினைவில் இல்லை. சாலையெல்லாம், புத்தம் புதிதாய் பளிச்னு இருக்க, அதன் இருபுறமும் பசுமை விரிந்து கிடக்க, மொத்த திரையில் ஒரு இன்ச்சையும் வீணாக்காமல் அதை அப்படியே படம் பிடித்து நம் கண் முன் விரித்திருக்க, அதற்கு ராஜா குழைந்து குழைந்து பின்னணி இசை சேர்க்க, ரொம்ப அருமையாக நகர்ந்தது நிமிடங்கள்.

தியேட்டருக்கு வந்திருந்த எட்டு பேரில், நாலு பேரு (தங்க்ஸ்) ஒரே மொனகல். அவங்களுக்கு இப்படி மெதுவாய் கவித்துவமாய் நகரும் படம் பிடிக்காத போலருக்கு.

மிஷ்கினின் நடிப்பு நன்றாகவே இருந்தது. எல்லாரையும் மிரட்டும் தொனியில் பேசுவதும், பின்னர் இவரை அடிக்கும்போது பம்முவதும், கிளாஸிக் நடிப்பு. குறிப்பாய், அகி தன்னை mental என்று அழைத்ததும், வரும் கோபமும், அவனை அடிக்க ஓடி, அடிக்க முடியாமல் தவித்து நிற்கும் காட்சி கண்ணில் நிற்கிறது.

சிறுவனின் நடிப்பும் பிரமாதம். அங்கிள், மாமா என்று எல்லாரையும் அழைத்து, அவன் கொடுக்கும் டயலாக் டெலிவரி ரசிக்கும்படி இருந்தது.

பயணத்தில் இடம் பெறும் மனிதர்களில், சபலத் தாத்தாவும், ஊனமுள்ளவர் ஒருவரும், புல்லட்டில் வரும் மொட்டையும் அவர் மகனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும், லாரி ட்ரைவரும், பாலியல் தொழிலாளியும், அவரவர் வேலைகளைக் கச்சிதமா செஞ்சிருக்காங்க. நாசர் எதுக்கு ஒரு குட்டி சீனுக்குன்னு புரியல்ல.

படத்தில் நெருடல்னு பார்த்தா ஒரு சில இடங்கள்தான் தோணுது.
ட்ராக்டர் ஓட்டி வரும் பள்ளி மாணவியின் காட்சி;
மிஷ்கினின் தாய் ரோகிணியின் ஆரம்ப மேக்கப் ஒரு ஆணைப் போல் காட்டியது அவரை;
அழகியல்(Art Direction)Trotsky கிராமத்தில் எல்லா கட்டிடத்துக்கும் வெள்ளை வெளேர்னு புதுச் சுண்ணாம்பு அடித்து வைத்திருந்தது;
என்னதான் ராசா இசை அமுதை திகட்டத் திகட்ட தந்திருந்தாலும், இந்த மாதிரி படங்களுக்கு பலமே, மௌனமான காட்சியமைப்புத் தான். அது பல இடங்களில் மிஸ்ஸிங். படம் முழுக்க எதையாவது (அருமையா) வாசிக்குக்கிட்டே இருக்காரு ராஜா; அந்த வாசிப்பு இல்லைன்னா, முழுப் படத்தையும் தூங்காம பாத்திருப்பேனான்னு கேட்டா, விடை தெரியல்ல.
அருமையான பாடல்கள், யேசுதாஸ், ராஜா பாடியிருந்தாலும், அதை படத்தில் சேர்த்தது;

