recent posts...

Showing posts with label ponniyin selvan nut shell. Show all posts
Showing posts with label ponniyin selvan nut shell. Show all posts

Monday, July 27, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 4

மூன்றாம் பாகம் முடிச்சு பத்தே நாள்ள நாலாம் பாகம் படிச்சு முடிச்சாச்சு. இதுக்கு இரண்டு காரணம் இருக்கு. ஒண்ணு, ஆதித்ய கரிகாலர் கடம்பூருக்கு 'வில்லன்ஸ்' இருக்குமிடத்துக்கு வருகை தரும் அத்யாயங்கள் இதிலிருக்கு. இன்னொண்ணு, இது குட்டி வால்யூம். 335 பக்கங்கள் தான். ஸ்கூல்ல எல்லா புத்தகங்களும் இத்துனூண்டு இருந்தா, சுலபமா கரச்சு குடிச்சு, நல்ல மார்க் வாங்கியிருந்திருப்பேன். ஹ்ம்! மிஸ் ஆயிடுச்சு ;)

வழக்கம் போல, காவிரி பற்றிய வர்ணனைகளும், தமிழகத்தின் பண்டைய கால செழிப்பும் படிக்க படிக்க பெரிய பெருமூச்சு வருது. இதெல்லாம் மெய்யா? இல்லை, கல்கி மிகைப் படுத்தி சொல்றாரான்னு தெரியல்ல. கண்டிப்பா த.நாடு இப்படியெல்லாம் இருந்திருக்கும். நாமதான் வாழையடி வாழையா, நதியில் மணல் சுரண்டியும், மரங்களை அழித்தும், நாட்டை டோட்டல் டாமேஜ் பண்ணிட்டோம். ஹ்ம்!

இனி பாகம்4 நட் ஷெல் பாப்போம்:

ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவழைத்து கொல்ல வேண்டும்னு, போன பாகத்தில் நந்தினி&கோ ப்ளான் போட்டதை பாத்தோம். ஆதித்த கரிகாலரும், நந்தினியின் ஓலை வந்ததும், மறு பேச்சு இல்லாம, ஒடனே பொறப்பட்டு வராரு. குந்தவையின் ஓலையை கொண்டு போய் வந்தியத் தேவன் ஆதித்யரை கடம்பூருக்கு போகவேணாம்னு சொல்லியும் கேக்காம அவரு கடம்பூருக்குப் போறாரு.
இதுவரை, பெரிய வீராதி வீரனாய், சித்தரிக்கப்பட்டு வந்த ஆதித்யர், இந்த எப்பிஸோடில், கொஞ்சம் மறை கழண்டவர் மாதிரி காட்டப்பட்டிருக்காரு. ஓவரா, கோபம் வருவதும், சில நேரம் விசித்திரமா நடந்துக்கர மாதிரியும் சில காட்சிகள்.
கடம்பூர் அரண்மனைக்கு வந்தியத்தேவன், பார்த்திபேந்திர பல்லவன், ஆகியோருடன், கோலாகலமா வந்து சேற்றாரு.

இதற்கிடையில் நந்தினி, பெரிய பழுவேட்டரையர், மற்ற 'வில்லன்ஸ்' எல்லோரும் கடம்பூருக்கு வந்துடறாங்க. நந்தினியின் அந்தப்புரத்துக்குள் நுழைய ஒரு சுரங்கப் பாதை இருப்பதை வந்தியத் தேவனுக்கு தெரிய வருது. அதில் 'பாண்டிய' வில்லன்ஸ் புகுந்து செல்வதையும் கண்டு பிடிக்கிறான். கடம்பூ சம்புவராயர் மகள் மணிமேகலையையும் பாக்கறான்.
மணிமேகலையை ஆதித்யருக்கு திருமணம் செய்து வைத்து, சோழ நாட்டை ரெண்டா பிரிச்சு, ஒண்ணு ஆதித்யனுக்கும், இன்னொண்ணு மதுராந்தகனுக்கும் கொடுக்கணும்னு 'வில்லன்ஸின்' ப்ளான்.

நந்தினிக்கு, ஆதித்யரை அங்கே வந்ததும், போட்டு தள்ளணும்னு ப்ளான்.

ஆதித்யர் வந்ததும், இவர்களின் ப்ளான் எல்லாம் ஓரளவுக்கு தனக்கு வந்தியத் தேவன் மூலம் தெரியா வருவதால் எல்லாரையும் நையாண்டி பேச்சால் தெணற வைக்கறாரு. எல்லாரும் சேந்து சதித்திட்டம் போடராப்பல இருக்கேன்ற ரேஞ்சுல வாயப் புடுங்கறாரு.

