recent posts...

Monday, October 06, 2014

மெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]


தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , தரமான படம் என்று சான்றிதழ் இருந்தாலே டிக்கெட் வாங்க எத்தனிப்பேன்.

மெட்ராஸுக்கு , அநேகம் பேரும் 4/5 கொடுத்திருந்தார்கள். இயன்றவரை படம் பார்ப்பதற்கு முன் விமர்சனம் படிப்பதை தவிர்த்துவிடுவேன்.

இரவு பத்து மணி ஷோவுக்கு, ஆன்லைனில் டிக்கெட்டை வாங்கி, ஆஜரானேன். ஷோ ஹவுஸ்ஃபுல்.  அரங்கம் நிரம்பி வழிந்தது. படம் வந்து சில பல நாட்களுக்குப்  பின்னும் கூட்டம் அலைமோதியது.

ஆன்லைனில் டிக்கெட் வாங்கியதால் SMS காட்டினால் போதும். SMS கூட சரி பார்க்காமல், உள்ள போயி உங்க சீட்ல ஒக்காருங்க சார்னு 'நம்பிக்கையாய்' அனுப்பி வைத்தார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போதே பாப்கார்ன் கோக் எல்லாம் சேர்த்திருந்தால் இருக்கைக்கே கொண்டு வந்து கொடுப்பார்களாம். அடேங்கப்பா. எங்கையோ போயிட்டாங்க்ய.

நாலாவது வரிசையில் அமர்ந்திருந்ததால் திரை விஸ்தாரமாய் தெரிந்தது.

படம் ஆரம்பித்ததும், துவக்கப் பாடலில் இருந்த துள்ளலில் விசில் சத்தம் கிழிந்து ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தது. இனிக்கு படம் நிம்மதியா பாத்தா மாதிரிதான்னு நெனச்சேன். ஆனால், சற்று நீரத்தில் படத்தின் விறுவிறுப்பு கூடியதும் கூட்டம் அமைதியாய் ரசித்துப் பார்க்க துவங்கியது.

"எங்க ஊறு மெட்ராசுக்கு நாங்க தானே அட்ரஸு"  என்ற ஆரம்பப் பாடலில் துவங்கியது.
குரோம்பேட்டையும் குரோம்பேட்டை சார்ந்த இடங்களில் மட்டுமே வாழ்வின் பெரும்பான்மை கழித்திருந்ததால், வடக்கு மெட்ராஸும், அதன் குறுகிய சந்து பொந்துகளும், ஹவுசிங் போர்டு வீடுகளும், பெயிண்ட் இழந்த சுவர்களும்,   சாக்கடை தேங்கிய சாலைகளும்,  தண்ணீருக்கு வரிசை கட்டும் கலர் கலர் குடங்களும்,  "ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று சடக்கென்று கோபம் கொள்ளும் இளய பட்டாளமும்,  விசுக் விசுக் என கத்தியை உருவி சொருகும் பயங்கர முரடர்களும் சுத்தமாய் பரிச்சயம் இல்லாமல் வளர்ந்த வாழ்க்கையை நினைத்து எல்லாம் வல்லவனுக்கு ஒரு பெரிய கும்பிடு போடத தோன்றுகிறது.

கேமரா வடக்கு மெட்ராசை மிக மிக துல்லியமாய் கண் முன் வந்து நிறுத்தியது. நாலாவது வரிசையில் இருந்ததாலோ என்னோ, paning shots வெகுவாய் ரசிக்க முடிந்தது. imax திரையில் பார்க்கும்போது ஏற்படும் ஒரு குதூகலம் படம் புழுவதும் உணர முடிந்தது.

கேமராவுடன் சேர்ந்த பின்னணி இசை, பிரமாதம்.

இந்த சூழலில் வாழும் நண்பர்களும் சில பல ஆசாமிகளும், அவர்களுக்குள்  நிகழும் அரசியல் சார்ந்த விஷயங்களும், இடையில் நிகழும் காதலும் ஊடலும்,  வெட்டும் குத்தும் கத்தும், நையாண்டியும் நக்குலும் பாசமும் வேஷமும் அருமையாய் கோர்க்கப்பட்டதுதான் மெட்ராஸ்.

காளி (கார்த்தி), இந்த அழுக்கு சூழலிலும், படித்து கரை சேர்ந்தவர். நல்ல வேலையில் இருந்தாலும், ஹவுசிங் போர்டு மண் மேல் உள்ள பாசத்தால் அங்கேயே பெற்றோருடன் வாழ்பவர்.
அவரின் நண்பர் அன்பு. அரசியல் புள்ளியின் வலது கை.  அவருக்கும் எதிர்கட்சிக்கும், ஊரில் உள்ள பிரதான சுவற்றில் யாரின் விளம்பரம்  இருக்க வேண்டும் என்பது பரம்பரைப பகை. சுவற்றுக்காக  பல தகராறுகள்  நடக்கிறது. பல உயிர்கள் விசுக் விசுக் என பலி ஆகிறது.

ஒரு சுவருக்கா இப்படி அடிச்கிக்கினு சாகராங்க ? என்று மனதுக்குள் எழும் கேள்விக்கு ஆங்காங்கே பதிலும் கிடைத்து விடுகிறது. சுவர் சுவராய் பார்க்கப்படாமல், பலரின் egoவை தாங்கி பிடிக்கும் தாங்கியாய்  உருமாறி இருக்கிறது.
ego நிரம்பி வழியும் அரசியல் பெருந்தகைகளுக்கு சுவரின் மேல் இருக்கும் ஆளுமை முக்கியம். யார் பெரியவன் என்பதை நிர்ணயம் செய்யும் குறியீடு சுவரின் மேல் உள்ள உரிமை. அதற்காக தங்கள் சகபாடிகளை உசுப்பேற்றி விட்டு காவு வாங்குகிறார்கள் காவு கொடுக்கிறார்கள்.

அப்பேர்பட்ட சுவர் பிரச்சனையில்  கார்த்தியின் நண்பன் அன்பு உயிர் இழக்க, அதற்கு கார்த்தி பழிவாங்க, படம் விறுவிறுப்பாய் செல்கிறது.

ஒரே குறை இரண்டாம் பாகத்தில் கோர்வையாய் வராமல் சில இடங்களில் பாடல்களை திணித்தது. அது கூட பெருதாய் நெருடவில்லை, நல்ல பாடல்கள் என்பதால்.

ஹவுசிங் போர்டில் சகதியும் சச்சரவும் நிறைந்த இடத்தில், அனைவரின் மேக்-அப்பும் உடை அலங்காரங்களும் பொருந்தாமல் இருந்தது.  ஆனால், நம் ஊரில் சுற்றமும் சூழலும் 'கலீஜ்' லெவலில் இருந்தாலும், தங்களின் இல்லம், உடை எல்லாம் டாப் கிளாஸாகத்தான் வைத்திருகிறார்கள் பெரும்பாலும். தெருவும், பொது இடங்களும் மட்டுமே 'கலிஜாய்' தொடர்கிறது.  இங்கும் அப்படித்தான் போலும்.

இயக்குனர் ரஞ்சித் பல இடங்களில் மிளிர்கிறார். நார்த் மெட்ராசின் யதார்த்தை அழகாய்  ஃப்ரேமில் கொண்டு வந்திருக்கிறார். பாஷை, அவர்களின் சம்பர்தாயங்கள் பலவும் அழகாய் காண்பிக்கப் படுகிறது.

அடிமட்டத்தில் இருக்கும் கோபக்கார இளைஞர்களை,அரசியல் லாபத்திற்காக எப்படியெல்லாம் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்று காட்டியிருக்கிறார். அவர்கள், எப்படி, இந்த கபடத்தை புரிந்து கொண்டு வாழ்வில் முன்னேறுவது என்று கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக வித்யாசமாய் இருந்தது. டும் டும் டும் டும் என்ற பின்னணி இசை அதை மேலும் மெருகேற்றி இருந்தது. குறிப்பாய் வில்லன்களிடம் இருந்து கார்த்தியும் நண்பனும் தப்பி ஓடும் காட்சி தத்ரூபம். கடைசி சண்டையும் அதகளம். நம்பும்படியாய் இருந்தது.
Santhosh Narayanan, very well done!

கார்த்தியை தவிர அநேகம் பெரும் புதுமுகங்கள். அனைவரும் மிக அருமையாய் நடித்திருந்தார்கள். மாரி, வெளுத்து கட்டியிருந்தார்.  நிஜ ரவுடியா? அப்படி ஒரு லுக்கு.
ஹீரோயின் அழகு.

ஜானி என்று ஒரு கேரக்டர். பழைய தாதாவாம். இப்போ போலீஸ்  அடியில் , லேசாய் பேதலித்து விட்ட ஒரு கேரக்டர். செமையாய் நடித்து இருக்கிறார். ஆனால், அவர் பேசியது ஒரு டயலாக்கும் புரியவில்லை. இருந்தாலும் அது ஒரு நெருடலாய் தெரியவில்லை.

சாவுக்கு ஆடும் ஆட்டம்; திருமண நிச்சயத்தில் வரதட்சணைக்கு சண்டை போடுவது, தண்ணீர் குழாயில்  குடத்துடன் நிற்பது எல்லாமே நேர்த்தி.

ஒரு ரெண்டு நாள் போயி தங்கிட்டு வரணும், நார்த் மெட்ராஸில். யாராச்சும் இருக்கீகளா ?

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்.

பி.கு: திரைப் படத்தை , படத்தை மட்டும் பார்க்காமல் , அதை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து எடுத்து பதம் பார்ப்பதில் சிலருக்கு அலாதிப் பிரியம். இவ்வளவு விஷயங்களும்  குறியீடுகளையும் அழகாய் அடுக்குகிறார்கள் சிலர். அப்படி ஒன்று இங்கே and இங்கே.

Friday, June 13, 2014

பொன்னியின் செல்வன் - சென்னையில்


பொன்னியின் செல்வன், தமிழ் கூறும் நல்லுலகில் அநேகம் பெருக்கும் மிகவும் பரிச்சயமான கதை.  சென்னை Music Academyல் அதன் நாடகமாக்கம் காணும் வாய்ப்பு இன்றமைந்தது.
இதன் விளம்பரத்தை பார்த்த அன்றே டிக்கெட் எடுத்தாயிற்று.

பரபரப்பு நிறைந்த பொன்னியின் செல்வன் கதையை சுதப்புவது கடினம். சும்மா நாவலில் வரும் வசனத்தை யாராவது சுமாரான நடிகர்கள் பேசினாலே, நாள் முழுக்க கேட்டு  பரவசிக்கலாம்.

ஐந்து பாகங்களில் வளைந்து நெளிந்து செல்லும் பெரிய கதையை எப்படி 3 1/2 மணி நேரத்தில் எடுப்பாங்க  என்ற யோசனை டிக்கெட் புக் செய்த அடுத்த நிமிடத்தில் இருந்தே மனதில் ஓடத்துவங்கி இருந்தது.

ஆறுமணிக்கு காட்சி. ஐந்து மணிக்கே ஆஜர் ஆயிட்டேன்.
அரங்கத்தில் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் ஒரு கோட்டையின் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பின்னால் ப்ரோஜெக்டரின் உதவியில் ஒரு வானமும் தெரிந்தது.

இசைக் குழுவினர் ஐந்து பேர், ட்ரம்ஸ், பியானோ, ப்லூட்  சகிதம் அமர்திருந்தனர். ஆறு மணிக்கு சரியாக துவங்கினார்கள். கிட்டத்தட்ட ஆறு மாத கால உழைப்பாம்.

பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பெரியவரும் ஒரு பெண்ணும் சண்டை போடுவது கேட்டுது.
"இவனுங்களுக்கு இதுவே எப்பவும் வேலையாப் போச்சு. போன தடவையும் இப்படித்தான் பண்ணாங்க. இப்பவும் இததான் செய்யறாங்க. இப்படியே விடக் கூடாது. கூப்பிடுங்க அவனை", அது இதுன்னு கூசல் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
இவ்ளோ பெரிய சபையில என்னடா இப்படி லோக்கலா சண்டை போடறான்னு பாத்தா, நாடக குழுவை சேர்ந்தவர்கள் தான் அது. சும்மா தமாஷுக்கு அனைவரின் கவனத்தை ஈர்க்க இப்படி ஒரு புதுமையான ஏற்பாடு. அவர்கள் மேடை ஏறி அறிமுகப் படுத்தியதும் இனிதே துவங்கியது.

மெல்லிய பாடலுடன் ஆடலும் சேர்ந்து சோழர் கால தெருக்களுக்கு நம்மை மெல்ல இட்டுச் செல்கிறார்கள். ஆழ்வார்கடியான், வந்தியத் தேவன், பழுவேட்டரையர், சுந்தரர், குந்தவை, நந்தினி, மதுராந்தகன் என நமக்கு மிகப் பரிச்சயமான பாத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராக வரும்போது அரங்கத்தினருக்குள் எழும் மகிழ்ச்சி அவர்களின் ஆரவாரத்தில் தெரிந்தது.

கல்கியின் உருவாக்கம் எப்படி இருந்ததோ அதை ரத்தமும் சதையுமாக பார்க்கும்போது, அனைத்து நடிகர்களும் மிக மிக சரியான தேர்வாகவே கண்ணுக்குத் தெரிந்தார்கள். [ நந்தினி தவிர :) ]

வந்தியத்தேவனை வடித்தவர் அபாரம். ஹாஸ்யமும், வேகமும், வீரமும் , ஒருசேர துல்லியமான நடிப்பு.
பழுவேட்டரையர், வெள்ளைத் தாடியுடன், மிரட்டலான நடிப்பை தந்து வெகுவாய் கவர்ந்தார்.

நடிப்பில் யாரையுமே குறை கூற முடியாத அளவுக்கு தரமான நடிப்பு.

வசனங்கள்    , ராஜா காலத்து தூயத் தமிழும் இல்லாமல், லோக்கல் பாஷையாகவும் இல்லாமல், செவிக்கு இனிமையான நல்ல தமிழாய் இருந்தது.

மைக் எல்லாம் உடலில் பொருத்தாமல் இருந்தது நல்ல முடிவு. செயற்கைத் தனம் இல்லாமல் அவர்களின் குரல் அரங்கத்தில் இருந்த குட்டி குட்டி மைக் மூலம் துல்லியமாய் கேட்டது.

அருண்மொழி தேவர், பாத்திரத்தில் ஸ்ரீராம் என்ற நடிகர். நிஜமான இளவரசன் போல் பள பள என ஒரு ராஜ லுக்குடன் இருந்தார். இயற்கையான நடிப்பு.  அருமையான ஆளுமை.