கடைசியாய், Wikiயிலும் மற்ற ஏனைய இடங்களிலும், ஏற்கனவே கிழித்துத் தொயச்சு காயப் போட்ட விஷயம். இது, 1999ல் வெளி வந்த Kikujiro என்ற ஜப்பானிய மொழிப் படத்தின் அச்சு அசல் காப்பி என்பது.
இந்த மாதிரி ஒரு output தமிழ் திரைப்படத்துக்கு கிட்டும்னா, யாரு என்ன காப்பி அடிச்சாலும், சாலச் சிறந்ததே. ஆனா, டைட்டில் கார்டில் (inspired by Kikujiroன்ன்) போடுவது இயக்குனர்களின் தார்மீகக் கடமையாகும். அப்படிச் செய்யாமல், தன் சொந்தச் சரக்கு சூப்பர் சரக்கு என்ற நிலையில் தன் அதீத புத்திசாலித்தனத்தை காட்டுவதுதான் சகிக்கவில்லை.
யாருக்கும் தெரியாது என்ற எண்ணமா இவங்களுக்கு எல்லாம்? இந்த நிலை மாறணும். ஆனா, மிஷ்கினை கேள்வி கேக்கவும் ஒரு தகுதி வேணும். இணையத்தில் ஓசியில் Mp3க்களை உருவி எடுக்கும் எவருக்கும், இந்த கேள்வி கேட்கும் தகுதி இல்லை.
(kikujiro டிவிடி நாளைக்கு கையில் கிட்டும், பாத்துட்டு, இன்னொரு விமர்சனமும் வரலாம் ;)

மொத்தத்தில், 2 1/2 மணி நேரம் ஒய்யாரமாய், கண்ணுக்கும், காதுக்கும், மனதுக்கும் ஒத்தடம் கொடுக்கணும்னா, கண்டிப்பா நந்தலாலா பாக்கலாம். பாருங்க.

Tuesday, November 23, 2010

நீதிமன்றத்தில் நான், மீண்டும்

இந்த ஊர் நீதிமன்றங்கள் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே என் புதிய வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டை காலி செய்தபின், டெப்பாஸிட்டை திரும்பித்தராத மேனேஜ்மெண்ட்டை எதிர்த்து வாதாடியிருக்கிறேன். அதில் வெற்றியும் பெற்றிருந்திருக்கிறேன்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னால், மீண்டும் ஒரு சட்டப் பிரச்சனை.

காரில் பக்கத்து சிட்டியில் உலாத்தும்போது, ஒரு ட்ராஃபிக் சிக்னலில் சிவப்பு எரிந்து கொண்டிருந்தது. எனக்கு, அந்த இடத்தில் வலது பக்கம் திரும்ப வேண்டும். சாதாரணமாக, சிவப்பு எரிந்தால், அக்கம் பக்கம் பாத்துட்டு யாரும் இல்லைன்னா, மெதுவா வலது போயிடலாம். நேராப் போகணும்னா, பச்சை வரும் வரை நிக்கணும்.
ஆனா, சட்டப்படி, இந்த வலப்பக்கம் திரும்பரதுக்கு முன்னாடி, மூணு விநாடி, முழுசா நின்னுட்டு , அப்பரமாத்தான் திரும்பணும். ஆனா, யாரும், அப்படிச் செய்வதில்லை.
இந்தப் பக்கத்து சிட்டிக்காரன், அந்த மூலையில் ஒரு கேமராவை வச்சிக்கிட்டு, மூணு செக்கண்ட் நிக்காம போரவங்களை, படம் புடிச்சு, வீட்டுக்கு ட்ராஃபிக் வயலேஷன் டிக்கெட் அனுப்பி வைக்கறான்.
அந்த சுபயோக சுபதினத்தில், அடியேன் திரும்பும்போது, டச்சாக் டச்சாக் டச்சாக்னு நாலா பக்கத்திலிருந்தும், என்னையும் என் காரையும் படம் புடிச்சு, வீட்டுக்கு, "ராசா $500 மொய்ப் பணம் கட்டு"ன்னு ஒரு கோர்ட் நோட்டீஸ் வந்துச்சு.