சில நேரங்களில், பெரிய பழுவேட்டரையர், ஆதித்யரிடம், தான் இருக்கும் வரை, ஆதித்யருக்கு ஒன்றும் நேராதுன்னு சொல்றாரு. பெரிய பழுவேட்டரையர், 'வில்லன்' இல்லை என்ற ரீதியில் ஒரு எண்ணம் எழுகிறது.
ஆதித்யரும், திடீர்னு, தனக்கு அரசாளும் எண்ணம் இல்லை. சோழ நாட்டை பிரிக்கக் கூடாது, மொத்தமும் மதுராந்தகன் ஆளட்டும், தனக்கு கொஞ்சம் பணமும், படையும் கொடுத்தால் மட்டும் போதும். தான் வடக்கே போர் தொடுத்து சோழ நாட்டை விரிவடையச் செய்வதே லட்சியம்னு சொல்றாரு.

இந்த விஷயம் நல்லாருக்கேன்னு எல்லாரும் நெனச்சு, பெரிய பழுவேட்டரயரை, தஞ்சை சென்று, மதுராந்தகனை கூட்டிக்கிட்டு வரச் சொல்றாங்க. அவரும், நந்தினியை அரை மனசா விட்டுட்டு கெளம்பராரு.

இதற்கிடையில், முதல் மந்திரி அநிருத்தர், ஈழத்தில் இருந்த 'ஊமை' ராணியை (நந்தினியின் அம்மா?) தஞ்சைக்கு கடத்திக்கிட்டு வரச் சொல்றாரு. சக்கரவர்த்திகிட்ட இவங்கள காமிச்சு அவரின் கலக்கத்தை போக்கணும் நெனப்பு. ஆனா, வரும் வழியில், ஊமை ராணி எஸ்கேப் ஆகி, அந்த இடத்தில் பூங்குழலியை ஒக்கார வச்சுடறாங்க. எஸ்கேப் ஆனவங்க அங்க இங்க ஓடிப் போய், தஞ்சை அரண்மனையில் இருக்கும் சுரங்கப் பாதை வழியாக சக்ரவர்த்தி இருக்கர எடத்த பாக்கறாங்க. சுரங்கப் பாதையில், பாண்டி வில்லன்ஸ், சக்ரவர்த்தியை போட்டுத்தள்ள ப்ளான் போடரதும் பாக்கறாங்க.
இவங்களும், பூங்குழலியும், குந்தவையும், அநிருத்தரும் சேந்து சக்ரவர்த்தியை பாக்கறாங்க.
சக்ரவர்த்தி, ஊமை ராணியை பாத்ததும் சந்தோஷப் படுவாருன்னு பாத்தா, சலிப்புதான் அடையறாரு. அது என்ன வில்லங்கமோ புரியல்ல.
ஊமை ராணி இறந்து விட்டதாய் தான் இவ்வளவு காலம் எண்ணியிருந்ததும், அதற்கு தான் தான் காரணம் என்ற எண்ணமே சுந்தரரை வாட்டி எடுத்து நோய்வாய் படுத்தியது.

எந்த நேரம் வேணும்னாலும், எல்லா டீமுக்கும் இடையில் போர் வெடிக்கும் அபாயம் இருக்குன்னு தெரிய வருது. சதித் திட்டம், எல்லாத்துக்கும் முடிவு கட்டணும். மதுராந்தகனுக்கு ஞாயமாய் கிட்ட வேண்டிய அரசாளும் உரிமையை கொடுக்கணும். பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மரை பாக்கணும், ஆதித்யரையும் தஞ்சை வரவைக்கணும். எல்லாத்தையும் எல்லாருக்கும் எடுத்து சொல்லி, சுமுகமா தீக்கணும்னு, சுந்தரர், எல்லாரையும் தஞ்சைக்கு வரவழைக்க, எல்லா சைடுக்கும் தூது அனுப்பறாரு.

கடம்பூர் அரண்மனையில், ஆதித்யரும், வந்தியத்தேவனும் வேட்டைக்குச் சென்று திரும்பும் போது, எதேச்சையாக நந்தினியையும் மணிமேகலையையும் பாக்கறாங்க.
நந்தினியிடம் ஆதித்யர், பழைய கதையெல்லாம் சொல்லி, தான் பாண்டிய மன்னனின் (நந்தினியின் காதலர்/கணவர்) தலையை வெட்டியதுக்கு மன்னிப்புக் கேக்கறாரு.

அதைத் தவிர, நந்தினி தன் அக்காள் என்றும், தன் தந்தையின் ஃப்ளாஷ் பேக்கில், ஒரு ஊமைப் பெண் இருந்ததையும், அவர்களின் பெண்தான் நந்தினி என்றும் சொல்றாரு.

இன்னாடா, இவ்ளோ ஒப்பனா சொல்லிட்டாரே, கதை சுபமா முடிஞ்சிடுமோன்னு ஒரு கலக்கம் வந்துது. ஆனா, இதைக் கேட்டதும், நந்தினி ஒரு தடாலடி சொல்வாங்க பாரூங்க, அதை படிச்சதும், கதை ஆயிரம் மைல் வேகத்தில் திரும்ப பிக் அப் ஆயிடுச்சு.
குறிப்பா, இதுக்கு முன்னால் இடம்பெறும் பல சம்பவங்களும் நந்தினியின் இந்த திடீர் பல்ட்டியால் அவிழ்ந்த முடிச்சுகள் எல்லாம் சரக் சரக்னு மாட்டிக்குது.

