லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படிக் குற்றம்
இது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். ஆனா, 'நோட்டீஸ் ஒட்டாதே' வாக்கியத்தின் மேலேயே போஸ்டர் ஒட்டிட்டுப் போறது எவ்ளோ சாதா விஷயமோ, அதே அளவுக்கு சாதா விஷயம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும்.
கேக்கறவன் சாதாரணமா கேக்கறான், கொடுக்கரவனும் சாதாரணமா கொடுக்கறான்.
ஒருத்தன் கேட்டதும் 100ரூபாயிலிருந்து சில ஆயிரம்/லட்சம் வரை, மறு பேச்சு இல்லாமல் எடுத்து கொடுத்தா, யாருக்குத்தான் கேக்கறது கஷ்டம்?
நம்மில் பலருக்கும் கூட, அந்த 'பவர்' இருந்தா, கண்டிப்பா சந்துல சிந்து பாடாம இருக்க மாட்டோம். வலிய வர ஸ்ரீதேவியை எட்டி உதைப்பானேன்?
லஞ்சத்தை ஒழிக்கணும்னா, ஒரே வழி, கேட்டதும் கொடுக்கரதை நாமெல்லாம் நிறுத்தணும்.
கேட்டதும் கொடுக்கலன்னா, கண்டிப்பா, கொஞ்சம் இழுத்தடிப்பாங்க. ஒரு ட்ரிப்புக்கு பதில், மூணு நாலு ட்ரிப் போக வேண்டிவரலாம். அதிக அலைச்சல், அதிக மன உளைச்சல், இதையெல்லாம் அடைய நேரிடலாம்.
ஆனா, நாமெல்லாம் இந்த கொடுமைய கொஞ்சமாவது அனுபவிச்சாதான், வருங்கால சந்ததியினருக்கு லஞ்சத்தின் விஷத்திலிருந்து விடிவு கிட்டும்.
லஞ்சத்தை முழுசா ஒழிக்கவே முடியாது. இந்தியன் தாத்தா சொன்ன மாதிரி, ஒருத்தனை தப்பு செய்யச் சொல்ரதுக்கு, லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை.
ஒரு வீட்டுப் பத்திரத்தை, அதன் உண்மை விலைக்கு பதியாமல், அடிமாட்டு விலைக்கு பதிந்து, நமக்கு அரசாங்க வரியை குறைத்து வரும்படிச் செய்யும் ரெஜிஸ்ட்ராருக்கு, தப்புச் செய்ய துட்டு கொடுப்பது இவ்வகை. இங்கே, நாமும் benefited அந்தாளும் benefited. நாமம் பெறுவது, அரசாங்கம் மட்டுமே. indirectஆ நாமும்.
இந்த இடத்தில், தவறு, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் மேல் உள்ளது. இந்த இடங்களில் இந்த மாதிரி களவாணித்தனம் செய்யாமல் இருக்க systemஐ ஒழுங்க படுத்தணும்.
ஆடிட் செய்து, ஆட்களை மடக்க வழி பண்ணணும், etc.. etc..
ஆனா, ஒரு சாமான்யனின், அடிப்படை விஷயங்களை முடித்துக் கொடுக்க, லஞ்சம் கேட்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
- பென்ஷனுக்கு அல்லாடும் வயதான பெரியவர்கள்
- அடிப்படை பிறப்பு/இறப்பு/திருமண சான்றிதழ்
- ஓட்டுனர் உரிமம்
- விவசாயிகளுக்கு கடன் கிட்டத் தேவையான கோப்புகள் விநியோகம்
- etc.. etc..
இந்த மாதிரி விஷயங்களை கவனிக்கும், சம்பளம் வாங்கும், அரசு அதிகாரிக்கு, பெரிய மண்டை குடைச்சல் வேலையெல்லாம் கிடையாது. ஒக்காந்த எடத்துலேருந்து, சில பேப்பரில் கிறுக்கி, வரும் சாமான்யனுக்கு, அவன் தேவைகளை பூர்த்தி செய்யணும்.