நந்தினி மட்டுமே கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருந்தார். நடிப்பில் குறை வைக்கவில்லை. கல்கியின் வர்ணனையில் படித்து பலவிதமாய் மனதளவில் பதிந்தவர்,  'நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை' போல் ஒரு கர்வம் கலந்த அழகு நடிகை இல்லாதது வருத்தமாய் இருந்தது.

அனைவரயும் தூக்கி போட்டு சாப்பிட்டுவிட்டார் கரிகலராய்   நடித்த பசுபதி. என்ன நடை, என்ன மிடுக்கு, டயலாக் டெலிவரி என்று நிஜ  சோழன் இப்படித்தான் இறுமாப்பாய் இருந்திருப்பார் என்று தோன்ற வைத்தது.

நாடகத்துடன் ஒன்ற வைத்ததில் இசை பெரிய பங்கு வகித்தது. தலைவலிக்காத மிரட்சியான இசை.
அரங்க வடிவமைப்பும் அழகு. யானை, லிங்கம், படகு, மலை என பல விஷயங்களையும் ரசிக்கும்படி செய்திருந்தார்கள்.

இடை இடையே  வரும் நகைச்சுவையும் , காட்சிகளுக்கு நடுவே நிறம் வீணடிக்காமல் , சடார் சடார் என்று மாற்றிய லாவகமும்,  4 மணி நேரம் போனதே தெரியாமல்,  ரொம்பவே ரசிக்க வைத்தது.

நாடகத்தை அரங்கேற்றிய  SS International, Magic Lantern, Kumaravel, Praveen, and for others, பெரிய நன்றிகள்.

இம்மாதிரி நாடகங்கள் மேலும் பல பல பல அரங்கேறட்டும்.

பி.கு: வெளியில் டிக்கெட்டுடன் நின்று கொண்டிருக்கும்போது  ஒருவர் அருகில் வந்து " சார் எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்தா கொடுங்க. VIP ஒருத்தருக்கு . எவ்ளோ காசு வேணா தருவாரு" என்றார்.  அடடா நிறய டிக்கெட்ட் வாங்கி வச்சிருந்தா கல்லா கட்டியிருந்திருக்கலாம் ;)

 Hats Off #PonniyinSelvan team!

My previous blog - Ponniyin Selvan in a nutshell

Sunday, October 06, 2013

மிஷ்கினின் கோபம்




ஒநாயும் ஆட்டுக்குட்டியும், ஒரு உன்னதமான படம் என்பதில் ஐயம் இல்லை. முதல் நாள் முதல் ஷோவில், ஐம்பது பேர் மட்டுமே கொண்ட தியேட்டரில் ஜம்மென்று அமர்ந்து, அமைதியாய் அனுபவித்து பார்த்தது இன்னும் நினைவில் பளிச்சென்று இருக்கிறது.

வித்யாசமான முயற்சியாக, விரு விரு திரைக்கதையில், தேவையில்லா மசாலாக்கள் புகுத்தாமல், ஒரு 'கொரிய' மொழியின் வீரியம் படம் முழுவதும் நிரம்பி இருந்தது.

அசத்தலான படைப்பு. அதைத் தந்த மிஷ்கின், போற்றப்படவேண்டிய கலைஞன். அதிலும், தன் சொந்தப் பணத்தில் இப்படிப்பட்ட காம்ப்ரமைஸ் இல்லாத படைப்பை தந்ததர்க்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால், இந்த மாதிரி படங்கள், டிஸ்ட்ரிப்யூட்டர்களை வெகுவாய் கவராமல், தியேட்டர்கள் கிட்டாமல், போட்ட பணத்தை எடுக்கவே பிரம்மப் பிரயத்தனம் பண்ண வேண்டிய நிலையில் இருப்பது நம் துரதிர்ஷ்டமே.

ஒரு பக்கம், 'மாஸ்' படங்களும், சீப் காமெடி படங்களும், தடபுடலாய் ஓடிக்கொண்டிருக்க, கொண்டாடப் பட வேண்டிய படங்கள், புரம் தள்ளப்படுவது பெரிய சோகம் தான்.

மிஷ்கினுக்கு பாராட்டு விழாவாக, இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எழுத்துலகிலிருந்தும், 'ப்ளாகர்களும், திரைப்படத் துறையை சார்ந்தவர்களும், படத்தை அலசி ஆராய்ந்து அருமையாய் பேசினார்கள்.

மிஷ்கின் கொஞ்சம் அதிகப்படியான கோபத்துடன் பேசினார். "படத்துல லாஜிக் இல்ல, மேஜிக் இல்லன்னெல்லாம் விமர்சனம் பண்ணாதீங்கய்யா. இவ்ளோ மாசம் கஷ்டப்பட்டு யோசிச்சு யோசிச்சு படம் எடுக்கறோம், உங்களுக்கு (விமர்சகர்களுக்கு) தோணர லாஜிக் ஓட்டையெல்லாம் யோசிக்கமாயா எடுப்போம். நீங்க மட்டும்தான் அறிவாளியா எங்களுக்கு அறிவில்லையா" என்ற ரீதியில் போனது பேச்சு.
அவரின் வேதனை, படத்தை பார்ப்வர்கள், நெகடிவ் பப்ளிசிட்டி கொடுத்து ஓரளவுக்கு வரும் ரசிகர்களையும் வராமல் செய்துவிடும் விபரீதம் பற்றியது.


ஆனா, மிஷ்கின் சார், 150 ரூபாய் கொடுத்து சரக்கை வாங்கரவன், அவன் கருத்தை (நல்ல கருத்தோ, முட்டாள் தனமான கருத்தோ), சொல்றதுக்கு அவனுக்கு முழு உரிமை இருக்கு.  அவனப் போயி நீங்க, லாஜிக் கேக்காத, மசாலா கேக்காதன்னு சொன்னா எப்படி?

ஒரு இராம நாராயணன் படத்துக்கு போறவன், பாம்பு டைப் அடிக்கரதையும், முயலு முக்காப்லா பாடரதையும் பாத்துட்டு, லாஜிக் எங்கன்னு கேக்க மாட்டான். ஏன்னா, இராம நாராயணனுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, அதற்குண்டான எதிர்பார்ப்புடன் போரவன், எதிர் கேள்வி கேக்க மாட்டான். அவனுக்கு தேவையானது கொடுத்துட்டா, கொடுத்த காசுக்கு திருப்தி பட்டுட்டு போயிருவான்.

உங்க படத்துக்கு வரவங்க லாஜிக் ஓட்டை இருந்தாலோ, படத்தில் காட்சிகள் புரியலன்னாலோ சொல்லத்தான் சொல்லுவான்.

உங்க கதையின் கரு, "14 பேரை ஈஸியா சுட்டுக் கொன்னவனுக்கு,  3 பேரை காப்பாத்த முடியாம போயிருச்சே"ன்னு இன்னிக்கு அழகா சொன்னீங்க.

கரு அப்படி இருக்கும்போது, முதல் பத்து நிமிஷம், நீங்க அம்மணமாயி, ஒடம்புல பாதியை கத்தியால் கிழிச்சு தொறந்து, பார்ட் எல்லாம் வெளியில எடுத்து, திரும்ப நூல் போட்டு தச்சு முடிச்சதும், நீங்க பெரிய ஏர் பில்லோ வச்சுக்கிட்டு, ஓடர ரயிலில் இருந்து குதிக்கரதை எப்படி சார் லாஜிக்கல்லா ஏத்துக்கச் சொல்றீங்க?
குண்டடி பட்டா, சின்ன ப்ளேடால கீரிட்டு, ப்ராண்டியை மேல ஊத்தி ஒரு பேண்ட்-எய்ட் போட்டுக்கிட்டு தப்பிச்சு ஓடியிருந்தீங்கன்னா, எவன் உங்கள கேள்வி கேட்டிருப்பான்?

தேவையில்லாத அம்மண காட்சியும், வயிறு கிழிக்கும் காட்சியும் கொடுத்துட்டு, அடுத்த காட்சியிலேயே ஓடத் துவங்குவதால், கொஞ்ச நேரத்துக்கு பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு, படத்துடன் ஒட்ட முடியாமல் தவித்த தவிப்பு எங்களுக்குத்தான் தெரியும்.

இருந்தும், சுதாரித்துக்கொண்டு, மிஷ்கின் செஞ்சா சரியாத்தான் இருக்கும், கடைசியில் ஏதாவது செஞ்சா இதுக்கொரு விளக்கம் கொடுப்பாருன்னு சமாதானப் படுத்திக்கிட்டு மீதிப் படத்தை பார்த்தேன். இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்றபடி எனக்கு எதுவும் குறையாத் தெரியவில்லை. அத்தனையும் நிறையே.

இன்றைய நிகழ்ச்சியில் இயக்குநன் ராம், அருமையாய் ஒரு விளக்கம் சொன்னார். ஓநாய் ஏன் ஆட்டுக்குட்டியை திரும்ப தன்னை பார்க்க வருமாறு சொல்கிறது என்பதை படத்தில் விளக்கவேயில்லை என்று ஒரு குற்றச்சாட்டாம். அதற்கு அவர், எல்லாத்தையும் ஏன் வெளக்கணும்னு எதிர்பாக்கறீங்க? நீங்களே அதற்கான ஒரு காரணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். படம் என்பது, இயக்குநர் பாதி, பார்வையாளன் மீதி, என்று அழகாய்ச் சொன்னாரு.

எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்றது, டிஸ்கவரி சானல் டாக்குமெண்ட்ரியா படங்கள்?

படத்தில் இருக்கும் குறியீடுகள் பற்றி சிலர் பேசினர். எப்படித்தான் இப்படி யோசிச்சு சில காட்சிகளுக்கு இப்படி அர்த்தங்கள் கண்டுபிடிக்கறாங்களோ. சூப்பர்.

ஆட்டுக்குட்டி ஓநாயை முதுகில் சுமப்பது, சிலுவையை சுமப்பது போல் உருவகப் படுத்தப்பட்ட காட்சியாம். மிஷ்கின் சொன்னது.

கார்த்தி என்ற குட்டிப் (கண் தெரியாத) பெண், பாரதியிடம் (திருநங்கை), ஒரு  கதை சொல்லும்படி கேட்பார். கதை சொல்வதற்க்குள், குண்டடிபட்டு இறந்து போனார். இதன் குறியீடாக ஒரு எழுத்தாளர் சொன்னது, திருநங்கைகளின் சோகக்கதை யாருக்கும் தெரியாது. இதிலும், கதை சொல்வதர்க்குள், அவரின் உயிர் போய்விடுகிறது என்று சொன்னார். ஜூப்பர் அனாலஸிஸ்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பாக்காதவங்க, தீயேட்டரில் சென்று பார்த்து ரசியுங்கள். மிஷ்கினுக்காக இல்லாவிட்டாலும், இளையராஜாவுக்காகவும், ஒரு புதிய முயற்சிக்காகவும், நல்ல படைப்புக்காகவும், நன்றாய் பார்க்கலாம்.
பாத்துட்டு, லாஜிக்குல ஓட்டை ஒட்டடை எல்லாம் சொல்லுங்க. ஆனா, நல்ல விஷயங்களை எல்லாம் சொல்லிட்டு, ஓட்டையை சொல்லுங்க.

நன்றீஸ்.

இந்த நிகழ்வு பற்றி, நோட்டீஸ் ஒட்டிய லக்கிக்கு நன்றி. க்ளாட் டு மீட் யூ லக்கி, & இயக்குநர் ராம். ஹாப்பி.

140 charactersல், பல மனிதர்களின் உழைப்பில் மண்ணை அள்ளிப் போடாதீர்கள். Constructive Criticism is most welcome. OR better yet, write your heart out,  a month after the release. அவங்க போட்ட பணத்தையாவது எடுக்கட்டும்.

ஆனா, அது சரியா தப்பா? தான் பட்ட துன்பம் மத்தவங்க படக்கூடாதுன்னும், தான் பட்ட இன்பம் மத்தவங்களுக்கும் கிட்டணும் என்ற உன்னத குணம் அல்லவா நம்மளது? அது நியாயமானதும் கூடத் தானே?

பல மில்லியன் டாலர் ஆராய்ச்சியில் உருவாக்கப்படும் படைப்புகளையே, ஒரு குட்டி FaceBook Twitter Statusல், ஏத்தி எறக்கறவாங்களாச்சே நாம? அதைச் செய்யாதீங்கன்னா எப்படி?

எனிவே, மிஷ்கின், Thanks for a great movie watching experience, once again.

-சர்வேசன்







Sunday, May 26, 2013

RTI filed - trying to understand why Roads get higher and higher



APPLICATION UNDER THE RIGHT TO INFORMATION ACT 2005


18473
To,
The Public Information Officer
Pallavapuram municipality
Chrompet
Chennai 44

Subject: Information required under the Right to Information Act 2005

Hello,
Kindly provide me with the following information requested under the purview of the Right to Information Act, 2005.
Regarding: Relaying roads without scraping off old road causing neighborhoods to sink underground 

Particulars of information required: As per list mentioned below
1) When was the last time new road was laid at xxx nagar, xxx, Chennai 64.
2) Was all contractual terms followed by the contractor when the road was laid?
3) How much additional height did the road gain after the new road was laid?
4) Was the road suppose to gain height as per the contractual term or should it have maintained the same height?
5) Whose responsibility is it to ensure the old road is scraped off before laying new roads?
6) When is xxx nagar, xxx (main road and cross streets) scheduled for the next relaying of the road?
7) Who has the authority to ensure and include in contract terms that the old road must be scraped off before laying new road to ensure the neighborhood houses do not submerge under road level causing huge pain during rainy seasons to the common people?
8) Will the next road make the street higher than what it is today? if yes, by how many inches?
9) Does municipality understand that it is a big design mistake they are doing by increasing the road height few inches everytime road is laid?
10) Is there any plan being discussed by the officers and leaders, to maintain road level at the same height during new road implementations?

Period pertaining to information: 2013
Find the application fee for the request attached with this application (Indian Postal Order No. ___________dated __________ is enclosed). If you feel that above requested information does not pertain to your department then please follow the provisions of Section 6(3) of the RTI Act, 2005/Also as per the provisions of the RTI Act, 2005 please provide the details (Name and Designation) of the first appellate authority w.r.t  your department with the reply to the above request., where I may if required file my first appeal.

Kindly provide me with the information at the address/email id mentioned with the application. I request you to ensure that the information is provided before the expiry of the 30 day period after you have received the application.

