recent posts...

Showing posts with label corruption லஞ்சம் vigilence. Show all posts
Showing posts with label corruption லஞ்சம் vigilence. Show all posts

Monday, April 02, 2012

சாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்

முன்குறிப்பு: 'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது. ஆனா, ஸ்ட்ராங்கான திட்டு வார்த்தை என்ற என்ணத்தில் வைக்கப்பட்ட தலைப்பு.

வேலுச்சாமியை எனக்குப் பலப் பல வருஷமா தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவரை எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளில், சின்ன சின்ன எலெக்ட்ரீஷியன் வேலை, தோட்ட வேலை, மற்ற பல எடுபடி வேலைகள் எல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

நிரந்தர வேலையில்லாமல், டே-டு-டே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார். சில பல வருடங்களுக்கு முன், திருமணமும் நடந்தேறி முடிந்து, இரு அழகிய குழந்தைகளும் உண்டு. தற்சமயம், +1ல்  ஒன்றும், எட்டாம் வகுப்பில் ஒன்றும்.

நானும் என் தெரு நண்பர்கள் கூட்டமும், அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவோம் அவரை. ரொம்பவே பாசமாய் இருப்பார்.

அண்ணி  எப்பொழுதும், கவலை தோய்ந்த முகத்துடனையே இருப்பார்.
"வாடகை குடுக்காததால வூட்டுக்காரன் திட்டறான். இந்த மனுஷன் காதுலையே போட்டுக்க மாட்றாரு. ஒரு நாள் பாத்தரத்தையெல்லாம் தூக்கி வெளீல போட்டா, புள்ளைங்களோட நடுத்தெருவுல தான் நிக்கணும்" என்பது போன்ற அங்கலாய்ப்புகள் அதிகமாய் கேட்கும்.

வேலுச்சாமி, நிரந்திரமில்லாத வேலையால், ஏழ்மை வாட்டி எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்றும் அதை வெளிக்காட்டியதில்லை. என் நினைவில் தெரியும் காட்சியிலெல்லாம், வேலுச்சாமி, ஏதாவது ஒரு வேலையை, விசில் அடித்துக் கொண்டே ஜாலியாய்த் செய்து கொண்டிருப்பார்.

ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறை விசிட்டிலும் நான் சென்னைக்கு வரும்போது, வேலுச்சாமிக்கு, ஐந்து வயது கூடிவிட்ட மாதிரி தெரியும்.
"பயலுவ ஓரளவுக்கு படிக்கறானுவ. பெரியவனுக்கும் வயரிங்க் சொல்லித் தரணும். காலேஜெல்லாம் படிக்க வேணாங்கறான்"னு சென்ற முறை சொன்னார். 
பணப் பற்றாக்குறையாலும், சென்னையின் விலைவாசி உயர்வும் ரொம்பவே வாட்டி எடுத்திருக்க வேண்டும் அவரின் குடும்பத்தை. எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து, கிட்டுவதை வைத்து  குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இம்முறை வேலுச்சாமியை பார்த்ததும் ரொம்பவே வேதனையாய்ப் போனது. துருபிடித்த சைக்கிள் ஒன்றில் போய்க் கொண்டிருந்தவரை நிறுத்தி, சௌக்கியம் விசாரித்தேன். "தென்னை மரத்துக்கு உறம் போடக் கூப்பிட்டாங்க பக்கத்து தெருவுல. அங்கதான் போறேன் தம்பி. நல்லாருக்கியா" என்று பேச ஆரம்பித்தார்.
அநேகமாய், வயது நாற்பதுகளின் கடைசியில் இருக்க வேண்டும். ஆனால், பார்த்தால், அறுபதை நெருங்கியது போல் தோற்றம்.
மேலும் பேசும்போது, விலை வாசி ஏற்றத்தால், அவரின் குடும்பம், மேலும் மேலும் நசுக்கப்படுவது புரிந்தது.

