recent posts...

Tuesday, March 30, 2010

வசந்த காலம்

வீட்டின் அருகில் உள்ள ஒரு குட்டிப் பூங்காவில் எடுத்தது.

வழக்கம் போல் க்ளிக் க்ளிக்னு ஒரு இரு நூறு படம் அடிச்சுத் தள்ளி, வீட்ல வந்து எல்லாத்தையும் சலவை செஞ்சு, பிற்சேர்க்கை எல்லாம் பண்ணி, ஏதாவது தேறுதான்னு பாத்தா, 200ல் ஒரு அஞ்சு தேறிச்சு.
இது, பளிச்னு முன்னாடி நின்னுச்சு.
சந்தோஷமாகி, ஃபிளிக்கரிலும் அப்லோடிட்டு அக்காடான்னு ஒக்காந்தப்பரம்தான் தெரிஞ்சுது, இந்தப் படம், 'No Trespassing' boardஐ பாத்துட்டு, அவசரமா எஸ்கேப்பும்போது, தங்க்ஸ் அவசரமா எடுத்தது.

என் பேர்ல அப்லோடு பண்ணியாச்சு, இனி காப்பிரைட்டுக்கு பிராது கொடுக்காம இருந்தா சரி.

Wednesday, March 24, 2010

கண்ணாலத்துக்கு பொண்ணு பாத்த கதை...

தொடர் பதிவுகள் பல வந்துள்ளன, பல போயுள்ளன.
எனக்கு இதுவரையில் வந்த தொடர் பதிவுகளில், மெத்தப் பிடித்தது, எட்டு மேட்டர் தொடர் பதிவுதான். நானும் பங்குகொண்டு என் வாழ்வில் 'நடந்த' எட்டு விஷயங்களை பிட்டு பிட்டு வைத்து மகிழ்ந்தேன்.

மற்ற பல தொடர் பதிவுகளும் சுவாரஸ்யமா இருந்தது. ஒரு சிலர் சேந்து, வரிசை கட்டி ஒரு குறு நாவலை எழுதி முடிச்சாங்க.

இப்ப, திரும்ப தொடர் பதிவு ஜுரம் அடிக்க ஆரம்பிச்சுருக்கு. இம்முறை ரொம்பவே சுவாரஸ்யமான தலைப்புடன் வலம் வருது.

சமீபத்திய 'தொடர் பதிவுகள்' வரிசையில் ஒண்ணுல இந்த மேட்டர் இருக்கு:
அயித்தானும் என்னைப்பாத்திட்டாரு, அவங்க அக்காதான்
எனக்கு முன்னமே பழக்கமாச்சே. இதுல திடும்னு ஒரு நாள்
”பொண்ணு பாக்கணுமாம்! லீவு போட்டுட்டு சென்னைக்கு
வரச்சொன்னாங்கன்னு ”அப்பா போன் செஞ்சதா மாமா
சொன்னாரு. எத்தனை தடவை பாப்பாங்கன்னு கோவம்மாத்தான்
கிளம்பிப்போனேன்.


சுவாரஸ்யமா இல்ல? 'கல்யாணம் கட்டிக்க பொண்ணு/பையன் பாத்த கதை'தான் தலைப்பாம்.

நானும் கோதாவில் சீக்கிரமா குதிக்கறேன். நம்ம புதுகைத் தென்றல் கூப்புட்டாக.

நாலு பேரை தொடர்ல சேத்து வுடறேன்.

ஆனா, இன்வைட் வராதவங்களும் கூட, அடிச்சு ஆட, சூப்பரான மேட்டர் இது. இதைப் படிக்கரவங்க எல்லாரும், உங்க எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்துக்கிட்டா, நம்ம கலாச்சாரத்தின் பெரிய வீச்சான,கண்ணாலத்தின் அருமை பெருமைகள் பதிவுலகிலும், வரலாற்றிலும் இடம் பெறும். நல்ல சான்ஸு அடிச்சு ஆட, வீணாக்காதீர்கள், இன்றே குதியுங்கள்.

கல்யாணம் ஆகி நொந்து நூடுல்ஸாப் போயிருக்கரவங்களுக்கு, அந்த ஆரம்ப சொற்ப சந்தோஷ நாட்களை நினைவில் நிறுத்த நல்ல சந்தர்ப்பம். நழுவவிடாதீர்கள் ;)படம் எப்டீகீது?

Sunday, March 21, 2010

பெண்களை நம்பவே நம்பாதே

இப்படி தலைப்பை வெக்க வெச்சுட்டாங்களேன்னு நெனச்சா எனக்கே வேதனையாதான் இருக்கு. வேறென்ன பண்றது, அடிமேல அடி விழுந்தா, அம்மிக்கல்லு கூட நகரத்தானே செய்யும்?

பொதுவாவே நானொரு சாப்பாட்டுப் பிரியன். வகை தொகையா சாப்பிடரதை ரொம்பவே ரசனையோடு எதிர்பார்த்து தினம் தினம் கையாள்பவன்.
ஒவ்வொரு வேளை உணவையும், பாத்தி கட்டி ஒரு வெட்டு வெட்டுவதை ப்ளான் பண்ணி எல்லா வேளையிலும் கடமையாக செய்து வருபவன்.
ஒரு வகையில், நான் இப்படி ப்ளான் பண்ணி, உணவு ஐட்டங்களை வெட்டி நொறுக்குவதில், எங்க நைனாவுக்கும் மம்மிக்கும் பெரும் பங்கு உண்டு.
பின்ன என்னா? என்னமோ வாழரதே வகை தொகையா சாப்பிடரதுக்குத் தான் என்பது போல் எங்க வீட்ல தினசரி பொழுது கழியும்.
காத்தால, 'கௌசல்யா' கேட்டுக்கிட்டே மெதுவா எழும்போதே, காஃபி மணமும், இட்லி/தோசை/பூரி/பொங்கல்/கிச்சடி/etc.. இதுல ஏதாவது ஒண்ணின் வாசம் மூக்கை துளைக்கும்.
நானும், நைனாவும், சக குடும்பமும், இதை மூக்குப் பிடிக்க மொக்கும் போதே, "லன்ச்சுக்கு என்ன பண்ணனும்?"னு பேச்சு எழும். ஆளாளுக்கு ஒரு டிஷ் கேட்க, மம்மி கூட்டி கழிச்சு, மதியானத்துக்கான மெனுவை ரெடி பண்ணுவாங்க.

வீக்-எண்டானா, லன்ச்சும், சக குடும்பம் சகிதமா, வாழையிலை போட்டுக்கிட்டு அடிச்சு தூள் கெளப்புவோம். சிக்கனோ/மீனோ மெனுவில் இல்லாத நாட்கள் மிகக் குறைவு.
சிக்கன் தம் பிரியாணி மாதத்தில் ஒரு தடவையாவது இடம் பெறும். அந்த நாள், ஒரு குட்டித் திருவிழா மாதிரி இருக்கும். என்னமோ, வீட்டுக்கு மன்மோகன் சிங் வர மாதிரி ஒரு பதட்டம் இருக்கும் எல்லார் கிட்டையும். ஆளாளுக்கு, ஒரு வேலையை மும்முரமா செஞ்சுக்கிட்டு, பிரியாணியை உருவாக்கி முடிப்போம். (இதைப் பத்தி தனிப் பதிவு அப்பாலிக்கா போட்டே ஆகணும்னு என் உள்மனசு சொல்லுது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைப் பதிவது, எமது வரலாற்று அவசியம் என்பதை நினைவில் கொள்க.)

இப்படி, வூடு கட்டி, வாழையிலையில், சிக்கனையும் மீனையும் தொம்சம் பண்ணும்போதே, "ராத்திரிக்கு சப்பாத்தி வித் சிக்கன் நல்லாருக்கும்ல?"ன்னு சக குடும்பத்தில் ஒரு சகா பேச்சைத் தொடங்கும். உடனே, அதை முன்மொழிந்து, வழிமொழிந்து, தீர்மானம் நிறைவேற்றப்படும். மம்மியும், சிரத்தையா, ராத்திரிக்கு ரெடி பண்ணிடுவாங்க.

டின்னரை வெட்டோ வெட்டென்று வெட்டித் தள்ளும்போதே, (ofcourse,) "காத்தால நாஸ்தாக்கு இன்னா?"ன்னு கேட்டு வைப்போம். "இடியாப்பம், இட்லி, தோசை, ஆப்பம், கிச்சடி, ..." இப்படி ஆளாளுக்கு முன் மொழிஞ்சு வைப்பாங்க. வேர யாராவது வழி மொழிஞ்சு, தீர்மானம் நிறைவேத்தி, மீண்டும் 'கௌசல்யா', காஃபின்னு வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்துச்சு.

இப்பேர்பட்ட ட்ரெயினிங்கில் வளர்ந்த எமக்கு, ஏழு கடலும், ஏழு மலையும் தாண்டி, அசலூறில் தங்கி, ப்ரெட்டும், ஃபாஸ்ட் ஃபுட்டும், ரூம் மேட்டுகளின் சமையலும், பெரிய இழப்பென நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா?