I sincerely thank your department for making efforts to relay roads and attempting to provide comfortable living for our residents. But, height of roads increasing every time is a big concern and will make our neighborhood inhabitable in a few years.

Regards,


Sunday, May 19, 2013

Point Returnல் ஒரு நாள்

GoodNewsIndia.comன், DV ஶ்ரீதரன், துவங்கிய முயற்சி PointReturn. மதுராந்தகத்திலிருந்து பத்து கிலோமீட்டரில், 17 ஏக்கர்,  நிலப்பரப்பை,  பசுமைப் படுத்தும் முயற்சி இது.
எதுவும் விளையாமல் வீணாய் விடப்பட்ட வரண்ட நிலத்தில், மரங்களும்,  செடிகளும், கொடிகளும் வளர்த்து, நீர்வளத்தையும் உருவாக்கி, ஒரு self-sustainable environmentஐ உருவாக்கும் ஆராய்ச்சி. 

இவரின் இந்த முயற்சியில், மேலும் சில தன்னார்வலர்கள் சேர்ந்து தங்களது உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள்.
இதில் முக்கியமானவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பல வருடங்களாய் GoodNewsIndia.com வாசித்ததில், DV ஶ்ரீதரன் இந்த இடம் வாங்கியதிலிருந்து, வேலி கட்டியது, குளம் வெட்டியது, தண்ணீருக்காக காற்றாலை அமைத்தது, தங்குவதர்க்காக குடிசை அமைத்தது, பயோ டீசலுக்காக பூங்கை நட்டது, 'நவீன' டாய்லெட் கட்டியது,  சாலைக்காக நிலம் வாங்கியது, கற்பகம், ஶ்ரீராம், சித்தார்த்தின் வரவு, அவர்கள் கட்டிய சின்ன குடிசை, வளர்க்கும் பூனை, நாய், நெல் அருவடை, பூசனி வளர்த்தது, என அனைத்து விஷயங்களும் அவ்வப்போது படித்து தெரிந்து கொண்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு விடுமுறையின் போதும், PointReturnஐ சென்று நேரில் பார்க்கவேண்டும் என்று தோன்றும். ஆனால், அதற்கு நேரம் அமையாமல் இருந்து வந்தது. சென்ற வாரத்தில்தான் நேரம் கிட்டியது. 

அடிக்கும் சுளீர் வெயிலில், நகர சுகத்தை புறம் தள்ளி, இயற்கைக்கு தங்களால் ஆனதைச் செய்யும், இந்த தன்னார்வலர்களை எண்ணி வியப்பு தான் வருகிறது. நினைத்தால், சில பல லட்சங்கள் சுலபமாய் மாத சம்பளமும், சுகபோக வாழ்க்கையும் நகரத்தில் கிட்டும் இவர்களுக்கு. படித்த படிப்பு அப்படி. அதை புறம்தள்ளி, இந்த பொட்டல் வெளியில், குடிசை அமைத்து, விவசாயிகளாய் மாறியதை எண்ணி பெரும் வியப்பு வருகிறது.
அவர்களைப் பொறுத்தவரை, இதை ஒரு service என்றெல்லாம் எண்ணாமல், தங்களுக்கு பிடித்த வாழ்க்கைமுறையை பிடித்தபடி சிம்ப்பிளாய் வாழ்கிறோம், அதைத் தவிர இதில் பெரிதாய் ஒன்றுமில்லை என்கிறார்கள்.

வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவை இல்லை, எது சந்தோஷம், எது மன நிறைவு,  எது ஆசை, எது பேராசை, என்றெல்லாம் தெளிவாய் புரியாமல், எதையோ தேடி வரும்  நமக்கு, இவர்களின், மன ஓட்டமும் வாழ்க்கையின் அணுகுமுறையும் புரியாத புதிர்தான்.

நம் சுகபோகங்களை கெட்டியாய் பிடித்துக் கொண்டாலும், நம்மால் இயன்ற சின்ன சின்ன விஷயங்களை, சுயநலம் இல்லாமல் செய்தல் நலம் பயக்கும்.

நீர் தட்டுப்பாடு, மின்சாரம் தட்டுப்பாடு, என பல தட்டுப்பாடுகள் நிலவும் ஊரில், இயற்கை வளத்தை சீரழிக்காமல் காப்பதே ஒரு பெரிய சேவைதான்.
உங்கள் தெருக்களில், மரங்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மரம் இல்லாத தெருக்களில் மரங்கள் வையுங்கள்.
உணவு, நீர், வீணடிக்காதீர்கள்.

மரம், செடி, கொடிகள் மெத்தப் பிடித்தவர்கள் சிலர் கூட்டாய் சேர்ந்து, சில பல ஏக்கர்களை வாங்கி, பசுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

PointReturnலிருந்து சில பல படங்கள், உங்கள் பார்வைக்கு.


பொட்டல் காட்டில், பசுமை தெரியத் துவங்கியுள்ளது.


இல்லம்.

அப்பு.


வெயில், அதீத வெயில்

விருந்தினர் விடுதி

சோலார் தகடு


மதிய உணவு (அரிசி, காய்கறிகள் அங்கேயே விளைந்தது)



காற்றாலை, நீர் இரைக்க. ஆரோவில் தயாரிப்பு.

கற்பகம், ஶ்ரீராம்

குடிலின் மேற்புரம்

இன்றைய மகசூல்.





 நண்பர் ஓசை செல்லா, இதே மாதிரி ஒரு முயற்சியை வரகம்பாடியில் செய்து வருகிறார்.

பல கோடி பேர், நில வளத்தையும் நீர் வளத்தையும் சீரழித்தாலும், சில ஆயிரம் பேர் இந்த மாதிரி பசுமை முயற்சிகள் செய்து, பேலன்ஸை காக்கிறார்கள்.
இவர்களைப் போன்றோரின் முயற்சி வாழ்க வளர்க. இவர்களைப் பார்த்து, மற்றவர்களுக்கும் தத்துனூண்டாவது, ஆர்வம் பீரிடட்டும். :)

DV ஶ்ரீதரன் ஒரு கட்டுரையில், தான் கடந்து செல்லும் பாதையில் ஒரு மரத்தை பார்த்தால், ஒரு சில நொடிகள் நின்று அதன் இருப்பை உள்வாங்கி, அதன் பிரமாண்டத்தை ரசித்துவிட்டுத்தான் நகர்வேன் என்று சொன்னது என் உள்மனதில் பதிந்து விட்டது. அதனால் தானோ என்னவோ, எனக்கும் மரங்களின் மேல் ஒரு 'இது' வந்து விட்டது.

எங்கள் தெருவில் வைத்த ஒரு 'Copper Pod''ன் படம் இங்கே. மரம் நடுங்கள். அருமையான அனுபவம் அது. உங்களுக்குப் பின்னும், உங்களின் இருப்பை நிலை நிறுத்தும், பலப் பல வருடங்களுக்கு.



நன்றீஸ்.



Saturday, May 04, 2013

சூது கவ்வும் - திரைப் பார்வை


விஜய் சேதுபதி கலக்கறார். ஐம்பது ப‌டங்களுக்கு மேல் நடித்த மாதிரி ஒரு அசால்ட்டு நடிப்பு. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பிட்சான்னு அருமையான வாய்ப்புகள் அவருக்கு. இப்ப சூது கவ்வும். கேரக்டருக்கு ஏத்த மாதிரி அமக்களமா மாறிடராரு.
கொஞ்சம் 'மெண்ட்டலான' கதாபாத்திரம். அட்டகாசமாய் பொறுந்துகிறது இவருக்கு.
'க்ளோஸ்' என்று முடிக்கும் பாங்கும், மற்ற உடைந்த ஆங்கில டயலாக்குகளும், கிட்நாப்புக்கு 5 கமாண்ட்மெண்ட்ஸ் எழுதி வைத்து, அதை விளக்கும் காட்சிகளும் ஹில்லேரியஸ். கடத்தப்பட்டவனின் தந்தையிடம், "நாளைக்கு சண்டே லீவு, நாங்க வேலை செய்ய மாட்டோம். திங்கள் கிழமை வாங்க" என்று சீரியஸாய் அடித்து தூள் கிளப்பும் இடங்களெல்லாம் ஹாஸ்யம்.

விஜய் சேதுபதி, தன் கற்பனைக் காதலியுடனும், மேலும் மூன்று சென்னை இளைஞர்களுடனும் சேர்ந்து, மற்றவர்களை கிட்நாப் செய்வதே கரு. மூவரில் ஒருவர் நயன் தாரவுக்கு கோயில் கட்டியவர், மற்றவர் வேலையில்லா வெட்டி, இன்னொருவர் ஐ.டி ஆசாமி. கற்பனைக் காதலி, விஜய் கண்ணுக்கு மட்டுமே தெரிவதால், சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லாமல் காட்சிகள் பல.

விஜ‌ய் சேதுப‌திக்கு அடுத்த‌ப‌டியாய் க‌ல‌க்குவ‌து, விஜய் டிவி புகழ் "அல்
கேட்ஸ்". காலை அலார‌ம் வைத்து எழுந்து, விபூதியெல்லாம் பூசி, ப‌வ்ய‌மாய் சிப்ஸ் ச‌ர‌க்கு பாட்டில்க‌ளை எடுத்து வைத்துக் கொண்டு, ஏன் தான் வேலைக்கு செல்வ‌தில்லை என்று வியாக்கான‌ம் செய்யும் பாத்திர‌த்தில் ப‌ட‌ம் முழுக்க‌ ரவுண்டு க‌ட்டி அடிக்கிறார். போலீஸிடம் இருட்ட‌டி வாங்கும் காட்சி சிரிப்பு வெடி.

இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் அடுத்த‌தாக‌ ப‌ட‌த்தில் வியாபித்திருப்ப‌து பின்ன‌ணி இசை. அம‌க்க‌ள‌ப் ப‌டுத்தியிருக்கிறார் இசை அமைப்பாள‌ர் ச‌ந்தோஷ் நாராயண‌ன்.
வித்யாச‌மான‌ இசைக் கோர்வை. டாராண்ட்டினோ ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌தைப் போல் ஒரு புதுமை. ஹாட்ஸ் ஆஃப்! பாட‌ல்க‌ள் பெரிதாய் இல்லை. கானா பாட‌ல் தாள‌ம் போட‌ வைத்த‌து.

இவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் விட‌ மேலே நிற்ப‌வ‌ர் திரைக்கதை, இயக்கம் செய்த‌ ந‌ள‌ன் குமார‌ஸ்வாமிதான். சும்மா ந‌ம்ம‌ளும் ப‌ட‌ம் எடுத்தோம்னு இல்லாம‌, ரொம்ப‌வே வித்யாச‌மான‌ ஒரு அனுப‌வ‌த்தை ப‌ட‌ய‌லாக்கியிருக்கிறார். குறிப்பாய் வ‌ச‌ன‌ங்க‌ள். நெக்குலான‌ ட‌ய‌லாக்குக‌ள் ப‌ட‌ம் முழுக்க‌, ந‌ம்மை சிரிக்க‌ வைத்துக் கொண்டே இருக்கிற‌து.
விஜ‌ய்க்கு ம‌ட்டுமே தெரியும் ஹீரோயின் கான்செப்ட் சூப்ப‌ர். விஜ‌ய் சேதுப‌தியை 'மாமா' என்று அழைத்துக் கொண்டு 'ஓவ‌ர்' மேக்க‌ப்புட‌ன் ஹீரோயின் உட‌னிருப்ப‌து நெருடிய‌போது, அவ‌ர் விஜ‌ய்யின் க‌ற்ப‌னை என்று தெரிந்த‌போது, 'வாவ்' என்று தோன்றிய‌து. ப்ரில்லிய‌ண்ட் கான்செப்ட். அதுவும் அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ந‌ட‌க்கும் ச‌ம்பாஷ‌னைக‌ள் அட்ட‌காச‌ம்.
லைட்டிங்க் கேம‌ரா ப‌ட‌த்துக்கு த‌குந்த‌ மூட் கொடுத்திருந்த‌து.

எந்த‌ இட‌த்திலும் சோடை போகாம‌ல், நொடிக்கு நொடி சிரிக்க‌ வைத்து, விர்ர்ரென‌ ஒரு ப‌ர‌வ‌ச‌ அனுப‌வ‌த்தை கொடுத்த‌து சூது க‌வ்வும். முதல் கட்ட கடத்தல்கள் அட்டகாசம். "you want to talk to my folks?" என சொல்லும் வெள்ளையரை, "இவன எறக்கி விடு" என்று விட்டுச் செல்லும் இடங்களெல்லாம் லாஃபிங் ரயட்.
இர‌ண்டாம் பாக‌த்தில் ச‌ற்று இழுத்த‌ மாதிரி இருந்தாலும்,பின்னால் சுட்டுக் கொள்ளும் சீரியஸ் போலீசும், அர‌சிய‌ல் வாதியும், அவ‌ரின் ம‌க‌னும், ர‌வுடி டாக்ட‌ரும், ஏனைய‌ ப‌ல‌ காரெக்ட‌ர்க‌ளும் செம‌யாய் கை கொடுத்து, ந‌ம்மை குதூக‌ல‌ப் ப‌டுத்துகிறார்க‌ள்.

ஜாலியாய் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் செல‌வு செய்ய‌, இன்றே பார்க்க‌லாம், சூது க‌வ்வும்.
குட் மேக்கிங்!

சூது வெல்லும்!





 

Saturday, March 23, 2013

பரதேசி


அப்படியும் சொல்ல முடியாமல், இப்படியும் சொல்ல முடியாமல், நன்றாய் முடிக்கப்பட்ட படம்.

பிதாமககனுக்குப் பிறகு, நம் பொறுமையை மெல்லமாய் சோதிக்க ஆரம்பித்திருந்தார் பாலா.
பரதேசியின் போஸ்டர், ட்ரெயிலர் எல்லாம் பார்த்ததும், விஷுவலாய் கண்டிப்பாய் நன்றாயிருக்கும், என்ற தோன்றலால், தியேட்டருக்கு படையெடுத்திருந்தேன்.

