recent posts...

Saturday, February 09, 2013

கமலின் விஷ்வரூபம் - Kamals Vishwaroopam


விஷ்வரூபம் - இதுவரை எந்த இந்தியப்  படத்திலும் கண்டிராத ஒரு தரம். கமல் என்ற உன்னத கலைஞனின் உழைப்பும், அறிவும், ரசனையும்,திறமையும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பளீர் பளீர் என்று தெரிகிறது.

இதை வெளிக்கொணர கமல் பட்ட பாடு சொல்லி மாளாது. இவ்வளவு கடின உழைப்பையும், பணச்செலவையும் செய்துவிட்டு, அந்த படைப்பை வெளியிட முடியாததன் சோகம் பெரியதாய்த் தான் இருந்திருக்கும்.

எல்லா பொது ஜனம் போலவும், எனக்கும், விஷ்வரூபத்தை பார்க்கும் முன்னும்,பார்க்கும் போதும், பார்த்த பின்னும், இந்த படத்துக்கு இவ்வளவு தடங்கல்கள் செய்தது நியாயமா என்ற கேள்விக்கான விடை அறிவது அவசியமாய் இருந்தது.

சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சமாய் மட்டும் பார்த்தால், எதுவும் தவறாய் தெரியவில்லை. இதைவிட பல படங்கள் இஸ்லாமியர்களை நெகடிவ் வெளிச்சத்தில் காட்டி இருக்கின்றன.
ஆனால், ஏற்கனவே ஒரு தவறான கண்ணோட்டத்தில் பலராலும் பார்க்கப்படும் இஸ்லாமியரை, மேலும் மேலும், தவறாக காட்சிப் பொருளாகி, வெளிச்சத்தில் காட்டுவது, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் நல்லதல்ல என்பது என் கருத்து.

ஒரு சில பேர் தீவிரவாதி ஆகிட்டான் என்பதால், தாடியும் குல்லாவும் வச்ச எல்லா பயலும் அப்படித்தான் என்ற பொது புத்தியில் இயங்குவதுதான் நம் சமூகம். விரிசல் விட்டிருக்கும் நம்மிடையே இணக்கம் ஏற்பட வைக்கும் படங்கள் எடுக்கலன்னாலும், இந்த மாதிரி நெகடிவிஸம் காட்டி எடுப்பதை வருங்காலங்களில் இயன்றவரை தவிர்க்கலாம்.

அமெரிக்காவில், கருப்பர் இனத்தவர்களையும், மற்ற மைனாரிட்டிகளையும், சதா சர்வ காலமும், படங்களிலும், செய்திகளிலும், கெட்டவர்களாகவே காட்டுவது பல வருடமாய் நடந்து வருகிறது. அமெரிக்க தெருக்களில் தனியாய் நடக்கும்போது, எதிரே ஒரு கருப்பர் வந்தால், கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும்.
நம்மை அப்படி மூளைச் சலவை செய்துவிடுகிறது இம்மாதிரி பொறுப்பற்ற ஊடகச் செயல்கள்.

இருக்கரதத்தான  சொல்றோம் என்ற சப்பைக்கட்டு சரியல்ல. இருப்பதை எடுக்க எவ்வளவோ விஷயம் இருக்கே. அரசியல் கேப்மாரித்தனங்களை படமாக எடுக்கும்போது, 'கல்மாடி' என்றோ, 'ராஜா' என்றோ பெயர் போட்டு கதாபாத்திரங்களை உருவாக்க எந்த கலைஞனுக்காவது தைரியம் இருக்கிறதா?

anyway, கமல்,ஒரு கலைஞனாய் செய்ததும் சரி; இஸ்லாமிய அமைப்புகள், தங்கள் சமுதாயத்துக்காக படத்தை எதிர்த்ததும் சரி; அரசு இடைத் தரகு செய்ததும் சரி; நாம் freedom of speechக்காக குரல் கொடுத்ததும் சரி; நாராயண நாராயண!

இனி படத்துக்கு வருவோம்.