அதாகப்பட்டது, ஆதித்யர் சொன்ன, 'அக்கா செண்டிமெண்ட்டை' கேட்டு நந்தினி இன்னா சொல்றாங்கன்னா, வந்தியத்தேவன் சொல்றதையெல்லாம் நம்பாத, அவன் பயங்கரமான ஏமாத்துக்காரன், புருடா விடறான். அவன் எனக்கே ரூட் விடப் பாத்தவன். நீ வேணும்னா, நடு ஜாமத்தில் அந்தப்புரம் வந்து பாரு, வந்தியத் தேவனின் உண்மை சொரூபம் தெரியும்னு அவுத்து விடறாங்க.
இதுக்கு முந்தைய சீன்லதான், வந்தியத் தேவனிடம், ஏதோ மேட்டர் பேசணும் நடு ஜாமத்தில் அந்தப்புரம் வான்னு தனியா சொல்லியிருந்தா நந்தினி.

இதுக்கெல்லாம் சிகரம் வச்ச மாதிரி கல்கியும், நந்தினி இப்படி ப்ளான் போடறாளேன்னு யாரும் அதிர்ச்சி அடையாதீங்க. சின்ன வயசுலேருந்து ஏமாற்றமே சந்திச்சு பல கஷ்டங்களுக்கு இடையில் வளந்த பொண்ணு. ஸோ, அவளுக்கு இப்படி பழிவாங்கணும்னு தோணறது ஞாயம்தானேன்னு எடுத்து வுடறாரு.

ஸோ, இதையும் அதையும் முடிச்சு போட்டு பாத்தா, கன்னா பின்னான்னு ஏதோ நடக்கப் போவதுன்னு தெரியுது.

சக்ரவர்த்தியை கொல்ல சுரங்கப் பாதையில் காத்திருக்கும் பாண்டிய வில்லன் ஒரு பக்கம்;
ஆதித்யரை கொல்ல நந்தினி ஒரு பக்கம்;
அருள்மொழியை கொல்ல வேறு ஏதோ ஒரு ப்ளான்;

இப்படி மொத்த சோழ சாம்பராஜ்யத்தையும் அப்புரப்படுத்துவதாக, பாண்டிய 'வில்லன்' ரவிதாஸன் வேர அப்பப்ப சொல்லிக்கிட்டே இருக்கான். அதுவும், வரும் வெள்ளியன்று இரவில், மூணுமே ஒரே நேரத்தில் நடக்குமாம்.

கடைசி பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி,
-சர்வேசன்

கீழிருக்கும் படத்திலிருப்பது குந்தவைன்னு, வந்தியத் தேவனே சென்ற பதிவில் சொல்லிட்டாரு. சரியாய் தானிருக்கும். :)

சரி, பேக்ரவுண்டில் இருப்பவர் யார்? ஆதித்யரா? வந்தியா? வயசான பழுவேட்டரையரா??

Thursday, July 16, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 3

இரண்டாம் பாகம் படிச்சு முடிச்சு நட் ஷெல் எழுதி, ஒரு மாசம் முடிவதற்குள் ஒரு வழியா மூன்றாம் பாகம் படிச்சு முடிச்சாச்சு.
இந்த பாகம், முந்தைய இரண்டு பாகங்களை விட விறு விறுன்னு பயணித்தது. பல நேரங்களில், ஒரு சினிமா பாக்கர மாதிரி, காட்சிகள் கண் முன்னே வந்துட்டு போகுது. அருமை!
ஆனா, டி.வி சீரியல்ல ஒரு மேட்டரும் இல்லாம, நடூல மட்டும், டடடா ன்னு மீஜிக் போட்டு பீதிய கெளப்பி, ஆரம்பிச்ச இடத்துலையே முடிப்பாங்க்களே அந்த மாதிரி கிட்டத்தட்ட ஆரம்பிச்ச எடத்துலையே பாகம் 3ஐ முடிச்சிட்டாரு கல்கி.