பரதேசிகளாகிய நம்மின் பாட்டன் முப்பாட்டனின் கதை. ஏழை பாழைகளை, கங்காணிகள், வேலை வாங்கித் தாரேன்னு அசலூருக்கு கூட்டிக் கொண்டு போய், கொத்தடிமைகளாக்கிய கதை. தேயிலை தோட்டங்களில், ஆங்கிலத் தொரைகளின் அடிமைகளாக வேலை செய்ய, கூட்டம் கூட்டமாய், கிராமத்து மக்கள், கொத்து கொத்தாய் தங்கள் வாழ்க்கையை இழந்த சோகம்.
அதிலொருவன், நம் ஹீரோ. ஒட்டுப் பொறுக்கி.  அதர்வா (முரளியின் மகன்). நல்ல உழைப்பை கொட்டி, பிசிராமல் நடித்திருக்கிறார்.
தண்டோரா போடுவது தொழில். அதைத் தவிர உப தொழில் கவுரவப் பிச்சை. கிண்டலும் கேலியுமாய் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று எகத்தாளத்துடன், 'இன்னுமா உலை வெக்கல'ன்னு கேட்டுக்கிட்டே, ஒவ்வொரு வீட்டிலும் கிட்டும் கைப்பிடி அரிசியை வாங்கிச் செல்லும் இடம் அழகாய் இருந்தது.
கிட்டத்தட்ட ப்ளாக்&வயிட் டோனில், மொத்த படமும்.


அழுக்குச் சட்டையும், குடிசைகளும், கருத்த தோலும், பாட்டிகளின் ரசனையான பேச்சும், நம்மை அந்த காலத்துக்கு மெல்ல இட்டுச் செல்வது போன்ற படமாக்கம்.
காதலி இல்லாமல் எப்படி? பயல் என்னதான் அப்பாவியானாலும், வழக்கமான டூயட் எல்லாம் பாடி, திருமணத்துக்கு முன் கசமுசா செய்து, சந்தோஷமாய் பொழுதைக் கழிக்கிறார்கள் கிராமத்தில்.
காதலியாய் நடித்தவர், கொஞ்சம் ஓவர்-டோஸ் ஆக்டிங்க் செய்தது போல் சில இடங்களில் தோன்றினாலும், அதர்வாவின் நடிப்பு, பேலன்ஸ் செய்து விடுகிறது.

அனைவரும் சந்தோஷமாய், பணியாரமும், வயிரு முட்ட சோறும், மூன்று நாலு பெண்டாட்டிகளும் வைத்து சுகவாழ்க்கை வாழும் கிராமத்து மக்கள், பஞ்சம் பொழைக்க, 46 நாட்கள் நடந்து ஏதோ ஒரு தேயிலை  தோட்டத்துக்கு வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் தான் புலப்படலை.
அதற்கான காட்சிகள் மனதில் பதிக்காததால், "செந்நீர் தானா.." பாடல் பெரிதாய் ஒரு பாதிப்பையும் நம்மில் ஏற்படுத்தலை.

முதல் பாதி, பெரிதாய் வசீகரக்கவும் இல்லாமல், சங்கடப் படவும் வைக்காமல், இனிதே நடந்து முடிகிறது.

இடைவேளை போடும் காட்சியில், கீழே செத்து வீழ்ந்தவனின் கை திரையில் பெரிதாய் காட்டப்படும். பிரமிப்பூட்டிய  நொடிகள் அவை. ஆனால், அதற்கு முந்தைய காட்சிகளில் வலு இல்லாததால், இந்தக் காட்சி ஏற்படுத்த வேண்டிய வீரியம், மனதில் பாயாமல் சொத்தையாய் வீணாய்ப் போனது மிகப் பெரிய சோகம்.

இரண்டாம் பாகம், கொத்தடிமைகளாய், தேயிலைத் தோட்டத்தில் தேய்ந்து போகும் காட்சிகள், முழுக்கக் கொண்டது. ஒவ்வொரு வருடமும், கணக்கு சரிபார்த்து, உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய  கூலியை விட, அவர்களுக்கான மருந்து செலவும், வீட்டுச் செலவும்,அதிகமாய் இருப்பதால், இன்னும் மூணு வருஷம் வேலை செய்ய வேண்டும் என்று, அடிமைத் தளை அகற்றப்படாமல் தொடர்கதையாய் போகிறது.
சங்கு ஊதியதும், அடிமைகள் எழுந்து தேயிலைத் தோட்டத்துக்கு வருவதும், வேலை செய்வதும், அடி வாங்குவதும், இரவு வருவதும், மூன்று நான்கு முறை காட்டியதால், பிற்பாதியில் வெரைட்டி ரொம்பவே குறைவாய் இருந்தது.

அடிமைகள் வேதனைப் படுகிறார்கள் என்பதை பதிக்க, பெரியதாய் காட்சிகள் இல்லை. காலில் அட்டைப் பூச்சி கடிப்பதும், மரத்தை கோடாளி கொண்டு வெட்டுவதும், நம்மை பெரிதாய் பாதிக்கவில்லை.
இலைகளைப் பறித்து பறித்து, விரல்களில் வலி ஏற்படும், கையில் நடுக்கம் வரும், அப்படி இப்படின்னு நடுங்கும் விரல்களை க்ளோஸ்-அப்பியிருந்தால்,  நமக்கும் வலித்திருக்கும்.


ஏற்றத்தாழ்வு பெரிதாய் இல்லாத நேரத்தில், ஒரு பாதிரியார்/வைத்தியர் வந்து, சூப்பர் குத்துப் பாட்டில், "how மதமாற்றம் works?" என்பதை நசிக்கும்படியாய் ருசிகரமாய் செய்து காண்பிக்கிறார்.

இரண்டாம் ஹீரோயின் அழகு. மகளை இடுப்பில் கட்டிக் கொண்டு, தேயிலை பறிக்கும் காட்சிகளாகட்டும், விட்டுப் போன கணவனை நினத்து கோபப்படும் காட்சிகளாகட்டும், அதர்வாவை அதட்டும் காட்சிகளாகட்டும், அமக்களமாய் நடித்திருக்கிறார்.

வெள்ளைக்காரத் தொரைகள் பெரிய சொதப்பல். ஓவர் ஆக்டிங் செய்திருப்பது போல் இருந்தது. குறிப்பாய், ஆபீஸரின் மனைவிகள்.

கங்காணியாய் நடித்திருப்பவர், அவ்வப்போது, தொரையிடம் அடிவாங்குவதால், இவரின் மேல் பயமோ வெறுப்போ நமக்கு வரவில்லை.

பாடல்களும், பின்னணியும் நன்றாய் இருந்தது. எந்தப் பாடலும் காட்சிக்கு ஒட்டலை, 'ஓர் மிருகம்' பாடலைத் தவிர.

எதை எதிர்பார்த்து, திரையரங்கத்துக்குப் போனேனோ, அது ஏமாற்றவில்லை. ஒளிப்பதிவு அமக்களம். டாப் ஏங்கிளில் தேயிலைத் தோட்டத்தை காட்டும் காட்சி ஆஹா. பச்சைமலை பச்சையாய் இல்லாமல், கொஞ்சம் டல்லா ப்ளாக்&வயிட் மாதிரி தெரிந்தது சங்கடமே. ஆனால், படத்துக்கு அப்படிப்பட்ட டோன் தேவயாய்த் தான் இருந்தது.

பாலா, டைரக்டராய் எங்கும் மிளிர்ந்ததாய் தெரியவில்லை. சற்றே அலுப்பூட்டக் கூடிய காட்சி நகர்வுகள் அதிகமாய்.
ஆனால், அவரின் உழைப்பும், மொத்த டீமின் உழைப்பும்  நன்றாய் தெரிந்தது.
'நச்' என்ற கிளைமாக்ஸில், பாலா நிமிர்ந்து நிற்கிறார்.

மொத்தத்தில், பரதேசி, பாக்கணும்னா பாக்கலாம், பாக்க வேணாம்னா வேணாம்.
அப்படியும் சொல்ல முடியாமல், இப்படியும் சொல்ல முடியாமல், நன்றாய் முடிக்கப்பட்ட படம்.


Saturday, February 09, 2013

கமலின் விஷ்வரூபம் - Kamals Vishwaroopam


விஷ்வரூபம் - இதுவரை எந்த இந்தியப்  படத்திலும் கண்டிராத ஒரு தரம். கமல் என்ற உன்னத கலைஞனின் உழைப்பும், அறிவும், ரசனையும்,திறமையும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பளீர் பளீர் என்று தெரிகிறது.

இதை வெளிக்கொணர கமல் பட்ட பாடு சொல்லி மாளாது. இவ்வளவு கடின உழைப்பையும், பணச்செலவையும் செய்துவிட்டு, அந்த படைப்பை வெளியிட முடியாததன் சோகம் பெரியதாய்த் தான் இருந்திருக்கும்.

எல்லா பொது ஜனம் போலவும், எனக்கும், விஷ்வரூபத்தை பார்க்கும் முன்னும்,பார்க்கும் போதும், பார்த்த பின்னும், இந்த படத்துக்கு இவ்வளவு தடங்கல்கள் செய்தது நியாயமா என்ற கேள்விக்கான விடை அறிவது அவசியமாய் இருந்தது.

சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சமாய் மட்டும் பார்த்தால், எதுவும் தவறாய் தெரியவில்லை. இதைவிட பல படங்கள் இஸ்லாமியர்களை நெகடிவ் வெளிச்சத்தில் காட்டி இருக்கின்றன.
ஆனால், ஏற்கனவே ஒரு தவறான கண்ணோட்டத்தில் பலராலும் பார்க்கப்படும் இஸ்லாமியரை, மேலும் மேலும், தவறாக காட்சிப் பொருளாகி, வெளிச்சத்தில் காட்டுவது, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் நல்லதல்ல என்பது என் கருத்து.

ஒரு சில பேர் தீவிரவாதி ஆகிட்டான் என்பதால், தாடியும் குல்லாவும் வச்ச எல்லா பயலும் அப்படித்தான் என்ற பொது புத்தியில் இயங்குவதுதான் நம் சமூகம். விரிசல் விட்டிருக்கும் நம்மிடையே இணக்கம் ஏற்பட வைக்கும் படங்கள் எடுக்கலன்னாலும், இந்த மாதிரி நெகடிவிஸம் காட்டி எடுப்பதை வருங்காலங்களில் இயன்றவரை தவிர்க்கலாம்.

அமெரிக்காவில், கருப்பர் இனத்தவர்களையும், மற்ற மைனாரிட்டிகளையும், சதா சர்வ காலமும், படங்களிலும், செய்திகளிலும், கெட்டவர்களாகவே காட்டுவது பல வருடமாய் நடந்து வருகிறது. அமெரிக்க தெருக்களில் தனியாய் நடக்கும்போது, எதிரே ஒரு கருப்பர் வந்தால், கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும்.
நம்மை அப்படி மூளைச் சலவை செய்துவிடுகிறது இம்மாதிரி பொறுப்பற்ற ஊடகச் செயல்கள்.

இருக்கரதத்தான  சொல்றோம் என்ற சப்பைக்கட்டு சரியல்ல. இருப்பதை எடுக்க எவ்வளவோ விஷயம் இருக்கே. அரசியல் கேப்மாரித்தனங்களை படமாக எடுக்கும்போது, 'கல்மாடி' என்றோ, 'ராஜா' என்றோ பெயர் போட்டு கதாபாத்திரங்களை உருவாக்க எந்த கலைஞனுக்காவது தைரியம் இருக்கிறதா?

anyway, கமல்,ஒரு கலைஞனாய் செய்ததும் சரி; இஸ்லாமிய அமைப்புகள், தங்கள் சமுதாயத்துக்காக படத்தை எதிர்த்ததும் சரி; அரசு இடைத் தரகு செய்ததும் சரி; நாம் freedom of speechக்காக குரல் கொடுத்ததும் சரி; நாராயண நாராயண!

இனி படத்துக்கு வருவோம்.

பெயர் போடுவதில் இருந்து துவங்குகிறது கமலின் ஆளுமை. அமைதியான புறாக்கள் சடசடக்க, ஆர்பாட்டம் இல்லாமல் பெயர்கள் வந்து போகின்றன.
தியேட்டருக்கு லேட்டாக வந்த கஸ்மாலங்கள் சலசலத்து அவரவர் இருக்கைகளில் அமரவும் பெயர் முடியவும் சரியாய் இருந்தது.
இடையிடையே செல்ஃபோனில் பேசி எரிச்சல் ஊட்டிய கழிசடைகளை விஷ்வரூபம் எடுத்து நசுக்கி போட மனம் ஆசைப்பட்டாலும், பல்லைக் கடித்து படம் பார்க்க வேண்டிய சூழலில், படம் நகர்ந்தது.

கமலின் மனைவியாய் வரும் பூஜா, மிக அருமையான தேர்வு. அழகாக இருக்கிறார். அருமையாய் நடிக்கிறார். அவருக்கு குரல் கொடுத்திருப்பது விருமாண்டி அபிராமி. பொறுத்தம்.

கமல், கதக் கற்றுத் தரும் மாஸ்டராக அறிமுகமாகும் பாடலில், அவர் வெளிக்கொணரும் முக பாவங்கள் க்ளாஸ். பாடல் படமாக்கிய விதமும் மிக ரம்யமாக இருந்தது.  பெண்மை கலந்த குணாதிசியங்களை கமல் வெளிப்படுத்தும் காட்சிகள், அவரின் டயலாக் டெலிவரியெல்லாம் பார்க்கும் போதே, யப்பாடி குடுத்த காசு வசூல் என்று உள்மனம் சொல்லியது.
ஹாஸ்யம் பரவலாய் தெளித்திருப்பதும் அருமை. சில வசனங்கள் வாய் விட்டு சிரிக்க வைத்தது.
குறிப்பாய், "எங்காத்து அழுக்கு டேப்பை வெட்ட உங்காத்து கத்திய கேட்டா தருவியோ நீ?";
"கெட்ட குடியே கெடும்பா"

படம் பார்க்காதவர்கள், இயன்றவரை, கதைக் கருவை தெரிந்துகொள்ளாமல் செல்வது சாலச் சிறந்தது. திரைப்பட அனுபவம் இன்னும் அருமையாய் இருக்கும், எதுவும் தெரியாமல் அப்பாவியாய் சென்று பார்த்தால்.