முக்கியமாய், வாடகை தாறுமாறாய் ஏறியிருக்கிறதாம். இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று, தாம்பரத்தை தாண்டிய, முடிச்சூரில், ரொம்ப தூரத்தில் தனக்கு இருந்த அரை க்ரவுண்டில், குட்டியாய் ஒரு ஓட்டு வீட்டைக் கட்ட எண்ணினாராம்.   வாடகை கட்டுவதில் இருந்து தப்பிக்க,  கையில் இருந்த நகை நட்டையெல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தில், சுவர் எழுப்ப ஆரம்பித்தாராம்.

இரண்டு ரூம் கட்ட அடித்தளம், சுவரும் எழுப்பியதில். ஆறடி சுவர் கட்டியதும், கையில் இருந்த பணம் தீர்ந்து போனதாம். சிமெண்ட்டும், செங்கல்லும், விற்கும் விலையில் தன்னால் முழு வீடு கட்ட முடியாது என்ற உண்மை புரிந்து, ஆறடி சுவருக்கு மேல், நாலு தூண்கள் மட்டும் இன்னும் சில அடிக்கு கட்டி, அதன் மேல் ஓடு வைத்து ஓரளவுக்கு கட்டி முடித்தாராம்.

சுற்றி வீடுகள் இல்லாததால், 'திறந்த வெளி' வீடு, இப்பொழுதைக்கு அசௌகர்யம் கொடுக்கவில்லையாம். மழை பெய்தால் மட்டும், பெரிய திண்டாட்டமாம்.
இதை விவரிக்கும்போதே,, மனதை பிசைந்து தொண்டை அடைத்தது எனக்கு. மனைவி, இரண்டு பிள்ளைகளுடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இவ்வளவு திண்டாட்டமா என்று.
இவ்வளவு துன்பத்திலும், நேர்மையை உடலை வருத்தி வேலை செய்யும் வேலுச்சாமியை எண்ணிப் பெருமிதமாய் இருந்தது.

"இப்ப எல்லாம் ஓ.கே தானே"ன்னு நான், வழக்கமாய் கேட்டு வைப்பதை கேட்டு வைத்தேன்.
"இல்ல தம்பி, இன்னும் வீட்டுக்கு கரெண்ட்டு வரலை. அப்ளிகேஷன் எல்லாம் ஈ.பி காரன் கிட்ட கொடுத்துட்டேன். இழுத்தடிக்கறானுவ. கேட்டா,  வீட்டுக்கு கிட்ட கரெண்ட்டு போஸ்ட்டு இல்லியாம். ரெண்டு போஸ்ட்டு நட்டு கம்பி இழுத்து கொடுக்கணுமாம். மூணாயிரம் ரூவா கொடுங்கராங்க. நான் எங்கப் போவேன் மூணாயிரத்துக்கு?"ன்னு மட மட என்ன பேசினார். அவரின் கண்களைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.
ஈ.பி. காரன் கேட்கும் லஞ்சப் பணம் மூணாயிரம் இவர் கட்டமுடியாதது , இவரின் தவறுபோல் எண்ணி வந்த பேச்சு. 

"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.

"அடப் போங்க தம்பி. இவன் மூணாயிரம் கேக்கறானேன்னு, நம்ம லயன்ஸ் க்ளப்பு நாராயணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. அவரு, என்னப் போய் எலெக்ட்ரிசிட்டி போர்ட்டு AE கிட்ட நேர்ல போயி பேசுங்க, சீக்கிரம் பண்ணிக் கொடுப்பாருன்னாரு. நானும், ரெண்டு மணி நேரம் லைன்ல நின்னு AE யப் பாத்து வெவரத்த சொன்னா, அவரு ஏழாயிரம் கொடுங்க அடுத்த வாரமே முடிச்சிடலாம்னு குண்டை தூக்கிப் போட்டுட்டாரு. அவரு எங்க தெருவுக்கு இது வரைக்கு பதினைஞ்சாயிரம் செலவு பண்ணிட்டாராம். என் கிட்ட வெறும் ஏழாயிரம் தான் கேக்கறாராம்" என்று வேலுச்சாமி சொல்லிக் கொண்டே போனார்.