எப்படியோ, ஒண்ணு வரணும்னா, இன்னொண்ணை இழந்துதானே ஆகவேண்டியிருக்கு?

திரும்பவும், கௌசல்யா, காஃபி, இட்லி/கெட்டிச் சட்னி, வெங்காயச் சாம்பார், பெப்பர் சிக்கன், பிரியாணி, சப்பாத்தி, சால்னான்னு, இட்டு கட்டி அடிக்கும் நாள் என்னிக்கு வரும்னு ரொம்பவே ஏங்கத் தொடங்கிய வேளையில், ஒரு சுபயோக சுபதினத்தில், தங்கமணியின் வருகை.
மம்மி சமையல் ருசியா? தங்கமணி சமையல் ருசியா? என்ற பட்டிமன்றம் வைத்தால், யார் ஜெயிப்பாங்கன்னு, உங்களுக்கே தெரியும். 20 வருஷம், வசியம் செய்த, ரெசிப்பீஸை, நம் மூளையிலிருந்து சலவை செய்து எடுப்பது, அம்புட்டு ஈசி கிடையாது. ஸோ, i rest my case.

விஷயத்துக்கு வரேன்.
'கௌசல்யா' - லூஸ்ல விடலாம். நம்ம ஊரு மாதிரி, காலங்காத்தால எழுந்து, வாசல் தெளிச்சு கோலம் போடும் வசதிகள், இல்லை. ஸோ, கௌசல்யா சுப்ரஜா பாட்டு போடுவதெலாம் ரொம்ப எதிர்பாக்கப் படாது. லூஸ்ல விட்டுடுவோம்.
காஃபி? - இது கூட ஓகே. ப்ரூ காஃபியும், microwave பாலும், ருசியில்லாமல் இல்லை.
இட்லி/சட்னி? - ஹ்ம். இதெல்லாம் பேராசை. யாராவது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா, எதிர்பார்க்கலாம். மத்த நாட்களில், ப்ரெட்டும், கிஸான் ஜாமும் இருக்கவே இருக்கு. வயசாவுது, காத்தால ஹெல்த்தியா சாப்பிடரது நல்லதுதான். அதனால, இதையும் கூட லூஸ்ல விட்ருவோம்.
வெங்காய சாம்பார்/பெப்பர் சிக்கன்/பிரியாணி? - ஹ்ம். தினசரி கிட்டும் நாட்கள் போய், மாசத்துக்கு மூணு நாலு தபா கெடைக்குது. கெடைக்கரதை கொரை சொன்னா, அதுலையும் ஆப்பு விழும். ஸோ, ஸைலண்ட்டா நிறுத்திக்கிறேன். மம்மி கிட்ட ரெசிப்பி கேட்டு செய்யலாமேன்னு ஐடியா குடுத்தா, கொமட்ல குத்து விழுது. ஹ்ம்.

எல்லாத்தையும் பொறுத்துக்கலாம் மக்கள்ஸ். ஆனா, சமீபத்தில் ஒண்ணு நடந்தது, அதை மட்டும் என்னால தாங்கிக்க முடியலை. அதான், பொலம்பித் தள்ள வந்துட்டேன். அவ்வ்வ்வ்.

அத்தி பூத்தது போல் என்றாவது கிட்டும் இட்லி/கெட்டிச் சட்னி, சமீபத்தில் கிட்டும் பெரும்பாக்கியம் பெற்றேன். விசிட்டர் ஒருத்தருக்காக, மாவு அரைச்சு, மீதி வந்ததால், சில பல நாட்களுக்கு இட்லி தின்னும் பாக்கியம் கிட்டியிருந்தது.

இந்த கெட்டி சட்னி செய்ரது எவ்ளோ சிம்பிளான மேட்டர் மக்கள்ஸ்? தேங்காயையும், மொளகாவையும், உப்பையும் போட்டு அரச்சு, எண்ணையில் கடுகையும் கறிவேப்பிலையையும் தாளிச்சு கொட்டணும்? அம்புடுதேன்.
இதுலையும் ப்ராப்ளம்.
மொத நாள், இட்லியும், சட்னியும் வந்தது.
சட்னியில் கடுகும், கறிவேப்பிலையும் மிஸ்ஸிங்க்.
"இன்னாம்மா இது? தாளிச்சு கொட்னாதானே ஒரு டேஸ்ட்டு வரும்"னேன். ஒரு ஹிட்லர் லுக்கு பதிலா கெடச்சுது. "நாளைலேருந்து, கொஞ்சம் கறிவேப்பிலை தாளிச்சு கொட்டிடு, ப்ளீஸ்ஸ்ஸ்"னேன். "ஹ்ம்"னு பதில் கிடைச்சுது.
மறு நாள்.
இட்லியும், சட்னியும் வந்தது.
ஆவி பறக்கும் இட்லி. சட்னியில் கறிவேப்பிலை.
உள்ளூர எனக்கு குதூகலம். ஆஹா, நாம சொல்றதைம் மதிச்சு, அடுத்த நாளே இப்படி பறிமாரி திக்குமுக்காட வைக்கராங்களே தங்க்ஸ்னு.

இட்லியை மெதுவா வலிக்காம பிச்சு, கெட்டிச் சட்னியில் அழுத்தி ஒரு முக்கு முக்கி, மெதுவா வாய்ல போட்டேன். கண்ணை மூடிக்கிட்டு, அந்த சுவையை ரசிக்க ஆரம்பிச்சேன்.
சில பிரஹஸ்பதிகள், கறிவேப்பிலையை ஓரம் கட்டி வச்சுடுவாங்க. எனக்கு கறிவேப்பிலை டேஸ்ட் பிடிக்கும். கறிவேப்பிலை சாப்டா முடி கொட்டாதுன்னு எங்க பாட்டி சொல்வது, அசரீரீ மாதிரி கேக்கும் எனக்கு. அதனால, கறிவேப்பிலையை விட்டு வைப்பதில்லை.

வாயில் இருந்த இட்டிலித் துண்டையும், சட்டினியையும், ரசித்து ருசிக்கும்போது, கறிவேப்பிலை லேசாய் கசந்தது போலிருந்தது. இன்னாடா இப்படி இருக்காதேன்னு புத்தி சொல்லிச்சு.

அடுத்த துண்டை உடைச்சு, சட்டினியில் முக்கி, அதில் வரும் கறிவேப்பிலையை உற்றுப் பார்த்தேன். அதிர்ந்து போனேன்.
"ஓ மை லார்ட், ஏன்ஸர் மை ப்ரேயர்"னு சிவாஜி டயலாக் தான் மனசில் ஃபிளாஷ் பாக் ஆனது.
கறிவேப்பிலை, பச்சையாக இருந்தது.
தங்க்ஸை கூப்பிட்டு, "கறிவேப்பிலை, சரியா ஃப்ரை ஆகல போலருக்கே"ன்னு பயந்து கிட்டே சொன்னேன்.

குடுத்ததை சாப்பிட்டுக் கெளம்பாம, ஷெர்லாக் ஹோம்ஸ் கணக்கா, ஆராய்ச்சியா பண்றன்னு ஒரு லுக்கு விட்டாங்க.
"ஆமாமாம், ஃப்ரை எல்லாம் பண்ணலை, சும்மா பிச்சுத் தான் போட்டேன்"னு சொல்லிட்டு, விஜய்ஷாந்தி கணக்கா விஷுக் விஷுக்னு நடந்து எஸ்கேப்பிட்டா தங்க்ஸ்.

அவ்வ்வ்வ்வ்வ். ஒரு கெட்டிச் சட்டினியில், தாளிச்சு கொட்டச் சொன்னா, எனக்கு இப்படி அல்வாவைக் கிண்டிக் கொடுக்கறாங்க சார்.
நான் இன்னா ஆடா, மாடா, எலை தழையை பச்சையா இப்படித் தின்ன?

பெண்களை நம்பலாமா சாரே? ஹ்ம்!

பி.கு: இப்படி பல எப்பிஸோட்ஸ் லைனா வர வாய்ப்பிருக்கு. வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த தங்க்ஸுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருந்தாலும், இந்த மாதிரி வாய்ப்பு குறைந்து கொண்டே வரவேண்டும் என்று எம்பிரானை வேண்டிக் கொள்ளாத நாளில்லை.
பெப்பரையும், தேங்காயையும் அரைச்சு ஊத்தி ஒரு பெப்பர் சிக்கன் பண்ணுவாங்க சார் எங்க மம்மி. ஹ்ம். இன்னும் கொஞ்ச மாசம் இருக்கு, அடுத்த வெக்கேஷனுக்கு. அவ்வ்வ்வ்.

disclaimer: தங்க்ஸ் படிப்பதில்லை என்ற ஒரே மன தைரியத்தில் இந்தப் பதிவு இயற்றப்பட்டுள்ளது ;)

Thursday, March 18, 2010

Kerala Cafe - ப்ரமாதமான அவியல்

மலையாளக் கரையிலிருந்து வரும் படங்களில் பல, யதார்த்த உலகும், யதார்த்த மக்களும், யதார்த்த வசனமும், ஆர்பாட்டமில்லாமல் ரம்யமா அரங்கேற்றப்படும். நம்மாலும் இவ்வகை படங்களை சிரமமே இல்லாமல் உள்வாங்கி, ஆழமா ரசிச்சு ருசிக்க முடியுது.
நான் கண்ட படங்களிலே, மம்முட்டி நடித்த 'தனியார்வதனம்' போல் இதுவரை கண்டதில்லை. தேடிப்பிடித்து வாங்கிய விசிடியை, நேரம் கிட்டும் போதெல்லாம் பார்த்து புளகாங்கிதம் அடைவதுண்டு.