அதப் பாத்ததும் எனக்கு செம கடுப்பு. ரெட்லைட்டை கிராஸ் பண்றது தப்புதான். ஆனாலும், எல்லாரும் சகஜமா செய்யும் செயலுக்கு, இந்த மாதிரி கேமரா போட்டு பிடிச்சா, ஒரு $25 மொய் கேக்கலாம். இல்ல்ன்னா, முதல் தடவை வார்னிங்காவது கொடுத்து விடலாம். கலிஃபோர்னியா கல்லால துட்டு இல்லன்னா, இதை காரணமா வச்சு என் கிட்ட ஏன் இந்த பகல் கொள்ளை செய்யணும்னு ஒரே கடுப்பாயிடுச்சு. இதை இப்படியே விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, என்ன பண்ணலாம்னு அலச ஆரம்பிச்சேன்.

உனக்கேன் இவ்வளவு ப்ரச்சனை, உலகத்தில் யாருக்கும் இல்லாத ப்ரச்சனை, என்று கேட்பீர்கள். இம்முறை நானே 'தவறு' செய்தேன். அதிலிருந்து மீண்டும் வந்தேன். அதை சொல்லவே இப்பதிவு. சுயதம்பட்டம் என்பீர்கள். என் சுயதம்பட்டத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. இதைப் பாத்து, ரெட் லைட் வயலேட்டும் சக கண்மணிகள் சுதாரித்துக் கொள்ளலாம்ல.

அங்க இங்க தேடி, ஒரு வழி கண்டு பிடிச்சேன். இந்த மாதிரி டிக்கெட் கையாள மூணு வழி இருக்கு,
1) கேட்ட மொய் பணத்தை கொடுத்து, அடுத்த வேலையை பாக்கலாம் (முக்கால் வாசி பேரு இதைத் தான் செய்யறாங்க)
2) கோர்ட்டுக்கு போயி, ஜட்ஜ் கிட்ட, 'கனம் கோர்ட்டார் அவர்களே, எனக்கு அந்த நேரத்துல அவசர வேலை இருந்திச்சு, அதான் நிக்காம திரும்பிட்டேன். மன்னிச்சுடுங்க'ன்னு கேக்கலாம். ஆனா, இது மிக்காறும், நீங்க குற்றவாளின்னுதான் முடியும்.
3) வீட்ல இருந்தபடியே, ஒரு ஃபார்ம் ('written declaration') பூர்த்தி பண்ணி, சில பல ஞாயமான காரணங்களை சொல்லி, 'என்ன வுட்டுடுங்க சாமி'ன்னு எழுதிப் போடலாம்.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

இப்படி யோசிச்சு, நான் தேர்ந்தெடுத்த ஸ்டெப்பு மூணாவது - written declaration.

இதில் நம்மள ஏன் மன்னிச்சு விடணும்னு நம்ம பக்க ஞாயத்தை எடுத்துச் சொல்லணும்.
நான் இணையத்தில் ஆராய்ந்த போது கிட்டிய சில 'உத்திகளை' கையாண்டு, கீழ் உள்ள மேட்டர்களை கலந்து ஃபார்ம் பூர்த்தி செய்து அனுப்பினேன்.
1) இந்த மாதிரி கேமரா இருக்கும் சிக்னல்களில் 'photo enforced' என்று கீழே போட்டிருக்க வேண்டும், சட்டப்படி. அது அந்த மூலையில் இல்லைன்னு ஒரு வரி எழுதினேன். (அதற்கான ஃபோட்டோ சாட்சி, அவனுங்க அனுப்புன ஃபோட்டைவையே திருப்பி அனுப்பினேன்)
2) கணம் கோர்ட்டார் அவர்களே, நான் நிக்கலாம்னு நெனச்சேன், நான் மெதுவாக்கி நிக்கரதுக்குள்ள, பளிச் பளிச்னு ஏதோ வெளிச்சம் அடிச்சது (கேமரா ஃபிளாஷ்), நான் பயந்து, ஏதோ ஏம்புலன்ஸ்தான் என் பின்னால வருதோன்னு நெனச்சு, அதுக்கு வழிவிட வலது பக்கமா நிக்காம திரும்பிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
3) தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? கலிஃபோர்னியா! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. ஆனால், இதுவரை எந்த தவறும் செய்யாத ஒரு நல்ல ட்ரைவரை, நீதிமன்றம் ஏன் இப்படி $500 ஃபைனெல்லாம் போட்டு டார்ச்சர் செய்கிறது? என்ன கொடுமை ஜட்ஜ் சார் இது? ப்ளீஸ் ஏன்ஸர் மை ப்ரேயர்! Refund my $500 (எங்கூரா இருந்தா, $5 டாலர் மாமாக்கு குடுத்திருந்தா, இவ்ளோ இழுத்தடிச்சிருக்கவே வேண்டியதில்லை).

