இயற்பெயர்: Daniel ராசையா
வயது: 65
வேலை: இசை அமைப்பாளர். எழுபதுகளில் சலீல் சவுத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்களிடம் கிட்டார் வாசிப்பவராகவும், இணை-இசை அமைப்பாளராகவும் பணி புரிந்து, அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் 1976ல் மக்களுக்கு அறிமுகமானார்.
80களில் இவர் வசியம் செய்யாத தமிழனே இருந்திருக்க முடியாது. இவர் இசை அமைத்த ஒரே காரணத்துக்காக, சகலத்தையும் சகித்துக் கொண்டு, பல திராபைப் படங்களை, இவரின் ரசிகர்கள் நூறு நாட்கள் ஓட வைத்துள்ளனர் என்பது இவரது இசைத் திறமைக்கு எடுத்துக்காட்டு. திரை இசை தந்த வெற்றியின் காரணமோ என்னமோ, திரை இசையைத் தவிர்த்து மற்ற இசை உருவாக்கங்களை இவர் பெரிதாக வெளிக் கொணரவில்லை.
இவர் காண்பதர்க்கு எளிமையாக ஞானி போல் காட்சி அளித்தாலும், மக்கள்-தொடர்பு விஷயத்தில் பெரிதாகக் கோட்டை விட்டவர்.
மிகவும் தன்னடக்கம் உள்ளவர் போன்று தோன்றினாலும், இவர் பல சமயம் 'தான்' என்ற மமதையை பேட்டிகளில் வெளிக்காட்டியவர்.
பல, சக படைப்பாளிகளுடன் சில பல காரணங்களால் அனுசரித்துப் போக முடியா சூழலை உருவாக்கி வைத்துள்ளவர். இந்த உட்பூசல்களால், பல நல்ல படைப்புகள் ரசிகனுக்குக் கிடைக்காமல் போகும் நிலைக்கு வித்திட்டவர்.
90களிலும் இவரின் ஆளுமை தொடர்ந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெகு சில படங்களில் மட்டுமே இவரின் பழைய ஆளூமை தெரிந்தது.
காணாமல் போன நாள்: ஜூலை 1, 2005. (திருவாசகம் ரிலீஸ் ஆன நாள்)
அடையாளங்கள்: காணாமல் போன அன்று இவர் வழக்கமாகப் போடும் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பாவுடன் காணப்பட்டார்.
நிழல்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நினைவெல்லாம் நித்யா, மூன்றாம் பிறை, நாயகன், சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற பெரும் படைப்புகள் இனி வராவிட்டாலும், அதில் 50% தாக்கத்தையாவது ராஜா திரும்பக் கிடைத்ததும் தருவார் என்ற ஏக்கத்தில் அவரின் ரசிகர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
சக படைப்பாளிகளிடம், விரோதம் பாராட்டாமல், சகஜ நிலைக்குத் திரும்புவார் என்றும் இந்த ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.
ராஜா திரும்பக் கிடைப்பாரா? விவரம் அறிந்தவர்கள் உடனே தெரியப் படுத்தவும்.
மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன்,
-ரசிகன்
பி.கு1: கானா பிரபாவின் குணா பதிவு பார்த்ததும் வந்த ஆற்றாமையால் வந்த பதிவு இது :)
பி.கு2: நான் தீவிர ராசா ரசிகன். :(
பி.கு3: ராஜா சவுக்கியமா இருக்காருங்க. காணாமலெல்லாம் போகலை. தலைப்பை மட்டும் படித்து விட்டு, கடைசி வரி படிக்கும் வாசகர்களுக்கு, இந்த பி.கு :)
ராஜா, மீண்டும் அடித்து ஆடுவார் என்ற நாளை ஆவலுடன் எதிர்பார்த்து
-சர்வேசன் :)