recent posts...

Tuesday, February 05, 2008

Lay Off - சரியா தப்பா?

Lay Off என்பது அமெரிக்க வாழ்வில் ரொம்ப சாதாரணமான விஷயமாயிடுச்சு.
2001ன் சரிவிக்குப் பிறகு, வருஷா வருஷம், பல நிறுவனங்களில் நடக்கர விஷயம் தான் இது.

UKயில் அப்படியில்ல போலருக்கு. ஒரு ஆள, வீட்டுக்கு அனுப்பணும்னா, மூணோ நாலு மாசம் அட்வான்ஸா சொல்லணும்னு ஏதோ சட்டம் இருக்காம். (தொர லேசுபட்ட ஆளா? :) )

lay offனா என்னான்னு புருவத்த ஒசத்துரவங்களுக்கு இதோ layoffன் அர்த்தம் (from wiki):
Layoff is the termination of employment of an employee or (more commonly) a group of employees for business reasons, such as the decision that certain positions are no longer necessary

அதாகப்பட்டது, ஒருவரோ, ஒன்றிற்கு மேற்பட்டவரோ, இனி நமக்கு தேவையில்லை என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து, அந்த நபர்களை வேலையை விட்டு நிறுத்தும் முறை layoff.
இந்த மாதிரி layoffகள், cost-cutting என்று சொல்லப்படும், செலவைக் குறைக்கவே அதிகமா செய்வாங்க.

இது ஒரு அலுவலகத்தில் இருக்கும் ப்யூன் முதல், CEOவரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

ஆனா, நிறுவனத்தின் சரிவு தொடங்கும் போது, மிக்காரும், இது கீழ் நிலை வேலையாட்களை முதலில் பாதித்து, படிப்படியாகத்தான், மேல் மட்ட அதிகாரிகளை பாதிக்கும்.

இப்போ, இது, இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் துவங்கியுள்ளது.

IBM, TCS இந்த layoffகளுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்காங்களாம்.

ஆனா, கொடுமை என்னன்னா, இவங்க, தெருத் தெருவா, காலேஜ் காலேஜா ஓடிப் போய், சரியான தேர்வுமுறை எல்லாம் இல்லாமல், கைல கெடச்ச எல்லா பசங்களையும் வேலை தரேன் வேலை தரேன்னு வளச்சு போட்டுக்கிட்டு, இப்ப, சின்னதா தங்களின் லாபம் குறையும் என்று தெரிந்ததும், தயவு தாட்சண்யம் இல்லாம, "நீ எனக்கு இப்போதைக்கு தேவையில்லை, கெளம்பு" என்பது கொஞ்சம் கசப்பாதான் இருக்கு கேக்க.

இன்னொரு பக்கம் யோசிச்சா, ஒரு நிறுவனத்தை நடத்தரவங்க, லாபம் ஈட்டுதலை குறிக்கோளா வச்சுக்கிட்டு காயை நகத்தரது எப்படி தப்பாகும்னும் தோணுது.

உதாரணத்துக்கு, நீங்களே, உங்க சொந்த பணம், ஒரு லட்சத்தை போட்டு ஒரு ஐஸ்-க்ரீம் கடை ஆரம்பிக்கறீங்க.
ஆரம்பத்துல, நல்ல வாடிக்கையாளர்கள் வராங்க.
மாசத்துக்கு 10,000 லாபம் கெடைக்குது.
சரின்னு, ரெண்டு பசங்கள வேலைக்கு வெக்கறீங்க.
ஆளுக்கு 1000 சம்பளம்.
ஒரு வருஷம் ஆச்சு. நல்லா போகுது கடை.
இதுவரை, ஒரு வருஷத்துல, 1,00,000 லாபம் கெடச்சுடுச்சு.

குளிர் காலம் ஆரம்பிச்சு, வாடிக்கையாளர்கள் வரவு கொறையுது.
உங்க லாபம் 10,000 லேருந்து கொறஞ்சு கொறஞ்சு 2,000 ஆவுது. இப்ப ரெண்டு பேருக்கு சம்பளம் மத்த செலவெல்லாம் போவ, ஒரு 1,000 நஷ்டம் ஆவுது.

ரெண்டு பேருக்கு சம்பளம் கொடுத்து, இந்த கடைய நடத்தரது கட்டுப்படி ஆவாதுன்னு தெரியுது.

என்ன பண்ணுவீங்க? ரெண்டு விஷயம் பண்ணலாம்.

1) இப்படியே போனா சரிவராது. ரெண்டு பேர்ல ஒருத்தர வீட்டுக்கு அனுப்பிடலாம். கடைய, தொடர்ந்து நஷ்டமில்லாம நடத்தலாம்.
2) மொத வருஷத்துல தான் 1,00,000 லாபம் பண்ணியாச்சே. இந்த காசு கரையர வரைக்கும், ரெண்டு பேரையும் வேலைல வச்சுக்கிட்டு, நிறுவனத்தை நஷ்டத்துக்கே நடத்தலாம்.

நீங்க என்ன பண்ணுவீங்க?

யோசிச்சு, உங்களுக்குத் தெரிஞ்ச காரணங்கள சொல்லுங்க. அப்படியே ஒரு வாக்கும் வாக்குங்க! :)