அப்படி ஆசை இருப்பவர்கள், ப்ளீஸ் க்ளோஸ் த ப்ரவுஸர் :)

கமல் ஒரு இஸ்லாமிய RAW agentஆம். ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஜிஹாதிக் கூட்டத்தில் கலந்து அவர்களின் ரகசியங்களை அறியச் செல்வாராம்." விஸாம் காஷ்மீரி" என்ற பெயர் கொண்ட அவர் ஒமார் என்னும் ஜிஹாதியை ஆப்கானிஸ்தானில் ஊடுருவி அவர்களை பற்றிய விவரங்களை அமெரிக்க படைகளுக்கு தெரிவித்து அவர்களில் பலர் அழிய காரணமாய் இருப்பவர்.  தப்பிப்பிழைத்த ஒமார் நியூநியார்க் நகரில் நிகழ்த்தப் போகும் அணு ஆயுத தாக்குதலை தடுக்க, விஸாம், 'விஷ்வா'வாக மாறி கதக் பயிலுவிக்கும் மாஸ்டராய் மாறுவேஷத்தில் உலாவுகிறாராம்.
பூஜாவை மணமுடித்து, ஷேகர் கபூர், ஆண்ட்ரியா கோஷ்டியுடன்  சேர்ந்து, துப்புத் துலக்குகிறார்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகள் சிரத்தையுடன் எடுக்கப்பட்டுள்ளது.
ஒமாராக நடித்திருக்கும் ராஹுல் போஸ் கச்சிதமாய் இருக்கிறார். ராஹுலின் குட்டிப் பையன் டாக்டராய் ஆக ஆசைப்படுவதும், ராஹுல், நீயும் ஜிஹாதியாக வேண்டும் என்று சொல்வதும்.அதை கண்டு ராஹுலின் மனைவி கலங்குவதும், ஜிஹாதிகளின் குடும்பங்கள் படும் சோகத்தை நயமாய் காட்டுகிறது.

இன்னொரு சிறுவன் ஜிஹாதியாக்கப்படுவதும், மனித வெடிகுண்டாய் செல்ல வேண்டியதற்கு முன், ஒரு ஊஞ்சலில் அமர்ந்து, அங்கிள் தள்ளுங்க என்று ஊஞ்சலை தள்ளச் சொல்வதும் சோகம். அப்பாவியான முக அம்சம் கொண்ட சிறுவர்களை தேர்வு செய்தது சாலப் பொறுத்தம்.

ஆப்கானில் நடக்கும் காட்சிகள், ஜிஹாதிகளின் பயிற்சி, அவர்களின் வாழ்க்கை என்று கொஞ்சம் 'இழுவையாக' நகரும் காட்சிகள் என்றாலும், இடையிடையே சுவாரஸ்யத்தை கூட்டி, ஒரு எதிர்பார்ப்புடனேயே நம்மை இருக்க வைத்ததில் கமல் இயக்குனராய் வெற்றி பெற்றுவிடுகிரார்.

மொத்த படத்தில் ஒரே திருஷ்ட்டி, ஒசாமாவை காட்டும் காட்சி. அதிபயங்கர பின்னணி இசை, தியேட்டரே இடிந்து விடும் அளவுக்கு ஒலிப்பதிவு, தடதடதட வென அதிர, ஒரு பள்ளத்தில் இருந்து, திடீரென பெரிய தாடியுடன் ஒசாமா எழுகிறார். ஏதோ ஏசு கிருஸ்த அவதரித்த மாதிரி லைட்டிங்கில் அவரைக் காட்டியது, 'சப்'பென்று இருந்தது.

தங்கள் கூட்டத்தில் ஒருவர் தவறு செய்துவிட்டதாய் எண்ணி, ஒரு 'நல்லவரை' ஜிஹாதிகள், காலாலேயே மிதி மிதி என்று மிதிப்பதும், அதைத் தொடர்ந்து அவரை தூக்கிலிட ஒரு பெரிய க்ரேனிலிருந்து தூக்குக் கயிறில் தொங்க விடுவதும். அவர், தான் நிரபராதி நிரபராதி என்று அழ, அதைக் கண்ட அவரின் தாயும் அழ, ஓரத்தில் சோகமாய் அமர்ந்திருக்கும் அவரின் தந்தை அழ, மொத்த ஜிஹாதிகளும் ஆர்ப்பரித்து, மிஷின்கண்ணை வானத்தை நோக்கி சுட, அவன் முகத்தில் கறுப்புத் துணியை மூடி, க்ரேனை மேலே இழுப்பதும், உடல் துடிதுடித்து இறப்பதும், இறந்துவிட்டானா என்பதை காலில் நாடி பிடித்து ஊர்ஜீதம் செய்வதும், கமல் வேதனையில் அந்த கூட்டத்தை விட்டு மெல்ல வெளியே நடப்பது, ப்ப்ப்ப்பாஆஆஆ. செம சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் அது.
லாங் ஷாட்டிலும், க்ளோஸ்-அப்பிலும், டக் டக் டக் என மாற்றி காட்டுவதில், சினிமாட்டோ கிராஃபரும், எடிட்டரும், இயக்குனரும் மிளிர்கிறார்கள்.

படம் முழுக்க வரும் ஷங்கர் இஹ்சான் லாயின் இசை, படத்தை இன்னோர் பரிமாணத்துக்கு இட்டுச் செல்கிறது.

படத்தின் மையப் புள்ளி, பெண்மை கலந்த நளினமான விஷ்வா என்ற கதக் ஆசிரியர், தன் சுயரூபத்தை காட்ட விஷ்வரூபம் எடுக்கும் காட்சி.
இந்த காட்சியை பார்த்து,  மயிர்கூச்செரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
வில்லர்களிடம் மாட்டிய விஷ்வா, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் அழுவதும். அவரை அடி அடி என்று நையப் புடைப்பதும் நடக்கும். விஷ்வரூபம் எடுக்கும் முன் அவர் அராபிக்கில் பிரார்த்தனை செய்துகொண்டே பின்னாலிருப்பவனை எட்டி உதைத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுற்றி இருக்கு பலரை காலி செய்வது. ஹாலிவுட்டுக்கு சவால் விடும் தரம்.

இதற்கு முன் மயிர்கூச்செரிய வைத்த காட்சி, பாட்ஷாவில், 'எனக்கு இன்னோர் பேரும் இருக்கு' என்று தலைவர் சொல்லிய காட்சி.
விஷ்வரூபக் காட்சி, அதைவிட ஒரு படி மேல் சென்று விட்டது.  தூள்.

கண்ணை உறுத்தாத எடிட்டிங்கை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். அவ்வளவு ஏக்‌ஷனையும், அருமையாய் கோர்த்து, நம்முன் படையலாக்கியிருக்கிறார்கள்.
இந்த ஒரு காட்சிக்காகவே, சத்யம் போன்ற திரையரங்கில், ஆரோ 3D எஃபெக்ட்டுடன், இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் மாறி மாறி பயணித்த முதல் பகுதி, கமலின் மூன்று பரிமாணத்தை மாற்றி மாற்றி காட்டி வெகு சிறப்பாய் பயணித்தது.
பிற்பகுதி, ந்யூயார்க்கில் நடக்கவிருக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க கமல், ஆண்ட்ரியா,பூஜா, ஷேகர் கபூர், அமெரிக்க FBIயுடன் அங்கும் இங்கும் ஓடுவதாய் அமைகிறது. இதிலும் கூட, இறுதி என்னவென்று ஊகிக்க முடிவதால், சற்று அயற்சி ஏற்படுகிறது. தடால் தடால் என்று இடைச் சொறுகும் காட்சிகள் மூலம், அயற்சி தெரியாமல் செல்கிறது.

அவ்ளோ பெரிய பாம், குட்டி ரூமின் நடுவில் இல்லாமல், பெரிய கூட்டத்தின் நடுவில் வைத்து அதை செயலிழக்க சென்றிருந்தால் நமக்கும் கொஞ்சம் பதட்டம் கூடியிருக்கும். அது இன்னாத்தான் நியூக்ளியர் பாமாக இருந்தாலும், ஸ்லோமோஷன் பள்ளிச் சிறார்கள், அம்மாக்கள், தாத்தாக்கள் என்ற சாமான்யர்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் பதிக்க ஒரு காட்சியும் இல்லாதது ஒரு மைனஸ்.

ஆக மொத்தத்தில், கமலின் விஷ்வரூபம்,
கமல் என்ற இயக்குனரின் கலைத் திறமையின் விஷ்வரூபம்;
கமல் என்ற தயாரிப்பாளருக்கு (மொத்த சொத்தையும் போடுமளவுக்கு) தன் திறமை மேல் இருந்த தைரியத்தின் விஷ்வரூபம்;

A great Cinematic Experience. A job well done, Kamal ji.

-Surveysan
-சர்வேசன்


Friday, February 01, 2013

கடல் - திரைப்பார்வை


மணிரத்தினம் கடைசியாய் எடுத்த நல்ல படம் அலைபாயுதே என்று நினைவு. அப்பாலிக்கா வந்த கன்னத்தில் முத்தமிட்டால் நன்றாய் இருந்த மாதிரி தெரிந்தாலும், ஒரு குறிப்பிட்ட அறிவுஜீவித்தனத்தின் ஓவர் டோஸ், சற்றே சலிப்பை தந்திருந்தது.
நமத்துத் தெரிந்த மணிரத்தினம், தமிழ்நாட்டுக்காக படம் எடுப்பதை விட்டுவிட்டு இந்தியாவுக்காக எடுக்க ஆரம்பித்ததிலிருந்து, பிசுபிசுக்க ஆரம்பித்து விட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் கடல் பாடல்கள், தினமும் FMல் கேட்டு கேட்டு ஒரு கிரக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. "அடியேஏஏஏஏ" பாடல், ஆரம்பத்தில் நாராசமாய் காதில் விழுந்தது. ஆனால், கேட்க கேட்க, ஒரு தேசிய கீதம் கணக்கா "அடியேஏஏஏ..."ன்னு இழுக்க வைத்தது. 

பாடல்களை பெரிய திரையில், நல்ல டெசிபலில் கேட்டால் ரம்யமாய் இருக்கும் என்ற எண்ணத்தில் கடல் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்தியாவை விட்டு தமிழகத்துக்கு வந்திருக்கும் மணிரத்தினத்தின் பழைய சாயலைத் தரும் படமாக இருக்க வாய்ப்பிருப்பதைப் போன்ற தலைப்பும், நடிகர்கள் தேர்வும் இருந்ததால், தியேட்டர் ஆசை ஆழமாய் எழுந்தது. 

விஸ்வரூபம், அட்டூழியத்துக்கும் அராஜகத்துக்கும் நடுவில் மாட்டி சின்னாபின்னப் படுவதால், கடல் தியேட்டர்ல பார்ப்போம் என்று, சடால் என்று முடிவு செய்து, தீயேட்டருக்குச் சென்றோம்.

சென்னையில் மணிரத்தினத்தின் படம் கடைசியாய் பார்த்தது தளபதி என்று நினைவு. திருவிழாக் கோலம் பூண்டிருந்த தியேட்டரும், ரசிகர்களின் ஆட்டமும் பாட்டமும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. 
கடல், ஆர்பரிக்காமல், அமைதியாய் திரையில் அரங்கேறியது. 

அரவிந்த்சாமி இன்னொரு ரவுண்டு வருவார் என்று ஊர்ஜீதம் செய்தது. அர்ஜூனும் நன்றாய் நடித்திருந்தார். 
புதுமுக கவுதமும் தனக்கு எதிர்காலம் உண்டென்று காட்டுகிறார்.
ராதாவின் மகள், கொஞ்சம் 'வித்யாசமாய்' ப்ளாஸ்டிக் கணக்காக இருக்கிறார். ஒரு sophisticated லுக்குடன். பாத்திரத்துக்கு ஏற்ற ஒரு அப்பாவி நடிப்பு. நன்றாய் செய்திருக்கிறார்.

படத்தில் சொதப்பியவர்கள் ஜெயமோகனும், மணிரத்னமும் மட்டுமே. 
சொத்தலாய் ஒரு கதை. 
அரவிந்த்சாமிக்கும் அர்ஜூனுக்கும் சின்ன வயசு லடாயாம்; 
அர்ஜூன் பின்னாளில் அரவிந்த்சாமியை பழி வாங்குவாராம்;
அதற்கிடையில் கவுதமும் ராதா ஜூனியரும்.

படம் ஆரம்பித்த பத்து நிமிடம் நடக்கும் அர்விந்த்சாமி அர்ஜூன் காட்சிகள், அமெச்சூர்தனம். நாயகன் எடுத்த மணிரத்னமா இப்படியெல்லாம் சப்பையாக காட்சிகளை அடுக்குகிறார் என்று ஒரு அங்கலாய்ப்பு. 
அயர்ச்சியில் ஸ்ஸ்ஸ்ஸ் என்று பெருமூச் வரும்போதெல்லாம், ரஹ்மானின் தாளமும் பாடலும், சற்றே நிமிர வைக்கிறது.

வழக்கமான மணிரத்தினம் படத்தில் பாடல் காட்சிகள் அருமையாய் படமாக்கப்படும். இதில் அதுவும் பெரிய ஈர்ப்பை எடுத்தவில்லை. நடன அமைப்புகளெல்லாம் மனதில் பதியவில்லை.

ரஹ்மானை அடுத்து, ராஜீவ் மேனன் மின்னுகிறார். நல்ல கலர் டோனில், நல்ல கேமரா ஆங்கிளில், ஆரம்ப காட்சிகள் நன்றாய் இருந்தன. கடைசி கடல் காட்சியும் அருமையாய் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கதை பிசு பிசு பிசு என்றிருந்ததால், எந்தக் காட்சியும், எம்புட்டு நேர்த்தியாக எடுக்கப்பட்டு, எவ்வளவு ஆத்மார்த்தமாக நடித்திருந்தாலும், மனதில் ஒட்டவே இல்லை.

ஒரே ஒட்டுதல், ஆரம்ப காட்சியில் கவுதமின் தாயின் மரணமும், அதை ஒட்டிய காட்சிகளில், அந்தக் குட்டிச் சிறுவனின் நடிப்பும் அழுகையும் காட்சி அமைப்பும். 

கடல் - சுனாமியாய் வராமல், வற்றிய குட்டையாய் போனது.









Saturday, November 17, 2012

துப்பாக்கி - திரைப் பார்வை


"என் பேச்சே நானே கேக்க மாட்டேன்"னெல்லாம் அலப்பறை பண்ணாத விஜய் என்பதால், விஜய் வெறியர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும்படியாக இருந்தது, துப்பாக்கியில் அவரின் நடிப்பு.
சரசர வென நகரும்படியான திரைக்கதையில், முதல் பாதி போவதே தெரியாமல், அருமையாய் நகர்ந்தது.

மும்பையில் நடந்த தொடர் வெடிகொண்டை மையமாகக் கொண்டு அமைந்த கதை. Sleeper Cell என்ற பயங்கரவாதிகளின் அமைப்பு எப்படி இயங்குகிறது, அதை எப்படி ஹீரோ கண்டுபிடிக்கறாரு, அவங்கள போட்டுத் தாக்கறாரு, என்பது மாதிர்யான கரு.