மூன்றாம் பாக நட் ஷெல்லை பாக்கரதுக்கு முன்னாடி, இதுவரை பாகம்1ம், பாகம்2ம் படிக்காதவங்க படிச்சுடுங்க. படிச்சுட்டு ஒன்னியும் புரியாதவங்க, பொ.செ ஈ.புக் இருக்கு, அதை முழுசா படிங்க. முதல் மூன்று பாகம் சகாய விலைக்கோ, ஈயம் பித்தளைக்கோ வாங்கிக்கலாம்னு இருக்கரவங்க எனக்கு யாஹூங்க. (சும்மா சொன்னேன், [கவுண்டர் ஸ்டைலில்] பதிவு படிக்கரவங்க யாருக்கும், விக்கரதா இல்லை :) )

இனி பாகம்3 நட் ஷெல்லு:

வந்தியத்தேவனை குதித்து காப்பாற்றிய அருள்மொழி வர்மரை பூங்குழலி காப்பாற்றி, படகில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வந்தாள். கடற்கரையில் பழுவேட்டரையர் பட்டாளம் இருப்பதைப் பார்த்ததும் வேறு வழியில் சென்று ஒரு கால்வாய் வழியே காட்டுக்குள் வந்தடைகிறார்கள். இளவர்சர் அருள்மொழிக்கு ஃப்ளூ வந்துடுது. நினைவே இல்லாமல் படகில் கெடக்கறாரு.
இதற்கிடையில் இலங்கையில் அருள்மொழி வர்மர் வந்த கப்பல் எரிவதைக் கண்ட பார்திபேந்திரன் கோடியக்கரை வந்து பழுவேட்டரையர் நந்தினி பட்டாளத்திடம், அருள்மொழி வர்மர் இறந்திருக்கலாம்னு பீதியக் கெளப்பிடறான்.
இளவரசர் அருள்மொழி இறந்துவிட்டார் என்ற சேதி ஊருக்குள்ள பரவுது.

பூங்குழலியிடம், இளவரசரை பத்திரமாய் சூடாமணி விஹாரத்துக்கு ( புத்த மடம்) கூட்டீட்டு போய் விட்டுடச் சொல்லிட்டு, இளவரசி குந்தவையிடம் சேதி சொல்ல பழையாறைக்குப் புறப்படறான் வந்தியத்தேவன்.

போகும் வழியில் நந்தினியின் ஆட்கள் அவனை பிடித்துக் கொண்டு போய் நந்தினியிடம் சேர்கிறார்கள். நந்தினியும் இளவரசர் அருள்மொழிக்கு என்னாச்சுன்னு வந்தியத்தேவனிடம் கேட்டுத் தெரிஞ்சுக்க பாக்கரா. வந்தியன், எதையும் சொல்லாமல் அங்கிருந்து நழுவுகிறான்.

குந்தவையை சந்தித்து மேட்டரை சொல்லி, மீண்டும் காஞ்சிக்கு, குந்தவையின் ஓலையுடன் பயணம் மேற்கொள்கிறான். வரும் வழியில், மீண்டும் நந்தினியின் ஆட்கள் அமுக்கிடறாங்க. இம்முறை, நந்தினியின் குட்டிப் பையனை 'வருங்கால அரசரே'ன்னு, சில 'பாண்டிய' ஆட்கள் கூட்டிக்கிட்டு வராங்க. ராத்திரியில் எல்லாரும் ஏதோ சதித்திட்டம் போட்டு ஆதித்த கரிகாலரை தஞ்சைக்கு வரவழைச்சு கொல்லணும். யாரு, அந்தக் காரியத்தை செய்யப் போறாங்கன்னு குட்டிப் பையன் முடிவு பண்ணட்டும்னு பேசிக்கறாங்க. பையனும், 'அம்மாதான் எல்லாமே'ன்னு சொல்லி கத்தியை நந்தினிகிட்ட கொடுத்துடறான்.

இதற்கிடையில், அருள்மொழி இறந்துட்டார்னு சேதி கேட்டு, வானதி பேஜாராயிடரா. தான் நாகப்பட்டினத்துக்கு போரதா சொல்லி எஸ்கேப் ஆயிடரா. குந்தவையும், மந்திரியார் அநிருத்தரும் சேந்து ஏதோ ப்ளான் பண்ணி வானதியை வழியில் மடக்கி டெஸ்ட் எல்லாம் வெக்கராங்க. குந்தவையும் நந்தினியும் சூடாமணி விஹாரத்துக்குப் பக்கத்துல போய் அருள்மொழியைப் பாக்க வெயிட்டராங்க. ஃப்ளூ சரியானதும் அருள்மொழியும் இவங்களைப் பாக்க அங்க வராரு.
குந்தவை, தம்பி கிட்ட,, திரும்பி இலங்கை போகச் சொல்றாங்க. இங்க நெலவரம் சரியானதும் திரும்பி வான்னு சொல்றாங்க. ஆனா, அருள்மொழி, அப்பா வை பாத்து சில பல விஷயங்கள் சொல்லிட்டுத்தான் போவேன்னு நிக்கறாரு.
இவரின் மனதில் அரசாளும் எண்ணம் இல்லைன்னும், இலங்கையில் உள்ளதைப் போல பெரிய பெரிய கோயில்கள், சிவனுக்குக் கட்டணும்னும் சொல்றாரு. (interesting. பின்னாளில் இவருதான் இராஜ இராஜ சோழர் என்பது நினைவில் கொள்க).