சோகப் படங்கள் ரொம்பவே பிடிக்குது. இந்த வகை படங்கள் பார்க்கும்போது, மனது கனம் ஆவதும், கண்ணின் விளிம்பில் கண்ணீர் எட்டிப் பார்ப்பதும், ஒரு சுகமான அனுபவம்.
தமிழில் சட்டுனு ஞாபகம் வருவது, மகாநதி. ஆங்கிலத்தில், ஜூலியா ராபர்ட்ஸும், சூசன் சாரண்டனும் பட்டையைக் கிளப்பிய Step Mom இவ்வகை.

Kerala Cafe, பத்து இயக்குனர்கள், பத்து இசை அமைப்பாளர்கள், பத்து ஒளி/ஒலிப்பதிவாளர்கள் இணைந்து, பத்து விதமான குட்டிக் கதைகளை தனித் தனியா இயக்கி, மாலையா கோத்து வெளிவந்த படம். ஒவ்வொரு கதைக்கும் பெருசா சம்பந்தம் இல்லைன்னாலும், லேசாக சம்பந்தப்படுத்தி, ஒரு முழுப் படமாக பார்த்து ரசிக்கும்படி செஞ்சிருக்காங்க. Kerala Cafe ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ஒரு உணவகம். எல்லா கதா பாத்திரங்களும், சும்மா, வந்து போகும் இடம்.
இந்த அவியலில், பத்து காய்களும் அருமை. அதில் எட்டு பட்டையை கிளப்பிய அருமை. ரெண்டு சுமார் ரகம். பட்டையைக் கிளப்பிய ஒரு குட்டிக் கதை, நம்ம ரேவதி இயக்கியதாம்.
நான் மேலே சொன்ன, சோகத்தைப் பிழியும் கதைகள்தான், கிட்டத்தட்ட எல்லாமே.இந்த மாதிரி கூட்டு முயற்சியெல்லாம் மலையாளக்கரையில் தான் முடியுமோ? அடிக்கடி இந்த மாதிரி எத்தையாவது பண்ணி கலக்கிக்கிட்டே இருக்காங்களே?

பத்தில் என்னை உலுக்கி ஆட்டிய கதைகளை மேலோட்டமா சொல்றேன். படத்தை பாக்கணும்னு நெனைக்கரவங்க, மேலப் படிக்காதீங்க.

Bridge என்று கதை. அன்வர் ரஷீத் என்ற இயக்குனர் எடுத்த குட்டிக் கதை இது. கொட்டும் மழையில், பச்சைப் பசேல் சூழலுக்கு நடுவில் ஒரு குடிசையில் ஆரம்பிக்கிரது கதை. ஒரு சலவைக்காரரின் வீடாம். சுற்றி வெள்ளை வேட்டிகள் கொடிக் கம்பங்களில் காயப் போட்டிருக்காங்க. எல்லாமே, மழையில் நனைந்து, காத்தில் பரக்குது.
ஒரு ரொம்ப வயசான பாட்டி, வீட்டு வாசல்ல நின்னு பாத்திட்டிருக்காங்க. கண்ணும் சரியாத் தெரியலை அவங்களுக்கு. மேலே படத்தில் இடது மூலையில் இருக்கும் பாட்டி.
சலவைக்காரரின் மனைவி, வயதான மாமியாரை கவனித்துக் கொள்ள முடியவில்லைன்னு பொலம்பிக்கிட்டு இருப்பாங்க.
மருமகள் இப்படி நம்மைப் பத்திதான் பொலம்பரா என்ற ப்ரக்ஞையே இல்லாமல், தன் மகனிடம், தன்னை பீச்சுக்குக் கூட்டிட்டுப் போய் காட்டுடான்னு அப்பாவியா கேட்டுக்கிட்டு இருப்பாங்க.
அன்று இரவு, வழக்கம்போல் மருமகள் புலம்பத் தொடங்கி விடுவாள். இந்த வயசான பாட்டியை என்னால கவனிச்சுக்க முடியாது. ஒரு நாளைக்குப் பல தடவை படுக்கையிலேயே எல்லாம் போயிடறாங்க. வேணும்னா, இனி நீங்க சுத்தம் பண்ணி கவனிச்சுக்கோங்கன்னு புருஷனுக்கு டார்ச்சர் கொடுக்கறாங்க.
மறு நாள், சலவைக்காரன், தன் அம்மாவிடம், பீச்சைக் காட்டரேன் வான்னு, தனியா அம்மாவைக் கூட்டிக்கிட்டு போறான்.
ஒரு நாள் மகனும் அம்மாவும் சந்தோஷமா சுத்திட்டிருக்காங்க.
அம்மாக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தரான். அம்மாவை பீச்சுக்கு கூட்டிட்டுப் போறான். அம்மாவுக்கு நல்ல சாப்பாடு வாங்கித் தரான்.
அப்பரமா, ஒரு படத்துக்குக் கூட்டிட்டுப் போறான்.
பட இடைவேளையின் போது, இரும்மா டீ வாங்கிட்டு வரேன்னு, வெளீல வரான்.
கொஞ்ச நேரம் மூலையில நின்னு அழறான்.
அடுத்த பஸ் பிடிச்சு ஊருக்கு திரும்பிடறான், அம்மாவை அம்போன்னு விட்டுட்டு.
அடுத்த நாள், அம்மா, ரயில்வே ஸ்டேஷனில், Kerala Cafeயின் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்.

Anwar - hats off!

'மகள்'னு ஒரு கதை. நம்ம ரேவதி எடுத்தது.
குவாரியின் அருகில் இருக்கும் ஒரு குடிசையில் வாழும் தமிழ் குடும்பம். அம்மா, அப்பா, ஒரு குட்டிப் பொண்ணு, ஒரு குட்டிப் பையன்.
தன் மகளை இன்னொரு பணக்காரக் குடும்பத்துக்கு தத்து கொடுக்க முடிவு பண்றாங்க, அப்பாவும் அம்மாவும்.
அம்மாவுக்கு மனசில்லைன்னாலும், அதன் மூலம் கிட்டும் பணத்தில், மகனை படிக்க வைக்கலாம்னு எண்ணம்.
இதை செஞ்சு தர ஒரு ப்ரோக்கரும் இருக்காரு.
அந்த குட்டிப் பொண்ணு, தன் தாயை பிரிவது புரிந்தாலும், தன்னால், தன் தம்பிக்கும் குடும்பத்துக்கும் விடிவு பிறக்கும்னு ப்ரோக்கர் சொன்னதை கேட்டது, அழாம திடமா இருக்கா.
அந்த நாளும் வருது. பணக்கார தம்பதியர் காரில் வந்து, பொண்ணை எடுத்துட்டுப் போறாங்க.
அம்மா அழுது ஆர்பாட்டம் பண்றாங்க. ஆனா, குட்டிப் பொண்ணு, கலங்காமல், டாட்டா காட்டிக்கிட்டு போரா.
பணக்கார தம்பதியரும், மகளை, 'தங்கம் போல்' கண்ணுல வச்சு பாத்துக்கறேன்னு சொல்லிடறாங்க.
அடுத்த சீனில், Kerala Cafeல் ஒக்காந்துக்கிட்டு இருக்காங்க இந்த பணக்கார தம்பதியர். மடியில், ஆழமான உறக்கத்தில் குட்டிப் பொண்ணு. கையில், தம்பி கொடுத்த மயிலிறகை கெட்டியா புடிச்சுக்கிட்டு இருக்கா.
கணவன் கேட்கிறான், "எழுந்துட மாட்டால்ல?"ன்னு.
மனைவி, "அதெல்லாம் எழுந்துக்க மாட்டா, தூக்க மாத்திரை டோஸ் ஜாஸ்தியா கொடுத்திருக்கேன்"னு சொல்றா.
கொஞ்ச நேரத்தில், ஃபோன் பேசிட்டு ஒரு பாம்பே காரர் வராரு.
கத்தை கத்தையா பணத்தை கொடுத்துட்டு, குட்டிப் பொண்ணை தோளில் தூக்கிக்கிட்டு வெளீல போயி, ஒரு வேனில் ஏறி ஒக்காருவாரு.
குட்டிப் பெண்ணின் கையில் இருந்த மயிலிறகு, கீழே விழுந்து, வேன் டயர் அதன் மேல் ஏறிப் போகும்.

