recent posts...

Showing posts with label tamil cinema top 10 தமிழ் சினிமா சிறந்த பத்து படங்கள் 2010. Show all posts
Showing posts with label tamil cinema top 10 தமிழ் சினிமா சிறந்த பத்து படங்கள் 2010. Show all posts

Sunday, December 05, 2010

தமிழ் சினிமா - 2010ன் டாப்10 படங்கள்

2010ல் நான் பார்த்த படங்களின், நினைவில் இருந்து, இந்த டாப்10 வரிசை.
நீங்க பார்த்த 2010 படங்களை தராசில் போட்டு, உங்க தரவரிசையை கொமெண்ட்டாகவோ, புதுப் பதிவாகவோ, அரங்கேத்தவும். கடைசியா எல்லார் டாப் 10ஐயும் கலந்து, ஒரு பெரிய சர்வே போட்டு, பதிவுலகின் டாப்10ஐ தேர்ந்தெடுக்கலாம். ஸ்டார்ட் மீஜிக்.

எனது டாப்10 வரிசை இதுதான்.

1) மைனா
ரொம்பவே வியக்க வைத்த படம். நந்தலாலா பார்த்த பிறகு இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். திகட்ட திகட்ட இனிப்பை சாப்பிட்டு நாயர் கடையின் டபுள் ஸ்ட்ராங்க் ஸ்பெஷல் சாய் குடிச்சாலும், சாயா இனிப்பா தெரியாது. வெத்தா சுவைக்கும். ஆனா, நந்தலாலா என்ற ப்ரமாதமான படத்தின் காட்சிகள் நினைவில் தேங்கி நிற்கும்போதே, மைனா அதையும் தாண்டி ரொம்பவே இனித்தது. ஆரம்ப காட்சியில் இருந்து, விறு விறு விறு வென, அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொரு படி மேல் பயணித்து, உச்சத்தை அடையும் க்ளைமாக்ஸ்.

பச்சைப் பசேல் தமிழ் நாடு. தாய் தந்தையை அடிக்கும் ஹீரோ. தாயை அடிக்கும் ஹீரோயின். ஹீரோயினை வெட்ட வரும் தாய், நல்ல போலீஸ், கெட்ட போலீஸ், கொடூர மனைவி, இனிமையான இசை, மிகவும் யதார்த்தமான நடிப்பு என்று ரவுண்டு கட்டி அடித்த படம்.

புதுமுகம் அமலா ஒரு பெரிய ரவுண்டு வருவார். பார்வையாலேயே மொத்த நடிப்பையும் நடிச்சு முடிச்சுடறாங்க. அற்புதம்.

இயக்குனர், பிரபு சாலமனுக்கு பெரிய வாழ்த்துக்களும், hats offம்.

2) நந்தலாலா
ஏற்கனவே அலசித் தள்ளியாச்சு. (விமர்சனம், vs கிக்குஜீரோ, மிஷ்கினின் விளக்கம்)
Undoubtedly, a classic presentation. தமிழகத்தின் சில ஊரை மகேஷின் ஒளிப்பதிவில் காண்பதற்கே படத்தை பத்து தடவை பார்க்கலாம்.

3)விண்ணைத் தாண்டி வருவாயா
கவித்துமான திரைப்படம். அடக்கி வாசித்த சிம்பு, முதல் முறை பல புதிய ரசிகர்களை தக்க வைத்துக் கொண்ட படம். கௌதம் மேனனின் வசீகரிக்கும் மூவி மேக்கிங்கில் இன்னொரு பிரகாசமான நட்சத்திரம். ஸ்டைலான திரிஷா, வயதானாலும் தான் தான் டாப்பு என்று நிரூபித்த படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளேன் ஐயா, நீண்ட நாளுக்குப் பிறகு தமிழில் சொன்ன படம். பாடல்கள் பலவும் 'லவுட்டப்' பட்டிருந்தாலும், ஒவ்வொன்றும் இனிமையான இசை விருந்து.
திரை அரங்கில் பலறையும் சில நேரம் தூங்க வைக்கும், இழுவைக் காட்சிகள் சில இருந்தாலும், எள வயதினருக்கு, ரம்யமான பொழுது போக்குப் படமாக அமைந்தது.