அரச்ச மாவையே அரைக்காம, வித விதமா திங்க் பண்ணும் முருகதாசுக்கு ஒரு பெரிய நன்னி.

படம் பாத்தப்பரம் Sleeper Cell பத்தி கூகிளிப் பாத்தா, திகிலாத்தான் இருக்கு. பல இளைஞர்களை தீவிரவாத இயக்கங்கள் நல்லா ட்ரெயின் பண்ணி, எதிரி நாடுகளுக்குள் அனுப்பிடுவாங்களாம். அவங்களும், அந்தந்த ஊரில், சாமான்யனாய், வேலைக்குச் சேர்ந்து, அந்தந்த ஊர் மக்களுடன் கலந்துருவாங்களாம். அப்பாவியா, இப்படி சில பல வருஷங்கள் வரைக்கும், யாருக்குமே சந்தேகம் வராதமாதிரி வாழ்வாங்களாம். இவங்களை அனுப்பிய தீவிரவாத இயக்கங்கள, இவங்களை அப்பப்ப பயங்கரவாத வேலைகளுக்கு உபயோகிச்சிப்பாங்களாம். இந்த Sleeper agentsக்கும், அவங்கள் இயக்கத்தில் வேர யாரெல்லாம் இருக்கான்னு தெரியாது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செவ்வனே செஞ்சு, தன் சாமான்ய வாழ்க்கையை தொடருவாங்களாம்.  பஸ்ஸுல குண்ட வச்சோமா, ட்ரெயினக் கவுத்தோமா, மீட்டிங்குல குழப்பம் பண்ணோமான்னு எப்பயாச்சும் பிசியா இருப்பாங்களாம்.
ஆப்டுக்கிட்டா கூட, இவனுங்க கிட்ட இருந்து, பெருசா எந்த தகவலையும் வாங்கிட முடியாது என்பது கூடுதல் திகில்.

அப்பேர்பட்ட ஸ்லீப்பர் ஏஜெண்ட்டுக்கள், தொடர் வெடிகுண்டுகள் வைக்க ஏற்பாடு செய்யும்போது, விஜய் கோஷ்ட்டீஸ், அவர்களை மடக்கிப் போடுவது, திரில்லான நிமிடங்கள்.

விஜய் ஒரு ராணுவ வீரர். அதிலும், இண்டெலிஜன்ஸ் ரகசிய பிரிவைச் சேர்ந்தவர். ராணுவ யூனிஃபார்ம் சுத்தமா செட் ஆகலை இவருக்கு. ஆனா, சண்டையிலும், நடனத்திலும், எப்பொழுதும் போல் அசத்துகிறார். ஒரு சில காட்சிகளில், இராணுவ வீரர்களின் மேல் பெரும் மரியாதை ஏற்படுத்தச் செய்கிறார்.

கொடூரமாய் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ஒரு இராணுவ வீரரை பற்றி சொல்லும்போது, "14 நாள் தான் ஆச்சு, அவன் தம்பி அடுத்து இராணுவத்தில் சேந்துட்டான்"னு ஒரு டயலாக் சொல்லுவார். ரொம்பவே புல்லரிக்க வச்சுட்டுது.

"பல உயிரை கொல்லப் பாக்கர அவனுங்களே சாகரதுக்கு பயப்படல, பல உயிரை காப்பாத்த முயற்சிக்கர நாம் ஏண்டா சாகரதுக்கு பயப்படணும்"னு சொல்லும் இடமும் அருமை. ஆனா, அதே டயலாக்கை இரண்டு முறை பயன்படுத்தியது, சரியில்லை.

ஹாரிஸ் எடுபடலை. இரண்டு பாட்டுக்கள் முணுமுணுக்க வைத்தாலும், பின்னணி இசையில், மின்னலே படத்தில் வரும் பிட்டுக்களைப் போட்டு, சீப்பாகிவிட்டார். கூகிள் பாடலில் வரும் ராப் ரக சரணம் அருமை.

சந்தோஷ் சிவன் பெயரைப் பார்த்ததும், ரம்யமான ஒரு சன்செட்டோ, சன்ரைஸோ, குளு குளுன்னு எத்தையாவது காட்டுவார்னு பெருசா எதிர்பார்த்தா, ஒன்னியும் கண்ணுல காட்டல. திரைக்கதையும் அதுக்கு பெருசா இடம் தரலை. கண்ணுக்கு உருத்தாத, நேர்த்தியான ஒளிபரப்பு. ஆனா, கண்ணுக்குள்ளயும் மனசுலையும் ஒண்ணும் பெருசா நிக்கலை.

நாய், துப்பட்டாவை மோப்பம் புடிச்சு விஜய் தங்கையை தேடுவது கொஞ்சம் டூ மச்சு. ஆனாலும், விறுவிறுப்பான காட்சி. அதைத் தொடர்ந்த சண்டை அமக்களமான ஏக்‌ஷன். நிறைய கத்திக் குத்தல்களும்,துப்பாக்கி சூடுகள் இருந்தாலும், பெரிய ரத்தக்களரி இல்லாத ரசிக்கும்படியான ஏக்‌ஷன்.

சத்யனும், ஜெயராமும் சரியாக பயன் படுத்தப்படவில்லை. ஹீரோயின், வந்துட்டுப் போறாங்க, கச்சிதமாய்.

சிரியஸ் சீனும், ஜாலி சீனும், மாத்தி மாத்தி வருவதால், அலுப்பில்லாமல் படம் போகுது. நல்ல திரைக்கதை பாணி.
கள்ளத் துப்பாக்கியும், நல்லத் துப்பாக்கியும் கொடுத்து, ரெண்டுல எத்தால சாக ஆசப்படரங்கர காட்சி, நல்ல சொறுகல்.

க்ளைமாக்ஸ் ஃபைட், தெண்டம். ஆனால், சுவாரஸ்யமான முடிச்சுகள் அங்கங்க போட்டு, நல்லா கனெக்‌ஷன் கொடுத்து, படத்தை முடிச்சிருக்காரு. வில்லனை குட்டிக் கப்பலில் இன்னாத்துக்கு கூட்டிக்கிட்டுப் போறாருன்னு தெரியலை? ஆனா, கூட்டிக்கிட்டுப் போன எடத்துல, அருமையா ரெண்டு மூணு டயலாக் சொல்லியிருந்தா, முடிவு மெருகேறியிருந்திருக்கும்.

இராணுவர்கள் செய்யும் தியாகத்தை பதியும் படி படத்தின் கடைசிக் காட்சி நெகிழ்வு.

மொத்தத்தில், துப்பாக்கி, ஜாலியான பொழுதுபோக்குப் படம். தியேட்டரில் பார்க்கலாம்.

பி.கு: இஸ்லாமியர்கள் எதிர்க்கும் அளவுக்கு, படத்தில் எந்தக் காட்சியும் இருந்ததாய் எனக்குத் தெரியல்ல. வில்லன்களின் பெயரில் தவிர. அதுக்குள்ள வெட்டிடாங்களோ?

Saturday, September 29, 2012

my kids writes to Chief Justice & Chief Minister



Dear, Respected and Honorable,
Chief Justice of Chennai High Court Thiru. M.Y. Eqbal & Chief Minister of Tamil Nadu Ms. J. Jayalalitha,
[copy to, District Collector MrThiru J. Jeyakanthan IAS ]
[copy to, Mayor Mr. S. Duraisamy]

We turned 1 year and are enjoying our life in Chennai. As you may know, as children, we have no worries and our day is typically spent in eating, playing and sleeping.
In the 1 year, we had spent most of our time indoors. We were not exposed to the Chennai outdoors, other than our trips to the doctor for regular check ups and to visit temples.
There are a few things that we have seen during our trips that were quiet disturbing and worrisome. We would like to highlight those to you and  get a quick remedy for these issues. If these things aren't fixed with your help, our future life in chennai will lack the basic quality and be filled with low standard of living, as every year pass by.

1) We saw open drainage on every road side, filled with sewage and filthy stagnant water. No wonder we were bitten by mosquitoes almost every day. The stench is very bad. We heard that  these open drainage were built to let rain water flow out into catchment areas, but people and businesses have been misusing these to let their sewage and other waste water. We are a great city filled with educated people, but when it comes to hygiene and basic cleanliness, we lag big time.

When the individual isn't ready to live with self discipline and care for surroundings, we would request eminent and powerful individuals like you to put together a strong and effective plan, to make our streets free of open drains and stench-free and livable. Please do the needful. We want fresh air and freedom from mosquitoes and illness like dengue.

2) We also noticed a scary phenomenon were most of the houses in our neighborhood and in many places in chennai, are sinking below the ground level. Its quiet puzzling to see houses that are a few feet down from the road level. We heard that the municipalities responsible for re-laying roads,  lay the roads on top of the existing roads without scraping and de-icing it first. As they do this every time, the height of the road goes higher and higher and the houses and shops on both side of the roads goes down and down.

Even though we are kids, we know that, this is not the right way to do it. We should remove the existing bad road before relaying fresh gravels and tar. This is such a basic design principle.
We have seen some houses that were  more than few steps down from the road level. During the last rain season, the houses were flooded with rain water and drainage sewage water causing major trouble for several families in many neighborhoods.

When the people  responsible to design and lay proper roads are not planning for future and lack the understanding of basic gravity, we would request eminent and powerful individuals like you to put together a strong and effective plan, to make our roads maintain its level (both in altitude and quality).

There are several other things that were equally alarming, such as encroachment of lakes and making them residentail plots illegally, dumping of waste in public places and water bodies, lack of respect to nature and trees and rain..... We will raise those to your attention, once the above two get some healing with your power.

We sincerely hope you will take the necessary steps to find a resolution at the very earliest. We thank you both for staying on top of all the other day-to-day issues and keeping our city, a better place to live.

with hope and respect,

Thank you,
Sunil Jr. & Sunil Jr.
Chromepet, Chennai


***************
sending to:
Chief Minister Ms. J Jayalalitha
Secretariat, 
Fort St.George, 
Chennai 50009

Chief Justice Thiru. M.Y.Eqbal
Chennai High Court
N fort Road, 
Parrys, George Town, 
Chennai 600104

District Collector Thiru J. Jeyakanthan IAS 
Collectorate
62, Rajaji Salai, Chennai - 600 001

Mayor Mr. S.Duraisamy
Sydenhams Rd, 
Park Town, 
Chennai  ***************

*************** *************** *************** ***************
please share and spread the word and copy/print and send similar letters, if it makes sense. Suggest, otherwise.
*************** *************** *************** ***************



pic: is saved from facebook. not sure if its related to the issue highlighted, but matches the exact pain undergone by several during rainy season.

Sunday, September 02, 2012

லைசென்ஸும் வாங்கியாச்சு, but...

அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்குள், நமக்கு ஏற்படும் எரிச்சலை, வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது.
அரசாங்க வேலை செய்பவர்களில் பெரும்பான்மை, கடுக்கா சாப்பிட்டுவிட்டு வருவதுபோல், ஒரு எரிச்சலுடனேயே வேலை செய்வது போல் ஒரு தோற்றம் இருக்கிறது.
வாங்கர சம்பளம், அதுக்கு மேல கிம்பளம் எல்லாம் இருந்தும், பொறுப்பாய் வேலை செய்யாமல் தான்தோன்றித் தனமாய் வேலை செய்யும் களவாணிகளுக்கு யார்தான் மணி கட்டுவாங்கன்னு தெரியல்ல.
இணையவழியாக, அநேகம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் காலம் வந்தால்தான், இந்த லொள்ளர்களிடம் மாட்டி விழி பிதுங்காமல் இருக்க முடியும்.

சரி, பொலம்பலைக் கொறைப்போம். விஷயத்துக்கு வருவோம்.

அதாகப்பட்டது, வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கலாம்னு முடிவு பண்ணி, 'பழகுநர் உரிமம்' (LLR) எடுக்க இரண்டு மாசத்துக்கு முன் தாம்பரம் RTOவை அணுகிணேன். கூகிளார், ஏதோ ஒரு பக்கத்துக்கு இட்டுக்கினு போயி, LLRக்கு ஆன்லைன் படிவம் இருப்பதைக் காட்டி அசத்தினார்.

ஃபாரமை பூர்த்தி செய்து, சொடுக்கி, எந்த நேரத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணுங்கர அளவுக்கு முன்னேறியிருந்ததை பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன்.
சொடுக்கி, 10மணிக்கு வாரென்னு ஃபில் பண்ணி, பிரிண்ட் எடுத்துக்கிட்டு, தாம்பரம் RTO அலுவலகத்தை அணுகினால், "அப்பாயிண்ட்மெண்ட்டா?, போயி லைன்ல நில்லுய்யா"ன்னு, வெறுப்பாய் கத்தினார் ஆஃபீஸர் ஒருத்தர்.
அடக்கொடுமையேன்னு, என் பிரமிப்பு எல்லாம் புஸ்வாணமாகி, லைன்ல நின்னேன்.
வெயில் கொடுமை. கூரை கூட இல்லாத வெட்ட வெளியில் புழுதி பறக்கும் பெரிய லைன். கிட்டத்த 20 பேர் லைன்ல நகர்ந்து என் கட்டம் வர, ஒன்றரை மணி நேரம் ஆனது.

கவுண்ட்டரில் இருக்கும் ஆஃபீஸர், நம்மள மாதிரி சாமான்யனை கவனிப்பதற்க்குள், ஸைடில் வரும் 'கிம்பளம்' தரும் ப்ரோக்கர்கள் ஸ்பெஷல் கவனம் பெறுகிறார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு பணத்தை கட்டி, LLR test முடித்து, கைகட்டி பவ்யமா நின்னு, 'ஆபீஸர், எல்.எல்.ஆர் எப்ப கிட்டும்'னு கேட்டா, "போயிட்டு சாயங்கலம் வா'ன்னு அனுப்பிட்டாங்க.

சாயங்காலம் திரும்ப லொங்கு லொங்குன்னு போனா, எல்.எல்.ஆரை கொடுத்துட்டாங்க. "அப்பாடா, லஞ்சம் கொடுக்காம, எல்.எல்.ஆர்" வாங்கிட்டோம்னு உள்ளூர திருப்தி தலை தூக்க, சில பல வாரங்கள் அதை வைத்துக் கொண்டு காரில் வலம் வந்தோம்.

ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்னு, சென்ற வாரத்தில், சுபயோக' சுபதினத்தில்,  மீண்டும் ஆர்.டி.ஓ'வை நோக்கி படையெடுத்தேன்.