சில இடங்களில், குந்தவை 'பெண் வில்லி' மாதிரி தெரியராங்க. தன் தந்தைக்கு அடுத்து சோழ ராஜ்யத்தை விரிவாக்க அருள்மொழி உதவுவான் என்பதால் தான் அவன் மேல் பாசம் கொள்வதாகவும், தன் பேச்சைக் கேக்கலன்னா நாஸ்தி என்கிற ரீதியில் ஒரு சீன் வருது.

சஸ்பென்ஸ், செமையா மிக்ஸ் பண்ணிக்குட்டு போராரு கல்கி.

நந்தினி யாருங்கரது இன்னும் புலப்படலை.

சுந்தர சோழரின் முன்னாள் காதலி, ஊமை லேடிக்கு இரட்டைக் குழந்தைன்னு போன பாகத்தில் பாத்தோம். ஒரு பெண்ணும், ஓரு ஆணும் என்று. ஆழ்வார்க்கடியானும், நந்தினியை தன் தங்கைன்னு சொல்லுவான் முதல் பாகத்தில். சுந்தரரும், நந்தினியைப் பாத்து, அந்த ஊமைப் பெண்ணைப் பாக்கரதா நெனச்சுக்கிட்டு பயத்துல டென்ஷன் ஆயிடுவாரு போன பாகத்தில்.
ஆனா, இந்த பாகத்தில் இன்னொரு கதை சொல்றாங்க - அதாவது, சுந்தரரின் அண்ணன் மகன் மதுராந்தகனை, பிறந்தவுடன் கொல்ல மந்திரி அநிருத்தர் சதி பண்ணினாராம். முதல் குழந்தை பிறந்ததும், அதை எடுத்துக் கொண்டு போய் கொல்லச் சொன்னாராம். ஆனா, பெண் குழந்தை என்றதும் பூசாரி கிட்ட கொடுத்து வளக்கச் சொல்லிடறாராம். நந்தினி பூசாரியின் மகள்னு முதல் பாகத்தில் வரும். இரட்டைக் குழந்தையாய், மதுராந்தகர் பிறந்தது அநிருத்தருக்கு தெரியாததால், மதுராந்தகர் தப்பித்தாராம்.
அப்ப, நந்தினியும் மதுராந்தகனும் ப்ரதர் சிஸ்டரா?
குந்தவைக்கும் அருள்மொழிக்கும், நந்தினி தன் அக்காள் என்று எண்ணம். அதை அவளிடம் சொல்லணும்னும் பேசிக்கறாங்க. அது தெரிஞ்சாலே, அவள் செய்யும் வில்லத்தனம் கொறையும்னு இவர்களுக்கு எண்ணம்..

ஸோ, நந்தினி பூசாரி மகளா? சக்ரவர்த்தியின் மூத்த சம்சாரத்தின் மகளா? சக்ரவர்த்தியின் அண்ணன் மகளா?

யப்பா! எங்கே செல்லும் இந்தப் பாதை? இப்படி டெரர் பண்றாங்களே? :)


-தொடரும்!

இது குந்தவையா? நந்தினியா?

Sunday, June 21, 2009

பொன்னியின் செல்வன் in a nutshell - பாகம் 2



"பொன்னியின் செல்வன் in a nut shell" முதல் பாகம் எழுதி நாலு மாசம் ஆயிடுச்சு. இரண்டாம் வால்யூமை படிக்க இவ்ளோ நாளாயிடுச்சு. பெருசா ஒண்ணும் வேல இல்லன்னாலும், ஏதாச்சும் வந்து, புக்கு படிக்கர நேரமில்லாம பண்ணிடுச்சு. சமீபத்திய ரோம் ட்ரிப்பின் ரயில் பயணத்தில் தான், இரண்டாம் வால்யூம் படித்து முடித்தேன்.

கதை செம சுவாரஸ்யமாய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல் வால்யூம் படிக்கையில், ஹீரோவாக நான் கருதிய வந்தியத் தேவன், இரண்டாம் வால்யூமையும் முழுதுமாக ஆக்ரமிக்கிறான். ஆனால், இரண்டாம் வால்யூமில், தசாவதார பல்ராம் நாயுடு கணக்காக, கொஞ்சம் காமெடியனாகவும் ஆக்கப்பட்டுள்ளான். ஆவலாய் எதிர்பார்த்த, இளவரசர் அருள்மொழிவர்மரும் இரண்டாம் வால்யூமில் சும்மா ஜம்முனு களமிறங்குகிறார். காமெடி, காதல், சஸ்பென்ஸ், ஃபைட், பாட்டுன்னு எல்லாக் கலவையும் இந்த வால்யூமில் கலந்து, பின்னியிருக்காரு கல்கி.

இனி, பொ.செ in a nut shell, இரண்டாம் பாகம் பாக்கலாம்.

