recent posts...

Showing posts with label தாரே ஜமீன் பர் movie review திரை விமர்சனம். Show all posts
Showing posts with label தாரே ஜமீன் பர் movie review திரை விமர்சனம். Show all posts

Sunday, January 20, 2008

தாரே ஜமீன் பர் - திரை விமர்சனம்

இந்த படத்த பத்திய கருத்த எல்லாரும் ஏற்கனவே அலசி ஆராஞ்சு தொவச்சு காயப்போட்டுட்டாங்க. அதனால, இத விமர்சனமா இல்லாம, படத்தில் எனக்குப் பிடிச்ச காட்சிகளும், பிடிக்காத காட்சிகளும் சொல்லும் பதிவா எழுத முடிவு.

பீமா பாக்கலாமா, தாரே ஜமீன் பர் பாக்கலாமான்னு யோசிச்சதுல, தா.ஜ.ப வெற்றி பெற்றது.
பீமா போகாததுக்கு மூன்று காரணங்கள் -

1) அடிதடி படமாமே? $ குடுத்து தலவலி வாங்குவானேன்?
2) சிவாஜி வந்ததுக்கப்பரம், இப்ப தமிழ் படங்களெல்லாத்துக்கும், ப்ரீமியம் கேக்கறாங்க. சாதாரணமா $8ன்னா, பீமாக்கு $13 வேணுமாம். என்ன கொடுமைங்க இது?
3) தா.ஜ.பக்கு அமோகமான பாஸிட்டிவ் ரெவ்யூ

'தாரே ஜமீன் பர்'னா Stars On Earthனு அர்த்தமாம். அதாவது, பூமியில் நட்சத்திரங்கள்.

மூன்றாம் வகுப்பு பயிலும் இஷான் அவஸ்தி என்னும் சிறுவனைச் சுற்றி பயணிக்கிறது கதை.
சுட்டியான இஷான், வீட்டிலும் வகுப்பிலும் செய்யும் லூட்டியுடன் துவங்குகிறது.
துரு துரு என்று இருந்தாலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாத சிறுவனாம்.
பாசமான அம்மா, அண்ணன், கண்டிப்பான அப்பாவுடன் இஷானின் தினசரி வாழ்க்கை ஓடுகிறது.

இஷானால் சரியாக எழுத முடியாது, எதையும் சரியாக படிக்க முடியாது, கவனம் கன்னா பின்னான்னு அங்கயும் இங்கயுமா ஓடுது.
மூணாம் கிளாஸ்லயே ரெண்டு தடவ ஃபெயில் ஆயிடறான்.

மூத்த பையன் நல்லா படிச்சு மார்க் வாங்கறானே, ரெண்டாவது பையன் இஷான இப்படியே விட்டா, பையன் தேறாம போயிடுவான், இவனுக்கு boarding ஸ்கூல் தான் லாயக்குன்னு, வேற ஸ்கூலுக்கு மாத்திடறாங்க.

பெற்றோரையும் அண்ணனையும் பிரிந்து பெரும் துயரத்துக்கு தள்ளப்படும் இஷான், புதிய இடத்தில் தோன்றும் புதிய சவால்கள், புதிய ஆசிரியர்கள் இப்படி பயணிக்கிறது கதை.
Boarding ஸ்கூல் வாத்தியாக வரும் அமீர்கான் இஷானுக்கு இருப்பது Dyslexia என்ற குறைபாடு என்கிறார்.

அப்பரம் என்ன? அமீர்கான், இஷானை குணப்படுத்தராரா, இல்ல இஷானின் நிலமை மேலும் மோசம் ஆகுதான்னு பயணிக்குது படம்.

சென்ற வருடம் கேரளாக்கு சென்றிருந்தபோது பல இடங்களை சுற்றிப் பார்த்து, ஒரு நாள் அந்தி சாயும் நேரம் 'தோடு' பாக்கப் போலாம்னு ஒரு எடத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. 'தோடு'ன்னா சின்ன ஆறு மாதிரி ஒரு எட்டடி ஆழம், பத்தடி அகலம் இருக்கர காவாய். இருபுறமும் தென்னை மரம். தண்ணி, கண்ணாடி மாதிரி இருக்கும். ஆற்றின் தரை தெரியும். இருபுறமும் புல்லும் பாசியும் படர்ந்து மிக அழகான காட்சி அது. ஓரத்துல ஒரு கல்லுல ஒக்காந்து, கால தோட்டுக்குள்ள விட்டு, அக்கடான்னு ஒக்காந்தோம்.

ரெண்டு மணி நேரம் பேச் மூச்சில்லாம ஒக்காந்தோம்.

ஓடர தண்ணியோட சத்தம், மரத்துல இருக்கர பறவைகளின் சத்தங்கள். இதைத் தவிர வேற ஒரு சத்தமும் கேக்காது.

சும்மா ஒக்காந்துட்டு, சுத்தி இருந்த இலைகள படகா விட்டு, மெதுவா பழைய பாடல்களை முணு முணுத்துக்கிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் இருந்திருப்போம்.
எழுந்து வீட்டுக்கு போகும்போது, மனசுக்குள் அவ்வளவு இதமான ஒரு சுகம் இருந்தது.