இப்படி எழுதி முடிச்சு, ஃபார்முடன், $500 செக்கும் அனுப்பினேன்.
சில நாட்களில், செக் வங்கிக் கணக்கிலிருந்து உருவப்பட்டது.

'அச்சச்சோ கோவிந்தாவா'ன்னு நெனச்சிருந்தேன்.

ஆனா, முந்தாநேத்து, ஒரு கோர்ட் ஆர்டர் வந்திருந்தது, 'உங்க கடுதாசி ஜட்ஜ் பரீசிலித்தத்தில், நீங்கள் நிரபராதி என்று இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது. உங்க $500 சீக்கிரம் ரீஃபண்ட் செய்யபடும்'னு. ;)))

உபரி செய்திகள்:
$500ல் , கிட்டத்தட்ட $300 டாலர்கள் அந்த கேமரா வைத்து இயக்கும் தனியாருக்கு கமிஷனாம்;
சிக்னலில் நிற்காமல் வலதில் திரும்புவதற்கும், சின்ன ஃபைன் தான் இருந்ததாம், ஆனா, அதை சட்டமாக்க அடித்த படிவத்தில், தப்பாக தட்டச்சி, $50 என்பது $500 ஆயிடுச்சாம். கவர்மெண்ட்டும், வர துட்டை வேணாம்னு சொல்லாம, இப்படியே ஆட்டையப் போட்டுக்கிட்டிருக்காம்;
இந்த தனியார் கேமரா காண்ட்ராக்ட்டிலெல்லாம், எக்கச்சக்க ஊழல்/கமிஷன் இருக்காம்.
மேல் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.

கொசுறு செய்தி: GoodNewsIndia.com/PointReturn.Org volunteersஐ நாம் interview எடுத்தது, ஆங்கிலத்தில் இங்கே வலையேற்றப் பட்டிருக்கிறது.நன்றி: மு.க for the பராசக்தி டயலாக்ஸ் ;)

Sunday, November 21, 2010

பிழை திருத்தம் - Boy scouts சகாக்கள் மன்னிக்க

பத்திரிகைகளில் பிரசுமாகும் செய்திகளில் ஏதாவது பிழை இருந்தால், அடுத்த எடிஷனில், அதை குட்டி டப்பாவில் தெரிவித்து மன்னிப்பு கேப்பாங்களே, அப்படிப்பட்ட பிழை திருத்தல் பதிவு இது.

போன மாசம், சில பள்ளி மாணவர்கள் Boys Scouts பெயரைச் சொல்லி என்னிடம் ஏதோ வசூலுக்கு, பிஸ்கோத்து வாங்கிக்கன்னு சொல்லி $20 ஆட்டையப் போட்டு, பிஸ்கோத்து குடுக்காம தலைமறைவாகிட்டாங்கன்னு ஒரு பதிவைப் போட்டு புலம்பியிருந்தது நினைவில் இருக்கலாம்.