இம்முறை, கூட 'நைனா'வையும் கூட்டிக் கொண்டு போனது பெரும் தப்பு என்பது ஆரம்பத்திலேயே உரைத்தது. ஆனா, வேர வழியில்லை. எல்.எல்.ஆர் இருக்கும்போது, லைசென்ஸ் இருக்கர ஒருத்தரு கூட வந்தே ஆகணும்.

வழி நெடுக்க, "டேய் மவனே, ரெண்டாயிரம் ரூவாய் நம்ம தெரு ட்ரைவிங் ஸ்கூல் காரன்கிட்ட கொடுத்தா, நீ இப்படி அலைய வேணாம். வூட்டுக்கே கொண்டு வந்து லைசென்ஸ் கொடுத்துருவான். வை திஸ் தேவையில்லா அலைச்சல்?"னு கேள்வி மேல கேள்வி போட்டு தொளச்சிக்கிட்டே வந்தாரு.

ஸ்ஸ்ஸ். நம்ம கொள்கை, இயன்றவரை லஞ்சம் கொடுக்காமல் இருத்தல். அதையெல்லாம் சொன்னா, "நீ ஒருத்தன் கொடுக்காம இருந்தா வெளங்கிருமா. போடா போக்கத்தவனே"ன்னு அடுத்த அர்ச்சனை விழும்.

அதே வெட்டவெளி இடம், வெயில் பின்னி எடுக்க, ஐம்பது அறுபது பேருடன் லைனில் நின்று, கட்டணம் கட்டினேன். புழுதி பறக்கும் அந்த இடத்தில் ஒரு கூரையை போட்டு, சில நாற்காலியை வைக்கலாம்னு ஏன் நம்ம தாம்பரம் RTOக்கு தோன்றவில்லை? அம்புட்டு ஃபீஸ் வாங்கரீங்களே?
'
ஃபீஸ் கட்டியதும், நம்ம RTO inspectorஐ போய் பாத்து, "சார், நான் ரெடி, நீங்க ரெடியா, ஓட்டிக் காட்டவா?"ன்னு கேட்டேன். "இன்னிக்கு இல்ல, நாளிக்கு காலைல வாங்க"ன்னு சொல்லிட்டாரு.

ரென்டாவது நாள், திரும்ப நைனாவுடன் கிளம்பி, கரடு முரடான பாதையெல்லாம் கடந்து, ஒரு குட்டி மைதானம் இருந்த இடத்துக்குப் போனோம். நானும் பல வருஷமா பாக்கறேன், தாம்பரம்-டு-ஆர்.டி.ஓ ஆபீஸ் போகும் வழி குண்டும் குழியுமா படு கேவலமா இருக்கு. கவனிப்பார் இல்லாத வார்டா இது? ஹ்ம்.

டூ.வீலர் மக்களெல்லாம், 'எட்டு' போடும் இடம் அது. நம்ம ஆபீஸர், ஒரு திண்ணையில் ஒக்காந்து, எல்லாருக்கும், 'பாஸ்/ஃபெயில்' போட்டுக்கிட்டிருந்தார்.  ப்ரோக்கர்கள் ஒவ்வொருத்தர் பேரா கூப்பிட, மக்கள்ஸ் எட்டு போட்டுக்கிட்டே இருந்தாங்க.
அதை வேடிக்கை பார்ப்பது செம்ம டைம்-பாஸ். ஒருத்தர் எட்டுக்கு பதிலா, ஆச்சரியக் குறி போட்டு, நம்ம ஆப்பீஸரையே இடிக்கப் பார்த்தார். அவரையும், 'பாஸ்' செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.

வழக்கம்போல்,  'கடு கடு'வென காட்சியளித்த, நம்ம ஆபீஸரை அணுகி, சார், டெஸ்டுக்கு நான் ரெடி, கார் கொண்டு வந்துட்டேன், இந்தாங்க ஃபார்ம்'னு நீட்டி முழக்கினேன். ஃபார்மை வாங்கி, சரக்னு பாத்துட்டு, "pollution certificate வேணும், போயி வாங்கிட்டு அப்பரம் வாங்க. அப்பத்தான் டெஸ்ட்டு"ன்னு குண்டைத் தூக்கிப் போட்டாரு.

நமக்கு எரிச்சல் வந்தாலும், அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், RTO ஆபீஸுக்கு பக்கத்தில் இந்த சர்ட்டிபிக்கேட்டை தருவதாய்ச் சொன்னார்கள். 50ரூ தண்டம் கட்டி, அதை வாங்கி, மீண்டும் ஆபீஸரை பார்த்தில், அதே கடு கடு டோனில், டூ-வீலருக்கு pollution certificate எங்கன்னாரு.
ஒரே நாள்ள நான் எப்படி சார், காரையும், டூ-வீலரையும் கொண்டு வருவேன். இன்னிக்கு கார்லதான் வந்திருக்கேன். இன்னிக்கு இத்தை கொடுங்க, நாளைக்கு டூ-வீலரோட வரேன்னேன். அதுக்கு, 'அதெல்லாம் முடியாது, போயிட்டு கொண்டு வா'ன்னாரு.

நான் கொஞ்சம் கடுப்பா, 'அப்ப கார் லைசென்ஸ் மட்டும் கொடுங்க. டூ-வீலர் வேணாம்'னேன். கடுப்பாய், 'சரி, அதை ஒரு வைட் பேப்பர்ல எழுதிக் கொடு'ன்னு சொல்லிட்டு, அங்கிருந்து வேறொரு இடத்துக்கு, கார்-டெஸ்ட் நடத்த எஸ்கேப்பாயிட்டாரு.

அவசரவசரமா, அந்த லெட்டரை எழுதி, அவரது அசிஸ்டெண்ட்டுக்கிட்ட கொடுத்து, 'கார்-டெஸ்ட்டுக்கு எங்க போகணும்'னு கேட்டா. 'சாருக்கு பின்னாடியே போங்க. கிஷ்கிந்தா பக்கத்துலதான் எடுப்பாரு'ன்னு சொல்லிட்டு அவரு போயிட்டாரு.

நானும் காரை எடுத்துக்கிட்டு போனா, கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு அப்பரம், ட்ரைவிங் ஸ்கூல் ப்ரோக்கர்கள் ஆட்களை எல்லாம் டெஸ்ட் எடுத்து முடிச்சுட்டு அந்த் எடத்துக்கு வந்தாரு. 'சார், நான் ரெடி. நீங்க ரெடியா?. டெஸ்ட் எடுத்துடலாமா?'ன்னு கேட்டேன்.

அதே வெறுப்புடன், 'எங்க உன் காரு. போயி ஒக்காந்து இங்க வந்து நிப்பாட்டுன்னாரு'. நான் ஓடிப்போயி, கார்ல் ஒக்காந்து விஷுக்னு அவரு நின்ன எடத்துக்கு வந்து நிப்பாட்டினேன். அதுக்குள்ள, அவரு இன்னொரு ட்ரைவிங் ஸ்கூல் காருக்குள் ஒக்காந்துட்டாரு. நான் ஓட்டினதை பாத்தாருன்னு கூட தெரியல்ல. "சரி சரி, ஆஃபீஸ்ல போயி வெயிட் பண்ணு. நான் வந்துடறேன்'னு போயிட்டாரு.
(இவர் படுத்தியதை பார்த்ததில், ஈசன் படத்துல வர மினிஸ்ட்டர் லுங்கிய கட்டிக்கிட்டு மதியானம் படுத்துத் தூங்கர காட்சி நினைவில் வந்தது.)

குழப்பத்தில், நானும் ஆபீஸ்க்கு போயி, மூணு மணி நேரம் வெயிட்டினேன். எல்லாரும், சூடான பிரியாணி பொட்டளம் லஞ்சுக்கு (ப்ரோக்கர்கள் உபயம்) பிரிச்சு மேய, மொத்த ஆபீஸும் பிரியாணி வாசம் கம கமக்க, நான் பசியோட, எங்கப் போயி தொலஞ்சாரு இந்த ஆளு என்ற கணக்கில் வெயிட்டிக் கொண்டிருந்தேன்.

மேலும் இரண்டு மணி நேரம் ஆனதும், பொறுமை போனது. இவரைக் காணும். மற்ற ஆபீசர்களிடம் விசாரித்தால், பொறுப்பாய் ஒரு பயலும் பதிலைச் சொல்லவில்லை. அவரு FC (fitness certificate) கொடுக்க வேற ஒரு எடத்துக்கு போயிருப்பாருன்னு சொன்னாங்க.

என்னை வெயிட் பண்ணச் சொல்லிட்டு, இவரு இஷ்டத்துக்கு இப்படியா சுத்தரதுன்னு செம கடுப்பு எனக்கு. இருந்தாலும் FC போடும் இடத்துக்கும் RTO ஆபீஸுக்கும் அலைந்து திரிந்ததில் அந்த ஆபீஸரை காணவே காணும்.

வெறுப்பு அதிகமாக, மேலாளரைப் பாக்கணும்னு கேட்டா, மேலாளரும் அன்னிக்கு வரலைன்னு சொன்னாங்க. ஸ்ஸ்ஸ். இன்னொரு ஆபீஸரிடம், "காலைலேருந்து காஞ்சுக்கிட்டு இருக்கேன். டெஸ்ட் முடிச்சாச்சு. நீங்க கையெழுத்து போட்டா, நான் ஃபோட்டொ எடுத்துட்டு லைசென்ச் வாங்கிட்டுப் போயிடுவேன். இனிமேலேயும் வெயிட் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டேன். அவரும் மற்றவர்களைப் போல், அவர் வந்துடுவாருன்னு டபாய்க்க, "சந்தைக்குப் போவணும் ஆத்தா வையும் காசு கொடு" ஸ்டைலில், நான் கேட்டதையே கேட்டுக் கொண்டிருக்க,  அவரும், வேண்டா வெறுப்பாய் கையெழுத்தைப் போட, ஓடோடிச் சென்று லைசென்ஸுக்கான புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை வரச் சொன்னார்கள், லைசென்ஸ் பெற்றுக் கொள்ள.

மீண்டும் நைனாவுடன், காலங்காத்தால போயி நின்னா, சூப்பரிண்டண்டன்ட் இல்லை, சாயங்காலமா வாங்கன்னாங்க.
எல்லாத்துக்கும் துணிஞ்சு, ஒரு 'நிர்வாணா' நிலையில் இருந்ததால், எரிச்சல் பெருசாய் எழவில்லை. சிரிச்சுக்கிட்டே, "எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்டா'ங்கர மாதிரி, மீண்டும் சாயங்காலம் போயி, ஒரு வழியா லைசென்ஸ வாங்கிட்டேன்.

ப்ரோக்கர் மூலமாய் போனால், கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய், ஒரு லைசென்ஸ் பெற. கண்டிப்பாய், சிலப் பல ஆயிரங்கள், இதில் கிம்பளமாய் போக 99% வாய்ப்பிருக்கிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 பேர் லைசென்ஸ் வாங்கராங்க. நீங்களே, கணக்கு போட்டு பாத்துக்கங்க.
இப்படி சுலபமாய் வரும் கிம்பளத்தை இழக்க விரும்பாததால், டைரெக்ட்டாய் ப்ரோக்கர் (ட்ரைவிங் ஸ்கூல்) இல்லாமல்  வரும் என்னனைப் போன்றவர்களை, வாட்டி எடுக்கிறார்கள் RTO மக்கள், என்பது அடியேனின் ஆணித்தரமான கருத்து.

same-day ப்ராசஸிங் செய்து, அன்றே கொடுக்கப்பட வேண்டிய லைசென்ஸ், நாலு நாட்கள் அலைந்து திருந்த பின்னர், ஏகப்பட்ட நேர விரையம், பெட்ரோல் செலவு, பல மன உளைச்சல்களுக்கும் ஆளான பின்னர், மட்டுமே பெற முடியும், கிம்பளம் கொடுக்க விரும்பாதவர்கள்.


தாம்பரம் RTO கவனிக்க:
பெரிய பதவியில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் நினைத்தால் மட்டுமே, அழுகிப் போயிருக்கும், அரசு அலுவல்கள், திறம் பெற நடக்க வாய்ப்பு ஏற்படும்.
ஆவன செய்க, உடனே!

கொசுறுச் செய்தி: கடுப்பேற்றிய ஆபீசர், சமீபத்தில் Zion பள்ளிப் பேருந்து  FC விவகாரத்தில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வந்தவர் என அரசல் புரசலாய் காதில் விழுந்தது. கிர்ர்ர்ர். திருந்தித் தொலைங்க சார்களா.


 

Tuesday, August 21, 2012

Letter to the TN government officials

The CM's Special Cell, at http://cmcell.tn.gov.in/menu1.php seems to function well.

Grievance are stored and followed upon, i am told.
Trying my luck with the following grievance. will keep you posted on progress. 

------------------------ ------------------------
Dear Government officials,

We have a beautiful lake in Chitlapakkam, which has helped maintain ground water levels all these years.
lately, its shores are being encroached by other govt deparments for dumping and burning waste.
such a pristine lake should be preserved and nurtured. i request our governments environment wing to take initiative to protect and improve the lake and its surroundings.

If we increase the depth of the lake, clear the encroachers and build a pathway around the edges, it can become a beautiful destination for the general public and will serve as a excellent showcase for years to come, on how government can change the environment in a positive way.

Rain water harvesting was a big success, since the government initiated it and enforced it relentlessly.
such a courageous stature should be taken to save our natural resources, such as the chitlapakkam lake.

looking forward to hear from you. I can help coordinate and do whatever is needed to help make progress

------------------------ ------------------------
ref: 2012/701285/CY

chitlapakkam lake:

Wednesday, June 20, 2012

அமாடியஸ்ஸின் க்ளைமாக்ஸ்


மோசார்ட் என்ற இசை மேதையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைத்த படம் அமாடியஸ். (Amadeus).
சீரியஸா இல்லாம,, கொஞ்சம் காமெடியாக செல்லும் திரைக்கதை.

எட்டு வயதிலேயே, தன் இசைத் திறமையால், பலரை வியப்பில் ஆற்றியவர் மொசார்ட். இள வயதிலேயே அவருக்குக் கிட்டிய புகழைக் கண்டு பொறாமையில் செலியேரி (Selieri) என்ற இன்னொரு அரசவை இசை மேதை, மொசார்ட்டை எப்படிக் கொல்ல முயன்றார் என்பதைப் போன்ற கதைக் கரு.

