சின்ன வயசுல, பழைய சிவாஜி சாவித்ரி படம் எல்லாம் தூர்தர்ஷன்ல போடும்போது, அதப் பாத்து அழரவங்கள பாத்தா சிரிப்புதான் வரும்.
ரொம்ப இளகிய மனம் உள்ளவர்கள் தான் ஒரு சினிமாவில் வரும் துக்கத்துக்கு அழுவாங்கன்னு நெனைக்கறேன்.
என்னுது ரொம்ப ஸ்ட்ராங் ஹார்ட்டு.
சினிமாவ ரொம்ப ஈடுபாட்டோட பாப்பேன், ஆனா, அழரதெல்லாம் கெடையாது.
சமீப காலத்தில் வந்த படங்களில், லேசா மனதை பதறவைத்த படம் என்று மகாநதியைச் சொல்லலாம். மூன்றாம் பிறையிலும் சோகம் அதிகம், ஆனா என்னை பாதிக்கல. ஆங்கிலத்தில், Saving Private Ryanன் கடைசி 10 நிமிடங்கள் அழுகையின் விளிம்புக்குத் தள்ளியதென்று சொல்லலாம்.
சின்ன வயசுல பாத்ததுல சாரதா, ஏ.வி.எம். ராஜா படம் நினைவுக்கு வருது (துலாபாரம்). வறுமையின் கொடுமையால், தன் குழந்தைகளை தானே கொல்லும் ஒரு தாயின் கதை. ஆனா, ஏ.வி.எம் ராஜாவின் ஓவர் ஏக்டிங்கால், அந்த சோகத்தின் எஃபெக்டு கம்மியா இருந்தது.
"பூஞ்சிட்டு கன்னங்கள், பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"
என்ற அருமையான பாடலை, ஏ.வி.எம் ராஜா, உதட்டைக் குவித்து குவித்து பாடுவது இப்ப நெனச்சாலும் காமெடியாதான் இருக்கு :)
சமீப காலமாய் இரானிய மொழிப்படங்களில் பெரிய ஈர்ப்பு எனக்கு. இங்குள்ள லைப்ரரியில் சிறந்த படங்கள் வரிசையா அடுக்கி வச்சிருக்கரதும் ஓரு காரணம்னு நெனைக்கறேன்.
இதுவரைக்கும் ஒரு பத்து இரானியப் படங்கள் பாத்துருப்பேன். எல்லாத்திலும் ஏதாவது ஒரு சோகம் இருந்தது. ஆனா, அழவைக்கல.
சரி, அப்ப எதுதான்யா அழவச்சது உன்னன்னு கேக்கறீங்களா? மேட்டருக்கு வரேன்.
கடந்த வாரம் காணக் கிடைத்த ஒரு மலையாளப் படம் அது. Sibi Malayilனு ஒரு டைரக்டரோட படம் அது. நம்ம விக்ரம் ஒரு பேட்டீல , சிபி மலையில் படத்துல நடிக்கரது தன்னோட ஆசைன்னு சொல்லியிருந்தாரு. இவர் படங்களில், இதயத்தில் ஊசி கொண்டு சொருகுவதைப் போல் ஒரு சோகத்தின் வலி இருக்கும்னு அந்த பேட்டீல படிச்ச ஞாபகம்.
அந்த பேட்டி படிச்சதும், Spencersல் சிபி மலையில் படம் ஒண்ணு (மம்மூட்டி நடித்த தனியாவர்தனம்) வாங்கிப் பாத்தேன். இதயத்தில் ஊசி குத்தத்தான் செய்தது. ஆனா, அழல. அந்த படத்த பத்தி தனிப்பதிவு அப்பறமா போடறேன்.
போன வாரம், ஷாப்பிங் பண்ணும் போது, $10க்கு வாங்கினா ஒரு DVD இனாம்னாங்க. DVD ஆல்பம் மேயும்போது, சிபி மலையில் கண்ணில் பட்டார்.
அட்டையில் நம்ம மாதவியும், டும்டும்டும்மில் நடித்த முரளியும்.
படத்தின் பெயர்: ஆகாசத் தூது
எண்பதுகளில் வந்த படம்.

அநாதைகளான முரளியும், மாதவியும் அநாதை இல்லத்தை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். நான்கு க்யூட் குழந்தைளும் பெறுவர்.