அவரை இடை மறித்து, "பதினஞ்சாயிரம் AE சொந்தப் பணத்தையா போட்டாருன்னு கேக்க வேண்டியதுதானேண்ணே" என்று மீண்டும் NRI அட்வைஸு கொடுத்தேன்..

"அடப் போங்க தம்பி, அதெல்லாம் நடக்கர காரியமா. இவங்க கேட்டத கொடுக்காம நான் எத்தயாவது எக்கு தப்பா பேசிட்டா, அப்பரம், சாகர வரைக்கும், உபத்ரவம் பண்ணுவானுங்க தம்பி. லைன்மேன் கேட்ட மூவாயிரத்த ஏற்பாடு பண்ணி, வேலைய முடிச்சுக்கணும். தட்டு முட்டு சாமனயெல்லாம் கொண்டு போயி போட்டுட்டேன். இப்ப குடித்தனம் அங்கதான் நடக்குது. நான் வரேன் தம்பி" என்று சொல்லியவாறு  சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார் வேலுச்சாமி.

லஞ்சம், புற்று நோய் மாதிரி விரிந்து பரவிக் கிடக்கிறது நம் சமூகத்தில் என்பது அனைவருக்கு தெரிந்த விஷயமே. ஆனால், அதை களைந்தெடுக்க முழு மூச்சில் எந்த அரசாங்கமும் ஈடு படுவதாய் இல்லை. சாமான்யனுக்கு, 'லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை, என்பது போல், இந்த வழக்கம், பின்னிப் பிணைந்து உள்ளது, அரசாங்க அலுவல்களில்.

நெனச்சுப் பாருங்க, ஒரு சாதாரண மனிதர் வேலுச்சாமி. உழைத்து மட்டுமே வாழ்ந்து வருகிறாரு. சூது வாது தெரியாத குடும்பம். மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில், முழுதாய் கூட சுவர் எழுப்பப்படாத ஓட்டு வீட்டில், மின்சாரக் கனெக்‌ஷன் கூட இல்லாமல், வருங்காலம் இன்னும் என்னென்ன சுமைகளையெல்லாம் தன் தலையின் மேல் ஏற்றப் போகிறதோ என்ற பயத்தில் வாழும் வேலுச்சாமிகளுக்கு, என்றுதான் விடியும்?

அடிப்படைத் தேவைகளை வழங்கும், அரசு எந்திரமாவது, சாமான்யனை வாட்டாமல், நேர்மையாய் இயங்க வேண்டாமா?
வெளிநாடுகளில் இருக்கும் சுலப வாழ்க்கை, நம் மக்களுக்கு என்றுதான் வாய்க்குமோ?

ச! கம்மனாட்டிக்கள்!

Sunday, December 06, 2009

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல்

வருஷம் என்னமா ஓடுது பாருங்க.
அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிடுச்சு!

எதுக்குள்ள? - சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில், லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையை முடிக்க, நான் பட்டபாடு முடிந்து, ரெண்டு வருஷம் ஆச்சு.

இப்ப, மீண்டும் இந்த அரசாங்க இயந்திரத்திடம் ஒரு சின்ன மேட்டர் முடிக்க வேண்டிய தேவை வந்துள்ளது. ரெண்டு வருஷத்துக்கு முன் சப்-ரெஜிஸ்ட்ரார், இப்ப நகராட்சி அலுவலரிடம் வேலை முடிக்கணும்.

ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாய் கொடுத்தா, உடனே கையில் தரப்படவேண்டிய பிறப்பு சான்றிதழுக்காக இந்த புதிய தலைவலி.