பெயர் போடுவதில் இருந்து துவங்குகிறது கமலின் ஆளுமை. அமைதியான புறாக்கள் சடசடக்க, ஆர்பாட்டம் இல்லாமல் பெயர்கள் வந்து போகின்றன.
தியேட்டருக்கு லேட்டாக வந்த கஸ்மாலங்கள் சலசலத்து அவரவர் இருக்கைகளில் அமரவும் பெயர் முடியவும் சரியாய் இருந்தது.
இடையிடையே செல்ஃபோனில் பேசி எரிச்சல் ஊட்டிய கழிசடைகளை விஷ்வரூபம் எடுத்து நசுக்கி போட மனம் ஆசைப்பட்டாலும், பல்லைக் கடித்து படம் பார்க்க வேண்டிய சூழலில், படம் நகர்ந்தது.

கமலின் மனைவியாய் வரும் பூஜா, மிக அருமையான தேர்வு. அழகாக இருக்கிறார். அருமையாய் நடிக்கிறார். அவருக்கு குரல் கொடுத்திருப்பது விருமாண்டி அபிராமி. பொறுத்தம்.

கமல், கதக் கற்றுத் தரும் மாஸ்டராக அறிமுகமாகும் பாடலில், அவர் வெளிக்கொணரும் முக பாவங்கள் க்ளாஸ். பாடல் படமாக்கிய விதமும் மிக ரம்யமாக இருந்தது.  பெண்மை கலந்த குணாதிசியங்களை கமல் வெளிப்படுத்தும் காட்சிகள், அவரின் டயலாக் டெலிவரியெல்லாம் பார்க்கும் போதே, யப்பாடி குடுத்த காசு வசூல் என்று உள்மனம் சொல்லியது.
ஹாஸ்யம் பரவலாய் தெளித்திருப்பதும் அருமை. சில வசனங்கள் வாய் விட்டு சிரிக்க வைத்தது.
குறிப்பாய், "எங்காத்து அழுக்கு டேப்பை வெட்ட உங்காத்து கத்திய கேட்டா தருவியோ நீ?";
"கெட்ட குடியே கெடும்பா"

படம் பார்க்காதவர்கள், இயன்றவரை, கதைக் கருவை தெரிந்துகொள்ளாமல் செல்வது சாலச் சிறந்தது. திரைப்பட அனுபவம் இன்னும் அருமையாய் இருக்கும், எதுவும் தெரியாமல் அப்பாவியாய் சென்று பார்த்தால்.

அப்படி ஆசை இருப்பவர்கள், ப்ளீஸ் க்ளோஸ் த ப்ரவுஸர் :)

கமல் ஒரு இஸ்லாமிய RAW agentஆம். ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஜிஹாதிக் கூட்டத்தில் கலந்து அவர்களின் ரகசியங்களை அறியச் செல்வாராம்." விஸாம் காஷ்மீரி" என்ற பெயர் கொண்ட அவர் ஒமார் என்னும் ஜிஹாதியை ஆப்கானிஸ்தானில் ஊடுருவி அவர்களை பற்றிய விவரங்களை அமெரிக்க படைகளுக்கு தெரிவித்து அவர்களில் பலர் அழிய காரணமாய் இருப்பவர்.  தப்பிப்பிழைத்த ஒமார் நியூநியார்க் நகரில் நிகழ்த்தப் போகும் அணு ஆயுத தாக்குதலை தடுக்க, விஸாம், 'விஷ்வா'வாக மாறி கதக் பயிலுவிக்கும் மாஸ்டராய் மாறுவேஷத்தில் உலாவுகிறாராம்.
பூஜாவை மணமுடித்து, ஷேகர் கபூர், ஆண்ட்ரியா கோஷ்டியுடன்  சேர்ந்து, துப்புத் துலக்குகிறார்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகள் சிரத்தையுடன் எடுக்கப்பட்டுள்ளது.
ஒமாராக நடித்திருக்கும் ராஹுல் போஸ் கச்சிதமாய் இருக்கிறார். ராஹுலின் குட்டிப் பையன் டாக்டராய் ஆக ஆசைப்படுவதும், ராஹுல், நீயும் ஜிஹாதியாக வேண்டும் என்று சொல்வதும்.அதை கண்டு ராஹுலின் மனைவி கலங்குவதும், ஜிஹாதிகளின் குடும்பங்கள் படும் சோகத்தை நயமாய் காட்டுகிறது.