நம் உணர்வுகளோடு விளையாடி நமக்குள் ஒரு மென்மையைப் படரச் செய்யும் ஏதோ ஒரு சக்தி இந்த மாதிரி அழகான இடங்களுக்கு இருக்கிறது போலும்.


என்னக் கேட்டீங்கன்னா, ஒரு நல்ல திரைப் படத்துக்கும் இந்த மாதிரி ஒரு சக்தி இருக்கணும்.

படம் ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல நம்மள சுத்தி இருக்கர எதுவும் நமக்கு தெரியக் கூடாது.
படத்தோட அப்படியே ஒன்றிப் போக வைக்கணும்.
படத்தில் இருக்கும் பாத்திரங்கள் சிரிச்சா, நாமும் சேந்து சிரிக்கணும்.
அவங்க கோவப் பட்டா, நாமும் கோபப் படணும்.
அவங்க அழுதா நாமும் சேந்து அழணும்.

'தாரே ஜமீன் பர்' அப்படிப்பட்ட சக்தி கொண்ட ஒரு படம்.

அமீர் கான் நம்ம கமல் மாதிரி போல. சொந்தப் படம் எடுத்தா, முடிஞ்ச வரைக்கும், சீப்பா எடுத்து முடிச்சுடுவாரு.
படத்துல ரிச்சா ஒண்ணும் விஷயமே இல்ல. ஆனா, அதுதான் படத்தோட பலம்.

Powered by: Chakpak.com Taare Zameen Par 


இஷானின் பள்ளி, அவன் தங்கும் அப்பார்ட்மெண்ட், boarding school, ஒரு பழைய ஸ்கூல் பஸ்.
outdoor ஷூட்டிங்னு, ஒரே ஒரு காட்சி மட்டும், மும்பாய் ரோட்ல ஒரு உலாத்தல்.
அவ்வளவே செலவு.
அமீர் கானைத் தவிர, நடிகர்கள் யாரும் ப்ரபலம் அல்லாதவர்கள்.

இப்படியெல்லாம் இருந்தும், படத்தின் ஈர்ப்பு சக்தி அதிகம்.

இசை? காதை செவிடாக்காத அருமையான இசை.
என் நினைவில், முக்கால் வாசி பாட்டு, ஒரு கிட்டார் பின்னணி இசையிலேயே முடிஞ்சுடுது.
ஹிந்தி தெரியாததன் கொடுமை, subtitle பாத்து பாத்து வார்த்தையை அர்த்தம் பண்ண வேண்டியதாயிடுச்சு.
பாடல் வரிகள் அழகோ அழகு. குறிப்பா ஒரு அம்மா பாட்டு வரும். நெஞ்சைப் பனிக்க வைக்கும் காட்சிகளும், பாடல் வரிகளும்.

இஷானை boarding ஸ்கூலில் விட்டுட்டு வந்துடுவாங்க. இஷான், தாயை பிரிந்த துயரத்தில் தேம்பி தேம்பி அழ, நாமும் அவன் கூடவே கலங்கி அழ, பின்னணியில் இந்த பாடல் ஆரம்பிக்கும். Very Touching, really!
சில வரிகளின் அர்த்தம் இங்கே (உபயம் CVR)
கூட்டத்துல என்னை தனியா விட்டு போய்டாதமா
என்னால விட்டுக்கு திரும்பி வர கூட முடியாது
இவ்ளோ தூரம் என்னை தள்ளி அனுப்பாத அம்மா
அப்புறம் உனக்கு என்னை மறந்தே போயிட போகுது
நான் என்ன அவ்வளவு கெட்டவனா அம்மா??
நான் என்ன அவ்வளவு கெட்டவனா,என் அம்மா


குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு காட்சி.
அமீர், இஷானின் dyslexia விஷயம் பற்றி சொல்ல, இஷானின் பெற்றொரை சந்திக்கச் செல்வார்.
அவர் பஸ்ல போகும்போது, பின்னணியில் ஒரு பாடல்.
செல்லும் வழியில் ஒரு டீக்கடைக்கு சென்று உண்பது போல் ஒரு காட்சி.

டீ விற்கும் ஒரு ஆறு வயது சிறுவன். வாழ்க்கையில் எதை இழக்கிறோம் என்பதே தெரியாமல் டீ கடையில் வேலை செய்யும் சிறுவன். உடம்புல சட்டை கூட இருக்காது. பாக்கவே ரொம்ப பரிதாபமா இருப்பான் பையன்.
அமீர் கான அவனைப் பார்த்து ரொம்ப சோகமாயி அவனுக்கு ஒரு டீயும் பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைப்பாரு.
அவர் சோகம் ஆகும்போது, நமக்கும் நெஞ்சில் ஒரு வலி.
இந்த வயசுலயே இப்படி எல்லாம் கஷ்டப்படறவங்க எவ்ளோ பேர் இருக்காங்கன்னு, உள்ள சுள்னு வலிக்கும். கண்ணுல தார தாரயா தண்ணி கொட்டும்.