4) வம்சம்
"எப்பாடு பட்டாவது பிற்பாடு கொடாதவர்" என்று ஒரு குடும்பத்தின் பெயர். இன்னும் நினைவில் இருக்கு. மண்மணம் மிக்க அற்புதமான படங்கள் 2010ல் பலப் பல வலம் வந்தது. வம்சம், அதில் முன்னணியில். கிராமத்து ஹீரோவும், ஹீரோயினும், செல்ஃபோனில் பேசிக் கொள்ளும் காட்சிகள் குபீர் சிரிப்பு.
பகை தீர்க்க வரும் ரவுடி கோஷ்டியிடம் இருந்து தப்பி ஓடும் ஹீரோ, திருவிழாவில் பழி தீர்த்துக்க் கொள்ளும் பங்காளி பகையாளிகளின் பன்றி இறைச்சி ஃப்ரையும் காட்சிகள் என்று, பல ருசிகர காட்சிகள் நிறைந்த பொழுது போக்குப் படம். தூள்!


5) எந்திரன்
ரொம்பவே அலசித் தீத்துட்டோம் இதை.
லூஸ்ல விட்டுடறேன், இம்முறை.

6) களவாணி
"என் புள்ளைக்கு நேரம் சரியில்லை. இன்னும் கொஞ்ச மாசத்துல டாப்புல போயிறுவான் டாப்புல"ன்னு சரண்யா தன் பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், "என்னைய கட்டிக்கறேன்னு சொல்லு"ன்னு லடாய் பண்ணும் வெட்டி ஆஃபீஸர் ஹீரோவும், ரொம்பவே அழகான ஹீரோயின் ஓவியாவும், படத்தின் பலம்.
தீராப் பகை ஹீரோயின் அண்ணனுக்கும், ஹீரோவுக்கும். ஆனா, வெட்டு குத்துன்னு களேபரம் பண்ணாம, காமெடியாக நகரும் படத்தின் அமைப்பு பிரமாதம். எம்புட்டு தடவ வேணும்னாலும் பாக்கலாம் என்கிற லைட் காமெடி. கஞ்சா கருப்புவும் நல்லாவே பண்ணியிருந்தாரு.

7) பாஸ் என்கிற பாஸ்கரன்
தமிழ் திரப்படத்தை பொரட்டிப் போடும் படமெல்லாம் இல்லை. ஆனா, கொடுத்த காசுக்கு, மனசை லேசாக்கும் சூப்பர் டைமிங் காமெடி நிறைந்த படம். வடிவேலு, விவேக்கெல்லாம் சற்றே சலிக்கத் துவங்கிய வருடத்தில், சந்தானம், பக்காவாக அந்த இடத்தை ஆக்ரமிக்க ஆரம்பித்துள்ளார். ஆர்யாவுக்கும் டைமிங் காமெடி நன்றாகவே வருகிறது.

8) அனந்தபுரத்து வீடு
திகில் படம் தமிழுலகம் பலப் பல கண்டுள்ளது. ஆனா, நல்ல பேய் இருக்கும் படம் எந்தப் பட உலகமும் கண்டிராதது. மகனைக் காக்கும், தாய் தந்தை ஆவீஸின், பாசமான திகில் காட்சிகள். படத்தில் வரும் வீடு ரொம்பவே அழகு. வீட்டுக்கு பின்னால் உள்ள குளம். அந்த மாதிரி ஒரு வீடு எங்க இருக்கும் என்ற ஏங்க வைத்த 'அழகியல்' படத்தில்.
வித்யாசமான கதை அமைப்பை அரங்கேற்றியதற்காக இது இந்த இடத்தில். ஹீரோ நந்தா நல்ல நடிகர். தமிழுலகம் அவரை நல்லா பயன்படுத்திக்கணும்.