ஒரு கைக்குழந்தை, 6 வயசுப் பையன் (போலியாவால் பாதிக்கப்பட்டவன்), 8 வயசுல ஒரு பையன், 10 வயசுல ஒரு பொண்ணு.
முத்தான குழந்தைகளுடன் பாசம் பிணைந்த வாழ்க்கை.
மாதவி, ம்யூசிக் டீச்சர். முரளி காட்டுல ஏதோ எஸ்டேட்ல ட்ரைவர் வேலை.
முரளிக்கு குடிப் பழக்கம். தினமும் இரவு குடித்துவிட்டு வீட்டிர்க்கு வருவது, குடியில் சம்பாதித்தை இழந்து, சொந்த வீடு கட்ட முடியாமல் தவிப்பது என்று படத்தின் முதல் பாதி சாதாரணமாகவே சென்றது.
குழந்தைகளின் மீது அதிக பாசம் முரளிக்கும், மாதவிக்கும். குடிப்பழக்கத்தை விட்டு விட எவ்வளவோ முயற்சி செய்தும், முரளியால் விடமுடியவில்லை.
இடையில் முளைக்கும் ஒரு வில்லனால் சில ப்ரச்சனைகள்.
முரளி இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் வந்து மாதவியிடம் தவறாக நடக்க நினைக்கும் வில்லனை, பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டுகிறார்கள்.
கோபம் அடைந்த வில்லன், இரண்டாம் மகனின் மீது வேனால் இடித்து விடுகிறான்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப் படும் மகனுக்கு இரத்தம் தேவைப் பட தன் இரத்தத்தைக் கொடுக்கிறாள் மாதவி.
இரத்தத்தை பரிசோதித்த டாக்டர், மாதவிக்கு புற்றுநோய் இருப்பதைக் கூறுகிறார்.
வெளியூரிலிருந்து திரும்பி வந்த முரளி, வில்லனை நையப் புடைக்கிறான்.
மாதவிக்கு புற்று நோய் இருப்பதை அறிந்ததும் துடித்துப் போகிறான்.
இனி குடிப்பதில்லை, மாதவி உயிருடன் இருக்கும் வரை சந்தோஷமாக வைத்திருப்பதாகக் கூறி அவ்வாறே நடந்து வருகிறான்.
இது எதுவும் அறியாத குழந்தைகளூம் தந்தை திருந்தியதில் குதூகலமடைந்து, எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க.
அடிபட்ட வில்லன் சும்மா இருப்பானா? திரும்ப வந்துட்டான் நிம்மதிய கெடுக்க.
முரளிக்கும் வில்லனுக்கும் நடந்த கைகலப்பில், வில்லன் முரளியைக் கொன்றுவிடுகிறான்.
மாதவிக்கு இச்செய்தி இடியாக விழுகிறது.
புற்றுநோயினால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது, கணவனையும் இழந்தது பெரும் சோகத்தைச் சேர்க்கிறது.
அநாதையான மாதவிக்கு, தனக்குப் பின்னர் தன் குழந்தைகள் அநாதையாகிவிடுமே என்று பெரிய கவலை.
ஏழ்மையில் இருக்கும் அவளுக்கு வேறு வழி தெரியாமல், தான் வளர்ந்த அநாதை விடுதிக்குச் சென்று, தன் குழந்தைகளுக்கு ஏதாவது சீக்கிரம் நல்ல வழி அமைக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
குழந்தைகளை அநாதை விடுதியில் சேர்க்க அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. அநாதை விடுதியில் தான் வாழ்ந்த கஷ்ட வாழ்வை தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணுகிறாள்.
பிள்ளைகளை பேசாமல், தத்துக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து குழந்தை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்களைத் தேடச் சொல்கிறாள்.
கைக்குழந்தையை ஒரு டாக்டர் தம்பதியனர் பெற்றுக் கொள்கின்றனர்.
குழந்தையை விட்டுப் பிரியும் அந்த காட்சிகள், மனதை அறுக்கும் ரகம்.
மூன்றாம் மகன், இளையவனிடம் பாசம் கொண்டவன். இவர்கள் இருவரையும் சேர்த்தே ஒரு குடும்பத்துக்குக் கொடுக்கவேண்டும் என்று மாதவி விரும்புவாள். ஆனால், போலியோவால் பாதிக்கப் பட்டவனை தத்து எடுத்துக் கொள்ள முன்வராததால், இரண்டாம் மகனை மட்டும் ஒரு குடும்பத்தாருக்கு கொடுத்துவிடுவாள்.