இப்படி நம் உணர்வோடு துல்லியமாய் விளையாடும் பல காட்சிகள்.

நல்ல படம் இப்படித் தானே இருக்கணும்? உணர்வோடு விளையாடி, படத்தை பாத்து முடிச்சுட்டு வந்தா, நம்ம லேசாயிருக்கணும். அட்லீஸ்ட், அடுத்த ஒரு ரெண்டு நாளாவது, அந்த படத்தைப் பத்தி யோசிக்க வைக்கணும்.

அதிலிருக்கும், ஜோக்கை, மத்தவங்ககிட்ட சொல்லி சிரிக்கர மாதிரி இருக்கணும். இல்லன்னா, அதிலிருந்த மெல்லிய நிகழ்வுகள் மனசுக்குள் அசைபோட்டு மனசுக்குள் சிரிக்கவோ, அழவோ செய்யர மாதிரி இருக்கணும்.

அதவிட்டுட்டு, தியேட்டர விட்டு வெளீல வந்த உடனே, "ச! $8 நஷ்டம் மச்சி!"ன்னு பொலம்பர மாதிரி இருக்கக் கூடாது. கூடவே, தலைவலியும் கொடுத்துதுன்னா ஏண்டா இந்த கர்மத்துக்கு போனோம்னு ஆயிடும்.

தா.ஜ.ப சூப்பரான்னு கேட்டீங்கன்னா, சூப்பர்னு தான் சொல்லுவேன்.
கண்டிப்பா, தியேட்டர்ல போய் ஒரு தடவ பாக்க வேண்டிய படம்.

இஷானா நடிச்ச அந்த பையன் கலக்கித் தள்ளியிருக்கான்.

படத்துல பிடிக்காத விஷயம்னு ஏதாச்சும் இருக்கா?

கண்டிப்பா இருக்கு.

எனக்குத் தோணிய சில விஷயங்கள்:

1) அமிதாப்பின் Black படத்துல இருந்த மாதிரி ஒரு நல்ல 'ஓளியமைப்பு' இல்லாமப் போயிடுச்சு. ரொம்ப ப்ளெயினா தெரிஞ்சது காட்சி அமைப்புகள். Ravi K Chandran போட்டிருந்தா, பின்னியிருப்பாரு. அமீர் சொந்த படங்கரதால சீப்பா முடிச்சுட்டாரான்னு தெரியல. (இப்படி ப்ளெயினா இருந்தது படத்துக்கு பலமான்னு தெரியல)

2) படத்தில் வரும் பள்ளி வாத்தியார்களெல்லாம் ஓவர்-ஏக்டிங். அத கொஞ்சம் கவனிச்சிருக்கலாம். (ஆனா, காமெடி வேணுங்கரதுக்காக இப்படி பண்ணிட்டாங்களோ?)

3) Dyslexia மாதிரி ப்ரச்சனை இருக்கும் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு ஒரு பாடமாக அமைந்த படம். இப்படிப்பட்ட பசங்களை எப்படி அரவணச்சு வளக்கணும்னு நல்லா கொண்டு போனாங்க. ஆனா, படத்தின் முடிவு ஒரு cinematicஆ போனது பெரிய துரதிர்ஷ்டம். தக தக தகன்னு எரிஞ்ச திருவண்ணாமலை ஜோதீல, தண்ணி ஊத்தி அணச்சிட்ட மாதிரி இருந்தது. Dyslexia இருக்கர இஷானுக்கு, நல்ல ஓவியத் திறமை இருக்கரதா காட்டி, இந்த மாதிரி பசங்களுக்கு வேற ஏதாவது ஒரு திறமை உள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும், அத தட்டிக் கண்டுபிடிங்க என்பது மாதிரி ஒரு தவறான வழிகாட்டுதல் இருக்கு படத்துல. சினிமாக்கு இது தேவையான முடிவுன்னாலும், இந்த ஒரு காட்சியினால், படத்தின் real-value கம்மியாயிடுது. (அந்த மாதிரி முடிக்கலன்னா டாக்குமெண்டரி மாதிரி ஆயிருக்கலாம் படம். அந்த பயத்தினால் இருக்கலாம்).

மொத்தத்தில் தாரே ஜமீன் பர், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய, மனதை வருடும் படம்.

பி.கு: நல்ல படம் எடுக்க, சுவிட்சர்லாந்துல போயி ரூம் போட்டு யோசிச்சு, ஆஸ்த்ரியாவுல டூயட் பாடி, அமெரிக்கால கார் சேஸிங் பண்ணி, பொள்ளாச்சீல குத்தாட்டம் போட்டு, மயாமில கவர்ச்சி ஆட்டம் ஆடி, ஒரு பழைய பாட்ட ரீமிக்ஸ் பண்ணி, மிஷின் கண்ல 100 பேர சுட்டுக்கிட்டெல்லாம் இருக்கணும்னு அவசியமே இல்லீங்க. அமைதியா மனதை வருடும் விஷயம் இருந்தா போதும். ஜம்முனு ஓடும் படும் ஜம்முனு! புரிஞ்சுப்பாங்களா இனி?