9) மதராஸப் பட்டினம்
லகான் டோனில் ஒரு படம். அங்கிங்கு தொய்வாக நகர்ந்தாலும், புதிய முயற்சிக்காக இந்த லிஸ்ட்டில். பாடல்கள் நன்றாய் இருந்தன. ஆர்யாவின் நடிப்பு. சினிமாட்டாகிரோஃபி. அழகியல், நாசர், எல்லாம் பக்கபலம்.

10) அங்காடித் தெரு - ரங்கநாதன் தெருவின் அண்ணாச்சிகளின் கீழ் ஆட்டிப் படைக்கப்படும் இளைஞர்/இளைஞிகளின் அடிமை வாழ்க்கையை முகத்தில் அறைந்தார் போல் காட்டப் பட்ட படம். ஆனால், எல்லாரையும் அழுது மூக்கு சிந்த வைக்கணும்னு கங்கணம் கட்டி எடுக்கப்பட்டது போல், சோகம் ஓவர் டோஸாகிப் போனதுதான் சோகம். ஹீரோ, ஹீரோயின் நடிப்பு பளீரென பிரகாசித்தது. பாடல்கள் சூப்பர், குறிப்பா "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை"

பெஷல் மென்ஷன்: தமிழ்படம்
Spoof படங்களுக்கு ஹாலிவுட்டையே எதிர்பார்த்திருந்த நமக்கு ஒரு interesting twist இந்த தமிழ்ப்படம். ஆரம்ப முயற்சியே ஓரளவுக்கு நன்றாய் வந்திருந்தது. இனி பலப் படங்கள் வந்து குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம் தர புள்ளையார் சுழி போட்ட கூட்டத்துக்குத்தான் நன்றி சொல்லணும். இப்ப யோசிச்சுப் பாத்தா, படத்தின் எந்தக் காட்சியும் நினைவில் இல்லை. ஆனா, ஹீரோ சிவாவுடன் சேர்ந்து கொண்டு டகால்ஜி பண்ணும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வெ.மூர்த்தியும், பாஸ்கரும், மனோபாலாவும் படத்துக்கு பெரிய பலம்.

இதைத் தவிர நினைவில் நிற்கும் மற்ற நல்ல படங்கள்,
மந்திரப் புன்னகை - வித்யாசமான முயற்சி. ஹீரோவாக இயக்குனரே அறிமுகமான துரதிர்ஷ்டத்தின் தொடர்ச்சி இதிலிருந்தாலும், ஹிரோ நல்ல ஃபிட் அந்த கதாபாத்திரத்துக்கு.
கதை - இதுவும், புதுமையான கதை, தமிழுக்கு. பிரபலமான ஹீரோ இல்லாமல் புதுமுகத்தைப் போட்டதால், படரவில்லை.

ரொம்பவே எதிர்பார்த்து, பெரிதாய் பல்பு வாங்கிய படம்:
இராவணன் - நொந்து நூடுல்ஸ் ஆகச் செய்தது. தமிழகத்தை விட்டு விலகி விலகி, இந்திக்கு படம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து சறுக்கிக் கொண்டே இருக்கிறார் மணி. 2011 உருப்படியான பழைய மணிரத்னத்தை நமக்கு தரவேண்டும்.
ஆயிரத்தில் ஒருவன் - கதறக் கதறக் கொடுமை படுத்திய படம். சோழ வரலாற்றிலே ஒரு ஃபிக்ஷனை பிசைந்து டரியல் செய்த செல்வராகவனை எவ்ளோ குட்டினாலும் தகும். செல்வராகவன், ஒரு நல்ல படைப்பாளி என்பதில் ஐயமே இல்லை. இந்த மாதிரி புதிய முயற்சி முயல்வதும், டமில் படத்துக்கு நல்லதே. முயற்சிகள் எல்லாம் மெருகேறி மெருகேறி உன்னதப் படைப்பு வரும் வரை, டரியலை பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். பொறுத்துக் கொள்வோம்.

பி.கு: 2010ல் வெளிவந்த படங்களை இங்கே கட்டம் கட்டி போட்டிருக்காங்க - Tamilcinema.com (site has popups and may also have spyware. beware)