இன்னொரு சிறுவன் ஜிஹாதியாக்கப்படுவதும், மனித வெடிகுண்டாய் செல்ல வேண்டியதற்கு முன், ஒரு ஊஞ்சலில் அமர்ந்து, அங்கிள் தள்ளுங்க என்று ஊஞ்சலை தள்ளச் சொல்வதும் சோகம். அப்பாவியான முக அம்சம் கொண்ட சிறுவர்களை தேர்வு செய்தது சாலப் பொறுத்தம்.

ஆப்கானில் நடக்கும் காட்சிகள், ஜிஹாதிகளின் பயிற்சி, அவர்களின் வாழ்க்கை என்று கொஞ்சம் 'இழுவையாக' நகரும் காட்சிகள் என்றாலும், இடையிடையே சுவாரஸ்யத்தை கூட்டி, ஒரு எதிர்பார்ப்புடனேயே நம்மை இருக்க வைத்ததில் கமல் இயக்குனராய் வெற்றி பெற்றுவிடுகிரார்.

மொத்த படத்தில் ஒரே திருஷ்ட்டி, ஒசாமாவை காட்டும் காட்சி. அதிபயங்கர பின்னணி இசை, தியேட்டரே இடிந்து விடும் அளவுக்கு ஒலிப்பதிவு, தடதடதட வென அதிர, ஒரு பள்ளத்தில் இருந்து, திடீரென பெரிய தாடியுடன் ஒசாமா எழுகிறார். ஏதோ ஏசு கிருஸ்த அவதரித்த மாதிரி லைட்டிங்கில் அவரைக் காட்டியது, 'சப்'பென்று இருந்தது.

தங்கள் கூட்டத்தில் ஒருவர் தவறு செய்துவிட்டதாய் எண்ணி, ஒரு 'நல்லவரை' ஜிஹாதிகள், காலாலேயே மிதி மிதி என்று மிதிப்பதும், அதைத் தொடர்ந்து அவரை தூக்கிலிட ஒரு பெரிய க்ரேனிலிருந்து தூக்குக் கயிறில் தொங்க விடுவதும். அவர், தான் நிரபராதி நிரபராதி என்று அழ, அதைக் கண்ட அவரின் தாயும் அழ, ஓரத்தில் சோகமாய் அமர்ந்திருக்கும் அவரின் தந்தை அழ, மொத்த ஜிஹாதிகளும் ஆர்ப்பரித்து, மிஷின்கண்ணை வானத்தை நோக்கி சுட, அவன் முகத்தில் கறுப்புத் துணியை மூடி, க்ரேனை மேலே இழுப்பதும், உடல் துடிதுடித்து இறப்பதும், இறந்துவிட்டானா என்பதை காலில் நாடி பிடித்து ஊர்ஜீதம் செய்வதும், கமல் வேதனையில் அந்த கூட்டத்தை விட்டு மெல்ல வெளியே நடப்பது, ப்ப்ப்ப்பாஆஆஆ. செம சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் அது.
லாங் ஷாட்டிலும், க்ளோஸ்-அப்பிலும், டக் டக் டக் என மாற்றி காட்டுவதில், சினிமாட்டோ கிராஃபரும், எடிட்டரும், இயக்குனரும் மிளிர்கிறார்கள்.

படம் முழுக்க வரும் ஷங்கர் இஹ்சான் லாயின் இசை, படத்தை இன்னோர் பரிமாணத்துக்கு இட்டுச் செல்கிறது.

படத்தின் மையப் புள்ளி, பெண்மை கலந்த நளினமான விஷ்வா என்ற கதக் ஆசிரியர், தன் சுயரூபத்தை காட்ட விஷ்வரூபம் எடுக்கும் காட்சி.
இந்த காட்சியை பார்த்து,  மயிர்கூச்செரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
வில்லர்களிடம் மாட்டிய விஷ்வா, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் அழுவதும். அவரை அடி அடி என்று நையப் புடைப்பதும் நடக்கும். விஷ்வரூபம் எடுக்கும் முன் அவர் அராபிக்கில் பிரார்த்தனை செய்துகொண்டே பின்னாலிருப்பவனை எட்டி உதைத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றி இருக்கு பலரை காலி செய்வது. ஹாலிவுட்டுக்கு சவால் விடும் தரம்.

இதற்கு முன் மயிர்கூச்செரிய வைத்த காட்சி, பாட்ஷாவில், 'எனக்கு இன்னோர் பேரும் இருக்கு' என்று தலைவர் சொல்லிய காட்சி.
விஷ்வரூபக் காட்சி, அதைவிட ஒரு படி மேல் சென்று விட்டது.  தூள்.

கண்ணை உறுத்தாத எடிட்டிங்கை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். அவ்வளவு ஏக்‌ஷனையும், அருமையாய் கோர்த்து, நம்முன் படையலாக்கியிருக்கிறார்கள்.
இந்த ஒரு காட்சிக்காகவே, சத்யம் போன்ற திரையரங்கில், ஆரோ 3D எஃபெக்ட்டுடன், இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் மாறி மாறி பயணித்த முதல் பகுதி, கமலின் மூன்று பரிமாணத்தை மாற்றி மாற்றி காட்டி வெகு சிறப்பாய் பயணித்தது.
பிற்பகுதி, ந்யூயார்க்கில் நடக்கவிருக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க கமல், ஆண்ட்ரியா,பூஜா, ஷேகர் கபூர், அமெரிக்க FBIயுடன் அங்கும் இங்கும் ஓடுவதாய் அமைகிறது. இதிலும் கூட, இறுதி என்னவென்று ஊகிக்க முடிவதால், சற்று அயற்சி ஏற்படுகிறது. தடால் தடால் என்று இடைச் சொறுகும் காட்சிகள் மூலம், அயற்சி தெரியாமல் செல்கிறது.

அவ்ளோ பெரிய பாம், குட்டி ரூமின் நடுவில் இல்லாமல், பெரிய கூட்டத்தின் நடுவில் வைத்து அதை செயலிழக்க சென்றிருந்தால் நமக்கும் கொஞ்சம் பதட்டம் கூடியிருக்கும். அது இன்னாத்தான் நியூக்ளியர் பாமாக இருந்தாலும், ஸ்லோமோஷன் பள்ளிச் சிறார்கள், அம்மாக்கள், தாத்தாக்கள் என்ற சாமான்யர்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் பதிக்க ஒரு காட்சியும் இல்லாதது ஒரு மைனஸ்.

ஆக மொத்தத்தில், கமலின் விஷ்வரூபம்,
கமல் என்ற இயக்குனரின் கலைத் திறமையின் விஷ்வரூபம்;
கமல் என்ற தயாரிப்பாளருக்கு (மொத்த சொத்தையும் போடுமளவுக்கு) தன் திறமை மேல் இருந்த தைரியத்தின் விஷ்வரூபம்;

A great Cinematic Experience. A job well done, Kamal ji.

-Surveysan
-சர்வேசன்


Friday, February 01, 2013

கடல் - திரைப்பார்வை


மணிரத்தினம் கடைசியாய் எடுத்த நல்ல படம் அலைபாயுதே என்று நினைவு. அப்பாலிக்கா வந்த கன்னத்தில் முத்தமிட்டால் நன்றாய் இருந்த மாதிரி தெரிந்தாலும், ஒரு குறிப்பிட்ட அறிவுஜீவித்தனத்தின் ஓவர் டோஸ், சற்றே சலிப்பை தந்திருந்தது.
நமத்துத் தெரிந்த மணிரத்தினம், தமிழ்நாட்டுக்காக படம் எடுப்பதை விட்டுவிட்டு இந்தியாவுக்காக எடுக்க ஆரம்பித்ததிலிருந்து, பிசுபிசுக்க ஆரம்பித்து விட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் கடல் பாடல்கள், தினமும் FMல் கேட்டு கேட்டு ஒரு கிரக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. "அடியேஏஏஏஏ" பாடல், ஆரம்பத்தில் நாராசமாய் காதில் விழுந்தது. ஆனால், கேட்க கேட்க, ஒரு தேசிய கீதம் கணக்கா "அடியேஏஏஏ..."ன்னு இழுக்க வைத்தது. 

பாடல்களை பெரிய திரையில், நல்ல டெசிபலில் கேட்டால் ரம்யமாய் இருக்கும் என்ற எண்ணத்தில் கடல் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்தியாவை விட்டு தமிழகத்துக்கு வந்திருக்கும் மணிரத்தினத்தின் பழைய சாயலைத் தரும் படமாக இருக்க வாய்ப்பிருப்பதைப் போன்ற தலைப்பும், நடிகர்கள் தேர்வும் இருந்ததால், தியேட்டர் ஆசை ஆழமாய் எழுந்தது. 

விஸ்வரூபம், அட்டூழியத்துக்கும் அராஜகத்துக்கும் நடுவில் மாட்டி சின்னாபின்னப் படுவதால், கடல் தியேட்டர்ல பார்ப்போம் என்று, சடால் என்று முடிவு செய்து, தீயேட்டருக்குச் சென்றோம்.

சென்னையில் மணிரத்தினத்தின் படம் கடைசியாய் பார்த்தது தளபதி என்று நினைவு. திருவிழாக் கோலம் பூண்டிருந்த தியேட்டரும், ரசிகர்களின் ஆட்டமும் பாட்டமும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. 
கடல், ஆர்பரிக்காமல், அமைதியாய் திரையில் அரங்கேறியது. 

அரவிந்த்சாமி இன்னொரு ரவுண்டு வருவார் என்று ஊர்ஜீதம் செய்தது. அர்ஜூனும் நன்றாய் நடித்திருந்தார். 
புதுமுக கவுதமும் தனக்கு எதிர்காலம் உண்டென்று காட்டுகிறார்.
ராதாவின் மகள், கொஞ்சம் 'வித்யாசமாய்' ப்ளாஸ்டிக் கணக்காக இருக்கிறார். ஒரு sophisticated லுக்குடன். பாத்திரத்துக்கு ஏற்ற ஒரு அப்பாவி நடிப்பு. நன்றாய் செய்திருக்கிறார்.

படத்தில் சொதப்பியவர்கள் ஜெயமோகனும், மணிரத்னமும் மட்டுமே. 
சொத்தலாய் ஒரு கதை. 
அரவிந்த்சாமிக்கும் அர்ஜூனுக்கும் சின்ன வயசு லடாயாம்; 
அர்ஜூன் பின்னாளில் அரவிந்த்சாமியை பழி வாங்குவாராம்;
அதற்கிடையில் கவுதமும் ராதா ஜூனியரும்.

படம் ஆரம்பித்த பத்து நிமிடம் நடக்கும் அர்விந்த்சாமி அர்ஜூன் காட்சிகள், அமெச்சூர்தனம். நாயகன் எடுத்த மணிரத்னமா இப்படியெல்லாம் சப்பையாக காட்சிகளை அடுக்குகிறார் என்று ஒரு அங்கலாய்ப்பு. 
அயர்ச்சியில் ஸ்ஸ்ஸ்ஸ் என்று பெருமூச் வரும்போதெல்லாம், ரஹ்மானின் தாளமும் பாடலும், சற்றே நிமிர வைக்கிறது.

வழக்கமான மணிரத்தினம் படத்தில் பாடல் காட்சிகள் அருமையாய் படமாக்கப்படும். இதில் அதுவும் பெரிய ஈர்ப்பை எடுத்தவில்லை. நடன அமைப்புகளெல்லாம் மனதில் பதியவில்லை.

ரஹ்மானை அடுத்து, ராஜீவ் மேனன் மின்னுகிறார். நல்ல கலர் டோனில், நல்ல கேமரா ஆங்கிளில், ஆரம்ப காட்சிகள் நன்றாய் இருந்தன. கடைசி கடல் காட்சியும் அருமையாய் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கதை பிசு பிசு பிசு என்றிருந்ததால், எந்தக் காட்சியும், எம்புட்டு நேர்த்தியாக எடுக்கப்பட்டு, எவ்வளவு ஆத்மார்த்தமாக நடித்திருந்தாலும், மனதில் ஒட்டவே இல்லை.

ஒரே ஒட்டுதல், ஆரம்ப காட்சியில் கவுதமின் தாயின் மரணமும், அதை ஒட்டிய காட்சிகளில், அந்தக் குட்டிச் சிறுவனின் நடிப்பும் அழுகையும் காட்சி அமைப்பும். 

கடல் - சுனாமியாய் வராமல், வற்றிய குட்டையாய் போனது.