ஒரு பிறப்பு சான்றிதழ் வழங்க, பத்து கேள்வி இருக்கும் ஃபார்ம்.
அதை, படிச்சு பாத்து, கம்ப்யூட்டரில் தட்டச்சி, ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து, ஒரு கையெழுத்து போடணும்.
கூட்டிக் கழிச்சு பாத்தா, 10 நிமிஷ வேலை.
இந்த பிசாத்து வேலைக்கு,வாய் கூசாமல் 100ரூபாயை கொடுன்னு கேக்க அவனுக்கு எப்படி மனசு வருது, அதை கேட்டதும், சொரணையே இல்லாமல், அப்படியே எடுத்துக் கொடுக்க நம்மில் பாலருக்கு எப்படி மனசு வருது?
லஞ்சம் கேட்டதும், கொடுக்க மாட்டேன்னு சொன்னா, காணாத்ததை கண்டது போல், அவன் மிரள்கிறான். கொடுத்து கொடுத்து அந்தளவுக்கு grease போட்டு வச்சிருக்கோம் இந்த ஆட்களுக்கு.
ஒரு திருமண சான்றிதழ் வாங்க, நாலஞ்சு தடவை அலைய விட்டானுங்க. ஆனா, இறுதியில், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் கணக்கா, தொடர் படையெடுப்பில், grease போடாமலே, சான்றிதழ் கிட்டியது.
இப்போ, பிறப்பு சான்றிதழ் வாங்கப் போனா, அதே மட்டமான அனுபவம் தான் கிட்டியது. e-governance எல்லாம் செஞ்சு வச்சிருந்தாலும், அந்த தளங்களெல்லாம் வேலை செய்யாமல், திரும்ப நம்ம அரசாங்க ஆசாமிகளிடம் தொங்க வேண்டிய நிலை.
100ரூபாய் லஞ்சம் கேட்டதும், கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு ஒரு லுக் விட்டுட்டு வந்ததை சொல்லியிருந்தேன்.
அங்கேருந்து விருட்டுனு வந்ததும், சில பல வேலைகள் செய்தேன்.
அதுக்கப்பரம் திரும்ப மூன்று நாட்கள் கழித்து, அதே ஆளிடம், ரசீது கொடுத்ததும், சட்டுனு, பதினைஞ்சு நிமிஷத்துல, கைக்கு சான்றிதழ் வந்துடுச்சு. சில பல வேலைகளில், எது இந்த வேலையை சுலபமாய் முடிக்க உதவியது என்பதில் தான் என் குழுப்பமே...
செய்த சில பல வேலைகள் இவை:
- 'நூறு ரூபாய் கொடுங்க'ன்னு அவன் கேட்டதும், என் ரத்தம் கொதித்தது உண்மை. அதை முகத்திலும் காட்டியிருந்தேன். 'அதெல்லாம் தர முடியாது'ன்னு அழுத்தம் திருத்தமாவும் சொல்லியிருந்தேன். வாசலில், 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'னு ஒரு வாசகம் இருந்தது. அதனருகில் சில தொலைபேசி எண்கள் எல்லாம் இருந்தது, புகார் கொடுக்க. அவன் கிட்ட, கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, செல்பேசியில், நம்பரை அடிப்பது போல் ஒரு ஏக்ட் கொடுத்துட்டே கோபமா வெளீல வந்துட்டேன்.
- வீட்டுக்கு வந்ததும் ஒரே மண்டை குடைச்சல். என்னடா பண்றதுன்னு. விஜிலன்ஸ் விஷயங்களையெல்லாம் தேடிக்கிட்டு இருந்தேன். கூகிளில், 'லஞ்சம் சென்னை பிறப்பு சான்றிதழ்'னு தேடி, எந்தெந்த பக்கத்தில் எல்லாம் புகார்/greivanceனு இருக்கோ, அங்கெல்லாம் ஒரு புகாரை தட்டச்சினேன். அதைத் தவிர, நகராட்சி கமிஷனர், அவரு, இவரு, அவங்க, இவங்களுக்கெல்லாம் ஒரு ஈ.மடலும் அனுப்பினேன்.