அரசவையில் தனக்கு இருந்த புகழ், மொசார்ட்டின் வருகைக்கு பிறகு குறைந்ததை தாங்க முடியாமல் இருக்கிறார் செலியேரி.
மொசார்ட்டின் ஏழ்மையை அறிந்த செலியேரி, மாறு வேடத்தில் சென்று, மொசார்ட்டிடம் ஒரு பெரிய இசைக் கோர்வையை எழுதித் தரச் சொல்லி பணம் தருகிறார்.
தினசரி இரவு வந்து, சீக்கிரம் முடித்துத் தருமாறு நெருக்கடி தருகிறார். நெருக்கடி அதிகமாகி, மொசார்ட் உடல்நலம் குன்றி, கடைசியில் இறந்தும் போகிறார்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இது. உடல்நலம் குன்றிய மொசார்ட், ஒரு தருணத்தில், செலியேரிதான் வில்லன் என்பது புரியாமல், செலியேரியிடம், தான் எழுதி முடிக்க வேண்டிய இசைக் கோர்வையை, எழுதித் தருமாறு சொல்கிறார்.
மொசார்ட், சொல்லச் சொல்ல, செலியேரி அதை புரிந்து கொள்ள முடியாமல் திணறுவதும், புரிந்ததும், மொசார்ட்டின் திறமையை உள்வாங்கி பொறாமைப் படுவதும், பின்னணியில் மொசார்ட் சொல்லும் இசை வாசிக்கப்படுவதும், இந்தக் காட்சியை எங்கேயோ இட்டுச் சொல்லும் (Selieri played by Murray Abraham, won the Oscar for Best Actor). எட்டு ஆஸ்கார் விருதை வாங்கிய Amadeus, பார்த்தே ஆக வேண்டிய படம், இசைப் பிரியர்கள் அனைவரும்.




Salutes, to the Maestro and the film maker.


பி.கு: நம்ம ஊரு ராசாவும், கமலும் விரும்பிப் பலமுறை பார்த்த படம் அமாடியஸ், என்பது கொசுறுச் செய்தி.



Monday, April 02, 2012

சாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்

முன்குறிப்பு: 'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது. ஆனா, ஸ்ட்ராங்கான திட்டு வார்த்தை என்ற என்ணத்தில் வைக்கப்பட்ட தலைப்பு.

வேலுச்சாமியை எனக்குப் பலப் பல வருஷமா தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவரை எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளில், சின்ன சின்ன எலெக்ட்ரீஷியன் வேலை, தோட்ட வேலை, மற்ற பல எடுபடி வேலைகள் எல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

நிரந்தர வேலையில்லாமல், டே-டு-டே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார். சில பல வருடங்களுக்கு முன், திருமணமும் நடந்தேறி முடிந்து, இரு அழகிய குழந்தைகளும் உண்டு. தற்சமயம், +1ல்  ஒன்றும், எட்டாம் வகுப்பில் ஒன்றும்.

நானும் என் தெரு நண்பர்கள் கூட்டமும், அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவோம் அவரை. ரொம்பவே பாசமாய் இருப்பார்.

அண்ணி  எப்பொழுதும், கவலை தோய்ந்த முகத்துடனையே இருப்பார்.
"வாடகை குடுக்காததால வூட்டுக்காரன் திட்டறான். இந்த மனுஷன் காதுலையே போட்டுக்க மாட்றாரு. ஒரு நாள் பாத்தரத்தையெல்லாம் தூக்கி வெளீல போட்டா, புள்ளைங்களோட நடுத்தெருவுல தான் நிக்கணும்" என்பது போன்ற அங்கலாய்ப்புகள் அதிகமாய் கேட்கும்.

வேலுச்சாமி, நிரந்திரமில்லாத வேலையால், ஏழ்மை வாட்டி எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்றும் அதை வெளிக்காட்டியதில்லை. என் நினைவில் தெரியும் காட்சியிலெல்லாம், வேலுச்சாமி, ஏதாவது ஒரு வேலையை, விசில் அடித்துக் கொண்டே ஜாலியாய்த் செய்து கொண்டிருப்பார்.

ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறை விசிட்டிலும் நான் சென்னைக்கு வரும்போது, வேலுச்சாமிக்கு, ஐந்து வயது கூடிவிட்ட மாதிரி தெரியும்.
"பயலுவ ஓரளவுக்கு படிக்கறானுவ. பெரியவனுக்கும் வயரிங்க் சொல்லித் தரணும். காலேஜெல்லாம் படிக்க வேணாங்கறான்"னு சென்ற முறை சொன்னார். 
பணப் பற்றாக்குறையாலும், சென்னையின் விலைவாசி உயர்வும் ரொம்பவே வாட்டி எடுத்திருக்க வேண்டும் அவரின் குடும்பத்தை. எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து, கிட்டுவதை வைத்து  குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இம்முறை வேலுச்சாமியை பார்த்ததும் ரொம்பவே வேதனையாய்ப் போனது. துருபிடித்த சைக்கிள் ஒன்றில் போய்க் கொண்டிருந்தவரை நிறுத்தி, சௌக்கியம் விசாரித்தேன். "தென்னை மரத்துக்கு உறம் போடக் கூப்பிட்டாங்க பக்கத்து தெருவுல. அங்கதான் போறேன் தம்பி. நல்லாருக்கியா" என்று பேச ஆரம்பித்தார்.
அநேகமாய், வயது நாற்பதுகளின் கடைசியில் இருக்க வேண்டும். ஆனால், பார்த்தால், அறுபதை நெருங்கியது போல் தோற்றம்.
மேலும் பேசும்போது, விலை வாசி ஏற்றத்தால், அவரின் குடும்பம், மேலும் மேலும் நசுக்கப்படுவது புரிந்தது.

முக்கியமாய், வாடகை தாறுமாறாய் ஏறியிருக்கிறதாம். இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று, தாம்பரத்தை தாண்டிய, முடிச்சூரில், ரொம்ப தூரத்தில் தனக்கு இருந்த அரை க்ரவுண்டில், குட்டியாய் ஒரு ஓட்டு வீட்டைக் கட்ட எண்ணினாராம்.   வாடகை கட்டுவதில் இருந்து தப்பிக்க,  கையில் இருந்த நகை நட்டையெல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தில், சுவர் எழுப்ப ஆரம்பித்தாராம்.

இரண்டு ரூம் கட்ட அடித்தளம், சுவரும் எழுப்பியதில். ஆறடி சுவர் கட்டியதும், கையில் இருந்த பணம் தீர்ந்து போனதாம். சிமெண்ட்டும், செங்கல்லும், விற்கும் விலையில் தன்னால் முழு வீடு கட்ட முடியாது என்ற உண்மை புரிந்து, ஆறடி சுவருக்கு மேல், நாலு தூண்கள் மட்டும் இன்னும் சில அடிக்கு கட்டி, அதன் மேல் ஓடு வைத்து ஓரளவுக்கு கட்டி முடித்தாராம்.

சுற்றி வீடுகள் இல்லாததால், 'திறந்த வெளி' வீடு, இப்பொழுதைக்கு அசௌகர்யம் கொடுக்கவில்லையாம். மழை பெய்தால் மட்டும், பெரிய திண்டாட்டமாம்.
இதை விவரிக்கும்போதே,, மனதை பிசைந்து தொண்டை அடைத்தது எனக்கு. மனைவி, இரண்டு பிள்ளைகளுடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இவ்வளவு திண்டாட்டமா என்று.
இவ்வளவு துன்பத்திலும், நேர்மையை உடலை வருத்தி வேலை செய்யும் வேலுச்சாமியை எண்ணிப் பெருமிதமாய் இருந்தது.

"இப்ப எல்லாம் ஓ.கே தானே"ன்னு நான், வழக்கமாய் கேட்டு வைப்பதை கேட்டு வைத்தேன்.
"இல்ல தம்பி, இன்னும் வீட்டுக்கு கரெண்ட்டு வரலை. அப்ளிகேஷன் எல்லாம் ஈ.பி காரன் கிட்ட கொடுத்துட்டேன். இழுத்தடிக்கறானுவ. கேட்டா,  வீட்டுக்கு கிட்ட கரெண்ட்டு போஸ்ட்டு இல்லியாம். ரெண்டு போஸ்ட்டு நட்டு கம்பி இழுத்து கொடுக்கணுமாம். மூணாயிரம் ரூவா கொடுங்கராங்க. நான் எங்கப் போவேன் மூணாயிரத்துக்கு?"ன்னு மட மட என்ன பேசினார். அவரின் கண்களைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.
ஈ.பி. காரன் கேட்கும் லஞ்சப் பணம் மூணாயிரம் இவர் கட்டமுடியாதது , இவரின் தவறுபோல் எண்ணி வந்த பேச்சு. 

"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.

"அடப் போங்க தம்பி. இவன் மூணாயிரம் கேக்கறானேன்னு, நம்ம லயன்ஸ் க்ளப்பு நாராயணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. அவரு, என்னப் போய் எலெக்ட்ரிசிட்டி போர்ட்டு AE கிட்ட நேர்ல போயி பேசுங்க, சீக்கிரம் பண்ணிக் கொடுப்பாருன்னாரு. நானும், ரெண்டு மணி நேரம் லைன்ல நின்னு AE யப் பாத்து வெவரத்த சொன்னா, அவரு ஏழாயிரம் கொடுங்க அடுத்த வாரமே முடிச்சிடலாம்னு குண்டை தூக்கிப் போட்டுட்டாரு. அவரு எங்க தெருவுக்கு இது வரைக்கு பதினைஞ்சாயிரம் செலவு பண்ணிட்டாராம். என் கிட்ட வெறும் ஏழாயிரம் தான் கேக்கறாராம்" என்று வேலுச்சாமி சொல்லிக் கொண்டே போனார்.

அவரை இடை மறித்து, "பதினஞ்சாயிரம் AE சொந்தப் பணத்தையா போட்டாருன்னு கேக்க வேண்டியதுதானேண்ணே" என்று மீண்டும் NRI அட்வைஸு கொடுத்தேன்..

"அடப் போங்க தம்பி, அதெல்லாம் நடக்கர காரியமா. இவங்க கேட்டத கொடுக்காம நான் எத்தயாவது எக்கு தப்பா பேசிட்டா, அப்பரம், சாகர வரைக்கும், உபத்ரவம் பண்ணுவானுங்க தம்பி. லைன்மேன் கேட்ட மூவாயிரத்த ஏற்பாடு பண்ணி, வேலைய முடிச்சுக்கணும். தட்டு முட்டு சாமனயெல்லாம் கொண்டு போயி போட்டுட்டேன். இப்ப குடித்தனம் அங்கதான் நடக்குது. நான் வரேன் தம்பி" என்று சொல்லியவாறு  சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார் வேலுச்சாமி.

லஞ்சம், புற்று நோய் மாதிரி விரிந்து பரவிக் கிடக்கிறது நம் சமூகத்தில் என்பது அனைவருக்கு தெரிந்த விஷயமே. ஆனால், அதை களைந்தெடுக்க முழு மூச்சில் எந்த அரசாங்கமும் ஈடு படுவதாய் இல்லை. சாமான்யனுக்கு, 'லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை, என்பது போல், இந்த வழக்கம், பின்னிப் பிணைந்து உள்ளது, அரசாங்க அலுவல்களில்.

நெனச்சுப் பாருங்க, ஒரு சாதாரண மனிதர் வேலுச்சாமி. உழைத்து மட்டுமே வாழ்ந்து வருகிறாரு. சூது வாது தெரியாத குடும்பம். மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில், முழுதாய் கூட சுவர் எழுப்பப்படாத ஓட்டு வீட்டில், மின்சாரக் கனெக்‌ஷன் கூட இல்லாமல், வருங்காலம் இன்னும் என்னென்ன சுமைகளையெல்லாம் தன் தலையின் மேல் ஏற்றப் போகிறதோ என்ற பயத்தில் வாழும் வேலுச்சாமிகளுக்கு, என்றுதான் விடியும்?

அடிப்படைத் தேவைகளை வழங்கும், அரசு எந்திரமாவது, சாமான்யனை வாட்டாமல், நேர்மையாய் இயங்க வேண்டாமா?
வெளிநாடுகளில் இருக்கும் சுலப வாழ்க்கை, நம் மக்களுக்கு என்றுதான் வாய்க்குமோ?

ச! கம்மனாட்டிக்கள்!

Tuesday, February 28, 2012

லக்கிலுக் -aka- யுவகிருஷ்ணாவின் டாப் 5 பதிவுகள்

பொழுதுபோகவில்லை என்றால், டமில்சினிமா.கொம்'க்கு  அடுத்த படியாய், நான் ப்ரவுசரில் தட்டுவது luckylookonline.com என்ற உரலைத் தான். அப்பாலிக்கா, தினகரன், csm-fanaa.blogspot.com, thehindu.com, ndtv.com, news.google.com என பட்டியல் இருக்கும்.

லக்கிலுக் (யுவகிருஷ்ணா) சுவாரஸ்யமான விஷயங்களை, சுவாரஸ்யமாக எழுதுவதில் தேர்ந்தவர். பொழுதுபோக்கு விஷயங்கள் மட்டுமல்லாமல், புதிய தலைமுறைக்காக எழுதப்படும் நல்ல கருத்துக்களும், மாறி மாறி வருவது, அவர் பக்கத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை அப்படியே தக்க வைத்துள்ளது. எப்ப உரலைத் தட்டினாலும், ஏதாவது புதிய மேட்டர் மினிமம் கேரண்ட்டியுடன் வாசிப்புக்கு ரெடியாக இருக்கும்.

ப்ளாகர் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் டாப்பு பதிவுகளை கண்டறியலாம் என்று பதிந்தபோது, அவரின் டாப்பு 5 பதிவுகளாய் இவற்றைத் தெரிவித்திருந்தார். 1/5 விகிதாச்சாரத்தில், கில்ஃபான்ஸும், நல்ல மேட்டரும் டாப்பில் இருப்பது அவர் பிழையல்ல, அது நமது மன வக்கிரத்தின், அளவுகோல் :)

லக்கி, படிப்படியா, எங்கேயோ போயிக்கிட்டு இருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.

சவிதா அண்ணி!
Aug 27, 2009, 32 comments
43,419 Pageviews

நடுநிசி நாய்கள்!
Feb 19, 2011, 53 comments
12,447 Pageviews

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!
Sep 5, 2011, 77 comments
11,404 Pageviews

ஷகீலா
Jul 25, 2009, 6 comments
7,910 Pageviews

சரோஜா தேவி!
Jan 1, 2011, 51 comments
5,745 Pageviews