ரேவதி - hats off!

புறம் காழ்ச்சகள், Lal Jose இயக்கிய கதை.
மீண்டும், பச்சைப் பசேல் தேயிலைத் தோட்டமும், நீர் வீழ்ச்சியும், ஈரப் பதமான சாலையும். சாலக்குடி பக்கத்துல எங்கையோ.
ஸ்ரீநிவாசன், டவுன் பஸ்ஸில் பிரயாணம் செய்யறாரு.
மம்முட்டியும் அந்த பஸ்ல ஏறுவாரு. ஏறியது முதல், மம்மூட்டி சிடுமூஞ்சியா இருப்பாரு. எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுவாரு.
ஒரு காலேஜ் கோஷ்டி பஸ்ஸில் ஜாலியா ரகளைப் பண்ணுவாங்க. அவங்களை பிடிச்சு திட்டுவாரு.
ஒவ்வொரு ஸ்டாப்பிலும், அஞ்சு நிமிஷம் ஓரம் கட்டி, டீ குடிக்கும் டிரைவரையும், நடத்துனரையும் திட்டிக்கிட்டே இருப்பாரு.
தன் வீட்டின் அருகே வந்ததும், பஸ்ஸை நிறுத்தச் சொல்லுவாரு. "இவ்ளோ நேரம் அங்க நிக்காத இங்க நிக்காதன்னு ஞாயம் பேசிக்கிட்டு வந்தியே, உன் வீட்டு பக்கத்துல எல்லாம் நிறுத்த முடியாது, பஸ் ஸ்டாண்டில் நிறுத்தறேன், நடந்து வா"ன்னு நடத்துனர் திருப்பித் திட்டுவாரு.
பஸ்ஸிலிருந்து அவசரமா எறங்கி சாலை ஓரத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு ஓடுவாரு மம்மூட்டி. பெரிய கூட்டமும் ஒப்பாரிச் சத்தமும். ஒரு சவப் பெட்டி அப்போ வந்திறங்கும். ஒரு குட்டிப் பையனின் சவப் பெட்டி.

Lal Jose - Hats off! மம்முட்டி - கலக்கல் சாரே.


இப்படி, கசக்கிப் பிழியும் வகையில் கதைகளுக்கு மத்தியில், வயிற்றைக் கிழித்த ஹாஸ்யமும் ஒன்று இருந்தது.

Happy Journey, Anjali Menon இயக்கியது.
ஜெகதி ஸ்ரீகுமார் (நம்ம ஊரு கவுண்டர் மாதிரி), ஒரு இரவுப் பேருந்தில் ஒக்காந்துக்கிட்டு இருப்பாரு. பஸ்ஸ்டாண்டில், வந்து செல்லும் பெண்களையெல்லாம் கிண்டல் செஞ்சுக்கிட்டு இருப்பாரு.
ஒரு இளம் பெண் ஜெகதியின் இருக்கைக்கு அருகில் வந்தமர்வாள். ஒரு பெரிய பை கொண்டு வந்திருப்பாள்.
ஜெகதியும், வழக்கம் போல், ஈவ் டீஸிங் வேலையை ஆரம்பித்து, ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளி, அவளை உரசோ உரசென்று உரசுவார்.
அந்தப் பெண் எரிச்சல் அடைந்தாலும், பொறுத்து கொண்டு ஒரு நாவலை படித்து முடிப்பாள்.
அந்தப் பெண்ணின் செல்பேசியை பிடுங்கி, "என்னம்மா நீ, அந்த காலத்து ஃபோனை வச்சிருக்கியே, என் ஃபோனைப் பாரு, லேட்டஸ்ட்டு"ன்னு சொல்லிக்கிட்டே அந்தப் பொண்ணி படம் பிடிப்பாரு.
கடுப்பாகிப் போவாள் பெண்.
அமைதியா, "ஆமாமாம், பழைய ஃபோன் தான். ஆனா, இந்த ஃபோனால், இந்தப் பஸ்சில் இருக்கும் அனைவரின் தலைவிதியை மாற்றப் போகிறேன்"னு ஒரு பீடிகையா சொல்லுவா.
ஜெகதி ஒரு நிமிஷம் அமைதியாகி, அப்பரம் திகிலாகி, மிரட்சியாக பாப்பாரு.
அந்தப் பொண்ணும், ஒரு 'தீவிரவாதி' கணக்கா, கொஞ்ச நேரம் சீரியசா பேசிக்கிட்டே வருவா.
ஜெகதிக்கு வேர்த்துக் கொட்டும்.
அதற்கு முன், தன் மனைவியை மட்டம் தட்டிப் பேசியவர். தனக்கு ஒரு மனைவியும், ரெண்டு பசங்களும் இருப்பதாகவும் சொல்லி, தன் குடும்ப புராணத்தை சொல்லி புலம்புவாரு.
பஸ் ஸ்டாப்பு வரும், அந்தப் பொண்ணு, தன் பையை எடுத்துக்கிட்டு ஜெகதி டாட்டா காட்டிக்கிட்டே எறங்கிப் போயிடும்.
மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை, "என்னம்மா இன்னிக்கு யாரை போட்டு வாட்டி எடுத்த"ன்னு சிரிச்சுக்கிட்டே கேப்பாரு.
Kerala Cafeக்கு வரும் ஜெகதி, அதுக்கப்பரம், பெண்கள் பக்கமே திரும்பி பாக்க மாட்டாரு.

Anjali - hats off!

மற்ற சில குறும் கதைகளும் அருமையா வந்திருக்கு படத்தில்.
Nostalgia - திலீப் ஹீரோ. துபாயில் இருக்கும் NRI. துபாயில் இருக்கும்போது, "ஹ்ம் நம்ம ஊரப் போல வருமான்னு" புலம்புவது. ஊருக்கு விடுமுறையில் வந்ததும், "ச, என்ன ஊரு இது"ன்னு மாத்தி புலம்புவது.
Island Express - ப்ரித்விராஜும் இன்ன பலரும். Alleppey Express விபத்துக்குள்ளாகி பலர் மரணம் அடைவார்கள், அந்த விபத்தால் இணைந்தவர்கள் பலர் சந்தித்துக் கொள்ளும் கதை.
அபிராமம் - கடன் தொல்லையால் தவிக்கும் ஒரு பிசினஸ் மேன். வேறு வழியில்லாமல், தன் மனைவியையும் மகனையும் அவளின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டு, தற்கொலை செய்து கொள்ள யத்தனிப்பார். கடைசி நிமிடத்தில், மனைவி திரும்ப வந்துவிடுவார். உங்களை விட்டுப் பிரிய மனசு வரலைங்கன்னு அழுது கொண்டே. இருவரும், கட்டித் தழுவி அழுவாங்க. டச்சிங்.

பாருங்க. கண்டிப்பா பாருங்க.


இனி, எல்லா பதிவிலும், பதிவுக்கேத்த மாதிரி ஒரு நிர்வாணப் படம், நம்ம ஹுசைன் தாத்தா ஸ்டைலில் வரையலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். நம்மளும், பாப்புலர் ஆவணும்ல ;)

Monday, March 15, 2010

நித்யா, ஹுசைனு, நானு, நீங்க

நம்மூரில் பரபரபரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. அடிக்கடி ஏதாவது பரபரப்பா நடக்குது. ஒன்னியும் நடக்காத நாட்களில், எதையாச்சும் ஆராஞ்சு பீராஞ்சு பரபரக்க வைக்கவும் நம்ம ஊடகங்கள் தவறுவதில்லை.
அவங்கள சொல்லியும் குத்தமில்லை, இந்த மாதிரி பரபர ஐட்டம் வந்தாத்தானே, ஊர்ல பாதி பேரு, பேப்பரை வாங்கறான், செய்திகளை தெரிஞ்சுக்க பறக்கறான்.
பட்ஜெட் அறிவிச்சதை எம்புட்டு பேரு, வெவரமா படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டாங்கன்னு தெரியாது, ஆனா, ஹுசைனு எவ்ளோ கிறுக்கு கிறுக்கினாரு, நித்தி சம்பந்தப்பட்ட வீடியோ எத்தினி யூட்யூபில் வந்திருக்குன்னு ஃபிங்கர் டிப்புல வச்சிருக்கோம்.

நம்மையெல்லாம் ஒரு 'மயக்க' நிலையிலேயேதான் இந்த பேப்பர் காரனுங்களும், டிவிக்காரனுங்களும் வச்சிருக்காங்க. அவங்க சொல்றதுதான் செய்தி. ஒருத்தன ஒரே நாளுள தூக்கி மேலையும் வெக்க முடியுது, அதே ஆளை அடுத்த நாளே மூஞ்சீல கரியப் பூசி கவுத்து மூடிடவும் முடியுது. ரொம்பவே சக்திவாய்ந்த மீடியம் இது. குறிப்பா, நம்மூரில் அநேகம் பேரின் பொழுதுபொக்கும், இந்த முட்டாள் பொட்டியை சுத்தியே ஓடுது.