நகராட்சி அலுவலகத்துக்குப் போனேன்.
ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாயுடன் அதை நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் கிளார்க்கிடம் நீட்டினால், "நூத்தி இருபது ரூபா கொடுங்க"ன்னு வாய் கூசமா அப்பட்டமா லஞ்சம் கேட்டான் கெரகம் புடிச்சவன்.

"20 ரூபாதானே. என்னாத்துக்கு நூத்தி இருவதுன்னு" நான் கேட்டதுக்கு, "நூத்தி இருபது கொடுங்க. இன்னிக்குத்தான சர்ட்டிஃபிகேட் வேணும்?னு ஒரு எதிர் கேள்வி கேட்டான்.

எனக்கு ஒரு ரூபாய் கூட, அதிகமாய் கொடுப்பதில், உடன்பாடில்லை. அதுவும், இந்த மாதிரி சாக்கடைத்தனமாக கொஞ்சம் கூட கூசாமல் லஞ்சம் கேட்கும் பெருச்சாளிகளைப் பார்த்தால், ரத்தம் கன்னாபின்னான்னு கொதிக்க ஆரம்பிச்சுடுது.

என் ஒரே, drawback என்னான்னா, வரும் கோபத்தை வார்த்தைகளால் அள்ளிக் கொட்ட முடியாதது. மென்னு முழுங்கி, "அதெல்லாம் தர முடியாது. இருபது ரூபாதான்"ன்னு கூற மட்டுமே முடிந்தது.

"ஒரு வாரம் கழிச்சு வாங்க"ன்னு சொல்லிட்டான்.

எனக்கு, இந்த சர்ட்டிஃபிக்கேட்டின் தேவை இருந்தாலும், சரி என்னதான் பண்றான்னு பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்.

கேவலம் நூறு ரூவாய்க்கு,, இந்த மண்ட கொடச்சலும், மேலும் பலமுறையும் அலையுணுமான்னு நீங்க கேக்கலாம், என் நண்பர்கள் பலரும் கேட்டது போல்.

சும்மா, பொலம்பிக்கிட்டே மட்டும் இருந்தா, எப்பதான் விடிவு வரும், இந்த பெருச்சாளிகளிடம் இருந்து?
அதுவும், போன முறையாவது, கொஞ்சம் வயசான பெருச்சாளி. இம்மூறை, முப்பதுகளில் இருக்கும் ஒரு இளைஞன், இப்படி கூசாம லஞ்சம் கேக்கறான்.

நம் தலைமுறையும் இப்படித்தான் இருக்கப் போவுதுங்கரத நெனச்சா, ரொம்பவே வேதனையா இருக்கு.

அரசாங்கம், பல நல்ல விஷயங்களை செஞ்சுக்கிட்டு தான் இருக்கு. e-governance பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்த கெரகம் பிடிச்சவங்க முகத்தை பார்க்காமல், வீட்டிலிருந்தபடியே இணையம் மூலமாக சான்றிதழ்களை பெறும் வகை இருக்கிறது. ஆனா பாருங்க, என் நகராட்சியின் (பல்லவபுரம்) e-governance தளம் வேலை செய்வில்லை. (இல்ல, வேணும்னே அதை ஆஃப் பண்ணி வச்சிருக்காங்களான்னும் தெரியலை).

ஒரு வாரம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு வந்தாச்சு. இனி எத்தனை தடவ அலைய விடப் போறாங்கன்னு பாப்போம்.

சென்ற முறை இதே ப்ரச்சனை வந்தபோது, இனி லஞ்சம் யாராவது கேட்டால், விஜிலன்ஸில் போட்டுக் கொடுப்பேன்னு ஓரு தீர்மானம் மனசுக்குள்ள வச்சிருந்த்தேன். இம்முறை அதை செஞ்சு பாக்கலாமான்னு ஒரு வேகம் வருது, ஆனா அதை செயல்படுத்துவதை யோசிச்சா ஒரே தயக்கமா இருக்கு. எது எப்படி இருந்தாலும், ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தான் அந்த சான்றிதழை வாங்கப் போகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