இந்தப் பதிவால், உங்களுக்குத் தெரிவிக்க விரும்பவதென்னவென்றால், அந்த பிஸ்கோத்து பாக்கிட்டு, நேற்று மதியம், அதே வாண்டுகளால், என் வீட்டின் கதவைத் தட்டி டெலிவரி செய்யப்பட்டது.
"யோவ், எம்புட்டு தடவ வந்து கதவ தட்ரது? வூட்ல இருக்கரதே இல்லியா நீ? பிஸாத்து $20க்காக நாங்க மாங்கு மாங்குன்னு ஸ்கூல் விட்டதும், நாலஞ்சு தபா வந்து போயிட்டோம். புடி, நீயும் உன் பிஸ்கோத்தும். இனி எவனாவது வசூலுக்கு வந்தா, ஒழுங்கு மரியாதையா ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டு அனுப்பிடு. இவரு $20 குடுப்பாராம், நாங்க இவரு வாங்கன பிஸ்கோத்தை இவரு கிட்ட கொடுக்க, $50 டாலர் செலவு பண்ணி வண்டிக்கு செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைவோமாம். வந்துட்டானுங்க சாவுகிராக்கிங்க.." இப்படி வெளிப்படையா சொல்லலன்னாலும், அந்த குட்டிப் பய, கண்ணாலேயே அதை சொல்லிக் காட்டிட்டான். அவ்வ்வ்வ்வ்!

உலகமெங்கும் இருக்கும் Boys Scouts மக்கள் அனைவரும் எம்மை மன்னிக்க. அவசரப்பட்டு புகார் பதிவு எழுதிட்டேன்.

டெலிவரி செய்யப்பட்ட பிஸ்கோத்து (சாக்லேட்டு பாப்கார்ன்) ரொம்பவே அருமை.


இந்த சிச்சுவேஷனுக்கு எந்த திருக்குறள் பொருந்தும்?

Monday, November 15, 2010

FaceBookல் துட்டு சம்பாதிக்க வழி

வலைப்பதிவு எழுதி பணம் பண்ணுவது எப்படி? முன்னம் எழுதிய பதிவை படிச்சிருப்பீங்க.

அந்தப் பதிவில் சொன்ன மாதிரி செய்யரது, நல்ல சுவாரஸ்யமான விஷயங்களை அடிக்கடி எழுதி, சில ஆயிரம் வாசகர்களை ஈர்க்கும் பிரபல பதிவர்களுக்கு சாலப் பொறுந்தும்.
அதிகமான வாசகர்கள் வந்தால்தான், பதிவில் இருக்கும் விளம்பரங்களை ஒரு சிலராவது க்ளிக்கி, சில்லறை பேர வழி பிறக்கும்.

ஆனா, FaceBookல் சில்லறை ஈட்டக் கூடிய வழி அப்படி அல்ல. இது எல்லாரும் செய்யலாம். பெரிய கற்பனா வளமும் வேண்டாம், வாசகர் வட்டமும் வேண்டாம்.
கொஞ்சூண்டு செலவு பண்ணா, மத்ததை FaceBook கொம்பேனியார் பாத்துப்பாங்க.

செய்யவேண்டிய விஷயங்கள் இம்புட்டுதான்:
1) FaceBookல் கணக்கு தொடங்குங்க (இது பலரும் ஏற்கனவே வச்சிருப்பீங்க)

2) பிரபலமான ஒரு சில தளங்களில், Affiliateஆக சேறுங்க (உம். associates.amazon.com)
(Affiliateனா என்னான்னா, நீங்க அவங்க ப்ரோக்கர் மாதிரி, Amazon விற்கும் ஏதாவது பொருளை நீங்க விக்க உதவினா, உங்களுக்கு 4% கமிஷன் கிட்டும்)

3) Amazonல் மேய்ந்து, ஏதாவது ஒரு பிரபலமான பொருளை தேர்ந்தெடுத்து அதன் உரலை associates.amazon.comல் உருவாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
உ.ம். நீங்க TV வித்து கமிஷன் பண்ணலாம்னு முடிவு பண்ணினா, அந்த டிவியின் பக்கத்தின் உரலை எடுத்துக்கோங்க. (உ.ம்., http://amazon.com/sonytv/whatever.html )
அந்த உரலை எடுத்து associates பக்கத்தில், அவங்க சொல்லித்தர மாதிரி, அதில் உங்களின் பெயரை இணைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
உ.ம் (http://amazon.com/sonytv/page=whatever.html&referer=surveysan)

மேலே உள்ளது மாதிரி உரலை உருவாக்கியதும், அந்த உரலை க்ளிக்கி வேர யாராவது போயி, டிவி வாங்கினா, amazon காரனுக்கு, அந்த டிவி வாங்கினவங்க, உங்க மூலமா வந்து வாங்கினாங்கன்னு தெரிஞ்சு, உங்களுக்கு 4% கமிஷன் குடுத்துடுவான்.