சமீபத்திய பரபர, காவி போர்த்திய நித்யாநந்தனும், ஓவியத் தாத்தா ஹுசைனும்.

சீரியஸ் மேட்டருக்கு போவதற்க்கு முன், ஒரு லைட் மேட்டரு. பிரபல பதிவர் அனுப்பிய ஈமெயில் ஃபார்வர்டு, நித்தியைப் பற்றி. நித்தி சொல்றாராம்,
 • "ரஞ்சி, கடவுளக்கூட எங்கயிருக்காருன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம் போலருக்கு, ஆனா, இந்த கெரகம் புடிச்ச, கேமராவை எங்க ஒளிச்சு வெக்கறானுங்கன்னு கண்டே புடிக்க முடியலியே? டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்சு".


நித்யானந்தனின் முகம் ரொம்பவே பரிச்சயமானது. பல பத்திரிகைகளில், பல் இளிச்சுக்கிட்டு 'ஆன்மீகத்துக்கு எங்க கிட்ட வாங்க' ரக விளம்பரங்கள் நிறைய பாத்திருக்கேன். மெடிட்டேஷன் சொல்லித் தருவாங்களாம். சில பல டாலர்கள் ஃபீஸாம். இவரின் 'சீடர்கள்' யாரும், எனக்கு நேரிடையா பழக்கம் இல்லை. ஆனா, இதே வகை Art of Living ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின், வகுப்பில் கலந்துகொண்டவர்கள் சிலரைத் தெரியும்.
அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செலவு செய்யும் பணம், ப்ரயோஜனமா இருக்காம். தியானம் செய்யச் சொல்லித் தராங்களாம். தினசரி பழகுனா, ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றாங்களாம். இருந்துட்டுப் போகட்டும். அதை ஆராஞ்சு கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, சில பல டாலர்களை செலவு செஞ்சு அந்த கிளாஸுக்குப் போயிட்டு, எப்படி இருக்குன்னு அனுபவிச்சுட்டு, அப்பாலிக்கா நொட்டை நொடிகள் சொல்லலாம்.
அதுக்கு முன்னாடி, அதை பத்தி குறை சொல்வது சரியில்லை.

அதே அளவுகோல், நித்தியின் க்ளாஸுக்கும் கொடுப்பதில் தவறொன்றுமில்லை. எதையோ சொல்லிக் கொடுக்கறாங்க. பணம் இருக்கரவங்க கொடுக்கறாங்க. கத்துக்கறாங்க. எப்படியோ ஒழிஞ்சு போவட்டும். அது ஃப்ராடு சொல்றதுக்கு முன்னாடி, அந்த கிளாஸுக்குப் போயி படிச்சுட்டு வந்திருக்கணும். அந்த கிளாஸ் பைசாக்கு ப்ரயோஜனம் இல்லன்னாகூட, வாத்தியாரை கண்டமேனிக்கு திட்டப்ப்டாது.

சிலருக்கு நிம்மதி ஆசிரமங்களில் சொல்லித்தரும் தியானங்களில் வரலாம்;
சிலருக்கு நிம்மதி சரக்கடித்தால் வரலாம்;
சிலருக்கு நிம்மதி இயற்கை எழில் சுழ்ந்த இடத்தில் பயணம் செய்தால் வரலாம்;
சிலருக்கு நிம்மதி வயிறு நிறைய சாப்பிட்டு போடும் குட்டித் தூக்கத்தில் வரலாம்;
அவரவருக்கு அவரவர் வழி.

நித்தியின் திருட்டு வீடியோவுக்கு வருவோம். பொதுவாழ்க்கையில் பாப்புலரான ஒரே காரணத்தால், இவரின் அந்தரங்கத்தை இப்படி வெட்டவெளியில் போட்டு உடைப்பது எந்த வகையில் ஞாயம்? தனக்கு பிடிக்காத ஒவ்வொருத்தரையும் இப்படி திருட்டு வீடியோ எடுத்து யூ.ட்யூபுக்கு கொண்டு வந்தா, யூ.ட்யூபு தாங்குமா?
யோசிச்சுப் பாருங்க. நித்தியை திட்டுபவர்களில் எம்புட்டு பேரு யோக்கியமானவர்கள்? உங்க வாழ்க்கையில் கடந்த ஒரு வருஷத்தின் ஒவ்வொரு நிமிஷத்தையும், யாராவது திருட்டு வீடியோ எடுத்து வச்சிருந்து யூ.ட்யூபில் போட்டா, controversial questionable ஐட்டம் எதுவும் அதில் வராதா?
பிறரைக் கல்லெறியும் முன்....

நித்தியும், இன்ன பிற பொதுநல வித்தகர்களும் கவனத்தில் கொள்ள. எப்படியோ பாப்புலர் ஆகிட்டீங்க. அதை கடைசி வரை தக்க வச்சுக்கணும்னா, நீங்க சொல்லிக் கொடுக்கரதை நீங்களும் பின்பற்றப் பாருங்க. பொதுவாழ்வில் இருக்கரவங்களுக்கு, பொதுவாவே யாரும் மரியாதை கொடுக்கமாட்டாங்க. எம்.ஜி.ஆரையே 'அவன்/இவன்'னு ஏக வசனத்தில் கூப்பிட்டுப் பழக்கப் பட்ட கூட்டம் எங்குளுது.
ஏதோ, எங்க தயவாலதான், நீங்களெல்லாம் பாப்புலர் ஆகியிருக்கீங்கங்கர உளவியல் ரீதியான காரணமாம் அது. நல்லா ஏத்தி விடுவோம். ஆனா, நீங்க சறுக்கினா, நடு மண்டையில நச்சுன்னு குட்டுவோம்.
ஈசியா, மேல கொண்டு போய் விட்டவங்க, ஒரு நிமிஷத்துல, கால வாரி சாக்கடைல முக்கி எடுத்துடுவாய்ங்க.
திருட்டுச் சாமியார் யாராச்சும், கடைசி வரை சக்ஸஸ்ஃபுல்லா இருந்திருக்காங்களான்னு யோசிச்சுப் பாருங்க. கொஞ்சமாவது உத்தமமா இருந்தீங்கன்னா, 'சாமி' ரேஞ்சுக்கு எங்க மக்கள்ஸ் வச்சுக்கராங்களே, அதை கெடுத்துக்காதீங்க. அப்பரம், கும்மி அடிச்சுடுவாய்ங்க.
ஆயில் மசாஜுக்கு முன்னாடி ஒரு தபா நல்லா யோசிச்சுப் பார்க்க வேண்டிய விஷயம் இது. அப்பாலிக்கா குத்துதே கொடையுதேன்னா, கொம்பேனியார் பொறுப்பில்லை.

மக்கள்ஸ் கவனித்தில் கொள்ள. பிறரைப் பார்த்து கல்லெரியும் முன்....
யோசிச்சுப் பாருங்க, நம்மில் பலர் 9 டு 5 வேலை செய்யும் சராசரியாத்தான் இருப்போம். நித்தி வகையராக்களுக்கு இருக்கும் 'நல்ல' திறமைகளில் 1%வது நம்ம கிட்ட இருக்குமா? நித்தியை எடுத்துக்கிட்டா, 200 புத்தகங்களும், பல ஆயிரம் கட்டுரைகளும், பல நூறு சொற்பொழிவுகளும் நடத்தியிருக்காராம். எப்பேர்பட்ட தப்புகள் செய்திருந்தாலும், அவங்க கொஞ்சமாவது நல்லது செய்யாமலும் இல்லை. பல கோடிகளை 'திரட்டி', சில கோடிகளை அன்னதானங்களுக்கும், கல்விக்கும், இயற்கை சீற்றங்களின் போதுமெல்லாம், எடுத்து விடாமலில்லை. அதையும் மனசுல வச்சுக்கணும். அரசாங்கங்கள் செய்யாத பல விஷயங்களை, இந்த மாதிரி சிலர் செஞ்சுக்கிட்டு வராங்க என்பதை மறுக்க முடியாது. ஸோ, மாத்தி யோசிங்க.
இந்த மாதிரி ப்ரச்சனை வந்தா, குண்டு கட்டையை தூக்கிக்கிட்டு போய், ஸ்பாட்ல ஆஜராகி, கண்ணாடியை ஒடைக்கரவங்கெல்லாம் யாருங்க? கண்ணாடி ஒடைக்கரது அவ்ளோ குஷியான மேட்டரா? ஸ்ஸ்ஸ்.