- 5th pillar ஆட்களுக்கு விஷயத்தை அனுப்பியதும், உடனே பதில் வந்தது. ஒரு வாரத்துக்கு மேல இழுத்து அடிச்சாங்கன்னா, எங்க அலுவலகத்துக்கு வாங்க, நாம RTIஎல்லாம் உபயோகிச்சு வாங்கிடலாம்னு. மனசுக்குள் ஓரு சந்தோஷம், இப்படி உதவக் கூட ஒரு க்ரூப் இருக்கேன்னு. தைரியமும் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு.
- வீட்ல இருக்கரவங்களுக்கு அவசரம். டேய், நூறு தான, கொடுத்துட்டு மேட்டர வாங்கிட்டு வந்துடு, டைம் இல்லை, இதையெல்லாம் திறுத்த முடியாது, அவன் கிட்ட சண்டைக்கு நிக்காத, வீட்டுக்கு ஆட்டோ வரும், இந்த வகை அட்வைஸுகள்.
- இரண்டாம் முறையாக அங்கே சென்ற போது, செல்பேசியை கையில் ஓப்பன் பண்ணி ரெடியா வச்சுக்கிட்டேன், என்னமோ அடுத்த லைன்ல யாரோ, எங்க சம்பாஷணைகளெல்லாம் கேக்கர மாதிரி ஒரு பில்டப் கொடுக்க. விஜிலன்ஸ் ஆளுங்க, இப்படி தான் மடக்குவாங்கன்னு ஒரு இடத்தில் படிச்சிருந்தேன். அதாவது, விஜிலன்ஸ் கிட்ட புகார் கொடுத்தா, லஞ்சமா எவ்ளோ துட்டு இந்த அதிகாரி கேக்கறானோ, அந்த துட்டை விஜிலன்ஸ் கிட்ட குடுத்திடணுமாம், அவங்களும் அதை வாங்கி வச்சுக்கிட்டு, அதே தொகையை, ரசாயணம் தடவிய கரன்ஸியில் தருவாங்க.அதை எடுத்துக்கிட்டு திரும்ப அரசு அலுவலகம் போய், லஞ்சம் கேட்டவன் கிட்ட அதை கொடுத்ததும், வெளியில் காத்திருக்கும் விஜிலன்ஸ் ஆட்களுக்கு ஒரு சிக்னல் கொடுக்கணுமாம். அவங்க உடனே வந்து கையும் களவுமா ஆளை அமுக்கிடுவாங்க. ரொம்ப சுலபமா செய்யக் கூடிய வேலை இது. ஆனா, எனக்கிருக்கு சில நாட்கள் விடுமுறையில், இந்த அளவுக்கு பண்ண முடியுமா என்ற யோசனையில், சரி, பில்டப்பாவது கொடுக்கலாம்னு செல்பேசியை வைத்து ஒரு ஏக்ட் மட்டும் கொடுத்தேன்.
மேலே உள்ளதில் எது எப்படி வேலை செஞ்சுதுன்னு தெரியலை. ஆனா, இரண்டாம் முறை போய் ரசீதை கொடுத்ததும், 15 நிமிஷத்தில் கையில் சான்றிதழ்.
முதல் தடவையே இப்படி கிட்டும் நாள் எப்ப வருதோ, வளர்ந்த இந்தியாவில் வாழ்கிறோம்னு ஒரு சந்தோஷம் அப்பத்தான் கிட்டும்.
அப்படி ஒரு நாட்டை உருவாக்குவதில், பெரும் பங்கு நம்ம கையிலதான் இருக்கு.
சுலப வழியை தவிர்ப்போம்.
லஞ்சத்தை அறவே ஒழிப்போம்.
5th pillar, anticorruptionchennai மாதிரி இயக்கங்களில், உருப்பினர் ஆகிக்கோங்க, அதுவே பாதி கிணறு தாண்டியதைப் போலத்தான். vigilenceஆளுங்களும் பழக அருமையானவங்களாம் ;)