போலியோவால் பாதிக்கப் பட்ட சிறுவன், அண்ணனை பிரியும் காட்சியும் நெகிழச் செய்தது.
மூத்த மகளுக்கும் ஒரு வயோதிக தம்பதியர் ஆதரவு கொடுத்து கூட்டிச் செல்வார்கள்.
போலியோவால் பாதிக்கப் பட்டவனுக்கு மட்டும் யாரும் ஆதரவு தராத நிலையில், மாதவியின் நோய் முற்றிக் கொண்டே வரும்.
தனது வாழ்நாள் அதிகம் இல்லை என்றுணர்ந்த மாதவி, அந்த வருடக் க்ருஸ்மஸுக்கு தன் பிள்ளைகள் அனைவரையும் வீட்டுக்கு வரவழைத்து ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ஆசை.
எல்லாருக்கும் அழைப்புகள் விடுத்து, குழந்தைகளுக்காக காத்திருக்கிறாள்.
க்ருஸ்மஸுக்கு முந்தின இரவு, நோய் முற்றி, இறந்து விடுகிறாள்.
தனிமையில் மூன்றாம் மகன் தவித்து நிற்கிறான். க்ருஸ்மஸுக்கு தாயைக் காண ஓடோடி வரும் மற்ற குழந்தைகள், தாயின் சடலத்தைப் பார்த்து அழும் காட்சிகள், அப்பப்பா நெஞ்சை அறுக்கும் ரகம்.
சடங்குகள் எல்லாம் முடிந்ததும், தத்தெடுத்தவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். இனி மறுபடியும் காண்போமா மாட்டோமா என்ற ஏக்கத்தில் அந்த குழந்தைகள் ஒருவருக்கொருவர் கையசைத்த படி விடைகொடுப்பார்கள்.
எல்லாரும் சென்றதும், மூன்றாம் மகன் தனந்தனியனாக கையசைத்த படி அழுது கொண்டே இருப்பான்.
அம்மாடியோவ், இந்த விஷுவல் மீடியாவுக்குத் தான் என்ன சக்தி, இனம் புரியா வேதனையை மனதில் படரச் செய்யும் அந்த காட்சி.
நெஞ்சு முழுவதும் கனம்.
படத்தை அப்படியே முடித்திருந்தால், ஒரு பத்து நாள் சாப்பாடு எறங்கியிருக்காது.
இவ்வளவு சோகத்திலும், டைரக்ட்டர் ஒரு சின்ன சந்தோஷம் தர விரும்பினாரோ என்னமோ, கடைசியில், இரண்டாம் மகனை தத்தெடுத்த தம்பதியர், திரும்ப வந்து, அழுது கொண்டிருக்கும் (போலியோ) மகனை, தங்களுடன் அழைத்துச் செல்வார்கள்.
ஆகாசத் தூது. பார்க்க வேண்டிய படம்.
அநாதைச் சிறுவர்கள் எல்லாம் மிக மிகப் பாவம் என்பதை நெஞ்சில் ஆணியடித்துக் கூறிய படம்.
Hats off to Sibi Malayil!
நீங்க பாத்த படங்களில் உங்களை அழவைத்த படத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.
நான் தொடர் விளையாடக் கூப்பிட்டா ஒரு பயலும் வரமாட்டறீங்க ;)
கவுஜ எழுதுங்க மக்களே. தலைப்பு இதுதான். "
சீ.. நீ எனக்கு வேண்டாமடா"
;)
பி.கு: இணையத்தில் உலவும் சைக்கோக்களை எதிர்க்க புரிந்துணர்வுடனான உங்கள் ஒத்துழைப்பை நல்க வலதுபுர சைக்கோவை க்ளிக்குங்கள் :)
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்" - எனக்கு மிகவும் பிடித்த குறள்.
நன்னயம் என்னா செய்யறதுன்னுதான் தெரியல.
பொது மன்னிப்புக் கேட்டு, சகலத்தையும் சலவை செய்தால், நன்னயம் செய்ய முயற்சிக்கலாம் ;)
surveysan2005 at yahoo.com.