ஹுசைனு. இந்த தாத்தா தொல்லை தாங்க முடியல்ல. ஓவியங்கள் பிடிக்கும் எனக்கு. பாரீஸில் லூவ்ரு ம்யூசியத்தில் இருப்பவை ஓவியங்கள். திருவனந்தபுரத்தில் ரவிவர்மாவின் அரண்மனையில் இருப்பவை ஓவியங்கள். தெரு ஓரங்களில், சாக்பீஸில் அழகாய் வரையப்படுவதும் ஓவியங்கள். ஆனா, இந்த தாத்தா வரையரது, மாடர்ன் ஆர்ட்டாவும் இல்லாம, அழகாவும் இல்லாம ஏதோ ஒரு கிறுக்கல் வகை. வருஷத்துக்கு ஒரு தபா யாரையாவது அம்மணமா வரஞ்சு, பரபரப்பை ஏற்படுத்துவாரு. அட்லீஸ்ட், அந்த ஓவியங்களாவது, அழகா இருந்திருந்தா மன்னிச்சு விட்டுரலாம். ஏதோ பென்சிலில் குழந்தை கிறுக்கர மாதிரி கிறுக்கிட்டு, இம்மாம்பெரிய ஆளாயிட்டாரு. மெடிட்டேஷன் கிளாஸ் மாதிரிதான் இதுவும். முழு விஷயமும் தெரியாம, ரொம்ப நொட்டை சொல்ல முடியாது இவரை.
இவர் சரஸ்வதியை அம்மணமா கிறுக்கிட்டாருன்னு எல்லாரும் குய்யோ முய்யோன்னு கத்தராங்க.

கத்தரவங்களே, நீங்க இப்படி கத்தி ஆர்பாட்டம் பண்ணனும்னு நெனச்சுத்தான் தாத்தா இப்படி controversialஆ கிறுக்கறாரு. வயசான காலத்துல, ஊரே அவர் பேரைச் சொல்லும்போது குஷி ஆவராரு. ஏன் இப்படி ஏத்தி விடறீங்க? ரெண்டு ரூவா A4 பேப்பர்ல, அஞ்சு நிமிஷம் செலவு பண்ணி பென்சில்ல எத்தையோ கிறுக்கினா, அவருக்கு ஏன் இம்புட்டு வெளம்பரம் கொடுக்கறீங்க?
ஹுசைனுக்கு பதிலா ஒரு ராமானுஜம் இதை கிறுக்கியிருந்தா இவ்ளோ பெருசாகியிருக்காது. நம்ம கோயில்களில் இல்லாத அம்மண சிலைகளா?
ஹுசைன் ஒரு விளம்பரப் பிரியர். கடைசி காலத்தில், இயன்ற அளவு கவனம் பெர, இப்படி எத்தையாவது கிறுக்கிக்கிட்டேதான் இருப்பாரு.
துர்கா, லட்சுமி, சரஸ்வதின்னு வரிசையா கிறுக்கிட்டாரு. அடுத்த வருஷம் கண்டிப்பா யாரையாவது ஸ்கெட்சு போடுவாரு. அது, கிட்டத்தட்ட இந்த மாதிரிதான் இருக்கும், ஸோ, உங்க நேரத்தை விரையம் பண்ணாதீங்க.கருத்ஸ் சொல்லிட்டுப் போங்க. வீடியோ பாத்தீங்களா? உங்க கண்ணுக்கு தப்பா தெரீதா? சரஸ் பாத்தீங்களா? கோவம் வருதா?

Sunday, March 14, 2010

Alaskaவை பார்க்க அவா...

Alaskaவுக்கு கப்பல் சுற்றுலா (cruise) செல்ல அவா எழுந்துள்ளது.

ஜூலையில் ஒரு பத்து நாள் கட் அடிச்சிட்டு, இதை செஞ்சு முடிக்கணும்.

எத்தையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும் என்பது அடியேனின் வழிமுறை. அந்த அடிப்படையில், ஏற்கனவே Alaskaவுக்கு கப்பல் சுற்றுலா போனவர்களிடமிருந்து சில விவரங்களையும் டிப்ஸ்களையும் எதிர்பார்க்கிறேன்.

குறிப்பா, இந்த கேள்விகளுக்கான விடை தேவை:
 • ஏழெட்டு நாள் தேவையா? மூணு நாள் கப்பலில் சுத்திப் பார்க்க வழிவகை இருக்கா?
 • ஏழெட்டு நாள் கப்பலுக்குள்ள தாக்குபிடிக்க முடியூமா? போரடிச்சுடாது?
 • செல்ஃபோனெல்லாம் வேலை செய்யுமா? internet இருக்கும்ல?
 • தோராயமா எம்புட்டு செலவாகும்?
 • Alaska உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?
 • Glacier Bay, Sawyers Bayன்னு ஏகப்பட்ட பேக்கள் இருக்கே, எத்தை கண்டிப்பா பாத்தே ஆவணும்?
  etc.. etc..

  ப்ளான் பண்ணி, சமீபத்தில் பார்த்த இடங்கள் இவை. எங்கேயும், பதிவர்ஸை மீட் பண்ணலை. அலாஸ்காவிலாவது, யாரையாவது பாக்க முடியுமான்னு பாக்கறேன் ;)
  துபாய்...
  லண்டன்
  பாரிஸ்
  ரோம்
  வென்னிஸ்
  தஞ்சாவூர்

  Flickrல் Alaska படங்கள் இங்கே.
 • Wednesday, March 10, 2010

  I love Rahman, but...

  விண்ணைத்தாண்டி வருவாயாவின் பாடல் ஒவ்வொன்றையும் வெகுவாய் ரசித்தேன். அதுவும், படத்தின் ஆரம்பத்தில் வரும் கிட்டார் பிட்டும், அந்த 'ஆரோமலே' கத்தும், ஜிவ்வென்ற ரகம்.
  கேட்டவுடன் ரொம்பவே இழுத்த கிட்டார், எங்கியோ கேட்ட மாதிரி இருக்கேன்னு தோணிச்சு.

  தேடினா, அதே சாயலில், Pink Floydன் ப்ரசித்தி பெற்ற மீஜிக் ஒண்ணு.

  இது inspirationஆ காப்பியா டீயா என்று ஆராய விருப்பமில்லை.

  ஆனா, ரஹ்மான் இப்போ, பலராலும் கவனிக்கப்படுபவர். இனி, inspire எல்லாம் ஆகப்டாது. தனித்துவமா போடணும் என்பதை சொலிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

  Pink Floydன் Wish you were here


  Dave Mathews Bandன்னு ஒருத்தரும் inspire பண்ணினதா தெரியுது.


  ரஹ்மானின், ஆரோமலே...


  என் ரிங் டோன், இந்த கிட்டார் பிட்டுதான்.

  Tuesday, March 09, 2010

  இதுதாண்டா தன்நம்பிக்கை

  "தன்நம்பிக்கை நட்சத்திரம்"னு கேள்வி பட்டிருப்பீங்க. நட்சத்திரமா கூட இருக்கவேணாம், ஒரு 40வாட்டு பல்பாவாவது ஒவ்வொருத்தரும், தன் மேல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

  அது என்ன 'தன்' மேலான நம்பிக்கை?
  தன்நம்பிக்கையின் மேலோட்டமான விளக்கம், ஒருவருக்கு, தன் சுயத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை. உங்கள் திறமையின் மேல் இருக்கும் நம்பிக்கை. நீங்கள் யாருக்கும், எதற்கும் என்றைக்கும் சளைத்தவரில்லை என்பதில் அடங்கா நம்பிக்கை.

  ஆனா, நம்மூரில் பெரும்பான்மையானவர்கள் (நான் உள்பட), இந்த 'தன்'நம்பிக்கை விவகாரத்தில் கொஞ்சம் ஒடுங்கியேதான் இருக்கிறோம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, 'உன்னால் முடியும்டா பயலே'ன்னு வூட்ல இருக்கரவங்க சொன்னதா ஞாபகமே இல்லை. "எதிர் வீட்டு பாலாவைப் பாரு, பக்கத்து வீட்டு கோமதியைப் பாரு, நீயும் இருக்கியே ஒதவாக்கரை"ன்னு கேட்டதுதான், நம்ம ஆட்டோகிராஃப் வாழ்க்கை.

  வூட்லதான் இப்படி, ஸ்கூல்ல சம்பளம் வாங்கர வாத்தி மட்டும் ஒழுங்கா? அவங்க அதுக்குமேல. "நீயெல்லாம் ஏண்டா வந்து எங்க உயிர வாங்கர. மாடு மேய்க்கத்தான் லாயக்கு"ன்னு நொடிக்கொரு தடவை புலம்பித் தீர்த்த பெருவாரியான வாத்திகள், பிற்பாதி ஆட்டோகிராஃப்.

  யோசிச்சுப் பாத்தா 'தன்'நம்பிக்கை, ஓரளவுக்கு வளர, உரம் போட்டது, "மச்சி, ரொம்ப ஈசிடா இது. எவ்வளவோ பண்ணிட்ட, இத்த பண்ண முடியாதா?"ன்னு நொடிக்கொரு தடவை மந்தரித்து விட்ட நட்பு வட்டம்தான் காரணம்.