முதல் பாகத்தில், இளவரசி குந்தவை தன் தம்பி அருள்மொழி வர்மருக்கு கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கிக்கிட்டு வந்தியத் தேவன் புறப்பட்டு கோடியக்கரையை வந்து அடைகிறான். ( கோடியக்கரையின் வர்ணனை அமக்களம். பாக்க வேண்டிய இடம் போலருக்கு. Flickrல் ஒரு படம் ஆப்டுது.பாருங்க. ). அங்க அழகான பூங்குழலியை சந்திக்கிறான். குந்தவையை பார்ததும் மயங்கிய வந்தியத் தேவன், இவளைப் பார்த்ததும் மீண்டும் மயங்குகிறான். நாலஞ்சு அத்யாங்கள், இவங்கள சுத்தியே போவுது. பூங்குழலி படகு ஓட்டுவதில் திறமைசாலி. அவளின் படகில் இருவரும் இலங்கைக்குப் போறாங்க. இலங்கையில் தான் இளவரசர் அருள்மொழிவர்மர் பெரும் படையுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறார்.

சுந்தர சோழர் பக்கவாதம் வந்து, தஞ்சைக் கோட்டையில், பழுவேட்டரையர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவருக்கும் ராஜ்யத்துக்கும் ஆபத்து நேரக்கூடும் என்ற பேச்சு பரவலாய் இருக்கிறது. இந்த நேரத்தில் தான் தன் தந்தையின் அருகில் இருக்க வேண்டும் என்று நினைத்து, குந்தவை, பழையாறில் இருந்து, தஞ்சாவூர் போகிறார். கூடவே பயணிக்கும் வானதியிடம், அருள்மொழி வர்மருக்கு, 'பொன்னியின் செல்வன்' என்ற பெயர்காரணம் என்னன்னு சொல்றாங்க.
அதாவது, சுந்தர சோழர் ஹெல்த்தியா இருக்கும் காலத்தில், மொத்த ஃபேமிலியோடு, பொன்னி நதியில் பெரிய படகில் இசைப் பரிவாரங்களுடன், உல்லாசமா போவாராம். அப்படி ஒரு தடவ போகும்போது, அருள்மொழிவர்மர் திடீர்னு பொன்னி நதியில் விழுந்துட்டாராம். எல்லாரும் அலறிப் போய் தேடிக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ, பொன்னி நதியிலிருந்து ஒரு பெண் , அருள்மொழியை கையில் ஏந்தியபடி வந்து, சுந்தர சோழர் கிட்ட கொடுத்துட்டுப் போனாங்களாம். அப்பரம், அந்தப் பெண் மாயமா மறஞ்சுட்டாங்களாம். அது கண்டிப்பா, பொன்னி நதியின் தெய்வம் தான்னு முடிவுகட்டி, அன்றிலிருந்து, அருள்மொழிவர்மரை, பொன்னியின் செல்வன்னு சொல்வாங்களாம். ( பட்டம் வெக்கரதுக்கு நம்மாளுங்களுக்கு சொல்லியா தரணும்? )

தஞ்சையை அடைந்த குந்தவைக்கும், நந்தினிக்கும் இடையில் நடக்கும் வார்த்தை ஜாலம், ஃப்ரிக்ஷன் எல்லாம் படிக்க படு சுவாரஸ்யம். சுந்தர சோழருக்கு உடல் நிலை மோசமாயிக்கிட்டே இருக்கு.
ஒரு நாள் இரவு, 'என்னைக் காப்பாத்துங்கன்னு' அவரு படுக்கையிலுருந்து அலற்றாரு. அதைக் கேட்டு வந்த வானதி, சுந்தர சோழரின் எதிரில், நந்தினியும் பழுவேட்டரையரும் இருக்கரத பாக்கரா. புகை மூட்டத்தின் நடுவில், 'பேய்' கெட்டப்பில் இருந்த நந்தினியை இவரு பாத்து ஏன் பயப்படறாருங்கருங்கர ஒரு முடிச்சு போடறாங்க.

அடுத்த நாள், சுந்தர சோழர், தன் ஃப்ளாஷ்பாக்கை தன் மகள் குந்தவையிடம் சொல்றாரு. சின்ன வயசுல ஏதோ ஒரு ஊருக்குப் போனவரு, அங்க இருக்கர ஒரு ஊமைப் பெண்ணை காதலித்தாராம். கொஞ்ச நாளில், க்டமை அழைக்க, ஊமைப் பெண்ணை அம்பேல்னு விட்டுட்டு திரும்ப வந்துடறாரு. அந்த ஊமைப் பெண்ணை அம்பேல்னு விட்டுட்டோமேங்கர கவலையிலேயே இவருக்கு அப்பப்ப ஒடம்பு சரியில்லாம போயிடுது. ஊமைப் பெண் இறந்து விட்டாள்னு சுந்தரர் நெனச்சுக்கிட்டு இருக்கார்.
தன் பெரியப்பாவின் மகன் உயிருடன் இருக்கும்போதே, தான் அரசாளத் தொடங்கியது தவறான ஒன்று, அந்தச் சாபம்தான் இன்று தன்னை வாட்டுவதாகவும், தன் மகன்கள் அருள்மொழிவர்மனும், ஆதித்த கரிகாலனும், இந்தச் சாபத்தை தொடரவேண்டாம் என்றும், தன் அண்ணன் மகன் மதுராந்தகத் தேவனுக்கே, அரசாளும் உரிமையை கொடுக்க வேண்டும் என்றும் குந்தவையிடம் சொல்கிறார்.

வந்தியத்தேவன் இலங்கையை வந்து சேருகிறான். எதிர்பாத்த மாதிரியே, ஆழ்வார்க்கடியானும் அங்க வந்துடறான். இவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. மாத்தி மாத்தி வாரிப்பாங்க.
ஆழ்வார்கடியானும், அநிருத்தப்ரம்மரிடமிருந்து (சுந்தரச் சோழனின் ஃப்ரெண்டும், அமைச்சரும்) ஒரு செய்தியை அருள்மொழிவர்மருக்கு தெரிவிக்க வரான்.
ரெண்டு பேருமா சேந்து, இளவரசரை பாத்துடறாங்க. இளவரசர்தான் இந்த நாவலின் ஹீரோ என்பது இரண்டாம் பாகத்தில் நிரூபணமாகிறது. இண்ட்ரொடக்ஷன் சீன் அமக்களம்.
(அதைத் தவிர, இந்த அருள்மொழிவர்மர் தான் பின்னாளில் இராஜ இராஜ சோழனாகிறான்னு அங்கங்க, வரலாற்றுக் குறிப்புகள், பல இடங்களில் கல்கி தெளித்திருக்கிறார்).

இளவரசரை, இலங்கையின் சிம்மாசனத்தில் உட்கார வைக்கவேண்டும் என்று ஒரு கோஷ்டியும், தஞ்சாவூருக்கு கூட்டிட்டுப் போகணும்னு வந்தியத் தேவனும்,
ஆதித்யகரிகாலன் கிட்ட கூட்டிட்டுப் போகணும்னு இன்னொரு கோஷ்டியும், இளவரசரை சாகடிக்க முயற்சி செய்யும் ஒரு கோஷ்டியும்னு பல கோஷ்டிகள் இருக்கு இந்த பாகத்தில்.
(குழப்பமான கதைக்களம் தான். முடிச்சு அவுர இன்னும் ரெண்டு பாகம் படிக்கணும் போலருக்கு).
திடீரென்று ஒரு ஊமைப் பெண்ணும், இலங்கை வீதியில் இளவரசருக்கு அப்பப்ப உதவி செய்யறாங்க. ( இந்த வயசான ஊமைப் பெண், சுந்தரரின் ஊமைப் பெண்ணாதான் இருக்குங்கரது, பல தமிழ் படங்கள் பாத்த நமக்கு ஊகிப்பது ஒரு பெரிய விஷயமில்லை). இளவயதில் பொன்னிநதியில் வீழ்ந்த அருள்மொழிவர்மரை காப்பாற்றியதும், இந்த ஊமைப் பெண்தான்னு தெரிய வருது அருள்மொழிக்கு.
இன்னும் சில குழப்பமான விஷயம் வருது. ஊமைப் பெண் வரைந்த சித்திரங்கள் சிலதை அருள்மொழிவர்மர் பாக்கறாரு. அதில், ஊமைப் பெண்ணுக்கு இரண்டு குழந்தை பிறப்பதாகவும், அவர்கள், சுந்தரசோழரின் மனைவி கூட்டிக் கொண்டு வளர்ப்பதாவும் சொல்றாங்க. நந்தினியும், ஆழ்வார்கடியானும், பூசாரியின் மக்கள். சின்ன வயசில் அரண்மனையில் ராணியிடம் கொண்டு விடப்பட்டு, அங்கேயே வளர்க்கப்பட்டவர்கள்னும், முதல் பாகத்தில் வரும். ஸோ, ஊமைப் பெண்ணின், பொண்ணுதான் நந்தினிங்கர ஒரு ப்ரமை வருது. ஆனா, நந்தினி பாண்டிய மன்னனை ஆதித்த கரிகாலன் கொன்ற காரணத்துக்காக சில 'பாண்டியர்'களுடன் சேர்ந்து சதி செய்வது போலவும் சொல்லப்படுது. (கொழப்பந்தான், அடுத்த பாகம் படிக்கர வரைக்கும்)
முதல் பாகத்தில், இந்த ஊமைப் பெண்ணைத் தவிர இன்னோரு ஊமைப் பெண்ணும் வந்திருந்தார்கள். அவங்க, பூங்குழலியின் அத்தை. சேந்தன் அமுதன் என்பவன், அந்த ஊமைப் பெண்ணின் மகன், பூங்குழலி மேல் காதல் கொண்டவன். முதல் அத்யாயத்தில், வந்தியத் தேவனுக்கு பெரிதும் உதவியவன்.
(இந்த ஊமைப் பெண்ணுக்கும், அந்த ஊமைப் பெண்ணுக்கும் இன்னா கனெஷ்க்ஷன்னு அடுத்த அத்யாயங்களில் தெரியலாம், ஏதாச்சும் இருந்தா)

இதற்கிடையில், வந்தியத் தேவனை இலங்கையில் விட்டுச் சென்ற பூங்குழலி, திடீர்னு திரும்ப அருள்மொழி வர்மரை தேடிக்கிட்டு வரா. கடலில் பெரிய கப்பல்களைப் பார்த்ததாகவும், பழுவேட்டரையரின் ஆட்கள், அருள்மொழிவர்மரை கைது செய்து கூட்டிக் கொண்டு போக வந்துருக்கரதாவும் சொல்றா. இதைக் கேட்ட அருள்மொழிவர்மர், இது சுந்தரச் சோழரின் கட்டளையாயிருக்கும், தானே சென்று பழுவேட்டரையரிடம் சென்று தஞ்சை செல்வதாகச் சொல்றாரு. எல்லாருமா, பழுவேட்டரையர்களின் படகை நோக்கிப் பயணிக்கறாங்க.
போற வழியில், யாரோ, இளவரசரை போட்டுத்தாக்க முயற்சிக்கறாங்க.

தேடி வந்த கப்பலில் ஒண்ணு உடைந்து போய் கரை சேர்ந்திருந்தது. அருள்மொழியும், பூங்குழலியும் இன்னொரு கப்பலைத் தேடிச் செல்ல, லேட்டா வந்த வந்தியத் தேவன், தூரத்தில் ஒரு கப்பல் போவதைப் பாத்து, அதில்தான் அருள்மொழி போரார்னு எண்ணி, கடலில் குதித்து நீந்தி அந்தக் கப்பலுக்குப் போயிடறான்.
கப்பலுக்குள் ஏறினா, அது வில்லன்ஸ் இருக்கர கப்பல். 'பாண்டியன்' ரவிதாஸன் -aka-'மந்திரவாதியின்' ஆட்கள், அருள்மொழியை போட்டுத்தள்ள வந்தவர்கள், அது நிறைவேறாமல் திரும்பப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அராபியர்கள் சிலரும் இருக்கிறார்கள். வந்தியத் தேவனை கட்டிப் போட்டுடறாங்க.

வந்தியத் தேவன், வில்லன் கப்பலில் ஏறிப் போனதை அறிந்த அருள்மொழிவர்மர், தன் அண்ணனின் நண்பன் பார்த்திபேந்திர பல்லவனின் கப்பலில் அதைத் தொடர்ந்து பிடித்து வந்தியத் தேவனை காப்பாத்தப் போறாரு. (பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் கெட்டுது போங்க. இவர் துரத்திச் சொல்வதும், இடையில் வரும் சூறாவளியும், மின்னல் அடித்து வந்தியத் தேவனின் கப்பல் எரிவதும், இளவரசர் வந்தியத் தேவனை காப்பாற்றிய பத்திகளும், அபாரமான வர்ணனை!). வந்தியத் தேவனை காப்பாற்றியதும், சூறாவளியால் இளவரசரின் கப்பலும் உடைந்து விடுகிறது.
ரெண்டு பேரும், ஒரு கட்டையை பிடிச்சுக்கிட்டு தத்தளிக்க, அந்த நேரம் பாத்து அங்கு படகில் வந்த பூங்குழலி ரெண்டு பேரையும் காப்பாத்திடறா.

*** தொடரும் ****

முதல் பாகத்தில் மெதுவா ஃபஸ்ட் கியரில் பயணித்த கதை, மாம்பலம் ரோட்டில் ஓடரது போல, சுத்தி சுத்தி ஓடி, குழப்பமா போய்க்கிட்டு இருந்துச்சு. பலப் பல பாத்திரங்கள், பலப் பல ஊர் பேர்கள்னு, ஒரு எக்ஸாமுக்கு படிக்கர மாதிரி இருந்தது.
இரண்டாம் பாகம், செகண்ட் கியருக்கு மாறி, பாதியிலேயே மூணாம் கியருக்கும் மாறி, விர்ர்ர்ர்ர்ர்ர்னு போயிக்கிட்டு இருக்கு.

அடுத்த பாகம் படிச்சு, கதை என்னாங்கரத சொல்றேன்.

இத யாராச்சும் ப்ரமாண்டமான திரைப்படமா எடுத்து ரிலீஸ் பண்ணா, புண்ணியமா போகும். இதை தமிழ் திரையுலகம் சார்ந்தவர்கள் செய்யவேண்டியது, அவர்களின் தலையாய கடமையாகும்!

நன்றி!