இயக்குனர்களுக்கான பாராட்டு விழா ஒன்று சன்.டிவியில் ஒளிபரப்பக் கண்டேன். நல்ல நிகழ்ச்சி.
தமிழ்/தெலுகு திரைப்பட உலக ஜாம்பவான்கள் எல்லோரும் வந்திருந்ததாகத் தெரிந்தது.
கங்கை அமரன் சில சுவாரஸ்யமான பகிர்வுகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும், ஆயிரம் தாமரை மொட்டுக்கள், தன் தாயார் பாடும் கிராமியப் பாடல்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்படி பல கிராமியப் பாடல்கள் 'சுட்டதை' சொன்னார். அதற்குப் பிறகு வந்த வெங்கட் பிரபு, யுவனும் கூட, 'ஏதோ மோகம் ஏதோ தாகம்' என்ற கங்கை அம்ரன் பாடலில் இருந்து, 'யாரோ யாருக்குள் யாரோ' என்ற சென்னை28 பாடலை உரிவிய விதத்தைச் சொன்னார்கள்.
திடுதிப்புன்னு பாரதிராஜாவும் இளையராஜாவும் மேடை ஏறினார்கள்.ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நண்பேன்-டான்னு மூச்சுக்கு ஒரு தடவை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டாலும், இவங்களுக்கு இடையில் விழுந்திருக்கும் 'ஈகோ' விரிசல் அப்பட்டமா தெரிந்தது. குறிப்பா, ராசா, தன் 'ஞானித்'தனத்தை மைக்கில் விளம்ப, என்ன சொல்ல வராருன்னே தெரியாம சில நொடிகள் போச்சு.
சுவாரஸ்யமான விஷயம், இவங்க கிராமத்து கால வாழ்க்கையைப் பத்திப் பேசும்போது வந்தது. பாரதிராஜா இளையராஜா அரை டிராயர் வயதில் தன் கிராமத்தில் (அல்லிபுரம்)தன் அண்ணன் தம்பிகளுடன் வந்து, கம்யூனிச பாடல் அரங்கேற்றிய ஒரு நாளில் பார்த்தாராம். அதுக்கப்பரம் தன் நாடகத்துக்கு ராஜா குழுவை இசை அமைக்க வைப்பாராம்.
ஒரு நாடகத்தின் போது, பாரதிராஜா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த ராசாவின் சட்டையை பிடுங்கி போட்டுக்கிட்டு நடிச்சாராம்.
பாரதிராஜா அந்த நாடகத்தில் பூட் பாலிஷ் போடும் பையனா நடிச்சாராம்.
அடுத்த நாளு இளையராஜா அதே சட்டையுடன், நாடகம் நடக்கும்போது, திடுதிப்புன்னு நடுவில் மேடையேறி எனக்கு பாலிஷ் போடு பாலிஷ் போடுன்னு, நாடகத்தில் வராத டயலாக்கை சொல்லிக்கிட்டு இருந்தாராம். ஏன் அப்படிப்பண்ணாருன்னு இப்ப விளக்கம் சொன்னாரு. அதாவது, தன் சட்டையை பாரதிராஜா பிடுங்கிக்கிட்டு நாடகத்தில் அதைப் போட்டு நடிச்சாராம். மறுநாள் அந்த சட்டையை ராசா போட்டுக்கிட்டு நடந்தா, ஏதோ பாரதிராஜாவின் சட்டையை இவரு போட்டுக்க்கிட்டு சுத்தரதா ஊர் மக்கள் நெனச்சுருவாங்களாம். அதனால, இப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுக்காக தன் சட்டையை போட்டுக்கிட்டு மேடையில் தோன்றினாராம்.
அந்த வயசுலையே இன்னாம்மா யோசிச்சிருக்காரு :)
பண்ணையபுரம் , அல்லிபுரம்னு ஏதேதோ குக் கிராமங்களில் பெரிய படிப்பறிவெல்லாம் இல்லாம வளந்தவங்க, இப்படி வானளாவ உயர்ந்து பிரமிக்க வைப்பது, ஆச்சரியாமான அட்டகாசமான பிரமாண்டமான கலக்கலான பெருமைப்படவேண்டிய போற்றப்படவேண்டிய மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு விஷயம்.