  டீப்பா திங்க் பண்ணிப் பாத்தா, நட்பு வட்டம் அமையாம இருந்திருந்தா, 'தன்'நம்பிக்கை இன்னும் சீரோ வாட்டு பல்பாதான் இருந்திருக்கும். கடல் தாண்டி வந்து இப்படி ஆணி பிடுங்கி, 40 வாட்டு பல்பாகியிருக்க முடியாது.
  40 வாட்டு ரொம்ப காலமா 40 வாட்டாவே இருக்கு. 60 வாட்டாகணும்னா, திரும்ப பழைய நட்பு வட்டத்தை கூடச் சேத்துக்கணும்னு நெனைக்கறேன்.

  இப்ப இன்னாத்துக்கு இந்த ஃபிலாசஃபி எல்லாம்னு யோசிக்கரவங்களுக்கு, ரிலாக்ஸ் ப்ளீஸ், டாப்பிக்குக்கு வாரேன்.

  40 வாட்டிலிருந்து, அப்பப்ப 45 வாட்டாவரது, மற்ற 'தன்நம்பிக்கை நட்சத்திரங்களை' எங்காவது அடிக்கடி பாக்கும்போதும், அவங்களைப் பத்திய செய்திகளைப் படிக்கும்போதும்.
  ஹேமந்த் கர்கரேக்களும், ரஹ்மான்களும், சச்சின்களும், அபிநவ்களும் சாதிக்கும்போதெல்லாம், மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க் ஆகி, பாட்டரி சார்ஜ் ஆகும்.

  நேர்லையே சிலரைச் சந்திக்கும்போது, ஸ்பார்க் ஆகி தீப்பொறி பறக்கும். கொஞ்ச காலத்துக்கு, எனக்குள்ளும், அந்தத் தாக்கம் இருக்கும். நான் செய்யும் வேலையிலும் ஒரு மாற்றம் தெரியும்.

  அப்படி ஒரு 'தன்நம்பிக்கை' நட்சத்திரத்தை சமீபத்தில் பார்த்தேன். இதில் ஆச்சரியமான விஷயம், எங்க வூட்டுக்கு பக்கத்துலையே இருக்காரு இவரு. விஷயத்துக்கு வாரென்.

  என் கிட்ட இருக்கர, காசியோ ம்யூஜிக் பியானோவை, வித்துடலாம்னு முடிவு பண்ணி ஒரு குட்டி விளம்பரத்தை எங்க ஏரியாவில் ஒட்டினேன். அன்னிக்கு சாயங்காலமே ஒரு ஃபோன் வந்தது. எடுத்து காதுல வச்சா, இரும்புக் கதவில் கத்தியை வைத்து சுரண்டும் மாதிரி ஒரு சப்தம். அப்பப்ப 'பியானோ'ன்னு மட்டும் லேசா காதுல விழுது. மத்தபடி ஒண்ணுமே புரியல்ல. கர கரன்னு சத்தம். சரி, ஃபோன் தான் சரியில்ல போலருக்குன்னு, நானும், 'பியானோ இருக்கு, சாயங்காலம் வாங்க'ன்னு சொல்லி, அட்ரஸும் கொடுத்தேன்.

  சாயங்காலம், சொன்ன நேரத்துல கதவு தட்டப்பட்டது. கிட்டத்தட்ட 26 வயசு இருக்கும். ஒரு வட இந்தியப் பயல். கை குலுக்கி, ஏதோ சொல்ல ஆரம்பிச்சாரு. திரும்பவும், அதே கர கர சத்தம். ஒரு நிமிஷம் எனக்கு ஒண்ணுமே புரியல்ல. கொஞ்ச நேரத்தில் தான் புரிந்தது, அவரின் பேச்சே அப்படித்தான்னு.
  ஐம்பது வார்த்தையில் ஒரு வார்த்தை மட்டுமே எனக்கு புரிந்தது. ஆனால், அவரு, அதைப் பத்தியெல்லாம் கவலைப் படலை, சொல்ல வந்ததை சொல்லிக்கிட்டே இருந்தாரு. வெலவெலத்துப் போயிட்டேன். கண் தெரியாதவங்களை பாத்த்து அனுபவப் பட்டிருக்கேன். வாய் பேசாதவர்களுடனும் பழக்கம் இருக்கு. இப்படி, ஒருத்தரை இப்பத் தான் பாக்கறேன்.
  ஒரு விதமான கலக்கம் என்னுள் படர்ந்தது, 'ஐயோ பாவம்' என்பது போன்ற ஃபீலிங்க் எனக்கு. அதை முகத்திலும் காட்டியிருப்பேன் போல. ஆனா, அவரு அதையெல்லாம் கண்டுக்காம சொல்லிக்கிட்டே இருந்தாரு. நானும், ஒரு 'பக் பக்' மனசுடன், பியானோவை காட்டி, விலையைச் சொன்னேன்.
  அவங்கப்பாவுக்காக வாங்கரேன்னு சொன்ன மாதிரி இருந்தது. பெட்டிக்குள் போகுமான்னு தெரியல்ல, அளந்து பாத்துட்டு, மறுநாள் வந்து வாங்கிக்கரேன்னு சொன்னாரு.
  பேச்சு வாக்கில், கூகிளில் முக்கியமான ஒரு குழுவில் வேலை செய்வதாகவும் சொன்னாரு. ஒரு வருஷம்தான் ஆச்சாம் சேந்து. சிரிச்சுக்கிட்டே ரொம்ப பிரகாசமா 'பேசி'க்கிட்டே இருந்தான்.

  அவரு கெளம்பிப் போனப்பரம், எனக்குள் ஒரு விதமான ஒரு வாட்டம்.

  ஒவ்வொருத்தருக்கு என்ன என்ன மாதிரியெல்லாம் தடைகள் இருக்கு.
  ஆனா, இந்த மாதிரி ஒரு தடை இருந்தும், "இதெல்லாம் ஒரு மேட்டரா?"ன்னு எட்டி ஒதச்சு, இம்புட்டு தூரம் வந்து, ஒரு நல்ல வேலையையும் அமைத்துக் கொண்டு, நைனாக்கு, அவருக்கு பிடிச்ச மாதிரி ஒரு கிஃபிட்டை கொண்டு போகணும்னும் வந்து நின்ன பயலை நெனைச்சு புல்லரிச்சு போயிட்டேன்.

  நான் ஏற்கனவே சொன்ன மாத்ரி, எனக்கு தன்நம்பிக்கை ரொம்பவே குறைவு. எப்பவாவது ஒரு தடவை இந்த மாதிரி யாரையாவது பாக்கும்போது ஸ்பார்க் ஆகும். ஆனா கொஞ்ச நாளில் அடங்கிடும். ஐந்தில் வளையாதது, பின்னாளில் வளையுமா? வளையாது. முறிஞ்சிரும்.

  இதனால் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நீங்க எப்படியோ வளந்திருப்பீங்க. உங்க தன்நம்பிக்கை என்னை மாதிரி கொஞ்சம் மங்கலாவே இருக்கலாம். அடிக்கடி ஸ்பார்க் வர, 'பாஸிட்டிவ்வான' விஷயங்களைப் படியுங்கள், பழகுங்கள்.
  மிக மிக மிக முக்கியமாய், உங்கள் சுற்றத்திலும், நட்பிலும் இருக்கும் மற்றவர்களை, ஊக்குவித்துக் கொண்டே இருங்கள். நமக்குக் கிட்டாத, 'பாஸிட்டிவ்' ஸ்பார்க், மத்தவங்களுக்காவது கிட்ட கொஞ்சம் மெனக்கடுங்கள்.

  ஊக்குவித்தலே, வெற்றியாளர்களை உருவாக்கக் கூடிய வித்தை.

  சொல்ல மறந்துட்டேன், கொஞ்ச நாளைக்கு முன் அந்த பயலை, ஜோடியா பாத்தேன். கல்யாணம் ஆயிடுச்சு. சந்தோஷமா பேசிக்கிட்டே ஜோடியா போறான். 'ஹாய்'னு டாட்டா காமிச்சான். இன்னும் கொஞ்ச நாளுக்கு, என் 'தன்நம்பிக்கை' ஸ்பார்க்கு இந்தப் பயல்தான்.