என்னடா பண்ணலாம்னு இணையத்தை மேய்ந்த போது, கண்ணில் பட்ட சில ஹீரோஸின் தகவல்கள் கீழே பாருங்க.
நல்ல உத்யோகத்தில் இருக்கும் நாமே இப்படி சோம்பேரிகளாய் இரூக்கும்போது, படிக்காத பாமரனும், நம் கிராம வாசிகளும், வயதானவர்களும் எப்படி தைரியமா இந்த துரு பிடிச்ச அரசு இயந்திரத்தை எதிர்த்திருக்காங்கன்னு பாருங்க.
* கருங்கல்பாளையம் என்ற கிராமத்தில் இருக்கும், சசிகலா என்ற கூலித் தொழிலாளி, எட்டு மாத கர்பமாய் இருக்கும்போது, அரசின் மானியம் வாங்க Village administrative officerஇடம் கேட்டதர்க்கு, 100ரூ லஞ்சம் கேட்டானாம் அவன். கோபம் கொண்ட சசிகலாவும், கணவர் பச்சையப்பனும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்து, VAOவை கையும் களவுமாக பிடித்து உள்ளே போட்டார்களாம்.

பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத, பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

* கிருஷ்ணகிரியில், கருப்பண்ணன் என்ற விவசாயி தன் நிலப் பத்திரத்தின் நகலை கேட்டு விண்ணப்பித்தாரம். இங்கேயும், ராமானுஜம் என்ற VAO 200ரூபாய் லஞ்சம் கேட்டானாம். கோபம் கொண்ட கருப்பண்ணன், vigilenceல் உடனே புகார் கொடுத்து, ராமானுஜத்தை களி திங்க வைத்துள்ளார். கருப்பண்ணனுக்கு வங்கியில் கடன் பெற,இந்த நிலப் பத்திரம் அவசரமாக தேவைப் பட்டபோதும், படிந்து போகாம, இப்படி செய்துள்ளார் என்பது இங்கே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

* ஈரோட்டில், Pollution control boardல் லஞ்சம் பெருகுவதை கண்டித்து, நூற்றுக் கணக்கான விவசாயிகள் போராடி, Joseph Pandiaraj என்ற அதிகாரியை கைது செய்ய வைத்துள்ளனர்.

* Coimbatoreல் இரண்டு VAOக்களுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர், உள்ளூர் வாசிகள். கணபதி என்ற VAO 6000ரூபாய் லஞ்சம் கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.

* 150ரூபாய் லஞ்சம், ஒரு ஓய்வு பெற்ற ஏழை இராணுவ வீரரிடம் கேட்டதால், coimbatore medical collegeல் இருக்கும் ஒரு clerk கம்பி எண்ணுகிறார்.


இவ்ளோ ஹீரோஸ் ஸைலண்ட்டா தங்கள் ரௌத்தித்தை காட்டிக்கிட்டுத் தான் இருக்காங்க.
அவர்களுக்கு சாஷ்டாங்கமான நமஸ்காரம்!

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

இதைப் படிக்கும் நீங்கள், இனி வரும் காலங்களில் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ செய்தால், நானும், என் மற்ற வாசகர்களும், உங்கள் பெற்றோரும், உற்றாரும், குழந்தைகளும், உங்களை ஒரு சாக்கடைப் புழுவாக காண்பார்கள் என்று கருத்தில் கொள்க.

ஒண்ணு, Vigilence/லஞ்ச ஒழிப்புத் துறைக்கு போங்க, இல்ல, ஒரு பைசாவும் கொடுக்காம, அலஞ்சு திருஞ்சு வேலைய முடிச்சுக்கோங்க.

Say NO to சுலபவழி, please!


தொடரும்...

பி.கு1: வீட்டுக்கு ஆட்டோ வந்தா, காப்பாத்த வருவீங்கல்ல? ;)

பி.கு2: Fifth Pillar / ஐந்தாவது தூண் பத்தி தெரிஞ்சுக்கோங்க

Zero rupee note: