recent posts...

Friday, February 01, 2013

கடல் - திரைப்பார்வை


மணிரத்தினம் கடைசியாய் எடுத்த நல்ல படம் அலைபாயுதே என்று நினைவு. அப்பாலிக்கா வந்த கன்னத்தில் முத்தமிட்டால் நன்றாய் இருந்த மாதிரி தெரிந்தாலும், ஒரு குறிப்பிட்ட அறிவுஜீவித்தனத்தின் ஓவர் டோஸ், சற்றே சலிப்பை தந்திருந்தது.
நமத்துத் தெரிந்த மணிரத்தினம், தமிழ்நாட்டுக்காக படம் எடுப்பதை விட்டுவிட்டு இந்தியாவுக்காக எடுக்க ஆரம்பித்ததிலிருந்து, பிசுபிசுக்க ஆரம்பித்து விட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் கடல் பாடல்கள், தினமும் FMல் கேட்டு கேட்டு ஒரு கிரக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. "அடியேஏஏஏஏ" பாடல், ஆரம்பத்தில் நாராசமாய் காதில் விழுந்தது. ஆனால், கேட்க கேட்க, ஒரு தேசிய கீதம் கணக்கா "அடியேஏஏஏ..."ன்னு இழுக்க வைத்தது. 

பாடல்களை பெரிய திரையில், நல்ல டெசிபலில் கேட்டால் ரம்யமாய் இருக்கும் என்ற எண்ணத்தில் கடல் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்தியாவை விட்டு தமிழகத்துக்கு வந்திருக்கும் மணிரத்தினத்தின் பழைய சாயலைத் தரும் படமாக இருக்க வாய்ப்பிருப்பதைப் போன்ற தலைப்பும், நடிகர்கள் தேர்வும் இருந்ததால், தியேட்டர் ஆசை ஆழமாய் எழுந்தது. 

விஸ்வரூபம், அட்டூழியத்துக்கும் அராஜகத்துக்கும் நடுவில் மாட்டி சின்னாபின்னப் படுவதால், கடல் தியேட்டர்ல பார்ப்போம் என்று, சடால் என்று முடிவு செய்து, தீயேட்டருக்குச் சென்றோம்.

சென்னையில் மணிரத்தினத்தின் படம் கடைசியாய் பார்த்தது தளபதி என்று நினைவு. திருவிழாக் கோலம் பூண்டிருந்த தியேட்டரும், ரசிகர்களின் ஆட்டமும் பாட்டமும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. 
கடல், ஆர்பரிக்காமல், அமைதியாய் திரையில் அரங்கேறியது. 

அரவிந்த்சாமி இன்னொரு ரவுண்டு வருவார் என்று ஊர்ஜீதம் செய்தது. அர்ஜூனும் நன்றாய் நடித்திருந்தார். 
புதுமுக கவுதமும் தனக்கு எதிர்காலம் உண்டென்று காட்டுகிறார்.
ராதாவின் மகள், கொஞ்சம் 'வித்யாசமாய்' ப்ளாஸ்டிக் கணக்காக இருக்கிறார். ஒரு sophisticated லுக்குடன். பாத்திரத்துக்கு ஏற்ற ஒரு அப்பாவி நடிப்பு. நன்றாய் செய்திருக்கிறார்.

படத்தில் சொதப்பியவர்கள் ஜெயமோகனும், மணிரத்னமும் மட்டுமே. 
சொத்தலாய் ஒரு கதை. 
அரவிந்த்சாமிக்கும் அர்ஜூனுக்கும் சின்ன வயசு லடாயாம்; 
அர்ஜூன் பின்னாளில் அரவிந்த்சாமியை பழி வாங்குவாராம்;
அதற்கிடையில் கவுதமும் ராதா ஜூனியரும்.

படம் ஆரம்பித்த பத்து நிமிடம் நடக்கும் அர்விந்த்சாமி அர்ஜூன் காட்சிகள், அமெச்சூர்தனம். நாயகன் எடுத்த மணிரத்னமா இப்படியெல்லாம் சப்பையாக காட்சிகளை அடுக்குகிறார் என்று ஒரு அங்கலாய்ப்பு. 
அயர்ச்சியில் ஸ்ஸ்ஸ்ஸ் என்று பெருமூச் வரும்போதெல்லாம், ரஹ்மானின் தாளமும் பாடலும், சற்றே நிமிர வைக்கிறது.

வழக்கமான மணிரத்தினம் படத்தில் பாடல் காட்சிகள் அருமையாய் படமாக்கப்படும். இதில் அதுவும் பெரிய ஈர்ப்பை எடுத்தவில்லை. நடன அமைப்புகளெல்லாம் மனதில் பதியவில்லை.

ரஹ்மானை அடுத்து, ராஜீவ் மேனன் மின்னுகிறார். நல்ல கலர் டோனில், நல்ல கேமரா ஆங்கிளில், ஆரம்ப காட்சிகள் நன்றாய் இருந்தன. கடைசி கடல் காட்சியும் அருமையாய் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கதை பிசு பிசு பிசு என்றிருந்ததால், எந்தக் காட்சியும், எம்புட்டு நேர்த்தியாக எடுக்கப்பட்டு, எவ்வளவு ஆத்மார்த்தமாக நடித்திருந்தாலும், மனதில் ஒட்டவே இல்லை.

ஒரே ஒட்டுதல், ஆரம்ப காட்சியில் கவுதமின் தாயின் மரணமும், அதை ஒட்டிய காட்சிகளில், அந்தக் குட்டிச் சிறுவனின் நடிப்பும் அழுகையும் காட்சி அமைப்பும். 

கடல் - சுனாமியாய் வராமல், வற்றிய குட்டையாய் போனது.