  பி.கு: கிட்டாரை தூசு தட்டி எடுக்கணும். கத்துக்க முடியும் என்ற நம்பிக்கை போயி, சோம்பேரித்தனம் புகுந்துடுச்சு. இப்ப திரும்ப ஒரு ஸ்பார்க் வந்திருக்கு. மீட்டிட வேண்டியதுதான்.
  guitar1

  Monday, March 08, 2010

  விண்ணைத்தாண்டி வருவாயா?  மின்னலே முதல், வாரணம் ஆயிரம் வரை அனைத்து கௌதம் மேனன் படங்களும், என் பார்வையில், தரமானவை. ஒரு தனித் தன்மையுடன் தன் முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இங்க ரிலீஸ் ஆன அன்னிக்கே பாக்கணும்னு திட்டம் இருந்தது. ஹாரிஸுக்கு பதிலா ரஹ்மானை போட்டதில், ஹாரிஸின் பளிச் ஹிட் இல்லாத மாதிரி தெரிந்தாலும், ரஹ்மானின் பாடல்களை மீண்டு மீண்டும் கேட்டபோது ரொம்பவே பிடித்துப் போயிருந்தது.
  ஹோசானா, இளமைத் துள்ளல்.
  ஓமனப் பெண்ணே, கேக்கும்போதே, த்ரிஷாவை மனதளவில் ஓடவிட்டு கற்பனை பண்ணிப் பாத்தாச்சு.
  கார்த்திக் குரலில், 'விண்ணைத்தாண்டி வருவாயா?'ன்னு ஒரு பாட்டும் காதுக்கு சுகமாய் இருந்தது.
  கண்டிப்பா அம்சமா இருக்கும்னு முன் முடிவுடன் இருந்தேன்.

  ஆனா, பாக்கலாமா வேணாமான்னு ஒரு தடுப்பு, சிம்பு.
  சிம்புவின், attitudeஆ, இல்லை, டி.ஆரின் வித்தையான்னு தெரியல்ல, சிம்புவை பிடிப்பதில்லை. சிம்பு படத்தை $12 குடுத்து பாக்கணுமான்னு, மொத நாளு போகாம விட்டுட்டேன்.

  சமீபத்தில் ஆணி மிக அதிகமாய் ஆகி, ஏகப்பட்ட குடைச்சல்கள் ஆபீஸில். ப்ரச்சனைகள் பெருகி வழிவதால், 24மணி நேரமும், ஆணி அடித்தல் தேவைப்பட்டது. ஒரே ஆளு, எவ்ளோ ஆணிதான் அடிப்பதுன்னு, மூணு பேரு, ஷிஃப்ட்டு கட்டி அடிச்சோம். இதனால், ஒரே நன்மை, சூர்யோதயத்துக்கு முன் ஆபீஸுக்கு போயி, மதிய வேளையில், மண்டை காஞ்சதும் வூட்டுக்கு வந்திடலாம்.

  போன செவ்வாக்கிழமை மதியம் வீட்டுக்கு வரும்போது, சரி, மாட்னி ஷோ பாத்து ரொம்ப நாளாச்சேன்னு, விண்ணைத் தாண்டி வருவாயா போயிடலாம்னு முடிவு பண்ணி, தங்கமணியுடன் கெளம்பி போயாச்சு. தியேட்டர்ல நாங்க ரெண்டே பேருதான்.
  செவ்வாய்க்கிழமை 4மணிக்கு, வேர யாரு இருப்பா?

  ரெண்டு பேருக்காக படம் போடுவாங்களான்னு யோசிச்சேன். ஆனா, அதையெல்லாம் அவங்க கண்டுக்கலை, வெட்டாம ஒட்டாம, முழுசாவே போட்டாங்க.

  படத்தின் ஆரம்பமே அமக்களம். 'ஆரோமலே' பாட்டின், கிட்டார் பிட்டு, படத்தில் ஆங்காங்கே தூவி விட்டுருக்காரு ரஹ்மான். ஒரு கிளர்ச்சியான பிட்டு அது. பரிச்சயமாகவும் இருந்தது. மேஜிக்கல் ம்யூஜிக்.

  மாடி வீட்டுப் பெண்ணான மல்லு கிருஸ்துவ த்ரிஷாவை, கண்டதும் காதலிக்கும் ஹிண்டு சிம்புவின் கதை. காதலை வெறுக்கும் பெண்ணின் அப்பா. பல தடவை பல விதமாக எடுக்கப்பட்ட கதை. ஆனா, கௌதம் பாணியில், ஒரு பாலிஷ்டான பாணியில் புதுமையா வந்திருக்கு.

  த்ரிஷா அழகு. கொஞ்சம் வயசு தெரியுது. ஆனாலும், அழகு. நடிப்பு பிரமாதம்.
  சிம்பு. ஹ்ம் சொல்லவே கஷ்டமா இருக்கு. ஆனாலும் சொல்லிடறேன். யதார்த்தமா நல்லாவே நடிச்சிருக்காரு.
  சிம்புவின் நண்பராக ஒரு கேமராமேன் வேடத்தில் ஒருத்தர் வராரு (கணேஷ்). பாக்க, கபாலி கணக்கா பயங்கரமா இருக்காரு. இன்னாடா, வேர ஆளே கெடைக்கலியா கௌதமுக்கு முதல் காட்சியில் நெனைச்சேன். அடுத்தடுத்த காட்சியிலிருந்து, என்னை விட யாருமே இப்படி ஜாலியா பண்ணியிருக்க முடியாதுன்னு நிரூபிச்சிட்டாரு மனுஷன். குட் சாய்ஸ். படத்தில் காமெடி ட்ராக் இல்லாத குறையை இவரு போக்கிடறாரு.குறிப்பா, 'என்னாடா தம்பி'ன்னு அடிக்கடி அவரு சிம்புவை கேட்பது, சூப்பரா பண்ணியிருக்காரு.

  படத்தின் காமெராமேன், மனோஜ் பரமஹம்சாவாம். த்ரிஷாவை அழகா காமிச்சிருந்தாலும், பாட்டெல்லாம், கலர்ஃபுல்லா வந்திருந்தாலும் கூட, எனக்கு பெருவாரியான காட்சிகள் பிடிக்கலை. காமெராவை ஏன் இந்த ஆட்டு ஆட்டித் தொலையறாங்க? ஏன் இந்த ஃபாஸ்ட் எடிட்டிங்? வயசான(?) காலத்துல இப்படி பாத்தா தலைதான் வலிக்குது. அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல, இப்படி ஆட்டி ஆட்டி படத்தை காமிச்சா எப்படி ரசிச்சுப் பாக்கரது? ரம்யமான காதல் கதைக்கு, எல்லா காட்சியும் மயிலிறகு கணக்கா ரம்யமா இருக்க வேணாமா?
  கேரளா ஆலப்புழாவும், backwatersம் டசக் டசக்னு வெட்டி வெட்டி ஒட்டிய எடிட்டிங்கிலும், வேகக் காமெராவிலும், அனுபவித்து உள்வாங்க முடியவில்லை.
  காமெராமேன்களும், எடிட்டர்களும் கொஞ்சம் மாறுங்கப்பா. ராப் மூஜிக் வீடியோ மாதிரி, நம்ம ஊர் பாடல்களை ஏன் படம் பிடிக்கணும்? ஸ்ஸ்ஸ்.

  படத்தில் எல்லா காட்சியிலும், த்ரிஷாவும் சிம்புவுமே வந்தாலும், அலுப்பு தெரியாமல், மெல்லமாய் போகிறது.
  பெருசுகளுக்கு படம் பிடிக்காது. எம்மைப் போன்ற இளசுகளுக்குத்தான் பிடிக்கும் ;)

  திரிஷாவுக்கு, தன் குடும்பம் பெருசா, சிம்பு பெருசான்னு அடிக்கடி குழுப்பம் வருது. அந்த குழப்பத்துடன் கூடிய நடிப்பை, அழகா வெளிப்படுத்தறாரு.
  படத்தின் முடிவும் அமக்களம். குழப்பமான முடிவாய் வந்திருக்க வேண்டியது, நல்லபடியா காட்சிகளை அடுக்கி, நச்சுனு முடிச்சிருக்காரு கௌதம்.

  நிறைய பேரு, இரண்டாம் பாகம் இழுவைன்னு சொல்லியிருந்தாங்க.

  எனக்கென்னமோ, படம் முழுக்கவும் இதமா இருந்தது.
  படம் முடியாம, அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் இழுத்துக்கிட்டே இருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு தோணிச்சு.
  த்ரிஷாவின் மீதான ஜொள்ளா? 'ஆரோமலே' பாட்டின், கிட்டாரா? எதுன்னு தெரியல்லை.

  மொத்தத்தில், வசீகரமான படம்.

  எளசுகள், கண்டிப்பாய் பார்க்கலாம்.

  Sunday, March 07, 2010

  முக்கிய ஆஸ்கார் முடிவுகள் - 2010

  சென்ற ஆண்டு போல் சுடச்சுட சேதி போடலாம்னு நெனச்சேன்.

  ஆனா, இந்த வருஷம் ஒரு ஸ்லம்டாக் மில்லியனர் இல்லியே.
  அதனால, நீங்களே க்ளிக்கி அப்பப்ப தெரிஞ்சுக்கோங்க.

  ஆஸ்கார் போட்டிக் களத்தில் உள்ளது/வர்கள் கீழே.

  க்ளிக்கினால், யாரு யாரு எதுக்கு போட்டியில் இருக்காங்க, யாரு கெலிச்சாங்கன்னு தெரியும்.  Steve Martinதான் ஹோஸ்ட்டிங். கலக்குவாரு கண்டிப்பா.

  உங்க predictions இன்னான்னு சொல்லுங்க?

  அவதாரம் அள்ளுமா?