எல்லாம் சரி, இந்த உரலை எப்படி பிரபலப் படுத்தறது? உங்க ப்ளாகில் போட்டா, அஞ்சு பத்து பேரு பாப்பாங்க. பாக்கரவங்கள்ள எவ்ளோ பேரு டிவி வாங்கப் போறாங்க?
அதுக்குத்தான் அடுத்த ஸ்டெப்பு. முக்கியமான ஸ்டெப்பு.

4) FaceBookக்கு போங்க. வலது மூலையில், 'Create an Ad'னு ஒரு link இருக்கும். அதை க்ளிக்குங்க. அங்க போனீங்கன்னா, மேலே உள்ள டிவி உரலை, நீங்க FaceBookல் விளம்பரப்படுத்த வழி இருக்கும்.
விளம்பரம் இலவசம் இல்லை. கொஞ்சம் செலவு பண்ணித்தான் ஆகணும்.
விளம்பரத்தை யாராவது க்ளிக்கினா, நீங்க FaceBookக்கு $0.10 லிருந்து, சில பல டாலர்கள் வரை கொடுக்க வேண்டி வரும். (நீங்கள் உபயொகிக்கும் விளம்பர வாக்கியத்தை பொறுத்து)
ஆரம்பத்தில், ஒரு நாளைக்கு $2 பட்ஜெட் வச்சுக்கங்க; எப்படி போவுதுன்னு பாத்து கொஞ்சம் கொஞ்சம் முன்னேத்திப் பாக்கலாம்.

முக்கியமா, அதிகபட்சமா எவ்வளவு செலவு செய்யலாம்னு முடிவு பண்ணி, அதை upper limitஆ போட்டுடுங்க, இல்லன்னா, உங்க கிரெடிட் கார்டை ஆட்டையப் போட்டுட வாய்ப்புண்டு.

விளம்பரம் இந்த மாதிரி இருக்கும்:


5) விளம்பரப்படுத்தும்போது, FaceBookல் மட்டுமே உள்ள பெரிய பலம், உங்க விளம்பரத்துக்கான, பார்வையாளனை நீங்க தேர்ந்தெடுக்கலாம். அதாவது, 30 வயசுக்கு மேல், டிவி , திரைப்படம் பிடிக்கும்னு சொன்னவனுக்கு மட்டும் இந்த விளம்பரத்தைக் காட்டு, இந்த இந்த நகரத்தில் வாழரவனுக்கு மட்டும் காட்டு, இப்படின்னி target ஆடியன்ஸை சுலபமா அடையலாம்.
$2 ஒரு நாளைக்கு செலவு பண்ணீங்கன்னா, விளம்பரத்தை எப்படியும் ஒரு 50,000 பேர் 'பாப்பாங்க' அதில், ஒரு பத்து இருபது பேரு க்ளிக்குவாங்க.
$60 ஒரு மாசத்துக்கு செலவு; கிட்டத்தட்ட 600 பேர் க்ளிக்குவாங்க. அதுல ரெண்டு மூணு பேரு பொருளை வாங்கி வச்சாங்கன்னா, உங்களுக்கு கமிஷன் தானாய் வரும்.

இதே மேட்டரை Google Adwordsலும் பண்ணலாம். ஒரே வித்யாசம், அங்க FaceBook மாதிரி Target Audience கிடையாது.

நான் எம்புட்டு சம்பாதிச்சேன்னெல்லாம் கேக்கப்டாது. யாராவது முயற்சி பண்ணி வேலை செஞ்சா சொல்லுங்க. குரு தட்சணை எங்குட்டு அனுப்பணும்னு சொல்லித் தாரேன் ;)