recent posts...

Monday, April 02, 2012

சாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்

முன்குறிப்பு: 'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது. ஆனா, ஸ்ட்ராங்கான திட்டு வார்த்தை என்ற என்ணத்தில் வைக்கப்பட்ட தலைப்பு.

வேலுச்சாமியை எனக்குப் பலப் பல வருஷமா தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவரை எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளில், சின்ன சின்ன எலெக்ட்ரீஷியன் வேலை, தோட்ட வேலை, மற்ற பல எடுபடி வேலைகள் எல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

நிரந்தர வேலையில்லாமல், டே-டு-டே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார். சில பல வருடங்களுக்கு முன், திருமணமும் நடந்தேறி முடிந்து, இரு அழகிய குழந்தைகளும் உண்டு. தற்சமயம், +1ல்  ஒன்றும், எட்டாம் வகுப்பில் ஒன்றும்.

நானும் என் தெரு நண்பர்கள் கூட்டமும், அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவோம் அவரை. ரொம்பவே பாசமாய் இருப்பார்.

அண்ணி  எப்பொழுதும், கவலை தோய்ந்த முகத்துடனையே இருப்பார்.
"வாடகை குடுக்காததால வூட்டுக்காரன் திட்டறான். இந்த மனுஷன் காதுலையே போட்டுக்க மாட்றாரு. ஒரு நாள் பாத்தரத்தையெல்லாம் தூக்கி வெளீல போட்டா, புள்ளைங்களோட நடுத்தெருவுல தான் நிக்கணும்" என்பது போன்ற அங்கலாய்ப்புகள் அதிகமாய் கேட்கும்.

வேலுச்சாமி, நிரந்திரமில்லாத வேலையால், ஏழ்மை வாட்டி எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்றும் அதை வெளிக்காட்டியதில்லை. என் நினைவில் தெரியும் காட்சியிலெல்லாம், வேலுச்சாமி, ஏதாவது ஒரு வேலையை, விசில் அடித்துக் கொண்டே ஜாலியாய்த் செய்து கொண்டிருப்பார்.

ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறை விசிட்டிலும் நான் சென்னைக்கு வரும்போது, வேலுச்சாமிக்கு, ஐந்து வயது கூடிவிட்ட மாதிரி தெரியும்.
"பயலுவ ஓரளவுக்கு படிக்கறானுவ. பெரியவனுக்கும் வயரிங்க் சொல்லித் தரணும். காலேஜெல்லாம் படிக்க வேணாங்கறான்"னு சென்ற முறை சொன்னார். 
பணப் பற்றாக்குறையாலும், சென்னையின் விலைவாசி உயர்வும் ரொம்பவே வாட்டி எடுத்திருக்க வேண்டும் அவரின் குடும்பத்தை. எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து, கிட்டுவதை வைத்து  குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இம்முறை வேலுச்சாமியை பார்த்ததும் ரொம்பவே வேதனையாய்ப் போனது. துருபிடித்த சைக்கிள் ஒன்றில் போய்க் கொண்டிருந்தவரை நிறுத்தி, சௌக்கியம் விசாரித்தேன். "தென்னை மரத்துக்கு உறம் போடக் கூப்பிட்டாங்க பக்கத்து தெருவுல. அங்கதான் போறேன் தம்பி. நல்லாருக்கியா" என்று பேச ஆரம்பித்தார்.
அநேகமாய், வயது நாற்பதுகளின் கடைசியில் இருக்க வேண்டும். ஆனால், பார்த்தால், அறுபதை நெருங்கியது போல் தோற்றம்.
மேலும் பேசும்போது, விலை வாசி ஏற்றத்தால், அவரின் குடும்பம், மேலும் மேலும் நசுக்கப்படுவது புரிந்தது.

முக்கியமாய், வாடகை தாறுமாறாய் ஏறியிருக்கிறதாம். இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று, தாம்பரத்தை தாண்டிய, முடிச்சூரில், ரொம்ப தூரத்தில் தனக்கு இருந்த அரை க்ரவுண்டில், குட்டியாய் ஒரு ஓட்டு வீட்டைக் கட்ட எண்ணினாராம்.   வாடகை கட்டுவதில் இருந்து தப்பிக்க,  கையில் இருந்த நகை நட்டையெல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தில், சுவர் எழுப்ப ஆரம்பித்தாராம்.

இரண்டு ரூம் கட்ட அடித்தளம், சுவரும் எழுப்பியதில். ஆறடி சுவர் கட்டியதும், கையில் இருந்த பணம் தீர்ந்து போனதாம். சிமெண்ட்டும், செங்கல்லும், விற்கும் விலையில் தன்னால் முழு வீடு கட்ட முடியாது என்ற உண்மை புரிந்து, ஆறடி சுவருக்கு மேல், நாலு தூண்கள் மட்டும் இன்னும் சில அடிக்கு கட்டி, அதன் மேல் ஓடு வைத்து ஓரளவுக்கு கட்டி முடித்தாராம்.

சுற்றி வீடுகள் இல்லாததால், 'திறந்த வெளி' வீடு, இப்பொழுதைக்கு அசௌகர்யம் கொடுக்கவில்லையாம். மழை பெய்தால் மட்டும், பெரிய திண்டாட்டமாம்.
இதை விவரிக்கும்போதே,, மனதை பிசைந்து தொண்டை அடைத்தது எனக்கு. மனைவி, இரண்டு பிள்ளைகளுடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இவ்வளவு திண்டாட்டமா என்று.
இவ்வளவு துன்பத்திலும், நேர்மையை உடலை வருத்தி வேலை செய்யும் வேலுச்சாமியை எண்ணிப் பெருமிதமாய் இருந்தது.

"இப்ப எல்லாம் ஓ.கே தானே"ன்னு நான், வழக்கமாய் கேட்டு வைப்பதை கேட்டு வைத்தேன்.
"இல்ல தம்பி, இன்னும் வீட்டுக்கு கரெண்ட்டு வரலை. அப்ளிகேஷன் எல்லாம் ஈ.பி காரன் கிட்ட கொடுத்துட்டேன். இழுத்தடிக்கறானுவ. கேட்டா,  வீட்டுக்கு கிட்ட கரெண்ட்டு போஸ்ட்டு இல்லியாம். ரெண்டு போஸ்ட்டு நட்டு கம்பி இழுத்து கொடுக்கணுமாம். மூணாயிரம் ரூவா கொடுங்கராங்க. நான் எங்கப் போவேன் மூணாயிரத்துக்கு?"ன்னு மட மட என்ன பேசினார். அவரின் கண்களைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.
ஈ.பி. காரன் கேட்கும் லஞ்சப் பணம் மூணாயிரம் இவர் கட்டமுடியாதது , இவரின் தவறுபோல் எண்ணி வந்த பேச்சு. 

"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.

"அடப் போங்க தம்பி. இவன் மூணாயிரம் கேக்கறானேன்னு, நம்ம லயன்ஸ் க்ளப்பு நாராயணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. அவரு, என்னப் போய் எலெக்ட்ரிசிட்டி போர்ட்டு AE கிட்ட நேர்ல போயி பேசுங்க, சீக்கிரம் பண்ணிக் கொடுப்பாருன்னாரு. நானும், ரெண்டு மணி நேரம் லைன்ல நின்னு AE யப் பாத்து வெவரத்த சொன்னா, அவரு ஏழாயிரம் கொடுங்க அடுத்த வாரமே முடிச்சிடலாம்னு குண்டை தூக்கிப் போட்டுட்டாரு. அவரு எங்க தெருவுக்கு இது வரைக்கு பதினைஞ்சாயிரம் செலவு பண்ணிட்டாராம். என் கிட்ட வெறும் ஏழாயிரம் தான் கேக்கறாராம்" என்று வேலுச்சாமி சொல்லிக் கொண்டே போனார்.

அவரை இடை மறித்து, "பதினஞ்சாயிரம் AE சொந்தப் பணத்தையா போட்டாருன்னு கேக்க வேண்டியதுதானேண்ணே" என்று மீண்டும் NRI அட்வைஸு கொடுத்தேன்..

"அடப் போங்க தம்பி, அதெல்லாம் நடக்கர காரியமா. இவங்க கேட்டத கொடுக்காம நான் எத்தயாவது எக்கு தப்பா பேசிட்டா, அப்பரம், சாகர வரைக்கும், உபத்ரவம் பண்ணுவானுங்க தம்பி. லைன்மேன் கேட்ட மூவாயிரத்த ஏற்பாடு பண்ணி, வேலைய முடிச்சுக்கணும். தட்டு முட்டு சாமனயெல்லாம் கொண்டு போயி போட்டுட்டேன். இப்ப குடித்தனம் அங்கதான் நடக்குது. நான் வரேன் தம்பி" என்று சொல்லியவாறு  சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார் வேலுச்சாமி.

லஞ்சம், புற்று நோய் மாதிரி விரிந்து பரவிக் கிடக்கிறது நம் சமூகத்தில் என்பது அனைவருக்கு தெரிந்த விஷயமே. ஆனால், அதை களைந்தெடுக்க முழு மூச்சில் எந்த அரசாங்கமும் ஈடு படுவதாய் இல்லை. சாமான்யனுக்கு, 'லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை, என்பது போல், இந்த வழக்கம், பின்னிப் பிணைந்து உள்ளது, அரசாங்க அலுவல்களில்.

நெனச்சுப் பாருங்க, ஒரு சாதாரண மனிதர் வேலுச்சாமி. உழைத்து மட்டுமே வாழ்ந்து வருகிறாரு. சூது வாது தெரியாத குடும்பம். மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில், முழுதாய் கூட சுவர் எழுப்பப்படாத ஓட்டு வீட்டில், மின்சாரக் கனெக்‌ஷன் கூட இல்லாமல், வருங்காலம் இன்னும் என்னென்ன சுமைகளையெல்லாம் தன் தலையின் மேல் ஏற்றப் போகிறதோ என்ற பயத்தில் வாழும் வேலுச்சாமிகளுக்கு, என்றுதான் விடியும்?

அடிப்படைத் தேவைகளை வழங்கும், அரசு எந்திரமாவது, சாமான்யனை வாட்டாமல், நேர்மையாய் இயங்க வேண்டாமா?
வெளிநாடுகளில் இருக்கும் சுலப வாழ்க்கை, நம் மக்களுக்கு என்றுதான் வாய்க்குமோ?

ச! கம்மனாட்டிக்கள்!